அன்பர்கள் என்னை மன்னியுங்கள்.
பாயும் குயில் என்ற தலைப்பில் முன்னர் 4 காணொலிகளை இட்டிருந்தேன். தூரத்திலிருந்து பார்க்கும்போது அப்படித்தான் தெரிந்தது. இப்போது பார்க்கும்போது, அவை கரிச்சான் பறவைகள் எனத் தெரிகிறது. அன்பர்கள் யாருமே இதைச் சுட்டிக் காட்டவில்லையே. இப்போது திருத்திவிட்டேன். ஆனால், இதற்காக நான் எழுதிய கவிதையை அப்படியே விட்டுவிட்டேன்.
களிவளர் குயிலே மின்னும்
கவினெழு சுடரே
குளிரிளந் திருவே வண்ணக்
குழலிசை அமுதே
ஒளிமுகிழ் கனவே பண்ணில்
உயிர்வளர் ஒயிலே
வெளியிது உனக்கே நன்கு
விரித்திடு சிறகே
நீள்விசும்பு வாசுதேவன் என்பார், இன்று நம் கரிச்சான் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். ஆனைச்சாத்தான் என இலக்கியத்தில் குறிப்பிடுவது இந்தப் பறவையைத் தானே எனக் கேட்டிருந்தார். தேடிப் பார்த்தேன். அவர் சொன்னது சரியே. ஆனைச்சாத்தன் என்பதே சரியான பெயர். திருப்பாவையில் ஆண்டாள், கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனக் குறிப்பிடுவது நம் கரிச்சானையே. மார்கழியும் நெருங்கிவிட்டது.
எனவே இந்தக் கரிச்சானைச் சிறப்பிக்க, இதைப் பதிந்து நான் வெளியிட்ட 14 காணொலிகளையும் தனி இழையில் சேர்த்திருக்கிறேன். அன்பர்கள் பார்த்து மகிழுங்கள்.
No comments:
Post a Comment