புதுப்பேட்டை - திரை விமர்சனம்
நரம்பைப் போல் இருக்கும் தனுஷை ஒரு பேட்டைக்குத் தாதாவாகக் காட்ட முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் செல்வராகவன். அழகு, நிறம், புஜ பல பராக்கிரமம்... இவையெல்லாம் கொண்டவர்தான் தமிழ்த் திரையுலகின் கதாநாயகன் என்ற எண்ணத்தை ஏற்கெனவே உடைத்த தனுஷ், புதுப்பேட்டையின் மூலம் புதிய செய்தியைக் கூறியுள்ளார். உடல் பலத்தை விட மனோபலமே முக்கியம் என்பதுதான் அது.
சேரிச் சிறுவன் குமார், தன் அம்மாவை அப்பாவே கொல்வதைப் பார்த்துவிட்டுச் சென்னைக்குத் தப்பி வருகிறான். சந்தர்ப்பவசத்தில் கஞ்சா விற்கும் அன்புவின் கூட்டத்தில் சேருகிறான். அங்கு 'பொருள்' எடுத்துச் சென்று, 'தொழில்' கற்கிறான். ஒரே அடியில் எதிராளியைக் கொன்றதன் மூலம் அவன் புகழ் பெறுகிறான். அங்கு பாலியல் தொழில் செய்யும் சிநேகாவுடன் சிநேகமாகிறான். அவளை அங்கிருந்து மீட்க வேண்டி, தாதா அன்புவை எதிர்த்துக் கொன்று தானே அந்தப் பேட்டையின் தாதா ஆகிறான். பிறகு கொக்கி குமார் ஆகி, படிப்படியாக அரசியலுக்குள் நுழைகிறான் என்பதே புதுப்பேட்டை படத்தின் கதை.
கொக்கி குமார் என்ற பாத்திரத்தில் ஒற்றை அடியில் ஒரு ஆளைக் கொல்வதில் தொடங்கி, ஒரு கும்பலை ஒரே ஆளாக வெட்டிச் சாய்ப்பது வரை தனுஷ் இந்தப் படத்தில் செய்திருப்பது, மாயாஜாலம். பல மணி நேரமாக அடியை எல்லாம் தாங்கிக்கொண்டு, அடித்தவனை ஒரே அடியில் கொல்லும் உக்கிரம்; ரத்த விகாரமான முகத்துடன் 'எனக்கு வலிக்கவே இல்ல, வாங்கடா' என்று ஒரு கும்பலையே சண்டைக்கு அழைக்கும் ஆண்மை; தன்னைக் கொல்ல ஆள் அனுப்பிய தாதாவின் தலையை வெட்டி எடுத்துச் செல்லும் மூர்க்கம்; தன்னைக் கொல்லச் சொல்லும் அரசியல் தலைவரிடம் 'நீங்க என்னைக் கொல்லாம விட்டா, நான் உங்களைக் கொல்லாம விடுறேன்' என்று பேசும் தைரியம்; தன் தாயைக் கொன்ற தந்தையை உயிரோடு புதைக்கும் வன்மம்... என தனுஷின் பாத்திரம் வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையாகப் பார்க்கும் போது, இது ரவுடிக் கும்பலின் கதை. ஆனால், சற்றே ஆழமாகப் பார்த்தால், இந்தப் படத்தில் மிகச் சிறந்த சமூக விமர்சனமும் அரசியல் நையாண்டியும் உள்ளன. அடியாள் உலகை எதார்த்தமாகக் காட்டியிருக்கிறார்கள். அடியாள்களுக்கும் காவல் துறைக்கும் அரசியலுக்கும் பாலியல் தொழிலுக்கும் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதை இந்தப் படம் மேலும் ஆழமாகக் காட்டியிருக்கிறது.
அடியாள் தொழிலில் ஒருவன் எப்படி நுழைகிறான்? ஏன் நுழைகிறான்? அவர்களின் பின்னணி என்ன? தேவைகள் என்ன? மனோபாவம் என்ன... எனப் பலவற்றைப் படம் தெளிவாகச் சொல்லிவிடுகிறது. நான் என்ற ஆணவம், அடியாள் பலருக்கும் அதிகமாகவே இருக்கும். இதை ஒரு வசனத்தின் மூலம் பாலகுமாரனும் செல்வராகவனும் காட்டிவிடுகிறார்கள்.
படத்தின் பிற்பகுதியில் வரும் அரசியல் காட்சிகள், படத்தில் நகைச்சுவைப் பகுதி இல்லாத குறையைப் போக்குகின்றன. கொக்கி குமார், ஒரு கட்சியின் பகுதிச் செயலாளர் ஆனதும் அவருக்குக் கிடைக்கும் மரியாதை; மைக் முன் தோன்றும் முந்தைய நொடி வரை ரவுடியைப் போல் பேசும் அரசியல் தலைவர் (அழகம்பெருமாள்), மைக் முன் வந்ததும் 'செந்தமிழ்க் கவிஞன் நான்' என்பது ஆகியவற்றைச் சிறந்த அரசியல் அங்கதம் எனலாம். எதிர் தாதா மூர்த்தி, கொக்கி குமாரால் கொல்லப்படுவதை விரும்பாமல் தானே தன் கழுத்தை அறுத்துக்கொள்கிறான். மூர்த்தியின் கட்சியிலேயே குமார் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அங்கு, மேடையில் அண்ணாந்து பார்த்து 'மூர்த்தி' என்று குமார் உருகுகிறார்; 'மூர்த்தி என்றால் அன்பு, மூர்த்தி என்றால் தாய்மை' என்று வசனம் பேசுகிறார். நடப்பு அரசியலைச் சிறந்த முறையில் செல்வராகவன் காட்சிப்படுத்தியுள்ளார்.
படத்தில் பாலியல் தொழிலாளியாகச் சிநேகா சிறப்பாக நடித்துள்ளார். முதல் காட்சியில் மிகையான பவுடர் பூச்சுடனும் உதட்டுச் சாயத்துடனும் அவர் தோன்றும்போது சொல்லாமலே அவரின் தொழில் தெரிந்துவிடுகிறது. அவர் முழுகாமல் இருக்கும்போது, 'இது என் குழந்தைதானா என்ற சந்தேகம் உன் நெஞ்சில் இன்னும் இருக்குதானே' என்று தனுஷிடம் உருகிக் கேட்கிறார். ஆனால், சோனியா அகர்வாலின் பங்கு, படத்தில் மிகவும் குறைவுதான். தன் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுக்க வந்த தனுஷே, தனக்குத் தாலி கட்டியதை அவர் அவ்வளவு லேசாகவா எடுத்துக்கொண்டார்? சோனியாவின் உணர்வுகள் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பதிவாகி இருக்கலாம்.
தலைமறைவு வாழ்க்கை வாழும் அடியாள்களின் வாழ்க்கையை அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சிறந்த முறையில் காட்டுகிறது. நெருக்கமாக (குளோசப்) காட்சிகளின் மூலம் பாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. நடனக் காட்சிகளும் இயல்பாக உள்ளன. உடைகளும் காட்சியைச் சித்திரிக்கும் பொருள்களும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டுள்ளன.
நவீன உலகில் பெரும்பாலான அடியாள்கள், துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் மாறிவிட்ட நிலையில் புதுப்பேட்டையில் வரும் அடியாள்கள், அரிவாளையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். பிச்சையெடுத்த தனுஷ், பிஸ்தாவான பிறகும் அவருடைய உடல்மொழியும் குரலும் ஒரே மாதிரி உள்ளன. சாதாரணமான ஆளாகவே அவர் உலவுகிறார். பொது இடங்களில்கூட தாதா என்ற நினைப்புடன் அவர் இல்லாதது, முரட்டுத் தோரணையோ, அதட்டலான குரலோ இல்லாதது, வியப்புதான். ஆயினும் தனுஷ் இந்தப் படத்தில் வளர்ந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
படத்தில் ரத்தமும் கொலையும் வன்முறையும் மிதமிஞ்சிய நிலையில் உள்ளதற்காக இயக்குநரைக் குறை சொல்ல முடியாது; அப்படி ஓர் உலகம் இருக்கிறதே, என்ன செய்ய?
==============================================
புதுப்பேட்டை படங்களைக் காண...
புதுப்பேட்டை முன்னோட்டத்தை (டிரெய்லரை)க் காண...
==============================================
நன்றி: தமிழ்சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, July 17, 2006
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:52 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment