தமிழ்க்கவிதை, சொல்விளையாட்டுகளைக் கடந்து வெகுகாலம் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் எதுகை-மோனை-இயைபை வைத்து ஏராளமான கவிதைகள் வெளிவரத்தான் செய்கின்றன.
கவிஞர் நிர்மலா சுரேஷ், 'இயேசுமாகாவியம்' என்ற 700 பக்க நூலை முன்பு எழுதினார். அதன் தொடர்ச்சியாக இப்போது "தைலச் சிமிழும் தச்சன் மகனும்" வெளிவந்துள்ளது.
அஃறிணைகள் பேசுவதுபோல் படைப்பது அதிகம் கையாளப்படும் உத்தி. இந்த நூலில் இயேசு பயன்படுத்திய அல்லது இயேசுவோடு தொடர்புடைய 50 அஃறிணைகள், இயேசுவைப் புகழ்கின்றன.
பொதுவாக பக்தி இலக்கியங்களில் அவதாரங்களை மிகமிக உயர்த்திப் பாடுவது மரபுதான். அந்த மரபுக்கு ஏற்ப, புதுக்கவிதைகளில் இயேசுவைப் புகழ்கிறார், நிர்மலா சுரேஷ்.
'எங்களுக்கு அடியில்
அவர்
அமர்ந்தபோதெல்லாம்
நாங்கள் நிழல்பெற்றோம்'
-என்கின்றன, மரங்கள்.
இயேசுவின் தலையில் இருந்த முள்முடி,
'எழுத்தின் தலையை
அழுத்திப் பார்த்தேன்
வழிந்தது கவிதை'
-என்கிறது.
'பொதி சுமந்த நான்
பூபதியைச் சுமந்து
கோ-ஏறு-கழுதை எனும் பெயருக்குப் பொருத்தமானேன்'
-எனப் பெருமைப்படுகிறது கோவேறு கழுதை.
இப்படியாக மீன், மண், செம்மறி, ஒட்டகம், படகு, மலை, கடல், தைலச் சிமிழ், கத்தி, சாட்டை, முப்பது வெள்ளிக்காசுகள், ஆணி, சிலுவை, ஈட்டி, கல்லறை, பாறை... என 50 அஃறிணைகள் இயேசுவைப் போற்றுகின்றன.
சர்க்கரையே உணவாவதைப் போல், உணர்வு நவிற்சியாலேயே ஆன இலக்கியம் என இதைச் சொல்லலாம்.
'பொற்சாடிகளைப் புறக்கணித்து
கற்சாடிகளைக் கவனிப்பவர்
இந்த
சொற்சாடி!' (பக்.40)
'நான் வெறும்
முச்சந்தி
நாற்சந்திதான்!
அவரோ
யுக சந்தி!' (பக்.65)
இப்படிப் பல இடங்களில் சொல் விளையாட்டுகளைக் கையாண்டுள்ளார், கவிஞர்.
மேலோட்டமான வாசகர்களுக்கு இவை பிரமிப்பைத் தரலாம். ஆனால், கவிஞர்கள் இன்னும் ஆழமான கவிதை அனுபவத்தைத் தர முயலவேண்டும்.
'அந்த மூன்றுநாட்களும்
கால வாக்கியம்
கமாபோட்டு
நின்றது!'
-எனுமிடத்தில் கமாவிற்குப் பதில் 'காற்புள்ளி' என எழுதலாம்.
பக்-38இல் 'ஆற்றுப்படை' என்ற சொல்லை 'ஆறு ஆகிய படை' எனும் நேரடிப் பொருளில் கையாண்டுள்ளார். தமிழ்ச் சிற்றிலக்கிய மரபில் அதற்கு 'ஆற்றுப்படுத்துதல்' என்றே பொருள்.
சில குறைகள் இருந்தாலும் எளிய கவிதைகளை வழங்கியதற்காக நூலாசிரியரைப் பாராட்டலாம்.
அச்சு நேர்த்தியோடும் அழகிய படங்களோடும் இருப்பது நூலுக்குச் சிறப்பு.
-------------------------------------------
தைலச் சிமிழும் தச்சன் மகனும் : நிர்மலா சுரேஷ்
பக்:162 விலை ரூ.125/- வெளியீடு: இதயம் பதிப்பகம், பழைய எண்: 22-இ, புதிய எண்:18-இ, தெற்கு அவின்யூ, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை - 600 041.
( அமுதசுரபி, செப்டம்பர் 2003)
No comments:
Post a Comment