!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> யோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 08, 2009

யோசனை 3 - வேட்டியில் சில திருத்தங்கள்

(அகவழி 3)


இக்கால நகர்ப்புற இளையோர் வேட்டி அணிவதில்லை. பெரியோரும் பொங்கல், புத்தாண்டு போன்ற சிறப்பு தினங்களில் மட்டும் அணிகிறார்கள். வேட்டி, பழைமையான தோற்றம் தரும் ஆடையாகிவிட்டது. தமிழ்நாட்டின் நட்சத்திர விடுதிகள் சிலவற்றில் வேட்டி அணிந்துவர அனுமதிக்காத சம்பவங்களும் நடைபெற்றன. இப்படி 50 ஆண்டுக் காலத்தில் தமிழர்களிடமிருந்து திடீரென வேட்டி அந்நியமாகிவிட்டது ஏன்?

தமிழக அரசு பல்வேறு தருணங்களில் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. இன்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் வேட்டியே ஆண்களின் முதன்மை ஆடையாகத் திகழ்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் அலுவலக ஆடையாக முழுக்கால் சட்டையே விளங்குகிறது. பெரும்பாலான இளைஞர்கள், இதையே உடுத்துகிறார்கள்.

வேட்டி, காற்றோட்டமாக இருப்பது உண்மை. கம்பீரமான தோற்றத்தையும் தருகிறது. மிகவும் வியர்த்தால் அந்நேரம் கையில் கைக்குட்டை, துண்டு எதுவும் இல்லாவிட்டால், குனிந்து, வேட்டியிலேயே முகம் துடைக்கலாம். தேவையான நேரங்களில் (தண்ணீர் தேங்கிய பகுதியைக் கடக்கும்போது; வேகமாக நடக்கும்போது, ஓடும்போது....) மடித்துக் கட்டலாம். படுக்கும்போது குளிரடித்தால், வேட்டியைக் கழற்றிப் போர்வையாகப் போர்த்திக்கொள்ளலாம். வேட்டி, நெகிழ்வுத் தன்மை உடையது; பல்நோக்குப் பயன்பாடு உடையது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், அதில் சில வசதிக் குறைவுகளும் இருக்கின்றன. முக்கியமானது, அதில் பைகள் இல்லை. கிராமத்தில் வெற்றிலைப் பாக்கு போடுகிறவர்கள் அவற்றை இடுப்பில் சுருட்டி வைத்துக்கொள்வார்கள். இதனால் வேட்டியில் தேவையில்லாத சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் அதன் வாழ்நாளும் குறைகிறது. சாதாரண முழுக் கால் சட்டையில் குறைந்தபட்சம் 3 பைகள் உண்டு. அதிகபட்சம் 8 பைகள் உண்டு. அதில் பணப் பை, சீப்பு, கைக்குட்டை, சாவிக்கொத்து, அடையாள அட்டைகள்... உள்ளிட்டவற்றைத் தாராளமாக, பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். செல்பேசியை இடுப்பில் செருகி வைக்கலாம். புகைப்படக் கருவியை இடுப்புப் பட்டையில் செருகலாம். இவற்றை எல்லாம் வைக்க வேட்டியில் இடமில்லை. சட்டையிலும் கைப்பையிலுமாக வைத்துச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

வேட்டிக்குள் அண்டர்வேர் எனப்படும் அரைக்கால் சட்டையை அணிந்தால் அதன் பைக்குள் சிலவற்றை வைக்கலாம். ஆனால், அதற்குள் பொருளை எடுக்கவும் வைக்கவும் வேட்டியை மடித்துத் தூக்க வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால் பொது இடங்களில் பார்க்க நன்றாய் இராது. சட்டையை வேட்டிக்குள் உள்வைத்துக் கட்டுவது (இன் செய்வது) கடினம்.

வேட்டிகள் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பதால், அவை அழுக்காகும் வாய்ப்புகளும் அதிகம். விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள்... உள்ளிட்ட உழைக்கும் தொழிலாளர் பலரும் வீட்டிலிருந்து பணியாற்றும் இடம் வரை வேட்டியில் சென்றுவிட்டு, அங்கு அதைக் கழற்றி வைத்துவிட்டு, கால் சட்டையுடன் பணியாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். மீண்டும் மாலையில் வீட்டுக்குக் கிளம்பும்போது வேட்டியை அணிந்துகொள்வார்கள். அழுக்கு ஆவதிலிருந்து தற்காத்துக்கொள்ளவே இந்த ஏற்பாடு.

வேட்டியில் எளிதில் அவிழ்ந்துகொள்ளும் ஆபத்தும் உண்டு. அதுவும் கூட்ட நெரிசலில் இத்தகைய சிக்கல் அதிகமாகவே உண்டு.

மிதிவண்டி ஓட்டும்போது வேட்டியை மடித்துக் கட்ட வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் கால்களைத் தடுக்கிறது.

இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் என்ன தான் தீர்வு?

முதலாவது வேட்டியை வெள்ளை நிறத்தில் மட்டுமின்றி, பல நிறங்களிலும் நிறக் கலவையிலும் தயாரிக்கலாம். வேண்டுவோர், வேண்டிய நிறத்தில் உடுத்தலாமே. இப்போது காவி, பச்சை, நீல நிறங்களில் வேட்டிகளில் இருந்தாலும் அவை மிகவும் பழைய தோற்றத்தைத் தருகின்றன. நவீன ஆடையாக வேட்டியை மாற்ற வேண்டும். ஃபேஷன் ஆடை வடிவமைப்பாளர்கள், வேட்டியின் மீது தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும். டி சட்டையின் முன்னும் பின்னும் விளம்பரம், வாக்கியம் எழுதுவது போல் வேட்டியிலும் செய்யலாம். வேட்டியில் உள்ள அகண்ட பரப்பினை விளம்பரதாரர்கள் இன்னும் விட்டு வைத்திருப்பது வியப்பே.

வேட்டியை இடுப்பைச் சுற்றி மட்டும் கட்டும் வகையில் இல்லாமல் வேறு வடிவங்களிலும் கட்ட வழி காண வேண்டும். முஸ்லிம்கள், வேட்டியின் இரு முனைகளையும் தைத்து, பாவாடை போன்ற வட்ட வடிவ ஆடையாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் நடுவில் ஆடை விலகும் சிக்கல் இல்லை.
பஞ்சகச்சம் கட்டுவோரும் வட இந்தியர் சிலரும் வேட்டியையே முழுக்கால் சட்டையை ஒத்துக் கட்டுவார்கள். இது காற்றோட்டமாக இருக்கும்; அதே நேரம் எளிதில் அவிழ்ந்தும் விழாது. இவற்றை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம்.

வட்ட வடிவமாகத் தைப்பதோடு நடுவே ஒரு ஜிப்பையும் வைத்துவிட்டால் இது, இரட்டைப் பயனுள்ள ஆடையாக (Two in one) மாறிவிடும். நிறைய ஜிப் வைத்து ஒரு வேட்டியைத் தயாரித்தால் பல சிக்கல்கள் தீரும். எடுத்துக்காட்டிற்கு இடுப்பிலிருந்து பாதம் வரை இரு கால்களுக்கும் தலா ஒரு ஜிப் வைக்க வேண்டும். முதலில் வேட்டியாகக் கட்டிக்கொள்ளலாம். பிறகு, தேவைப்பட்டால் ஜிப்பை இழுத்து முழுக்கால் சட்டை ஆக்கிக்கொள்ளலாம். இதே போன்று வேட்டியின் இடுப்புப் பகுதியில் தனி வடிவமைப்புடன் இடுப்புப் பட்டை தயாரிக்க வேண்டும். அது எல்லா வகையான பொருள்களையும் வைக்கும் வண்ணம் விரிந்து, சுருங்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

இன்னொரு வழியும் உண்டு.

நாலு முழ வேட்டி, எட்டு முழ வேட்டி, பதினாறு முழ வேட்டி... என வேட்டியில் பல வகைகள் உள்ளன. இவற்றில் நாலு முழத்தைத் தவிர பிற வேட்டிகள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றுகள் உள்ளன. இவற்றில் உள்சுற்றுகள் பெரும்பாலும் பயன்படுத்தபடுவதே இல்லை. இவற்றில் பைகளை வைத்து, வெளியிலிருந்து பொருளை வைத்து எடுக்க முயன்று பார்க்கலாம். இதற்கு ஏற்ப வெளிச் சுற்றில் ஒரு திறப்பு வைக்க வேண்டும்.

தைத்த சட்டைக்கு ஏற்ப நாம் உடலைச் சுருக்கிக்கொள்வதில்லை. நம் உடலுக்கு ஏற்ற வண்ணமே ஆடை தைக்கிறோம். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நம் தேவைகளும் அதிகரித்துச் செல்கின்றன. இந்தச் சூழலில் நம் பாரம்பரிய உடைகள், நம் தேவைகளுக்கு ஏற்ப உருமாற வேண்டும். இல்லாவிட்டால் நம் தேவையை நிறைவேற்றும் பிற ஆடைகளை நோக்கி நம் இளைய தலைமுறை நகர்ந்து சென்றுவிடும். ஏற்கெனவே சில தலைமுறைகள் அப்படி மாறிவிட்டன.

வேட்டியைத் தமிழரின் அடையாளச் சின்னமாக, வணிகத் திறனுள்ளதாக மாற்ற வேண்டுமானால் நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப அது வளைந்து கொடுக்க வேண்டும். இதனை ஆடை உற்பத்தி நிறுவனங்களும் ஆடை வடிவமைப்பாளர்களும் பண்பாட்டு ஆர்வலர்களும் தீவிரமாக ஆராயுமாறு அழைக்கிறேன்.

முந்தைய பதிவு: வேட்டி துண்டுடன் நான்

1 comment:

துளசி கோபால் said...

கைப்பேசி வச்சுக்கப் பை வச்சப் புடவைகூட வந்துருச்சு இப்ப!
வேட்டிக்கு இன்னும் பை வராததை வன்மையாகக் கண்டிக்கின்றேன்:-)))))

வேட்டியில் அம்சமாத்தான் இருக்கீங்க.

ஆமாம், மேலே போடும் துண்டுக்குப் பை வேணாங்களா?