!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சத்யம் - திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 14, 2008

சத்யம் - திரை விமர்சனம்

பிரமாண்டமான எதிர்பார்ப்புகளைத் தூண்டி, ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியின் கதையைச் சொல்லி இருக்கிறார்கள்.

காவல் துறை உதவி ஆணையராக விஷால்; முறுக்கேறிய கட்டுடல்; நறுக்கென்ற முடிவெட்டு; மிடுக்கான தோற்றம்; சண்டைக் காட்சிகளில் வேகம்... என இது முழுக்க முழுக்க ஒரு விஷால் படமாக உருவெடுத்துள்ளது. எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ப, தன்னை வருத்தி, உழைத்து, அர்ப்பணிப்புடன் விளங்குகிறார் விஷால்.

சட்டமும் சாமியும் ஒண்ணு என்று இளம் வயதில் கேட்ட வாசகம், சத்யம் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. அதே கொள்கையுடன் காவல் துறை அதிகாரியாகி, சட்டத்தைக் காப்பதில் உறுதியுடன் உள்ளார் சத்யம் (விஷால்). உடல்நலம் குன்றிய தன் அம்மாவுடன் (சுதா சந்திரன்) சத்யம் வசிக்கிறார்.

அவர்கள் வசிக்கும் அடுக்ககத்தில் தெய்வா (நயன்தாரா) என்ற தொலைக்காட்சி நிருபரும் வசிக்கிறார். தெய்வாவின் காமரா உதவியாளர் போரா (பிரேம்ஜி; கூடவே நிறைய குறும்புக்கார வாண்டுகள். இவர்களுக்கு இடையில் சில பல மோதல்களுக்குப் பிறகு நட்பு பிறக்கிறது. நேர்மையான அதிகாரி சத்யம் மீது தெய்வாவிற்குக் காதல் அரும்புகிறது.

இதற்கிடையே சத்யத்திற்கு அலுவல் ரீதியாகப் பிரச்சினை எழுகிறது. மாநில முதல்வர் நோய்வாய்ப்பட, அவரது இருக்கையைப் பிடிக்க அவரின் கட்சிக் காரர்கள் நாலு பேர் திட்டம் வகுக்கிறார்கள். அவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் கொண்டல் தாசன் (கோட்டா சீனிவாச ராவ்), இதர மூன்று பேர்களைத் தீர்த்துக் கட்டினால் தான் முதல்வர் ஆகிவிடலாம் என மனப்பால் குடிக்கிறார். அதற்காக ஒரு தொழில் முறை கொலையாளியை ஏவுகிறார்.

ஆனால், அந்தக் கொலையாளி கொல்லும் முன்பே வேறு ஒருவர், இரண்டு அமைச்சர்களைக் கொன்று விடுகிறார். இந்நிலையில் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு, சத்யத்திடம் வருகிறது. தீவிர புலனாய்வுக்குப் பிறகு சத்யம், கொலையாளியை மாணிக்க வேலை (உபேந்திரா)க் கண்டுபிடிக்கிறார். இந்த மாணிக்க வேல், இளம் வயதில் சத்யத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர். சட்டமும் சாமியும் ஒண்ணு என்று கூறிய அவரே இன்று சட்டத்தைக் கையில் எடுத்து, இரண்டு அமைச்சர்களைக் கொன்றது ஏன்? சட்டம், சாமானியர்களைத்தான் வதைக்கிறது. அதிகாரம் படைத்தவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறது; அந்த வெறுப்பினாலேயே கொன்றேன் என மாணிக்க வேல் தன் செயலை நியாயப்படுத்துகிறார். முடிந்தால் கொண்டல்தாசன் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்தி, அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடு என்கிறார். சத்யம் சவாலை ஏற்கிறார். அந்தச் சவாலில் வென்றாரா என்பதே கதை.

படத்தின் சண்டைக் காட்சிகள், தத்ரூபமாகத் தோன்றுகின்றன. விமான நிலையத் துரத்தல் காட்சிகள் நன்று. ஆயினும் படத்தின் உச்சக்கட்ட காட்சி, மிகவும் நாடகத்தன்மையுடன் அமைந்துள்ளது.

நயன்தாரா - விஷால் இடையிலான காதலில் ஆழம் போதாது. ஆனால் பல அண்மைக் காட்சிகள், நயன்தாராவின் அழகைக் கூர்மையாக அள்ளித் தருகின்றன. துருக்கியில் அவர் ஆடிப் பாடுவது மிக இனிமை. அங்கு அவரது நடன அசைவுகள் இயல்பாகவும் ஒயிலாகவும் விளங்குகிறது. இதற்காகவே நடன இயக்குநரைப் பாராட்டலாம்.

படத்தின் திரைக் கதையில் செம்மை போதவில்லை. நயன்தாராவும் வாண்டுகளும் மோதுவதும் அந்தச் சூழலில் ஒரு பாடல் காட்சியும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளன. செல்லமே செல்லமே பாடல், விஷால் - நயன் இருவரின் உடல் வனப்பை வெளிப்படுத்தவே உதவியுள்ளது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ராஜசேகர் இயக்கியுள்ளார். ஒழுங்கான காவல் துறை அதிகாரி கதையாக எடுத்திருந்தால் படம் வேறு தளத்திற்குச் சென்றிருக்கும். ஆனால், கொஞ்சம் நகைச்சுவை; கொஞ்சம் காதல்; கொஞ்சம் கவர்ச்சி; கொஞ்சம் சென்டிமென்ட் என எல்லா மசாலாக்களையும் கலந்து கொடுத்ததால் காவல் அதிகாரி சத்யத்திற்கு இடம் குறுகிவிட்டது. இந்த இடத்திலும் விஷால் தன்னை நிலை நிறுத்தியுள்ளது, அவரது தனித்தன்மையைக் காட்டுகிறது.

வெகுஜன கதாநாயகன் ஆக வேண்டுமானால் இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என விஜய் தொடங்கி, அனைத்துக் கதாநாயகர்களும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால் படைப்பாற்றல் இன்னும் கூட அதிகரிக்கும்.

நன்றி: தமிழ் சிஃபி

No comments: