!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, October 11, 2009

யோசனை 6 - நடக்க நடக்க மின்சாரம்

(அகவழி 6)

நாம் 50 கிலோவோ, 100 கிலோவோ எவ்வளவு எடை இருந்தாலும் அதைத் தாங்குபவை நம் கால்கள். அந்தக் கால்களைத் தாங்குபவை காலணிகள். எனவே உடல் அழுத்தத்தின் மூலம் கிட்டும் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற முடியும் என்பது என் நம்பிக்கை. எனவே காலணிகளில் சில திருத்தங்களைச் செய்தால் அவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது என் யோசனை.

இந்தப் பிரத்யேக காலணிகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேகரிக்கவும் நான் யோசனை தெரிவித்தேன். அலுவலகத்திலும் வீட்டிலும் வாசலில் உள்ள மிதியடியில் இதற்கான அமைப்பினை உருவாக்க வேண்டியது. காலணியை அணிந்தவர், அந்த மிதியடியில் காலை வைத்துத் தேய்க்கும்போது அதிலிருக்கும் மின்சாரத்தை மிதியடி உள்ளிழுத்துக்கொள்ளும். பின்னர் அந்த மிதியடியிலிருந்து அது மின்கலனுக்கு மாறும். இதன் மூலம் அலுவலகங்களில் மின்சாரத்திற்கு ஆகும் செலவினைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு ஏற்ற வகையில் அலுவலகமே ஊழியர்களுக்கு இத்தகைய காலணிகளை வழங்கலாம்.

இதனை 2008ஆம் ஆண்டில் சிஃபியில் பணியாற்றிய போது சிந்தித்தேன். உடன் பணியாற்றும் நண்பர்களிடத்திலும் விவரித்தேன். அவர்களும் மகிழ்ந்து பாராட்டினார்கள். ஆனால் அடுத்த ஓரிரு மாதங்களில் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்பட அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் ஒரு செய்தி வெளியானது. நடப்பதன் மூலம் கிட்டும் ஆற்றலினால் மின்சாரம் தயாரிக்கும் காலணிகளை ஜப்பானில் ஒருவர் உருவாக்கி இருப்பதாக அந்தச் செய்தி கூறியது. உங்கள் யோசனையை ஒருவர் கருவியாக மாற்றிவிட்டார் என அவர்கள் தெரிவித்தார்கள்.

அந்தச் செய்தி இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

http://news.shoe-shop.com/news/2288/japan-developing-electricity-generating-shoes

என் யோசனையிலிருந்து அவர் செய்த ஒரே திருத்தம், காலணிக்குள் தண்ணீரை வைத்து, அழுத்தத்தின் மூலம் ஒரு சிறு டர்பைனைச் சுழலச் செய்து, அதன் மூலம் மின்சாரம் உருவாக்கியதே. இதன் மூலம் 1.2 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதைக் கொண்டு ஒரு ஐபாடினை இயக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் நான் யோசித்திருக்கிறேன். காலணிகள் மூலமாக மின்சாரம் உருவாக்குவது அதில் ஒன்று. இன்னொன்று, உருவாக்கிய பிரத்யேக தளங்களில் நடப்பதன் மூலமும் இதே போன்று அழுத்தத்திலிருந்து மின்சாரத்தினை உருவாக்க முடியும்.

உதாரணத்திற்கு நகரில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன. ஒவ்வொரு பூங்காவிலும் உள்ள நடைபாதைகளில் காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். இந்த நடைபாதையைப் பிரத்யேகமாக உருவாக்கினால், காலிலிருந்து கிடைக்கும் அழுத்தத்தின் மூலம் மின்சாரத்தை உருவாக்க முடியும்.

பூங்காக்களில் மட்டுமின்றி, கடற்கரைகளிலும் இத்தகைய சிறப்பு நடைபாதைகளை உருவாக்கலாம். சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெரு போன்ற நெரிசல் மிகுந்த சாலைகளிலும் இவற்றை உருவாக்கலாம். Pedestrian Crossing எனப்படும் சாலைகளின் பாதசாரிகள் கடக்கிற பகுதிகளிலும் இவ்வாறு அமைக்கலாம். கட்டடங்களின் படிக்கட்டுகளை இவ்வாறு அமைக்கலாம். இதன் மூலம் உறுதியாக மின்சாரத்தினை உருவாக்க முடியும் என்பது என் நம்பிக்கை.

இது, ஒரு வகையில் காந்திய வழிமுறையாகும். கைராட்டையைக் கொண்டு தமக்குத் தேவையான ஆடையை ஒருவர் உருவாக்கிக்கொள்ள முடியும் என அவர் செய்து காட்டினார். அதே போன்று நடப்பதன் மூலம் ஒருவர் தமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என நான் சிந்திக்கிறேன்.

காலணிகள், நடைபாதைகளில் இவற்றைச் செய்ய முடியுமானால், இருக்கைகளில் நாம் அமர்கிறோமே, அவற்றிலிருந்தும் மின்சாரத்தை உருவாக்க முடியுமா? ஆம், நிச்சயமாக முடியும். ஆனால், நம்மை விடப் பலரும் வேகமாக இருக்கிறார்கள். பாருங்கள்:

Shock-absorbable electricity-producing apparatus

2 comments:

Anonymous said...

பெங்களூருவிலுள்ள இராமையா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன் சாலையிலுள்ள வேகத்தடைகளில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தினை மின்னாற்றலாக மாற்றும், வழிவகை ஒன்றை முன்மொழிந்து அதனை செயலாற்றியும் காட்டினர்.

உங்களது தனித்துவமான சிந்தனைக்கும் பாராட்டு்கள். இதனை விரைவில் செயல்பாட்டில் கொண்டுவர வாழ்த்துக்கள்.

இதனையே இதயத் துடிப்பிலிருந்தும், கையில் நாடித்துடிப்புகளிலிருந்தும் வரும் அழுத்த அலைகளை மின் சமிஞைகளாக மாற்றும் ஒரு வழிமுறையும் முன்மொழியப்பட்டது. ஆனால், அது சாத்தியப்பட்டதா, அல்லது ஏதேனும் வெற்றி கிட்டியதா எனத் தெரியவில்லை.

Anonymous said...

http://semmoli.com/ultra/learnt/blogs/index.php

seethis and promote you