!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இந்திய ரூபாய்: மாறிவரும் முகங்கள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, August 18, 2006

இந்திய ரூபாய்: மாறிவரும் முகங்கள்

ஆங்கில மூலம்: ஸ்ரீதேவி தமிழில்: அண்ணாகண்ணன்

இந்தியாவின் 60ஆவது விடுதலைத் திருநாளிற்காகத் தயாரித்த சிறப்புப் பகுதி இது. சிஃபி.காமின் நிதித் தளத்திற்கு ஆசிரியராக உள்ள ஸ்ரீதேவி, இணையத்தின் பல்வேறு பக்கங்களிலிருந்து செய்திகளைத் திரட்டி இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர், ரூபாயின் வரலாற்றை ஒளிப் (வீடியோ) பதிவாகவும் தயாரித்தார். தில்லைகுமரன் படத் தொகுப்புப் பணியாற்றினார். அதே ஒளிப்பதிவைத் தமிழிலும் மொழிமாற்றலாமே என்ற அவரின் யோசனைக்கு ஏற்ப, அவரின் உரையைத் தமிழாக்கினேன்.

அந்த ஒளிப் (வீடியோ) பதிவை இங்கே பார்க்கலாம்:

ஆங்கிலத்தில் >>>>

குரல்: ஸ்ரீதேவி

தமிழில் >>>>

குரல்: அண்ணாகண்ணன்



'இந்திய ரூபாய்: மாறிவரும் முகங்கள்' உரையின் தமிழாக்கம் வருமாறு:

ஒரு ரூபாய்.

இதைக் கேட்டதும் உங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறது? பூவா தலையா என்று நாம் அநேக முறைகள் சுண்டிப் பார்த்த அதே நாணயம்; கிரிக்கெட் ஆட்டங்களில் யார் முதலில் ஆடுவது என்பதைத் தீர்மானிக்கும் அதன் பக்கங்கள். அசோகச் சக்கரத்தைக் கொண்ட தலை ஒருபுறம்; ஒன்று என்ற எண்ணுடன் கோதுமைக் கதிர்கள் பூவாகச் சிரிக்கும் மறுபுறம்; இதுதான் உங்கள் மனத்தில் தோன்றிய சித்திரமா? அந்தச் சாதாரண மெல்லிய, வெள்ளி நாணயத்தின் பின்னால் ஒரு சரித்திரமே இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 59 ஆண்டுகள் ஆகிவிட்டன; இந்நிலையில் இந்த நாணயத்தின் பல முகங்களில் சிலவற்றை இப்போது காணலாம்.

உண்மையில் இந்திய நாணயத்தின் வரலாறு என்பது, கி.மு.6ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. உலகிலேயே முதலில் நாணயத்தைப் புழக்கத்தில் விட்ட மிகச் சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. ஆனால், அவை வெள்ளி நாணயங்கள்.

அது ஒரு புறம் இருக்க, 1770களில்தான் காகித நாணயம் புழக்கத்திற்கு வந்தது. பாங்க் ஆஃப் இந்துஸ்தான் (1770-1832), வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு நிறுவிய த ஜெனரல் பாங்க் ஆஃப் பெங்கால் அண்டு பீகார் (1773-75) ஆகியவையும் பெங்கால் வங்கியும் (1784-91)தான் காகித நாணயங்களை முதலில் வெளியிட்டன.

1961இல் அறிமுகப்படுத்தப்பட்ட காகித நாணயச் சட்டம், ஆங்கிலேய ஆட்சிக்கு இந்தியா முழுவதும் நாணய அச்சடிப்பு உரிமையை ஏகபோகமாக வழங்கியது. காகித நாணய நிர்வாகம், மின்ட் மாஸ்டர்ஸ், கணக்கியல் அதிகாரிகள், நாணயக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரிடம் இருந்தது.

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல்கட்ட காகித நாணயங்களில் அரசி விக்டோ ரியாவின் உருவப் படம் இருந்தது. இது, 10, 20, 50, 100, 1000 என்ற மதிப்புகளில் வெளிவந்தது. இவை அனைத்தும் ஒரே முகத்தைக் கொண்டிருந்தன. அனைத்தும் இரு மொழிகளில் அமைந்திருந்தன. லேவர்ஸ்டாக் காகித ஆலைகளில் இந்தக் காகித நாணயங்கள், கையால் அச்சடிக்கும் எந்திரத்தில் அச்சடிக்கப்பட்டன. காகித நாணயங்களின் பாதுகாப்பிற்காக வாட்டர்மார்க் எனப்படும் நீர்முத்திரை, அச்சடிக்கப்பட்ட கையொப்பம், பதிவு எண்கள் ஆகியவை அதில் கட்டாயம் ஆக்கப்பட்டன.

பிரிட்டிஷ் இந்தியாவின் காகிதப் பணமானது, பணப் பரிவர்த்தனைக்குப் பெரிதும் உதவியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் காகிதப் பணத்தை, பாதியாக வெட்டினார்கள். ஒரு பாதியை முதலில் அனுப்பி, அது கிடைத்துவிட்டது என்று ஒப்புகைச் சீட்டு கிடைத்த பிறகே அடுத்த பாதியை அனுப்பினார்கள். இந்த முறை, 1923இல் மன்னர்களின் உருவப் படம் அறிமுகமாகும் வரை தொடர்ந்தது.

அரசி விக்டோ ரியாவின் உருவப் படம் கொண்ட, ஒத்த தோற்றமுடைய, 1867இல் அறிமுகமான இந்தப் பணம், போலிப் பணம் உருவான காரணத்தால் திரும்பப் பெறப்பட்டது.

முதலாம் உலகப் போர்க் காலத்தில் காகிதப் பணத்தைச் சிறிய மதிப்புடையதாக விநியோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அணாக்கள் புழக்கத்தில் இருந்த காலம் அது. அப்போது 1917 நவம்பர் 30ஆம் தேதி நூதனமான ஒரு ரூபாய்த் தாள் அறிமுகம் ஆனது. அதைத் தொடர்ந்து
இரண்டு ரூபாய் எட்டணாத் தாளும் அறிமுகமானது. இந்த ரூபாய்த் தாள்களின் உற்பத்திச் செலவு அதிகமாக இருந்ததால் 1926 ஜனவரி 1 அன்று நிறுத்தப்பட்டது.

இந்தப் பணத் தாள்கள், முதலில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படத்தைத் தாங்கியிருந்தன. 1923 மே மாதத்தில் ஒரு பத்து ரூபாய்த் தாளிலும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் வீற்றிருந்தது. மன்னரின் உருவப் படத்தை அச்சடிப்பது, பிரிட்டிஷ் இந்தியாவின் அனைத்து காகிதப் பணத்திலும் இன்றியமையாத அம்சமாக விளங்கியது.

பணத்தை அச்சடிக்கும் பொறுப்பை இந்திய அரசின் நாணயக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து 1935 ஏப்ரல் 1 திங்கள் கிழமை அன்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது. 1934 ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின்படி ரிசர்வ் வங்கிக்கு இந்திய அரசின் சார்பில்
நாணயங்களை விநியோகிக்கும் உரிமை உண்டு.

இந்த வங்கி, 1938இல் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படத்துடன் முதன் முதலில் ஐந்து ரூபாய்த் தாளை வெளியிட்டது. அதே ஆண்டு பிப்ரவரியில் 10 ரூபாய் நோட்டு அறிமுகமானது; மார்ச்சில் நூறு ரூபாய்த் தாளும் ஜூனில் ஆயிரம், பத்தாயிரம் ரூபாய்த் தாள்களும்
அறிமுகப்படுத்தப்பட்டன.

போர்க்காலம் என்பதால் 1940 ஆகஸ்டில் ஒரு ரூபாய்த் தாள், மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், போரின் போது ஜப்பானியர்கள், உயர்தரமான போலி நாணயங்களை இந்தியாவில் புழக்கத்தில் விட்டனர். இதனால் ரூபாய்த் தாளில் உள்ள வாட்டர் மார்க் எனப்படும் நீர்முத்திரையில் மாற்றம் வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. ஆறாம் ஜார்ஜ் மன்னரின் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டும் கொண்டிருந்த ரூபாய்த் தாள்கள், அவரின் மார்பளவுப் படத்துடன் வெளிவந்தன.

ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் கொண்ட பணம், 1947ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்தது. அதன் பிறகு சுதந்திர இந்தியாவின் பணம் வெளிவரத் தொடங்கியது.

சுதந்திரத்திற்குப் பிறகு 1949இல் இந்திய அரசு, புதிய ஒரு ரூபாய்த் தாளை வெளியிட்டது. முன்பு மன்னர் படம் இருந்த இடத்தில் மகாத்மா காந்தியின் படத்தைப் பரிசீலித்துவிட்டு இறுதியாக, அசோகச் சின்னமும் சிங்க முகமும் பணத்தில் இடம்பிடித்தன. அப்போதுதான் இன்று பிரபலமாக உள்ள இந்திய ரூபாய் பிறந்தது.

அடுத்த முறை பணத்தை எடுக்கும் போது அது வெறும் தாள் இல்லை; இந்திய சுதந்திரத்தின் அத்தாட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 comments:

சீமாச்சு.. said...

அன்பின் அண்ணாகண்ணன்..
பயனுள்ள தகவல்கள்.. பயனுள்ள வீடியோ..
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

இந்த வீடியோவின் wmv file கிடைக்குமா? தனிப் பயன்பாட்டுக்குச் சேமித்து வைத்துக் கொள்ளக் கிடைத்தால் நலம்.
அன்புடன்,
சீமாச்சு...

வஜ்ரா said...

அண்ணா கண்ணன் சார்,

எங்களைப் போன்ற அனாமத்து ஆப்பிரேட்டிங்க் சிஸ்டமான மேகிண்டோஷ் பயன் படுத்துபவர்கள் பார்க்க முடியவில்லை...

ஆகவே, ஒரு சிறப்பு வேண்டுகோள்...

www.youtube.com

தளம் சென்று உங்கள் வீடியோவை பதிவேற்றினீர்கள் என்றால் நலம்..மேலும் வலைப்பூ integration கூட உண்டு அதில்...உங்கள் வலைப்பூவுக்கு நேராக உங்கள் வீடியோவை தொடுப்பு கொடுத்து பதிவு எழுதலாம்...

நன்றி,

துளசி கோபால் said...

நல்ல விபரங்கள் அடங்கிய பதிவு.

அந்தக் காலத்திய ஒ ரூபாய் நாணயம் முழுவதும் வெள்ளியால் செய்யப்பட்டதாக இருந்தது
என்று என் தாயார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
எங்கள் பெரியக்காவின் கல்யாண சமயத்தில், வீட்டில் அதுவரை சேர்த்து வைத்திருந்த
வெள்ளி நாணயங்களை அழித்து(????!!!!) சீர்வரிசைக்கான முக்கியமாக மாப்பிள்ளை
சாப்பிடக் கொடுக்கும் வெள்ளித்தட்டு, பூஜா பாத்திரங்கள் இத்தியாதிகள் செய்ததாகக் கேள்விப்
பட்டிருக்கிறேன்.

ஆமாம். அரசாங்கக் காசை இப்படிச் செய்தது குற்றமில்லையோ?

ஆனா, அப்படிச் செய்தவர்கள் யாரும் இப்போது இவ்வுலகில் இல்லை.

சிவமுருகன் said...

நல்ல பயனுள்ள விஷயத்தை பதிவாகவும் படமாகவும் இட்ட விதம் அருமை. முதல் முறை என்பதால் சற்று தமதமாக் கேட்டேன். நன்றாக உள்ளது உங்கள் பதிவு.