திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா
திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா
நேற்று (30-6-05) மாலை சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் இளையராஜாவின் சிம்பொனி இசையில் திருவாசகம் வெளியானது. மத்திய செய்தி-ஒலிபரப்பு & கலாசார அமைச்சர் மாண்புமிகு ஜெய்பால் ரெட்டி வெளியிட, பாலமுரளி கிருஷ்ணா முதல் பேழையைப் பெற்றுக்கொண்டார். கிறித்தவர்களால் நடத்தப்பெறும் தமிழ் மையம் என்ற அமைப்பும் இளையராஜா மரபிசை, கலை, பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் ரஜனிகாந்த், நிகழ்ச்சிக்கு வந்திருந்து கடைசி வரை(இரவு 10.40) இருந்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மிக அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார். கமலகாசன், பாரதிராஜா, பீட்டர் அல்போன்ஸ், என். ராம், இளையராஜாவின் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள், தமிழ் மையத்தைச் சேர்ந்த அருட்திரு ஜெகத் கஸ்பார், அருட்திரு வின்சென்ட் சின்னதுரை, அருட்திரு ஆனந்தம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.
6 மணிக்கு விழா தொடங்கும் எனப் போட்டிருந்தார்கள். நான் 5.50க்குச் சென்றேன். அப்போதே அரங்கு நிரம்பி, வெளியில் நூற்றுக்கணக்கானோர் நின்றிருந்தார்கள். பின்னர் ஒரு வழியாக உள்ளே சென்று, இடம் பிடித்து, உட்கார்ந்தேன். சுமார் 6.30க்குத்தான் விழா தொடங்கியது. மத்திய அமைச்சர், (29-6-05)முந்தைய நாள் மாலை இதே அரங்கில் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் மத்திய அமைச்சரவையின் திடீர் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்று, இரண்டு பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்கும் முடிவை எடுத்து, அதைப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துவிட்டு, மும்பை வழியாக மீண்டும் சென்னை வந்தார்.
"சமூகத்தின் அடிநிலையிலிருந்து வந்து, இசையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார். இசையின் ராஜா இளையராஜா" என்றெல்லாம் பாராட்டிய பின்னர் தன் உரையை முடித்துவிட்டு இருக்கைக்குத் திரும்பும் முன், மீண்டும் ஒலிவாங்கிக்கு வந்தார். "அடுத்து, பெங்களூர் செல்கிறேன். 12 மணியில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் என நான்கு மெட்ரோபாலிட்டன் மாநகரங்களைக் காண்கிறேன்" என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
சிம்பொனி ஓரட்டோரியோ(தெய்வீக அருளிசை) என்ற வடிவில், திருவாசகத்தின் ஆறு பாடல்களை இளையராஜா வழங்கியுள்ளார். அந்தக் குறுந்தட்டிலிருந்து ஒரு பாடலை அரங்கில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, சுழலவிட்டனர். "பொல்லா வினையேன்" என்று தொடங்கி, திருவாசகத்தின் வரிகளைப் புதுமையான முறையில் தந்துள்ளார். இடையிடையே ஆங்கிலத்தில் அதன் பொருளைப் பாடலாகத் தந்துள்ளமை, நல்ல கலவை. கிறித்தவத் தன்மை உள்ள பின்னணி இசையை வெளிநாட்டவர் இசைக்க, பல்வேறு நிலைகளில் இழைந்தும் குழைந்தும் இளையராஜாவின் குரல், ஒரு பெரும் அனுபவத்தை அளிக்கிறது.
திருவாசகத்தின் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு சென்னையைச் சேர்ந்த இசைக் குழுவினர், நடனமாக ஆடிக் காட்டினர். திருவாசகத்தின் வேறொரு பாடலை பள்ளிக்கூட மாணவியர் பலர், பியானோ இசைப் பின்னணியில் பாடினர். தமிழகம் முழுவதும் நடத்தப்பெற்ற திருவாசகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.
பாலமுரளி கிருஷ்ணா, "இது தெய்வீக இசை. இறைவன் இசை வடிவமானவன்" என்றார்.
பீட்டர் அல்போன்ஸ், "இளையராஜா இந்தப் பணியை ஏன் கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் தமிழ் மையத்திடம் கொடுத்தார்? தமிழ்நாட்டின் எவ்வளவோ அமைப்புகள், தமிழும் சைவமும் வளர்க்கும் திருமடங்கள், திரைத் துறை வித்தகர்கள் ஆகியோரிடம் கொடுக்காமல் தமிழ் மையத்திடம் கொடுத்ததற்குக் காரணம், சமய நல்லிணக்கமே" என்றார்.
"இதை யாரும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யாதீர்கள். திருட்டுத்தனமாய்க் கேட்காதீர்கள். காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள்" என்று இந்து பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என். ராம் கூறினார்.
"இறைப்பற்று இல்லாதோரையும் ஈர்க்கும் இசை, இது. இதை ஆக்கும் திறமை, இளையராஜாவுக்கு 25,30 ஆண்டுகளுக்கு முன்பே உண்டு. இப்போது தாமதமாக வெளிப்பட்டுள்ளது" என்றார் கமலகாசன்.
"இளையராஜா, ஒரு வகையில் என் குரு. அவர்தான் எனக்கு ரமண மகரிஷியையும் திருவண்ணாமலையையும் அறிமுகப்படுத்தினார்" என்றார் ரஜனிகாந்த்.
"கும்பினியர்கள் ஆண்ட மண், இது. அந்த வெள்ளைக்காரர்களை உன் இசையை வாசிக்கச் செய்திருக்கிறாய். நீ பாடும்போது நானே பாடுவதுபோல் இருக்கிறது. நீ புகழ் பெறுவது நானே புகழ் பெறுவது. வைகை ஆற்றுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் நன்றி. இளையராஜா, பல முறைகள், இனி எனக்குப் பிறவி இல்லை. என் பிறவியின் நோக்கம் நிறைவடைந்துவிட்டது என்கிறான். அது தவறு. நீ ஆயிரமாயிரம் முறை மீண்டும் மீண்டும் பிறந்து வந்து, இசையை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். உனக்கு இறப்பே கிடையாது. பிறப்பு மட்டுமே உண்டு" என்றார் பாரதிராஜா.
இறுதியாகப் பேசவந்த வைகோ, மிகவும் சிறப்பாகப் பேசினார். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் 14 வகை யாழ்க் கருவிகள் இருந்தன. பிரமிடில் யாழ்க் கருவி காணப்படுகிறது. மெசப்படோமியா-மொகஞ்சதாரோ அகழ்வில் யாழ்ச்சின்னங்கள் கிடைத்துள்ளன... எனத் தொடங்கியவர், தமிழிசையின் வரலாற்றை அடுத்துத் திருமுறைகளுக்கு வந்தார்.
பன்னிரு திருமுறைகள் எவை? முதலாம் திருமுறை முதல் பன்னிரண்டாம் திருமுறை வரை ஒவ்வொரு திருமுறையிலும் இடம்பெறும் நாயன்மார்கள் யார் யார்? என்றெல்லாம் கடகடவெனச் சொல்லிக்கொண்டே வந்த அவர், எட்டாம் திருமுறையான திருவாசகத்திற்கு வந்தார்.
திருவாசகத்தில் எத்தனை பதிகங்கள் உள்ளன? ஒவ்வொரு பதிகத்தின் பெயர் என்ன? மாணிக்கவாசகரின் பின்னணி என்ன? குதிரை வாங்குவதற்காக அரசன் தந்த பணத்தில் சைவப் பணி செய்தது, பின் அரசன் கேட்டபோது, இறைவன் கட்டளைப்படி, குதிரைகள் பின்னால் வருகின்றன என ஓலை அனுப்பியது, நரிகள், பரிகளாக(குதிரைகளாக) மாறி, லாயத்தில் அடைக்கப்பெற்றது, இரவில் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறி ஊளையிட்டு அறுத்துக்கொண்டு ஓடியது, இதற்காக அரசன், மாணிக்கவாசகரைச் சினந்தது, மதுரையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இறைவன் பிட்டுக்கு மண் சுமக்க வந்தது, பிட்டை வாங்கிக்கொண்டு மண்ணை அடைக்காமல் நீரில் விளையாடியது, அதைக் கண்ட காவலர்கள் இறைவன் முதுகில் பிரம்பால் அடித்தது, இறைவன் மீது பட்ட அடி எல்லோர் மீதும் பட்டது, அதன் பிறகு மாணிக்கவாசகர் ஊர் ஊராகச் சென்று பாடியது... எனத் திருவாசகத்தின் பின்னணி, வரலாறு, நோக்கம் என அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
இங்கு எந்த இடத்திலும் பார்த்துப் படிக்கவோ, தடுமாறவோ, மறந்துவிடவோ செய்யாமல் ஆற்றொழுக்காக வைகோ, மடை திறந்தார். இளையராஜாவின் பெருமைகள், இந்தத் திருவாசகத்தில் இளையராஜா எந்த ஆறு பாடல்களை எடுத்துக்கொண்டார்? ஏன் அவற்றை எடுத்துக்கொண்டார்? அவற்றின் பொருள் என்ன? என அவர் பேசப் பேச, அரங்கமே அதிசயித்தது. இளையராஜாவும் ரஜனியும் பிரமித்தார்கள். ரஜனி பேசும்போது, "வைகோவின் கர்ஜனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் கேட்கவிருக்கிறேன்" என்றார். வைகோ பேசப் பேச, ரஜனியின் புருவம் ஏறியே இருந்தது.
பின்னர் பேச வந்த இளையராஜா, வைகோவை, "அரசியலை விட்டுவிட்டு ஆன்மீகத்திற்கு வந்துவிடுங்கள். சைவ சித்தாந்த உரையைக் கேட்டதுபோல் இருந்தது" என்றார். பாரதிராஜாவிற்குப் பதில் அளித்த அவர், "நீ வேண்டுமானால் பிறந்துகொள். நான் பிறக்க விரும்பவில்லை. வள்ளுவரே
தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என்று கூறியிருக்கிறார். பிறப்பதோ, புகழ் பெறுவதோ நம் கையில் இல்லை" என்றார். அவருக்கு முன் நன்றியுரை கூறிய அருட்திரு ஆனந்தம், "சிம்பொனி ஓரட்டோரியோவை முடித்து, பிரசவ வேதனையில் இருப்பார். அதைப் பற்றி அவர் கூறக்கூடும்" என்று கூறியிருந்தார். அதற்குப் பதில் அளித்த இளையராஜா, "தாயைக் கொச்சைப்படுத்தாதீர்கள். பிரசவ வலிக்கு உலகின் எந்த வலியும் ஈடானதில்லை" என்றார்.
"ஒரு பாட்டுப் பாடு தலைவா", என ரசிகர் ஒருவர் குரல் கொடுத்தார். "என்ன பாட்டு வேணும் தலைவா?" என்ற இளையராஜா, 'என் ஊரு சிவபுரம்' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அருட்திரு ஜெகத் கஸ்பார், தமிழ் / ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான ஆளுமையுடன் பேசினார். கணீர் என்ற குரல், நல்ல சிந்தனைகள், அவையை ஆளும் திறம் எனப் பலவிதங்களில் பரிமளித்தார். அவர் நிர்வாக இயக்குநராக உள்ள தமிழ் மையம்தான் இந்தத் திருவாசகத் திட்டத்தை முன்நின்று நிறைவேற்றியுள்ளது. சமய நல்லிணக்கம் செழித்தோங்கவும் தமிழிசையும் தமிழும் வளரவும் இந்தத் திருவாசகம் தொண்டாற்றும். "இன்னும் 24 மாதங்களில் கிராமி விருது பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை இளையராஜா பெறுவார்" என ஜெகத் கஸ்பார் நம்பிக்கை தெரிவித்தார்.
"இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இதுவரை ஒரு கோடி கடன் உள்ளது. மக்கள் நினைத்தால் இதை ஒரே வாரத்தில் தீர்த்துவிடலாம்" என்றார் ஜெகத்.
மக்கள் நினைப்பார்களா?
(தொடர்பு கொள்ள : தமிழ் மையம், 153, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி : 91-044-2499 3380, 2499 3390)
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, July 01, 2005
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice article..Keep up the good work!
posted by: Solai
Post a Comment