இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமரர் ஜீவாவின் கடைசிப் படம் இது. இந்தப் படத்தின் கதை, இரஷ்யாவிலும் தமிழ்நாட்டிலுமாக நடக்கிறது. இரஷ்யாவில் நடக்கும் பகுதியை ஜீவா கையாண்டுள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு படத்தின் விடுபட்ட பகுதிகளை ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் நிறைவு செய்துள்ளார்.
புதிய களமும் இது வரை கண்டிராத காட்சிகளும் முதல் தரமான இசையும் ஒளிப்பதிவும் படத்திற்குச் சிறப்பு கூட்டுகின்றன.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்திருக்கின்றன. 'அன்பே அன்பே' என்ற பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் நன்று. இதயத்தை வருடும் இனிய மெல்லிசையால் ஹாரிஸ் ஜெயராஜ், தன் நண்பர் ஜீவாவுக்கு இசை அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதே போன்று ஜீவாவின் ஒளிப்பதிவு, உயர் தரத்தில் விளங்குகிறது. ஒவ்வொரு காட்சியும் பேசும் வகையில் அமைந்துள்ளது. பொருத்தமான ஒளி அமைப்பும் சூழலும் காட்சி அமைப்பும் ஒரு புத்துணர்வை அளிக்கின்றன. இரஷ்யக் காவலர்கள் விரட்ட, கவுதம் தப்பி ஓடுகையில் ஒரு கட்டடத்திலிருந்து இன்னொரு கட்டடத்திற்குத் தாவும் காட்சிகளும் சுடப்படும் காட்சிகளும் ஸ்லோ மோஷனில் காட்டப்படுவது அருமை. ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரை, இயக்குநரைத் தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டதே என்ற ஏக்கம் உண்டாகிறது.
மருத்துவர் கவுதம் சுப்பிரமணியன் (ஜெயம் ரவி), கிராமத்தில் இருக்கும் தன் அக்காவை (அனு ஹாசன்) பார்க்கப் போகிறார். அங்கு கிராமத்துப் பெண் செண்பா (கங்கனா ரனாவத்) உடன் காதல் மலர்கிறது. சச்சரவுகளுக்குப் பிறகு இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத் தேதிக்கு இரு வார காலமே இருக்கும் நிலையில் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக இந்தியா சார்பில் கவுதம் சுப்பிரமணியன் இரஷ்யா செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் இரஷ்ய மாடல் அனா பித்ரோவா (Kojevnikova Maria) உடன் தற்செயலாகத் தொடர்பு ஏற்படுகிறது. அந்த மாடலோ, போதை மருந்து கடத்துபவர். இரஷ்ய மாஃபியா விரித்த வலையில் கவுதம் சுப்பிரமணியன் வீழ்கிறார். இரஷ்ய மாடல் கொல்லப்பட, அந்தப் பழி கவுதம் மீது விழுகிறது. இரஷ்ய காவலர்கள், வலுவான ஆதாரங்களுடன் கவுதமைப் பிடித்துக் கடுமையாக விசாரிக்கிறார்கள்.
இந்திய தூதரக அதிகாரியான ராகவன் நம்பியார் (ஜெயராம்) பெரிய அளவில் உதவவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த ஆர்த்தி (லட்சுமி ராய்) என்ற வழக்கறிஞர், கவுதமுக்கு உதவ வருகிறார். இதற்கிடையே கவுதம், இரஷ்ய காவல் துறையிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். இரஷ்ய மாஃபியாவும் காவல் துறையும் கவுதமைக் கொல்லத் துரத்துகின்றன.
ஒரு நாள் கிராமத்தில் கவுதமும் செண்பாவும் ஒரு மரத்தடியில் நிற்கிறார்கள். வானில் ஒரு பறவையின் இறகு மிதந்து செல்கிறது. செண்பா, கவுதமிடம் சொல்கிறார்: அந்த இறகு இப்போது என் கைக்கு வரும் என்று கூறிவிட்டு, கண்ணை மூடிக்கொள்கிறார். அதே போல் அந்த இறகு, அவரின் உள்ளங்கைக்குள் வந்து அமர்கிறது. கவுதம் வியக்கிறார். கவித்துவமான இந்தக் காட்சியை இயக்குநர் காட்டுகிறார்.
கொலைக் குற்றவாளி கவுதம் கைதாகிய செய்தி, கிராமத்துத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய நிலையில் பலரும் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார்கள். ஆனால் செண்பா, திருமண நாளில் கவுதம் திரும்பி வந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இறுதியில் உண்மையான கொலையாளி பிடிபட, திருமண நாளில் கவுதம் திரும்பி விடுகிறான். உண்மையாக, ஆழமாக நினைத்தால், அது அப்படியே நடக்கும் என்பதை இயக்குநர் அழகுற காட்டியுள்ளார்.
செய்யாத குற்றத்திற்குப் பழி சுமந்து கவுதம் தனிமையிலும் துயரத்திலும் தவிப்பது நன்கு பதிவாகியுள்ளது. ஜெயம் ரவி, தன் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். தொடக்கப் பாடலில் அவரின் ஆட்டம் ரசிக்கும்படியாக உள்ளது.
கங்கனா ரனாவத், செக்கச் செவேலென ஈர்க்கிறார். கொள்ளை அழகாய்ச் சிரிக்கிறார். மெல்லிய உடலில் துருதுரு பெண்ணுக்குரிய உடல் மொழி அவரிடம் உள்ளது. கிராமத்துத் திரையரங்கில் செக்ஸ் படம் பார்க்கச் செல்லும் துணிச்சலை மெச்சலாம். படத்தின் ஆடை - அலங்கார நிபுணராக ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் சிறப்பாகவே செய்திருந்தாலும் கங்கனாவின் உடலில் பாவாடை - தாவணி சரியாகப் பொருந்தவில்லை.
படத்தின் திரைக் கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் முதல் 22 நிமிடங்களில் 3 பாடல்கள் இடம் பெற்றுவிட்டன. இரஷ்யாவிலும் தமிழ்நாட்டிலும் காட்சிகள் மாறி மாறி நடக்கின்றன. கடைசியில் இரஷ்ய மொழி தெரியாத கவுதம், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும் அப்போது நடக்கும் துப்பாக்கி சூட்டில் அவர் மட்டும் தப்பிப்பதும் நம்பக் கடினமான நிகழ்வுகள்.
ஜீவா இருந்து முழுப் படத்தையும் முடித்திருந்தால் இன்னும் சிறப்பாகத் தந்திருப்பார். ஆயினும் தன் கலை ஆளுமையால், கடும் உழைப்பால் உயர்ந்து, வித்தியாசமான படத்தைத் தர வேண்டும் என்ற ஜீவாவின் முனைப்பும் கனவும் இந்தப் படத்தில் உயிர்ப்போடு கண் சிமிட்டுகின்றன. அவருடைய கனவைத் தன் கைகளில் ஏந்தி, இந்தப் படத்தை முடித்து, தன் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள அனீஸ் தன்வரை அவசியம் பாராட்ட வேண்டும்.
நன்றி: தமிழ் சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, September 14, 2008
தாம் தூம் - திரை விமர்சனம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:45 AM
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment