!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> முத்துராமனுக்கு உதவுங்கள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, April 09, 2010

முத்துராமனுக்கு உதவுங்கள்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள நண்பரும் எழுத்தாளரும் இதழாளருமான முத்துராமனை 08.04.2010 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். என் அப்பா குப்புசாமியும் உடன் வந்திருந்தார்.

முத்துராமன் உடல் மெலிந்திருந்தார். ஆனால், இன்னமும் அதே அமைதி. கண்களி்ல் அதே கூர்மை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த அவருடனான சந்திப்புகளும் உரையாடல்களும் நினைவுத் திரையி்ல் ஒரு கணம் அசைந்தன.

முத்துராமன் (வயது 33), படைப்பூக்கம் கொண்டவர். கிழக்குப் பதிப்பகத்திலும் 'தமிழக அரசியல்' வார இதழிலும் பணியாற்றியவர். 'சதுரங்கச் சிப்பாய்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மேலும் 'சிரிப்பு டாக்டர்' (என்.எஸ்.கிருஷ்ணன் பற்றியது), 'பகத்சிங்' ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

'சதுரங்கச் சிப்பாய்கள்' நூலின் அணிந்துரையில் அசோகமித்திரன், "இத்தொகுப்பிலுள்ள கதைகள், ஓர் எழுத்தாளனின் விரிந்து வரும் பார்வைக்கு அடையாளமாக உள்ளன. இந்த இளம் எழுத்தாளரிடம் தமிழ் வாசகர்கள் எதிர்பார்க்க நிறையவே இருக்கிறது" எனக் கூறியுள்ளார். முத்துராமனின் நூல்களைக் குறித்து முழுமையாக அறிய: http://nhm.in/shop/Muthuraman.html

முத்துராமன், தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே:
http://farm5.static.flickr.com/4013/4499757814_eeed62c7d2_o.jpg

இந்த உடல்நலப் பாதிப்பினை எதிர்கொள்வதில் உள்ள சவால்களை முத்துராமன் விளக்கினார். இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாகச் செயலிழந்த நிலையில் கழிவுப் பொருட்கள் குருதியிலிருந்து பிரிக்கப்படவில்லை. உடலினுள் கழிவுகளுடன் கூடிய குருதி சுழல்வதால், மூச்சிரைப்பு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன.
(பார்க்க: http://ta.wikipedia.org/wiki/சிறுநீரகம்; http://en.wikipedia.org/wiki/Kidney)

இந்தச் சிக்கலுக்காக, கடந்த நான்கு மாதங்களாக, நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் என்ற குருதிச் சுத்திகரிப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகம் செய்ய வேண்டிய வேலையை இந்த டயாலிஸிஸ் கருவி செய்கிறது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Dialysis). வாரத்திற்கு இரண்டு முறைகள் டயாலிஸிஸ் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை செய்வதற்கும், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட இதர செலவுகளைச் சேர்க்காமல், குறைந்தபட்சம் ரூ.2500 ஆகிறது.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரின் தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இவருக்குத் தாயாரின் சிறுநீரகம் பொருந்துமா என்ற சோதனைக்கே ரூ.70 ஆயிரம் செலவாகியுள்ளது. அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து, சுமார் நான்கு முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை ஆகும் எனக் கணித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் இந்த அறுவையை ஏன் செய்ய இயலவி்ல்லை என்றும் அவர் கூறினார். அரசு மருத்துவமனையிலும் சிறுநீரக மாற்று அறுவை செய்யப்படுகிறது. ஆயினும் அங்கு நிகழ்த்தப்படும் 10 அறுவைகளில் 6 அறுவைகள் தோல்வி அடைகின்றன. மீதமுள்ள நான்கில் இரண்டில் சில மாதங்களிலும்  மேலும் இரண்டில் ஓரிரண்டு ஆண்டுகளிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அங்கு 100% வெற்றிகரமாகச் சிறுநீரக அறுவை செய்ய முடியும் என அவர்களாலேயே உறுதிகூற முடியவில்லை என்றார் முத்துராமன்.

உடலுறுப்பு மாற்று அறுவையில் உள்ள சட்ட நடைமுறைகளும் நிர்வாக நடைமுறைகளும் எவ்வளவு கடினமாக இருக்கின்றன என்றும் எடுத்துரைத்தார். இதற்கு வட்டாட்சியர் முதல் நீதிபதி வரை கையொப்பம் பெற வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் பெற்று அளித்தாகிவிட்டது.

மாற்றுச் சீறுநீரகம் தயார்; சட்ட அனுமதி தயார்; பணமும் நல்லோரின் வாழ்த்துகளும் கிடைக்கும் பட்சத்தில், 2010 ஏப்ரல் மாதத்திலேயே சிறுநீரக மாற்று அறுவை நிகழ்த்த வாய்ப்புகள் உண்டு.

என்னால் இயன்ற தொகையை முத்துராமனிடம் அளித்தேன். அவர் விரைவில் உடல்நலம் பெறுவார்; புத்துணர்ச்சியுடன் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கையை அவருடனும் அவர் அம்மாவுடனும் பகிர்ந்துகொண்டேன். சிகிச்சைக்குத் தேவையான தொகை விரைவில் கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தேன்.

முத்துராமனுக்கு நீங்கள் உதவ விரும்புகிறீர்களா?

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண்:

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / வங்கி வரைவோலைகள் வழங்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் முத்துராமனுக்குத் திருமணம் நிகழ்ந்தது. வாழ்வில் இன்னும் அவர் பயணிக்க வேண்டிய தொலைவு மிக நீண்டது. 33 வயதே ஆன இந்த இளம் தோழர், நலம்பெற வேண்டும். விடைபெறும்போது இவரின் அன்னையின் கண்கள் கலங்கியிருந்தன. அந்த அன்னையின் கண்ணீரைத் துடைக்க, நம் அனைவரின் கரங்களும் நீள வேண்டும்.

படத்திற்கு நன்றி:  http://nhm.in

19 comments:

raki said...

dar brother

namasthe

i wish to contribute a litte to mitigate their suffering and i shall remit he same drctly this account wih sbi. i appeciate your genuine concern for others

with best regards

r radhakrishnan

அண்ணாகண்ணன் said...

மிக்க நன்றி இராதாகிருஷ்ணன்.

புருனோ Bruno said...

//அரசு மருத்துவமனையில் இந்த அறுவையை ஏன் செய்ய இயலவி்ல்லை என்றும் அவர் கூறினார். அரசு மருத்துவமனையிலும் சிறுநீரக மாற்று அறுவை செய்யப்படுகிறது. ஆயினும் அங்கு நிகழ்த்தப்படும் 10 அறுவைகளில் 6 அறுவைகள் தோல்வி அடைகின்றன. மீதமுள்ள நான்கில் இரண்டில் சில மாதங்களிலும் மேலும் இரண்டில் ஓரிரண்டு ஆண்டுகளிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. //

இந்த புள்ளி விபரங்கள் எந்த மருத்துவமனை

அரசு பொது மருத்துவமனையா
அரசு ஸ்டான்லி மருத்துவமனையா
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனையா

இதில் எந்த மருத்துவமனைக்கு அவர் சென்று விசாரித்தார்

அனைத்திலும் இதே அளவு தானா

அண்ணாகண்ணன்
நீங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தினீர்களா

உறுதிப்படுத்தினீர்கள் என்றால் எப்படி

இல்லை என்றால் இது போன்ற தவறான தகவலை வெளியிடுவது நியாயமா

//அங்கு 100% வெற்றிகரமாகச் சிறுநீரக அறுவை செய்ய முடியும் என அவர்களாலேயே உறுதிகூற முடியவில்லை என்றார் முத்துராமன்.//

உலகிலேயே எந்த மருத்துவமனையிலும் 100% சதம் வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாது

அண்ணாகண்ணன் said...

சிறுநீரக மாற்று அறுவை செய்தால் அது எந்த அளவுக்கு வெற்றி தரும் எனச் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம், பொது நோயாளி ஒருவர் கேட்டார். அப்போது, அந்த மருத்துவர் இவ்வாறு கூறியுள்ளார். அது வெளிநோயாளிகளுக்கான பொதுப் பிரிவு என்பதால், அங்கு இதர நோயாளிகளும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரான முத்துராமன், இதை என்னிடம் கூறினார்.

மேலும் முதல் முறை நாங்கள் டயாலிஸிஸ் செய்து, வயிற்றைச் சுத்தம் செய்து அனுப்பிவிடுவோம். அதன் பிறகு நீங்கள் வெளியில் பார்த்துக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளனர்.

இதே அரசு பொது மருத்துவமனையில் 2002இல் என் காதில் உள்ள சிக்கல் ஒன்றுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். ஆயினும் ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் அந்தச் சிக்கல் எழுந்தது. அங்கு நிகழ்த்திய அறுவை பயனளிக்கவில்லை என்பது என் சொந்த அனுபவமும்கூட.

இதையும் அதையும் முடிச்சுப் போடுவதாக நினைக்க வேண்டாம். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானோர் ஏராளமானோர் உள்ளனர். ஆயினும் பலருக்கு அரசு மருத்துவமனையை விட்டால் வேறு வழியில்லை.

உலகில் எந்த மருத்துவமனையிலும் 100% வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், பல தனியார் மருத்துவமனைகளில் வெற்றி விழுக்காடு கூடுதலாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்களா? 100% முடியாவிட்டாலும் 90% அளவேனும் வெற்றியடைய வைக்க முயலலாம் இல்லையா?

அரசு மருத்துவமனையில் எந்தெந்த அறுவைகள் எவ்வளவு விழுக்காடு வெற்றி அடைகின்றன எனத் தங்களிடம் ஏதும் புள்ளிவிவரம் இருந்தால் தெரிவியுங்கள்.

புருனோ Bruno said...

அண்ணா கண்ணன்

உங்களின் விரிவான பதிலுக்கு நன்றி

//சிறுநீரக மாற்று அறுவை செய்தால் அது எந்த அளவுக்கு வெற்றி தரும் எனச் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம், பொது நோயாளி ஒருவர் கேட்டார். அப்போது, அந்த மருத்துவர் இவ்வாறு கூறியுள்ளார். அது வெளிநோயாளிகளுக்கான பொதுப் பிரிவு என்பதால், அங்கு இதர நோயாளிகளும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரான முத்துராமன், இதை என்னிடம் கூறினார்.//

ஆக முத்துராமனிடம் இதை யாரும் தெரிவிக்க வில்லையா

அது சரி, முத்துராமன் மருத்துவரிடம் காட்டினாரா, அல்லது அந்த் அடுத்த நோயாளியின் மருந்து சீட்டை வாங்கி இவர் மருந்து சாப்பிட்டாரா

என்ன கொடுமை சார் இது

புருனோ Bruno said...

//மேலும் முதல் முறை நாங்கள் டயாலிஸிஸ் செய்து, வயிற்றைச் சுத்தம் செய்து அனுப்பிவிடுவோம். அதன் பிறகு நீங்கள் வெளியில் பார்த்துக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளனர்.//

அதாவது உங்கள் கூற்றுப்படி அரசு பொது மருத்துவமனையில் யாருக்குமே இரு முறை டயாலிசஸ் செய்யப்படுவது கிடையாது

அப்படியா

ஒரு பத்திரிகையாளரான நீங்கள் இதை உறுதிப்படுத்திக்கொள்வது அவ்வளவு சிரமமா

புருனோ Bruno said...

//இதே அரசு பொது மருத்துவமனையில் 2002இல் என் காதில் உள்ள சிக்கல் ஒன்றுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். ஆயினும் ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் அந்தச் சிக்கல் எழுந்தது. அங்கு நிகழ்த்திய அறுவை பயனளிக்கவில்லை என்பது என் சொந்த அனுபவமும்கூட.

இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானோர் ஏராளமானோர் உள்ளனர். ஆயினும் பலருக்கு அரசு மருத்துவமனையை விட்டால் வேறு வழியில்லை.//

அதை விட நோய் சரியானவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர் என்பதையும் மறுக்க வேண்டாம்

புருனோ Bruno said...

// ஆனால், பல தனியார் மருத்துவமனைகளில் வெற்றி விழுக்காடு கூடுதலாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்களா?//
நீங்கள் ஆதாரம் தாருங்கள் ஏற்றுக்கொள்கிறேன்

// 100% முடியாவிட்டாலும் 90% அளவேனும் வெற்றியடைய வைக்க முயலலாம் இல்லையா?//

முயலவில்லை என்று எந்த ஆதாரத்தை வைத்து கூறுகிறீர்கள்

புருனோ Bruno said...

//அரசு மருத்துவமனையில் எந்தெந்த அறுவைகள் எவ்வளவு விழுக்காடு வெற்றி அடைகின்றன எனத் தங்களிடம் ஏதும் புள்ளிவிவரம் இருந்தால் தெரிவியுங்கள்.//

குற்றச்சாட்டு தெரிவித்த நீங்கள் தான் சார் முதலில் ஆதாரம் தெரிவிக்க வேண்டும்

ஒரு பத்திரிகையாளரான உங்களுக்கு இதை நான் சொல்லி தர வேண்டுமா

அண்ணாகண்ணன் said...

அரசு மருத்துவமனையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர் புருனோவின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆதாரம் கேட்டீர்கள். ஒரு மருத்துவரின் கூற்றாக முத்துராமன் கூறியதை அளித்தேன். இரகசிய கேமரா வைத்து அந்த மருத்துவர் கூறியதைப் படம் பிடிக்கும் வசதி, அனைவரிடமும் கிடையாது. முத்துராமன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் அதை வெளியிட்டேன்.

அந்த மருத்துவமனையில் சிறுநீரக அறுவை வெற்றி தொடர்பான கேள்வி, பொதுவானது. ஒவ்வொரு நோயாளிக்கும் அதற்கான பதில் மாறாது.

அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவர்தான், டயாலிசிஸிஸ் குறித்து அவ்வாறு கூறியுள்ளார். சொன்னவரை விட்டுவிட்டு, கேட்டவரைக் குறை சொல்வது, பேசியவரை விட்டுவிட்டு ஒலிபெருக்கி மீது கோபப்படுவது போல் இருக்கிறது. நெருப்பில்லாமல் புகையாது நண்பரே.

எவருக்குமே ஒரு முறைக்கு மேல் டயாலிஸிஸ் செய்வதில்லையா என்று கேட்பதற்கு, முத்துராமனின் கூற்று ஒன்றும் பொதுப்படையான கருத்து இல்லை. அவ்விதமாக மருத்துவமனையைச் சார்ந்தவர் ஒருவர் கூறினார் என்பதே செய்தி.

மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள், நோயாளிகளிடம் கூறுகின்ற ஒவ்வொன்றையும் நோயாளிகள் எவ்வளவு தீவிரமாக (சீரியசாக) எடுத்துக்கொள்வார்கள் என்ற கோணத்தில் பார்க்காமல், அரசு மருத்துவமனை மீது குற்றம் சாற்றிவிட்டதற்காகப் பொங்கி எழுகிறீர்கள்.

குறிப்பிட்ட தருணங்களில், நோயாளிக்கு நம்பிக்கை அளி்க்கும் விதத்தில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களும் ஊழியர்களும் பேசவில்லை, நடக்கவில்லை என்பது முத்துராமனின் பேச்சிலிருந்து தெரிந்தது. இதற்கு ஏற்ப, அவர்களைப் பயிற்றுவிப்பது குறித்து புருனோ உள்ளிட்டோர் சிந்திப்பது பயன் அளி்க்கும். இந்தப் பயிற்சிகளை அவர்கள் பெறவில்லை என உங்களுக்குத் தெரியுமா என அடுத்துப் புருனோ கேட்கக்கூடும். மருத்துவப் படிப்பில் இதுவும் ஓர் அங்கம் எனவும் அவர் வாதிடக்கூடும். இங்கே கேள்வி, ஏட்டில் இருப்பதைப் பற்றியில்லை. செயலில் உள்ளதைப் பற்றியே.

எல்லாவற்றுக்கும் ஆதாரம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சரியே. ஆனால், இயல்பு வாழ்க்கையில் அவ்வாறு அனைத்திற்கும் ஆதாரம் கிட்டுவதில்லை. அதைத் தேடி அலைவதற்குரிய நேரமும் பலருக்கு வாய்ப்பதில்லை. இந்தக் காரணத்தால் ஆதாரம் இல்லாத எதுவும் உண்மையில்லை எனக் கூறிவிடவும் முடியாது.

முத்துராமன் எதையும் புனைந்து கூறியதாக நான் நினைக்கவில்லை. அவரது கூற்றுகளை நான் வெளியிட்டதால், மருத்துவமனை மீது மக்கள் நம்பிக்கை இழப்பர் என எதிர்மறையாகக் கருத வேண்டாம். இதோ, நம் சேவையில் ஒருவர் குறையைத் தெரிவிக்கிறார். இதன்வழி நமக்கு நன்மை செய்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்போம். அவர் கூறிய குறையைக் களைய முயல்வோம் என்ற கோணத்தில் சிந்திக்கலாமே.

அப்படியே அந்தக் குற்றச்சாற்றில் ஒரு விழுக்காடும் உண்மை இல்லை. அவ்வாறு ஒரு குறையே இல்லை என அறிந்தால், அதனைக் குறை கூறியவருக்கு மிகுந்த பணிவுடன் தெரிவிக்கலாமே. இன்னும் நாங்கள் எந்த வகையில் உதவ முடியும் எனக் கேட்கலாமே. இவையெல்லாம் பல இடங்களில், எப்பொழுதோ நடைமுறைக்கு வந்தவைதானே.

அரசு மருத்துவமனைகள் முன்னேற வேண்டும். அங்கே அனைத்துச் சேவைகளும் அனைவருக்கும் செம்மையுறக் கிட்ட வேண்டும் என்பதுதானே அனைவரின் நோக்கமும்.

இந்தக் குற்றச்சாற்றுகள் நல்ல மருத்துவர்களையும் காயப்படுத்துகின்றன என்ற கோணத்தைக் கவனப்படுத்தியமைக்காகப் புருனோவுக்கு நன்றி. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதற்காக மன்னியுங்கள்.

ஆயிரக்கணக்கானோருக்கு அரசு மருத்துவமனையை விட்டால் வேறு புகலிடம் கிடையாது. அதனால் குணமடைந்தோரும் பலர் உண்டு. ஆனால், வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசு மருத்துவமனைகளின் சேவைகள் உயரவும் விரியவும் வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பயணிப்பது நல்லது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ப்ருனோ, முடிந்தால் முத்துராமனுக்கு எதுவும் உதவி செய்ப்ப பாருங்கள். உங்கள் மேட்டிமைத்தனத்தை நிறுவ இங்கே முயல வேண்டாம். எங்கெங்கே இப்படி பேசுவது என்று ஒரு விவஸ்தை வேண்டாம்?!

ரவிசங்கர் said...

முத்துஇராமன் குணமடைய வாழ்த்துகள். இது போன்ற செய்திகளைப் படிக்கையில் இது போன்ற எதிர்பாரா நிகழ்வுகளுக்கு நாமும் தயாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணி அடிக்கிறது.

//அங்கு 100% வெற்றிகரமாகச் சிறுநீரக அறுவை செய்ய முடியும் என அவர்களாலேயே உறுதிகூற முடியவில்லை என்றார் முத்துராமன்.//

தங்களின் உண்மை நிலையை ஒத்துக் கொள்வது நன்று. அரசு மருத்துவமனைகளின் வெற்றி விழுக்காட்டுக்கு ஆதாரம் கேட்கும் மக்கள் தனியார் மருத்துவமனைகளின் மிகை உறுதிக்கு ஆதாரம் கேட்கிறார்களா? அவை வணிகத் தந்திரமாகக் கூட இருக்கலாம்.

மாயவரத்தான்.... said...

அடுத்தவரை கேள்வி கேட்பது ரொம்பவும் எளிது. அதிலும் தங்களுக்கு பாதகமில்லாத விஷயத்தில்!

சில மாதங்களுக்கு முன்னால் திருச்சி அரசு மருத்துவமனையின் அவல நிலை குறித்து ஜூ.வி. ஒரு கட்டுரை வெளியிட்டது. அது குறித்து அரசு மருத்துவமனைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எந்த சப்பைக்கட்டும் கட்டக் காணோமே?!

பொதுவாகவே எடுத்துக் கொள்வோம்.

தலை வலியும், திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வார்கள்.

சாதாரண பொதுமக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அரசு மருத்துவமனைகளில் இவ்வளவு வசதி இருக்கிறது, அங்கே செல்வீர்களா அல்லது தனியார் மருத்துவமனைக்கு தான் செல்வீற்களா என்று கேட்போமே?!

பெரும்பான்மையினோர் கருத்து என்னவாக இருக்கிறதென்று!

அரசு மருத்துவமனைக்கு சப்போர்ட் செய்பவர்கள் இது வரையில் தனியார் மருத்துவமனைக்கு தானோ, தனது நெருங்கிய உறவினர்களோ எந்த காரணத்திற்காகவும் சென்றதில்லை, இனிமேலும் செல்லப்போவதில்லை என்றோ சொல்வார்களா - மனசாட்சி இருந்தால்?!

தனது உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யார் தான் ரிஸ்க் எடுக்க முனைவார்கள்?

இதற்கு புள்ளிவிபரமெல்லாம் கேட்காமல், சதாரண மக்களிடத்தில் ஏன் இப்படி ஒரு அவப் பெயர் ஏற்பட்டது என்பதை உணர்ந்து அதைக் களைய முன் வர வேண்டும். அதை விட்டு விட்டு எப்போதும் போல தேவையில்லாமல் பாய்வது வெட்டி வேலை.

ers said...

என்னால் முடிந்த உதவி...

http://tamilers.com/index.php

அண்ணாகண்ணன் said...

நன்றி ers.

siva said...

முத்துராமன் குணமடைய வாழ்த்துக்கள்... நானும் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.

எங்கே மருத்துவம் பார்த்துக் கொள்வது என்பது நோயாளியின் விருப்பம்..

ஆனால்-

அரசு மருத்துவமனை பற்றிய அண்ணாகண்ணனின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

'அவன் சொன்னானாம்... இவன் கேட்டானாம். அதை நானும் எழுதுகிறேன்' என்பதா பத்திரிகையாளனின் லட்சணம்?

ஆதாரம் உள்ள விஷயங்களை வெளியிடவே ஆயிரம் முறை மீடியாக்கள் யோசிக்கும் சூழலில், பல லட்சம் மக்களுக்கு கடைசி புகலிடமாக உள்ள அரசு மருத்துவமனைகள் பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது.

எத்தனையோ ஏழைகளுக்கு வாழ்க்கை மீண்டும் மலர்ந்தது அரசு மருத்துவமனைகளில்தான்.

அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு இடுப்புக்குக் கீழே மொத்தமாக நசுங்கி விட்டது விபத்தொன்றில். அவரது ஆணுறுப்பு முழுமையாக நசுங்கியதில் சிறுநீர் வெளியேறவே வழியில்லாத நிலை. தனியார் மருத்துவமனைகள் அதைப் பார்க்கவே பயந்து துரத்தியடித்தன. சென்னை பெரிய ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை கிடைத்தது. நம்பமாட்டீர்கள், இன்று அந்த நடத்துநர் பக்கவாட்டில் சக்கரங்கள் பொருத்திய கைனடிக் ஹோண்டாவை ஓட்டிச் செல்கிறார். மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டார். ஜஸ்ட் 11 மாதங்களில் நடந்த அற்புதம் இது. தர்மபுரி பணிமனையைச் சேர்ந்தவர் அவர்.

கண்ணுக்குள் இரும்பு ராடு சொருகிக் கொண்ட கட்டட தொழிலாளிக்கு மாற்றுக் கண் பொருத்தி, பார்க்க வைத்தது அகர்வாலோ பத்ரிநாத்தோ அல்ல... இதே பெரிய ஆஸ்பத்திரிதான்.

சொல்ல ஒன்றா இரண்டா...

அரசு மருத்துவர்களின் நிபுணத்துவம், அனுபவம், சிகிச்சை முறைக்கு அருகில்கூட வரமுடியாது, நீங்கள் குறிப்பிடும் so called தனியார் புடுங்கிகள்.

பிரசவம் என்று உள்ளே நுழைந்ததுமே, பெட்டில் படுக்க வைத்து வயிற்றை அறுக்க கத்தியைத் தூக்கும் தனியார் மருத்துவமனைகள் எங்கே... இரண்டு நாள் தாமதமானாலும் பரவாயில்லை... நார்மல் டெலிவரி ஆகட்டும், பொறுத்துக்கோ என்று உரிமையாய் திட்டி வைத்தியம் பார்க்கும் அரசு பிரசவ ஆஸ்பத்திரி எங்கே...

தெரியாத ஒரு விஷயத்தில் இத்தனை பகிரங்கமாக தவறான தீர்ப்பு வழங்குகிறீர்கள் அண்ணா கண்ணன். திருத்திக் கொள்ளுங்கள்.

மருத்துவர்கள் எப்போதும் பக்கத்திலிருந்து நிமிடத்துக்கொரு தரம் ஆறுதல் கூற வேண்டும் என எதிர்ப்பார்ப்பது நோயாளியின் மனப்பான்மை. அதுதான் முத்துராமனுக்கும். ஆனால் பல ஆயிரம் நோயாளிகளைப் பார்க்க வேண்டிய அரசு மருத்துவர்களுக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது. சிகிச்சை மட்டும்தான் அவர்களால் தரமுடியும். பரிவையும் அன்பையும் ஆறுதலையும் உங்களைப் போன்றவர்கள்தான் உடனிருந்து தரவேண்டும்.

அரசு மருத்துவமனையில் லஞ்சம் இருக்கிறது, ஊழல் இருக்கிறது, இடம் சுத்தமாக இல்லை... என்றெல்லாம் கூற வருகிறீர்களா... அது மருத்துவர்களின் பொறுப்பல்ல... அரசாங்கத்தின் வேலை. கூடுதல் கவனமெடுத்து, பணியாளர்களை நியமித்து மருத்துவத்துறை செய்ய வேண்டிய வேலை.

ஓரிரு முறை சிகிச்சைகள் தோற்றுப் போகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது இயல்பான விஷயமே. பல லட்சம் கொட்டிக் கொடுத்து வைத்தியம் பார்த்துக் கொண்ட பிறகு அப்பல்லோவில் மூச்சு நின்று போனால் அதை ஏன் என்று கூட யாரும் கேட்பதில்லை. கமுக்கமாய் பணத்தைக் கட்டிவிட்டு சடலத்தோடு திரும்புகிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனை என்றால் மட்டும் ஆவேசமும் உரிமையும் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது!


-ஷங்கர்

அண்ணாகண்ணன் said...

சிவா என்ற ஷங்கரின் கருத்துகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமை.

அரசு மருத்துவமனைகள் குறித்து நான் தீர்ப்பு ஏதும் அளிக்கவில்லையே.

ஆயிரக்கணக்கானோருக்கு அரசு மருத்துவமனையை விட்டால் வேறு புகலிடம் கிடையாது. அதனால் குணமடைந்தோரும் பலர் உண்டு என என் மறுமொழியில் குறிப்பிட்டுள்ளேனே.

இங்கு அரசு மருத்துவமனைகளையும் தனியார் மருத்துவமனைகளையும் யாரும் தராசில் நிறுத்துப் பார்த்து, தீர்ப்பு எதுவும் கூறவில்லை. இவற்றுக்கு இடையிலான பொதுவான ஒப்பீடோ, தரச் சோதனைகளோ, சுகாதாரமோ, ஆய்வக வசதிகளோ, பயனாளர் எண்ணிக்கையோ, வெற்றி விழுக்காடோ, நோயாளிகளின் மன நிறைவோ இங்கு அறிவியல்பூர்வமாக ஆராயப்பெறவில்லை. இரு பக்கங்களிலும் நிறை குறைகள் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை.

இந்தப் பதிவில் முத்துராமன் என்ற தனி நபரின் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அவரது கூற்றுகளே பதியப்பெற்றுள்ளன. இவற்றை என் கருத்துகள் என்றுகூடக் கூற முடியாது.

என்னைப் பொறுத்தவரை இவை ஆதாரமற்ற கருத்துகள் ஆகா. மருத்துவமனையின் மருத்துவரும் ஊழியரும் பேசியதை முத்துராமன் கேட்டுள்ளார். இதற்கு அவரே கண்கண்ட சாட்சி (eye witness).
முத்துராமனின் கூற்றினை ஆதாரமாக ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.

எழுத்திலும் ஒளிப்படத்திலும் இருப்பவையே சான்றுகள் என நான் நினைக்கவில்லை. தனி நபர்களின் நேரடி அனுபவங்களும் சான்றுகளே.

இதழாளரும் எழுத்தாளருமான முத்துராமனின் கூற்றுகளை உண்மையான அக்கறையோடு அணுகாமல், அவை ஆதாரமற்றவை என்று அவசரப்பட்டுக் கூறுவது நீதியாகாது. இது, அவரை அவமதிப்பதற்கும் நிகரானது. மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்பது, குடிமகனின் கருத்துரிமையை மீறும் செயலாகும்.

அரசு அலுவலகங்கள் பலவற்றில், புகார், ஆலோசனைப் பெட்டிகள் உண்டு. அவற்றில் புகார் தெரிவிக்கும் நபர், விரும்பாவிட்டால் தன் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியதில்லை. ஆயினும் அங்கு, யார் கூறினார் என்பதைவிட என்ன கூறினார் என்பதே முக்கியமானது. அதில் உண்மை உள்ளதா என ஆராய்வதே முறையானது. இதற்கு ஆதாரத்தையும் எடுத்து வந்து காட்டு, நீயே நிறுவு என அனைத்துப் பொறுப்புகளையும் அவர் தலையில் கட்டினால், அவர் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். இதில் சோர்வடையும் பலர், இவ்வாறு புகார் அளிக்கவே முன்வர மாட்டார்கள். இதனால், உண்மை பலவீனம் அடையும்.

மருத்துவமனையி்ன் குறிப்பிட்ட மருத்துவரும் ஊழியரும் அவ்வாறு சொன்னார்கள் என்பதே முத்துராமனின் கூற்று. முத்துராமன் விரும்பினால், அவர் உடல்நலம் தேறிய பிறகு, தேவைப்பட்டால் அவர்களை எதிர்காலத்தில் அடையாளம் காட்டலாம்.

இந்த ஒரு புள்ளியில் நின்று கவனிப்பதை விட்டுவிட்டு, திசை மாறிச் செல்வது சரியில்லை. இதை ஒட்டுமொத்த அரசு - தனியார் மருத்துவத்திற்கான விவாதமாக வளர்த்தெடுத்தல் பொருந்தாது.

பத்திரிகையாளனின் லட்சணமா என்றும் ஷங்கர் கேட்டுள்ளார். எனக்குப் பத்திரிகையாளன், கவிஞன், ஆராய்ச்சியாளன், குடிமகன்... எனப் பல அடையாளங்கள் உண்டு. எல்லா நேரத்திலும் எல்லா அடையாளங்களோடும் எவரும் இருப்பதில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும் சரியில்லை. பத்திரிகையாளன் என்ற கோணத்தில் பார்த்தாலும் இவை குறைந்தபட்ச நியாயங்களுடன்தான் எழுதப்பெற்றுள்ளன.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், தனியார் மருத்துவமனைக்குச் சென்றதற்கு ஒரு தனி நபர் கூறிய காரணங்கள் இவை. இவ்வாறு எவ்வளவோ பேர் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள், தமிழக முதல்வர் உள்பட.

அரசு - தனியார் மருத்துவமனைகளின் தரம் குறித்து விவாதிக்க விரும்பினால், அதற்கு ஒரு தனிப் பதிவினை இட வேண்டும். அதை நான்தான் இடவேண்டும் என்பதில்லை. யாரும் இடலாம்.

சேவியர் said...

அண்ணா கண்ணன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் உதவுவோம். நண்பர் முத்துராமன் நலம் பெற வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்...