!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஜெயம்கொண்டான் - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 14, 2008

ஜெயம்கொண்டான் - திரை விமர்சனம்

அண்மையில் வந்த தமிழ்ப் படங்களில் மிகச் சிறந்தது என்று கூற வேண்டுமானால் ஜெயம்கொண்டான் படத்தை நான் கூறுவேன். ஒரு குடும்பக் கதையை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும் என்று தன் முதல் படத்திலேயே காட்டிய இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கலாம். அற்புதமான ஒளிப்பதிவுக்காக பாலசுப்ரமணியத்துக்கு இதோ ஒரு மலர் மாலை. அழகிய தோற்றத்துடன், மிக எதார்த்தமான, கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்திய விநய்க்கு ஒரு பறக்கும் முத்தம். படம் முழுக்க முறைத்த பார்வையுடன் வந்தாலும் கச்சிதமாக உணர்வுகளை வெளிப்படுத்திய லேகா வாஷிங்டனுக்கு ஒரு சிறப்புக் கைகுலுக்கல். பாவனாவுக்கும் அவர் தங்கை சரண்யாவுக்கும் ஒரு பூச்செண்டு. இந்தப் படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்சுக்கு என் கைத்தட்டலையே பரிசாக அளிக்கிறேன்.

புகழ்மிகு, ஆற்றல் மிகு இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர், ஆர்.கண்ணன். இந்தப் படத்தில் மணிரத்னத்தின் தாக்கம் பல இடங்களில் உள்ளது.

லண்டனில் நீண்ட காலம் தங்கி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய அர்ஜூன் (விநய்), சென்னை திரும்புகிறார். தான் சம்பாதித்ததை எல்லாம் மாதா மாதம் அப்பாவுக்கு அனுப்பி வைத்த அவர், இப்போது சென்னையில் ஒரு தொழில் தொடங்கலாம் என்று வருகிறார். அவருக்கு கிருஷ்ணா (கிருஷ்ணா), கோபால் (விவேக்), அவர்களின் மனைவிமார்கள் என நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.

இறந்து போன தன் தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்பதை அறிந்து அர்ஜூன், அதிர்ச்சி அடைகிறான். அந்த இன்னொரு குடும்பத்தின் காரணமாகப் பிறந்த மகள் பிருந்தா (லேகா வாஷிங்டன்), தந்தையின் பேரில் மதுரையில் உள்ள சொத்தினை விற்க முயல்கிறாள். ஏனெனில் அவளுக்கு அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. அதற்கு அவளுக்குப் பணம் தேவை.

தொழில் தொடங்க அர்ஜூனுக்கும் மேற்படிப்புக்காக பிருந்தாவுக்கும் பணம் தேவைப்படுகிறது. பிருந்தாவின் அம்மா, அர்ஜூனுக்கு ஆதரவு தர, வீட்டின் பத்திரம் அர்ஜூனிடம் வருகிறது. மதுரை வீட்டில் மிளகாய் வியாபாரி (நிழல்கள் ரவி) தன் மகள் அன்னபூரணி(பாவனா) உடன் வசித்து வருகிறான். அவர்களை அங்கிருந்து காலி செய்ய அர்ஜூன் முயல்கிறான். அதற்காக அன்னபூரணிக்கும் தனக்கும் சிறு வயது முதலே பழக்கம் உண்டு என்று கதைகள் சொல்லி நம்ப வைக்கிறான். அவர்களும் காலி செய்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்குள் சிறு வயது நட்பு இருந்தது பின்னர பாவனா மூலம் தெரிய வருகிறது.

அர்ஜூன் வீட்டை விற்கும் தருணத்தில் பிருந்தா, வேறு ஒரு பார்ட்டிக்கு வீட்டை விற்க முயல்கிறாள். அண்ணன் அர்ஜூன் சண்டைக்கு வரக்கூடாது என்பதற்காக, அந்த வட்டார ரவுடி குணா (கிஷோர்) உதவியை அவள் நாடுகிறாள். பத்திரப் பதிவின் போதான களேபரத்தில் ரவுடி குணாவின் மனைவி பூங்கொடி (அதிசயா) தற்செயலாகக் கொல்லப்படுகிறாள்.

தன் மனைவி கொலைக்குப் பழி வாங்க ரவுடி குணா, அர்ஜூனைத் தேடிக்கொண்டு சென்னைக்கு வருகிறான். அவன் கண்ணில் படாமல் அர்ஜூன் ஓடுவதும் குணா ஆட்கள் அவனைத் தேடித் துரத்துவதும் நடக்கிறது.

கடைசியில் 'நான் ஓடுவது பயத்தினால் இல்லை; எனக்கென ஒரு லட்சியம் இருக்கிறது. ஓடுபவர்கள் எல்லோரையும் பயந்தாங்கொள்ளிகள் என நினைத்து விடாதே' என்ற நல்ல கருத்துடன் படம் முடிகிறது.

அர்ஜூனுக்கும் பிருந்தாவுக்கும் இடையிலான பாசக் காட்சிகள் மிக அழகாக, நயமுடன் காட்டப்பட்டுள்ளன. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த லேகா, முதல் முறையாக வெள்ளித் திரையில் தன் நடிப்புத் திறனைக் காட்டியுள்ளார். தன் அம்மா இறந்த பிறகு எல்லோர் முன்னும் அழாமல், தனி அறையில் யாருமில்லாத போது அழுவது அவரை அடையாளம் காட்டப் போதுமானது.

கூர்மையான மீசையும் பார்வையுமாக விநய் வசீகரிக்கிறார். வட்டார வழக்கில் பேசும் பாவனாவும் பட்டாம்பூச்சி போன்ற அவர் தங்கை சரண்யாவும் பொருத்தமான தேர்வுகள். சந்தானம், விவேக் ஆகியோரின் நகைச்சுவை நன்று.

பாடல்கள் பரவாயில்லை ரகம். நடிகர்களும் காட்சியாக்கிய இடங்களும் விதமும் ஒளிப்பதிவும் இசையின் குறைகளை மறைக்க உதவுகின்றன.

அண்ணன் - தங்கைப் பாசம் ஒரு புறம்; காதலன் - காதலி உறவு ஒரு புறம்; நண்பர்களின் அன்பு ஒரு புறம்... எனப் படம் முழுக்க அன்பின் மணம் வீசுகிறது. அண்ணனும் தங்கையும் மோதுவதும் பிறகு சேருவதும் அழகு. நேர்த்தியான திரைக்கதையின் மூலம் ஆர்.கண்ணன், மிக நளினமான ஒரு கதையை அளித்துள்ளார். நம்பிக்கை அளிக்கும் இந்த இயக்குநரை வரவேற்போம்.


நன்றி: தமிழ் சிஃபி

No comments: