!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2008/09 - 2008/10 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, September 15, 2008

பொய் சொல்ல போறோம் - திரை விமர்சனம்

முள்ளை முள்ளால் எடுக்கும் ஒரு கதையை முழு நீள நகைச்சுவைச் சித்திரமாக வழங்கியதற்காக இயக்குநர் விஜயைப் பாராட்ட வேண்டும். நடுத்தர குடும்பம் ஒன்றின் மனை வாங்கி, வீடு கட்டும் முயற்சியில் ஏற்படும் சிக்கல்களை நயமுடன், நம்பும்படியாகப் படமாக்கி இருக்கிறார்கள். ஜெய்தீப் சாஹினியின் கோசலா கா கோசலா என்ற படத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் இது. ஆயினும் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துகிறது.

சத்தியநாதன் (நெடுமுடி வேணு), ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அவருக்கு மகன்கள் இருவர்; மகள் ஒருவர். கணினிக் கல்வி கற்ற முதல் மகன் உப்பிலிநாதன் (கார்த்திக்), இரண்டாம் மகன் கல்லூரி மாணவன் விஸ்வநாதன் (ஓம்). பதின் பருவத்தில் மகள். சத்தியநாதனுக்குச் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது நெடுநாள் கனவு. தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டு, மனைத் தரகர் (ஹனீபா) மூலம், சென்னை வேளச்சேரி அருகே ஒரு மனை வாங்குகிறார். அங்கு வீடு கட்டிக் குடியேறுவது அவர் திட்டம்.

வீட்டுக்குப் பூமி பூஜை போடச் செல்லும் போது, அந்த மனையில் பேபி என்ற நில முதலை (நாசர்), வளாகச் சுவர் எழுப்பி, அது தன் இடம் என்கிறார். அதற்கான போலிப் பத்திரங்களையும் அவர் வைத்திருக்கிறார். தான் அந்த இடத்திலிருந்து காலி செய்ய வேண்டுமானால் 15 லட்சம் தர வேண்டும் என்று கேட்கிறார். காவல் துறை, வழக்கறிஞர், மனித உரிமைகள் அமைப்பு... எனப் பல பிரிவையும் அணுகியும் அவர் சிக்கல் தீரவில்லை.

சட்டப்படி பேபியை மடக்க முடியாத நிலையில் பேபியின் முன்னாள் உதவியாளரும் அவரால் பாதிக்கப்பட்டவருமான ஆசிப் இக்பால் (பாஸ்கி), திருப்பதிக்கே லட்டு கொடுக்கும் யோசனையைச் சொல்கிறார். எப்படி பொய்ப் பத்திரத்தின் மூலம் நிலத்தை பேபி அபகரித்தாரோ அதே வழியில் ஒரு போலிப் பத்திரத்தின் மூலம் அவரையே ஏமாற்றிப் பணம் பெறுவது ஆசிப்பின் திட்டம்.

இதற்கு ஒரு நாடகக் குழு உதவுகிறது. உப்பிலிநாதனின் தோழியும் நாடக நடிகையுமான பியா, அவரின் அப்பா (படத்தில்) 36 விருதுகள் பெற்ற நடிகர் மெளலி, பாலாஜி ஆகியோர் எப்படி பொய்யான மனிதர், பொய்யான நிலம், பொய்யான பத்திரம் ஆகியவற்றைக் காட்டி, பேபியை ஏமாற்றுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

படம், மேட்டுக்குடி பாத்திரங்களைக் கொண்ட நாடகம் போன்று ஒரு சாயலில் இருந்தாலும் குலுங்கிச் சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவையும் இயல்பான நடிப்பும் காட்சிகளும் அரவிந்த் கிருஷ்ணாவின் துல்லியமான ஒளிப்பதிவும் ஆண்டனியின் சிறந்த படத் தொகுப்பும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. எம்.ஜி.சிறீகுமாரின் இசை பரவாயில்லை.

அதிகாலையில் பூங்காவில் கூட்டமாகக் கைகளை உயர்த்திச் சிரிப்புப் பயிற்சி எடுப்பது; வெற்று நிலத்தில் வீட்டின் அறைகள், மாடி... போன்றவை இருப்பது போல் விளக்குவது; பேபியை விரட்ட ரவுடிப் பட்டாளம் வருவது; பேபி புல்லறுக்க வரும் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுவது... எனப் படம் முழுக்க சிரிப்பு வெடிகள் நிறைந்திருக்கின்றன. இவையே படத்திற்குப் பெரும் வலிமை சேர்க்கின்றன.

நெடுமுடி வேணுவின் நடிப்பு, நன்று; ஆயினும் அவருக்கு டப்பிங் குரல் கொடுத்த ராஜேஷின் குரல் தனியாகத் தெரிகிறது. நாசரின் நடிப்பு அருமை; ஆயினும் வெக்காளி அம்மனின் பக்தரான அவரின் வண்ண வண்ண உடைகளைப் பார்த்தால் முஸ்லிம் போல் தெரிகிறது. நடுத்தர குடும்பத்து இளைஞனாக நடித்துள்ள கார்த்திக், அதிகப் படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக நடித்தவர். இந்தப் படம், இவருக்குள் இருக்கும் நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. அவர் தம்பியாக நடித்துள்ள ஓம், புதிய நடிகரைப் போல இல்லை. இவர்களின் தங்கையாக நடித்துள்ளவரும் கவர்கிறார். மெளலியின் உதவியாளராக நடித்துள்ள பாலாஜி, கலக்கியிருக்கிறார்.

படத்தின் நாயகி பியா, அம்சமாக இருக்கிறார். உயர் குடும்பத்துப் பெண்ணின் தோற்றம், அவருக்கு வாய்த்துள்ளது. காதல் உள்பட பல உணர்வுகளை இயல்பாக வழங்குகிறார். புதுமுகம் ஆனாலும் தமிழில் ஒரு வட்டம் வருவார். தயாரிப்பாளர்கள், இப்போதே முன்பதிவு செய்துகொள்வது நல்லது.

இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ள இயக்குநர் விஜய், திரை ஆளுமை மிக்கவராகத் தெரிகிறார். பல்வேறு திறமைகளைப் பொருத்தமாக ஒன்று சேர்ப்பதில் அவர் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய ரோனி ஸ்குருவாலாவும் பிரியதர்ஷனும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இயக்குநர் விஜய், தன் பெயரை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது. ஏற்கெனவே நடிகர் விஜய் இருக்கிறார். தலைவாசல் விஜய் உள்பட வேறு பல விஜய்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்குப் பெயர் வைப்பதில் என்ன பஞ்சம்? நல்ல புதிய பெயராக வைத்துக்கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லது. நாளைக்கே நடிகர் விஜய் படத்தை இவர் இயக்கும் தருணத்தில் பெரிய குழப்பம் ஏற்படலாம் இல்லையா?

இந்தப் படத்திற்குப் பிறகு நாயகி பியா, தன் பெயரைப் பிரீத்தி என மாற்றிக்கொண்டுள்ளார். இன்னும்கூட நல்ல பெயராக மாற்றிக்கொண்டிருக்கலாம் என்றாலும் பியாவுக்குப் பிரீத்தி பரவாயில்லை.

பொய் சொல்ல போறோம் என்று தமிழில் தலைப்பு வைத்தது நன்று. ஆயினும் 'ப்' என்ற ஒற்று இல்லாமல் எழுதியது தவறு. அடுத்த படங்களிலாவது இவற்றிலும் கவனம் செலுத்தலாம்.

எனினும் அண்மையில் வந்த சிறந்த நகைச்சுவைப் படமாக இதையே சுட்டுவேன்.

நன்றி: தமிழ் சிஃபி

Sunday, September 14, 2008

அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ்

தமிழ் சிஃபியின் அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளிவந்துவிட்டது.

பாருங்கள்: http://tamil.sify.com/special/anna_centenary

அண்ணா பல்வேறு தருணங்களில் பேசிய 16க்கும் மேற்பட்ட சொற்பொழிகளின் ஒலி வடிவத்தை இணையத்தில் முதல் முறையாக, முழுமையாக இங்கு நீங்கள் கேட்டு மகிழலாம்.

அண்ணாவின் பல்வேறு அரிய புகைப்படங்களை இங்கு நீங்கள் கண்டு மகிழலாம்.

அண்ணா பற்றிய ஆழமான கட்டுரைகளை நீங்கள் படித்து மகிழலாம்.

குறுகிய காலத் திட்டமிடலில் இந்தச் சிறப்பிதழ் உருவானது. இதற்கு மலர் மன்னன், அண்ணா பேரவை,
http://arignaranna.info தளத்தை நிர்வகித்து வரும் செம்பியன் ஆகியோரின் ஒத்துழைப்பினை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

இந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ள அண்ணா உரைகளின் ஒலி வடிவம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணாவின் பேச்சைக் கேட்க முடியாத கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் இனி வரும் தலைமுறைகளுக்கும் இவை பெரும் கருவூலம்
என்பதில் ஐயமில்லை.

இந்தச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள வீ.சு.இராமலிங்கத்தின் மகா அண்ணா (ANNA THE GREAT) என்ற கட்டுரையில் அண்ணாவின் தனி ஆளுமையை முழுமையாகக் காண முடியும்.

அண்ணாவுடன் பழகிய பாரதி மணி அவர்களுடன் அண்மையில் பேசிக்கொண்டிருக்கும் போது, அண்ணா மட்டும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு உயிருடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் Topography ஏ மாறியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

அதே போன்று அண்ணாவுடன் பழகிய மலர் மன்னன், தாம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைக் கோரிய அண்ணாவின் பெருந்தன்மையை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்துகொண்டார்.

தான் இருந்த போதே தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரைத் தலைவராக்கிய பக்குவம், எளிமை, நேர்மை, எதிரணியினரையும் மதிக்கும் பண்பு, தன் குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் கொடாமை..... என அவர் காட்டிய வழிகளை அவரின் தம்பிகள் வசதியாக மறந்து விட்டார்கள்.

அண்ணா வளர்த்தெடுத்த தனிப் பண்புகள், இக்காலத்தில் மறைந்தொழிந்து விட்டதை எண்ணித் துயரம் அடைகிறோம். இன்று அவரின் தொடர்ச்சியாக அரசியல் அரங்கில் உள்ளவர்கள் ஓர் ஓரத்தில் அவரின் பெயரை மட்டுமே
வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரின் கொள்கைகள் காலி பெருங்காய டப்பா ஆகிவிட்டது தமிழகத்திற்குப் பேரிழப்பு.

அண்ணாவை எழுத்திலும் ஒலியிலும் ஒளியிலும் காணும் நம்மவர்கள் தாக்கம் பெற்று எதிர்கால மாற்றத்திற்கு வலிமையாகப் பங்களிப்பார்கள் என்ற உள்ளார்ந்த கனவும் இந்தச் சிறப்பிதழுக்குப் பின்னே உண்டு.

இந்தச் சிறப்பிதழ் பற்றி மின்தமிழ் குழுமத்தில் உள்ள இழை:
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/8c0e3d6f89de6362

சரோஜா - திரை விமர்சனம்

நல்ல கதையை இயல்பாகச் சொல்லும் தன் பாணி நன்கு போணியாகக் கூடியது என்பதை இயக்குநர் வெங்கட் பிரபு மீண்டும் நிரூபித்துள்ளார். சென்னை 600028 வெற்றிக்குப் பிறகு பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அந்தப் படத்தின் பிரபல பாடலான 'சரோஜா சாமான் நிக்காலோ' பல்லவியிலிருந்தே தன் இரண்டாம் படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இயல்பு மீறிய காட்சிகளால் தமிழரின் வெள்ளித் திரை அவ்வப்போது வெளிறிக் கிடக்கிறது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் திரை மொழி சற்றே வித்தியாசம் காட்டுகிறது. எளிமையான கதை, இயல்பான முகங்கள், வலுவான திரைக் கதை, இடை இடையே நகைச்சுவை எனத் தனித்துவம் காட்டுகிறார்.

ஜகபதி பாபு (எஸ்.பி.பி. சரண்), கணேஷ் குமார் (பிரேம்ஜி), அஜய் ராஜ் (சிவா), ராம் பாபு (வைபவ்) ஆகிய நால்வரும் நண்பர்கள். கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கச் சென்னையிலிருந்து ஐதராபாத் நோக்கிப் போகிறார்கள். வழியில் வேதிப் பொருள் ஏற்றி வந்த நீள்நெடு வாகனம் சாய்ந்து கிடக்கிறது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தடைப்படுகிறது. ஒரு யூகத்தில் மாற்றுப் பாதையில் செல்கிறார்கள். ஆனால் வழி தவறுகிறார்கள். அதிக ஆளரவம் இல்லாத ஓர் இடத்தில் ஒரு சமூக விரோதக் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

அந்தக் கும்பல், சரோஜா என்ற பள்ளி மாணவியைக் கடத்திப் பணம் கேட்டு மிரட்டுகிறது. சரோஜா (வேகா) 12ஆம் வகுப்பு மாணவி. மேற்கத்திய இசைப் பாடகி. கோடீஸ்வர தந்தையின் (பிரகாஷ்ராஜ்) ஒரே மகள். காவல் துறை அதிகாரி ரவிச்சந்திரன் (ஜெயராம்) கடத்தல்கார்களைக் கண்டுபிடிக்க முயல்கிறார். இதற்கிடையே காவல் துறையின் தலையீட்டை அடுத்து கடத்தல்காரன் பேரத் தொகையை ஒரு கோடியிலிருந்து இருபது கோடிக்கு ஏற்றி விடுகிறான். இந்நிலையில் அந்தக் கும்பலிடமிருந்து நண்பர்கள் நால்வரும் மீண்டார்களா? அந்த மாணவியை மீட்டார்களா? என்பதே கதை.

மொத்தக் கதையும் மூன்று நாள்களில் நடக்கும் நிகழ்ச்சிகளே. ஆங்காங்கே நாளையும் நேரத்தையும் காட்டுகிறார் இயக்குநர். பாத்திரப் படைப்பு சிறப்பாகவே இருக்கிறது. சரோஜா என்ற பாத்திரத்தில் வரும் வேகா, குறைவான காட்சிகளில் வந்தாலும் தன் இருப்பைப் பதிவு செய்து விடுகிறார். பிரேம்ஜியின் நகைச்சுவைத் திறன் பளிச்சிடுகிறது. வைபவின் கட்டுடல் அவரின் ஆளுமையைக் காட்டத் துணை புரிகிறது. எஸ்.பி.பி.சரணின் தெலுங்கு நெடிப் பேச்சும் அவரின் மனைவியாக வருபவரின் உணர்வுகளும் அருமை. தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகராக வரும் சிவா இயல்பாகத் தோற்றம் அளிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகியோரின் அனுபவம், அவர்களின் நடிப்பில் வெளிப்பட்டுள்ளது.

அரங்க அமைப்புகளும் கதையின் போக்கிற்குத் துணை நிற்கின்றன. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு நன்று. படத் தொகுப்பு சிறப்பு. யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது. ஆனால் நவீனம் என்ற பெயரில் பாடல்களில் இசை ஆதிக்கம் செலுத்துகிறது. பாடல் வரிகள் சரியாகப் புரியவில்லை. கோடான கோடி, நிமிர்ந்து நில் ஆகிய பாடல்கள் கொஞ்சம் தேவலாம்.

'தண்ணி' அடிக்கக்கூடிய 4 நண்பர்கள் ஒரு காரில் ஐதராபாத் கிளம்புவதும் சரணின் மனைவி, இதர நண்பர்களை மட்டம் தட்டிப் பேசுவதும் கமல்ஹாசனின் பஞ்ச தந்திரத்தைச் சற்றே நினைவூட்டுகின்றன.

ஆளரவம் இல்லாத பகுதியில் பிச்சைக்காரர்களை உலவ விட்டுள்ளது செயற்கையாக உள்ளது. வில்லன்களை நண்பர்கள் நால்வரும் வீழ்த்தும் காட்சிகள் நம்ப முடியாதவை. கல்யாணி என்ற பாத்திரத்தில் வரும் நிகிதா, கண்ணைப் பறிக்கிறார். ஆனால், கடத்தல்காரன் சம்பத் உடனான அவரின் உறவு ஆழமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.

உச்சக்கட்ட காட்சியின் திடீர் திருப்பம், எதிர்பாராதது. மர்மம், நகைச்சுவை, எதார்த்தம் ஆகிய மூன்றையும் கலந்து கொடுப்பதில் இயககுநர் வெற்றி அடைந்திருக்கிறார்.

முறையான கல்வி கற்று ஒரு சிற்பத்தைச் செதுக்குபவன், இன்னும் கூட நேர்த்தியாக ஒரு சிலையை வடித்து விடுவான். ஆனால், ஆர்வத்தின் பேரில் ஒரு கல்லைச் சிற்பமாக வடிப்பவனின் படைப்பில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவன் படைப்புக்கு அதிக மதிப்புண்டு. வெங்கட் பிரபு, இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான். அவரிடம் மேலும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.


நன்றி: தமிழ் சிஃபி

ஜெயம்கொண்டான் - திரை விமர்சனம்

அண்மையில் வந்த தமிழ்ப் படங்களில் மிகச் சிறந்தது என்று கூற வேண்டுமானால் ஜெயம்கொண்டான் படத்தை நான் கூறுவேன். ஒரு குடும்பக் கதையை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும் என்று தன் முதல் படத்திலேயே காட்டிய இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கலாம். அற்புதமான ஒளிப்பதிவுக்காக பாலசுப்ரமணியத்துக்கு இதோ ஒரு மலர் மாலை. அழகிய தோற்றத்துடன், மிக எதார்த்தமான, கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்திய விநய்க்கு ஒரு பறக்கும் முத்தம். படம் முழுக்க முறைத்த பார்வையுடன் வந்தாலும் கச்சிதமாக உணர்வுகளை வெளிப்படுத்திய லேகா வாஷிங்டனுக்கு ஒரு சிறப்புக் கைகுலுக்கல். பாவனாவுக்கும் அவர் தங்கை சரண்யாவுக்கும் ஒரு பூச்செண்டு. இந்தப் படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்சுக்கு என் கைத்தட்டலையே பரிசாக அளிக்கிறேன்.

புகழ்மிகு, ஆற்றல் மிகு இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர், ஆர்.கண்ணன். இந்தப் படத்தில் மணிரத்னத்தின் தாக்கம் பல இடங்களில் உள்ளது.

லண்டனில் நீண்ட காலம் தங்கி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய அர்ஜூன் (விநய்), சென்னை திரும்புகிறார். தான் சம்பாதித்ததை எல்லாம் மாதா மாதம் அப்பாவுக்கு அனுப்பி வைத்த அவர், இப்போது சென்னையில் ஒரு தொழில் தொடங்கலாம் என்று வருகிறார். அவருக்கு கிருஷ்ணா (கிருஷ்ணா), கோபால் (விவேக்), அவர்களின் மனைவிமார்கள் என நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.

இறந்து போன தன் தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்பதை அறிந்து அர்ஜூன், அதிர்ச்சி அடைகிறான். அந்த இன்னொரு குடும்பத்தின் காரணமாகப் பிறந்த மகள் பிருந்தா (லேகா வாஷிங்டன்), தந்தையின் பேரில் மதுரையில் உள்ள சொத்தினை விற்க முயல்கிறாள். ஏனெனில் அவளுக்கு அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. அதற்கு அவளுக்குப் பணம் தேவை.

தொழில் தொடங்க அர்ஜூனுக்கும் மேற்படிப்புக்காக பிருந்தாவுக்கும் பணம் தேவைப்படுகிறது. பிருந்தாவின் அம்மா, அர்ஜூனுக்கு ஆதரவு தர, வீட்டின் பத்திரம் அர்ஜூனிடம் வருகிறது. மதுரை வீட்டில் மிளகாய் வியாபாரி (நிழல்கள் ரவி) தன் மகள் அன்னபூரணி(பாவனா) உடன் வசித்து வருகிறான். அவர்களை அங்கிருந்து காலி செய்ய அர்ஜூன் முயல்கிறான். அதற்காக அன்னபூரணிக்கும் தனக்கும் சிறு வயது முதலே பழக்கம் உண்டு என்று கதைகள் சொல்லி நம்ப வைக்கிறான். அவர்களும் காலி செய்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்குள் சிறு வயது நட்பு இருந்தது பின்னர பாவனா மூலம் தெரிய வருகிறது.

அர்ஜூன் வீட்டை விற்கும் தருணத்தில் பிருந்தா, வேறு ஒரு பார்ட்டிக்கு வீட்டை விற்க முயல்கிறாள். அண்ணன் அர்ஜூன் சண்டைக்கு வரக்கூடாது என்பதற்காக, அந்த வட்டார ரவுடி குணா (கிஷோர்) உதவியை அவள் நாடுகிறாள். பத்திரப் பதிவின் போதான களேபரத்தில் ரவுடி குணாவின் மனைவி பூங்கொடி (அதிசயா) தற்செயலாகக் கொல்லப்படுகிறாள்.

தன் மனைவி கொலைக்குப் பழி வாங்க ரவுடி குணா, அர்ஜூனைத் தேடிக்கொண்டு சென்னைக்கு வருகிறான். அவன் கண்ணில் படாமல் அர்ஜூன் ஓடுவதும் குணா ஆட்கள் அவனைத் தேடித் துரத்துவதும் நடக்கிறது.

கடைசியில் 'நான் ஓடுவது பயத்தினால் இல்லை; எனக்கென ஒரு லட்சியம் இருக்கிறது. ஓடுபவர்கள் எல்லோரையும் பயந்தாங்கொள்ளிகள் என நினைத்து விடாதே' என்ற நல்ல கருத்துடன் படம் முடிகிறது.

அர்ஜூனுக்கும் பிருந்தாவுக்கும் இடையிலான பாசக் காட்சிகள் மிக அழகாக, நயமுடன் காட்டப்பட்டுள்ளன. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த லேகா, முதல் முறையாக வெள்ளித் திரையில் தன் நடிப்புத் திறனைக் காட்டியுள்ளார். தன் அம்மா இறந்த பிறகு எல்லோர் முன்னும் அழாமல், தனி அறையில் யாருமில்லாத போது அழுவது அவரை அடையாளம் காட்டப் போதுமானது.

கூர்மையான மீசையும் பார்வையுமாக விநய் வசீகரிக்கிறார். வட்டார வழக்கில் பேசும் பாவனாவும் பட்டாம்பூச்சி போன்ற அவர் தங்கை சரண்யாவும் பொருத்தமான தேர்வுகள். சந்தானம், விவேக் ஆகியோரின் நகைச்சுவை நன்று.

பாடல்கள் பரவாயில்லை ரகம். நடிகர்களும் காட்சியாக்கிய இடங்களும் விதமும் ஒளிப்பதிவும் இசையின் குறைகளை மறைக்க உதவுகின்றன.

அண்ணன் - தங்கைப் பாசம் ஒரு புறம்; காதலன் - காதலி உறவு ஒரு புறம்; நண்பர்களின் அன்பு ஒரு புறம்... எனப் படம் முழுக்க அன்பின் மணம் வீசுகிறது. அண்ணனும் தங்கையும் மோதுவதும் பிறகு சேருவதும் அழகு. நேர்த்தியான திரைக்கதையின் மூலம் ஆர்.கண்ணன், மிக நளினமான ஒரு கதையை அளித்துள்ளார். நம்பிக்கை அளிக்கும் இந்த இயக்குநரை வரவேற்போம்.


நன்றி: தமிழ் சிஃபி

தாம் தூம் - திரை விமர்சனம்

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமரர் ஜீவாவின் கடைசிப் படம் இது. இந்தப் படத்தின் கதை, இரஷ்யாவிலும் தமிழ்நாட்டிலுமாக நடக்கிறது. இரஷ்யாவில் நடக்கும் பகுதியை ஜீவா கையாண்டுள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு படத்தின் விடுபட்ட பகுதிகளை ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் நிறைவு செய்துள்ளார்.

புதிய களமும் இது வரை கண்டிராத காட்சிகளும் முதல் தரமான இசையும் ஒளிப்பதிவும் படத்திற்குச் சிறப்பு கூட்டுகின்றன.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்திருக்கின்றன. 'அன்பே அன்பே' என்ற பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் நன்று. இதயத்தை வருடும் இனிய மெல்லிசையால் ஹாரிஸ் ஜெயராஜ், தன் நண்பர் ஜீவாவுக்கு இசை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதே போன்று ஜீவாவின் ஒளிப்பதிவு, உயர் தரத்தில் விளங்குகிறது. ஒவ்வொரு காட்சியும் பேசும் வகையில் அமைந்துள்ளது. பொருத்தமான ஒளி அமைப்பும் சூழலும் காட்சி அமைப்பும் ஒரு புத்துணர்வை அளிக்கின்றன. இரஷ்யக் காவலர்கள் விரட்ட, கவுதம் தப்பி ஓடுகையில் ஒரு கட்டடத்திலிருந்து இன்னொரு கட்டடத்திற்குத் தாவும் காட்சிகளும் சுடப்படும் காட்சிகளும் ஸ்லோ மோஷனில் காட்டப்படுவது அருமை. ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரை, இயக்குநரைத் தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டதே என்ற ஏக்கம் உண்டாகிறது.

மருத்துவர் கவுதம் சுப்பிரமணியன் (ஜெயம் ரவி), கிராமத்தில் இருக்கும் தன் அக்காவை (அனு ஹாசன்) பார்க்கப் போகிறார். அங்கு கிராமத்துப் பெண் செண்பா (கங்கனா ரனாவத்) உடன் காதல் மலர்கிறது. சச்சரவுகளுக்குப் பிறகு இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத் தேதிக்கு இரு வார காலமே இருக்கும் நிலையில் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக இந்தியா சார்பில் கவுதம் சுப்பிரமணியன் இரஷ்யா செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் இரஷ்ய மாடல் அனா பித்ரோவா (Kojevnikova Maria) உடன் தற்செயலாகத் தொடர்பு ஏற்படுகிறது. அந்த மாடலோ, போதை மருந்து கடத்துபவர். இரஷ்ய மாஃபியா விரித்த வலையில் கவுதம் சுப்பிரமணியன் வீழ்கிறார். இரஷ்ய மாடல் கொல்லப்பட, அந்தப் பழி கவுதம் மீது விழுகிறது. இரஷ்ய காவலர்கள், வலுவான ஆதாரங்களுடன் கவுதமைப் பிடித்துக் கடுமையாக விசாரிக்கிறார்கள்.

இந்திய தூதரக அதிகாரியான ராகவன் நம்பியார் (ஜெயராம்) பெரிய அளவில் உதவவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த ஆர்த்தி (லட்சுமி ராய்) என்ற வழக்கறிஞர், கவுதமுக்கு உதவ வருகிறார். இதற்கிடையே கவுதம், இரஷ்ய காவல் துறையிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். இரஷ்ய மாஃபியாவும் காவல் துறையும் கவுதமைக் கொல்லத் துரத்துகின்றன.

ஒரு நாள் கிராமத்தில் கவுதமும் செண்பாவும் ஒரு மரத்தடியில் நிற்கிறார்கள். வானில் ஒரு பறவையின் இறகு மிதந்து செல்கிறது. செண்பா, கவுதமிடம் சொல்கிறார்: அந்த இறகு இப்போது என் கைக்கு வரும் என்று கூறிவிட்டு, கண்ணை மூடிக்கொள்கிறார். அதே போல் அந்த இறகு, அவரின் உள்ளங்கைக்குள் வந்து அமர்கிறது. கவுதம் வியக்கிறார். கவித்துவமான இந்தக் காட்சியை இயக்குநர் காட்டுகிறார்.

கொலைக் குற்றவாளி கவுதம் கைதாகிய செய்தி, கிராமத்துத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய நிலையில் பலரும் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார்கள். ஆனால் செண்பா, திருமண நாளில் கவுதம் திரும்பி வந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இறுதியில் உண்மையான கொலையாளி பிடிபட, திருமண நாளில் கவுதம் திரும்பி விடுகிறான். உண்மையாக, ஆழமாக நினைத்தால், அது அப்படியே நடக்கும் என்பதை இயக்குநர் அழகுற காட்டியுள்ளார்.

செய்யாத குற்றத்திற்குப் பழி சுமந்து கவுதம் தனிமையிலும் துயரத்திலும் தவிப்பது நன்கு பதிவாகியுள்ளது. ஜெயம் ரவி, தன் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். தொடக்கப் பாடலில் அவரின் ஆட்டம் ரசிக்கும்படியாக உள்ளது.

கங்கனா ரனாவத், செக்கச் செவேலென ஈர்க்கிறார். கொள்ளை அழகாய்ச் சிரிக்கிறார். மெல்லிய உடலில் துருதுரு பெண்ணுக்குரிய உடல் மொழி அவரிடம் உள்ளது. கிராமத்துத் திரையரங்கில் செக்ஸ் படம் பார்க்கச் செல்லும் துணிச்சலை மெச்சலாம். படத்தின் ஆடை - அலங்கார நிபுணராக ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் சிறப்பாகவே செய்திருந்தாலும் கங்கனாவின் உடலில் பாவாடை - தாவணி சரியாகப் பொருந்தவில்லை.

படத்தின் திரைக் கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் முதல் 22 நிமிடங்களில் 3 பாடல்கள் இடம் பெற்றுவிட்டன. இரஷ்யாவிலும் தமிழ்நாட்டிலும் காட்சிகள் மாறி மாறி நடக்கின்றன. கடைசியில் இரஷ்ய மொழி தெரியாத கவுதம், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும் அப்போது நடக்கும் துப்பாக்கி சூட்டில் அவர் மட்டும் தப்பிப்பதும் நம்பக் கடினமான நிகழ்வுகள்.

ஜீவா இருந்து முழுப் படத்தையும் முடித்திருந்தால் இன்னும் சிறப்பாகத் தந்திருப்பார். ஆயினும் தன் கலை ஆளுமையால், கடும் உழைப்பால் உயர்ந்து, வித்தியாசமான படத்தைத் தர வேண்டும் என்ற ஜீவாவின் முனைப்பும் கனவும் இந்தப் படத்தில் உயிர்ப்போடு கண் சிமிட்டுகின்றன. அவருடைய கனவைத் தன் கைகளில் ஏந்தி, இந்தப் படத்தை முடித்து, தன் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள அனீஸ் தன்வரை அவசியம் பாராட்ட வேண்டும்.

நன்றி: தமிழ் சிஃபி

சத்யம் - திரை விமர்சனம்

பிரமாண்டமான எதிர்பார்ப்புகளைத் தூண்டி, ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியின் கதையைச் சொல்லி இருக்கிறார்கள்.

காவல் துறை உதவி ஆணையராக விஷால்; முறுக்கேறிய கட்டுடல்; நறுக்கென்ற முடிவெட்டு; மிடுக்கான தோற்றம்; சண்டைக் காட்சிகளில் வேகம்... என இது முழுக்க முழுக்க ஒரு விஷால் படமாக உருவெடுத்துள்ளது. எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ப, தன்னை வருத்தி, உழைத்து, அர்ப்பணிப்புடன் விளங்குகிறார் விஷால்.

சட்டமும் சாமியும் ஒண்ணு என்று இளம் வயதில் கேட்ட வாசகம், சத்யம் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. அதே கொள்கையுடன் காவல் துறை அதிகாரியாகி, சட்டத்தைக் காப்பதில் உறுதியுடன் உள்ளார் சத்யம் (விஷால்). உடல்நலம் குன்றிய தன் அம்மாவுடன் (சுதா சந்திரன்) சத்யம் வசிக்கிறார்.

அவர்கள் வசிக்கும் அடுக்ககத்தில் தெய்வா (நயன்தாரா) என்ற தொலைக்காட்சி நிருபரும் வசிக்கிறார். தெய்வாவின் காமரா உதவியாளர் போரா (பிரேம்ஜி; கூடவே நிறைய குறும்புக்கார வாண்டுகள். இவர்களுக்கு இடையில் சில பல மோதல்களுக்குப் பிறகு நட்பு பிறக்கிறது. நேர்மையான அதிகாரி சத்யம் மீது தெய்வாவிற்குக் காதல் அரும்புகிறது.

இதற்கிடையே சத்யத்திற்கு அலுவல் ரீதியாகப் பிரச்சினை எழுகிறது. மாநில முதல்வர் நோய்வாய்ப்பட, அவரது இருக்கையைப் பிடிக்க அவரின் கட்சிக் காரர்கள் நாலு பேர் திட்டம் வகுக்கிறார்கள். அவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் கொண்டல் தாசன் (கோட்டா சீனிவாச ராவ்), இதர மூன்று பேர்களைத் தீர்த்துக் கட்டினால் தான் முதல்வர் ஆகிவிடலாம் என மனப்பால் குடிக்கிறார். அதற்காக ஒரு தொழில் முறை கொலையாளியை ஏவுகிறார்.

ஆனால், அந்தக் கொலையாளி கொல்லும் முன்பே வேறு ஒருவர், இரண்டு அமைச்சர்களைக் கொன்று விடுகிறார். இந்நிலையில் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு, சத்யத்திடம் வருகிறது. தீவிர புலனாய்வுக்குப் பிறகு சத்யம், கொலையாளியை மாணிக்க வேலை (உபேந்திரா)க் கண்டுபிடிக்கிறார். இந்த மாணிக்க வேல், இளம் வயதில் சத்யத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர். சட்டமும் சாமியும் ஒண்ணு என்று கூறிய அவரே இன்று சட்டத்தைக் கையில் எடுத்து, இரண்டு அமைச்சர்களைக் கொன்றது ஏன்? சட்டம், சாமானியர்களைத்தான் வதைக்கிறது. அதிகாரம் படைத்தவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறது; அந்த வெறுப்பினாலேயே கொன்றேன் என மாணிக்க வேல் தன் செயலை நியாயப்படுத்துகிறார். முடிந்தால் கொண்டல்தாசன் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்தி, அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடு என்கிறார். சத்யம் சவாலை ஏற்கிறார். அந்தச் சவாலில் வென்றாரா என்பதே கதை.

படத்தின் சண்டைக் காட்சிகள், தத்ரூபமாகத் தோன்றுகின்றன. விமான நிலையத் துரத்தல் காட்சிகள் நன்று. ஆயினும் படத்தின் உச்சக்கட்ட காட்சி, மிகவும் நாடகத்தன்மையுடன் அமைந்துள்ளது.

நயன்தாரா - விஷால் இடையிலான காதலில் ஆழம் போதாது. ஆனால் பல அண்மைக் காட்சிகள், நயன்தாராவின் அழகைக் கூர்மையாக அள்ளித் தருகின்றன. துருக்கியில் அவர் ஆடிப் பாடுவது மிக இனிமை. அங்கு அவரது நடன அசைவுகள் இயல்பாகவும் ஒயிலாகவும் விளங்குகிறது. இதற்காகவே நடன இயக்குநரைப் பாராட்டலாம்.

படத்தின் திரைக் கதையில் செம்மை போதவில்லை. நயன்தாராவும் வாண்டுகளும் மோதுவதும் அந்தச் சூழலில் ஒரு பாடல் காட்சியும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளன. செல்லமே செல்லமே பாடல், விஷால் - நயன் இருவரின் உடல் வனப்பை வெளிப்படுத்தவே உதவியுள்ளது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ராஜசேகர் இயக்கியுள்ளார். ஒழுங்கான காவல் துறை அதிகாரி கதையாக எடுத்திருந்தால் படம் வேறு தளத்திற்குச் சென்றிருக்கும். ஆனால், கொஞ்சம் நகைச்சுவை; கொஞ்சம் காதல்; கொஞ்சம் கவர்ச்சி; கொஞ்சம் சென்டிமென்ட் என எல்லா மசாலாக்களையும் கலந்து கொடுத்ததால் காவல் அதிகாரி சத்யத்திற்கு இடம் குறுகிவிட்டது. இந்த இடத்திலும் விஷால் தன்னை நிலை நிறுத்தியுள்ளது, அவரது தனித்தன்மையைக் காட்டுகிறது.

வெகுஜன கதாநாயகன் ஆக வேண்டுமானால் இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என விஜய் தொடங்கி, அனைத்துக் கதாநாயகர்களும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால் படைப்பாற்றல் இன்னும் கூட அதிகரிக்கும்.

நன்றி: தமிழ் சிஃபி