!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, February 01, 2009

எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'சிந்தாமணி கொலை கேஸ்' என்ற படத்தின் மறு உருவாக்கம்தான் 'எல்லாம் அவன் செயல்'. தமிழிலும் ஷாஜியே இயக்கியிருக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவியான சிந்தாமணியின் மர்ம மரணத்தைத் துப்பு துலக்கி, உண்மையான குற்றாவாளிகளுக்குத் தண்டனை தருவதுதான் படத்தின் ஒருவரிக் கதை.

மிகவும் புத்திசாலியான குற்றவியல் வழக்கறிஞர் எல்.கே. (லட்சுமண் கிருஷ்ணா). (உண்மையான பெயர் ஆர்கே). எல்.கே. என்பதற்கு விளக்கமாக அவரே சொல்லிக்கொள்வது License to Kill என்பது. குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்கள், மேல் நீதிமன்றத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, வெளியே வந்துவிடுகிறார்கள். எனவே, அத்தகைய குற்றவாளிகளுக்காக எல்.கே. வாதாடி, அவர்களைச் சட்டப்படி வெளியே கொண்டு வருகிறார். பிறகு, அடுத்த நாளே, எவரும் அறியாமல் அவர்களை இவரே தீர்த்துக் கட்டுகிறார். இப்படியாகத் தன் ஆசிரியையே கற்பழித்தவர், தன் மகளுடனே உறவு கொண்டவர் ஆகியோரைச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்து, கொடூரமாகக் கொல்கிறார்.

ஒவ்வொரு கொலைக்குப் பின்பும் நம் கதாநாயகன், சில சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்கிறார்; கூடவே ஆங்கிலப் பொன்மொழிகள். உப்பு தின்னவன் தண்ணியைக் குடிப்பான்; தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிப்பான். இத்தகைய 'cosmic law'வையே தான் பின்பற்றுவதாகச் சொல்கிறார் எல்.கே. ஏன் அவர் இப்படி செய்கிறார்? அதற்கும் படத்தில் ஒரு பின்கதை இருக்கிறது.

இந்த நிலையில், அடுத்து இவரிடம் 'சிந்தாமணி கொலை வழக்கு' வருகிறது. கிராமத்து ஏழை மாணவியான சிந்தாமணி (பாமா), மருத்துவக் கல்லூரியில் சேர வருகிறார். அவரை அதே மருத்துவக் கல்லூரியின் பணக்கார மாணவிகள் 9 பேர் (சுருக்கமாக 'மிர்ச்சி கேர்ள்ஸ்') வன்பகடி (ராக்கிங்) செய்கிறார்கள். ஒருசில நாட்களிலேயே அவள் கொடூரமாகக் கொல்லப்படுகிறாள். அவர்களைக் கொன்றதாக 'மிர்ச்சி கேர்ள்ஸ்' மீது வழக்கு நடக்கிறது. அவர்கள் மீதான பழியை அகற்ற, பல்வேறு ஆதாரங்களை உருவாக்கி, அந்த 9 மாணவிகளையும் புத்திசாலித்தனமாக விடுவிக்கிறார் எல்.கே. அதன் பிறகு உண்மையான கொலையாளிகளை அவர் கொன்றாரா என்பதே மிச்ச சொச்ச கதை.

எண்ணெய் தடவிப் படிய வாரிய தலை, ஒரு கறுப்புக் கண்ணாடி, கறுப்பு கவுன் ஆகியவற்றுடன் சூப்பர் மேன் போல் பறந்து பறந்து சண்டை போடுகிறார் எல்.கே. அவருடைய தோற்றம் கம்பீரமாக இருக்கிறது. மிக முக்கியமாக, வசனங்களும் அவற்றை உச்சரிக்கும் விதமும் மிகச் சிறப்பாக உள்ளன. 'வெற்றிக்காக நான் எல்லைக்கும் போவேன்' என்பது போன்ற வசனங்கள், படத்திற்கு வலு சேர்த்துள்ளன. நீதிமன்ற வாத - பிரதி வாதங்கள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயினும் தனியார் வழக்கறிஞரான எல்.கே., அரசு வழக்கறிஞருக்கே தெரியாத அரசுத் தடயவியல் பரிசோதனை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்ற வளாகத்தைத் தவிர வெளியிடங்களில் கருப்பு கவுனைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, குற்றவாளிகளைக் கருப்பு கவுனுடன் சென்று கொல்கிறார். ஒவ்வொரு முறை எல்.கே. யாரைக் காப்பாற்றினாலும் அவர் உடனே கொல்லப்படுகிறார். அப்படி இருக்க, அடுத்தடுத்து குற்றவாளிகள் அவரிடமே தங்கள் வழக்கைக் கொண்டு செல்லத் தயக்கம் காட்ட மாட்டார்களா என்ன?

அப்பாவியான தோற்றத்துடன் கூடிய பாமா, தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். பாமாவின் அப்பாவாக மணிவண்ணன்; விவரம் போதாத காவல் துறை அதிகாரியாக நாசர்; அக்மார்க் வில்லனாக ஆஷிஷ் வித்யார்த்தி, மருத்துவக் கல்லூரி நிர்வாகியாக மனோஜ் கே. ஜெயன் ஆகிய பல முகங்கள் இந்தக் கதையில் இருந்தாலும் நாயகன் எல்.கே.வை மையமாக வைத்தே கதை நகர்கிறது. ரகுவரனின் கடைசிப் படமான இதில் அவர் அலட்டிக்கொள்ளாத சிபிஐ அதிகாரியாக வந்து உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார்.

கவர்ச்சிக்காகவே 'மிர்ச்சி கேர்ள்ஸை' வைத்து ஒரு பாட்டு அமைத்துள்ளார்கள். படத்தின் தொடக்கத்தில் உள்ள கற்பழிப்புக் காட்சி படமாக்கப்பட்ட விதமும் மோசமாக இருக்கிறது. மிர்ச்சி பெண்கள், மருத்துவமனையின் ஆய்வகத்தில் உள்ள பிணத்துக்கும் சிந்தாமணிக்கும் திருமணம் செய்வதும் சிந்தாமணியைப் பிணத்துக்கு முத்தம் கொடுக்கச் சொல்வதும் சகிக்கவில்லை.

வித்யாசாகரின் இசை, பரவாயில்லை. படத்தில் அதிகப் பாடல்கள் வைக்காததன் மூலம் நல்லது செய்திருக்கிறார். இந்தியாவில் ஸ்பாட் எடிட்டிங் செய்யப்பட்ட முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையின் பிரீ சீட்டுக்கு 50 லட்சம் விலை; அதைக் காசாக்க அதன் நிர்வாகம் எதுவும் செய்யும் என்ற நிலை ஆகியவற்றை நம்ப முடியவில்லை. ஆயினும் வழக்கறிஞரின் வாதத்தின் மூலம் 'உருவாக்கப்பட்ட' சாட்சிகளின் மூலமும் எந்தக் குற்றவாளியையும் தப்புவிக்க முடியும் என்பதை இந்தப் படம் மீண்டும் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. இதன் மூலம், இந்திய நீதித் துறை, சட்டத் துறை, காவல் துறை ஆகியவற்றைச் சமுதாயத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறது, இந்தப் படம்.

நன்றி: தமிழ் சிஃபி

No comments: