!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வெங்கட் சாமிநாதனின் தனித்துவம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, April 19, 2010

வெங்கட் சாமிநாதனின் தனித்துவம்

வெங்கட் சாமிநாதன், அநேகச் சிறப்புகளைக் கொண்டவர்.

நல்ல படைப்புகளைக் கொண்டாடுவது மட்டுமின்றி, அவ்வாறு இல்லாத படைப்புகளைச் சுட்டிக் காட்டவும் தயங்காதவர். முக்கியமாக, ஜோடனைகள், துதி, வெற்றுப் புகழ்ச்சி, ஆடம்பரம், மமதை, அதிகார போதை, செயற்கைத்தனம்..... உள்ளிட்ட அடையாளங்களுடன் வரும் படைப்புகளை வெளிப்படையாக விமர்சி்த்து வருபவர்.

திராவிடம், கம்யூனிசம் ஆகிய முழக்கங்களுடன் வந்த படைப்புகள், அவரின் விமர்சனக் கணைகளுக்கு அதிகம் ஆளாகின. காக்காய் பிடித்துக் காரியம் சாதிப்பவர்கள், திட்டமிட்டுப் பரிசு பெறுபவர்கள் ஆகியோரை எப்போதும் ஒரு பிடி பிடிப்பவர்.

எளிமையும் சி்க்கனமும் அவரின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டன. ஒரு பக்கக் காகிதங்களைக் கூட வீணாக்க மாட்டார். அதில் தன் அடுத்த படைப்புகளையும் கடிதங்களையும் எழுதுபவர். தமக்கு வந்த கடித உறைகளையும் பிரித்து, உட்புறம் வெளித்தெரிவது போல் மடித்து, மீண்டும் ஒட்டி, இன்னொருவருக்கான கடித உறைகளைத் தயாரிப்பார். இதில் அவர் காந்தியச் செல்வராகவே திகழ்கிறார்.

70 வயதுக்கு மேல் கணினியில் தமிழ்த் தட்டச்சுக் கற்றுக்கொண்டு, இன்று முழுக்க முழுக்க அதிலேயே எழுதி வருகிறார். இது, இதர எழுத்தாளர்களுக்கும் முதியவர்களுக்கும் வழிகாட்டும் செயலாகும். எந்த வயதிலும் எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் கூர்மையும் அவரிடம் உண்டு.

இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, ஓவியம், இசை, கூத்து... எனப் பற்பல கலைகளையும் அவர் கவனித்து, தம் கோணத்தில் நல்லனவற்றைப் பாராட்டி, அல்லனவற்றைச் சுட்டிக் காட்டி வருபவர். தமிழில் மட்டுமின்றி, இதர மொழிப் படைப்புகள் குறித்தும் இவ்வாறு எழுதியுள்ளார். தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

கலை மட்டுமின்றி, அரசியல், சமுதாயம், திரைப்படம், தனி ஆளுமைகள்.... எனப் பல துறைகளிலும் அவரின் ரேடார் சுழன்று சுழன்று படம் பிடித்துள்ளது. தயவு தாட்சண்யம் இன்றி, தரத்தினை மட்டுமே முதன்மையாகக் கொண்டு அவர் இடைவிடாமல் இயங்கி வருகிறார்.

வெங்கட் சாமிநாதனைப் பலரும் விமர்சகராக மட்டுமே அறிவார்கள். அவருக்குள் அற்புதமான படைப்பாளி மறைந்திருக்கிறார். நினைவுச் சுவடுகள் என்ற அவரின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரினைத் தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் ஆகியவற்றில் தொடர்ந்து வெளியிட்டவன் என்ற வகையில் புதினம் எழுதக்கூடிய ஆற்றல் அவருள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். ஆயினும் ஏற்ற வாய்ப்புகள் இன்மையினால், அவர் அத்திசையில் பயணிக்கவில்லை.

உண்மை, நேர்மை, தரம் எனப் பல கொள்கைகளை இந்தச் சமுதாயத்திற்கு அவர் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி வருகிறார். எல்லா நெறிகளையும் ஊதித் தள்ளி, லௌகீக லாபங்களே முக்கியமாகக் கொண்டு, ஒட்டுமொத்த சமுதாயமும் மாறிவிட்ட நிலையில் வெங்கட் சாமிநாதனின் குரல், தனித்து ஒலி்க்கிறது.

ஒருவர் செய்த குற்றத்தினை அல்லது தவறினை, அது நிகழ்ந்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் மீண்டும் குத்திக் காட்டும் தன்மையினைச் சில நேரங்களில் வெ.சா.விடம் காண்கிறேன். ஒரு நபரின் குறைகளைக் காணும்போது, அவரின் நன்மைகளையும் கணக்கில் எடுக்கலாமே. குற்றங்களை மட்டும் ஏன் கிளற வேண்டும் என நான் சில நேரங்களில் நினைப்பதுண்டு.

ஆயினும் அவரிடம் குற்ற உணர்வை ஊட்டுவதன் வழி, அவர் தொடர்ந்து அதே செயலில் ஈடுபடாமல் வெ.சா. தடுக்கிறார். இது ஒரு நல்ல விளைவு. அதே நேரம், குற்றம் சாட்டப்பட்டவர், அதை நேர்மறையாக எடுக்காமல் வெ.சா. மீது பகை வளர்க்கும் விதமாகவும் சில நேரங்களில் காட்சிகள் திரும்பி விடுகின்றன.

கனிவுடன் சுட்டிக் காட்டுவது ஒரு விதம், ஏளனத்துடன் குற்றம் சாட்டுவது இன்னொரு விதம். இரண்டிற்கும் வெவ்வேறு விளைவுகள் உண்டு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் விருப்பம்.

எது எவ்வாறாயினும் வலுவான எழுத்தாற்றல், கூர்மையான கருத்துகள், இளையோர் - முதியோர், செல்வர் - வறியோர், இன்னார் - இனியார், செல்வாக்கு உள்ளோர் - இல்லார்... எனப் பேதம் பார்க்காமல், நடுநிலையுடன் தன் மனத்திற்குப் பட்டவற்றைக் கூறும் தன்மையினால் வெ.சா. தனித்துவத்துடன் மிளிர்கிறார். அவரின் இருப்பு, தமிழுக்குச் சிறப்பு.

-----------------------------------------------------------------------------------
மேலுள்ள படம், வெங்கட் சாமிநாதன் மருத்துவமனையில் இருந்தபோது எடுத்தது. எடுத்தவர், வெ.சா. மனைவி சரோஜா சாமிநாதன்.

1 comment:

R.DEVARAJAN said...

நல்லாதான் எளுதீருக்கீங்க;
அது எப்டீங்ணா எப்ப பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க !
அத கொஞ்சம் இங்க குடுங்களேன்; நானும் ஒட்ட வச்சுக்கீறேன்

தேவ்