தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாகத் தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதிமுக கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. அதே கையோடு திமுக கூட்டணியிலும் இணைந்துவிட்டது.
ஜெயலலிதாவுடன் கைகோத்து மேடைகளில் தோன்றிய திருமா, திமுகவில் சேரும் அன்றுவரைகூட அதிமுக சார்புடன் இருப்பதாகவே காட்டிக்கொண்டார். செப்.27 அன்று வெளியிட்ட அறிக்கையில், "அ.தி.மு.க. தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் 4 சதவீத இடங்களைப் பெற்று உடன்பாடு செய்துள்ளது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. பொறுப்பாளர்களுடன் நம் தோழர்கள் சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் பேச்சு வார்த்தையில் தேக்கம் ஏற்பட்டது. இதனைச் சில தொலைக்காட்சிகள் ஊதிப் பெருக்கிக் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. அ.தி.மு.க.வுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகிறோம். பேச்சு வார்த்தையின் போது சிக்கல் ஏற்பட்டுள்ள ஒரு சில மாவட்டங்களில் அவற்றைச் சரி செய்து இணக்கமுடன் செயல்பட முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சிக்கல் எதுவும் இல்லை. ஆகவே விடுதலைச் சிறுத்தைகள், அ.தி.மு.க.வினருக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால், அன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்த பிறகு திருமா, இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், அணியிலிருந்து வெளியேறிவிட்ட பிறகு திருமாவுக்கு ஒதுக்கிய 4 விழுக்காட்டு இடங்களில் அதிமுகவோ, அதன் தோழமைக் கட்சிகளோ போட்டியிட முடியாது. இதன் மூலம் மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக, 4 விழுக்காட்டு இடங்களை இழந்திருக்கிறது.
திருமா, அதிமுக தலைமையிடம் 10 விழுக்காடு இடங்கள் கேட்டதாகவும் 4 விழுக்காடு இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அம்மா கண்டிப்புடன் கூறிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. அதனால் கடுப்படைந்த திருமா, அம்மாவை நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்.
இந்த மாற்றத்தின் மூலம் திமுக அணி, கூடுதல் வலிமை பெற்றிருக்கிறது. இது, ஒரு வகையில் கருணாநிதிக்கு வெற்றிதான். திமுக கூட்டணி உடையும்; மைனாரிட்டி ஆட்சி கவிழும் என்று அதிமுகவும் மதிமுகவும் திரும்பித் திரும்பிச் சொல்லி வருகையில் நடப்புகள், தலைகீழாக உள்ளன. அதிமுகவிலிருந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சண்முகத்தைத் தலைமைக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் திமுக வெற்றி அடைந்திருக்கிறது. அவர் விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படுவதுடன் திமுக ஆதரவு உறுப்பினராகச் சட்டமன்றத்தில் தொடரவும் வாய்ப்பிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவுடன் நல்லுறவு பாராட்டி வந்ததும் இலவசத் தொலைக்காட்சி வழங்கும் குழுவில் இடம் பெற்றதும் திருமாவளவன், கலைஞருக்குக் கடிதம் எழுதியதும் இந்தக் கூட்டணிக்கு அச்சாரமாகவே கொள்ள இடமுண்டு. ஜெயலலிதா, திருமா விடயத்தில் போதுமான விழிப்புணர்வுடன் இல்லை என்பதையும் ஆனால், திருமா அரசியலில் தேறிவிட்டார் என்பதையும் இந்த மாற்றம் எடுத்துக் காட்டுகிறது.
நன்றி: தமிழ்சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Wednesday, September 27, 2006
திமுக கூட்டணியில் திருமா
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:23 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இதெல்லாம் அரசியல் சாக்கடையிலெ சகஜமப்பா!
நல்லா எழுதியிருக்கீங்க..
இதுதாண்டா அரசியலுன்னு??? பாய்ந்து புரிய வச்சிருக்கு சிறுத்தை
//இந்த மாற்றத்தின் மூலம் திமுக அணி, கூடுதல் வலிமை பெற்றிருக்கிறது. இது, ஒரு வகையில் கருணாநிதிக்கு வெற்றிதான்.//
இது வைகோ செய்த செயலை விட கேவலமான செயல் இது. இதனால் அ.தி.மு.க விற்கு எந்த நஷ்டமாக இருந்தாலும் தி.மு.க விற்கு எந்த லாபமாகவும் இருக்க முடியாது.
இவங்க எல்லாம் கொள்கையையும் கலைச்சிட்டு யார் சீட்டு அதிகமா தருவாங்களோ அவங்க பக்கம் இருப்போம்னு ஒரே கொள்கைய வச்சிகிட்டா பரவா இல்ல. எதுக்கு கட்சி, கொள்கைன்னு மக்கள ஏமாத்திகிட்டு இருக்காங்க!
Post a Comment