(திவாகர் - அண்ணாகண்ணன் இடையே நிகழ்ந்த சிறு அரட்டை)
diwakar.k: hi, one doubt. what is "appa takkar" in tamil
Anna: usage in which sentence?
diwakar.k: i've listen through one movie
Anna: ஆஹா அருமை என்பது போல் இருக்கலாம்
diwakar.k: no it comes like this
"nee enna avvalo peria appa takkar aaaaaa"
Anna: டாப் டக்கர் எனக் கேள்விப்படுகிறோம் இல்லையா? அதில் டாப் என்பதை அப்(UP) என்று கொண்டால், UPஆ, டக்கரா? எனக் கேட்கலாம்.
diwakar.k: sir super sir
Anna: :-)
diwakar.k: but its a single word... appatakkar
Anna: முதலில் அப்படி ஆரம்பித்து, பின்னர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.
diwakar.k: ok.
Anna: 'ஹப்பா டக்கர்' என்பதே பின்னர், 'அப்பா டக்கர்' ஆகியிருக்கலாம்.
Sent at 5:04 PM on Monday | 20.09.2010
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, September 21, 2010
அப்பா டக்கர் என்றால் என்ன?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:56 AM 6 comments
Labels: அரட்டை
Thursday, September 02, 2010
சென்னைக் கீற்றுகள்
அண்மையில் சென்னையில் நான் பங்கேற்ற நிகழ்வுகள் சிலவற்றை இங்கே பதிகிறேன்
சென்னை பெரியார் திடலில் 26.08.2010 அன்று நிகழ்ந்த பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1794ஆம் நிகழ்வுக்குச் சென்றேன். ஒரிசா சிவ.பாலசுப்பிரமணியன் பி+, ‘குமரிக் கண்ட கடலியல் ஆய்வுகள்’ என்ற தலைப்பில் காட்சியுரையுடன் பேசினார். கடலில் தமிழர் நிலத்தின் பல பகுதிகள் மூழ்கியுள்ளன என்றும் அது தொடர்பான தம் ஆய்வின் வளர்ச்சிப் போக்குகளையும் எடுத்துரைத்தார். கடலில் ஆமைகளைப் பின்தொடர்ந்து தமிழர்கள் சென்றனர் என்றார். உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைச் சான்று காட்டினார்.
மக்களின் நம்பிக்கைகளையும் பதிந்தார். தேரி மண் கொண்ட மக்களிடம் உங்கள் மண் ஏன் சிவந்துள்ளது எனக் கேட்டதற்கு, கடலில் உள்ள ஒரு தீவு பொசுங்கியதால் அந்த வெப்பத்தில் இந்த மண் சிவந்துவிட்டது எனக் கூறினார்களாம். தமிழகக் கடலோரத்தை ஒட்டி, எரிமலை இருந்ததற்கான வாய்ப்புகளை மறுக்க இயலாது என்றார்.
========================================
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 28-08-2010 அன்று நடந்த கட்டற்ற தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கில் பங்கேற்றேன். காட்சியுரையுடன் சொற்பொழிவு்கள் அமைந்தன. கட்டற்ற மென்பொருள்களை அடுத்து எந்தெந்தத் துறைகளுக்கு விரிவாக்கலாம் என மா.சிவகுமார் அடையாளம் காட்டினார். குமரகுருபரர் கல்லூரி மாணவர்கள் தமிழ் சார்ந்த சில திட்டங்களை மேற்கொண்டு வருவதை முனைவர் முத்துக்குமார் கூறினார்.
உரை-ஒலி, ஒலி-உரை மாற்றி, எழுத்துணரி, எழுத்துப் பெயர்ப்பு – மொழிபெயர்ப்பு, கட்டற்ற தமிழ்த் தரவு…. உள்ளிட்ட தலைப்புகளில் பலரும் உரையாற்றினர். ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் (ஆமாச்சு) ஒருங்கிணைத்தார். என் ஆலோசனைகள் சிலவற்றையும் வழங்கினேன்.
இந்த நிகழ்வு தொடர்பான நிழற்படங்கள் இங்குள்ளன:
* http://www.flickr.com/photos/saga123/archives/date-taken/2010/08/28/
* http://picasaweb.google.com/viky.nandha/TamConf?authkey=Gv1sRgCOOSg5aGjfnyjAE
========================================
எழுத்தாளர், நண்பர் ஜெயகுமார் (கார்கில் ஜெய்) – ஜெயலட்சுமி (ஜெயா) ஆகியோரின் திருமண வரவேற்பு, சென்னை நங்கநல்லூரில் 2010 ஆகஸ்டு 28 அன்று மாலை நடைபெற்றது. நான் நேரில் சென்று வாழ்த்தினேன். 29 அன்று காலை இவர்களின் திருமணம் நடைபெற்றது. இளம் இசைக் கலைஞர் ஒருவர் சிறப்பாகக் கீபோர்ட் வாசித்தார்.
========================================
எழுத்தாளர், நண்பர் ஜே.எஸ்.ராகவனின் மகன் பாலச்சந்தர் – கிருத்திகா ஆகியோரின் திருமண வரவேற்பு, சென்னையில் 30.08.2010 அன்று நடந்தது. என் அம்மாவுடன் நேரில் சென்று வாழ்த்தினேன். அடாது மழை பெய்தாலும் விடாது சென்று வாழ்த்தினோம். நண்பர்கள் பலரையும் சந்தித்து மகிழ்ந்தேன்.
========================================
எழுத்தாளரும் ஊடக நண்பருமான இரா.நாகப்பனின் தங்கை ரேவதி – பூபாலசந்திரன் ஆகியோரின் திருமணம், 27.08.2010 அன்று நடந்தது. அதற்கு நேரில் செல்ல இயலாமையால், 30.08.2010 அன்று, அவர்களின் வீட்டிற்குச் சென்று நானும் என் அம்மாவும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.
========================================
அம்பத்தூர் கம்பன் கழகத்தி்ன் 20ஆம் நிகழ்ச்சி, 31.08.2010 அன்று மாலை நிகழ்ந்தது.
முனைவர் சங்கீதா பழனி, ‘இளைஞர்க்குக் கம்பன்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். குடி இன்பமே குடும்பம் ஆயிற்று எனப் போகிற போக்கில் கூறிச் சென்றது, புதுமை. அன்பு, ஒழுக்கம், விருந்தோம்பல்… உள்ளிட்ட சிலவற்றைக் கம்பனிடமிருந்து இளைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என எளிய கதைகளுடன் பேசினார்.
பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ‘கம்ப சூத்திரம்’ என்ற தலைப்பில் சொற்பெருக்கு ஆற்றினார். கம்பன், முடிச்சினை ஓரிடத்தில் இட்டுவிட்டு, அதனை அவிழ்க்கும் விதத்தினை ஆறாயிரம் பாடல்களுக்கு அப்புறம் வைத்துள்ளான் என்றார். இதற்குச் சில எடுத்துக்காட்டுகளையும் அழகுற விரித்துரைத்தார். கம்ப ராமாயணத்தை உரை வழியே அல்லாது. மூலத்தி்ல் படித்துப் புரிந்துகொள்ளும் தம் வழக்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.
மண் என்பது இறுகியது; அவ்வாறு அல்லாதது (மண் + அல்) மணல்; ஊழ் என்பது விதிப்படி நடப்பது; விதிப்படி அல்லாதது (ஊழ் + அல்) ஊழல் என்ற அவரின் விளக்கம் அருமை.
அது போன்றே, சத்தியம் என்பது இயல்பாக இருப்பது. அதனை வாயால் உரைப்பது வாய்மை; உள்ளத்தால் உரைப்பது உண்மை; மெய்யால் (அதாவது செயலால்) உரைப்பது மெய்மை என்றார். வாய்மை, உண்மை, மெய்மை ஆகிய மூன்றும் இணைந்ததே சத்தியம் என்பதை எளிமையாக விளக்கினார்.
கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ.பழனியப்பன், வரவேற்புரை ஆற்றினார். செல்வி சரண்யா இறை வணக்கம் இசைத்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஒப்பித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்குப் பர்வீன் சுல்தானா பரிசுகளை வழங்கினார்.
========================
http://www.vallamai.com/?p=688
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:53 PM 0 comments
Labels: நிகழ்வுகள்
யோசனை 7: திருமண மண்டப வாயிலில் வாழை மரங்கள்
(அகவழி 7)
விழாக்களின் போது, வாயிலில் வாழை மரத்தினைக் கட்டுவது, தமிழர் வழக்கம். வீடுகளிலும் ஆலயங்களிலும் திருமண மண்டபங்களிலும் தொழிலகங்களிலும் இன்னும் விழாக்கள் நிகழ்கிற எல்லா இடங்களிலும் இது முக்கிய பங்கினை வகிக்கிறது.
திருமணம் நிகழ்கிற இடங்களில், கன்றுகள் ஈன்று, குலை தள்ளிய வாழையினைக் கட்டுவது, ஒரு குறியீடாகக் கருதப் பெற்றிருக்கலாம். இந்த வாழையினைப் போன்று, மணமக்களும் பிள்ளைகள் பெற்று, வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழட்டும் என்ற வாழ்த்தாகவும் அது இருக்கலாம். நாளடைவில் இந்த வழக்கம், திருமணத்தினைத் தாண்டி, அனைத்துச் சுப நிகழ்ச்சிகளுக்குமாக நீண்டிருக்கலாம்.
குலை தள்ளிய வாழையினை கட்ட வேண்டும் என்ற மரபினை மீறி, ஆயுத பூஜையின் போது, இரு சக்கர வாகனங்கள், மகிழுந்து, பொதியுந்து.... உள்ளிட்ட வாகனங்களின் முகப்புகளின் வாழைக் குருத்துகளைக் கட்டி வைக்கிறார்கள். இது, முன்னோரின் நோக்கத்திற்கு மாறானது. இத்தகைய செயல், வாழையை வெறும் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறது.
வீடுகள், தொழிலகங்களில் எப்போதாவது ஒரு முறைதான் விழா நிகழ்கிறது. ஆனால், திருமண மண்டபங்களில் நாள்தோறும் விழாக்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கே நாள்தோறும் புதிதாக வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வந்து கட்டி வைக்கிறார்கள். முதல் நாள் கட்டப்பெற்ற வாழை மரமானது, அடுத்த நாள் ஒரு குப்பையாக வீசப்படுகிறது. பெரும்பாலும் தெருவில் திரியும் மாடுகள், அவற்றின் இலைகளைத் தின்னுகின்றன.
இந்த வாழை மரங்களை அவை வளர்ந்த இடத்திலிருந்து வெட்டி, திருமண மண்டபத்திற்குக் கொண்டு வரும் காட்சியை நீங்கள் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். டிரை சைக்கிள் எனப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் படுக்கை வாட்டில் வைத்துக் கட்டப்படும். வாழையிலைகள் கொண்ட தலைப்பகுதி, வண்டியை விட்டு வெளியில் தொங்கிக்கொண்டிருக்கும். அவை தரையில் தேய்ந்தபடி, புழுதியில் புரண்டபடி, அலங்கோலமாக வந்து சேரும். பிறகு, அவற்றைத் தூக்கிக் கட்டி, தண்ணீர் தெளித்து விடுவார்கள். இப்படித்தான் அந்த மங்கலச் சின்னம், எல்லோரையும் வரவேற்க வருகிறது.
வாயிலில் துவார பாலகர்களைப் போல நிற்கும் இவை, எவ்வளவு ரணங்களைத் தம்முள் கொண்டிருக்கும் என எளிதில் கணிக்கலாம். கால் வெட்டப்பட்டு, உடல் கட்டப்பட்டு, இலை கிழிந்து நிற்கிற இவை, ஒரு சடங்காக அன்றோ மாறிவிட்டன?
இதற்கு மாற்று வழி என்ன எனச் சிந்தித்தபோது, இந்த யோசனை பிறந்தது.
திருமண மண்டபங்களின் வெளியே, முதன்மை வாயிற் கதவின் ஓரத்தி்ல், நிலையாக இரண்டு வாழை மரங்களை நட்டு வளர்த்து விடலாமே! அவை எல்லா நாட்களிலும் மங்கலச் சின்னமாகத் திகழுமே! தன் கன்றுகளோடு அவை மகிழ்ந்து சிரிக்குமே! இதன் மூலம் அவற்றுக்கு விலை தந்து, வெட்டி, தரதரவென இழுத்துவந்து, வாயிலில் கட்டும் கொடுமையும் நிகழாது; அதற்கென நேரமும் பணமும் உழைப்பும் செலவிடவும் வேண்டாமே!
மாடுகள் வந்து தின்னாவண்ணம், ஒரு வேலியிட்டால் போதும். வாசல் தெளித்துக் கோலம் போடும்போதே, அதற்கும் சிறிது நீர் வார்த்தால் போதும். அல்லது, மண்டபத்தின் கால்-கை கழுவும் தண்ணீரையும் அவற்றில் சேரச் செய்யலாம். இதன் மூலம், கழிவு நீரை அப்புறப்படுத்தும் செலவிலும் சிறிது குறையும். முற்றிய பிறகு அந்த மரத்தின் இலை, பழம், நார்... என அனைத்தையும் மண்டபத்தினரே பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்து மண்டபத்தினர் சிந்திப்பார்களா?
நன்றி: சென்னை லைவ் நியூஸ்
================================
முந்தைய யோசனைகள்:
யோசனை 1 - மழிதகடுகளை என்ன செய்வது?
யோசனை 2 - தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க
யோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள்
யோசனை 4 - கண்ணாடி ஜன்னலில், சூரியத் தகடுகள்
யோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது எப்படி?
யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:49 PM 4 comments
Labels: யோசனைகள்
Subscribe to:
Posts (Atom)