!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> யோசனை 1 - மழிதகடுகளை என்ன செய்வது? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, October 05, 2009

யோசனை 1 - மழிதகடுகளை என்ன செய்வது?

(அகவழி 1)'மழித்தலும் நீட்டலும் வேண்டா' எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால், நம்மில் பலருக்குத் தினந்தோறும் கன்னங்களை மழிக்கும் தேவை இருக்கிறது. ஒரு மழிதகட்டின் (பிளேடு) 4 பக்கங்கள் மூலம், அதிகபட்சம் 4 முறைகள் மட்டுமே மழிக்க முடிகிறது. ஒரே பக்கத்தை இரண்டாம் முறை பயன்படுத்தினால், சரியாக மழிப்பதில்லை.

சரி, 4 முறைகள் பயன்படுத்திவிட்டோம். அடுத்த மழிதகட்டுக்கும் வந்துவிட்டோம். இப்போது பழைய மழிதகட்டினை என்ன செய்வது? அதைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தால், குப்பை அள்ளுபவர் கைகளுக்கு அது ஆபத்து தானே. சரி, யாருக்கும் ஆபத்து வராமல் இருக்க, மண்ணில் புதைத்துவிடலாமா? அப்படிச் செய்தால் அது என்னாகும்? தோண்டும்போது யார் கையையாவது, காலையாவது பதம் பார்க்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இது எளிதில் அழியாது. நாளடைவில் துருப் பிடிக்கும். நீண்ட காலமாகத் துரு ஏறினால் கடைசியில் உடையும் - உதிரும் வாய்ப்புகள் உண்டு. இதற்கே பல்லாண்டுகள் ஆகும். இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு உகந்ததா?

முடி திருத்தும் நிலையங்களில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி மழிதகடுகளைப் பயன்படுத்துகிறார்கள். சுகாதாரக் கண்ணோட்டத்தில் இது சரியே. ஆனால், இதனால் மழிதகடுகளின் தேவை அதிகரிக்கிறது. அதே போல் மழிதகட்டுக் கழிவுகளும் கூடுகின்றன.

முன்பு, சவரக் கலைஞர் ஒரு கத்தி வைத்திருப்பார். ஒரே கத்தி தான். அது, மழுங்கினால் பட்டை தீட்டிக்கொள்ளலாம். இதனால் தனி நபர்களிடமிருந்து இரும்புக் கழிவுகள் பெருகவில்லை. ஆனால், இப்போது சவரம் செய்பவர் ஒவ்வொருவரும் இரும்புக் கழிவுகளை உற்பத்தி செய்கிறார். அதுவும் பயன்படுத்தித் தூக்கி எறியும் மழிதகடுகளால் (Use and throw) வாரந்தோறும் இரும்பு - நெகிழ்ம (பிளாஸ்டிக்)க் கழிவுகள் கூடுகின்றன. பழைய முறைப்படி இப்போது கத்தி வைத்துச் மழிப்பது நல்லதா? அதற்குப் பட்டை தீட்டுபவர் இப்போது அதிகம் தென்படவில்லை. இந்தச் சிக்கல்களால், கத்தியை நாம் விரும்பிய நேரத்தில் பட்டை தீட்ட இயலாது. இதற்கெனத் தனிக் கடைகளும் இல்லை. எனவே மழிதகடுகளைத் தவிர்க்க இயலவில்லை.

ஆனால், அவற்றைக் கழிப்பதில் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக, நான் பயன்படுத்திய மழிதகடுகளை எல்லாம், குழந்தைகள் கைக்கு எட்டாத உயரத்தில் இன்னும் வைத்திருக்கிறேன். யாருக்கும் கேடு இல்லாமல் இவற்றை எளிதில் மறுசுழற்சி செய்ய முடியுமா? எடைக்குப் போடும் அளவுக்கு இந்த இரும்புகள் அதிகமாக இருப்பதில்லை. இவற்றை யாரும் வாங்குவதும் இல்லை.

இந்தச் சிக்கலுக்கு எனது யோசனை. மழிதகடுகளைப் பட்டை தீட்ட ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும். எப்படி பென்சில் கூர்தீட்டக் கருவி உள்ளதோ, அதே மாதிரி மழிதகட்டுக்கும் கருவி காண வேண்டும். கையைக் காயப்படுத்தாமல் அது இருக்க வேண்டும். ஒருவேளை மழிதகடு துருப் பிடித்தால், அந்தத் துருவை நீக்கவும் வாய்ப்பு அளிக்கலாம். பயன்படுத்தியதும் நன்றாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் தன் பயன்பாட்டுக்கு மட்டும் வைத்துக்கொண்டால், இதனால் பெரும்பாலும் நோய் தொற்றும் சிக்கல் இருக்காது. இதன் மூலம் ஒரு மழிதகட்டினை வைத்து ஆண்டுக் கணக்கில் ஓட்டலாம் இல்லையா? இதனால் பில்லியன் கணக்கில் மழிதகடுகளைத் தூக்கி எறிவது, அவற்றைக் கழிப்பது ஆகியவை நிறுத்தப்படும்.

அல்லது நாலு பழைய மழிதகடுகளைக் கொடுத்தால் ஒரு புதிய மழிதகடு கொடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவிக்கலாம். இதனால் இதைப் பட்டை தீட்டும் பணியை அந்த நிறுவனமே மேற்கொள்ளலாம். நிறுவனம் செய்தால், மழிதகட்டினை மீண்டும் கொதிநீரில் கழுவி (Sterilization), புதுப்பிக்கலாம். இது முறையாக நடக்கிறதா எனவும் கண்காணிக்க வேண்டும். சிலரின் ரத்தக் கறை படிந்த மழிதகடுகளால் கிருமிகள் தொற்றும் என்ற சிக்கலுக்கு இதனால் ஒரு தீர்வு கிட்டும்.

அல்லது, ஃபெம் மயிர் நீக்கியை (Fem Hair Remover)ப் போல், பசையைத் தடவி ரோமங்களைப் பஞ்சினால் வழித்தெடுக்கும் முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும். இப்போதுள்ள முறையில் பசையைத் தடவிவிட்டு, கொஞ்ச நேரம் ஊற வேண்டி இருக்கிறது. அதன் பிறகு இரண்டு முறை வழித்தெடுக்க வேண்டி இருக்கிறது. இதில் நிறைய நேரம் செலவாகிறது. எனவே இந்தப் பசை முறையை மேம்படுத்தி, ஓரிரு நிமிடங்களில் மழிக்க முடிகிற அளவுக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் மழிதகட்டுப் பயன்பாட்டையே அடியோடு ஒழித்துவிடலாம். இதை மலிவாகவும் கொண்டு வரவேண்டும். இந்தப் பசையைச் செயற்கை ரசாயனங்களால் அல்லாமல், இயற்கைப் பொருட்களைக் கொண்டே உருவாக்குவது நல்லது.

இரண்டு ரூபாய் கொடுத்தால் (முன்பு ஒரு ரூபாயாக இருந்தது), ஒரு புதிய தகடு கிடைத்துவிடுகிறது. இந்தச் சின்ன விடயத்திற்கு இவ்வளவு யோசிக்க வேண்டுமா எனச் சிலர் எண்ணலாம். ஆனால், சிக்கல் இதன் விலையில் இல்லை; இதன் மறுசுழற்சியில் உள்ளது. மழிதகடுகளின் மறுசுழற்சிக்கு வேறு சிறந்த யோசனை இருந்தால், நீங்கள் சொல்லுங்கள்.

==================================================
படத்திற்கு நன்றி: http://www.campaignbrief.com

4 comments:

அப்பாவி உழவன் said...

trimmerகளை உபயோகிக்கலாம். நான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சவரம் செய்கிறேன், இடையில் மீசையை மட்டும் ட்ரிம் செய்துகொள்கிறேன். நானும் பழைய பிளேடு-களை தனியாக வைத்து கஷ்டபடுகிறேன். ஆனால் அதனை மீண்டும் கூர் தீட்ட முடியும் என நான் நம்பவில்லை, சேகரித்து கூர் தீட்ட செலவு அதிகம் ஆகும்.(சுண்டை கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்). எளிமையாக அருகிலேயே கூர் தீட்டினால், அதன் கூர்மை சொல்லும்படி இருக்குமா?.

விரைவில் துருபிடிக்கும் வகையில் அதனை செய்து மண்ணில் இட்ட சில மாதங்களில் துருவாக்கிட முடியும் வகையில் வடிவமைக்க முடியும் எனில் போதும் என நினைக்கிறேன்.

வஜ்ரா said...

ஹலோ சார், கோவில் கடைகளில் கிடைக்கும் உண்டியல் ஒன்றை வாங்கி அதில் பிளேடுகளைப் போட்டு வையுங்கள். பல வருஷங்கள் கழித்து அதை அப்படியே குப்பையில் போட்டுவிடுங்கள். அல்லது ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்திய ஊசிகளை தூக்கி எரிய என்று Sharp object disposal box இருக்கும், அது விலை மலிவானதாகத்தான் இருக்கும். அதைப்பயன் படுத்தலாம்.

அல்லது, சிம்பிளாக புதிய ரக டபுள், டிரிபிள் ரேசர் களைப்பயன் படுத்துங்கள். அது யாரையும் காயப்படுத்தாதவாரு எரிந்துவிடலாம்.

பழைய பிளேடுகளை பட்டைதீட்டிப்பயன் படுத்துவது என்பது வியாதிகளை விலைக்கு வாங்குவது மாதிரித்தான்.

இரும்புத்துருவினுள் டெடனஸ் மற்றும் காங்கிரீன் (gangrene) உருவாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் வாழும்.

பயன்படுத்திய பிளேடுகளை எவ்வளவு தான் துடைத்துவைத்தாலும் ஈரப்பதம் இருக்கத்தான் செய்யும். துரு பிடிக்கத்தான் செய்யும். ஆகவே அதை தூக்கிப்போடுவது தான் சிறந்த வழி.

புருனோ Bruno said...

//
வஜ்ரா said...
ஹலோ சார், கோவில் கடைகளில் கிடைக்கும் உண்டியல் ஒன்றை வாங்கி அதில் பிளேடுகளைப் போட்டு வையுங்கள். பல வருஷங்கள் கழித்து அதை அப்படியே குப்பையில் போட்டுவிடுங்கள். அல்லது ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்திய ஊசிகளை தூக்கி எரிய என்று Sharp object disposal box இருக்கும், அது விலை மலிவானதாகத்தான் இருக்கும். அதைப்பயன் படுத்தலாம்.

அல்லது, சிம்பிளாக புதிய ரக டபுள், டிரிபிள் ரேசர் களைப்பயன் படுத்துங்கள். அது யாரையும் காயப்படுத்தாதவாரு எரிந்துவிடலாம்.

பழைய பிளேடுகளை பட்டைதீட்டிப்பயன் படுத்துவது என்பது வியாதிகளை விலைக்கு வாங்குவது மாதிரித்தான்.

இரும்புத்துருவினுள் டெடனஸ் மற்றும் காங்கிரீன் (gangrene) உருவாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் வாழும்.

பயன்படுத்திய பிளேடுகளை எவ்வளவு தான் துடைத்துவைத்தாலும் ஈரப்பதம் இருக்கத்தான் செய்யும். துரு பிடிக்கத்தான் செய்யும். ஆகவே அதை தூக்கிப்போடுவது தான் சிறந்த வழி.

10/06/2009 3:12 PM//

வழிமொழிகிறேன் :) :)

typedef uchar_t pluto; said...

கூர்தீட்டுவதை தவிர்த்து,
1. இந்த தகடுகளை உருக்கி ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.
2. தகடுகளை மதில் சுவர்களில் பதிக்கலாம், கண்ணாடி துண்டுகளுக்கு பதிலாக.
3. 100 தகடுகளை ஒன்றாக ஒட்டி காகிதஎடை (paper weight) செய்யலாம்.
4. 2மிமி பிலாஸ்டிக் பட்டைகளுக்கு குறுக்கு reinforcement ஆக பயன்படுத்தலாம்.. 2மிமி பட்டை பலம் உடையதாக மாறும்.