!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 18, 2005

திருப்பூர் கிருஷ்ணனின் அரவிந்த அமுதம்கல்கி யில் தொடராக வெளிவந்த அரவிந்த அமுதம், நூல் வடிவம் பெற்றுள்ளது. அருள்மிகு அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு அழகுற எழுதியுள்ளார், திருப்பூர் கிருஷ்ணன்.

அரவிந்தர், 1872ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று பிறந்தது; ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தது; ஐரோப்பிய தாக்கம் கொண்ட அரவிந்தரின் தந்தை டாக்டர் கிருஷ்ண தனகோஷ், அரவிந்தர் உள்பட மூன்று பிள்ளைகளையும் இங்கிலாந்தில் படிக்க வைக்க அனுப்பியது; தாமரையும் குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானது; அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தது; அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனது;

இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் பிரெஞ்சு, ஆங்கிலப் பேராசிரியர் ஆனது; துணை முதல்வர் ஆனது; சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபட்டது; அலிப்பூர் வழக்கு; அரவிந்தர் தம் மனைவி மிருணாளினிதேவிக்கு எழுதிய இரு கடிதங்கள்; மிருணாளினி தம் 30ஆவது வயதில் மரித்தது; சிறையிலிருந்து வெளிவந்து அரவிந்தர் ஆற்றிய உத்தர்பாராச் சொற்பொழிவு; ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது; கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றது;

1910இல் கல்கத்தாவிலிருந்து மாறுவேடத்தில் அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்தது; ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டது; பாரதியாரோடு நட்புக் கொண்டது; 1914 ஆம் ஆண்டு மிர்ரா என்ற ஸ்ரீ அன்னை, புதுச்சேரி வந்தது; 1920இல் அவர் நிரந்தரமாகப் புதுச்சேரியிலேயே தங்கியது; அரவிந்தர் 'ஆர்யா' என்ற பத்திரிகையை நடத்தியது; சாவித்திரி காவியத்தைப் படைத்தது; 1926 இறுதியிலிருந்து 1930 வரை அரவிந்தர் யாருடனும் பேசாதது;

1938இல் புலித்தோலில் தடுக்கி விழுந்து அவரின் வலது கால் தொடை எலும்பு முறிந்தது; 1950 டிசம்பர் 5 அன்று அரவிந்தர் சமாதி அடைந்தது; காலமான பிறகும் நூற்றுப் பதினொரு மணிநேரம் புற உடலில் காலமானதற்கான அறிகுறிகளே தென்படாதது கண்டு பிரஞ்சு அரசின் தலைமை மருத்துவர், 'இது ஒரு அறிவியல் விந்தை' என்று சான்று உரைத்தது.... என படிப்படியாக வளர்ந்து செல்கிறது நூல்.அரவிந்தரின் ஆன்மிக சாதனைகள், அவர் கண்ட கனவுகள், கண்ணன் அவருக்குக் காட்சி அளித்தது, அதிமனம் என்ற இலக்கை நோக்கி அவர் பயணித்தது... என அரவிந்தரின் ஆன்மிக முகத்தை விரிவாகக் காட்டியுள்ளார் திருப்பூர் கிருஷ்ணன். ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும்போதும் அரவிந்தர் பற்றி அறிஞர்களும் அவருடன் பழகியவர்களும் கூறிய / எழுதியவற்றிலிருந்து சில வரிகள் இடம் பெறுகின்றன. அவை, நூலின் கனத்தை மேலும் கூட்டுகின்றன.

இந்த நூல் பெயரளவில் அரவிந்தரின் வரலாற்றைக் கூறினாலும் ஆன்மிகப் பெரியோர்கள் பலரின் அனுபவங்களும் சிந்தனைகளும் நூலை அலங்கரிக்கின்றன. இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகானந்தர், திருமூலர், ஆதிசங்கரர், அணீமாண்டவ்யர், புத்தர், வள்ளுவர், ஏசுநாதர், சதாசிவப் பிரம்மேந்திரர், இராகவேந்திரர், சாரதா தேவி, விரஜானந்தர், பரமகம்ச யோகானந்தர்.... என நூற்றுக்கணக்கான பெரியவர்கள், நூலின் உள்ளே நடமாடுகிறார்கள்; நம் உள்ளத்திலும்கூட.

மிகவும் கடினமான பணியைச் செய்கிறோம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் திருப்பூர் கிருஷ்ணன், இந்த வரலாற்றைக் கையாண்டுள்ளார். கற்பனையை அதிகம் கலக்காமல், கணிப்புகளில் இறங்காமல், பெரும்பாலும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே சென்றுள்ளார். வரலாற்று ஆசிரியராக இருந்த திருப்பூர் கிருஷ்ணன், அங்கங்கே பக்தராக மாறி, அரவிந்தரைப் புகழ் பாடுகிறார். நாயகரைத் துதிப்பது, தமிழ் மரபுதான் என்றாலும் அதன் விழுக்காடு கூடும்போது நூல், வரலாற்றுத் தன்மையைக் காட்டிலும் பக்தித் தன்மை உடையதாய் ஆகிவிடுகிறது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள விஜயா சங்கரநாராயணன், "இது மனித நிலை கடந்த அதிமனிதரைப் பற்றிய வரலாறு. அவரது கொள்கையும் கருத்துகளும் புத்தம் புதியன. 'எனது வரலாற்றை உள்ளபடியே எழுத இயலாது' என்று சொன்ன ஸ்ரீ அரவிந்தரின் வரலாறு... இது வெறும் பொழுதுபோக்குப் புத்தகமல்ல. 'இப்படியும் ஒரு மகான் இருந்தார், இன்னமும் இருக்கிறார்' என்பதைத் தமிழுலகிற்குச் சொல்லும் புனிதச் செய்தி இது" என்கிறார்.

வேதாவின் அழகிய ஓவியம், அட்டைப் படத்தை அலங்கரிக்கிறது. நூலைத் தம் தாய் திருமதி கே.ஜானகிக்கும் தந்தை அமரர் பி.எஸ்.சுப்பிரமணித்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார், திருப்பூர் கிருஷ்ணன்.
-----------------------------------------------
அரவிந்த அமுதம் : திருப்பூர் கிருஷ்ணன், பக்: 128, விலை: ரூ. 85, திருப்பூர் குமரன் பதிப்பகம், 57-பி, பத்மாவதி நகர், காமராஜ் சாலை, விருகம்பாக்கம், சென்னை - 600 092
thiruppurkrishnan@hotmail.com

1 comment:

Anonymous said...

அன்புள்ள அ.க,
மிகவும் பயனுள்ள தகவல். புத்தகத்தைப்படிக்கும் ஆவல் எழுந்துவிட்டது. அரவிந்தரைப்பற்றி மேலும் அறியவும் விருப்பம். நூலை வாங்க முயற்சிக்கிறேன்.
அன்புடன், ஜெயந்தி சங்கர்

posted by: