(அகவழி 2)
மும்பை தாஜ், டிரைடன்ட் நட்சத்திர விடுதிகள், சி.எஸ்.டி. தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றில் 26.11.2008 அன்று தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், காவல் துறையினர் உள்பட 180 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுள் பெரும்பாலோனோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதில் உயிர் தப்பிய ஒரே ஆள், அஜ்மல் கசாப். தாக்குதல் நடத்தியவர்களுள் இவரும் ஒருவர் என்பதை வீடியோ ஆதாரம் மூலம் காவல் துறையினர் காட்டியுள்ளனர். இவர் தாமாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததால் காவல் துறையினருக்குக் கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளன. ஆயினும் அந்த வாக்குமூலத்திலும் நிறைய ஐயங்கள் உள்ளன.
ஒருவேளை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 பேரும் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால் நிலைமை இவ்வளவு சிக்கலாக இருக்காது. ஒவ்வொருவரையும் தனித் தனியாக விசாரித்து, நிறைய தகவல்களைப் பெற்றிருக்கலாம். அவர்களை அனுப்பியவர்கள், பின்னணியில் இருப்பவர்கள், எதிர்காலத் திட்டங்கள்... எனப் பலவற்றையும் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், சம்பவ இடத்திலேயே அவர்களைச் சுட்டுக் கொன்றது, காவல் துறைக்குப் பெரும் இழப்பே.
இப்படியான தருணங்களில் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க முடியும் என நான் நம்புகிறேன். அவர்களைத் துப்பாக்கிக் குண்டுகளைக் கொண்டு சுடுவதைக் காட்டிலும் மயக்க ஊசியை அவர்கள் உடலில் தொலைவிலிருந்தே செலுத்தலாம். மதம் பிடித்த யானையைப் பிடிக்க மயக்க ஊசியைத்தான் செலுத்துகிறார்கள்.
ஒருவேளை தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்கும்போது இந்த மயக்க ஊசியை அவர்கள் உடலில் செலுத்த வாய்ப்பில்லை எனக் கருதினால், மயக்கக் குண்டுகளைப் பயன்படுத்தலாம். இப்போது மும்பை தாஜ் விடுதிக்கு உள்ளிருந்து தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்றால் தாஜ் விடுதியின் சுற்றளவிற்கு ஏற்ப, மயக்கக் குண்டுகளை வீசலாம். 100 மீட்டர் சுற்றளவு முதல் ஒரு கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இதை விரிவுபடுத்தலாம். அந்த எல்லைக்குள் அதை நுகரும் எவரும் உடனே மயக்கம் அடையும் விதத்தில் அந்த மயக்கக் குண்டு அமைய வேண்டும். அந்த மயக்கம், 2 மணி நேரம், 4 மணி நேரம், 6 மணி நேரம் என எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டுமோ அவ்வளவு வீரியமுள்ள மயக்கக் குண்டுகளை வீசலாம்.
ஒருவேளை தீவிரவாதிகள், கைக்குட்டை போன்றவற்றால் மூக்கை மூடிக்கொண்டாலும் லேசாக நுகர்ந்தாலும் பாதிப்பு அடையும் வகையில் இந்த மயக்கக் குண்டு சக்தியுடையதாக இருக்க வேண்டும்.
அதே நேரம், மயக்கக் குண்டினை வீசிய 15 நிமிடம் கழித்துக் காவல் துறையினர் அந்தப் பகுதிக்குள் நுழையலாம். அவர்கள், மயக்க மருந்தினால் பாதிக்கப்படாமல் இருக்க, ஆக்சிஜன் முகமூடி ஒன்றைப் பயன்படுத்தலாம். இப்போது, ஒரு துப்பாக்கி குண்டினைக் கூட பயன்படுத்தாமல் ஒட்டுமொத்த தீவிரவாதிகளையும் நாம் கைது செய்துவிடலாம். யாரேனும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தால் அவர்களையும் எளிதாக மீட்கலாம். இதனால் தேவையற்ற உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.
என்கவுன்டர் கொலைகளையும் இந்த வகையில் தவிர்க்கலாம். எந்தத் துப்பாக்கிக் குண்டினைக் கொண்டு அவர்களைச் சுடப் பயன்படுத்துகிறீர்களோ, அதே குண்டினை மயக்க ஊசியாக மாற்றிவிட்டால் போதும். அந்த மயக்க மருந்து, உடல்நலத்திற்குக் கேடாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லைப் பகுதிகள், போர்க்களங்கள் ஆகியவற்றிலும் கூட இதைப் பயன்படுத்தலாம். யார் மயக்கக் குண்டுகளைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் அதற்கு ஏற்ற வகையில் ஆக்சிஜன் முகமூடிகளைத் தயார் நிலையில் வைத்திருந்தால் போதும்.
=================================
படத்திற்கு நன்றி: ராஜா சபை
3 comments:
eppadi ippadi?
:)
1. இந்த மாதிரி மயக்கமருந்தை இருஷ்யாவில் மாஸ்கோவில் ஒரு கட்டடத்தில் இருந்த தீவிரவாதிகளை பிடிக்க பயன்படுத்தி சிக்கல் எழுந்ததே. கொஞ்சம் தாமதமாக முதலுதவி செய்தாலும் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலியாவார்கள்.
2. என்கவுன்டர் எல்லாம் ஆளை தீர்த்து கட்டுவதற்காக காவல்துறை செயல்படுத்தும் நாடகம் (வெகு சில சமயங்களில் உண்மையாகவும் இது நடப்பதுண்டு). சில முறை கொன்றுவிட்டு என்கவுன்டர் என்பார்கள். என்கவுன்டர் நடந்த விதத்தை காவல்துறை விளக்குவதை செய்திதாள்களில் படித்தாலே இது புரியுமே.
கேசு, வாய்தா, பாதுகாப்பு, பராமரிப்பு.. இதெல்லாம் விட என்கவுன்ட்டர் தேவலாம் பாசு
Post a Comment