!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 04, 2005

கத்தி வணிகர்களும் கணியனும்


ஊர்ப்புறத்தில் உழவன் ஒருவன் இருந்தான். அவனிடம் தங்க வாத்து ஒன்று இருந்தது. அது ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டது. அந்த உழவன் அதை விற்று, வளமாக வாழ முடிந்தது. இருந்தாலும் உள்ளுக்குள் அவனுக்கு ஓர் அரிப்பு. 'இப்படித் தினம் தினம் ஒவ்வொரு முட்டையாக எடுத்துக்கொண்டே இருந்தால் எப்படி? இந்த வாத்தின் வயிற்றிலிருந்துதானே தங்க முட்டைகள் கிடைக்கின்றன. அதை வெட்டினால், ஒரே நாளில் எல்லா முட்டைகளையும் எடுத்துவிடலாம் இல்லையா?' என்று நினைத்தான்.

உடனே கத்தியைத் தேடினான். அச்சமயம் அவனிடம் சரியான கத்தி இல்லை. கடைத் தெருவுக்குச் சென்றான். அங்கு உள்ளூர் வியாபாரிகள், கத்திக்கு அதிக விலை சொன்னார்கள். வேறு எங்கே மலிவாகக் கிடைக்கும் என விசாரித்தான். வெளியூரிலிருந்து வந்த சிலர், போட்டிக் கடை வைத்தார்கள். உள்ளூருக்கும் வெளியூருக்கும் கடும் போட்டி. இப்போது, கொள்ளை மலிவுக்குக் கத்திகள் கிடைத்தன. நல்ல கூரிய கத்தி; விலை இறங்கிக்கொண்டே வந்தது. சிலர், 'நீங்க எடுத்துட்டுப் போங்க; அப்புறம் காசு வாங்கிக்கிறோம்' என்றனர். அவன் பளபளவென மின்னும், நல்ல கைப்பிடி உள்ள, அழகான கத்தியை வாங்கி வந்தான்.

அதைக் கொண்டு, "பெரிய பணக்காரன் ஆகப் போகிறேன்" என்று கூறிக்கொண்டே வந்தான். அவன் முழக்கத்தைக் கேட்ட இதர உழவர்களும் கத்தி வாங்கச் சென்றனர். இதிலென்ன வேடிக்கை என்றால், அவர்களுள் பலரிடம் தங்க வாத்து எதுவும் இல்லை. சாதாரண வாத்துதான் இருந்தது. அவர்களுள்ளும் சிலரிடம் வாத்தே இல்லை. அவர்களும் கத்தி வாங்கச் சென்றனர். அடுத்த சில மணிநேரங்களில் அனைவர் கையிலும் கத்தி இருந்தது.

தங்க வாத்து உழவன், தன் கூரிய கத்தியை எடுத்தான். ஒரே வெட்டு. தங்க வாத்து செத்து விழுந்தது. அதன் வயிற்றிலிருந்து ஒரு முட்டைகூட கிடைக்கவில்லை. 'அய்யோ! உள்ளதும் போச்சே நொள்ளைக் கண்ணா!' எனக் கூக்குரல் இட்டான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. உடனே, தட்டைத் திருப்பினான். "இது, கத்தி விற்றவர்களின் சதி; அவர்கள் மட்டும் கத்தியை விற்காமல் இருந்திருந்தால் நான் என் தங்க வாத்தை இழந்திருக்க மாட்டேன்" எனக் குற்றம் சாட்டினான்.

கத்தியை வாங்கிய இதர உழவர்களும் அவர்கள் வீட்டில் இருந்ததை வெட்டினார்கள். சிலர் சாதாரண வாத்தை; சிலர், ஆடு-கோழிகளை; சிலர், தங்கள் நிழல் தரும் மரங்களை; சிலர், எதை வெட்டுவது என்று தெரியாமல் வெட்டினார்கள்; சிலர், நகம் வெட்டப் பயன்படுத்திக் கைகளைக் காயப்படுத்திக்கொண்டார்கள். இப்படி எவருமே கத்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தவில்லை. அதை உருப்படியான வேலைக்குப் பயன்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் தங்க வாத்து உழவனைப் போல், கத்தி விற்றவர்களையே குற்றம் சொன்னார்கள்.

"நீங்கள், விற்றிருக்காவிட்டால், இப்படி நடந்திருக்காது. நீங்கள்தான் எங்களை இந்தச் செயலுக்குத் தூண்டினீர்கள். இந்தச் செயல்களுக்கு நீங்களே பொறுப்பாளி; எங்களுக்கு எதுவும் தெரியாது.

"அந்தக் காலத்தில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தோம்! இப்போது இந்த ரத்தக் களரியில் வாடுகிறோம். காயத்தினால் வந்த புண், சீழ்பிடித்துவிட்டதே! இவையெல்லாம் கத்தி விற்பவர்கள், ஊருக்குள் வந்ததால்தானே! அவர்களை இந்த அரசியல்வாதிகள், இலஞ்சம் வாங்கிக்கொண்டு நுழைய அனுமதித்து விட்டார்கள். வெளிநாட்டுக் கத்தி வணிகர்களை விரட்டுவோம்" எனக் கூக்குரல் எழுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து, உள்ளூர்க் கத்தி வியாபாரிகள் சாப்பாட்டில் மண் விழுந்தது. மேல்நோக்கி இருந்த கத்தி விலை, இப்போது மிகவும் சல்லிசாகக் கிடைத்தது. கூர்மையும் அதிகமாய் இருந்தது. தங்கள் கத்திகளின் தரம் குறைவு; விலை அதிகம் என்ற நிலையை உள்ளூர்க்காரர்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. 'வெளியூர்க்காரன் வந்ததால்தான் நம் பிழைப்பு போயிற்று. அவர்கள் வெளியேற வேண்டும்' என்று முழங்கினார்கள்.

இந்தக் கதை, நம் நாட்டுக் கதைதான். உலகமயமாக்கலின் விளைவாக, நம் வளங்கள் அழிகின்றன என்று குமுறும் விவசாயிகளுக்கு மட்டுமில்லை; அனைத்துத் தொழிலாளிகளுக்கும் அனைத்துத் தொழில்களுக்கும் இந்தக் கதை பொருந்தும்.

நம் மக்களின் பேராசைக்கு அளவில்லை. குறைந்த உழைப்பில், குறைந்த நாள்களில் முன்னேறிவிட வேண்டும் என்ற உந்துதலால்தான் அவர்கள், குறுக்கு வழிகளில் செல்லத் தொடங்கினார்கள். அவர்கள் மட்டும்தான் அவ்வாறு குறுக்கு வழிகளில் செல்லவேண்டுமா, என்ன? வியாபாரிகளும் குறுக்கு வழியில் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மனச்சான்றின்படி அவர்கள் பதில் சொல்வார்களா? எங்கேனும் அதிசயமாக அப்படி ஓரிருவர் இருக்கலாம். நியாயம், நீதி ஆகியவற்றோடு வணிகத்தில் உள்ளவர்கள், அரிய பிறவிகள்; விதிவிலக்குகள்.

இந்த விதையைப் பயன்படுத்தினால், அதிக மகசூல் கிடைக்கும்; இந்த உரத்தைப் போட்டால், பயிர் மூன்று பங்கு விளையும் என்ற பிரச்சாரத்தில் மயங்கினார்கள். இயற்கையான கோமியமும் சாணமும் போட்டால், முக்கால் பங்கு விளைந்தாலே அதிகம் என்ற உண்மை நிலையை உணர்ந்தார்கள். எல்லாரும் 'உஜாலாவுக்கு' மாறினார்கள். வருகிற எதுவும் தன் நிழலையும் சுமந்தே வரும் என்ற உண்மையை மறந்தார்கள். விளைநிலங்கள் பல மலடானமைக்குக் காரணம், விதையையும் உரத்தையும் விற்ற வணிகர்களா? அவற்றை வாங்கிப் பயன்படுத்திய உழவர்களா?

அதிகத் தண்ணீரை உறிஞ்ச மோட்டார்; விரைந்து விதைக்க, அறுக்க டிராக்டர்; நெல் பிரிக்க எந்திரம் என எல்லாவற்றிலும் மாறினார்கள். வசதிதான். வேலை, விரைவில் முடிந்துவிடுகிறது. ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது என்ற கூக்குரலுக்கு என்ன பதில்? இந்த வசதிகளைப் பயன்படுத்துவோரை, யாரும் அவர்கள் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்து வந்து, இந்த எந்திரங்களை அவர்கள் தலையில் கட்டவில்லை. அவர்களாகத்தான் போனார்கள். பேராசையினால் எந்திரங்களுக்கும் செயற்கை வழிகளுக்கும் மாறினார்கள். இன்று அவற்றின் பின்விளைவுகளைத் தாங்க முடியாமல் குமுறுகிறார்கள்.

இவர்கள் என்ன பச்சைப் பிள்ளைகளா? ஒன்றுமே தெரியாதவர்களா? இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் மைந்தர்களாய் இருந்தவர்கள், இன்று வேற்று மண்ணின் கைதிகளாய் நிற்கிறார்கள். நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து உணரும் பகுத்தறிவை எங்கே தொலைத்தார்கள்?

யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விட்டார்களா, என்ன? காந்தி எவ்வளவோ நல்ல வழிகளைத்தானே காட்டினார். அதை நம் மக்கள், இக்காலத்திற்குப் பொருந்தாது என்று கைகழுவி ஆயிற்று. எவர் சொன்னதையும் ஏற்பவராய் இருந்தால் காந்தி சொன்னதை ஏற்றிருக்க வேண்டுமே! இல்லையே! அப்படி என்றால் நேற்று வந்த எந்திர வியாபாரிகளின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்கும் மக்கள், காந்தியின் - நம் சித்தர்களின் - மூதாதையர்களின் (இயற்கைசார் வாழ்வை வலியுறுத்தும்) சொற்களைக் கேட்கத் தயாரில்லை.

ஆனால், வியாபாரிகளின் பேச்சைக் கேட்கத் தயாராய் இருக்கிறார்கள். உலகின் எந்த நாட்டு வியாபாரிகளும் அப்படித்தான் தேனொழுகப் பேசுவார்கள். தங்கள் பொருளை வாங்கினால், அடுத்த நாள் அதிகாலை அற்புதம் நடந்துவிடும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லத்தான் செய்வார்கள். அவர்கள், தங்கள் பொருளை விற்க, எதுவும் செய்யத் தயாராய் இருப்பார்கள்தாம். யாரும் பொதுச்சேவை செய்ய, வியாபார உலகுக்கு வரவில்லை. இலாபம் சம்பாதிக்கத்தான் வருகிறார்கள். அவர்கள், ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டைப் பாடியும்தான் பால் கறப்பார்கள். உள்ளூர் வியாபாரிகள் ஒன்றும் நூறு விழுக்காடு, உத்தமர்கள் இல்லை. இவர்களும் எல்லாத் தந்திரங்களும் உள்ளவர்களே. வியாபாரிகள் எங்கும் ஒரே தரத்தவர்களே. அவர்களைப் புரிந்துகொண்டு, நாம்தாம் விழிப்போடு இருக்கவேண்டும்.

விழிப்போடு இல்லையென்றால் அனுபவிக்க வேண்டியதுதான். இந்த எந்திரமயமான உலகின் பின்விளைவுகளுக்கு மேற்கத்திய நாடுகளைக் கைகாட்டிவிட்டுத் தப்பிக்க முடியாது, நண்பர்களே! இந்த நிலைக்கு நாமே காரணம்.

உள்ளூர் வியாபாரிகள், எந்தெந்தப் பொருளுக்கு என்னென்ன இலாப விழுக்காடு வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அதிகத் தேவை உள்ள பொருளுக்கே அதிக இலாப விழுக்காடு வைத்திருப்பார்கள். அண்மையில் மாம்பழப் பருவம் முடிவடையும் நிலையில் மாம்பழங்களின் விலை, கிடுகிடுவென ஏறியது. முதலில் ஐந்து ரூபாய்க்கு 2 பழங்கள்கூட கிடைத்தன. மாம்பழ வரத்து குறைந்ததும் அண்மையில் விலை விசாரித்தேன். 4 பழங்கள், 50 ரூபாய் என்று விலை சொன்னார்கள். மும்பையில் வெள்ளத்தால் அடிப்படைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எல்லாம் யானை விலை, குதிரை விலை விற்கின்றன. விற்போர், வெளிநாட்டு வியாபாரிகள் அல்லர்.

மாறாக, குறைவான தேவை உள்ளவற்றுக்குக் குறைவான இலாபமே கிடைக்கும். எனவே அதிகத் தேவையை ஏற்படுத்த வியாபாரிகள் முயலத்தான் செய்வார்கள். அதற்கு எலும்புத் துண்டாக, கேரட்டாக, இலவசப் பொருள்களை வழங்கத்தான் செய்வார்கள். கழிவும் அதிரடித் தள்ளுபடியும் கொடுக்கத்தான் செய்வார்கள். கலப்படமும் எடைக்குறைப்பும் செய்யத்தான் செய்வார்கள். வெளிநாட்டு வியாபாரிகள் சிலரைப் போல் அவர்கள் கொள்ளை இலாபம் அடிக்கவில்லை என்பது போல் தெரியும். அதற்குக் காரணம், அவர்களின் நல்ல இயல்பு இல்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

அறிஞர் அண்ணா சொன்னார்: வெளிநாட்டுத் தேன் குடித்தால் அது இனிக்காமல் போகாது; உள்நாட்டுத் தேள் கடித்தால் அது கடுக்காமல் போகாது.

கிடைத்த வாய்ப்பில் கொள்ளை இலாபம் அடித்துச் சொத்து சேர்க்கும் ஆட்கள் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறார்கள். காடுகளை அழித்தது; வறண்ட நீர்நிலைகளை வீட்டு மனைகளாக்கியது; சுற்றுச் சூழலை மாசுபடுத்தியது... என எண்ணற்ற குற்றச்சாட்டுகளை நம் மீது நாமே கூறவேண்டிய நிலையில் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மேற்கத்திய நாடுகளைக் குற்றம் சொல்லி விடலாமா?

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனப் புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றன் கூறியதை வெறும் சொற்களாகத்தான் நாம் கூறுகிறோம். அப்படி என்றால், உலகமயமாக்கலின் தத்துவமும் 'யாதும் ஊரே' என்பதும் ஒன்றுதானே! அதை ஏன் நாம் எதிர்க்கிறோம்?

வெளிநாட்டிலிருந்துதான் இங்கு பலவும் வந்துள்ளன. இரயில் பாதை முதற்கொண்டு, மின்சாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி, மகிழுந்து, விமானம்..... என மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள பெரும்பாலானவற்றின் தொழில்நுட்பங்கள், வெளிநாட்டிலிருந்து வந்துள்ளன.

நல்லவற்றை வெளிநாட்டிலிருந்து ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் உள்ள நாம், அல்லவற்றை எதிர்க்கவேண்டியது, கட்டாயம்தான். அந்த அல்லவை, உள்ளூரிலும் இருக்கலாம்; வெளிநாட்டிலும் இருக்கலாம். தொலைநோக்கோடு இரண்டையும் தரம்பார்த்துப் பிரித்தறிந்து, நல்லதைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை அலகுகள் நம்மிடம் உள்ளனவா?

நமக்கு உண்மையை எதிர்கொள்ளும் துணிவு இல்லை; அதை ஒப்புக்கொள்ளும் நேர்மை கூட இல்லை. எல்லாப் பழியையும் இன்னொருவன் தலையில் போட்டுவிடப் பார்க்கிறோம். இதை எதிர்பார்த்துத்தான் கணியன் அன்றே சொன்னான்: 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'.

இந்தக் குறுகிய காலப் பின்விளைவுக்கே இப்படி அலறினால் எப்படி? இன்னும் ஓரிரண்டு நூற்றாண்டுகளில் என்னென்ன நடக்கும்? அதற்கு நம் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் தயாராக இருக்கிறார்களா? பேராசைக்கும் குறுக்கு வழிகளுக்கும் நாம் விலை கொடுக்கவேண்டாமா?

தவறான வழிகளில் சென்று, பிள்ளைகளுக்குப் பலர் சொத்து சேர்க்கிறார்கள்! அந்தோ பரிதாபம்! நம் இன்றைய தவறுகளுக்கு நாம் தண்ணீர்ப் பஞ்சம் போல ஓரளவுதான் சிரமப்படுகிறோம். நம் தவறுகளுக்காக, நம் சந்ததியினருக்குப் பல மடங்குகள் அதிகத் தண்டனை காத்திருக்கிறது. நேரடியாக எந்தத் தவறும் செய்யாமல் நம்மிடம் வந்து பிறந்ததற்காகவே நம் சந்ததி, தண்டனைக்கு உள்ளாகப் போகிறது. செய்த குற்றத்திற்கு 'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்று சொன்ன தமிழே, நீ பின்தங்குகிறாய். குற்றம் செய்யவே வேண்டாம்; ஆனால், தண்டனைகள் காத்திருக்கின்றன என்ற காலம் நெருங்குகிறது.

இருநூறு ஆண்டு கடுங்காவல் என்று தண்டனைகள் விதிக்கும் போது எல்லாம் சிரித்துக்கொள்வேன். மனிதன் அவ்வளவு காலம் உயிரோடு இருந்தால்தானே என்று. ஆனால், இன்றைய மனிதன், பல்லாயிரம் ஆண்டுக் கடுங்காவல் தண்டனைக்கு உரிய குற்றங்களைச் செய்கிறான். அவன் நூறு ஆண்டுகளுக்குள் மரித்தாலும் எஞ்சிய தண்டனைகளை அவன் சந்ததி சுமக்கவேண்டும். இதுதான் நம் சாதனை.

No comments: