!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, September 05, 2005



கவிதாயினி தாமரை

இயல் - இசை - நாடகம் என்ற இந்த மூன்றும் தனித்தனியாய் இயங்குவது குறைவு. ஒன்று பிறிதொன்றுடனோ, பலவுடனோ இணைந்துதான் பெரும்பாலும் இயங்கி வருகின்றது. ஆயினும் இயலுக்குள்ளேயே இந்தக் கலப்பு சற்று அதிகம். கதை, கவிதை, கட்டுரை என்ற இயல் வடிவங்களுள் ஒவ்வொன்றும் தனித்தனியே இயங்குவது உண்டு. ஆயினும் கதைக்குள் கவிதையும் கவிதைக்குள் கதையும் கட்டுரைக்குள் கதை - கவிதை இரண்டும் சரியாய்க் கலந்து வரும்போது அவற்றின் சுவை அதிகரிக்கிறது.

சில நேரங்களில் ஒரு விபத்து நிகழ்வது உண்டு. இருவேறு வடிவங்களைக் கலக்கும் போது, ஒன்றின் ஆதிக்கம் அதிகமாகி, இன்னொன்றின் இடத்தையே காலி செய்துவிடும். கவிதைக்குள் கதை கலக்கும்போது கதையின் ஆதிக்கம் அதிகமாகி, கவிதை காணாமல் போய்விடுவதும் உண்டு. அதே மாதிரி கதைக்குள் கட்டுரை நுழைந்து, கதையைக் காணாமல் அடித்துவிடும். கட்டுரையில் கதை கலக்கும்போது, இது கதையா, கட்டுரையா எனப் பலர் குழம்புவதும் உண்டு.

கதை, கவிதை என்ற இரண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம். கவிதை பெரும்பாலும் சுருக்கமாக இருக்கும்; கதைக்கோ, நீளம் அதிகம். சரி, 30 வரிகளுக்குள் ஒருவர் கதை சொல்கிறார்; அதே எண்ணிக்கையில் ஒருவர் கவிதையும் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். வரிகள் மட்டுமில்லை; சொற்களையும் ஒரே எண்ணிக்கையில் பயன்படுத்துகிறார்கள் எனக் கொள்வோம். வாக்கியங்களை மடித்து எழுதாத நிலையில் இவை இரண்டின் வேறுபாட்டையும் ஒருவர் எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்ளவேண்டும். இது எப்படிச் சாத்தியம்?

இது, கொஞ்சம் சிக்கலானது. ஒரு குறிப்பிட்ட தளத்தில் கதையும் கவிதையும் மிகவும் நெருங்கி வருகின்றன. கதை போன்ற கவிதை; கவிதை போன்ற கதை. இந்த இரண்டையும் ஒரு மெல்லிய இழைதான் பிரிக்கிறது. காட்சிகள் இல்லாமல் கதை இல்லை. அதே காட்சி, கவிதைக்குள் இறங்கும்போது என்ன நடக்கிறது? இது ஒரு சுவையான ஆராய்ச்சி. இங்குதான் நடையும் வாக்கிய அமைப்பும் சொற்களின் கூர்மையும் வேலை செய்கின்றன.

தனி அனுபவம், பொது அனுபவம் ஆவதும் பலரின் கூட்டு அனுபவம் ஆவதும் கதை - கவிதை இரண்டிலும் சாத்தியம்தான். ஆனால், கவிதையின் உன்னதம் என்னவெனில், அதன் ஒரு சொல்லே, ஒரு கூட்டு அனுபவத்தை அளித்துவிடும். ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வோர் உயிருக்கும் ஏற்ப, ஒரே சொல்லே வெவ்வேறு தளங்களில் இயங்கும். இந்தச் சிறப்பே கவிதையின் தனித்தன்மை. இந்த உயரத்தை எட்டுவது, கவிஞர்களுக்கு மிகப் பெரிய சவால்.

தாமரையின் பல கவிதைகள், கதைத் தேரில் உலா வருகின்றன. அங்கு கதைக்கும் கவிதைக்கும் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. முன்னிலை மாறி மாறி வருகிறது. பல இடங்களில் கதை முந்திச் செல்கிறது. சில இடங்களில் கவிதை வெல்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே போட்டி நடப்பதே, ஆரோக்கியமான முயற்சிதான்.

ஏய் பல்லக்குத் தூக்கி!
கொஞ்சம் நிறுத்து...
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது...

- தாமரையின் சின்னஞ்சிறு கவிதை, இது. இதற்குப் பின்புலத்தில் இருவரின் வாழ்க்கை நிலை, சமூக நிலை, தராதரம், வளம், நலம்... என மிகப் பெரும் காட்சி விரிகிறது.

இதன் மிக முக்கிய அம்சம், முதல் வரியில் உள்ளது. எடுத்தவுடன் 'ஏய்' என்கிறார். இதிலேயே அவரின் மேன்மையும் தூக்குவர்களின் அடிமை நிலையும் வெளியாகிறது.

பல்லக்குகளைப் பொதுவாக இருவரோ, நால்வரோதான் தூக்குவர். ஆனால், இங்கோ பல்லக்குத் தூக்கிகள் என்று கூறாமல் ஒருமையில் கூறுகிறார். இது ஏன்? நீங்கள் நால்வராய் இருந்தாலும் எனக்கு ஒருவர்தான் என்பது ஒரு பொருள்.

அந்த ஒருவரும் இங்கு வேலையாள், அவ்வளவே. மாடு மேய்ப்பவன், காய்கறிக்காரன், காவல்காரன், பால்காரன்... என்பது போல் அந்த வேலையைச் செய்ய ஒருவன். அவனுக்கு என்று தனி அடையாளம் எதுவும் கிடையாது. இது, அடுத்த கோணம்.

'கொஞ்சம் நிறுத்து' என்ற சொற்களும் ஆழமாகத் திகழ்கின்றன. அதாவது நீ கொஞ்சம்தான் நிறுத்தவேண்டும். சிறிது நேரத்தில் மீண்டும் தூக்கி நடந்தாகவேண்டும்.

'உட்கார்ந்து உட்கார்ந்து' என்பதில் ஓர் உட்பொருள் உண்டு. ஒரு முறை உட்கார்ந்தவர், மீண்டும் உட்கார வேண்டுமெனில் அவர் இடையில் எழுந்தால்தான் முடியும். அவர் முதலில் உட்கார்ந்தார்; எழுந்தார்; பிறகு மீண்டும் உட்கார்ந்தார். இப்படியே அவர் தொடர்ந்து செய்துவந்தார் என்பது வெளிப்படுகிறது.

கடைசி வரியிமல் கால்கள் வலிக்கின்றன என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இங்கும் ஒருமையைப் பயன்படுத்துகிறார். முதல் வரியிலும் கடைசி வரியிலும் உள்ள ஒருமைகளை இணைக்கவும் கவிதை வாய்ப்பு அளிக்கிறது. ஏய் - கால் இரண்டும் பேச்சு வழக்குச் சொற்கள் என்பது கவிதையின் இயல்புத் தன்மையைக் கூட்டுகிறது.

இப்படி கவிதையின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாக விளங்குவது, கவிஞர்கள் அனைவருக்கும் நிகழ்வது இல்லை. அதுவும் ஒருவரின் அனைத்துக் கவிதைகளும் இவ்வாறு விளங்குவதில்லை. அது, கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு 'விக்கெட்' எடுப்பது போன்றது. அல்லது, ஒவ்வொரு பந்தையும் 'சிக்ஸருக்கு' அனுப்புவது மாதிரி.

ஒரு கொலை மற்றும் ஒரு தற்கொலை
இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு
நாம் பிரிந்தோம்
- காதலி, காதலனை நோக்கி இப்படிப் பேசத் தொடங்குகிறாள். பிரிந்த காதலி, போராடி உயர்கிறாள். அது பொறுக்காத காதலன், 'கட்டுகளற்ற வெறிநாயாய் தன் நாக்கை அவிழ்த்துவிடுகிறான்'.

வேறொரு கவிதையில் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு, இன்னொருத்தி அறிவுரை கூறுகிறாள்.

கூவி அழை, பஞ்சாயத்துக் கூட்டு,
கேள்வி கேள், உரக்கப் பேசு,
'அணைக்க' வந்தால் அடித்து விரட்டு!

பவானி!
நேற்று நான், இன்று நீ!

இன்னும் மெத்தனமாயிருந்தால்
இன்று நான், நாளை நீ!
- இதில் பாரதியின் தாக்கம் இருப்பினும் இதன் பின்னே தீவிரமான கதை ஓடிக்கொண்டிருக்கிறது.

அன்றாடப் பாலில் நீர் மிகுந்துவருவதை
தயிர் காட்டிக் கொடுத்தது

காசு கொட்டி வாங்கிய
'மினரல் வாட்டரில்' அடிவண்டல்!

அவசரம் என்று குறியிட்டு அனுப்பியும்
'குரியர்' போய்ச் சேரவில்லை!

அண்டை வீட்டுக்காரர் திருப்பித் தந்த
'அயர்ன் பாக்ஸ்' வேலை செய்யவில்லை....

இன்று மழை பெய்தது

உள்ளார் எங்கோ ஒரு
நல்லார்!
- இது காட்சிகளை அடுக்கிக்கொண்டே வந்து, அற்புதமாக முடிகிறது. தாமரையின் எழுத்தில் முதிர்ச்சி கூடியிருப்பதற்கு இந்தக் கவிதை, ஒரு சான்று.

தாமரையின் கவிதைகளுக்குள் அகதிகள், சிறைக் கைதிகள், போராளிகள்... ஆகியோர் இயல்பாக வந்து செல்கிறார்கள். ஈழச் சிக்கலைக் குறித்து அண்மைக் காலமாய்க் கவிஞர்கள் பெரும்பாலோர் எழுதுவதில்லை. எதற்கு வீண் வம்பு? என்று ஒதுங்கிவிடுவர். தாமரையோ, பலரும் தொடத் தயங்கும் கருக்களைத் துணிச்சலுடன் கையாளுகிறார்.

போருக்குப் புறப்பட்ட
வீரர்கள் போல்
சரம்சரமாய்
வந்திறங்குது மழை
என் வாசலில்
- மழையை இத்தகைய கோணத்திலும் இவரால் பார்க்க முடிகிறது.

திலீபா..!
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!
- என 11 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனைக் குறித்துப் பாடுகிறார்.

நடுங்கும் என் விரல்களை
துப்பாக்கி பிடித்துக்
காய்த்துப் போன உன்
கையோடு
கோத்துக்கொள்...
தோழி...
என்னையும் அழைத்துப் போ..
- இது, ஈழத்துக் காட்டில் குமுறும் ஒருத்தியின் வேண்டுகோள்.

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!

இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...
- என மிக இயல்பாக, தான் சொல்லவேண்டிய செய்திகளைச் சொல்லிவிடுகிறார்.

நடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
கைப்பிடித்து அழைத்துப் போகக்
கடவுச் சீட்டும் பெருங்கருணையும்
கொண்ட அதிகாரி ஒருவர் உள்ளார்
என அறிவிக்கப்பட்டது.

தலைக்குப்பின் கொழுத்த ஒளிவட்டம்
கொண்ட அவரின் பாதங்களுக்கு
மலரஞ்சலி செய்தால்
கடவுச்சீட்டு கிடைக்கும் என்ற
நம்பிக்கையே நடையை
வேகமாக்கியது..
- இதில் உள்ள 'கொழுத்த' என்ற சொல், ஆழ்ந்த கவனிப்புக்கு உரியது.

மேகத்தை அடையாளம் வைத்து
ஆட்டுக் குட்டியை விட்டுப் போனவன்
கதையை நீ சொல்லக் கேட்டுச்
சிரித்தேன்...
அதே போலொரு மேகத்தின் கீழ்
என்னை நிற்க வைத்து நீ
பேசிக்கொண்டிருப்பதை
உணராமல்...
- என்ற வரிகளில் அழகியலையும் துயரத்தையும் மேதைமையோடு இணைக்கிறார்.

லஞ்சம் கேட்கும் பொதுஊழியனைக்
கொன்று போடத் துடிக்கும் கைகள்
அடங்கி விடுகின்றன.
இந்தியன் தாத்தாவும் ஷங்கரும்
பார்த்துக்கொள்வார்கள்
என்ற ஆறுதலில்...
- என்று தாமரை சொல்வது அவரின் துணிச்சலுக்கு ஒரு சான்று. திரைப்படப் பாடலாசிரியரான இவர், நாளையே ஷங்கரின் படத்திற்கு எழுத வேண்டிருக்கும் என்று எண்ணாது, இப்படியான விமர்சனங்களால் அந்த வாய்ப்புத் தவறலாம் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், தன் மனத்திற்குப் பட்டதைப் பேசுகிறார்.

சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், போலித்தனங்கள், ஏழை எளியவர்களின் பாடுகள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, நடப்புச் சிக்கல்கள், போர்க்குணம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் இவரின் கவிதைகள் இயங்குகின்றன. தமிழ்- தமிழர்- தமிழ்நாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்புரிகிறார்.

கோவையில் பிறந்த தாமரை, எந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். சந்திரக் கற்கள், என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

திரைப்படப் பாடலாசிரியராகப் பணியாற்றும் இவர், வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ... எனப் புகழ்மிக்க பாடல்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.

தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றைக் கொண்ட இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார். இந்த உறுதி, தாமரையின் பொறுப்புணர்வுக்கும் தீவிரத்திற்கும் சான்றாக விளங்குகிறது.

தாமரையின் கவிதைகள் பலவும் நீண்டவையாக உள்ளன. சிறிது விரித்துரைக்கவும் முயல்கின்றன. 'நேரடியாகவும் தேவையெனில் சற்றே விளக்கமாகவும் சொல்லிப் போவது என் பாணி' என இவரே அறிவித்துள்ளார். இது, கவிதைப் பண்புக்கு உகந்தது இல்லை. 'கவிதை மின்னலுடைத்தாகுக' என்ற கூற்றைத் தாமரை நினைவில் இருத்தவேண்டும். மிகச் சிறிய, கூரிய கவிதைகளை அதிகம் எழுதிப் பார்க்கவேண்டும்.

ஆயினும் சிறிய கவிதைகளையும் தன்னால் எழுத முடியும் என்று ஓரிரு இடங்களில் காட்டியுள்ளார். அவ்வழியில் அவர் தொடர்ந்து நடப்பார் என்று நம்புவோம்.

..கண்களிலிருந்து
கனவுகளைக் கழுவியெடுத்துவிட்டு
கனலை இட்டு நிரப்பு!

வெந்து தணிந்தபின்
நம் வீதிகளில்
வெளிச்சம் மட்டுமே..
- என்கிறார்.

தண்ணீரில் இல்லை; தணலில் பூத்திருக்கிறது இந்தத் தாமரை.

2 comments:

Prawintulsi said...

good review of thamarai's poems.
you had travelled a lot inside her words. It was enjoyable to recollect all the poems.

Anonymous said...

excellent about Thamarai poems.
I like her bravery
you had sinked in the sea of thamarais poem i love it
please try to publish the poem of thamarai "kannaghi Mannil irunthu oru Karunsabam"

with love
Hafeezh