ஒரே எழுத்திலான இந்தப் படத்தைப் பாராட்ட, ஓராயிரம் சொற்களைப் பெய்தாலும் போதாது.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையே 'பூ' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. சிறுகதை அல்லது நாவலைத் திரைப்படமாக எடுக்கும் போது பற்பல சமரசங்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். அந்தச் சிக்கல்களை எல்லாம் வெற்றிகரமாகத் தாண்டிவந்து திரையிலும் ஒரு வாழ்வை தத்ரூபமாகக் காட்டியுள்ளார் இயக்குநர் சசி.
தனக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத நிலப்பரப்பில் கதை நிகழ்ந்தாலும் கதை நிகழும் இடத்திலேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்தார் சசி. அங்குள்ள மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் கூர்ந்து கவனித்து அவற்றை வெள்ளித் திரையில் பதிந்து, வரலாற்று ஆவணமாக்கி உள்ளார்.
ஐ என எழுதுவதற்கு ஜ என எழுதும் பிள்ளைகள், தூங்கும் போது பாயில் சிறுநீர் கழிக்கும் சிறுமி, எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறோம் எனத் தெரியாத மாணவிகள், காதலனை அடைவதற்காகச் சாமியை மாற்றிக்கொள்ளும் காதலி, பொட்டல் வெளியில் இரட்டைப் பனை மரங்கள், தவறாகவேனும் ஆங்கிலம் பேச முயலும் கிராமத்து மக்கள், பேனாக்காரர் என அழைப்பதில் பெருமை கொள்ளும் வண்டிக்காரர், ஆடு மேய்க்கும் சிறுவன் கையில் செல்பேசி... எனக் கதையின் ஒவ்வொரு துளிக் காட்சியிலும் வாழ்க்கை நிரம்பி வழிகிறது.
பார்வதி இந்தப் படத்தில் மாரியம்மாளாக நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறார். நவரசங்களையும் அவர் காட்டும் அழகு, வர்ணனைக்கு அப்பாற்பட்டது. தன் ஆசை மச்சான் தங்கராசு (சிறீகாந்த்) மீது அவர் கொண்ட காதல், அதை வெளிப்படுத்தத் தயக்கம், அவன் தன் கையைப் பிடிக்க வேண்டும் என ஏக்கம், அதைத் தொடர்ந்த கனவுகள், செய்யும் தியாகம்.... என அந்தப் பாத்திரத்திற்கு உயிர் ஊட்டியுள்ளார் பார்வதி. வெகு சில காட்சிகளில் ஒப்பனை சரியில்லை என்றாலும் அவரின் கண்கள் பேசுகின்றன.
'உனக்குத்தான் கொடுக்க முடியலை; நீ சாப்பிடும் தோசைக்காவது கொடுக்கிறேன்' என அவர் தோசைக்கு முத்தம் தருகிறார்; காதலனுக்காக நள்ளிரவில் காட்டுக்குள் சென்று கள்ளிப் பழம் பறிக்கிறார்; காதலன் நன்மைக்காக வேறு திருமணம் செய்யச் சம்மதிக்கிறார்...... இவ்வாறான பற்பல காட்சிகள், உள்ளத்தை உருக்கக் கூடியவை. அவளுடைய கனவு நிறைவேறாத போது, அவளுக்காக நம் மனம் விம்முகின்றது. பாசாங்கு இல்லாத அழகு, அச்சம், கூச்சம், தயக்கம், ஆனாலும் உள்ளுக்குள் ஆசை... எனக் கிராமத்துப் பெண்ணை நம் கண் முன் நிறுத்திவிடுகிறார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளார் பார்வதி. இந்தப் படத்தின் நடித்தமைக்காக இவருக்கு விருது கிடைக்காவிட்டால்தான் வியக்க வேண்டும்.
சிறீகாந்துக்கு இந்தப் படம், ஒரு நல்ல வாய்ப்பு. கிராமத்தில் பிறந்து, நகரத்தில் படிக்கச் செல்லும் மாணவனுக்கு முதலில் ஏற்படும் பிரமிப்பு சரிதான். அந்த இடத்தில் தங்கராசின் உடையும் ஒப்பனையும் இன்னும் கொஞ்சம் கிராமத்துத்தனமாக இருந்திருக்கலாம். சிறு வயதில் இருந்து இவ்வளவு அன்பும் காதலுமாய் ஒருத்தி இருப்பதை எப்படி அவரால் கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது? சின்னஞ் சிறுமியான மாரியிடம் என்ன ஆகப் போகிறாய் என ஆசிரியர் கேட்டதற்கு, 'தங்கராசுக்குப் பொண்டாட்டியா ஆகப் போறேன்' என அவள் சொன்னது தெரிந்தும் அதைச் சட்டையே செய்யாமல் சாதாரண நட்பு போல அவர் பழகுவது சற்றே நெருடுகிறது. ஆயினும் அவரின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன். நா.முத்துக்குமாரின் வரிகளில் 'சூ சூ மாரி', 'ஆவாரம் பூ', 'தீனா', 'மாமன் எங்கிருக்கா'... என ஒவ்வொரு பாடலும் மனத்தை ஈர்க்கின்றன. அவை படமாக்கப்பட்ட விதமும் நேர்த்தி. வறண்ட கிராமத்தின் நயங்களைப் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு ஒரு பக்கம் காட்டி நிற்க, குமரனின் இசை நம் உயிருக்குள் ஊடுருவுகிறது. படத்தின் பின்னணி இசையும் அருமை. தேவையான இடங்களில் மவுனத்தை இருத்தி, காட்சிக்கு வலுவூட்டி இருக்கிறார். இது இவருக்கு முதல் படம் என்பதை நம்புவது கடினம்.
வெடிப்பு விழுந்த கிராமத்து நிலம், அங்கு ஒரு மிதிவண்டியில் ஏராளமான பிளாஸ்டிக் குடங்கள் விற்பனைக்குச் செல்கின்றன என்ற காட்சியிலேயே அங்கு நிலவும் தண்ணீர்ப் பஞ்சத்தை இயக்குநர் காட்டி விடுகிறார். அது போல் ஒரு லாரியில் ஏஏஏஏஏஏராளமான கதிர்களை ஏற்றியதும், காதலியின் சிறிய மனத்தினுள் காதலன் எவ்வாறு பேருருக் கொண்டுள்ளான் என்று காட்டும் ஒரு குறியீடே ('சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே' என்ற குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்தும் காட்சி இது).
இரட்டைப் பனை மரம், ஒரு குறியீடாக, காட்சிக் கவிதையாக மிளிர்ந்துள்ளது. அதில் ஒரு மரம் ராட்டினம் போல் சுற்றுவது, அபாரமான ரசனை. இதற்கு ஒளிப்பதிவாளரையும் படத் தொகுப்பாளரையும் சேர்த்தே பாராட்ட வேண்டும்.
'சின்ன பனைமரம் நான்; பெரிய பனைமரம் நீ' எனக் காதலர்கள் சிறு வயதிலேயே சொல்லிக்கொள்வது, இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்வைப் பளிச்செனக் காட்டுகிறது.
அலோ டீக்கடை நடத்துபவர், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்த தன் மனைவியை ஊருக்குக் கூட்டி வராமல் இருப்பதற்கான காரணமும் சரியில்லை; தனக்கு மூளை - உடல் வளர்ச்சி குறைந்த குழந்தை இருப்பதை ஊர் அறிந்தால், கிண்டல் செய்வார்கள் என்பதால் அவனை வீட்டிலேயே வைத்து வளர்ப்பது சரியான முறையில்லை. இப்படியான குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து, தொழில் பயிற்சி அளித்து, அவர்களைச் சொந்தக் காலில் நிறுத்தும் பணியில் உன்னத மனிதர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். அவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வழியுண்டு என்பதை இயக்குநர் காட்டியிருக்க வேண்டும்.
மருத்துவக் காரணத்தால் சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதை இந்தப் படம், மிக ஆழமாக எடுத்துச் சொல்லிவிடுகிறது. ஆனால், இதன் பின்விளைவுகள் மிகவும் வலி தரக் கூடியவை. நெருங்கிய சொந்தத்தில் ஒருவரை ஒருவர் விரும்பும் ஆயிரக்கணக்கான காதலர்களின் மனது, இந்தப் படத்தைப் பார்க்கும் போது என்ன பாடு படுமோ! இனி அந்தக் காதலர்களே நினைத்தாலும் அவர்களின் பெற்றோர் இத்தகைய திருமணத்திற்குச் சம்மதிப்பார்களா? காதல் என்பது எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் மலரும் அற்புதப் பூ ஆயிற்றே. நம் ஊர் சிறுசுகளுக்குச் சொந்தத்தில் தானே முதலில் 'ஆள்' கிடைப்பார்கள்! அதற்கு இப்படி ஒரே அடியாக வேட்டு வைக்கலாமா? ஆயிரத்தில் ஒரு குழந்தை அப்படி பிறக்கும் என்றால் அதற்காக ஆயிரம் காதலர்கள் பிரிய வேண்டுமா? சரி, அந்நியத்தில் மணம் முடித்தால் இப்படி குழந்தை பிறக்காது என்று அறுதியிட்டு கூற முடியுமா?
'சிவகாசி ரதியே' என்ற பாடல், இந்தப் படத்திற்குத் தேவையற்றது. அந்தப் பாடலை எடுத்துவிட்டால் அதனால் படத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இவ்வளவு இயல்பான படத்தில் இந்தச் செயற்கை தேவைதானா? அலோ டீக்கடைக் காட்சிகள் பல, நகைச்சுவைக்காக நுழைக்கப்பட்டுள்ளன. இவை, வணிகத் திரைப்படத்தின் பாதிப்புகள். கலையம்சத்தை நீர்க்கச் செய்யும் காட்சிகள். ஆயினும் முழுப் படத்தின் தாக்கத்தை நோக்க, இவை சிறியவை. மன்னிக்கலாம்.
பார்வதி, சிறீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், இயக்குநர் சசி, ஒளிப்பதிவாளர் முத்தையா, இசையமைப்பாளர் குமரன், மோசர்பேர் தனஞ்செயன்.... எனப் பலரின் உண்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் பூ படத்தை மகத்தான படமாக முன்னிறுத்துகின்றன.
காப்பியடிப்பதும் ரீமேக் செய்வதுமாக அந்நியப்பட்டு நிற்கும் தமிழ்த் திரையுலகில் இது ஒரு புது நகர்வு. தனக்குள் தன்னைத் தேடும் அரிய பயணத்தில் தமிழ்த் திரை மேலும் ஓர் அடி எடுத்து வைத்துள்ளது. துணிவும் கலை வேட்கையும் வாழ்வின் நெருக்கமும் கொண்ட இந்த முயற்சியைத் தமிழ் மக்கள் உறுதியாக வரவேற்பார்கள்.
நன்றி: தமிழ் சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, February 01, 2009
பூ - திரை விமர்சனம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:06 AM
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment