கவிதாயினி தேன்மொழி
பூ, செடியில் பூக்கிறது. ஆனால், அது பூத்ததற்குச் செடி மட்டுமே காரணமில்லை. அது நிற்கும் நிலம், அங்கு நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் நீர், சூரிய ஒளி, பாதுகாப்பு வேலி... எனப் பலவற்றின் துணையுடன்தான் ஒரு பூ மலருகிறது. இவை, புறக் காரணிகள். அந்தப் பூவின் வண்ணம், மணம், அளவு, அடுக்கு, வாழ்நாள்... எனப் பல இயல்புகளை அதன் மரபணு தீர்மானிக்கிறது. இவை அகக் காரணிகள். இந்த அகக் காரணிகளும் புறக் காரணிகளும் சரியான விகிதத்தில் இணைந்தால்தான் ஒரு பூ பிறக்கமுடியும்.
இதே இலக்கணத்தை நாம் கவிதைக்கும் பொருத்தமுடியும். ஒரு கவிதை பிறக்கிறது. அதற்கு, முழுக்க முழுக்க அந்தக் கவிஞர் மட்டுமே காரணமில்லை. அவர் வாழும் இடம், வளர்ந்த முறை, பயணித்த இடங்கள், உணவு, உறவுகள், மனநிலை, கல்வி, அறிந்த மொழிகள், வாசிப்பு, அவரின் மொழி ஆளுமை, அனுபவம், கண்ணோட்டம், எழுதும் நேரம், எழுதுபொருள்கள், சுற்றுப்புற ஒலி-ஒளிகள், நோக்கம், நெருக்கடிகள்.... எனப் பலவும் சேர்ந்துதான் ஒரு கவிதை உருவாகிறது.
அதிகம் கவிதை எழுதப்பட்டது எப்பொழுது? போர்க் காலங்களிலா? இயல்பான காலங்களிலா?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலப்பகுதிகளில் எந்தப் பகுதியில் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன?
எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறார்கள்? காலையிலா? இரவிலா?
கேட்டு எழுதப்பெற்றது அதிகமா? தானாகவே எழுதப்பெற்றது அதிகமா?
தனிமை, கவிதைக்கு எவ்வளவு தூரம் முக்கியம்?
குறிப்பிட்ட மணம், மது, உணவு போன்றவை, படைப்பாளியிடம் கவிதை உணர்வைத் தூண்டுகின்றனவா?
தமிழ்ப் பெருமக்கள், மேலே குறிப்பிட்டுள்ள கருப்பொருள்களில் ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் புறக் காரணிகளின் தாக்கம் எவ்வளவு என்று தெரியும்.
இதனால்தான் புதியவற்றை எழுத விரும்புவோர், வெளியூருக்குச் சென்று எழுத விரும்புகிறார்கள். சிறைக் கைதியாக இருந்த பலர், சிறையிலேயே பல நூல்களை எழுதியுள்ளார்கள். காரணம், அவருக்குச் சிறை என்பது, புதிய இடம்.
எந்தப் புதிய இடமும் ஒருவருக்குக் கவிதையைத் தந்துவிடுமா? ஒரு புதிய இடம், எவ்வளவு காலத்தில் ஒருவருக்குப் பழைய இடம் ஆகும்? இந்த வாழ்விடங்கள், கவிதையை எவ்வாறு இயக்குகின்றன? இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால், பிறந்த ஊர் என்பது, பலருக்குப் பெரும்ஊற்றாய்க் கவிதையை வழங்கிக்கொண்டே இருக்கிறது. அதிலும் பிறந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து, வெளியூரில் வாழ நேர்ந்தவர்களுக்கு ஊர் நினைவுகள், அற்புதமாகிவிடுகின்றன; அவை, கவிதைச் சுடரின் ஒளியை வானளாவ வளர்க்கின்றன. அவ்வகையில் தேன்மொழியின் கவிதைகளை அவரின் ஊர்ப்புலமான மலைப் பகுதி, ஆட்சி புரிகிறது. தாவரங்கள், விலங்கினங்கள், நீர்நிலைகள், மலைகள், இயற்கையின் பன்முகக் காட்சிகள் ஆகியவை, தேன்மொழியின் கவிதைகளுக்குத் தனித்துவம் சேர்க்கின்றன.
குளத்தின் உச்சியில்
கழுகின் நிழல்
வட்டமடித்து நீந்திக் குளித்து
வெயில் காய்கையில்
காட்டுக் கோழிச் சிறகுகள் பதறும்
அடைக்கல ஓசையோடு
நம் காலடி அதிர்வுகள் கேட்டு
உடலிலிருந்து ஈட்டி பாய்ச்சி
புதருக்குள் பதுங்கும் முள்ளம்பன்றி
கூரானைக் குறிவைக்கும்
மரம் வெட்டுகையில் அது
வீழ்வதற்கான கடைசி முறிவில்
மிளா மான்கள் மிரளும்
மலையிலிருந்து சமதளம் நோக்கி
கிளைகள் உருட்டுகையில்
கேளையாடுகள் சிதறும்
விறகு தூக்கும் சதம்பலுக்குள்
மர அணில்கள் விளையாடும்
முயல் குட்டிகள் மிதிபடும்....
- என வரையாட்டு மொட்டை என்ற மலையின் காட்சிகளைத் தேன்மொழி விவரிக்கையில், நமக்குள் ஒரு புதிய உலகமே விரிகிறது.
மலைப் பிரதேசத்துக் காலைகள்
மூடுபனியின் ஊடே
பல்லாயிரம் தேயிலைப் பூக்களின்
வாசனையோடுதான் விடியும்...
- என வாசனைகளை விவரிக்கிறார்.
...இன்னும்
அந்த ஒற்றைப் பேருந்து
வானவூர்தி மாதிரி
என் ஊர்ப்பிள்ளைகளை
கைதட்ட வைத்துக்கொண்டுதான்
இருக்கிறது
- என்கிறபோது, அந்த ஊரின் நிலைமை நன்கு தெரிகிறது.
தோட்டத்தை இடுப்பிலே
தூக்கிக்கொள்வேன்
விடுமுறைகளில்
மண்வெட்டியால் வெட்டியிருக்கிறேன்
மண்உளிப் பாம்பை
புரட்டிப் புரட்டிப் பார்த்தும்
வரைய முடியாத ஓவியம் அது
- என்றும்
நேசமானவள்
சலிப்பைக் கொலுசென
மாட்டி நடப்பாள்
- என்றும்
வெட்டுக்கிளி
இலைவெட்டித் தின்கையில்
இலையின் உள்நரம்புகள் துடிக்குமோ
- என்றும்
உன் சுவாசக் காற்றைப்
பார்க்க ஆசையா
மூடுபனியின் ஊடே பாடு
- என்றும்
பாவாடையில் காற்றைப் பிடித்து
ஆற்றின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு மிதந்து போ
- என்றும்
மான் தின்ற மலைப் பாம்பு
மரம் சுற்றி நெரிவது மாதிரி
என் உணர்வுகளை
எனக்குள்ளேயே
சடசடக்க விடுகிறேன்
- என்றும்
உன்னைப் பற்றி
நான் சிந்திக்கையில்
குக் குக் குக்கென
ஏதோ ஒரு பறவை
குரல் கொடுக்கிறது
- என்றும்
மூச்சோரம் முத்தமிட்டாய்
அக்கணம் கண்டேன்
பியானோவின்
வெள்ளைக் கட்டையும்
கருப்புக் கட்டையுமாய்
கிறங்கி இசைத்துக்கொண்டிருந்த
உன் கண்களை
- என்றும்
மல்லாந்த நெஞ்சில்
ஏந்திய புத்தகம்
இதயத் துடிப்பில்
அதிர்வது மாதிரி
மௌனத்தின் அடர்த்தியை
கோதிக் கோதி
வெளிக் கிளம்புகிறது
உன் நினைவு
- என்றும்
என் கல்லறைக்கான வாசகம்
தேடவேண்டியதில்லை
நட்டு வையுங்கள் என் மீது
ஒரு பூமரத்து நாற்றை
- என்றும்
சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்
தண்ணீர்த் திவலை மிதித்து
படியேறும் தனிமை
மெழுகுதிரி வெளிச்சத்தினடியில்
கருமையாய் தேங்கி நிற்கிறது..
- என்றும்
எழுதுகின்ற நிழல்
விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய்
ஊர்ந்து வருவதை
உணர்ந்தபடி எழுதுகிறேன்
யாருமில்லை
- என்றும்
நான் வாழ்வதற்கான இடம்
இருக்கிறது
வாழ்ந்துகொண்டிருக்கிற இடம் அல்ல அது
- என்றும்
புருவத்து ரோமங்கள்
ஆயிரங்கால் பூச்சி போல்
நெற்றியில் படுத்துக் கிடந்தன
- என்றும்
பள்ளத்தாக்குகளை
பயமின்றிக் கடக்கும் அந்தப்
பறவை
கூடடைகையில்
நடுங்கிக் குறுகுகிறது
- என்றும்
முத்தத்தின் ஓடுடைத்துப் பறந்த
பறவைகளின் சிறகு ஒலி
- என்றும் தேன்மொழியின் கவிதை வெளிக்குள் எண்ணற்ற முத்துகளைக் காண முடிகிறது. இவர் கவிதைகளில் புறப் பொருள்களும் அகப் பொருள்களும் தேர்ந்த முறையில் ஒன்றிணைந்துள்ளன. வளமான மண்ணில் பிறந்து, அரிய காட்சிகளைக் கண்டு, அவற்றை நமக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். பலரும் தவற விடுகிற சாதாரண காட்சிகள், இவரின் கவிதைகளுக்குள் வலிமையோடு இடம் பிடிக்கின்றன. மூடு மந்திரம், ஜால வித்தை ஏதும் இல்லை; எளிய சொற்களில் ஒரு குழந்தைகூட கவிதைக்குள் நுழைய வாய்ப்பளித்து, வாழ்வின் பிழிவாய் - பதிவாய் இவரின் கவிதைகள், விளங்குகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் மணலாறு என்ற தேயிலைத் தோட்டத்தில் 4-1-1976 அன்று பிறந்த தேன்மொழி, 8 வயது வரை அங்கு வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அதே தேனி மாவட்டத்திலேயே உத்தமபாளையம், ராயப்பன்பட்டி ஆகிய இடங்களிலும் மதுரையிலும் வசித்துவிட்டு, கடந்த பத்து ஆண்டுகளாகச் சென்னையில் வசிக்கிறார். ஆனால், அவர் எட்டு வயது வரை வாழ்ந்த பகுதிதான், அவரின் கவிதைகளில் எல்லாம் அழுத்தமாகப் பதிவாகி வருகின்றது. ஏழு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், இயற்கையை ஆராதிக்கும், அதற்காக ஏங்கும் மனத்தவர்.
இவரின் முதல் தொகுதியான இசையில்லாத இலையில்லை என்ற நூல், தேவமகள் அறக்கட்டளை விருது, 'சிற்பி' பாலசுப்பிரமணியன் இலக்கியப் பரிசு, திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. அதை அடுத்து, அநாதி காலம் என்ற கவிதைத் தொகுதியைப் படைத்துள்ள தேன்மொழி, திரைப்படப் பாடல்களும் எழுதி வருகிறார். இயற்பெயர் : ரோஸ்லீன் ஜெயசுதா.
முதன்முதலாக, பாரதிராஜா இயக்கத்தில் ஈர நிலம் என்ற திரைப்படத்தில் பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குநர் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். சிறுகதைகளும் எழுதி வருகிறார். தமிழ்த்திரைத் தொலைக்காட்சிக்காக, நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிவரும் இவர், திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் உள்ளார்.
இவருடைய கவிதைகளில் குறிப்பிடவேண்டிய ஒன்று: பற்பல மலர்கள், மரங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் பெயர்களைக் கவிதைக்குள் பதிவு செய்துள்ளார். அவற்றுள் பலவும் நாம் அறியாதவை; ஆனால், அறிய வேண்டியவை. அவற்றை வெறும் பட்டியலாகவோ, பெயர்களாகவோ பதியாமல், கவித்துவத்துடன் இயல்பாக, கவிதை என நம்பும்படியாகப் பதிந்துள்ளமை, போற்றத் தகுந்த செயல்.
தேன்மொழியின் படைப்புகள், படிப்படியாகச் சுருக்கமும் கூர்மையும் பெற்று வருகின்றன. நம் உணர்வுகளைத் தம் வயமாக்கும் வலிமை, அவற்றுக்கு உண்டு.
நேற்று ஒரு காட்டுப்
பூவுக்குப்
பெயரிட்டேன்
'காஞ்சனி'
என்று
- என்கிறார், ஒரு கவிதையில்.
யாரேனும் பெயரில்லாத காட்டுப் பூவைக் காண நேர்ந்தால், தேன்மொழி என்ற பெயரைப் பரிசீலியுங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, July 05, 2005
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை!
”இசையில்லாத இலையில்லை”
ஆசிரியர் - தேன்மொழி
பதிப்பகம் - மதி நிலையம்
இந்த புத்தகம் எங்கு கிடைக்கிறது?
Post a Comment