!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ் சிஃபி: கணப் பொழுதில் மறைந்த கனமான தளம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, February 07, 2009

தமிழ் சிஃபி: கணப் பொழுதில் மறைந்த கனமான தளம்

செலவைக் குறைக்கும் நோக்கத்துடன் சிஃபி நிர்வாகம், தமிழ் உள்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய தன் அனைத்து வட்டார மொழித் தளங்களையும் 6.2.2009 அன்று மதியம் முன்னறிவிப்பு இல்லாமல் மூடிவிட்டது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக தமிழ் சிஃபிக்குப் பல்வேறு புதுமைமிகு ஆக்கங்களின் மூலம் வலிவும் பொலிவும் சேர்த்த நினைவுகள் மட்டுமே இப்போது என்னிடம் எஞ்சியுள்ளன.

ஒருங்குறிக்கு (யூனிகோடு)க்குத் தமிழ்சிஃபியை மாற்றிடத் தூண்டினேன். அதன் தொடர்ச்சியாகத் தெலுங்கு, மலையாளம் மொழித் தளங்களும் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டன.

மாலன் | வெங்கட் சாமிநாதன் | மலர் மன்னன் | நாகேஸ்வரி அண்ணாமலை | மறவன்புலவு சச்சிதானந்தன் | சக்தி சக்திதாசன் | விமலா ரமணி் | கே.ஆர். மணி | ஆமாச்சு | மதுமிதா | ரமணன் | ராசி அழகப்பன் | பாக்கியம் ராமசாமி | நேசகுமார் | பி.கே.சிவகுமார் | கல்யாணி வெங்கட்ராமன் | விசாலம் | தமிழ்த்தேனீ | ஹெச். ராமகிருஷ்ணன் | ஆல்பர்ட் பெர்னாண்டோ | ஆர்.செல்வக்குமார் உள்ளிட்ட பலரின் பத்திகள், வாசகர்களுக்குப் பெரும் விருந்து அளித்தன.

நா. கண்ணன் | ஆர்.எஸ். மணி | ஷைலஜா | சுகதேவ் | வ.ஐ.ச. ஜெயபாலன் | குடவாயில் சகோதரிகள் | ஸ்ரீதேவி ஆகியோரின் ஒலிப் பத்திகள், வாசகர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கின. இணையம் என்பது, எழுத்துடன் முடிவதில்லை; அது பல்லூடகத் தளம் என்ற உணர்வை இவை வழங்கின.

அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழில் அவரின் சுமார் 18 சொற்பொழிவுகளை அவரின் சொந்தக் குரலிலேயே கேட்க வழி செய்தேன்; இதே போன்று 1947இல் நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற போது நேரு ஆற்றிய உரை, ராஜாஜியின் உரை ஆகியவற்றையும் கேட்க வாய்ப்பளித்தேன்.

இசைச் சிறப்பிதழில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை, ஃபியூஷன் எனப்படும் கலப்பிசை, மெல்லிசை... எனப் பலவற்றையும் கேட்டு மகிழும் வண்ணம் வலை ஏற்றினேன்.

கனடாவிலிருந்து ஆர்.எஸ்.மணியின் ஒளிப் பத்தி, மிகவும் தனித்துவமான ஒன்று; தம் மெக்சிகோ பயண அனுபவத்தை 'ஓலா மெக்சிகோ' என்ற தலைப்பில் அவர் வாரந்தோறும் காணொளி வடிவில் (வீடியோ) வழங்கினார். அது மட்டுமின்றி ஒரே நேரத்தில் அவரின் எழுத்து, ஒலி-ஒளிக் கோப்பு, ஓவியம், புகைப்படம், பின்னணி இசை ஆகிய அனைத்தும் சேர்ந்த பல்லூடகப் பத்தியாக இது மலர்ந்தது. அந்த வகையில் தமிழ் இணையத்தில் இதுவே முதல் முயற்சி.

கொரியாவிலிருந்து நா.கண்ணன் வாரந்தோறும் ஒலிப் பத்தி வழங்கினார். உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின்போது அவர் ஒவ்வோர் ஆட்டம் குறித்தும் தன் சொந்தக் குரலில் கருத்துகள் உரைத்தார். தக்க பின்னணி இசை சேர்த்தார். நேரப் பற்றாக்குறை உள்ளவர்கள், நேரடியாகப் பேசியே அனுப்பலாம் என்ற என் தூண்டுதலின் பேரில் இந்த ஒலிப் பத்தி வெற்றிகரமாக நடைபெற்றது.

வடக்கு வாசல் மாத இதழின் இணையப் பதிப்பைக் கொணர்ந்தேன்.

வாசகர்களின் கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்களைப் பெற்று அனுப்பினேன். வாஸ்து தொடர்பான நிறைய கேள்விகளுக்கு விசாலம் பதில் அளித்தார். இதய மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கு இதய மருத்துவர் செங்கோட்டுவேல் பதில் அளித்தார்.

சிறுவர் சிறப்பிதழை ஆண்டுதோறும் தயாரித்தேன். இணையம், பெரும்பாலும் பெரியவர்களுக்கு மட்டுமே உரிய தளமாக உள்ளது; இதில், சிறுவர்களுக்கான வெளியை இந்தச் சிறப்பிதழ்கள் அதிகரித்தன.

'உலக நாடுகளில் தமிழ்' என்ற கருவில் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்தேன். இதில் உலகின் சுமார் 20 நாடுகளில் தமிழ் எவ்வாறு உள்ளது என்பதை அந்தந்த நாட்டில் வாழும் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதுவித்தேன்.

இப்படியாக 60 சிறப்பிதழ்கள்; ஒவ்வொரு சிறப்பிதழிலும் பல்வேறு புதுமைகள். பல்வேறு விவாதங்கள், கருத்து மோதல்கள், சுவையான அனுபவப் பகிர்வுகள்... எனக் கண்டும் கேட்டும் வாசித்தும் மகிழத்தக்க பல்லாயிரம் பக்கங்களை என் கரங்களின் வழியாக அரங்கேற்றினேன்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், பாடகர்கள்... எனப் பலரையும் அறிமுகப்படுத்தினேன்.

தமிழ்ச் செய்திச் சேவை (டி என் எஸ்) என்ற புதிய செய்தி முகாமையாளரை அறிமுகப்படுத்தினேன்.

சூடான செய்திகள், சுவையான திரைப்படப் பக்கங்கள், மனோபலம் அளித்த ஆரூடங்கள் (நன்றி: வேதா கோபாலன்)... எனப் பலவும் சேர்ந்து மாதத்திற்கு 30 லட்சம் பக்கங்கள் புரட்டப்படும் தளமாக தமிழ் சிஃபியை உயர்த்தின.

இவை அனைத்தும் கணப்பொழுதில் மறைந்துவிடும் என்பதை எவரேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால், அப்படித்தான் நிகழ்ந்துவிட்டது.
இணையத்தில் ஏறியவை, நிலைபேறு அடையும் என்ற கருத்து, ஒரு நீர்க்குமிழி போல் உடைந்துவிட்டது. வாழ்க்கை நிலையற்றது என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு, இது.

இந்தத் தருணத்தில் என் வேண்டுகோளை மதித்து, படைப்புகள் அனுப்பிய, பங்களித்த அனைத்து நல்ல உள்ளங்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

என்னை சிஃபிக்கு ஆற்றுப்படுத்திய ஆர்.வெங்கடேஷ், இந்தக் காலத்தில் என் உதவியாளர்களாகப் பணியாற்றிய வெங்கட சுப்பிரமணியம், ஞானசுந்தர், சிவகுமார், அமிர்தராஜ், நூருல், ஜோசப் ஆகிய அனைவருக்கும் உள்ளன்போடு நன்றி நவில்கிறேன்.

சிஃபியின் இதர மொழித் தளங்களின் ஆசிரியர்கள், அலுவலக சகாக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்லூடகப் பிரிவினர், தரப் பரிசோதகர்கள், வணிகப் பிரிவினர், நிதிப் பிரிவினர்... என அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் நிகில், ஜான்சன், ஜான், பாலன், சிவா, ஜேம்ஸ் ஆகியோருக்கும் நன்றி.

தமிழ் சிஃபியை 2005ஆம் ஆண்டின் சிறந்த வலை மனையாகத் தேர்ந்தெடுத்த அமரர் சுஜாதாவுக்கும் நன்றி.

கனவுகள் இன்னும் மிச்சமிருக்கின்றன; காலமும்கூட.

14 comments:

செல்வமுரளி said...

அன்பின் சகோதரருக்கு

உங்கள் ஆர்வத்தைஅளப்பரியது என்பதை நாங்கள் அறிவோம். நிச்சயம் உங்கள் முயற்சிகள் பேசப்படும்.

யூர்கன் க்ருகியர் said...

பெரிய இழப்பு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திரு. அண்ணாக்கண்ணன்,
சிபி இல்லாதது ஓர் இழப்புதான்!
உங்கள் பணி பாராட்டத்தக்கது.
உங்கள் தமிழ்ப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

பிச்சைப்பாத்திரம் said...

அண்ணா கண்ணன்

வருத்தமான செய்தி. எதுவுமே முடிவு அல்ல. இன்னொன்றின் ஆரம்பம்தான்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

:(

unlimited bandwidth காலத்தில் ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தையாவது அப்படியே விட்டு வைத்திருக்க இயலாதா?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இணைய எழுத்து எந்த அளவு நிலைத்தன்மை உடையது?

Deepa said...

Hi Anna Kanna
Dont feel sorry abt Tamil Sify
Sify is not lucky enough to have such a wonderful editors like u

ஸ்வாதி said...

மிகவும் கவலையளிக்கிறது ;உங்கள் மனநிலையையும் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. சிஃபியின் சிறப்பிதழ்கள் ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவையாவது மீண்டும் படிக்கக் கூடியதாக விட்டிருந்தால் மிகவும் நல்லது தான். இன்னொரு நண்பர் கூறியிருப்பது போல் உங்களைப் போன்ற நடத்துனரை அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். கவலையை விடுங்கள்... எல்லாம் கைகூடி நல்லது நடக்கும்.

அன்புடன்
சுவாதி

Anonymous said...

sorry to hear about this. at least they could have given u time. are all the articles lost? really sad that there is no record of the rare articles and columns.

Anonymous said...

this is bad news, sad news, deadly news, cheap news, sorrow news, news, flash news, breaking news, crazy news, unknown news, big news, hot news, old news, no news

Anonymous said...

Hi

we have only last the articles in web named tamil.sify.com, the experiances you had while you collected is with you still. Rewind all the ways to publich your own web page for this great Tamil Literary. Though chandilyan's work is not nationalised, he still own lot of readership for his stories, you are one such rare diamond, which is yet to be recognized.

Mashook Rahman said...

sir,
I saw about your blog in Makkal TV. I write poems in Tamil and I've also written songs for AR Rahman sir. I'd like to post some of my poems in your blog. Where and how should I post them. Please let me know

Amruthi Siddha Medicine said...

hi kannan,
all the best for your future projects
priya

கொற்றவை said...

thiru. aNNaa kannan avargaLae ungaLukku Koadi murai nandri sonnaalum paththaadhu. neengaL thuvakki vaiththa en kavidhai paNi indru Vaegamaaga munnaeRik kondirukkiradhu...20kkum maerpatta kavidhaigaL ezhudhivitTaen..katturaigaLum ezhidhi varugiRaen.