!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2004 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, December 28, 2004

கவிதாயினி கிருஷாங்கினி

நவீன கவிதைகளின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுள் முதன்மையானது, அவை புரிவதில்லை என்பதே. பூட்டினை மட்டுமே அக்கவிதைகள் கொண்டுள்ளன; சாவிகளைத் தொலைத்துவிட்டன; வாசகர், எளிதில் வந்து சேர முடியாதபடி அவற்றின் பாதைகள் மிகவும் சிக்கலானவையாய் உள்ளன என்றெல்லாம் பரவலான கருத்துகள் உள்ளன. நாயிடம் முழுத் தேங்காய் அகப்பட்டால் சும்மா, உருட்டி விளையாடலாமே தவிர, அதனால் நாய்க்கும் பயனில்லை; தேங்காய்க்கும் பயனில்லை. தேங்காய் திறந்தால்தானே அதைச் சுவை பார்க்க முடியும். அப்புறம்தானே உயர்ந்த சுவையுள்ளதையும் சுவையற்றதையும் கண்டறிய முடியும். ஒன்று, தேங்காயை உடைப்பதற்கான கூர்மையையும் வலிமையையும் வாசகர்கள் பெறவேண்டும். அல்லது, கவிதை, வாழைப் பழம் போன்றோ, மாம்பழம் போன்றோ மாற்று வடிவம் எடுக்கவேண்டும்.
கைக்குழந்தைக்குத் திரவ உணவுதான் சிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திட உணவுக்கும் கடின உணவுக்கும் அதைப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகம், கல்வி கேள்வி ஞானத்தில் மிக உயர்ந்துவிட்டால்( குழந்தை வளர்ந்துவிட்டால்) அதற்கு எத்தகைய உணவும் செரிமானமாகிவிடும். ஆனால், இதையே காரணம் காட்டி, கல்லூரி செல்லுபவருக்குப் பருப்புச் சோறு பிசைந்து ஊட்டிவிடக் கூடாது. ஒரு கவிதையை எழுதி, நாமே வைத்திருக்கும் வரை சிக்கல் இல்லை. அதை வெளியிடும் போது அதை யார் வேண்டுமானாலும் படிக்கக்கூடும். எவர் படித்தாலும் அது அவரவர்க்குத் தகுந்த பொருள் தரும்படி எழுதுவது, பெரிய சவால். இதனால்தான் சிறுவர்க்கானவை, பெரியவர்க்கானவை என முதலிலேயே இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள்.
பெரியவர்க்கான கவிதைகள் எனப் பிரித்தாலும் இதிலும் சிக்கல்கள் உண்டு. பெரியோர் எல்லோரும் ஒரே தகுதி, அனுபவம், கல்வியுடையவர் அல்லர். எனவே ஒரு கவிதையை எந்தப் பெரியவர் படித்தாலும் அவருக்கு ஒரே உணர்வு உண்டாகும் எனக் கூற முடியாது. எனவே, பொறுப்புள்ள படைப்பாளி, கலவையான வாசகர் கூட்டத்தைக் கவனத்தில் கொண்டு, கூடிய வரை எளிமையாகப் படைக்கவேண்டும். அப்போதுதான் முதன்மை நோக்கமான உணர்வுக் கடத்தலுக்கு வாய்ப்புண்டு.
விடுகதைத் தன்மையுள்ள கவிதைகளில் முடியுமிடத்தில் கவிதையின் கதவைத் திறப்பார்கள். இன்னும் சிலவற்றில் கதவு, தலைப்பிலேயே இருக்கும். வேறு சிலவற்றில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு சொல்லுக்குள் திறப்பிருக்கும். உட்குவிதலும் வெளிவிரிதலும் இருவேறு கவிதைப் பாணிகள். எந்தப் பாணியை எடுத்துக்கொண்டாலும் நம் ஒரே வேண்டுகோள், வாசகர்களைக் கவனத்தில் கொள்ளுங்கள் என்பதே.
வாசகர் மேல் அக்கறையுள்ள கிருஷாங்கினி, தன் சில கவிதைகளில் ஒரு புதிய முறையைப் பின்பற்றியுள்ளார்.
பிரதான நுழைவாயில், அகலமாக, அழகாக;
சில விசாலமான அறைகள்
பிரதான வாயிலை நோக்கி.
......முற்றத்தில் சந்திப்பும்
அடிக்கடி வார்த்தை பரிமாற்றமும் குசலமும்
பரஸ்பரம் உண்டு.
அறைக் கதவுகள் அடைபடாத நிலை.

இப்போதெல்லாம்
அறைகளில் அவர்கள்.
அறைகள் எல்லாம் மாடப் பிறைகளாயின.
ஒவ்வொரு பிறைக்கும் கதவுண்டு
தாழ்ப்பாளும் உடன் உண்டு, அழுத்தமாக.

.........
எப்போதும் பிறைகளாகும் தயார் நிலையில்
அறைகள் மறுபடியும் பிறைகளாகும்.

-இந்தக் கவிதை, எதைப் பற்றிச் சொல்கிறது என வாசகர் ஒருவேளை புரிந்துகொள்ளாவிட்டால் என்ன செய்வது? சிந்தித்த கிருஷாங்கினி, இதற்கு, தேசீயம் எனத் தலைப்பிட்டுள்ளார். இப்போது சிக்கலே இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் புரிந்துவிடும்.
வேறொரு கவிதையைப் பார்ப்போம்.

ஒட்டியிருந்த அடி அரிசியில்
எங்கிருந்தோ ஒரு பல்லிக் குட்டி;
குறுக்கும் நெடுக்குமாக அலைந்தபடி
அரிசியைக் கடைகிறது- சுற்றி
பக்கச் சுவரினதிர்வுகளுக்கு
ஆளாகி 'சில்வர்' அடுக்கின்
அரைக் கிணறு தாண்டி
மறுபடியும் கீழே விழும்
வழவழப்பை மீறி ஏது செய்ய?

சிறு மத்தை சார்த்தியிட
பிடிப்புற்று வெளியேறி
வானம் பார்க்கலாயிற்று
கடைத்தேற
- இக்கவிதையைத் தான் எந்தப் பொருளை வலியுறுத்த வேண்டி இயற்றினோமோ அதை வாசகர் புரிந்துகொள்வாரா? சிந்தித்த கிருஷாங்கினி, எனக்கும் ஒரு மத்து எனத் தலைப்பிட்டுள்ளார்.
சூழலின் காரணமாக துயரச் சேற்றில் சிக்குண்ட ஒவ்வொருவரும் மேலேற முயன்றுகொண்டே உள்ளனர். அவர்களால் மேலே வர முடிவதில்லை. அவர்கள் மேலே வர, மேம்பட, நம் கை கொடுப்போம்; உதவுவோம் எனச் சொல்ல விரும்பித்தான் இப்படி ஒரு தலைப்பை வைத்துள்ளார்.
அழகான பசு அதிகம் கறக்கும்
ஊசி போட்டு மருந்திட்டாவது,
இறந்தது இளமையும் திறமையும்
உடன்வர யாருமில்லை
யாரையும் விடவுமில்லை
கூட்டத்தைத் திருப்தி செய்
கடமை அதுவே
கற! கற! அதிகம் கற!
வலி, வலி, வலி!
பிழி, பிழி, பிழிந்தெடு!
- நெகிழ்ந்த கடிகாரம் என்ற தலைப்பிலான கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன. இத்தலைப்பிலுள்ள நெகிழ்ந்த என்ற சொல், காலாகாலமாய்ப் பெண்களின் நிலை, இவ்வாறுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
கிருஷாங்கினி, அங்கதம் தொனிக்கும் சில கவிதைகளையும் படைத்துள்ளார்.

....................
பரிசு பெற அதிகம் உழைக்க வேண்டும்
இப்படியாகத்தானே- அல்ல
நிறைய ப்ரயாசைப்படு
அதிகம் சென்று பார்,
கொண்டு கொடு
பக்கக் கிளைகளைத் தனதாக்கிக்கொள்
உரியன கொடுத்து.
அப்பாடா!

பெற்ற பின் பேசு, எல்லாம்
தகுதியின் அடிப்படைதான்.
நடுவர்கள் முட்டாள்களல்ல;
ஸ்தாபிதம் பெற்றபின்
கிடைத்த விதம் பற்றி
பகிராதே எவரிடமும்
அங்கீகாரம் பெறாத
எவரிடமும் இரக்கம் காட்டாதே
அவர்கள் அப்படித்தான்
எப்போதும்
வெளியில் பேசும் வீரர்கள்
உன் வழியில் செல்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

- பரிசுகளின் முன்னும் பின்னுமுள்ள பெருங்கதைகளை இக்கவிதை, பிட்டுப் பிட்டு வைக்கிறது.
பிருந்தா என்ற இயற்பெயர் கொண்ட இவர், எழுதுகோல் பிடித்த பின் கிருஷாங்கினி எனப் பெயர் சூட்டிக்கொண்டார். இந்தப் புனைபெயருக்குப் புல் போன்ற உடல்கொண்டவள் எனப் பொருள் கூறுகிறார். கோவை மாவட்டம் தாராபுரத்தில் 20.11.1948 அன்று பிறந்த இவரின் முதல் சிறுகதை, 1982ஆம் ஆண்டு கணையாழி மாத இதழில் வெளிவந்தது.
இவரின் கணவர் நாகராஜன், ஓவியர். மகள் நீரஜா ரமணி கிருஷ்ணா, பரத நாட்டியக் கலைஞர். ஓவியமும் நாட்டியமும் உலவும் இடத்தில் இருப்பதால் அவற்றின் தாக்கம், இவர் படைப்புகளில் உள்ளன.
மேல் திண்ணை, கீழ்த் திண்ணை;
மண்வாசல் பிறகு
பின்வாசல்.

சதுர அடி
450, 500 முதல்
1000மும் அதற்கும் மேலும்.
ஆயினும்
வாசல் என்னவோ
4 அடி அகலமும் 12 அடி நீளமும்
...முதுகின் சுமை காரணமாய்
ஐங்கோணம், அறுகோணம், எண்கோணமாய்

தினம் தினம் காலையில்
மின்னும் நட்சத்திரங்கள்!
- அழகியல் மிகுந்த இக்கவிதையில், தானே வரைந்த கோலங்களை இடையில் இட்டுள்ளார். இப்படி, கவிதையையும் ஓவியத்தையும் ஒருசேரப் பின்னுவது, இதர கவிஞர்களிடம் இல்லாத ஒன்று.
கவிதையில் மட்டுமின்றி, சிறுகதைக் கலையிலும் கிருஷாங்கினி தேர்ந்துள்ளார். கானல் சதுரம் என்ற கவிதைத் தொகுப்பையும் சமகாலப் புள்ளிகள், கிருஷாங்கினி கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார். தன் மகளுடன் இணைந்து, பரதம் புரிதல் என்ற பரதக் கலை நூலைப் படைத்துள்ள இவர், தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் திரட்டி, பறத்தல் அதன் சுதந்திரம் என்ற நூலையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவரின் சமகாலப் புள்ளிகள் சிறுகதைத் தொகுதி, 1998ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான 2ஆம் பரிசு பெற்றது. தமிழ் வளர்ச்சித் துறையின் தேர்வு. "கானல் சதுரம்" கவிதைத் தொகுதி-1998, கவிஞர் தேவமகள் அறக்கட்டளை (கோவை) 2002க்கான "கவிச்சிறகு" விருது அளித்துச் சிறப்பித்தது. மத்திய அரசின் கலை மற்றும் கலாசார மையத்தின் உயர்நிலை மானியம் 2002-2004 (senior fellowship) பெற்றுள்ள இவர், "தமிழில் 50களுக்குப் பிறகு எழுதப்பட்ட புதுக் கவிதையில் பெண்களின் கருப் பொருள், அணுகுமுறை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவரின் பெரும்பான்மையான கவிதைகள், எதிர்மறை உலகைப் படம்பிடிப்பவை. துன்பியல் நிகழ்வுகளை விவரிக்கும் இவரின் ஆக்கங்கள், பலவீனமான மனம் கொண்டவராக இவரை அடையாளப்படுத்துகின்றன. சில இடங்களில் இவரின் கேள்விகளில் கூர்மை, வெளிப்படுகிறது. பல இடங்களில் விரிவான ஆலாபனைக்குத்தான் இவர் முயல்கிறார்; இரத்தினச் சுருக்கமாகச் சொல்லுவதற்கு முயல்வது, இன்னும் நலம் சேர்க்கும்.
எனது வாத்யத்தைக் கையிலெடுத்து
மீட்ட ஆரம்பிக்கிறேன்;

தெருஓர பெஞ்சுகளில், மரத்தடியில்
தெருவின் நடுவில், ஓரத்தில்
சந்தோஷமாய், நெகிழ்ச்சியாய், சோர்வாய்.

நாற்புறமும் நிழல்கள்
என்னை ஊடுருவி ஊடுருவி
எங்கெங்கோ பின்னல்களாய்
சென்று சென்று மீள்கின்றன.

ஸ்தூலமாய், திடப் பொருளாய்
நிணம் நரம்புடன்
மனிதர் மத்தியில் நான் அரூபமாய் நிழலாய்க் கரைகிறேன்
- என்கிறார் கிருஷாங்கினி.
காவல் துறையினரின் கனிவான கவனத்திற்கு, இங்கிருந்த கிருஷாங்கினி என்பவரைக் காணவில்லை......


Saturday, December 11, 2004

வீர தீரச் சிறுவர்கள் : 10

தீயினுள் நுழைந்த தீரன் ஹன்பொக்லாங்

ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவத்தைத் தரும். ஏதோ மினுமினுவென்று கண்ணைக் கவருகிறதே, அதன் பெயர் நெருப்பு என்றும் அது சுடும் என்பதும் குழந்தைகளுக்குத் தெரியாது; தொட்டுப் பார்த்தால் என்ன என்று தான் அவர்களுக்குத் தோன்றும். யாரும் இல்லாத போது தொட்டும் பார்த்துவிட்டால், அதன் பிறகு சூடு கண்ட பூனை கதைதான். நெருப்பைக் கண்டாலே ஓடிவிடுவார்கள். மனிதனுக்கு நெருப்புடன் மிகுந்த நெருக்கமான தொடர்பு உண்டு. ஆதிகாலத்தில் சிக்கிமுக்கிக் கற்களை உரசி, முதன்முதலாக நெருப்பை உண்டாக்கினான்.

வரலாற்று நோக்கில் அது, ஒரு முக்கிய கண்டுபிடிப்பு. நெருப்பு, குளிரிலிருந்து அவனைக் காத்ததோடு, கொடிய விலங்குகளிலிருந்து தப்பிக்க, ஒரு நல்ல ஆயுதமாகவும் பயன்பட்டது. நெருப்பு, கையடக்கமாக - நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அது நமது ஆயுதம். உணவு சமைத்தல் முதல் இரும்பை வளைத்தல் வரை ஏராளமானவற்றுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதுவே, நம் கட்டுப்பாட்டை மீறிவிட்டால் பேராபத்து. காட்டுத் தீ எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? சிறிய பொறியாகக் கிளம்பும் நெருப்பு, பல்லாயிரம் ஏக்கர் பரப்புள்ள ஒரு பெரிய காட்டையே அழித்துவிடும். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;வெந்து தணிந்தது காடு; - தழல் வீரத்தில் குஞ்சென்று மூப்பென்றும் உண்டா? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்என்ற பாரதியின் பாடலும் இதைத் தானே சொல்கிறது.

காடு மட்டுமில்லை. நெருப்பினால் நாடு, நகர், பட்டணம், பட்டிக்காடு, வீடு விளக்குமாறு என வரலாறு நெடுகிலும் ஏராளமாக எரிந்துபோனதை வரலாறு காட்டுகிறது. உலகில் நடந்த எல்லாத் தீ நிகழ்வுகளையும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, ஒரு விபத்தாக நடந்த தீ நிகழ்வு. மற்றொன்று, மனிதன் வேண்டுமென்று திட்டமிட்டு நிகழ்த்திய தீச்செயல்கள். முன்னதைக் காட்டிலும் பின்னதே அதிக எண்ணிக்கையில் நடந்து அதிக உயிர்களை அழித்திருக்கும் என்பது என் கருத்து. அனுமன், இலங்கையை எரித்தது, கண்ணகி மதுரையை எரித்தது, ரோம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது, எனத் தொடங்கி.....ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம். போரில் வென்ற நாடு, தோற்ற நாட்டைக் கொள்ளையடித்ததோடு தீக்கிரையாக்கவும் செய்தது. இன்றும் வரதட்சணைக் கொடுமையால் எவ்வளவோ பெண்கள் தீக்கிரையாவதோடு, தொண்டர்களும் தீக்குளிக்கிறார்கள்.

திட்டமிட்டு வேண்டுமென்றே நடத்தும் நிகழ்வுகளை, அவரவர் தனித்தனியே திருந்தினால்தான் தடுக்க முடியும். ஆனால், எதிர்பாராமல் நடக்கும் தீவிபத்துகளை நம்மால் தவிர்க்க முடியும். அப்படியே ஒன்று நடந்தாலும் நாம் எச்சரிக்கையோடு இருந்தால் அவற்றை எளிதில் அடக்கலாம். குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுக்கலாம். அண்மையில் கும்பகோணத்தில் நடந்த கோர விபத்தில் 93 குழந்தைகள் பலியானதை நாமறிவோம். இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்படுவதற்கு நம்மிடம் விழிப்புணர்ச்சியும் முறையான கல்வியும் இன்மையே காரணங்கள். இவற்றைப் பெறுவதற்கு முதலில் தீவிபத்து நடக்காமல் இருக்க என்ன செய்வது? நடக்கும்போது என்ன செய்வது ? நடந்த பிறகு என்ன செய்வது? என்பவற்றை நாம் கற்றுணரவேண்டும்.

தீவளையத்துக்குள் புகுந்து வெளியே வருவதை, சர்க்கஸ்காரர்களிடம் பார்க்கலாம். திரைப்படத் துறையில் சண்டைக் காட்சி நிபுணர்கள் சிலர் அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் எல்லோரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். ஆனால், பயிற்சியே பெறாமல் , நம் அன்றாட வாழ்வில் சிலர் இத்தகைய செயல்களைச் செய்து நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுவார்கள். அப்படித்தான் மேகாலயாவில் ஒருவர், நெருப்பு நாக்குகளுக்குள் புகுந்து வெளிவந்தார். அவர் வயது, 13.இப்போது உங்கள் புருவங்கள் மேலேறுவது தெரிகிறது. ஆம், 13 வயதே ஆன ஹன்பொக்லாங் நங்சீஜ் என்ற மாணவன்தான், இந்தப் பெரிய செயலைச் செய்தான்.

மேகாலயாவில் , மேற்குக் காசி மலைகள் மாவட்டத்தில் பொன்குங் என்ற கிராமம், இவனுடையது. இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான், ஹன்பொக்லாங். ஏழு வயதாய் இருக்கும்போது தன் தாய்-தந்தை இருவரையும் இழந்தான், ஹன்பொக்லாங். அதன் பிறகு, தன் தாய்வழிப் பாட்டியுடனும் அத்தையுடனும் தங்கிப் படிக்கிறான்.
தீயில் நுழைந்து ஒரு குழந்தையின் உயிரைக் காத்த நாள்: ஜனவரி 5, 2000. அன்று என்ன நடந்தது? அதை அவன் வாய்வழியாகவே கேட்போமா?

"வீட்டு வாசலில் நான் எப்போதும் போல் விளையாடிக்கொண்டிருந்தேன். என் தாய்மாமா வீடு, பக்கத்தில் இருந்தது. திடீரென்று ஏதோ கருகும் நெடி அடித்தது. திரும்பிப் பார்த்தால் என் மாமா வீடு, தீப்பிடித்துவிட்டது. அப்போது மதிய நேரம். என் மாமா, வெளியே போயிருந்தார். அத்தையும் அடுத்திருந்த வயலில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒன்பது மாதக் குழந்தை, வீட்டினுள்ளே தூங்கிக்கொண்டிருந்தது. வீடு எரிவதைப் பார்த்த அத்தை, அலறியபடி ஓடிவந்தாள். அவள் கூச்சலைக் கேட்டு, நிறைய பேர் கூடிவிட்டார்கள். காப்பாத்துங்க என் பிள்ளையைக் காப்பாத்துங்க என என் அத்தை கத்திக் கதறினாள். ஆனால், தீ இப்போது, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீ நாக்குகள், மேலும் மேலும் உயரத்திலும் அகலத்திலும் வளர்ந்தன. யாரும் நெருங்கத் துணியவில்லை.

அந்தக் குட்டிப் பையனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இப்போது போய் அந்தக் குழந்தையைக் காப்பாற்றாவிட்டால் அவன் எரிந்துவிடுவான் எனத் தோன்றியது. நான் தீ நாக்குகளுக்கு மத்தியில் அந்த வீட்டிற்குள் ஓடினேன். அங்கு எனக்குச் செல்லமான என் மாமா மகன், பெரிதாக அழுதுகொண்டிருந்தான். அவனை என் கைகளில் தூக்கிக்கொண்டு, ஒரு துண்டை எடுத்து அவனைப் போர்த்தினேன். தீநாக்கு ஒன்று என் தலைமுடியைக் கருக்கியது. அதன் சூட்டினை என் முகத்தில் உணர முடிந்தது. ஆனால், நான் அக்குழந்தையுடன் வெகு வேகமாக வெளியே பத்திரமாக ஓடிவந்தேன்.

என் அத்தை, என்னைக் கட்டிப் பிடித்து முத்தமாரி பொழிந்தாள். செய்தித்தாள்களில் என்னைப் பற்றி எழுதினார்கள். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். நவம்பர் 14 அன்று, எனக்கு ஒரு பெரிய விருது அளித்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" ஹன்பொக்லாங் நங்சீஜூக்கு பாபு கயதானி விருது அளிக்கப்பட்டுள்ளது. தீரம் மிகுந்த சிறுவர்களுக்காக நாட்டில் வழங்கப்படும் மூன்றாவது மிகப் பெரிய விருது, இது. யானை மேல் அமர்ந்து சென்று, பிரதமரிடம் இவ்விருதைப் பெற்றுள்ளான், ஹன்பொக்லாங் நங்சீஜ்.

நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டதற்கு, ஒரு பொறியாளர் ஆவதே சிறந்தது எனப் பதில் அளித்துள்ளான், இவன்.

தீரமும் துணிச்சலும் சமயோசிதமும் விவேகமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எந்தச் சவாலையும் எதிர்கொள்ளலாம் என்பதை, ஹன்பொக்லாங் நங்சீஜிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

Wednesday, December 08, 2004

கவிதாயினி கனிமொழி

கவிதையின் அளவு என்ன? பாத்துளி முதல் பார காவியம் வரை தமிழில் படைக்கப்பட்டுள்ளன. இரண்டடியில் கவிபாடி, திருவள்ளுவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். குறுந்தொகையில் எட்டு வரிகளை ஒட்டியே பாடல்கள் அமைந்தன. சங்கப் பாடல்கள், மிகுந்த சொற்சிக்கனம் உடையவை. கவிதையல்லாவிடினும் இரண்டு -மூன்று சொற்களில் அமைந்துள்ள ஆத்திசூடியையும் நாம் கூர்ந்து நோக்கவேண்டும். 'நறுக்கென்று நாலே வார்த்தையில் சொல்' என முன்னோர் சொல்லுவர். 'கவிதை மின்னலுடைத்தாகுக' என்றான் பாரதி. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் மரபு நமக்குண்டு.

ஆனால், பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களைக் கொண்ட கம்பராமாயணமும் இங்கு கொண்டாடப் பெறுகிறது. காவியங்களில் ஆயிரம் பாடல்கள் என்பது, சர்வ சாதாரணம். இம்மென்றால் எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரமுமாய்ப் பாடித் தள்ளியவர்கள், பலர். காலம் முழுதும் இதே வேலையாய்ச் சொற்சிலம்பம் ஆடினால் எழுத்தாணி கூர்மழுங்கி, ஏடு பிதுங்குவது இயல்புதானே! இக்காலத்திலும் பலர் காவியங்கள் படைக்க முயலுகிறார்கள். இன்று கவிஞர்கள், காவியம் படைப்பதன் நோக்கங்களுள் ஒன்று, அதிகப் பக்கங்களை ஓட்ட முடியும் என்பது. ஏற்கெனவே உலவும் கதையை எடுத்துக்கொண்டு படைத்த காவியங்கள், அன்றும் இன்றும் நிறைய உண்டு. கவிதை நடையில் கதையைச் சொல்லும் இம்முயற்சிகள் பலவற்றில் கதையம்சமே அதிகம். பாலில் நீரைக் கலந்துவிட்டு இதுவும் பால்தான் எனச் சாதிக்கும் தேநீர்க்கடைக்காரரை நமக்குத் தெரியாதா என்ன?

பார்வையாளர் இருக்கைகளில் இருக்கவேண்டியவர்கள் எல்லோரும் கால்பந்து மைதானத்தினுள் இறங்கி, ஆட்டக்காரர்களை அசையவிடாமல் செய்தாலோ, அல்லது மைதானத்திலிருந்து விரட்டிவிட்டாலோ, ஆட்டம் எப்படி இருக்கும்? தமிழ்க் கவிதைப் படைப்பு, இப்போது இந்த ஆபத்துக்கு ஆளாகியிருக்கிறது. அச்சுப் பரப்பு முழுவதையும் எழுத்துகளால் நிரப்புவதும், தேவையற்ற சொற்களால் நிரப்புவதும் பெருகிவரும் காலம், இது.

மரபுக் கவிதைகள் பல நேரங்களில், கருப்பொருளைத் தீர்மானிக்கும் முன்பே வடிவத்தைத் தீர்மானித்து விடுகின்றன. கட்டுப்பாடில்லாமல் சொற்களை வாரி இறைக்கும் கெட்ட பழக்கம், தமிழில் அதிகமுள்ளது. இதனால்தான் கவியரங்கம், கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்துவோர், 16, 24, 32 என வரிகளைக் குறிப்பிட்டு கவிதை, அதற்குள் அமையவேண்டுமென நிபந்தனை விதிக்கின்றனர். உரைநடையில் 10 வரிகளில் சொல்வதைக் கவிதையில் ஒரு வரியில் சொல்லலாம். பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோல சொற்களைச் சுருக்கினால்தான் கவிதை மெருகேறும்.

மேடை, வானொலி, தொலைக்காட்சிக் கவியரங்குகளில் 10 நிமிட நேரம் கொடுத்தால் நீட்டி முழக்கிக் கதைபேசும் காட்சிகள்தான் அரங்கேறும். மூன்று நிமிடங்களில் முடிக்கச் சொன்னால் கவிதை அம்மட்டோடு பிழைப்பதற்கு வாய்ப்புண்டு. புத்தகம், இதழ், மேடை, பிற ஊடகங்கள் அனைத்திலும் இப்படித் திரும்பும் இடமெங்கும் ஊளைச் சதையோடு தமிழ்க்கவிதை காட்சியளிக்கிறது. நல்லவேளையாக, ஹைகூ வடிவம் வந்தது. வெறும் தண்ணீரே இதில் பால் என்ற பெயரில் வந்தாலும் எல்லாம் மூன்று வரிகளில் முடிவதால், பரவாயில்லை என ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். குறைவான வரி எல்லை உடைய லிமரிக், லிமரைகூ போன்ற இறக்குமதி வடிவங்களும் தோன்றியிருப்பது, ஒரு நல்ல அறிகுறி.

இப்படி வடிவங்களில் சிக்கிக்கொள்ளாமல் குறைவான சொற்களில் கவி படைக்கும் சிலரும் இப்போது வளர்ந்துள்ளனர். அவர்களுள் ஒருவர், கனிமொழி.

எத்தனை முறை விலக்கினாலும்
திரும்பத் திரும்பப் புரண்டு
மேலே கால்தூக்கிப் போடும்
குழந்தையாய் நினைவுகள்
-மொத்தமே நான்கே வரிகள். அருமையான உவமை. கச்சிதமாய் அமைந்துள்ளது. மேலும் சில துளிப்பாக்களைப் பாருங்கள்.

அந்த
அயோக்கிய ஜோசியன
்என் சிறகுகள
ைமுறித்துப் போடாதவரை
நானும் பகுத்தறிவுவாதிதான்!
***************

தழும்புகள் உள்ளன
தீயென்றும் தெரிகிறது
ஆனாலும்
இன்னும் பூக்களைச் சொரிந்துகொண்டுதான்
இருக்கிறது
மரம்
***************

வானம் வசப்பட வேண்டாம்
எனக்குப் பழக்கமானது
பூமி மட்டுமே.
***************

தோல் தேய்ந்து
தொலைந்து போகும் வரை
கழுவுகிறேன் சபைக்கு சரிப்படாத
என் கருப்பு நிறத்தை.
***************

கதவுகள் மூடியே இருக்கட்டும்
அஸ்திவாரங்கள் ஆடிக்கொண்டிருந்தாலும்
தென்றலையாவது தடுக்கலாம்.
***************

என் காதலில்
பெருமைப்பட ஒன்றுமில்லை.
சுவாசிப்பதைப் பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது?
***************

எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை.
***************
- இங்கு எடுத்துக்காட்டப்படும் ஒவ்வொன்றிலும் உண்மை, ஆழ்ந்த அனுபவம், சமூக விமர்சனம், வித்தியாசமான அணுகுமுறை போன்றவை இணைந்து கவிதை வடிவம் பெற்றுள்ளன.

ஆனால், 'கவிமொழியைத் தீவிரமாகக் கைக்கொள்ளாமல் மூன்று வரித் துணுக்குகளாகவே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதேன்?' என்ற கேள்வியைக் கனிமொழி முன் வைத்தார்கள். அதற்கு, 'உணர்வதுதானே கவிதையாக முடியும். வரித்துணுக்குகள் என்றால் அந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல என்னிடம் அதற்கு மேல் ஒன்றும் இல்லாதிருக்கலாம். சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்தபின் ஏன் வடிவத்தை வளர்த்திக்கொண்டு போகவேண்டும்?' என்று பதில் அளித்துள்ளார்.

'எந்தத் தலைப்பானாலும் சரி, இந்தா பிடி எட்டு எண்சீர் விருத்தங்கள்' என்கிற ஆசு கவிகள் மத்தியில் 'அதைப் பற்றிச் சொல்ல என்னிடம் வேறு ஒன்றும் இல்லை' எனச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்.

கனிமொழி, உண்மையைப் பேசுகிறார் என்பதற்கு இவர் கவிகளில் நிறைய சான்றுகள் கிடைக்கின்றன.

தன் இளம் இருட்டுச் சுவர்களுக்குள்
்என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,
அம்மாவின் பழைய சேலையைப் போல
மெத்தென்று மனதைத் தழுவும்
-என அநேகக் கவிஞர்களைப் போல் பழைய நினைவுகளில் ஆழ்கிறார், கனிமொழி. நிறம், கற்பு, சுதந்திரம், ஆணாதிக்கம்....எனப் பெண்கள் பலரும் கையாண்ட கருப்பொருட்களை இவரும் விட்டுவைக்கவில்லை.

கனிமொழியின் தலைப்பிடப்படாத ஒரு கவிதையின் முழு வடிவத்தைப் பார்ப்போம்.

மேஜையின் விளிம்பில்
்வைக்கப்பட்டிருக்கும்
மெல்லிய கண்ணாடிக்
குவளையைப் போல் உள்ளது
நம்பிக்கை.

விபரீதமான ஒரு தருணத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது
திரவம்.

எங்கு வைத்தாலும்
நகர்ந்து விளிம்புக்கு வந்துவிடுகிறது
குவளை

அவசரத்தில் எறியப்படும்
வார்த்தைகளையும்
நழுவிவிழும் உண்மைகளையும்
அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்
எதிர்நோக்கிச்
சிதறிப்போதலை வேண்டியபடி.

ஆனால்
என்றுமே
காலியாய் இருப்பதில்லை மேசை.

- இது, சிறப்பாக இருந்தாலும் கவிதையின் இரண்டாவது வரியும் இரண்டாம் பத்தியும் கடைசிப் பத்தியும் தேவையற்றவை என்பது, என் கருத்து. அவை இல்லாவிட்டாலும் கவிதை, இதே உணர்வை அளிக்கின்றது.

கனிமொழி, கருவறை வாசனை, அகத்திணை என்ற இரு கவிதைத் தொகுப்புகளை அளித்துள்ளார். முன்னாள் முதல்வரின் மகள். ஆயினும் மிக எளிமையோடும் எளியவற்றின் மீது அன்போடும் மென்மையான உணர்வுகளோடும் விளங்குகிறார். வாசிக்கத் தூண்டும் எளிய வரிகளும் மெல்லிய சோகமும் தவழும் இவர் கவிதைகள், கவிதையை நாடி வருவோரை ஏமாற்றுவதில்லை.

என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு
-என்கிறார், ஒரு கவிதையில். நீங்கள் சொல்ல வருவது புரிகிறது, கனிமொழி.

அமுதசுரபி, டிசம்பர் 2004

Monday, December 06, 2004

கவிதாயினி வத்ஸலா


கவிதை என்பது எது? விளக்க விளக்க விரியும் இக்கேள்விக்கு ஒரே சொல்லில் பதில் சொல்லவேண்டும் எனில் 'உண்மை' என்பேன். 'அவர் ஒரு கவிதையைப் போல் வாழ்ந்தார்' என்பதற்கு 'உண்மையாக வாழ்ந்தார்' என்றே பொருள்கொள்ள முடியும். எழுதுபவர், வேறொருவரின் விருப்பத்தை நிறைவேற்றவோ, பாராட்டுகளைக் குறிவைத்தோ, உலகாயத பயன்களுக்காகவோ எழுதும்போது, உண்மையிலிருந்து கவிதை விலகிச் செல்கிறது. நிகழ்வையோ, உணர்வையோ, அலங்காரங்களோடு உயர்வு நவிற்சியில் சொல்லும்போதும் இந்த விலகல் நிகழ்கிறது. முழு உண்மையை எந்தப் படைப்பும் வெளிப்படுத்திவிட இயலாது. உண்மைக்கு எவ்வளவு அருகில் அது இருக்கிறது என்பதே கவிதையின் சிறந்த அளவீடு.

அப்படியானால் உண்மை மட்டுமே கவிதையாகிவிடுமா? அதே உண்மை, உரைநடையிலோ, ஓவியத்திலோ, வேறு கலை வடிவத்திலோ, ஏன், செய்திப் பகுதியிலோ வருமாயின் அப்போது அதற்கு என்ன பெயர்? செய்திப் பகுதியில் வரும் ஒன்று, உண்மையாய் இருக்குமாயின் அதை உண்மையான செய்தி எனலாம். எப்போது உண்மையும் கலைநயமும் இணைகின்றனவோ, அப்போது கவிதை அங்கே புத்துயிர் பெறுகிறது.

கலைநயம் என்பது என்ன? செய்தியைப் போன்று நேரடியாக அது பேசக்கூடாது. நமது மனத்தைச் சுண்டி இழுக்கும் தன்மை அதற்கு இருக்கவேண்டும். எதிர்பாராத ஒரு புதிய கோணத்திலிருந்து அது வெளிப்பட வேண்டும். உடனடிப் பயன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னை நுகர்வோரிடம் அது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இன்னும் பல முகங்கள், கலைநயத்திற்கு உண்டு. இந்தக் கலைநயத்தையும் உண்மையையும் ஒரு புள்ளியில் இணைப்பது, மிகக் கடும் சவால். ஏனெனில், ஒன்றைப் பிடிக்கும்போது மற்றொன்று நழுவிச் சென்றுவிடும். இச்சவாலைச் சமாளிப்பதற்காகத்தான் கவிஞருக்குக் கவிதா நீதி என்ற சிறப்புச் சலுகையை உலகம் வழங்கியுள்ளது.

இந்த அடிப்படையில் பார்த்தால், தமிழில் கவிதை என்ற பெயரில் உலவும் பலவற்றை நாம் இரக்கமின்றி நிராகரிக்க வேண்டி வரும். வெகு சிலவே கவிதையின் பெயரைக் காப்பாற்றும். வத்ஸலாவின் சில ஆக்கங்கள், கவிதையாகப் பரிசீலிக்கத் தகுந்தவை.

....இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
...வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறைவைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும்
ஒரு ஆலமரம்.

...என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.
அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.
ஒரு சிறுமி கேட்கிறாள்,
'இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?'
பதில் வருகிறது.

'அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது'
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
'பூமியில் வைத்தால்தானே வளர முடியும்'
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
'பெண்ணே நீ ஆலமரமாவாய்!'

இலக்கணப் பிழைகள் இதில் இருந்தாலும் கருப்பொருளாலும் வெளிப்பாட்டினாலும் இது, கவிதை என்ற தகுதியை அடைந்துவிடுகிறது.

நான்
சொத்தில்லா லக்ஷ்மி
கல்வியில்லா சரஸ்வதி
அச்சமுள்ள துர்க்கை
...நான்மாதவம் செய்துவிட்டேன்.
தவப்பயனை எப்படி அழிப்பது?
மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல
மாதவம் செய்திட வேண்டு மம்மா


என்ற கவிமணியின் வரிகளை இவர், கடும் கோபத்துடன் புரட்டிப் போட்டிருக்கிறார்.

வந்து சேர்ந்தன
முன்னூற்றி இருபத்தி ஏழு கடிதங்கள்...
நான் பரிசளித்த மோதிரத்தை
ஒரு ஏழைபெண்ணிற்கு மொய்யெழுதிவிட்டதாக...
எல்லாவற்றையும்
திருப்பிவிட்டதாக
எழூதியிருக்கிறாய்.
எல்லாவற்றையுமா?
அன்றொருநாள்
என் கூந்தலில்
பட்டுத் தெறித்த மழைத்துளிகள்
உன்னில் ஏற்படுத்தியதே
அந்த சிலிர்ப்பு
..ஒரு சமயம்
நிலவை ரசிக்கையில்
சில்லிட்டுப்போன உன் கையை
என் கைக்குள் வைத்து
நான் அளித்தேனே
அந்த வெப்பம்
இப்படி விட்டுப் போன
சிலவற்றையும்
பட்டியல் போட்டு
திருப்பி விடு.

வத்ஸலாவின் பெரும்பாலான ஆக்கங்கள், சோக ராகம் பாடுபவை. இயலாமையும் ஆற்றாமையும் இவரைச் சினமூட்டியுள்ளன. தன் சோகங்கள், தன்னுடையவை மட்டுமல்ல; பெண் இனத்தின் மிகப் பெருஞ்சோகத்தின் ஓர் அங்கமெனப் புரிந்துகொண்டதாக எழுதியுள்ளார். ஆயினும் இவருடைய பல ஆக்கங்கள், வெறும் நிகழ்வாக, காட்சியாக நின்று விடுகின்றன. பிரச்சினைகளைச் சொல்லவேண்டும் என்ற முனைப்பு, கவித்துவத்தைக் கைவிட்டாலும் பரவாயில்லை என இவரை நகர்த்தியுள்ளது. எனினும் பல காட்சிகள், வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது.

...அம்மா சொன்னதெல்லாம்
'சித்தி வருவா
அவகிட்ட சமத்தாயிரு
சீக்கிரமா பெரியவனாயிடு
ஸாரி கண்ணா, நா போயிட்டு வரேன்'
பந்தை உருட்டிக்கொண்டே
நான் தலையாட்டிய பிறகே
அவள் நாற்காலியை உதைத்தாள்
வயிற்றிலிருந்த என் தங்கச்சி பாப்பா அதிர
கயிறு கழுத்திலிறுக
எனக்கு கயிறு பிடிக்காது

- இப்படிப் பல காட்சிகள். சுருக்கமான சொற்களில் பரந்த வாழ்வைப் படம் பிடிப்பவை.

வத்ஸலா, 1943-இல் பிறந்து இயற்பியலிலும் கணிப்பொறியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணிப்பொறி மையத்தில் 25 ஆண்டுகள், கணினிப் பொறியியலாளராகப் பணியாற்றியவர். நாற்பத்தெட்டாவது வயதில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதத் தொடங்கியவர். சுயம் என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்துள்ளார். இவருடைய வரிகளைக் குறிப்பிட்டு, 'ஒரு புதிய பெண் கவிஞரின் குரல் தெளிவாக ஒலிக்கிறது' என்கிறார், ஞானக்கூத்தன்.

வடசொற் கலப்பு, இலக்கணப் பிழைகள், வளவளப்பு போன்ற சில குறைகளைக் களைந்தால், இவர் , கவிதையின் மேலும் சில சிகரங்களைத் தொட முடியும்.

Tuesday, August 31, 2004

புதுப் புதுப் போராட்டங்கள்

அண்ணாகண்ணன்


சென்னையில் தயாராகி, அமெரிக்காவில் வெளியாவது, தி தமிழ் டைம்ஸ் என்ற மாத இதழ். கவிஞர் ஜெயபாஸ்கரன், இதன் சிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் என்னிடம் கவிதை கொடுங்கள் என்றுதான் கேட்டார்( இவருக்காவது நான் கவிஞன் என்பது நினைவில் உள்ளதே!). அண்மையில் நடைபெற்ற விநோத போராட்டங்கள் என் மனத்தைக் கவர்ந்ததால் 'இதைப் பற்றி எழுதட்டுமா?' எனக் கேட்டேன். அஅமெரிக்க மக்களுக்கு இங்கு நடப்பவற்றைத் தெரிவிக்க, இது நல்ல வாய்ப்பு. இந்தக் கட்டுரையையே கொடுங்கள் அ என்றார். அது, இதோ:

போராட்டங்களால் உலகமே ட்டம் காணும் காலம், இது. கருப்பையினுள் நுழையும்இலட்சக்கணக்கான உயிரணுக்களுள் ஓர் அணுதான் கருவுறுகிறது. அதற்கே அந்த அணு, ஒரு போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது. வெளியே வந்த பிறகும் குழந்தை,தன் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அழுது ர்ப்பாட்டம் செய்கிறது. தான் கேட்டது கிடைக்கும் வரை அது, கையை அசைத்து - காலை உதைத்து- படுத்துப் புரண்டு- வீரிட்டு அலறிப் பிடிவாதம் பிடிக்கிறது. தன் நோக்கம் நிறைவேறும் வரை யாரோடும் பேசாமல், எதையும் சாப்பிடாமல்- குடிக்காமல் சண்டித்தனம் செய்கிறது. கடைசியில் வேறு வழியில்லை என்று பெரியவர்கள்தாம் இறங்கி வரவேண்டி இருக்கிறது. இப்படி,குழந்தையின் குருதியிலேயே போராட்ட உணர்வு கலந்திருப்பதால் வளர்ந்த பிறகு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே மனிதன் போராடத் தொடங்குகிறான்.

இப்படி எல்லோரும் போராடும் போது போராட்டம் என்பதே சாதாரணமான ஒன்றாய்கிவிட்டது. ' எங்க த்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் ' என்பது போல் ஒப்புக்கு நடக்கும் போராட்டங்கள் நாம் அறியாதவையா என்ன? தொடங்கும் இடத்தில்500 பேரும் முடியும் இடத்தில் 50 பேருமாகப் பேரணி நடப்பதால்தானே இடையில்கழன்றுவிடுவோரைத் தடுக்க, கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்? 50 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் எனப் பேசி, ள் பிடித்து நடக்கும் பிரமாண்டப் பேரணிகளும்பொதுக்கூட்டங்களும் இந்த மண்ணுக்கு என்ன புதிதா? இவ்வாறு இல்லாமல் உண்மையாகநடந்தால் 36 அமைப்புகள் ஒருங்கிணைந்த குடையமைப்பில் 36 பேர்தானே இருப்பார்கள்?

ள் திரட்டி, படை பலம் காட்ட முடியாதவர்கள், வெவ்வேறு புதிய உத்திகளில்போராட்டங்களை அறிவிக்கிறார்கள். மற்றவர்களின் கவனத்தை உடனே திருப்புவது எப்படி என்பதே இந்தப் புதிய போராட்டக்காரர்களின் நோக்கம். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு விதமான கோரிக்கைகள். ஒவ்வொரு கோரிக்கைக்கும் வெவ்வேறு வகையானபோராட்டங்கள்.

கழுதையிடம் மனுகஸ்டு 12ம் தேதி, புதுவையில் கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. புதுவை சாரத்தில் உள்ள நில அளவைப் பதிவேடுகள் துறை அலுவலகம் முன் இது நடந்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ர். விஸ்வநாதன், பட்டா வழங்கக் கோரி, கழுதையிடம் மனு அளித்தார். அதிகாரியிடம் மனு அளித்தும் பயன் இல்லை; அவர் காகிதத்தைத் தின்று விடுகிறார் என்பதைக் குறிப்பாக உணர்த்தியுள்ளார்கள்.

மதுக் கடைக்குப் பூட்டு அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய புதிய போராட்டங்களை அறிவிப்பதில் முன்னணியில் உள்ளது. மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, பிரசாரம் செய்யும் அக்கட்சி, மதுக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை கஸ்டு 23ம் தேதி நடத்தியுள்ளனர். பா.ம.க. மகளிர் அணியினர், கிராமப்புறத்தில் உள்ள மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடுவதான இப்போராட்டம் சாதுரியமானது. பெண்கள் தொடர்புடைய அனைத்தும் உணர்வெழுச்சியை(சென்டிமெண்ட்)த் தூண்டக் கூடியவை.

மணி அடிக்கும் போராட்டம்தமிழக அரசு, மக்கள் நலனைக் கவனிக்காமல் தூங்குகிறது; அதை எழுப்புவதற்காக என்று சொல்லி மணி அடிக்கும் போராட்டத்தைக் கடந்த மாதம் பா.ம.க. நடத்தியது. சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் அக்கட்சியினர் சிலர் மணி அடித்தனர்.

அஞ்சல் அட்டைப் போராட்டம்பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், தமிழ்நாடு முழுவதும் கஸ்டு 11 ம் தேதி, அஞ்சல் அட்டைப் போராட்டம் நடத்தினர். தங்களிடமிருந்து தவணை முறையில் பெற்ற தொகையை நிலம் வாங்கப் பயன்படுத்திய கூட்டுறவு சங்கத்தைக் கண்டித்தும் தங்கள் தொகையைப் பாதுகாக்க வேண்டியும் அஞ்சல் அட்டைகளை நிர்வாகிக்கு அனைத்து ஊழியர்களும் அனுப்பிவைத்தனர். சாதாரண அஞ்சல் அட்டை என்று எண்ணவேண்டாம். வல்லவனுக்குப் புல்லும் யுதம் என்பதை நிரூபிப்பதோடு போராட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் ஈடுபடச் செய்வதற்கு, இப்போராட்டம் உதவியுள்ளது.

சைக்கிள் பேரணிவிழுப்புரத்தில் காவல் துறை தடை உத்தரவு 30(2) நடைமுறையில் உள்ளதால் அங்கு பேரணிகள் நடத்தக் காவல் துறை அனுமதிக்கவில்லை. அதை மீறி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட தி.மு.க.வினர் 300 பேர், கஸ்டு 10 அன்று சைக்கிள் பேரணி சென்றனர். தடையை மீறிச் சென்றதால் போக்குவரத்திற்குப் பெரும் இடையூறு ஏற்பட்டதாக 300 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மிதிவண்டியில் செல்வது, சாதாரணமானது என்றாலும் ஒரு நோக்கம் கருதிச் செல்வதும் கூட்டமாகச் செல்வதும் போராட்ட மதிப்பைப் பெறுகின்றன. இன்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, ஊழலை ஒழிக்க என ஏதேனும் காரணம் சொல்லி, நெடுந்தூர மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் பலரை நம்மால் பார்க்க முடியும்.

தீக்குளிக்க முயற்சி
கோவை ட்சியாளர் அலுவலகத்தில் கஸ்டு 9ம் தேதி, காணாமல் போன தம் கணவரை மீட்டுத் தரக் கோரி, விஜயலெட்சுமி என்பவர் தீக்குளிக்க முயன்றார். அன்றைய நாள், அங்கு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்துகொண்டிருந்தது. ங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த இவர், பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் புட்டியை எடுத்து, உடலில் ஊற்றினார். மற்றவர்கள் பதற்றத்தோடு பார்க்கும் போதே தீப்பெட்டியை எடுத்து, குச்சியைக் கிழிக்கப் போனார். அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அதைத் தட்டிவிட்டனர். அவரின் மனுவைப் பெற்ற காவல் துறையினர், தற்கொலை முயற்சிக்காக விஜயலெட்சுமியைக் கைது செய்தனர். இது, தெளிவாக மற்றவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் ஒரு உத்தி தான். கைதான தலைவரை விடுவிக்க வேண்டும், தலைவர் மரணம் எனப் பல நேரங்களில் தீக்குளிப்பது, தமிழ்நாட்டில் சாதாரண ஒன்று. பிறகு, தீக்குளித்த தொண்டருக்கு உதவித் தொகை வழங்கும் அடுத்த காட்சியும் அரங்கேறும்.

உள்ளிருப்புப் போராட்டம்கல்வி, வணிக மயமாவதைத் தடுக்கக் கோரி, அனைத்துக் கல்லூரி மாணவர்கள், பள்ளிக் கல்வி இயக்ககம் முன் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். சாதாரணமாகக் கூடி நின்று குரலெழுப்பும் போராட்டம் தான் அது. அப்போது காவல் துறையினர், மாணவர்கள் சிலரைத் தாக்கினர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் பற்பல கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கஸ்டு 13ம் தேதி, இராணி மேரி மகளிர் கல்லூரி மாணவியர்கள், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அரசையும் காவல் துறையையும் கண்டித்து, தங்கள் வளாகத்திற்கு உள்ளேயே உட்கார்ந்து, உரக்கக் குரல் எழுப்பினர். பெண்கள், பொதுவாக இத்தகைய போராட்டங்களையே தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது.

நிர்வாணப் போராட்டம்னால், உக்கிரமமான சூழ்நிலையில் பெண்கள், புலியென மாறி விடுவார்கள் என்பதற்கு மணிப்பூர் பெண்களே சான்று. ஜூலை 10ம் தேதி இரவு மணிப்பூரில் மனோரமாதேவி என்ற 32 வயதுப் பெண், இந்திய இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, கொல்லப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இரவு நேரத்தில் வந்து இக்கொடூர செயலைச் செய்ததற்கு, இராணுவம் சொன்ன காரணம், மனோரமா, தீவிரவாத இயக்கம் ஒன்றின் கமாண்டோ என்பதே. இராணுவத்திற்குக் கேள்வி முறை இல்லாமல் அதிகாரம் வழங்கும் யுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் எனப் பெண்கள் அமைப்பினர் உள்பட, மணிப்பூர் மாநிலம் முழுதும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெண்கள், ஜூலை 15 அன்று , நிர்வாணப் போராட்டம் நடத்தினர். உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அசாம் ரைபிள்ஸ் அலுவலகம் முன்பு, பத்திற்கும் மேலான பெண்கள், கூக்குரல் எழுப்பினர். ' இந்திய இராணுவமே, எங்கள் சதைகளை எடுத்துக்கொள்; மனோரமாக்களை விட்டுவிடு ' , ' இந்திய இராணுவமே, எங்களைக் கற்பழி ' என்றெல்லாம் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தமக்கு முன்பாகப் பிடித்திருந்தனர்.

கூண்டோடு விடுப்பு மணிப்பூரில் நிர்வாணப் போராட்டம் தவிர, ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் அனைவரும் கூண்டோடு விடுப்பு எடுத்துள்ளனர். வெகு சிலரைத் தவிர, பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் அரசு எந்திரம் முழுதும் ஸ்தம்பித்துவிட்டது.

தீப்பந்த ஊர்வலம்மக்களின் தீவிரப் போராட்டத்தால் இம்பால் நகராட்சிப் பகுதியில் மட்டும் யுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதாக அரசு அறிவித்தது. இதனால் நிறைவடையாத மக்கள், மணிப்பூர் மாநிலம் முழுதிலிருந்தும் இச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி, கஸ்டு 12ம் தேதி இரவு, தீப்பந்த ஊர்வலம் நடத்தினர்.

மனிதச் சங்கிலிகஸ்டு 15ம் தேதி அன்று, மனோரமா நிகழ்வையொட்டி 32 அமைப்புகள் இணைந்து , மாநிலம் முழுதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தின.

பாச விளம்பரங்களைக் கண்டித்து, சென்னை புரசைவாக்கத்தில் மாணவ- மாணவியரின் மனிதச் சங்கிலிப் போராட்டம், கஸ்டு 10ம் தேதி நடந்தது. இதில் புரசை எம்.சி.டி. முத்தையா செட்டியார் ண்கள் , பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவியர் பங்கேற்றனர். வேறு சில அமைப்பினரும் இதில் கலந்துகொண்டனர். ஒருவரோடு ஒருவர் கைகொடுத்து, இதை எதிர்க்கிறோம் எனக் குறிப்பாக உணர்த்துவதற்கு மனிதச் சங்கிலி உதவும். ட்கள் குறைவாக இருந்தாலும் அதிகமானோர் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவதற்கு இது, சிறந்த உத்தி.

கூண்டுக்குள் அமர்ந்து ர்ப்பாட்டம்இப்படி, பெரிய பெரிய கோரிக்கைகளுக்காகத்தான் போராட்டம் நடக்க வேண்டுமா, என்ன! தென்கொரியாவில் நாய்க்கறி தின்பதற்கு எதிராகக் கடந்த மாதம், சோங்னாம் நகரில் ஒரு பேரணி நடந்தது. அதில் நாய்களை அடைத்து வைக்கும் கூண்டு ஒன்றிற்குள் ர்ப்பாட்டக்காரர் ஒருவர் அமர்ந்துகொண்டார். நாய் போன்ற முகமூடி ஒன்றையும் அணிந்துகொண்டார். நாய்களையும் இப்படித்தான் அடைத்து வைக்கிறீர்கள் என்பதை அவர் குறிப்பாக உணர்த்தினார்.

சிறை நிரப்பும் போராட்டம்ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரனை விடுதலை செய்யக் கோரி, அக்கட்சித் தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் தலைநகர் இராஞ்சியில் கஸ்டு 7 ம் தேதி, இது நடந்தது. கட்சிக் கொடிகள், பதாகைகள், கட்சியின் சின்னமான வில்- அம்பு கியவற்றோடு தொண்டர்கள் கைதாயினர். இத்தகைய போராட்டம், தமிழ்நாட்டில் பல முறைகள் நடந்துள்ளன.

நடைப் பயணம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நெல்லை முதல் சென்னை வரை 42 நாளில் 1,025 கி.மீ. தூரம் நடந்து வருகிறார். கஸ்டு 5ம் தேதி நெல்லையில் தொடங்கிய இது, செப். 15 அன்று சென்னையில் முடிகிறது. நதிநீர் இணைப்பு, காவிரிச் சிக்கலில் தமிழக நலனைப் பாதுகாத்தல், பொது வாழ்வில் சீர்கேடு நீக்குதல், சாதி- மத உணர்வுகளைத் தடுத்தல், வன்முறை மனப்பாங்கை இளைஞர்கள் கைவிடுதல் கியவற்றோடு அ.தி.மு.க. ட்சியை எதிர்த்தல் கிய நோக்கங்களுக்காக இந்த நடைப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ஏராளமான நடைப்பயணங்கள் , தமிழகத்திலும் வெளியிலும் நடைபெற்றுள்ளன. ஒரு புதிய தொடக்கத்திற்கு அடையாளமாக, குத்துவிளக்கு ஏற்றுவோர், பலர். வைகோ, தாம் புறப்படும் முன் வேப்பமரக் கன்றை நட்டார்.

உடல் முழுதும் நாமம் சரிவர ஊதியம் கொடுக்கவில்லை , நீதி கிடைக்கவில்லை என்போர், உடல் முழுதும் நாமம் போட்டுக்கொண்டு தெருவில் ஊர்வலம் வந்துள்ளனர். ஏமாற்றிவிட்டார் என்பதை நெற்றியில் நாமம் போட்டுவிட்டார் எனச் சொல்வோம். அதனைச் சிலர், நடைமுறையில் காட்டியுள்ளனர்.

வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம்பேச்சுச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு உள்ளது, கருத்துரிமை மறுக்கப்படுகிறது என்போர், வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்துவதுண்டு. பொதுவாக, எதிர்ப்புக் காட்ட, கருப்புக் கொடி ர்ப்பாட்டம் நடக்கும். இன்னும் சிலர், சட்டையில் கருப்புக் கொடியைக் குத்திக்கொண்டு பணியாற்றுவதுண்டு.

தற்கொலை மிரட்டல்தன் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, உயர்ந்த கட்டடம், மரம், தொலைபேசி அலைக் கோபுரம்..போன்றவற்றில் ஏறி நின்று, குதித்துவிடப் போவதாக மிரட்டுவது. பொதுவாக, இவர்கள் கொஞ்ச நேரம் அலைக்கழித்து விட்டுக் கீழே இறங்கிவிடுவர். முன்னேறிய நாடுகளில், இவர்கள் மிரட்டத் தொடங்கிய உடனேயே சுற்றிலும் வலையை விரித்து விடுவார்கள். இந்தியாவில் ஏறியோர், தாமாக இறங்கினால்தான் உண்டு.

தண்டவாளத்தில் தலை டால்மியாபுரத்திற்குக் கல்லக்குடி எனப் பெயர் மாற்ற வேண்டும் எனக் கோரி, தி.மு.க.வினர், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழு குழுவாகச் சென்று தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தனர். மு.கருணநிதி, இந்தப் போராட்டத்தின் மூலம் முக்கிய தலைவர்களுள் ஒருவராகிவிட்டார்.

பலகையைத் தார் பூசி அழி1967 இந்தி எதிர்ப்புக் காலக்கட்டத்தில் இந்தி எழுத்துகள் அடங்கிய பெயர்ப் பலகைகளைத் தார் பூசி அழித்தனர். இத்தகைய போராட்டத்தை ஓரிரு ண்டுகளுக்கு முன் பா.ம.க.வினர் மீண்டும் நடத்தினர். சுவரொட்டிகளின் மீது சாணி அடித்ததன் தொடர்ச்சியே இது.

விதவிதமான கோரிக்கைகளுக்காக, விதவிதமான போராட்டங்கள் நடப்பது, உலகெங்கும் வழக்கம்தான். இந்தப் போராட்டங்களைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: அரசு அல்லது சமூகம், செய்யச் சொல்வதைச் செய்யாதிருப்பது; செய்யக் கூடாதென்பதைச் செய்வது. முன்னதற்கு, வேலை நிறுத்தம், வரிசெலுத்தாமை, வாக்களிக்காமை , கடையடைப்பு, ஒத்துழையாமை போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள். பின்னதற்கு, சட்ட நகல் எரிப்பு, நிர்வாண ஓட்டம், கொலை, கொள்ளை, ரெயில் கவிழ்ப்பு...போன்றவை சான்றுகளாகும்.

எதற்காகப் போராடுகிறோம் என்பதை விட, எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம். இதையே இத்தகைய விநோத போராட்டங்கள், அடிக்கோடு போட்டு அறிவிக்கின்றன.

Monday, August 09, 2004

வீர தீரச் சிறுவர்கள் - 8

மூழ்கியவனைக் காப்பாற்றிய சத்தியம்

அண்ணாகண்ணன்

பூமி முக்கால் பாகம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் மனிதனுக்குத் தண்ணீரைக் கண்டால் ஓர் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. தண்ணீரில் கண்டம் எனச் சோதிடர் சிலர் அச்சுறுத்தி விடுவதால் பலர், கிணறு, குளம், குட்டை, ஏரி, கடல் என எந்தத் தண்ணீரிலும் கால் வைப்பதில்லை. கொஞ்சம் தொட்டு, தலையில் தெளித்துக்கொள்வதோடு சரி.

நான் திருவாரூரில் பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே கமலாலயம் என்ற பெரிய குளம் இருக்கும். ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா, வெகு கோலாகலமாக நடக்கும். குளத்தின் நடுவில் ஒரு கோயிலும் உண்டு. கரையிலிருந்து அந்தக் கோயிலுக்கு ஒரு கம்பி கட்டி, அதைப் பிடித்தபடி போகும் பரிசல் பயணமும் உண்டு. நான் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனாகையால், முடிந்தபோது வந்து என் அம்மா, என்னைப் பார்த்துவிட்டுப் போவார். ஒருமுறை அவர் வந்தபோது, ஒரு செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ந்தார். அவர் வந்த நாளுக்கு முதல் நாள்தான் அந்தத் தெப்பக் குளத்தில் குளித்த இரண்டு மாணவர்கள், ஆழத்திற்குப் போய் மூச்சுத் திணறி இறந்துபோயிருந்தார்கள். உடனே அவர் என்னிடம் ஓர் உறுதிமொழி கேட்டார். இனிமேல் விடுதியின் குளியலறையில்தான் குளிக்க வேண்டுமேயொழிய கமலாலயத்திற்குப் போய்க் குளிக்கக் கூடாது என்றார். ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. நானும் ஒப்புக்கொண்டேன். நீச்சல், ஒவ்வொருவரும் கற்கவேண்டிய இன்றியமையாத கலை என்பதை அன்றே உணர்ந்தேன்.

ஒருமுறை , என் 15ஆம் வயதில், விடுமுறையின் போது என் சித்தப்பாவின் வீட்டிற்குச் சென்றேன். அது, ஆடுதுறைக்கு அருகில் திருமங்கலக்குடி என்ற சிற்றூர். அங்கிருந்து 2 கி. மீ. தொலைவில் காவிரியின் கிளை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. சித்தப்பா வீட்டில் எருமை மாடுகள் வளர்த்தார். அவற்றைப் பெரும்பாலும் வீட்டிலேயே குளிப்பாட்டி விடுவோம். சில நேரங்களில் ஆற்றுக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டுவதும் உண்டு. அப்படி ஒரு நாள் ஆற்றுக்குக் குளிக்கக் கிளம்பினோம். மாடுகளை வேறொரு பணியாளர் ஓட்டிக்கொண்டு வர, நானும் தம்பி பாலாஜி(சித்தி பையன்)யும் காவிரிக்குப் போனோம். அவன் என்னை விட இரண்டு வயது சிறியவன். கொண்டுபோன மாற்றுத் துணி, சோப்பு டப்பா, துண்டு எல்லாவற்றையும் படித்துறையில் வைத்தோம். எங்கள் ஆடைகளைக் களைந்து அதனருகில் போட்டுவிட்டு ஜட்டியோடு தண்ணீரில் இறங்கினோம்.

அப்போது(ம்) ஆற்றில் தண்ணீர் ஓட்டமில்லை. நான் இறங்கி, பல அடிகள் நடந்து பார்த்தேன். கழுத்து மட்டும்தான் தண்ணீர் இருந்தது. எனவே அச்சமின்றி , அங்குமிங்கும் நகர்ந்தேன். நீச்சல் அடிக்கிறேன் பேர்வழி என்று கை, கால்களை அடித்து , உதைத்து, உந்தித் தள்ளினாலும் உடம்பு என்னவோ தண்ணீருக்குள் இறங்கிக்கொண்டே இருக்கும். (என் அப்பா, தண்ணீரில் ஒரு கட்டையைப் போல் மிதப்பதைப் பார்த்திருக்கிறேன்.) இது சரிவராது என்று கரைக்கருகிலேயே தொளையம் அடித்துக்கொண்டிருந்தேன். சோப்பு போட்டுக்கொண்டு மீண்டும் தண்ணீரில் இறங்கினோம். கரையிலிருந்து அப்படியே பாய்வதெல்லாம் முடியாது. ஏனெனில் படித்துறை, கன்னா பின்னாவென்று சிதிலமடைந்து செங்கல்லும் கருங்கல்லும் பதம் பார்க்கக் காத்திருக்கும்.

தம்பி, குளித்து முடித்து விட்டு கரையேறித் துவட்டிக்கொண்டிருந்தான். நான் கரையோரம் மெல்ல நகர்ந்தேன். சமதளமாய்த்தான் இருந்தது. திடீரென ஒரு பெரிய பள்ளம். உள்ளே போய்விட்டேன். தரையை உந்தித் தள்ளி , மேலே வந்து கையைப் பெரிதாக ஆட்டிவிட்டு மீண்டும் உள்ளே போனேன். நான் இரண்டாம் முறை மேலே வந்தபோது தம்பி என்னைப் பார்த்துவிட்டான். சட்டென்று தண்ணீரில் இறங்கி, மேலே வந்த கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். நல்ல வேளையாக நான் மேட்டுக்கு வந்துவிட்டேன். அதற்குள் கொஞ்சம் தண்ணீரைக் குடித்திருந்தேன். கண்கள் சிவந்து போயின. ஆனால், ஒரே நிமிடத்தில் பாலாஜி பார்த்துவிட்டதால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. இதை வீட்டில் சொன்னால் அடுத்த முறை காவிரிக்கு அனுப்பமாட்டார்கள் என்பதால் வீட்டில் மறைத்துவிட்டோம். ஆனால் அந்தப் பாலாஜியின் உதவியை மறக்க முடியாது. தண்ணீர் வறண்டபோது ஆற்றிலும் மற்ற காலங்களில் கரையிலும் மணற்கொள்ளை அடிப்போர், அதனால் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் ஓடும் காலத்தில் அப்பாவிகள் பலர் சிக்கிக்கொள்வதை உணர்ந்தாவது திருந்தவேண்டும்.

இது , பழைய கதை. இப்போது 2003ஆம் ஆண்டு சூன் 21 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றித் தெரியுமா? ஏழு வயதுச் சிறுவன், ஐந்து வயதுச் சிறுவனைக் காப்பாற்றியது எப்படி?

மும்பை அய்ரோலி பகுதியில் இராதிகாபாய் மெகே சூனியர் வித்தியாலயாவில் இரண்டாம் வகுப்புப் படிப்பவன், சத்தியம் மகேந்திர காண்டேகர். சத்தியத்தின் அப்பா மகேந்திரா, அய்ரோலியில் உள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக்கில் முதுநிலை விரிவுரையாளர். அம்மா, டாக்டர் சுஜாதா காண்டேகர். அப்பகுதியில் உள்ள இராஜேஷ் ஹெல்த் கிளப்பில் ஒரு நீச்சல் குளமும் இருந்தது. சத்தியம், தம் தந்தையுடன் தினமும் அங்கு சென்று நீச்சல் பழகுவது வழக்கம். தன் பயிற்சி முடிந்த பிறகு சத்தியம், கரையோரம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் , மூழ்குவதைச் சத்தியம் கண்டான். உடனே நீச்சல் குளத்தினுள் தாவினான். அதன் பிறகு என்ன நடந்தது? சத்தியமே சொல்கிறான்.

" நான் அந்தச் சிறுவனை நெருங்கிய போது, அந்தச் சிறுவன் விறைப்பாகி விட்டிருந்தான். தனியொருவனாக அவனைக் கரைக்கு இழுத்து வருவது கடினம் என்பதை உணர்ந்தேன். எனவே உதவிக்காகக் கூக்குரலிட்டேன். அப்போது என் அப்பா, எங்களைப் பார்த்துவிட்டார். அவர் உடனே எங்களைக் கரையை நோக்கி இழுத்தார். நாங்கள் ஒரு வழியாக மேலேறினோம். "

ஆனால், அந்த 5 வயதுச் சிறுவன் விஜய் சுவாமி, ஆபத்தான நிலையில் இருந்தான். அதிகத் தண்ணீரைக் குடித்திருந்தான். மகேந்திரா, அச்சிறுவனை அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். ஆனால் , அவர்கள் ' இது , காவல் துறையின் வழக்கு. நாங்கள் பார்க்க முடியாது' என்றனர். அடுத்து அவர், சிறுவனை, தானேயில் உள்ள கல்வா நகராட்சி மருத்துவமனையில் சேர்த்தார். நல்லவேளையாகச் சிறுவன் பிழைத்துவிட்டான்.

நீச்சல் குளத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருவர் உண்டு. விஜய் தன் பயிற்சி நேரம் முடிந்த பிறகு குளத்திற்குள் இறங்கியதால் உடனே யாரும் கவனிக்கவில்லை என நீச்சல் குளத்தினர் கூறியுள்ளனர். பிறகு அவர்களே சத்தியத்தைப் பாராட்டவும் செய்தனர். நவு மும்பை மேயர், மாநில அமைச்சர்கள், காவல் துறை ஆணையாளர் ஆகியோர் , சத்தியத்தைப் பாராட்டி விருது வழங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி, புது தில்லியில் சத்தியத்திற்குத் தேசிய தீரச் செயல் விருது வழங்கிக் கெளவித்தனர்.

சத்தியத்தைப் போன்று இளம் வயதிலேயே நீச்சல் பயில வேண்டும். சமயோசிதமும் விவேகமும் சிக்கலை உடனே எதிர்கொள்ளும் ஆற்றலும் வளர வேண்டும் . நீச்சல் பயிலுவது, வாழ்வில் எதிர் நீச்சல் போடப் பெரிதும் உதவும்.




வீர தீரச் சிறுவர்கள் - 7

மாமனிதரே ரியாஸ்(9)!

அண்ணா கண்ணன்

தகவல் தொடர்பின் பிரமாண்டமான வளர்ச்சியால் உலகம் ஒரு சிற்றூராகச் சுருங்கிவிட்டது . உலகம் மட்டுமன்று ; மனித மனங்களும் மிகவும் சுருங்கிவிட்டன. அடுத்தவர்களுக்கு உதவுவது, அதுவும் பிரதிபலன் பார்க்காமல் உதவுவது, மிக அரிதாகிவிட்டது. நம்மிடம் இருக்கும் மிகச் சாதாரண பொருட்களைத் தருவதற்கே நாம் எவ்வளவு யோசிக்கிறோம்! நம்மிடம் உதவி நாடி வந்தவரிடம், விளக்கு வைத்த பிறகு கொடுக்கக்கூடாது, செவ்வாய் - வெள்ளிக் கிழமைகளில் தரக்கூடாது , ராகு காலம் - எமகண்டத்தில் முடியாது ......எனப் பெரியவர்கள் சொல்லியிருப்பதாக மரபு மூட்டையை அவிழ்த்துக் கடை விரிக்கிறோம். நமது சாலையோரம் நீளும் எண்ணற்ற கரங்களை நெற்றிக்கண் திறந்து சிடுசிடுப்போடு புறந்தள்ளுகிறோம். தெரு முனையில் வரும் ' அம்மா தாயே ' என்ற அழைப்பு, நம் வீட்டை எட்டும் முன் நம் கதவுகளையும் ஜன்னல்களையும் அவசரமாக மூடுகிறோம். பாதையெங்கிலும் அடிக்கடி நடக்கும் விபத்துகளை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கலாமே தவிர, அதில் மூக்கை நுழைத்து , ஆபத்தை விலைக்கு வாங்கலாமோ!

நமது சமூகத்தின் சிந்தனை இப்படியாய் இருக்க, வலியப் போய் உதவும் மனிதர்களை, அழிந்துவரும் உயிரினங்களுள் சேர்க்கவேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் தமக்குப் பொருளிழப்பு ஏற்பட்டாலும் உதவுவோர், இன்னும் ஒரு படி மேல். இவர்களுள்ளும் தம் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் உதவுவோர், நமது வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்களால்தான் இன்னும் இந்தப் பூமியில் மழை பெய்கிறது. அந்த மிக அரிய மனிதர்களுள் ஒருவர், ரியாஸ் அகமது.

ஒன்பது வயதே நிறைந்த ரியாசை நாம் ' அவர் ' என அழைப்பதே பொருந்தும். ஏன்? அந்த வீர நிகழ்வைக் கொஞ்சம் சிந்திப்போம்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள். உத்திரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி ஒருவரின் மகன் ரியாஸ், தம் நண்பர்களுடன் ரெயில் தண்டவாளங்களின் மீது நடந்துவந்துகொண்டிருந்தார். நிம்பூ பூங்காவிலிருந்து அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்புவதற்கு அதுதான் அவர்களின் வழக்கமான சுருக்கு வழி. தாலிபாக் பாலத்திற்கு அருகில் வந்தபோது அவர்கள் எதிரே இருவர் வருவதைப் பார்த்தனர். ஒருவர் , நன்கு வளர்ந்த மனிதர்; மற்றொருத்தி, ஒரு குட்டிப் பெண். அவர்களும் வேறொரு தண்டவாளத்தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே கொச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் , விரைந்து வந்தது. அதன் பிறகு நடந்ததை ரியாசே விளக்குகிறார்.

" அவர்கள் அபாயத்தில் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ரெயில் வருவதைப் பார்த்ததும் நாங்கள் அவர்களை எச்சரிக்கும் விதமாகக் கூச்சல் போட்டோம். ஆனால், அவர்கள் எங்களைக் கவனிக்கவில்லை. அந்தப் பெண் , என்னைவிடச் சிறியவளாய் இருந்தாள். அவள் இறந்துவிடக் கூடாது என நினைத்தேன். நான், அவர்களை நோக்கி வெகு வேகமாக ஓடினேன். அப்போது ரெயில், அவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. நான் அவர்களை நெருங்கி, அந்தச் சிறுமியை என் பக்கமாக இழுத்தேன். ஆனால், என் கால்கள், தண்டவாளங்களுக்கிடையே சிக்கிக்கொண்டன. ரெயில், எங்கள் மீது பயங்கரமாக மோதியது. நாங்கள் கீழே விழுந்தோம். ரெயில், எங்கள் மீது ஏறி, அரைத்துக்கொண்டு ஓடியது. நாங்கள் மூவரும் தண்டவாளத்தில் வெவ்வேறு இடங்களில் வீசி எறியப்பட்டோம். என்னால் அந்தச் சிறுமியைப் பார்க்க முடியவில்லை. அந்த மனிதர், சற்று தொலைவில் விழுந்து கிடந்தார். அவர் கால்களிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. என் உடலிலிருந்தும் மிக அதிகமாக ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்ற பிறகு, ரெயில் நின்றது. மிகப் பெரிய கூட்டம், எங்களைச் சூழ்ந்து நின்றது. ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. அவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருவர் என்னைத் தூக்கினார். ஒரு போலிஸ்காரரும் உதவிக்கு வந்தார். நாங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம். "

அங்கு ரியாசின் இரண்டு கைகளும் ஒரு காலும் நீக்கப்பட்டன. ரெயிலில் அடிபட்ட அந்தப் பெரியவர், சபீர் அலி, தன் இரண்டு கால்களையும் இழந்தார். அவருடைய மகள் , ஷாசியா, ஆறு வயது சித்திரச் சிறுமி, மரணமடைந்தாள். இன்று ரியாஸ் , எல்லோரும் பரிதாபப்படும் ஒரு நிலையில் இருக்கிறார். தம் ஒவ்வோர் அசைவிற்கும் அடுத்தவரின் உதவியை நாடும் துயர் மிகுந்த கட்டத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு புன்னகை மிளிர்கிறது. ரியாஸ், சிறப்பாக உருது பேசக்கூடியவர். எதைப் பற்றியும் உற்சாகமாக உரையாட அவர் தயாராயிருக்கிறார், அவருடைய உடல் ஊனத்தைத் தவிர. ரியாசிற்குச் சகோதர சகோதரிகள், எட்டுப் பேர் இருக்கிறார்கள். ரியாஸ், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஏனெனில், உருது பேசத் தெரிந்தாலும் அவருக்கு எழுதத் தெரியாது. தனிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்று, எதிர்காலத்தில் ஒரு மருத்துவர் ஆவேன் என்கிறார், ரியாஸ். தன் நிலைக்காக, ஒருபோதும் வருந்தவில்லை என்கிற ரியாசுக்கு உத்தரபிரதேச அரசு, விருது வழங்கிப் பாராட்டியது. மத்திய அரசு, ரியாசுக்கு சஞ்சய் சோப்ரா விருது வழங்கிக் கௌரவித்தது.

ஆனால், ரியாஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?
" அந்தச் சிறுமியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவள் மட்டும் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் நான் மிக மிக மகிழ்ந்திருப்பேன். "

ஆஹா ரியாஸ், மாமனிதரே, உமக்கு எமது தலைவணக்கம். உலக மானுடர்களே, இதோ இந்த ஒன்பது வயது வீரப் பிறவியைத் திரும்பிப் பாருங்கள். தம் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத இந்த அக்கினிக் குஞ்சுக்கு உம் வீர வணக்கத்தைச் செலுத்துங்கள்.

இந்தத் தருணத்தில் நாம் சிலவற்றைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சுருக்கு வழி, சோம்பல், அலட்சியம், அவசரம்....எனப் பற்பல காரணங்களைக் கூறி, நாம் தண்டவாளங்களில் நடப்பது, மரணத்திற்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பது போன்றது. முழு மரணம் நிகழாமல், உடல் ஊனம் மட்டும் நிகழ்ந்துவிட்டால் அது இன்னும் மோசமானது. தண்டவாளத்தில் நடப்பது மட்டுமில்லை; மூடப்பட்ட ரெயில்வே கேட்டுகளின் இடுக்குகள் வழியாக நுழைந்து செல்வது, நின்றுகொண்டிருக்கும் ரெயில்களின் சக்கரங்களுக்கிடையே புகுந்து செல்வது, ஓடும் ரெயிலில் ஏறுவது, இறங்குவது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, ரெயில் கூரைகளில் பயணிப்பது, ஓடும் ரெயிலிலிருந்து கைகளையும் தலையையும் வெளியே நீட்டுவது....என எண்ணற்ற முறைகேடுகள் நாளும் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்தி, முறையான வழிகளைக் கடைபிடிக்க வேண்டியது, இன்றியமையாதது.

ரியாஸ் கூட, ரெயில் பாதை வழியாக வந்திருக்கக் கூடாது. ஆனால், அவர் வந்திருக்காவிட்டால் சபீர் அலியைக்கூட காப்பாற்றியிருக்க முடியாது. இந்த நிகழ்வு, ஓர் எதிர்மறை எடுத்துக்காட்டாக நம் எண்ணங்களில் நிற்கவேண்டும். ஒரு நொடியில் உயிரையும் உறுப்புகளையும் சிதைத்த அந்த நிகழ்வு, இனி நிகழாதிருக்க உறுதி பூணுவோம். ரெயில், ஒரு யோகியைப் போல, தனக்கான நேர்ப்பாதையில் தீர்க்கமாகப் பயணிக்கிறது. அதன் பாதையில் நாம் குறுக்கிடலாமா? அதன் தவத்தைக் கலைக்கலாமா? மனிதன் தடம் மாறலாமா? தண்டவாளத்திலிருந்து சற்றே அன்று; நிறையவே விலகியிரும் பிள்ளாய்!

Tuesday, July 13, 2004

எழுதுகோலின் கண்ணீர்



தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை இன்று மிகவும் இரங்கத்தக்கதாய் உள்ளது. அவர்களின் பொருளீட்டும் திறன் இறங்கு முகமாய் உள்ளது. இதனால் எழுத்தை முழுநேரத் தொழிலாய் எடுத்துக்கொண்டவர்கள், சத்தில்லாத கசப்பு மருந்தை விழுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அரசு ஊழியர், ஆசிரியர், பெரிய-நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுவோர், வங்கி ஊழியர்... போன்று வெகு சில துறையினர் மட்டும் ஓரளவு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் பலர் பகுதிநேர வேலைக்கும் நாள் கூலிக்கும் உதவியாளர் என்ற பெயரில் எடுபிடி வேலைக்கும் செல்ல, எழுத்தாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அப்படியே ஒரு வேலை கிடைத்தாலும் ரூ.1000 முதல் ரூ.3000 வரைதான் சராசரி ஊதியம் கிடைக்கிறது. இந்த ஊதியத்திற்கு அவர்கள் நாளுக்கு 12 மணிநேரமும் அதற்கு மேலும் பணியாற்றவேண்டியிருக்கிறது. கூடுதல் பணிச்சுமை குறித்து மூச்சு விட்டால்கூட உடனே வேலைக்கு ஆபத்தாகி விடுமோ என்று கவலைப்பட்டு "கடனே' என்று உழைக்கிறார்கள்.

இன்றிருக்கும் விலைவாசியில் இந்தத் தொகை போதுமா? அவர்களின் வாழ்க்கைத் தரம் குறித்து இந்தச் சமுதாயத்துக்கு ஏன் அக்கறை இல்லை? எழுத்தாளர்களின் உண்மையான திறமைக்கும் உழைப்புக்கும் இப்போது பெறுவதைப் போலப் பத்து மடங்கு கொடுக்கவேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது?

இவையெல்லாவற்றையும் விடக் கொடுமை, வேலையில் சேர்ந்த பிறகு ஏதும் எழுதக்கூடாது என்ற முன் நிபந்தனையில் வேலையில் சேர்ப்பது. எழுத்தாளர்கள், தம் சாரத்தையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு, தன்னைவிடத் தன் குடும்பத்திற்காகத் தன் எழுத்தையே தியாகம் செய்கிறார்.

அப்படியே அவரை எழுத அனுமதித்தாலும் சர்ச்சையில்லாத - சிக்கலில்லா தவற்றையே எழுதலாம் என்றும் நிர்வாகத்தினர் பலர் கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

"இதற்கெல்லாம் நான் கட்டுப்பட முடியாது. நீயுமாச்சு உன் வேலையுமாச்சு' என எழுத்தாளர் வெளியே வந்தால், அவருடைய மனைவியும் பிள்ளைகளும் "எங்களுக்கு என்ன வழி?' எனக் கேட்கிறார்கள். கிடைத்த வேலையைச் செய்து பொருளீட்டும் அவலம் நிகழ்கிறது.

வானொலி, தொலைக்காட்சி, பருவ இதழ்கள், திரைத்துறை ஆகிய அனைத்து ஊடகங்களிலுமே வாய்ப்புக் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் தொடர்ந்து கிடைப்பதில்லை. கிடைக்கிற வாய்ப்பிலும் எழுத்தாளர் தாம் விரும்புவதை வெளிப்படுத்த இயலுவதில்லை.

இந்த வாய்ப்புகளுக்காகத் தவமிருக்கும் எழுத்தாளர்களின் தன்மானம் இழிவுபடுத்தப்படுகிறது. இந்த இழிவுகளைப் பொறுத்துக்கொள்ளாவிடில் வாய்ப்பை வேறொருவருக்கு வழங்கிவிடுவேன் என்ற மறைமுக மிரட்டல் வேறு இருக்கிறது. எழுதியதற்கு ஊதியம் கேட்டாலே "வாய்ப்பிழப்பு மிரட்டல்' வருகிற அளவுக்கு இது முற்றிப்போய்விட்டது.

பெரிய கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் ஆகிவிடுவது என்ற கனவுகளோடு திரைத்துறையில் உழன்று வருவோர், வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தம்படைப்புகள் இன்னொருவர் பெயரில் வெளிவர உடன்படுகின்றனர். அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இதைவிடப் பெருங்கொடுமை, வெளிப்படையாகவே, ஒருவர் எழுத இன்னொருவர் பெயரில் வருவதே. மோசடியும் வரலாற்று ஏய்ப்புமான இச்செயலுக்கு எழுத்தாளர்கள் உடந்தையாய் இருப்பது, பெரும் வருத்தத்திற்கும் கன்டனத்திற்கும் உரியது.

இத்தகைய சிந்தனைச் சுரண்டலுக்கும் உழைப்புக் கொள்ளைக்கும் யார் காரணம்?

""உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? - உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?''
என்று பாடும் துணிச்சலை, இன்றைய எழுத்தாளர்கள் இழந்துவிட்டதேன்?

மன்னர்களுக்கு அறிவுரை - ஆலோசனை கூறி, உத்தரவு பிறப்பித்த படைப்பாளர்கள், இன்று "எழுத்துத் தொழிலாளி'களாகச் சிறுமைப்பட்டது ஏன்?

"இணைந்தே இருப்பது வறுமையும் புலமையும்' என்ற வசனம், இவ்வளவு குரூரமாகவா நிரூபிக்கப்படவேண்டும்?

தவறு யார் பேரில் இருக்கிறது?

கல்வியறிவும் எழுத்தறிவும் மிகக் குறைவானவர்களிடம் இருந்த அக்காலத்தில் அத்தகையோர் மீது மதிப்பு இருந்தது. சிறந்த கல்விமான்களின் - புலவர்களின் சொல், உயிர்பெற்று அப்படியே நடக்கும் என்று நம்பினார்கள். இதனால்தான் "அறம்' பாடும் இலக்கியமே பிறந்தது.

ஊர் ஊராகச் செல்லும் புலவர், தம் ஊருக்கு வந்தால் அவர் எங்கள் வீட்டில்தான் தங்கவேண்டும் என மக்கள் போட்டியிட்டார்கள். அவரிடம் "நற்சொல்' பெறத் தம் பிள்ளைகளை அழைத்து வந்தார்கள். அன்று கலாரசிகர்கள் அதிகம். ஒரு பாடலுக்கு ஊரையே - நாட்டையே பரிசளிக்க அரசர்கள் முன்வந்தனர். அதில் தற்புகழ்ச்சி என்ற உள்நோக்கம் இருந்தாலும் பொதுவான காவியங்களுக்கும் அரசர்கள் ஆதரவளித்தார்கள். ‘என் ஆட்சிக் காலத்தில் இக்காவியம் படைக்கப்பட்டது’ எனத் தற்பெருமை கொள்ளும் உள்நோக்கம் இதிலும் உண்டு. எனினும் படைப்பாளிகளுக்குப் பாதுகாப்பு இருந்தது.

இன்று 75% பேர் எழுத்தறிவு பெற்றிருந் தாலும் இன்று கலா ரசிகர்களின் எண்ணிக்கை, மிகக் குறைவு. மனிதர்களின் மனங்கள் சுருங்கிவிட்டன. அள்ளிக் கொடுக்க முடிந்தவர்களும் கிள்ளியே கொடுக்கிறார்கள். "என் வேலையை ஒத்தி வைத்துவிட்டு, படைப்பைப் படித்ததே எழுத்தாளருக்குத் தந்த வெகுமதி' என வாசகர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். புத்தகங்களையும் இதழ்களையும் பலர் இலவசமாகப் படிக்கவே விரும்புகின்றனர்.

நிலம் முழுதும் வறண்டுவிடுமானால் எழுத்தாளர் தம் விதையை எங்கே போய் விதைப்பார்? எழுதுகோலைப் பிடித்தவர் ஏழ்மையில் வாடினால் அது, இந்த மண்ணுக்கன்றோ மானக் கேடு?

மிஞ்சி மிஞ்சிப் போனால், எழுத்தாளருக்குப் பெரிய வருவாய், அவருக்குக் கிட்டும் புகழ்தான். படிப்போர் சொல்லும் "நல்லா இருக்கு' என்ற ஒரு பாராட்டுதான். இந்த வாய்ச் சொல்லை மட்டும் கொண்டு எழுத்தாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்ந்துவிட முடியுமா?

இதழ்கள் தரும் சன்மானம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகவில்லை. தொடக்கத்திலிருந்தே கட்பெறும்பாகத்தான் இருக்கிறது. அதிக விற்பனையுள்ள ஒரு சில இதழ்களைத் தவிர பெரும்பாலான இதழ்களை நட்டமில்லாமல் நடத்துவதே பெரும் சிக்கலாய் இருப்பதால், இதழ் முதலாளிகளைக் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால், நல்ல வருமானம் ஈட்டும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் பண்பலை ஒலிபரப்புகளும் திரைத்துறையும் எழுத்தாளர்களை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஓரளவு நல்ல சன்மானமாவது அளிக்கவேண்டும்.

எழுத்தாளருக்கு உரிய குறைந்த பட்ச மதிப்பையும் ஊதியத்தையும் நாம் வரையறுத்து வழங்கியாகவேண்டும். அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.

நூலகங்களில் எழுத்தாளர்களைப் பணியில் அமர்த்தலாம். பள்ளிக்கூடங்களில் படைப்பிலக்கியச் சிறப்பாசிரியர்களை நியமிக்கலாம். பிரச்சாரத்திற்கும் விளம்பரத்துக்கும் அரசு ஒதுக்கும் தொகையை எழுத்தாளர் வழியாகச் செலவிடலாம். அவர்கள் வழியாகப் பிரச்சாரம் செய்யலாம்.

எழுத்தாளருக்குக் குறைந்த வாடகையில் வீடு, போக்குவரத்து, மருத்துவ வசதி, அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி... என வாய்ப்புள்ள வசதிகளை ஏற்படுத்தி, மிகுதியாக்கி, எழுத்தாளரின் சமூக மதிப்பை உயர்த்தவேண்டும்.

அரசு மட்டுமின்றி நாட்டிலிருக்கும் அனைவரும் இதுகுறித்துச் சிந்திக்கவேண்டும்.

"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு',
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு'
என்ற பாரதியின் வாக்குகளை உச்சரித்துப் பெருமை கொள்கிறோம். அவற்றை நம் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்துள்ளோம்.

கவிஞர்களும் எழுத்தாளர்களும் நம் நாட்டின் செல்வங்கள் என்று நாம் பெருமை பேசுகிறோம். சங்க இலக்கியத்திற்காகவும் ஏனைய இலக்கியங்களுக்காகவும் இங்கும் வெளி மாநிலங்களிலும் - நாடுகளிலும் நாம் மார்தட்டிக்கொள்கிறோம்.

தற்கால இலக்கியவாதிகளின் நலன்களில் நாம் அக்கறைகொள்ள வேண்டாமா? புதிய பெருமைகளை நோக்கிப் பயணிக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டாமா?

எழுதுகோலின் கண்ணீரைத் துடைக்க, நம் அனைவரின் கரங்களும் நீளட்டும்.

Monday, July 12, 2004

கவிதையில் சொல் மேலாண்மை

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ்ப் படைப்பாளிகள் அதிகம் கையாண்ட ஒரு வடிவம், கவிதைதான். கவிதையோடு ஒப்பிடும்போது உரைநடையை "நேற்று' பிறந்த வடிவம் எனலாம். கவிதை என்ற பெயரில் வருகின்ற அனைத்தும் கவிதைகள்தானா, எது கவிதை என்ற விசாரணைக்குள் இப்போது நான் இறங்கப் போவதில்லை. கவிதை என்ற பரப்பிற்குள் சொற்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன, எவ்வாறு இடம் பெறலாம், எவ்வளவு இடம் பெறலாம் என்பது குறித்துக் கூற விரும்புகிறேன். விசுவாசமான பணியாளைப் போல மொழியை வேலை வாங்குவது எப்படி? நமது கருத்துகளையும் உணர்வுகளையும் சரியாகப் பிரதிபலிக்கக்கூடிய சொற்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்றும் பார்ப்போம்.

"கவிதை, தானாகப் பிறப்பது. அது, கவிஞரின் வழியாக வருகிறதே தவிர கவிஞருக்குச் சொந்தமானது இல்லை" þ இப்படி ஒரு கூற்று சிலரிடம் இருக்கிறது. கவிஞரின் எண்ணங்கள், வாழ்வனுபவம், திறமை, புலமை, உணர்வுகள், தேவை ஆகியவற்றை ஒட்டியே அவரிடம் கவிதை பிறக்கிறது. மரபணுக்கள் வழியே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உணர்வுகள் கூட அவரிடம் வெளிப்படலாம். ஆனால் அவர் எழுதிய கவிதைக்கு அவரே முழுப் பொறுப்பாளராவார். தேவை ஏற்பட்டால் அதை மாற்றி எழுதவோ, திருத்தி எழுதவோ அவர் முன்வரவேண்டும்.

தமிழ்க் கவிதைகளில் ஊளைச் சதை என்ற நிலைமாறி தமிழ்க் கவிதையே ஓர் ஊளைச் சதையாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தேவைக்கு அதிகமாக இருக்கிற சொற்களை நாம் ஊளைச் சதை என்கிறோம். இன்று பெரும்பாலான கவிதைகள், 2 வரிகளில் சொல்லவேண்டியதை 10 வரிகளில் சொல்கின்றன. ஒரே சொல்லில் சொல்ல வேண்டியதை இரண்டு வரிகளில் சொல் கின்றன. மௌன இடைவெளிகளிலும் சொற்களே நிரம்பி வழிகின்றன.

இங்கு நண்பர்கள் சிலரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இந்த வரிகள் இவர்களின் ஒட்டுமொத்த கவிதைக்கான எடுத்துக்காட்டு அல்ல. இவர்கள் நல்ல வரிகளையும் வேறு இடங்களில் படைத்துள்ளார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

புதுகை மா.உதயகுமாரின் புது வருஷம் பிறந்தது என்ற கவிதை:

வறுமையை
ஒழித்திடப் பிறந்தது
புத்தாண்டு!
பெருமையை
வளர்த்திடப் பிறந்தது
புத்தாண்டு!
வாய்மையைப்
பெருக்கிடப் பிறந்தது
புத்தாண்டு!
தீமையைக்
கருக்கிடப் பிறந்தது
புத்தாண்டு!


இப்படியாக மேலும் 40 வரிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 1991-இல் ஏப்ரல் 14 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் ஒலிப்பரப்பான இது, 1996-இல் வெளியான இவரின் வறுமை தந்த வரிகள் என்ற முதல் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.

தொடக்கநிலைக் கவிஞருக்கு உரிய அடையாளங்களை இதில் காணலாம். வானொலி- தொலைக்காட்சிக் கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், மேடைக் கவிதைகள் ஆகியவற்றின் பொது இயல்பு, அவற்றின் நீர்த்துப்போன கவியம்சம் தான். இதனை ஈடுகட்டுவதற்காக உச்சரிப்பையும் "கம்பீரமாக''ப் படிப்பதையும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

அடுத்து பாரி கபிலனின் களத்து மேடு (2001) தொகுப்பிலிருந்து ஒன்று.

சிகரெட் புகைத்து
அணைக்காமல்
விட்டெறிந்த
விரல்களுக்கு
நெருப்பிலிருந்து
தனித்துப் பறக்கும்
பொறி கண்டு
குப்பைகளும்
அதைச் சார்ந்த
குடில்களும்
அலறுகின்றன


இது, கவிதைக்குரிய தன்மை எதையும் பெறாமல் தீயணைப்புத் துறையின் அறிவிப்பைப் போல உள்ளது. ஆனாலும் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் இடம்பெற்றுவிட்டது.

அடுத்து, மல்லை மணிவாசகம் எழுதிய மாணிக்கப் பரல்கள் என்ற நூல் (1997). இதற்கு அப்போதைய கல்வி அமைச்சர் க. அன்பழகனார், அணிந்துரை அளித்துள்ளார். அதில், அவர் எடுத்துக்காட்டிய ஒன்று :

"மனித வாழ்க்கைக்கு 'இலக்கு' வேண்டும் என்பதனைக்

குறிக்கோள் இல்லாக் குவலய வாழ்க்கை
முறிந்து போகும் முடமாய் ஆகும்.
கொள்கை மாறாக் குறிக்கோள் வேண்டும்
கொள்கையில் வென்று குவலயம் ஆளலாம்


என்று பாடியுள்ளது இன்றைய இளைஞர்கட்கு வேண்டப்படும் இன்றியமையாத கருத்தென்பேன்".

இவர் கூறியுள்ளதன்படி இப்பாடலில் கருத்து மட்டுமே உள்ளது, கவிதை இல்லை.

அடுத்து, மு.வீரமுத்துவின் ஏவுகணைக் கவிதைகள் (1997) என்ற நூலில் கூட்டணி

நதிகளின் கூட்டணி கடல்தானே!
நரைகளின் கூட்டணி முதுமைதானே!
கோள்களின் கூட்டணி சூரியன்தானே!
காற்றின் கூட்டணி புயல்தானே!
அரசியல் கூட்டணி ஆட்சிதானே!
மனங்களின் கூட்டணி காதல்தானே!


இவை, மிகச் சாதாரண வரிகள். உரைநடை என்ற தகுதியைக்கூட பெற இயலாதவை. "ஓர் ஒன்று ஒன்று; ஓர் இரண்டு இரண்டு" என்ற வாய்பாடு போன்று எழுதப் பெற்றுள்ளது. ஆனால், அச்சேறிவிட்டது.

கடலில் ஒரு துளியைத்தான் நான் எடுத்துக் காட்டியுள்ளேன். இவைபோல் இலட்சக்கணக்கானவை, கவிதை என்ற பெயரில் தமிழில் புழங்குகின்றன. கவிதை எது என்று புரிந்துகொள்ளாமையும் சிறந்த கவிதைகளை வாசிக்காமையும் முறையான பயிற்சின்மையும் இத்தகைய கவிதைகள் பெருகக் காரணம்.

இவற்றுள் பல, நூலகங்களில் இடம் பிடித்து விடுகின்றன. "கவிதை" என்ற அடுக்கில் இவை அனைத்தும் இருக்கும்போது நல்ல கவிதை நூலைத் தேர்ந்தெடுப்பதே மிகவும் சிரமமாகிவிடுகிறது.

மிக வெளிப்படையாகத் "தாம் கவிதைகள் இல்லை" என அறிவித்துக்கொண்டவற்றைக் கண்டோம். அறிவிப்புகள், முழக்கங்கள் போதனைகள், சாடல்கள், புலம்பல்கள்... எனப் பலவும் கவிதையிலிருந்து முற்றிலும் அந்நியப் பட்டவை. ஒரு வகையில் இவை எளிமை யானவை; வசதியானவை. தன் கருத்து þ இயங்குதளம் ஆகியவற்றை வெளிப்படுத் துவதில் இவர்களுக்குத் தயக்கங்கள் இல்லை.

ஆனால், பூடக அம்சத்தோடும் திருகிய சொற்களோடும் வருகிற நவீன கவிதைகள் பல, அடிப்படை நேர்மை இல்லாதவை. "புரியாத கவிதைகள்" எனக் கண்டனம் பெறுகிறவை, அவை. கவிதைகளைப் பூட்டுவது தவறில்லை, ஆனால் சாவிகளையும் அங்கேயே வைக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

நவீன கவிதைகளில் தன்னிரக்கமும் இயலாமையும் எதிர்மறை உணர்வுகளும் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. எளிய சொற்களைப் பயன்படுத்தினாலும்கூட வாக்கிய அமைப்புகளும் வகையுளிகளும் கவிதையைச் சிக்கலாக்கி விடுகின்றன. நிறுத்தற் குறிகளோ, மேற்கோள் குறிகளோ, இடைவெளிகளோ இல்லாமல், நினைத்த இடத்தில் எல்லாம் வளைத்து ஒடித்து எழுதுவது, தவறான போக்கு.

தமிழ்மணவாளனின் அலமாரியில் ஓர் இராஜகிரீடம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகம் என்ற கவிதை இது.

உட்சேரும் தவிர்த்த லரிதாகும்
அழுத்தும் உள்ளுக்குள் கனமாகும்
காலத்தில் சுமையாகும் பின்
வலிக்கும் மருந்தின்றி இறுகும்
புலனாகும் நாய் வாலாட்டாது
குரைக்கும் விமானம் மேலெழும்பாமலே
களம் ஓடும் தகவலறிந்து கம்ப்யூட்டர்
கட்டுப் பாடிழக்கும் கட்டளை
ஏற்க மறுக்கும் யதார்த்தச்
செயல் விலக இயல்பு தடைபடும்
எதுவென அறிதலியலாது ஏதோ
வாகும் வெளிச்செல்ல எத்தனிக்க
இடமின்றித் தடுமாறும் குழப்பம்
ஊடாடும் எனினும் வழியின்றித்
தெளிவு உறங்கும் இடம்
வாய்த்ததும் புறம்செல்லும்
பாறைப் பனி உருகும் நீராகும்
சிலு சிலுப்பில் பூப்பூக்கும்
சுதந்திரமாய்


வாசிப்பை எளிமைப்படுத்தும் எந்தச் சிறு உதவியையும் கவிஞர், இங்கு செய்யவில்லை. அத்துடன் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளிகளைக் கூட பயன்படுத்தாமல் வாசகருக்குக் குழப்பத் தையும் உண்டாக்குகிறார்.

அடுத்து, லாவண்யா எழுதிய இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் என்ற தொகுப்பில், என்ன செய்யலாம்? என்றொரு கவிதை: அது,

எஞ்சியதெனக்கென் தந்தையிடமிருந்து
புராதன நினைவுச்சின்னமாயொரு வீடு
.

என்று தொடங்குகிறது "எஞ்சியதெனக்கென்", "நினைவுச்சின்னமாயொரு" என்பது போல் நூலில் பல இடங்களிலும் இரண்டு-மூன்று சொற்களைச் சேர்த்துச் சேர்த்து எழுதியுள்ளார். இது வாசிப்பிற்கு இடையூறு செய்வதாய் உள்ளது.

அடுத்து, கவிதையிலிருந்து எந்தவொரு சொல்லையும் உருவ முடியாதபடி கச்சிதமாக இருக்கவேண்டும். என்பதாகும், எனப்படும், எனவே, அதனால், நான் சொல்ல வருவது... போன்ற விவரிப்புத் தன்மையுடைய சொற்கள் கவிதையில் இடம்பெறக்கூடாது. கவிதை, சுண்டக் காய்ச்சிய பாலாக இருக்கவேண்டும், தேநீர்க் கடையில் கிடைக்கும் பாலாய் இருக்கக்கூடாது.

ஆசு எழுதிய என்றொரு மௌனம் (1999) நூலில், பசியுடன் சில வினாக்கள் என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது:

பசியுடன் படுத்துக்கொள்வோம்
என அழுகுரலிடும் அன்பானவளே
கரையான்கன் அரித்து சேதப்படுத்திய
பழைய புல்லாங்குழலின் சுரம் பாடுமோ
நம் துயரம்.


இதில் "கரையான்கள் அரித்து சேதப்படுத்திய பழைய" என்பதற்குப் பதில் "கரையான்கள் அரித்த புல்லாங்குழலின்" என இருந்தாலே போதும். நமக்குச் செய்தி, விளங்கிவிடுகிறது.

பழநிபாரதியின் காதலின் பின்கதவு (2001) என்ற நூலில் யாருக்கும் தெரியாதவள் என்ற கவிதை:

உடைந்து கிடந்தன
வளையல் துண்டுகள்
உதிர்ந்து கிடந்தன
மல்லிகைப் பூக்கள்
புகைந்துகொண்டிருந்தது
சிகரெட் துண்டு
கிழிந்து கிடந்தது
ரவிக்கை
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்
கடைவீதியில்
வளையல்
பூ
ரவிக்கை என்று
வந்துபோனார்கள்
நிறையப் பெண்கள்
எந்தப் பெண்ணுக்கும்
தெரியவில்லை
அந்தப் பெண்ணைப் பற்றி


இதில் "காவல் நிலையத்திற்குப் பின்னால் ஆணுறைகள்" என்ற இரு வரிகளில் நிறைய செய்திகள் அடங்கியுள்ளன. மேலும் தேவையெனில்

வளையல் துண்டுகள்,
உதிர்ந்த மல்லிகை,
புகையும் சிகரெட்
கிழிந்த ரவிக்கை
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்


எனச் சுருக்கலாம். குறைந்தபட்சம் நான்கு வரிகளை மிச்சப்படுத்தலாம்.

அடுத்து, சொற்களைப் பொருத்தமாகக் கையாளுவது குறித்துப் பார்ப்போம். வரலாற்று நாவலாசிரியருக்கு உள்ள விழிப்புணர்வு, நம் கவிஞர்களுக்கு இருக்கவேண்டும்.
வட்டார வழக்குகளோ, தொழிற் பெயர்களோ, திசைச் சொற்களோ, பல்வேறு பருவங்கள், பழக்க-வழக்கங்கள் சார்ந்த சொற்களோ - அவற்றை முரண்களற்றுப் பொருத்தமாகக் கையாளவேண்டும்.

மாலதி மைத்ரியின் நீரின்றி அமையாது உலகு (2003) நூலில் அறுந்த வால் என்ற கவிதை,

எனது கனவில் சிறுபூச்சியாய்
சுவரில் ஊர்ந்துகொண்டிருக்கிறாய் நீ
வாய்பிளந்து உன்னை விழுங்க வருகிறேன்
அசைவின் அதிர்வில் சுதாரித்து
அறையளவு புடைத்தெழுந்து
என்னைக் கால்களால் கவ்வியிழுக்கிறாய்


எனத் தொடர்கிறது கவிதை. பொதுவாக வாயால் பற்றுவதையே 'கவ்வுதல்' என்போம். கைகால்களால் 'பிடித்து' இழுக்கலாம். 'கவ்வி' இழுக்க முடியாது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர், கடலைத் தாண்டும் ஓடங்கள் எனத் தன் கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பிட்டிருந்தார். ஓடங்களால் கடக்கத்தான் முடியும், தாண்ட முடியாது, என அது குறித்து விமர்சித்திருக்கிறேன்.

ஒரு பொருள் குறித்த பல சொற்கள், தமிழில் உள்ளன. சிரிப்பு, புன்னகை, முறுவல், நகைப்பு, இளிப்பு எனப் பல சொற்கள் முன் நிற்கும்போது கவிஞர்தான் தமக்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

காடு, கானகம் என்ற சொற்களுக்குப் பொருள் ஒன்றாயினும் காடு þ முழுவதும் வல்லினச் சொல். கானகத்திலோ மெல்லினத் தின் ஆட்சி இருக்கிறது. கோபத்துடன் சொல்லும் போது "காட்டான்" என்றும் பாராட்டிச் சொல்லும்போது "கானக மனிதன்" என்றும் சொல்கிறோம் இல்லையா?

இதுபோலவே தமிழின் இலட்சக் கணக்கான சொற்கள், கவிஞருக்கு முன் இருக்கும்போது, அவர், தமது கவிதைக்கு மிகப் பொருத்தமான சொல்லையே தேர்ந்தெடுக்க வேண்டும். சிற்பி, தன் சிற்பத்திற்கு அணுவணு வாக அழகேற்றுவதுபோல் கவிதைக்கு மெருகேற்ற வேண்டும்.

தமிழ்க் கவிஞர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் மாற்றுச் சொற்கள் குறித்து விரிவாக அறிந்திருக்க வேண்டும். நானறிந்த பலர், அதிக வடசொற்களைக் கலக்கிறார்கள். வடசொற்களின் மெல்லின ஓசையில் அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய சொற்களை, முயன்றால், தமிழிலேயே அவர்களால் பெற முடியும்.

கவிதையின் அளவு குறித்து, கவிஞர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். 32 வரிகள், 24 வரிகள் 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை வாசிக்குமாறு பலர் வலியுறுத்துவதன் காரணம் இதுவே. எவ்வளவு அதிகமாக எழுதுகிறோம் என்பதைவிட எவ்வாறு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.

நீள் கவிதைகள் தமிழில் வெற்றிபெற இயலவில்லை. குறுங்கவிதைகளே இங்கு அதிகச் செல்வாக்குடன் உள்ளன. பாரதியின் குயில் பாட்டை விட அவரின் அக்கினிக் குஞ்சு, மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமக்குள்ளேயே சுய வரையறைகளுடன் கவிஞர்கள் இயங்குவது நல்லது.

வீதியில் நடக்கும்போது திடீரெனக் கிடைக்கும் ஒரு சில்லரைக் காசைப்போல், நமக்குத் திடீரென ஒரு சொல்லோ, ஒரு வரியோ கிடைக்கும். அதன் தூண்டுதலில் நாம் ஒரு முழுக் கவிதையை உருவாக்க வேண்டும். அது, எல்லோர்க்குமான கவிதையாக, குறைகளின்றி இலக்கணப் பிழைகள் இல்லாமல் அமைவது இன்றியமையாதது.

பலர், ஒற்றுப் பிழைகள், சந்திப் பிழைகள், ஒருமைþபன்மைப் பிழைகள் புணர்ச்சிப் பிழைகள்... என ஏராளமான பிழைகளோடு எழுதி வருகிறார்கள். ஓட்டையுள்ள பலூனில் காற்று தங்காது.

நாம் நமது கவிதையை ஆளவேண்டும். அப்போதுதான் நம் கவிதை, உலகை ஆளும்.



(முரண்களரி அமைப்பின் சார்பில் சென்னை, அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் மைய நூலகத்தின் சிற்றரங்கில் 4.7.2004 அன்று மாலை வாசிக்கப்பெற்றது.)

Thursday, July 08, 2004

வீரதீரச் சிறுவர்கள் - 1

சிறுத்தையை விரட்டிய குட்டி

பண்டைக் காலத்தில் தமிழ்ப்பெண் ஒருத்தி, புலியை முறத்தினால் விரட்டினாள் என்று கேள்விப்பட்டுள்ளோம். இன்றும்கூட கழுத்துச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்த பெண்; ஈவ்-டீசிங் செய்தவனைச் செருப்பால் அடித்தவர்... என நிறைய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இத்தகைய வீர தீரச் செயல்கள் பரவலாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு 2003, நிஷா என்ற பெண், வரதட்சனை கேட்டுத் துன்புறுத்திய மணமகன் வீட்டாரைக் காவல் நிலையத்துக்கு அனுப்பியதை நாம் அறிவோம்.

வளர்ந்த பெண்கள் மட்டுமல்லாது, சிறுவர்களிடமும் வீரம் வளர்ந்து வருகிறது. "இளங்கன்று பயமறியாது" என்பதற்கேற்ப "வளரும் பயிர் முளையிலேயே தெரியும்" என நாம் மகிழுமாறு எண்ணற்ற இளங்குருத்துகள் தோன்றி, நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அவர்களுள் ஒருவரே குஜராத்தைச் சேர்ந்த குட்டி. இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சிறுத்தையிடமிருந்து காப்பாற்றிய தீரச் சிறுமி. 13 வயதே நிறைந்த, கூச்சமும் கோழைத்தன்மையும் உடைய இந்தச் சிறுமியா இதைச் செய்தது? ஆம். மன வலிமை இருந்தால் மற்ற வலிமைகள் எல்லாம் தானே வந்து சேரும் என்பதற்கு இதோ குட்டியே சிறந்த சான்று.

அந்த அற்புத நிகழ்ச்சி எப்படி நடந்தது?

2002 மார்ச் 22 ஆம் தேதி. குஜராத் மாநிலம் தோஹத் மாவட்டத்தைச் சேர்ந்த கதலியா கிராமத்தில் குட்டி வசிக்கிறார். சபர்கந்தா மாவட்டம், தட்கல் கிராமத்தில் குட்டியின் அண்ணன் பாபுபாய் வசிக்கிறார். குட்டி, அண்ணனைக் காண, தட்கல் கிராமத்துக்கு வந்தார்.

அண்ணனுக்கு அழகான இரண்டு குழந்தைகள். ஒருவன், இரண்டு வயதான விபுல்; மற்றொருத்தி பிறந்து ஆறே மாதமான பாயல். தட்கல் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஒரு பண்ணை உண்டு. அங்கு அண்ணனின் இரு குழந்தைகளோடு குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது மணி, இரவு 10.30.

கிராமத்துக்கு அருகிலிருந்து இரை தேடியபடி ஒரு சிறுத்தை, பதுங்கிப் பதுங்கி வந்தது. மனித வாசனையை நுகர்ந்து பண்ணைக்குள் நுழைந்துவிட்டது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் அருகிலும் வந்துவிட்டது.

முதலில் அது, ஆறு மாதக் குழந்தை பாயலைத் தாக்கியது. அப்படியே விபுலையும் அடித்தது. விபுலை மெல்ல அந்த இடத்திலிருந்து இழுத்துக்கொண்டு ஓடப் பார்த்தது. விபுல், மரணபீதியில் தன் உயிரைக் காப்பாற்ற வேண்டி ஓலமிட்டான். அவன் அலறலைக் கேட்டு, குட்டி விழித்துக் கொண்டாள். தன் கண்ணெதிரே விபுலை, சிறுத்தை இழுத்துச் செல்வதைக் கண்டாள். துணிவுடன் சிறுத்தைக்கு எதிராக விபுலைத் தன் பக்கமாக இழுக்கத் தொடங்கினாள். இந்தப் போராட்டத்தில் சிறுத்தை, விபுலை விட்டுவிட்டு குட்டியைத் தாக்கத் தொடங்கியது. குட்டியின் இடது கையைக் கடித்தும் விட்டது. ஆனாலும் குட்டி, பயந்துவிடவில்லை. தொடர்ந்து போராடினாள்.

அதே நேரம் குட்டியின் அண்ணன் பாபுபாயும் மற்றவர்களும் அங்கு விரைந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சிறுத்தை, தப்பித்து ஓடியது. இரண்டு குழந்தைகளையும் குட்டியையும் உடனே குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளையாக அவர்கள் மூவரும் பிழைத்துவிட்டார்கள்.

"குட்டி மட்டும் தீரத்தோடு போராடியிருக்காவிட்டால் நாங்கள் எங்கள் குழந்தைகளை இழந்திருப்போம்" என்று பாபுபாயும் அவர் மனைவி சுர்தாபென்னும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

ஆனால் குட்டி, இப்போதும் அதிகம் பேசவில்லை. "அது, பாயலைத் தாக்கியது. அது என்ன மிருகம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், விபுல் உரக்க அழுததைக் கேட்டேன். அவன் தலையிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அவனைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்" என்று மட்டுமே கூறினாள்.

குட்டியின் இந்தத் துணிச்சலான செயலை, குஜராத் மாநில நாளிதழ்களும் பருவ இதழ்களும் பெரிய அளவில் வெளியிட்டன. குஜராத் மாநிலக் குழந்தைகள் நலக்கழகம், இச் செய்தியை அறிந்தது. இந்தியக் குழந்தைகள் நலக் கழகத்தின் தீரர் விருதுக்குக் குட்டியின் பெயரைப் பரிந்துரைத்தது.

குட்டிக்கு இந்தியப் பிரதமர் கைகளால் டெல்லியில் கீதா சோப்ரா விருது வழங்கப் பட்டது. அகமதாபாத் நகரிலும் குட்டிக்குப் பாராட்டு விழா நடந்தது. குட்டி, இந்தியச் சிறுவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.



வாரசுரபி, ஜுன் 4 2004

Wednesday, June 30, 2004

வருகிறது சித்திரசுரபி

அமுதசுரபி, வாரசுரபிக்கு அடுத்தபடியாகப் பிறக்க இருக்கிறது, சித்திரசுரபி. புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுக்காகவே வெளிவரும் இணைய இதழ். இரு வாரங்களுக்கு ஒரு முறை வலையேறும். ஒவ்வோர் இதழும் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான படங்களைக் கொண்டிருக்கும். ஓர் இதழுக்குக் குறைந்தபட்சம் 16 படங்கள் வெளியிடத் திட்டம். உலகெங்கும் உள்ள தமிழன்பர்கள், தாம் எடுத்த , தமக்குச் சொந்தமான புகைப்படங்களை எமக்கு அனுப்பலாம். தாம் வரைந்த ஓவியங்களையும் கேலிச் சித்திரங்களையும்கூட அனுப்பலாம். படங்களுக்குப் பொருத்தமான செய்திக் குறிப்பு, வர்ணனை, கவிதை என 2 அல்லது 3 வரிகளில் எழுதி அனுப்புவது சிறப்பு. இதழ் முழுதும் ஒரே நபரின் படங்கள் வெளிவருமானால் இறுதிப் படமாக, புகைப்படக் கலைஞர் அல்லது ஓவியரின் புகைப்படத்தையும் அவரைப் பற்றிய சிறுகுறிப்பையும் வெளியிடலாம். அனுப்புவோர், இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இலாப நோக்கற்ற, பரிசோதனை முறையிலான இம்முயற்சியில் பங்கேற்க வருமாறு ஆர்வலர்களை அழைக்கிறோம். அன்பர்கள், தமது படங்களை அனுப்பவேண்டிய முகவரி :chitrasurabi@rediffmail.com
- அண்ணா கண்ணன், பொறுப்பாசிரியர்.

Tuesday, April 06, 2004

Hello, everybody,
I'm Anna kannan.

I'm a poet, with much a love for nature.

I had done my M.Phil on E-zines in Tamil.
Now working for my Ph.D. Research Scholar on e-governance in Tamil.

Presently the Editor-in-Charge of the 57 years old Literary magazine in Tamil.

I have authored 8 books of Poetry, Story, Essays & Thesis. Two of my poetries have been transalated to more than 30 languages.