இந்தியா முழுவதும் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கு எந்திரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அது தொடர்பான புகார்களும் நீள்கின்றன. பண அட்டையாளரை மிரட்டிப் பணம் எடுத்துக் கொள்ளை; ஏடிஎம்மில் கள்ள நோட்டுகள்; பண அட்டைகள், எந்திரத்தில் மாட்டிக்கொள்ளுதல்; ஒரு முறை விவரங்களை உள்ளிட்டுப் பணம் வராததால் அடுத்த முறை மீண்டும் விவரங்களை உள்ளிட்டால் கணக்கில் இரு முறை பணம் கழிந்தது.... எனப் பல வகைப் புகார்கள். இவை அல்லாமல் வேறு பல சிக்கல்களும் உள்ளன.
ஏடிஎம் வங்கிச் சேவையைத் தொடங்கியதிலிருந்தே வங்கிகள் ஒர் எச்சரிக்கையை விடுத்து வருகின்றன. உங்கள் தனி அடையாள எண்ணை (PIN - Personnel Identification No.) எவரிடமும் சொல்லக் கூடாது. எங்கும் எழுதி வைக்கக் கூடாது. எவரையும் விட்டு பணம் எடுத்துவரச் சொல்லக் கூடாது... எனப் பல அறிவுரைகள்; பத்திரிகைகளில் விளம்பரங்கள். ஆனால், ஏடிஎம் மையங்களின் வடிவமைப்பு, அவர்களின் அறிவுரைகளுக்கு மாறாக உள்ளது.
அண்மையில் புகழ்பெற்ற வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றேன். இந்த வங்கியின் மையங்களில் தொலைபேசி வங்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. சுவரில் சுமார் 5 அடி உயரத்தில் ஒரு தொலைபேசி நெடுக்குவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது. அதை எடுத்து ஒரு சேவை தொடர்பாக அவர்களை அழைத்தேன். தானியங்கிக் கருவி என்னைச் சோதிக்கும் முகமாக, என் பண அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அடுத்து, என் தனி அடையாள எண்ணை உள்ளிடச் சொன்னது. உள்ளிட்டேன். அப்போது அந்த அறையில் உள்ள மூன்று பண எந்திரங்களிலும் பணம் எடுக்க ஆட்கள் நின்றிருந்தார்கள். காசோலை இடுகிறேன் என இன்னும் இருவரும் நின்றிருந்தார்கள். காவலர் ஒருவரும் வாயிலில் நின்று கவனித்துக்கொண்டிருந்தார். கதவுக்கு வெளியே ஓர் இருபது பேருக்கும் மேலாக வரிசையாக நின்றிருந்தார்கள். கண்ணாடிக் கதவு. வெளியே நிற்பவரும் உள்ளே நடப்பதைத் துல்லியமாகக் கவனிக்க முடியும்.
சுவரில் எல்லோரும் பார்க்கும் படியாக அமைந்திருந்த தொலைபேசியில் என் தனி அடையாள எண்ணை உள்ளிட்டுள்ளேன். அந்தக் கணத்தில் உள்நின்றவர்களும் கதவுக்கு வெளியே நின்றிருந்தவர்களும் என் தனி அடையாள எண்ணை எந்தச் சிரமமும் இல்லாமல் எளிதில் பார்த்திருக்க முடியும். அதன் பிறகே அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.
தொலைபேசி வங்கிச் சேவையில் தானியங்கிக் கேள்விகளுக்கு இந்த 16 இலக்க எண்ணும் தனி அடையாள எண்ணும் போதுமானது. அடுத்து நான், வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு அதிகாரியிடம் பேச விரும்பினேன். அவர் தொடர்பில் வந்ததும் என்னைச் சோதிக்கும் முகமாக, என் பிறந்த நாள், என் விண்ணப்பத்தில் நான் அளித்த கமுக்கப் பதில்கள் சிலவற்றைக் கேட்டுப் பெற்றார். நான் கூறிய பதில்களை அந்நேரம் அங்கு இருந்த அனைவரும் கேட்டிருக்க முடியும். இதுவும் அபாயமானது.
(இந்த ஆபத்து, ஏடிஎம் மையங்களில் மட்டுமின்றி, பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ளது. வீட்டில் நம் தனியறையில் இப்படி பேசலாம். அலுவலகத்திலோ, பொது தொலைபேசி மையங்களிலோ, இன்ன பிற பொது இடங்களிலோ தொலைபேசி வழி வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் உண்டு. இந்தக் கோணத்தில் வங்கிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்).
ஐசிஐசிஐ வங்கி, திடீரெனத் தன் ஏடிஎம் மையங்களில் உள்ள தொலைபேசி வசதியைத் திரும்பப் பெற்றுவிட்டது. இது குறித்து எந்தத் தகவலோ, விளக்கமோ இல்லை.
================================
இது குறித்து ICICI வங்கியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு 28.9.2008 அன்று நான் எழுதிய மடல் இது:
I want to know why u have disconnected all the telephone lines at ur ATMs?
Why u didn't informed about this to ur customers? Even ATM security person don't know why it was disconnected?
When u r going to give again?
================================
இதற்கு 30.9.2008 அன்று Jagdish P., Customer Service Manager, ICICI Bank Limited அளித்த பதில் வருமாறு:
Dear Mr. Kannan,
We understand your concern.
We are deeply concerned with the issues raised by you in your e-mail. We would like to assure you that all our customers are important to us and your feedback will aid us in introspection and improvements in our processes.
Kindly note all the telephone lines are removed from ATM's as the same is a business decision.
Looking Forward to your co-operation in helping us to serve you better.
================================
வேறு ஓர் ஆபத்தும் ஏடிஎம் மையங்களில் உள்ளது. அங்கு பணம் எடுக்க விரும்புவோர், வரிசையில் நிற்கிறார்கள். பெரும்பாலான மையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பண எந்திரங்கள் உள்ளன. வாயிற் காவலர், கண்ணாடி அறைக்குள் ஒரே ஒருவரை விடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நேரத்தில் ஒரு கண்ணாடி அறைக்குள் மூவர் பணம் எடுக்கிறார்கள். பண எந்திரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் அமைப்பின்படி ஒருவர் தன் தனி அடையாள எண்ணை உள்ளிடுவதை அடுத்தவரால் எளிதில் பார்த்துவிட முடியும்; அவர் தன் உடலால் மறைத்துக்கொண்டாலும்கூட ஓரங்கள் மூலம் அதைக் காண முடியும். காசோலை இடுவதற்காக வருபவர், சர்வ சாதாரணமாக இதைப் பார்க்க முடியும்.
நடப்பில் கண்ணாடி அறைக்குள் பணம் எடுப்பவரும் அவர் உடன் வந்தவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். கணவன் - மனைவி, அப்பா/அம்மா - மகன்/மகள், பெரியவர்களுக்கு உதவ இளையவர்கள், நண்பர்கள், காதலர்கள்... என இருவர் தாராளமாக அந்த அறைக்குள் செல்கிறார்கள். ஒருவர் பணம் எடுக்கையில் அடுத்தவர் என்ன கண்ணை மூடிக்கொண்டோ, வேறு பக்கம் பார்த்துக்கொண்டோவா இருக்கிறார்கள். ஆக, உள்ளே சென்ற இன்னொருவருக்கும் தனி அடையாள எண் தெரிந்துவிடும்.
கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரும் சற்று கூர்மையாகக் கவனித்தால் உள்ளே இருப்பவரின் விரலசைவுகளைக் கொண்டே அவரின் கமுக்க விவரங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். எல்லோரிடமும் செல்பேசி உள்ளது. பெரும்பாலான செல்பேசிகளில் புகைப்படக் கருவி உள்ளது. கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற விதி இருப்பினும் பல இடங்களில் இது மீறப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், கண்ணாடி அறைக்குள் செல்பேசியில் பேசவே வேண்டாம். கையில் எடுத்துச் சென்றாலே போதும். உள்ளே செல்வதற்கு முன்பே செல்பேசியில் வீடியோவை ஆன் செய்துவிட்டுச் சென்று, உள்ளே சும்மா செல்பேசியைக் கையில் வைத்திருப்பது போலவோ, குழந்தையின் கையில் செல்பேசியைத் தந்தோ உள்ளே நடப்பதை, வாடிக்கையாளரின் பேச்சை, அவரின் விரலசைவுகளின் மூலமாக அவரின் கமுக்க எண்ணை எளிதில் பதிந்துவிட முடியும். கையில் செல்பேசி எடுத்துச் செல்வதைத் தடுத்தாலும் ஒருவர் தன் சட்டைப் பையில் செல்பேசியை வைத்தே இதைச் செய்ய முடியும்.
இது சாதாரண செல்பேசியை மையப்படுத்திய அபாயம் மட்டுமே. Hidden camera எனப்படும் மறைவாக எடுத்துச் செல்லும் வீடியோ கருவிகளை ஓர் எழுதுகோல் வடிவத்திலோ, மூக்குக் கண்ணாடி வடிவத்திலோ எடுத்துச் சென்றும் பதிய முடியும். இந்த அளவுக்கு நம் குற்றவாளிகள் முன்னேறவில்லை என்றாலும் இதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஏதும் பை, கைப்பை, பெட்டி... என எந்தப் பொருள் எடுத்துச் சென்றாலும் அதற்குள் மறைத்து எடுத்துச் சென்றும் இதைச் செய்ய முடியும்.
கண்ணாடி அறைக்கு வெளியே இருப்பவரால் கூட, தன் அதிக சக்தி வாய்ந்த செல்பேசி வழியே உள்ளே நடப்பதைக் காட்சிகளாகப் பதிந்துவிட முடியும். ஏன், வரிசையில் கூட நிற்க வேண்டாம். தூரத்தில் நின்றபடியே கூட இதைச் செய்வது சாத்தியம்தான்.
இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுடன் ஏடிஎம் மையங்கள் இருப்பது, எவ்வளவு பெரிய ஆபத்து!! இன்று போலி பண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன எனச் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில், நம் தனி அடையாள எண்ணும் களவாடப்படுமானால் நாம் பாடுபட்டுச் சேர்க்கும் பணத்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இழப்போம்.
ஏடிஎம் மையத்திலிருந்து வெளியே வரும் ஒருவரை மயக்கியோ, ஏமாற்றியோ, தாக்கியோ அவரின் பண அட்டையை ஒருவர் பறிக்கலாம். அவர் அறியாமலே அவரிடமிருந்து ஜேப்படி செய்துவிடவும் முடியுமே. அப்படி நடந்தால், ஏற்கெனவே கமுக்க எண்ணும் தெரிந்த நிலையில் பணத்தை எளிதில் கொள்ளையிட முடியுமே.
இதற்கு முதல் காரணம், ஏடிஎம் மையங்களின் வடிவமைப்பே. உள்ளே நடப்பது வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகக் கண்ணாடிச் சுவர்களை அமைக்கிறார்கள். இது ஒரு கோணத்தில் சரியே. ஆனால், இன்னொரு கோணத்தில் ஆபத்தும் இருக்கிறதே. பல்வேறு வங்கிகளிலும் நிலைமை இதுவே. எல்லா வங்கிகளின் மையங்களிலும் உள்ள வாயிற் காவலர்கள், உள்ளே நடப்பதைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பண அட்டை பயன்படுத்தும் புதியவர்கள், அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாயிற் காவலர்களோ, பக்கத்தில் பணம் எடுத்துக்கொண்டிருக்கும் வேறு புதிய நபரோ தான் உதவுகிறார். அட்டையைச் செருகுவது, தனி அடையாள எண்ணை அழுத்துவது, எவ்வளவு பணம் தேவை என எண்களை அழுத்துவது... என ஒவ்வொரு கட்டத்தையும் இவர்களே சொல்லித் தருகிறார்கள். இதுவும் ஒரு கோணத்தில் நன்மையே. ஆனால், இன்னொரு கோணத்தில் இன்னொரு நபருக்கு அந்த எண் தெரிந்து விடுகிறதே.
வங்கிகள், உங்கள் தனி அடையாள எண்ணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருங்கள் என்று வேறு எச்சரிக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? எங்காவது எழுதி வைப்பதும் சிக்கலே.
இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கச் சில வழிமுறைகள் என்னிடம் உள்ளன.
முதலாவதாக, பண எந்திரத்தின் முன் நிற்பவரின் விரலசைவுகளைப் பின்னாலும் அருகிலும் இருப்பவர் பார்க்க முடியாத வகையில் ஒரு மூடி அமைக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும்படி இல்லாவிட்டாலும் இடுப்பு முதல் கழுத்து வரையிலான பகுதியாவது அந்த மூடியினுள் மறைய வேண்டும். அது சதுரக் கதவாக, அரை வட்டக் கதவாக இருக்கலாம். மரம், பிளைவுட், அலுமினியம், கனத்த கண்ணாடி என எதனாலும் இந்த மறைப்பு அமையலாம்.
தொலைபேசி வங்கிச் சேவையை இந்த மையங்களில் வழங்குவோர், அதற்கெனத் தனிக் கூண்டு வைப்பது நல்லது. பொது தொலைபேசி மையங்களில் (PCO) இருப்பது போல் தனி அறைகள் அமையலாம். அங்கும் அவரின் விரலசைவுகள் வெளியே தெரியாத வண்ணம் மறைப்பு இருக்க வேண்டும். மேலும் அவரின் குரலும் வெளியே கேட்கக் கூடாது.
ஏடிஎம் மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோரை அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராக, அந்நியோன்யம் கொண்டவராக இருந்தாலும் வாடிக்கையாளர்களும் சரி; காவலர்களும் சரி; இதில் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
அவரின் பை, கைப்பை உள்ளிட்ட எந்தப் பொருளானாலும் வெளியே வைக்கச் சொல்ல வேண்டும். ஆலயங்களில் செருப்புகளைப் பாதுகாப்பது போல் ஏடிஎம் மையங்களின் வெளியேயும் பொருட் பாதுகாப்புப் பிரிவுகளை அமைக்க வேண்டும். அங்கு வைத்துவிட்டுச் செல்லுவோருக்குக் கட்டணம் விதிக்கலாம்.
ஏடிஎம் மையங்களில் செல்பேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை எடுத்துச் செல்லவே அனுமதிக்கக் கூடாது. விமான நிலையங்களில் மின்னணுப் பொருள்கள் உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனச் சோதனையிடுவது போல் இங்கும் சோதிக்க வேண்டும்.
ஏடிஎம் மையங்களின் கண்ணாடிச் சுவர்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் களைய வேண்டும். வெளியே இருப்பவர் உள்ளே பார்க்க வசதியாகக் கண்ணாடிச் சுவர்கள் உதவுகின்றன. உள்ளே திருட்டுத்தனம் நடந்து, அதை வெளியே இருக்கும் காவலர் கண்டறிய வசதிதான். ஆனால், வெளியே இருக்கும் தீய நோக்கம் கொண்டவர் வேறு கோணத்தில் பார்க்கவும் உதவுகிறதே. பேசாமல் இந்தக் கண்ணாடிச் சுவர்களில் கருந்திரையை (Sun glass போல்) ஒட்டினால் என்ன? இப்படிச் செய்தால், உள்ளே இருப்பவர், வெளியே பார்க்கலாம். வெளியே இருப்பவர் உள்ளே அவ்வளவு துல்லியமாகப் பார்க்க முடியாது.
இவையெல்லாம் தற்காலிமான தீர்வுகளே. கமுக்க எண்ணை உள்ளிடுவது என்ற முறையையே மாற்றுவது அடுத்த தீர்வு. உலகின் பல பகுதிகளில் கைரேகைகளையே அவரின் கமுக்க அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள். கட்டை விரலையோ, முழு உள்ளங்கையையோ இப்படிப் பயன்படுத்தும் விதத்தில் நம் ஏடிஎம் மையங்களை மாற்றியமைத்தால் என்ன? இந்த முறையில் கமுக்க எண்ணைப் பாதுகாப்பதில் உள்ள அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்துவிடுகின்றனவே. ஒவ்வொருவருக்கும் கைரேகை உறுதியாக வேறுபடும். எனவே பாதுகாப்பானது.
தொலைபேசி வழி வங்கிச் சேவை குறித்தும் வங்கிகள் தீவிர அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். செல்பேசி, தரை வழி தொலைபேசி வழியே பல்வகைக் கட்டணங்களைக் கட்டவும் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் வங்கிகள் வசதி அளித்து வருகின்றன. செல்பேசியை ரீசார்ஜ் செய்யவும் வசதி உண்டு. இந்நிலையில் அந்தத் தொலைபேசி உரியவரால்தான் இயக்கப்படுகிறது என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
பண அட்டை பயன்படுத்தும் புதியவர்களுக்காக, எல்லா ஏடிஎம்களிலும் ஒரு மாதிரிக்குப் பொம்மை எந்திரம் வைக்கலாம். பள்ளி மாணவர்களுக்கும் இதில் நேரடிப் பயிற்சி அளிக்கலாம். சரியாக விவரங்களை உள்ளிட்டால் 'பாராட்டுகள்! நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள்' எனத் திரையில் வருமாறு செய்யலாம். தவறாக விவரங்களை உள்ளிட்டால் 'மன்னியுங்கள். தவறான பயன்பாடு. மீண்டும் முயலுங்கள்' எனத் திரையில் வரச் செய்யலாம். அந்த எந்திரத்தில் புதியவர் நேரடியாகச் செய்து பழகலாம். கல்வியறிவு இல்லாத கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் அவர்களையும் சேர்த்து நம் வங்கியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
இதை நீதிமன்றங்கள், நுகர்வோர் அமைப்புகள், வங்கிகள் அனைத்தும் உடனடி கவனத்தில் எடுத்துக்கொண்டு ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இதற்கென வல்லுநர் குழு அமைத்து மேலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் கடின உழைப்பில் விளைந்த பணத்தில் அணுவின் கூறளவும் சேதமாகிவிடக் கூடாது.
==============================
நன்றி: சென்னை டைஜஸ்ட், ஜனவரி 30, 2009
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, April 30, 2009
'ஏடிஎம் / போன் பேங்கிங்' அபாயங்கள்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:26 PM
Labels: பொது, பொருளாதாரம், யோசனைகள், வங்கியியல்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பயனுள்ள பகிர்வு.
நன்றிகள்.
உபயோகமான நல்ல பதிவு. வாழ்த்தி வரவேற்கிறேன்.
- தமிழ்நாட்டுத்தமிழன்.
சிறந்த தீர்வுகள்
பாராட்டுக்கள்
பின் எண்ணுக்குப்பதில் கைரேகை என்பது மிகவும் அவசியமான ஒன்று
Post a Comment