!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஆசிரியர் தினத்தில் 2 பள்ளிகளில் இணையவழிக் கல்வி தொடக்கம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, September 04, 2009

ஆசிரியர் தினத்தில் 2 பள்ளிகளில் இணையவழிக் கல்வி தொடக்கம்

சென்னை ஆன்லைன் மேலாண் இயக்குநர் எல்.ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்
குறிப்பு:


ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டு தொடக்கத்தையும் முன்னிட்டு, ஓபன் மென்டார் என்ற புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை தொடங்கி வைக்கப்படுகிறது. 05.09.2009 அன்று காலை 10 மணிக்குச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் 11 மணிக்குச் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த இணையவழிக் கல்வி முறை தொடங்கப்படுகின்றது.

சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ள இந்தப் புதிய கல்வி முறை, 2 பள்ளிகளில் தொடங்கப்படுவது, சிறு தொடக்கமே. இந்த முறையை பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விரிவுபடுத்தச் சென்னை ஆன்லைனும் சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் முயன்று வருகின்றன. அடுத்து வரும் சில வாரங்களில் / மாதங்களில் இந்தப் புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை, சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்படும். ஆயிரக்கணக்கான மாணவர்கள், இதனால் பயன்பெற முடியும்.

இந்தப் புதிய இயக்கத்தின் மூலம், தரமான கல்வியை இந்த உலகின் ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்ல, சென்னை ஆன்லைனும் சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் கைகோத்துள்ளன. 'மொத்த உலகும் செலவில்லாமல் கற்கலாம்' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. தகவல் தொழில்நுட்பப் பாடங்கள், பள்ளி / கல்லூரிப் பாடங்கள், கணினி தொடர்பான பயிற்சிகள் போன்றவை, இணையம் மூலமாகக் கற்பிக்கப்படுகின்றன. இணையத்தின் வழி நேரடியாகக் கற்பித்தலும் ஆசிரியரும் மாணவரும் ஊடாடும் தன்மையுமே இந்தக் கல்வி முறையின் சிறப்பு அம்சங்கள். இவை மட்டுமின்றி, இணையவழிக் கல்விக்கான பல பாடங்களையும் குறிப்புகளையும் மாணவர்கள் எந்நேரமும் பெறமுடியும். மேலும் இணையவழியாகவே தேர்வுகளையும் நடத்த முடியும். இந்த அனைத்துச் சேவைகளும் முற்றிலும் இலவசமே. www.openmentor.net, www.chennaionline.com தளங்களில் இவை கிடைக்கும். கணினியும் அகலப்பாட்டை இணைய இணைப்பும் கொண்ட எவர் ஒருவரும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும், எவ்வளவு பாடங்களை வேண்டுமானாலும் செலவே இல்லாமல் கற்க முடியும்.

இந்தக் கல்வி முறையைச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் தொடக்கி வைக்கிறார்.

05.09.2009 அன்று காலை 10 மணிக்குச் சென்னை அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன், ஆங்கில வழியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்குக் கணிதப் பாடம் நடத்துகிறார்.

அதே நாள் காலை 11 மணியளவில் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், உயிரியல் பாடம் நடத்துகிறார்.

இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள பிளஸ் 2 மாணவர்கள் கவனிப்பார்கள்; அவர்களுடன் இணைந்து உலகம் முழுதும் உள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வகுப்புகளைக் கவனிப்பார்கள்.

பொதுமக்கள், பின்வரும் தளங்களில் இந்த வகுப்புகளைக் கவனிக்கலாம்:

https://www2.gotomeeting.com/register/648461050 - காலை 10 மணிக்குக் கணிதப் பாடம்

https://www2.gotomeeting.com/register/642375122 - முற்பகல் 11 மணிக்கு உயிரியல் பாடம்

ஓபன் மென்டார் என்பது என்ன?

'மொத்த உலகும் செலவில்லாமல் கற்கலாம்' என்ற இலக்குடன் இயங்கி வரும் புரட்சிகரமான இணையவழிக் கல்வி இயக்கம், இது. சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் என்ற நிறுவனம், இதை வடிவமைத்துள்ளது.

* இணையவழிக் கல்வியானது, வகுப்பறைக் கல்விக்குக் கூடுதல் வலிமை சேர்க்கக்கூடியது.
* எந்த ஒரு பள்ளியும் கல்லூரியும் இதில் இலவசமாக இணையலாம்.
* எந்த ஆசிரியரும் தன்னார்வலரும் இதன்வழி கற்பிக்கலாம்.
* இணையவழித் தேர்வுகள் நடத்தலாம்.
* உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள எவரும் கற்கலாம்.
* இவை அனைத்தும் முற்றிலும் இலவசம்!

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்:

சுப்பிரமணியம் - 9840664030
முருகானந்தனம் - 97909 87713


சென்னை ஆன்லைன் குறித்து:

1997 முதல் இயங்கி வரும் சென்னைஆன்லைன்.காம், இந்தியாவின் முதன்மையான மாநகர இணையதளம்; இணையத்தின் முன்னோடிகளுள் ஒன்று; சென்னையைப் பற்றிய எந்தச் செய்திக்கும் வாசகர்கள் நாடும் முதல் இணையதளமாக இது விளங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வாசகர்களின் அன்புக்கு உரிய தளமாக விளங்குகிறது. வாழ்வை எளிதாக்கு (Make Life Easy) என்பதே சென்னை ஆன்லைனின் இலக்கு. தொழில்நுட்பத்தின் மூலம் இதைப் பேரளவில் சாதிக்க முடியும் எனச் சென்னை ஆன்லைன் நம்புகிறது. இப்போது ஓபன் மென்டார் என்ற புதிய இணையவழிக் கல்வி முறையைப் பள்ளிகளில் தொடங்கிவைத்து வருகிறது. சென்னை ஆன்லைன் தொடங்கப்பெற்ற அதே செப்டம்பர் 5 அன்று இந்த இணையவழிக் கல்வியும் தொடங்கப்பெறுவது மிகப் பொருத்தமானது.

சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் குறித்து:

ISO 9001:2000 சான்றிதழ் பெற்ற சாஃப்ட்ஸ்மித் நிறுவனம், பல்வேறு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. மென்பொருள் தரச் சோதனை, மென்பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட பல நிலைகளிலான சேவைகளை ஒரு கூரையின் கீழ் சாஃப்ட்ஸ்மித் நிறுவனம் அளித்து வருகிறது. வணிகக் கூரறிவுத் தீர்வுகள், செல்பேசி நுட்பச் சேவைகள், அயலகப் பணி ஒப்படைப்பின் மூலம் பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள், தரச் சோதனை உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. ஓபன் மென்டார் என்ற இணையவழிக் கல்வி இயக்கத்தை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது.

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திரவாரத்தில் பலவிதமான பதிவுகளைத்தந்துவருகிறீர்கள்...
வடக்குவாசல் இதழில் உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு இத்தளத்தைப் பயன்படுத்திப் பார்த்தோம். மிக நன்றாக இருக்கிறது.. நன்றி..

ipog said...

நன்று தலைவா!

vidiyal said...

அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இதர பயிற்சிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றிற்கான அரசு செய்யும் செலவுகள் மிகவும் இரகசியமாக வைக்கப்படுகிறது. இதில் கையாடல் அதிகம் நடைபெறுகிறது. அரசின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
இவ்வகை பயிற்சிக்கான அனைத்து செலவுகளும் ஒதுக்கப்டும் வகைவரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும்படி இருந்தால் பயிற்சியின் மீது பயிற்சியாளர்களுக்கு அக்கறை ஏற்படும். கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை இச்சமுகத்திற்கு வெளிப்படும். ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தால் ஊழல் குறையும்.
1. ஒவ்வொரு பயிற்சியின் தொடக்கத்திலேய பயிற்சிக்கான செலவுகளுக்கு ஒதுக்கப்ட்ட நிதியினை பயிற்சியாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
2. கருத்தாய்வு மையங்களில்() நடைபெறும் பயிற்சிக்கான செலவுகளை பொதுமக்களின் பார்வையில் படும்படி வைக்கவேண்டும்.
3. கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சிக்கான செலவுகளை கண்காணிக்க ஆசிரியர்கள் கருத்தாய்வு மையம் நடைபெறும் பள்ளியின் பெற்றோர் அடங்கிய குழுவினை உருவாக்க வேண்டும்.
4. மேற்படி குழுவினை வட்டார வளமைய அளவிலும் உருவாக்க வேண்டும்.