!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2006/09 - 2006/10 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, September 30, 2006

தமிழ்சிஃபி மகாத்மா காந்தி சிறப்பிதழ்

'இப்படியொரு மனிதர் ரத்தமும் சதையுமாக இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே நடமாடினார் என்பதை வருங்காலத் தலைமுறை நம்புவது கடினம்' என்று காந்தியைக் குறித்து ஐன்ஸ்டீன் அன்றே கூறினார். அப்படி இருக்கையில் இன்றைய சூழலில் தேசத் தந்தை காந்தியை நினைவுகூர்வது மிகவும் முக்கியம்.

எனவே அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்சிஃபி சார்பில் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம். இதில் காந்தியின் பல்வேறு புகைப்படத் தொகுப்புகளும் காந்தியின் எழுத்துகள் சிலவும் காந்தியைப் பற்றிய எழுத்துகள் பலவும் இடம் பெற்றுள்ளன.

கி. ராஜநாராயணன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் கட்டுரைகளுடன் பி.கே. சிவகுமாரின் 'கண்டுணர்ந்த காந்தி' என்ற பத்தியும் சிறப்பிதழுக்கு வலிமை சேர்க்கிறது. காந்தியை நவீன ஓவியமாகவும் நீங்கள் கண்டு களிக்கலாம்.

காந்தி அன்பர்களை இந்தச் சிறப்பிதழ் கவரும் என்று நம்புகிறேன்.

Thursday, September 28, 2006

சென்னையின் பண்பலைவரிசைகள்

சென்னையின் பண்பலைவரிசைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. அரசு சார் பிரசார் பாரதியின் சார்பில் ரெயின்போவும் கோல்டும் ஒலிபரப்பாகி வருகின்றன. சன் குழுமத்திலிருந்து சூரியன் வெளிவருகிறது. த டைம்ஸ் குழுமத்திலிருந்து மிர்ச்சி வழிகிறது. ஸ்டார் குழுமத்திலிருந்து ரேடியோ சிட்டியும் ரிலையன்ஸ்-அனில் அம்பானி குழுமத்தின் அட்லாப்ஸ் நிறுவனத்திலிருந்து பிக் எஃப்.எம்.மும் தினத்தந்தி குழுமத்தின் மலர் பப்ளிகேஷன்ஸிலிருந்து ஹலோ எஃப்.எம்.மும் ஒலிபரப்பைத் தொடங்கியுள்ளன.

பெரும்பாலும் அனைத்திலும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளே 24 மணி நேரமும் ஒலிபரப்பாகின்றன. வாசகர்கள் தொலைபேசியில் அழைத்துத் தங்கள் விருப்பப் பாடல்களையும் அனுபவங்களையும் கருத்துகளையும் சொல்லும் வாய்ப்பினை அனைத்து அலைவரிசைகளும் வழங்குகின்றன. அப்படிப் பேசுபவர்களுக்குப் புதிய திரைப்படத்திற்கான இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பரிசாக அளிக்கின்றன. மேலும் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.)ப் போட்டிகளைக் கட்டாயம் நடத்துகின்றன.

வெளி நிறுவன விளம்பரங்கள் ஒரு புறம் இருக்க, தங்கள் சொந்த விளம்பரங்களை அதிகமாக ஒலிபரப்பி வருகின்றன. திரைப்படப் பாடல்களிலும் இனிய பாடல்களைக் காட்டிலும் குத்துப் பாடல்களையும் இரைச்சலான பாடல்களையும் அதிகம் ஒலிபரப்பித் தொலைக்கின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிக் கலப்புடன், கொச்சையான மொழியுடன் பெரும்பாலான தொகுப்பாளர்கள் தொகுப்புரை வழங்குகிறார்கள். பலவும் மிகவும் சொதப்பலாக உள்ளன. நேரத்தை வீணடிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

சாங், டோண்ட் மிஸ் இட், உங்க ஃபேவரைட், ஸ்டே டியூண்டு... என் வெள்ளம் போல் ஆங்கிலச் சொற்கள் மக்களிடம் திணிக்கப்படுகின்றன. மொத்தத்தில் கணக்கெடுத்தால் தொகுப்பாளர் பேசுவதில் பத்துக்கு ஐந்து சொற்களாவது வேற்று மொழிச் சொற்களாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

குறிப்பிடத்தக்கவை:

எஃப்.எம். ரெயின்போவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செய்திச் சுருக்கம் வெளியாகிறது. காலை ஏழரை முதல் எட்டரை வரை நாள்தோறும் கர்நாடக இசையை வழங்குகிறது. அது மட்டுமின்றி அரசு சார் நிகழ்ச்சிகள் பலவும் பயனுள்ள வகையில் ஒலிபரப்பாகின்றன. புதிர் நிகழ்ச்சிகள் சிலவற்றின் மூலம் பொது அறிவை வளர்க்கிறது. இரவில் 10 மணி முதல் பழைய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பிக் காற்று வெளியை அழகாக்குகிறது.

எஃப்.எம். கோல்டில் கிரிக்கெட் போட்டிகளின் போது நேர்முக வர்ணனையைக் கேட்கலாம். மேலும் தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி நிகழ்ச்சிகளும் அவ்வப்போது ஒலிக்கின்றன.

சூரியன் எஃப்.எம்.மில் காலை 9 முதல் 10 வரை ஒலிபரப்பாகும் பிளேடு நம்பர் ஒன் என்ற கடி ஜோக் நிகழ்ச்சி, சிற(ரி)ப்பாக உள்ளது. சின்ன தம்பி - பெரிய தம்பி, கிட்டு மாமா - சூசி மாமி ஆகிய நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்கவில்லை.

மிர்ச்சியில் காலை, மாலை பரபரப்பு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் பற்றிய செய்திகள் பயனுள்ளவை. காலையில் சுசித்ராவின் இயல்பான பேச்சும் சிரிப்பும் பாட்டும் களை கட்டுகிறது. இரவில் 9 மணி முதல் பழைய இனிய திரைப்படப் பாடல்களைக் கேட்கலாம்.

சிட்டி, பிக், ஹலோ ஆகியவை இனிதான் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். ஹலோ, தன் சோதனை ஒலிபரப்பைத் தொடங்கியுள்ளது. மேலும் 106.4 MHzஇல் நிகழ்ச்சிகளைக் கேட்கும் நேயர்களுக்கு 1064 கிராம் தங்கம் வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

சென்னை வானொலி என்றால் ஒன்றே ஒன்று இருந்தது போய், இப்போது மொத்தம் பத்து வானொலி அலைவரிசைகள் வந்துவிட்டன. (பண்பலை தவிர சென்னை வானொலியின் மத்திய அலையில் இரண்டு அலைவரிசைகளும் விவிதபாரதியும் ஒலிபரப்பாகி வருகின்றன)

பண்பலைகளின் பெயர் - அலைவரிசை எண்- முழக்க வாசகம்:

எஃப்.எம். ரெயின்போ - 107.1 MHz - ஹாட்டான சென்னையின் கூலான எஃப்.எம்.

எஃப்.எம். கோல்டு - 105.0 MHz

சூரியன் எஃப்.எம். - 93.5 MHz - கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

ரேடியோ மிர்ச்சி - 98..3 MHz - செம ஹாட்டு மச்சி

ரேடியோ சிட்டி - 105.8 MHz - நம்ம சிட்டி நம்ம லைஃப்

பிக் எஃப்.எம். - 92.7 MHz - பேசுங்க பாடுங்க லைஃப் கொண்டாடுங்க

ஹலோ எஃப்.எம். - 106.4 MHz - அக்டோபர் 2 முதல் அதிகாரபூர்வமாக ஒலிபரப்பைத் தொடங்குகிறது.

Wednesday, September 27, 2006

திமுக கூட்டணியில் திருமா

தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாகத் தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதிமுக கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. அதே கையோடு திமுக கூட்டணியிலும் இணைந்துவிட்டது.

ஜெயலலிதாவுடன் கைகோத்து மேடைகளில் தோன்றிய திருமா, திமுகவில் சேரும் அன்றுவரைகூட அதிமுக சார்புடன் இருப்பதாகவே காட்டிக்கொண்டார். செப்.27 அன்று வெளியிட்ட அறிக்கையில், "அ.தி.மு.க. தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் 4 சதவீத இடங்களைப் பெற்று உடன்பாடு செய்துள்ளது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. பொறுப்பாளர்களுடன் நம் தோழர்கள் சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் பேச்சு வார்த்தையில் தேக்கம் ஏற்பட்டது. இதனைச் சில தொலைக்காட்சிகள் ஊதிப் பெருக்கிக் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. அ.தி.மு.க.வுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகிறோம். பேச்சு வார்த்தையின் போது சிக்கல் ஏற்பட்டுள்ள ஒரு சில மாவட்டங்களில் அவற்றைச் சரி செய்து இணக்கமுடன் செயல்பட முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சிக்கல் எதுவும் இல்லை. ஆகவே விடுதலைச் சிறுத்தைகள், அ.தி.மு.க.வினருக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால், அன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்த பிறகு திருமா, இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், அணியிலிருந்து வெளியேறிவிட்ட பிறகு திருமாவுக்கு ஒதுக்கிய 4 விழுக்காட்டு இடங்களில் அதிமுகவோ, அதன் தோழமைக் கட்சிகளோ போட்டியிட முடியாது. இதன் மூலம் மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக, 4 விழுக்காட்டு இடங்களை இழந்திருக்கிறது.

திருமா, அதிமுக தலைமையிடம் 10 விழுக்காடு இடங்கள் கேட்டதாகவும் 4 விழுக்காடு இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அம்மா கண்டிப்புடன் கூறிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. அதனால் கடுப்படைந்த திருமா, அம்மாவை நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்.

இந்த மாற்றத்தின் மூலம் திமுக அணி, கூடுதல் வலிமை பெற்றிருக்கிறது. இது, ஒரு வகையில் கருணாநிதிக்கு வெற்றிதான். திமுக கூட்டணி உடையும்; மைனாரிட்டி ஆட்சி கவிழும் என்று அதிமுகவும் மதிமுகவும் திரும்பித் திரும்பிச் சொல்லி வருகையில் நடப்புகள், தலைகீழாக உள்ளன. அதிமுகவிலிருந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சண்முகத்தைத் தலைமைக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் திமுக வெற்றி அடைந்திருக்கிறது. அவர் விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படுவதுடன் திமுக ஆதரவு உறுப்பினராகச் சட்டமன்றத்தில் தொடரவும் வாய்ப்பிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவுடன் நல்லுறவு பாராட்டி வந்ததும் இலவசத் தொலைக்காட்சி வழங்கும் குழுவில் இடம் பெற்றதும் திருமாவளவன், கலைஞருக்குக் கடிதம் எழுதியதும் இந்தக் கூட்டணிக்கு அச்சாரமாகவே கொள்ள இடமுண்டு. ஜெயலலிதா, திருமா விடயத்தில் போதுமான விழிப்புணர்வுடன் இல்லை என்பதையும் ஆனால், திருமா அரசியலில் தேறிவிட்டார் என்பதையும் இந்த மாற்றம் எடுத்துக் காட்டுகிறது.

நன்றி: தமிழ்சிஃபி

Tuesday, September 26, 2006

தமிழ்சிஃபி நவராத்திரி சிறப்பிதழ்

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தமிழ்சிஃபி இணைய இதழ், சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளது.

இதில்

எல்.ஆர். ஈஸ்வரி, பி.சுசீலா ஆகியோர் பாடிய அம்மன் பாடல்கள்; குடவாயில் சகோதரிகளின் குரலில் 20 பாடல்கள்; செளந்தர்ய லஹரியின் சுலோகமும் பொருளும் ஆகிய ஒலிப் பதிவுகளைக் கேட்கலாம்.

மேலும் செளந்தர்ய லஹரியின் இலக்கிய நயத்தையும் லட்சுமி - சரஸ்வதி ஆகியோருக்கு இடையிலான வேதாந்தக் கண்ணோட்டத்தையும் கல்யாணி வெங்கடராமன் அழகுற விவரித்துள்ளார். ஷைலஜா, நவராத்திரி சுபராத்திரி என்ற கட்டுரையில் இந்தியா முழுவதும் நவராத்திரி கொண்டாடப்படும் விதத்தை விளக்கியுள்ளார்.

மேலும் ந. பிச்சமூர்த்தியின் 'விஜயதசமி' சிறுகதையும் மகாகவி பாரதியின் பல்வேறு சக்திப் பாடல்களும் இச்சிறப்பிதழுக்கு வலிமை சேர்க்கின்றன.

நவராத்திரி கொண்டாடப்படும் முறைகள், தத்துவங்கள், கொலு அமைக்கும் விதம், வகைகள், நவராத்திரி விரதம், அம்மன்களின் பெருமைகள், சுண்டல் செய்யும் விதங்கள், நவராத்திரி நைவேத்தியப் பட்டியல்.... எனப் பலவும் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.

இந்தச் சிறப்பிதழ், வாசகர்களைக் கவரும் என்று நம்புகிறேன்.


Sunday, September 17, 2006

தந்தை பெரியார் சிறப்பிதழ்

தமிழ்சிஃபி வழங்கும் தந்தை பெரியார் சிறப்பிதழ்: செப்டம்பர் 17, பெரியாரின் 127ஆவது பிறந்த நாள். இந்நாளில் பெரியாரைப் பற்றிப் பெரியோர் பலரின் கருத்துகளை இங்கே நினைவுகூரலாம்.



Saturday, September 09, 2006

தமிழ்சிஃபியில் என் ஓராண்டுப் பணிகள்

2005 செப்டம்பர் 9 அன்று சிஃபியில் பணியில் சேர்ந்த நான், இந்த மாதம் 8ஆம் தேதியுடன் ஓராண்டினை நிறைவு செய்துள்ளேன். இணைய இதழ் ஆசிரியராக இந்த ஓராண்டில் நான் ஆற்றிய பணிகளுள் சில இங்கே:

வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் தயாரித்த சிறப்பிதழ்கள்:

நவராத்திரி சிறப்பிதழ் (2005)

தீபாவளி சிறப்பிதழ் (2005)

ஆண்டிறுதிச் சிறப்பிதழ் (2005)

பொங்கல் சிறப்பிதழ் (2006)

குடியரசு தினச் சிறப்பிதழ் (2006)

காதலர் தினச் சிறப்பிதழ் (2006)

ஜெ சிறப்பிதழ் (2006)

மகளிர் தினச் சிறப்பிதழ் (2006)

தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் (2006)

தேர்தல் 2006 சிறப்பிதழ் (2006)

லைலா சிறப்பிதழ் (2006)

ஃபிபா கால்பந்துத் திருவிழா (2006)

சுதந்திர தினச் சிறப்பிதழ் (2006)

சென்னை தினம் - 367 (2006)

பிள்ளையார் சதுர்த்தி சிறப்பிதழ் (2006)



என் அழைப்பை ஏற்றுத் தமிழ் சிஃபியில் எழுத்துப் பத்தி தொடங்கியவர்கள்:

வெங்கட் சாமிநாதன்
பாக்கியம் ராமசாமி
கல்யாணி வெங்கடராமன்
நேசகுமார்
பி.கே.சிவகுமார்
சுபமூகா
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
நாகேஸ்வரி அண்ணாமலை


ஒலிப் பத்தி தொடங்கியவர்கள்:

நா.கண்ணன்
ஷைலஜா
வ.ஐ.ச.ஜெயபாலன் - வாசுகி ஜெயபாலன்
ஸ்ரீதேவி்


புதிதாக வலையேற்றம் கண்ட இலக்கிய இதழ்:

வடக்கு வாசல்

தமிழ்சிஃபியின் புதிய பகுதிகள்:

செவிநுகர் கனிகள் (ஆடியோ)
திரை ஓடை - டிரெய்லர் (வீடியோ)
குறுஞ்செய்தி உலகம்
வாசகர் கடிதங்கள்

அறிமுகங்கள்:

ஆசிரியர் பரிந்துரை எனப்படும் Editor's choice, தமிழில்
சென்னை பாக்ஸ் ஆஃபீஸ் (Box office hit reports), தமிழில்
அரட்டையில் (Chat) பங்கேற்கும் நட்சத்திரங்களின் ஆங்கில பதில்கள், தமிழில்
தகவல் சித்திரங்கள் (Infographics), தமிழில்.


குறிப்பிடத்தகுந்தவை:

* தமிழ் இணைய இதழ்களைப் பொறுத்தவரை ஒலிப் பதிவுகளையும் ஒலிப் பத்திகளையும் அறிமுகப்படுத்தி தமிழ்சிஃபி, முன்னோடிப் பணியாற்றி வருகிறது. தரமான ஒலிப் பதிவுகளை எவர் அனுப்பினாலும் அதை வெளியிடச் சித்தமாய் உள்ளோம்.

* பெருகிவரும் குறுஞ்செய்திகளுள் சுவை / பயன் மிகுந்தவற்றைத் தொகுத்து வருகிறோம். இதுவும் ஒரு முன்னோடிப் பணியே. எவரும் தமக்கு வந்த குறுஞ்செய்திகளைத் தொகுத்து மின்னஞ்சலில் எமக்கு அனுப்பி வைக்கலாம்.

* கருத்துக் கணிப்புகளை அதிகப்படுத்தியதன் மூலம் தளத்திற்கும் வாசகர்களுக்கும் இடையில் ஊடாட்டங்கள் அதிகரித்துள்ளன. tamileditoratsifydotcom என்ற மின்னஞ்சல் முகவரியைத் தந்து, வாசகர்களின் கடிதங்களையும் படைப்புகளையும் கருத்துகளையும் வரவேற்று, வெளியிட்டு வருகிறோம்.

* மீயுரைக் குறிப்பு மொழியில் (எச்டிஎம்எல்) பல சிறப்பிதழ்களை உருவாக்கியுள்ளோம்.

* தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டிய மே மாதத்தில், தமிழ்சிஃபி தளத்தில் வாசகர்கள் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை (Page views), வழக்கத்தை விட இரு மடங்கானது. இத்தகைய எண்ணிக்கையை எட்டியது இதுவே முதல் முறை.

* சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, வாசகர்கள் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை (Page views), ஒரே நாளில் 5 மடங்கு வளர்ச்சி
அடைந்தது. இத்தகைய எண்ணிக்கையை எட்டியது இதுவே முதல் முறை.

* எழுத்தாளர் சுஜாதா, 2005ஆம் ஆண்டின் சிறந்த வலைமனையாகத் தமிழ்சிஃபியைத் தேர்ந்தெடுத்தார். (ஆனந்த விகடன்)


இனி


விரைவில் தமிழ்சிஃபி, ஒருங்குறியில் (யுனிகோடில்) வெளிவர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர்கள், எழுத்தாளர்கள், அனைத்துத் துறை சார்ந்த சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் தமிழ்சிஃபிக்கு வருகை தரவும் அதில் பங்கேற்கவும்
அன்புடன் அழைக்கிறேன்.

சிஃபிக்கு என்னையும் எனக்கு சிஃபியையும் அறிமுகப்படுத்திய நண்பர் ஆர்.வெங்கடேஷ், அடிப்படைகளை எடுத்துரைத்த நண்பர் ஏக்நாத், சிறந்த முறையில் ஆலோசனைகள் வழங்கிவரும் கே. வெங்கடேஷ், ராஜசேகர், சஸ்லின் சலீம், எனக்கு உறுதுணையாக இருக்கும் வேங்கடசுப்பிரமணியன்.... உள்பட இன்னும் பலருக்கும் இந்த வளர்ச்சியில் பங்குள்ளது. இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

Friday, September 08, 2006

உள்ளாடை அணியும் முன் ஒரு நிமிடம்

இப்பதிவை என் குரலில் கேட்க>>>>

2006 பிப்ரவரியில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. தூத்துக்குடி அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த ஆறு வயதுச் சிறுமி, தேள் கொட்டி இறந்தாள் என்பதே செய்தி. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது தெரியுமா?

பள்ளிக்கூடத்துக்கு வந்ததில் இருந்தே அந்தச் சிறுமி, 'வலிக்குது வலிக்குது' எனத் துடித்திருக்கிறாள். ஆசிரியர்கள் எங்கே என்று கேட்டபோது தன் ஜட்டியைக் காட்டியிருக்கிறாள். அவளைத் தனியிடத்தில் அழைத்துச் சென்று ஆடை விலக்கிப் பார்த்தபோது அவள் ஜட்டிக்குள் மஞ்சள் நிறத்தில் ஒரு தேள் இருப்பதை அவர்கள் கண்டார்கள். உடனே அதைப் பிடித்து நசுக்கிக் கொன்றிருக்கிறார்கள்.

ஆனால், சிறுமி தொடர்ந்து அழுதபடியே இருந்திருக்கிறாள். சரி, அவளை வீட்டில் கொண்டு விட்டுவிடுங்கள் என்று ஆசிரியர் ஒருவர் கூற,பள்ளிக்கூடப் பணியாளர், சிறுமியை அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்குப் போயிருக்கிறார். ஆனால், வீட்டில் அவளின் அம்மா இல்லை. அவர் பக்கத்தில் எங்கோ போயிருப்பதாக அண்டை அயலில் கூறியிருக்கிறார்கள். சரி, நான் போய் உன் அம்மாவைக் கூட்டி வருகிறேன்; இங்கேயே நில் என்று அந்தப் பணியாளர் போயிருக்கிறார். அவர் போய் அந்தச் சிறுமியின் அம்மாவை அழைத்து வருவதற்குள் இங்கே இந்தச் சிறுமி இறந்தே போனாள். அவள் உடல் தேளின் விஷத்தால் நீல நிறமாய் மாறியிருக்கிறது.

அதன் பிறகு ஆயிரம் முறை அழுது புரண்டார்கள். பள்ளிக்கூடத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டார்கள். ஆனால், இவற்றால் எல்லாம் என்ன பயன்?

அந்தச் சிறுமி தன் ஆடையைச் சரிவரச் சோதித்த பிறகே அணிந்திருக்கவேண்டும். அவளின் பெற்றோரும் அதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இவர்களை விட இந்தச் சிறுமி இறந்ததற்கு ஆசிரியர்களையும் பள்ளிக்கூட நிர்வாகத்தையுமே குற்றம் சாட்ட வேண்டியதாய் இருக்கிறது. தேள் கடித்திருக்கிறது என்று பள்ளிக்கூடத்தில் கண்டறிந்த பின் உடனடியாக அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க முதலுதவிகள்
செய்திருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் சிறுமியை அவள் வீட்டில் கொண்டு விடும் தவறான முடிவை எடுத்துத் தாமதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த அலட்சியத்தால் ஒரு பச்சிளம் உயிர் அநியாயமாகப் போய்விட்டது.

இங்கு ஆசிரியர்கள், தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்ததாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. கும்பகோணம் தீ விபத்திலும் 94 குழந்தைகள் அகால மரணம் அடைந்ததற்கு ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாமையும் ஒரு காரணம். பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆபத்தான கட்டத்தில் எத்தகைய முதலுதவிகள் செய்யவேண்டும் என்ற பயிற்சி கிடையாது. இதனால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.

இதைப் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். அவரின் உறவினர் ஒருவர் வீட்டில் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

அந்த வீட்டில் கணவனும் மனைவியும் தங்கள் கைக்குழந்தையுடன் வசித்திருக்கிறார்கள். ஒரு நாள் இரவு, தூளியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, வீரிட்டு அழுதது. அடுத்த அறையில் கணவனும் மனைவியும் இருந்திருக்கிறார்கள். கணவன், மனைவியிடம், 'குழந்தை அழுகிறது; போய்த் தூளியை ஆட்டித் தூங்க வை' என்று கூறியிருக்கிறான். அதற்கு அவன் மனைவியோ, 'ஏன் நான்தான் போகணுமா? நீங்க போகக் கூடாதா? உங்களுக்கு
அந்தக் கடமை இல்லையா?' என்று கேட்டிருக்கிறாள். இப்படியே இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் 'நீதான் போகணும்; இல்லாட்டா நான் போய்ப் பார்க்கமாட்டேன்' என்று வீம்பாக இருந்துவிட்டார்கள். அங்கேயோ குழந்தையோ, 'வீல் வீல்' என்று அழுது அழுது தானே அடங்கிவிட்டது.

காலையில் உறக்கத்திலிருந்து எழுந்ததும் கணவனும் மனைவியும் குழந்தையை வந்து பார்த்திருக்கிறார்கள். அங்கே அந்தக் குழந்தை இறந்து கிடந்தது. ஏன் என்று பதற்றத்துடன் குழந்தையைத் தூக்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது, குழந்தையை விட்டிருந்த தூளியில் ஒரு தேள் இருந்திருக்கிறது. அது கொட்டக் கொட்ட, அந்தக் குழந்தை அழுதிருக்கிறது. ஆனால் விவரம் தெரியாத பெற்றோர்கள் வெட்டி வீம்பின் காரணமாகத் தங்கள் குழந்தைக்குத் தாங்களே எமனாகிவிட்டார்கள். இனி என்னைத் தூக்கவே வேண்டாம் என்பதுபோல் அந்தக் குழந்தை போய்ச் சேர்ந்துவிட்டது.

தேள் என்பது, பாம்பு அளவுக்குக் கொடிய விஷம் உடையது இல்லை. கடித்தவுடன் இறந்துவிடுவார்கள் என்ற நிலை இல்லை. கடித்ததும் உடனே முதலுதவிகள் செய்தால் கடிபட்டவர் பிழைத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால், அலட்சியம் என்பது தேளைக் காட்டிலும் கொடியது. அது, இருந்தால் பெருங்கேடு உறுதி.

அன்புக்குரிய நண்பர்களே, இந்த இரண்டு சம்பவங்களைக் கூறியதற்குக் காரணம் உண்டு. தேளிடம் மட்டும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காக இவற்றைக் கூறவில்லை. நான் நிறைய குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். மிட்டாய், சாக்லேட், பிஸ்கேட் போன்ற
தின்பண்டங்களைப் பாதி தின்றுவிட்டு மீதத்தைத் தன் சட்டைப் பையிலோ, கால்சட்டை அல்லது பாவாடையின் பையிலோ போட்டுக்கொள்வார்கள். அந்தச் செயல், எறும்புகளுக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்தது போல்தான். அந்த ஆடைகளை அணிந்திருந்தாலும் கழற்றி வைத்திருந்தாலும் எறும்புப் படை, அவற்றை மொய்த்துவிடும்.

இன்னும் சிலர் எச்சில் பண்டங்களையும் இனிப்புகளையும் சாப்பிட்டு விட்டுத் தங்கள் ஆடையிலேயே தங்கள் கையைத் துடைத்துக்கொள்வார்கள். அதனாலும் எறும்பு எழுச்சியுடன் அணிவகுத்து வரும்.

இன்னும் பலரின் உள்ளாடைகளில் எறும்பு மொய்க்கக்கூடும். பெண்களிள் அதுவும் குறிப்பாகத் தாய்மார்களின் உள்ளாடைகளில் இந்த ஆபத்து அதிகம். பால் சுரந்த ரவிக்கைகளிலும் அக்குளிலும் எறும்புகள் அதிகமாக மொய்க்கும். ஆண்களின் பனியன், ஜட்டி போன்ற உள்ளாடைகளிலும் இந்த ஆபத்து அதிகம் உள்ளது.

உள்ளாடைகள் மட்டுமல்லாமல் எல்லா வகை ஆடைகளிலும் எறும்பு மொய்க்க வாய்ப்பு உண்டு. எனவே எந்த ஆடையை அணியும் முன்னும் அதை நன்கு உதறிய பிறகே அணியவேண்டும். நிறைய பேர், பாதி வழியில் வந்த பிறகு எறும்பு கடிப்பதை உணர்வார்கள். நடு வழியில் எறும்பு ஊசி போடும் போது, நம்மால் ஆடையைக் கழற்றி உதறி அவற்றை வெளியேற்றவும் முடியாது. நாம் அப்போது உண்மையிலேயே இருதலைக்கொள்ளி எறும்பாக ஆகிவிடுவோம்.

உள்ளாடைகள், ஆடைகள் மட்டுமல்லாமல் தொப்பி, ஹெல்மட் போன்றவற்றை அணியும் முன்னும் காலுறை, கையுறை போன்றவற்றை அணியும் முன்னும் நன்கு சோதித்த பிறகே அணியவேண்டும். எறும்பு கடிப்பதால் என்ன பெரிதாய் ஆகிவிடும் என்று நினைக்காதீர்கள். பரபரப்பான சாலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது நறுக்கென எறும்பு ஊசி போட்டால் எவ்வளவு பெரிய விபத்து நிகழக்கூடும் என்பதை நினைத்துப் பாருங்கள். பேருந்தின் படிக்கட்டில் தொங்கவே கூடாது என்றாலும் அப்படித் தொங்கும்போது எறும்பு கடித்தால் என்ன ஆகும்? மிக முக்கியமான தருணங்களில் எறும்புகூட பெரிய விபத்துகளை உண்டாக்கிவிடக்கூடும்.

எறும்பா, தேளா, அரணையா, பூரானா, கரப்பானா, பாம்பா, கொசுவா, பெயர் தெரியாத பூச்சியா... எது நம்மைக் கடிக்கப் போகிறது என்பது தெரியாது. ஆனால், நாம் கவனக் குறைவாக இருக்கும் நேரத்தை எதிர்பார்த்து இவை அனைத்தும் காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

இனி, உள்ளாடை முதற்கொண்டு எந்த ஆடை அணிவதாக இருந்தாலும் நன்றாக உதறிவிட்டுத்தான் அணியவேண்டும். அது, கைக்குட்டையாகக் கூட இருக்கலாம். ஆனால், கவனம் முக்கியம்.

தேளின் விஷக் கொடுக்குகளுக்குப் பலியான அந்த ஆறு வயதுச் சிறுமிக்கு நம் விழிப்புணர்வின் மூலமாகத்தான் நாம் இரங்கல் செலுத்தவேண்டும்.

சில்லுனு ஒரு காதல் - திரை விமர்சனம்



காதல் மிகவும் இயல்பானது; ஆனால், அதைத் திரையில் இயல்பாகக் காட்டுவது பெரிய சவால்; இருவருக்கு இடையில் நடக்கும் மனப் போராட்டங்களை, மவுனப் போர்களை, ஒரு பூவினும் மெல்லிய உணர்வுகளைத் திரையில் கச்சிதமாகக் கொண்டு வருவது, சற்றே கடினம்தான். அந்த முயற்சியில் சில்லுனு ஒரு காதல், சிலுசிலுன்னு ஒரு முத்திரை பதித்துள்ளது.

விசில் மொழியில் பேசிக்கொள்ளும் கணவன் - மனைவி, சில்லு சில்லு என்று மனைவியைச் செல்லமாகக் கணவன் அழைப்பது, 'இந்த உலகிலேயே நான்தான் மிக மகிழ்ச்சியான ஆள்' என்று கணவன் உரக்கக் கூறுவது, காதலியின் பெயரைத் தன் குழந்தைக்கு வைப்பது, நள்ளிரவில் குளியலறையிலிருந்து செல்பேசியில் ரகசிய முத்தம் கொடுப்பது, கணவனுக்காக அவன் பழைய காதலியை மனைவி தேடி அழைத்து வருவது, அன்புக்கு உரியவர்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளும் ஊடல்...... என மென்மையான உணர்வுகளைப் படம் முழுவதும் இயக்குநர் கிருஷ்ணா அழகாகக் காட்டியிருக்கிறார்.

தென்காசிக்கு அருகில் உள்ள கிராமத்தில் குந்தவி (ஜோதிகா)யும் அவள் தோழிகள் இருவருமாக மூன்று பேர். காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். குந்தவியின் தோழிகளுக்கு அதே கிராமத்திலேயே காதலர்கள் கிடைத்துவிட, குந்தவிக்கு அப்படி யாரும் கிடைக்கவில்லை. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க வேண்டிய நிலை. வேண்டா வெறுப்பாக கெளதமை (சூர்யா) மணக்கிறாள். அவ்வளவுதான் என் வாழ்க்கையே போச்சு என்று எண்ணுகிறாள். ஆனால், அடுத்த காட்சியில் இருவரும் மும்பையில் இருக்கிறார்கள். அதற்குள் ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சூர்யா இப்போது, கார் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை மெக்கானிக். இப்போது அவர்கள், உண்மையிலேயே காதலர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்புக்குச் சான்றாக ஒரு குழந்தை.

ஒரு நாள் சூர்யாவின் பழைய டைரியை ஜோதிகா பார்க்கிறார். அதில் அவரின் பழைய காதல் கதையைச் சூர்யா விவரித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னை விட இளைய மாணவியான பூமிகாவைச் சூர்யா காதலிக்கிறார். பூமிகாவோ, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செல்ல மகள். செல்வச் செழிப்புக்குக் கேட்க வேண்டுமா? அப்படி இருந்தும் அவர்களுக்கு இடையில் காதல் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கிவிடுகின்றன. பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவர்களுக்கு இடையில் பதிவாளர் அலுவலகத்தில் திருமண ஏற்பாடு நடக்கிறது. சூர்யா, பூமிகாவின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். முறைப்படி பதிவுத் திருமணம் நடப்பதற்குள் எம்.பி. அடியாள்களுடன் வந்து நிறுத்திவிடுகிறார். அதன் பிறகு பூமிகாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதன் பிறகுதான் மரணப் படுக்கையில் இருக்கும் தன் சித்தப்பாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி, சூர்யா, ஜோதிகாவை மணக்கிறார்.



இந்தக் கதை தெரிந்ததும் ஜோதிகாவால் தாங்க முடியவில்லை. அந்த டைரியில் 'அவளுடன் ஒரு நாள் வாழ்ந்தால்கூட போதும்; ஒரு யுகம் வாழ்ந்தது போல் இருக்கும்' என்று சூர்யா எழுதியிருப்பார். தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற ஜோதிகா, பூமிகாவைத் தேடிச் செல்கிறார். கடைசியில் கண்டுபிடித்துத் தன் வீட்டுக்கு அழைக்கிறார். அங்கு பூமிகாவையும் சூர்யாவையும் ஒரு நாள் முழுக்கத் தனித்திருக்கவிட்டு ஜோதிகா, குழந்தையுடன் வெளியே சென்றுவிடுகிறார். தனித்திருக்கும் கணவனும் பழைய காதலியும் ஒரு நாளில் என்ன செய்கிறார்கள்? அதை நீங்கள் வெள்ளித் திரையில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

சூர்யா - ஜோதிகாவின் நடிப்பு, மிகச் சிறப்பாக உள்ளது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களின் திறமையால் பல காட்சிகள், மனத்தில் தங்கிவிடுகின்றன. மிகப் பொருத்தமான ஜோடி என்று உலகமே சொல்லுகிறது. விரைவில் ஒரு கூட்டுப் பறவைகள் ஆகப் போகிறார்கள். சூர்யாவுக்கும் ஜோவுக்கும் இந்தப் படம், திருமணப் பரிசு. இவர்களின் திருமணத்தைப் பார்க்க முடியவில்லை என்று யாரும் மனம் வருந்தவேண்டாம். படத்தில் அவர்களின் திருமணக் காட்சி, விமரிசையாகப் பதிவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு எப்படி வாழ்வார்கள் என்பதையும் படம் எடுத்துக் காட்டுகிறது.

பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு கதையைப் பார்ப்பது போல படமும் காட்சியமைப்புகளும் இயல்பாக இருக்கின்றன. சூர்யா - ஜோதிகாவின் மகளாக வரும் பேபி ஷ்ரேயா, கலக்குகிறாள். அவள் நடித்துள்ள முதல் படம் இதுதான். மிக அழகாகக் காட்சியுடன் ஒன்றி நடித்திருக்கிறாள். வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதிகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆயினும் அந்தப் பகுதிகள் இல்லாவிட்டாலும் கதையோட்டம் தடைப்பட்டிருக்காது. வடிவேலு, மும்பையின் 'அந்த' அனுபவத்திற்கு ஆசைப்பட்டுச் சென்று, அலிகளிடம் மாட்டிக்கொள்வதான காட்சி, ரசக் குறைவு.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடல்களும் நவீனமாக உள்ளன. பின்னணி இசையும் பாராட்டத்தக்க அளவில் உள்ளது. முழுக்க முழுக்க விசிலை மட்டுமே வைத்து ஒரு பாடலை அமைத்திருப்பது சிறப்பு. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம், மச்சக்காரி மச்சக்காரி, சில்லுன்னு ஒரு காதல் ஆகிய பாடல்கள் மனத்தைக் கவர்கின்றன. மேற்கத்தியத் தாக்கம், ஒவ்வொரு பாடலிலும் தெரிகிறது. சில பாடல்களில் பாடல் வரிகளைக் கண்டு பிடிப்பவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஆன்டனியின் படத் தொகுப்பும் கவர்ச்சிகரமாக உள்ளன. நெருக்கக் காட்சிகளில் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோரின் அழகு தனிப்படத் தெரிகிறது.



வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாகத் திரையில் படைத்துள்ள புதுமுக இயக்குநர் கிருஷ்ணாவைப் பாராட்டலாம். ஆயினும் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் இருக்கும்போது பூமிகாவின் அப்பா(எம்.பி.), மும்பைக்கு வந்து எதற்காகச் சூர்யாவை முறைக்கவேண்டும்? சூர்யாவால் பூமிகாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பூமிகாவால் ஏன் சூர்யாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை? போன்ற சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

திருமணத்திற்கு முந்தைய காதலை விட, பிந்தைய காதலே சிறந்தது என்று ஒரு குழந்தையை வைத்துச் சொல்ல வைத்துள்ளார் இயக்குநர். குழந்தைக்குக் கூட தெரிகிறது; பெரியவர்களுக்குத் தெரிய வேண்டாமா? என்று சொல்லத்தானோ!

சூர்யாவுக்கும் ஜோவுக்கும் வீட்டுப் பெரியவர்கள், திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

========================
நன்றி: தமிழ்சிஃபி