!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, July 17, 2006

இம்சை அரசன் 23-ம் புலிகேசி - திரை விமர்சனம்

Photobucket - Video and Image Hosting


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் சரித்திர காலப் படம். விகடனில் வெளிவந்த கேலிச் சித்திரங்கள், இரண்டரை மணி நேரப் படமாக நீண்டுள்ளன. வடிவேலு இரட்டைக் கதாநாயகனாக மிகச் சிறந்த முறையில் நடித்துள்ளார். அவருடைய மேல்நோக்கிய கூர்மீசை, அவருடைய பாத்திரப் படைப்புக்கு மெருகு சேர்த்துள்ளது.

நாகேஷ், மனோரமா ஆகியோர், அரசன் - அரசி. அவர்களின் 22 பிள்ளைகள் பிறந்து உடனே இறந்துவிடுகின்றனர். அதன் பிறகு இரட்டைப் பிள்ளைகள் பிறக்கிறார்கள். சோதிடர்களின் உதவியால் அவர்களில் ஒருவன் சொல்புத்தியுடனும் அடுத்தவன் சுயபுத்தியுடனும் இருப்பார்கள் என்று தெரிகிறது. நாசர், மனோரமாவின் தம்பியாகவும் அரசவையில் ராஜகுருவாகவும் இருக்கிறார். அவருக்கு அரச பதவியின் மீது ஒரு கண். இதனால், பிறக்கும் குழந்தையைத் தன் சொல்கேட்கும் கிளிப்பிள்ளையாக ஆக்க முடிவு செய்கிறார். ஒரு குழந்தையைக் கண் காணாத இடத்தில் விடச் சொல்கிறார். ஆற்றில் விடப்படும் அந்தக் குழந்தை, உக்கிரபுத்தன் என்ற பெயரில், வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் வளர்கிறது. அறிவாளியாகவும் தேசப் பற்று மிக்கவனாகவும் இந்தக் குழந்தை வளர்கிறது.

அதே நேரத்தில் 23ஆம் குழந்தையாகப் பிறந்து அரண்மனையில் வளரும் சொல்புத்தி குழந்தைக்கு 23ஆம் புலிகேசி என்று பெயர் சூட்டுகிறார்கள். அவனை இளம் வயதிலிருந்தே அசடாக வளர்க்கிறார், ராஜகுருவாக வரும் நாசர். அவன், வளர்ந்தாலும் முழு முட்டாளாகவும் பித்துக்குளித்தனத்துடனும் விளங்குகிறான். ஆங்கிலேய ஆட்சிக்குக் கப்பம் கட்டுபவனாக, கோழையாக, பெண்பித்தனாக, மக்கள் நலனில் அக்கறை அற்றவனாக, இன்னும் கேட்டால் அவர்கள் நலனுக்குக் கேடு விளைவிப்பவனாக, கள்வர்களின் கூட்டாளியாக, பேராசைக்காரனாக... இப்படிப் பல குணங்கள் கொண்டவனாக முதல் வடிவேல் விளங்குகிறார். இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக அவரின் கோமாளித்தனம் உள்ளது. படிக்கட்டுப் பிடியில் பட்டுத் துணியைப் போட்டுச் சறுக்கு மரம் விளையாடுவதில் தொடங்கி, 'தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பயல் கட்டையால் அடிப்பான். அவன் யார்?' என விடுகதை போடுவது வரைக்கும் அவர் கலக்கியிருக்கிறார்.

கோமாளி வடிவேலுவை வைத்துச் சந்தடி சாக்கில் நடப்பு விவகாரங்களை அருமையாகக் கிண்டல் அளித்துள்ளார், இயக்குநர் சிம்புதேவன். கொக்ககோலா, பெப்சி பானங்களைக் கிண்டல் செய்யும் விதமாக, அக்காமாலா, கப்சி என்ற பெயர்களில் பானங்களை ஆங்கிலேயர்கள் வந்து தொடங்குகின்றனர். அந்தப் பானங்களை வாங்கிக் குடியுங்கள் என்று உள்ளூர் நடிகர்கள் விளம்பரம் செய்கிறார்கள். 2 வீசம் அடக்க விலையுள்ள அவற்றை 10 வீசம் என அநியாய விலைக்கு விற்கிறார்கள். இப்படியாக அயல்நாட்டுப் பானங்களைக் கிண்டல் செய்கிற இயக்குநர், அடுத்துக் கிரிக்கெட்டையும் கேலி செய்துள்ளார்.

இருவேறு சாதியினர் மோதிக்கொள்ள, ஜாதிச் சண்டை மைதானம் என்ற ஸ்டேடியத்தை அரசன் வடிவேலு தொடங்கிவைக்கிறான். அதில் அதிகம் பேரை அடித்த சச்சிதானந்தத்துக்கு சிறப்பாகச் சண்டை போட்டவன் என்பதற்காகப் பரிசு கொடுக்கிறார்கள். இந்தச் சண்டையின் இடைவேளையில் அக்காமாலா, கப்சி பானங்களை விற்கிறார்கள் என்ற நையாண்டி ரசிக்கவைத்தது.

நோஞ்சானான தன்னை, பெரிய பலசாலி போல வரைந்து பிரமாண்டமாக நிறுத்துகிறான். 'எதிர்வரும் தலைமுறைக்கு 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்று தெரியவா போகிறது? வரலாறு ரொம்ப முக்கியம்' என்று வடிவேலு பேசும்போது, அந்த இடத்தில் அவரைக் கோமாளியாகக் கருத முடியவில்லை. இது, உண்மையிலேயே மிகவும் புத்திசாலித்தனமான யோசனை.

நடை, உடை, பாவனை அனைத்தின் மூலமும் வடிவேலு இந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இவரோடு ஒப்பிடும்போது உக்கிரபுத்தனாக வரும் தம்பி வடிவேலுவிற்கு வாய்ப்பு குறைவுதான். ஆனால், அவன் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கும் புரட்சிப் படையை அமைக்கிறான். ஆங்கிலேய ஆட்சிக்குக் கப்பம் செலுத்தி அடிமையாக விளங்கும் 23-ம் புலிகேசியை வீழ்த்தவும் எண்ணுகிறான். இருவரின் தோற்ற ஒற்றுமையை வைத்து, உக்கிரபுத்தன், 23-ம் புலிகேசியாக மாறி, நாட்டில் பெரும் மாற்றத்தை உண்டாக்குகிறான்.

கடைசியில் ராஜகுருவின் சூழ்ச்சி வென்றதா? உக்கிரபுத்தனின் புரட்சி வென்றதா? என்பதே இறுதிக் கட்டக் காட்சி.

இது, வடிவேலுவுக்கு அவர் வாழ்நாளிலேயே தலைசிறந்த படம். சிம்புதேவனுக்கு முதல் படமே முத்திரைப் படம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கதை நடக்கிறது. அந்தக் காலத்தைக் கண்முன் நிறுத்துவதில் கலை இயக்குநர் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார். முக்கியமாக, அரசவை தொடர்பான காட்சிகள் இயல்பாக உள்ளன. பாடல்களைக் காட்டிலும் படத்திற்கான பின்னணி இசையைச் சபேஷ் முரளி அருமையாக அமைத்துள்ளார்கள். பழைய பாடல்களை ஒத்துள்ள இசையும் நடன அசைவுகளும் உடைகளும் சிரிக்க வைக்கின்றன. வசனங்கள், ரசிக்கும்படியாக உள்ளன.

இரட்டை வடிவேலுவிற்கும் ஆளுக்கொரு நாயகி. வழக்கம்போல் தேஜாஸ்ரீயும் மோனிகாவும் பாடல் காட்சிகளில் மட்டும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்கள்தான். அமைச்சராக வரும் இளவரசுவும் தளபதியாக வரும் ஸ்ரீமனும் சிறப்பாக நடித்துள்ளார்கள். நாகேஷையும் மனோரமாவையும் அதிகம் பயன்படுத்தவில்லை.

படத்தில் ஆள் பற்றாக்குறை நன்றாகத் தெரிகிறது. புலிகேசியைத் தாக்கப் படையெடுத்து வரும் தமிழ் மன்னன், சிலரோடுதான் வருகிறான். இறுதிக் காட்சிகளில் 'புரட்சிப் படை வெளியில் நிற்கிறது' என்று சொல்கிற இடத்தில் ஐந்தாறு பேர்கள் நிற்கிறார்கள்.

வடிவேலுவுக்கு வசன உச்சரிப்பு, பல இடங்களில் உதைக்கிறது. புலிகேசி என்பதை புலிக்கேசி என்கிறார். ற/ர, ல/ள போன்ற மயங்கொலிகளைத் தவறாக உச்சரிக்கிறார். இருபதாம் நூற்றாண்டுச் சொற்கள் பலவும் இந்த 18ஆம் நூற்றாண்டுப் படத்தில் வருகின்றன. 23-ம் புலிகேசி என்று எழுதுவது தவறு; 23ஆம் புலிகேசி என்றே இருக்கவேண்டும்.

இவற்றை எல்லாம் கடந்துவிட்டுப் பார்த்தாலும்கூட இம்சை அரசன், கிச்சுகிச்சு மூட்டுகிறான். அனைத்துத் தரப்பினரும் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற வகையில் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக ஷங்கரும் இயக்கியதற்காகச் சிம்புதேவனும் பாராட்டுக்கு உரியவர்கள்.


===============================================
இம்சை படங்களைக் காண....

இம்சை டிரெய்லரைக் காண...
===============================================

நன்றி: தமிழ்சிஃபி

2 comments:

hosuronline.com said...

விமர்சனம் மிக அருமை

vadivel.p said...

helo sir i am vadivelu i am studieng 3 rd bca . . your command is....... allways super