காதல் மிகவும் இயல்பானது; ஆனால், அதைத் திரையில் இயல்பாகக் காட்டுவது பெரிய சவால்; இருவருக்கு இடையில் நடக்கும் மனப் போராட்டங்களை, மவுனப் போர்களை, ஒரு பூவினும் மெல்லிய உணர்வுகளைத் திரையில் கச்சிதமாகக் கொண்டு வருவது, சற்றே கடினம்தான். அந்த முயற்சியில் சில்லுனு ஒரு காதல், சிலுசிலுன்னு ஒரு முத்திரை பதித்துள்ளது.
விசில் மொழியில் பேசிக்கொள்ளும் கணவன் - மனைவி, சில்லு சில்லு என்று மனைவியைச் செல்லமாகக் கணவன் அழைப்பது, 'இந்த உலகிலேயே நான்தான் மிக மகிழ்ச்சியான ஆள்' என்று கணவன் உரக்கக் கூறுவது, காதலியின் பெயரைத் தன் குழந்தைக்கு வைப்பது, நள்ளிரவில் குளியலறையிலிருந்து செல்பேசியில் ரகசிய முத்தம் கொடுப்பது, கணவனுக்காக அவன் பழைய காதலியை மனைவி தேடி அழைத்து வருவது, அன்புக்கு உரியவர்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளும் ஊடல்...... என மென்மையான உணர்வுகளைப் படம் முழுவதும் இயக்குநர் கிருஷ்ணா அழகாகக் காட்டியிருக்கிறார்.
தென்காசிக்கு அருகில் உள்ள கிராமத்தில் குந்தவி (ஜோதிகா)யும் அவள் தோழிகள் இருவருமாக மூன்று பேர். காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். குந்தவியின் தோழிகளுக்கு அதே கிராமத்திலேயே காதலர்கள் கிடைத்துவிட, குந்தவிக்கு அப்படி யாரும் கிடைக்கவில்லை. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க வேண்டிய நிலை. வேண்டா வெறுப்பாக கெளதமை (சூர்யா) மணக்கிறாள். அவ்வளவுதான் என் வாழ்க்கையே போச்சு என்று எண்ணுகிறாள். ஆனால், அடுத்த காட்சியில் இருவரும் மும்பையில் இருக்கிறார்கள். அதற்குள் ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சூர்யா இப்போது, கார் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை மெக்கானிக். இப்போது அவர்கள், உண்மையிலேயே காதலர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்புக்குச் சான்றாக ஒரு குழந்தை.
ஒரு நாள் சூர்யாவின் பழைய டைரியை ஜோதிகா பார்க்கிறார். அதில் அவரின் பழைய காதல் கதையைச் சூர்யா விவரித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னை விட இளைய மாணவியான பூமிகாவைச் சூர்யா காதலிக்கிறார். பூமிகாவோ, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செல்ல மகள். செல்வச் செழிப்புக்குக் கேட்க வேண்டுமா? அப்படி இருந்தும் அவர்களுக்கு இடையில் காதல் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கிவிடுகின்றன. பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவர்களுக்கு இடையில் பதிவாளர் அலுவலகத்தில் திருமண ஏற்பாடு நடக்கிறது. சூர்யா, பூமிகாவின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். முறைப்படி பதிவுத் திருமணம் நடப்பதற்குள் எம்.பி. அடியாள்களுடன் வந்து நிறுத்திவிடுகிறார். அதன் பிறகு பூமிகாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதன் பிறகுதான் மரணப் படுக்கையில் இருக்கும் தன் சித்தப்பாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி, சூர்யா, ஜோதிகாவை மணக்கிறார்.
இந்தக் கதை தெரிந்ததும் ஜோதிகாவால் தாங்க முடியவில்லை. அந்த டைரியில் 'அவளுடன் ஒரு நாள் வாழ்ந்தால்கூட போதும்; ஒரு யுகம் வாழ்ந்தது போல் இருக்கும்' என்று சூர்யா எழுதியிருப்பார். தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற ஜோதிகா, பூமிகாவைத் தேடிச் செல்கிறார். கடைசியில் கண்டுபிடித்துத் தன் வீட்டுக்கு அழைக்கிறார். அங்கு பூமிகாவையும் சூர்யாவையும் ஒரு நாள் முழுக்கத் தனித்திருக்கவிட்டு ஜோதிகா, குழந்தையுடன் வெளியே சென்றுவிடுகிறார். தனித்திருக்கும் கணவனும் பழைய காதலியும் ஒரு நாளில் என்ன செய்கிறார்கள்? அதை நீங்கள் வெள்ளித் திரையில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
சூர்யா - ஜோதிகாவின் நடிப்பு, மிகச் சிறப்பாக உள்ளது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களின் திறமையால் பல காட்சிகள், மனத்தில் தங்கிவிடுகின்றன. மிகப் பொருத்தமான ஜோடி என்று உலகமே சொல்லுகிறது. விரைவில் ஒரு கூட்டுப் பறவைகள் ஆகப் போகிறார்கள். சூர்யாவுக்கும் ஜோவுக்கும் இந்தப் படம், திருமணப் பரிசு. இவர்களின் திருமணத்தைப் பார்க்க முடியவில்லை என்று யாரும் மனம் வருந்தவேண்டாம். படத்தில் அவர்களின் திருமணக் காட்சி, விமரிசையாகப் பதிவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு எப்படி வாழ்வார்கள் என்பதையும் படம் எடுத்துக் காட்டுகிறது.
பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு கதையைப் பார்ப்பது போல படமும் காட்சியமைப்புகளும் இயல்பாக இருக்கின்றன. சூர்யா - ஜோதிகாவின் மகளாக வரும் பேபி ஷ்ரேயா, கலக்குகிறாள். அவள் நடித்துள்ள முதல் படம் இதுதான். மிக அழகாகக் காட்சியுடன் ஒன்றி நடித்திருக்கிறாள். வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதிகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆயினும் அந்தப் பகுதிகள் இல்லாவிட்டாலும் கதையோட்டம் தடைப்பட்டிருக்காது. வடிவேலு, மும்பையின் 'அந்த' அனுபவத்திற்கு ஆசைப்பட்டுச் சென்று, அலிகளிடம் மாட்டிக்கொள்வதான காட்சி, ரசக் குறைவு.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடல்களும் நவீனமாக உள்ளன. பின்னணி இசையும் பாராட்டத்தக்க அளவில் உள்ளது. முழுக்க முழுக்க விசிலை மட்டுமே வைத்து ஒரு பாடலை அமைத்திருப்பது சிறப்பு. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம், மச்சக்காரி மச்சக்காரி, சில்லுன்னு ஒரு காதல் ஆகிய பாடல்கள் மனத்தைக் கவர்கின்றன. மேற்கத்தியத் தாக்கம், ஒவ்வொரு பாடலிலும் தெரிகிறது. சில பாடல்களில் பாடல் வரிகளைக் கண்டு பிடிப்பவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஆன்டனியின் படத் தொகுப்பும் கவர்ச்சிகரமாக உள்ளன. நெருக்கக் காட்சிகளில் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோரின் அழகு தனிப்படத் தெரிகிறது.
வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாகத் திரையில் படைத்துள்ள புதுமுக இயக்குநர் கிருஷ்ணாவைப் பாராட்டலாம். ஆயினும் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் இருக்கும்போது பூமிகாவின் அப்பா(எம்.பி.), மும்பைக்கு வந்து எதற்காகச் சூர்யாவை முறைக்கவேண்டும்? சூர்யாவால் பூமிகாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பூமிகாவால் ஏன் சூர்யாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை? போன்ற சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
திருமணத்திற்கு முந்தைய காதலை விட, பிந்தைய காதலே சிறந்தது என்று ஒரு குழந்தையை வைத்துச் சொல்ல வைத்துள்ளார் இயக்குநர். குழந்தைக்குக் கூட தெரிகிறது; பெரியவர்களுக்குத் தெரிய வேண்டாமா? என்று சொல்லத்தானோ!
சூர்யாவுக்கும் ஜோவுக்கும் வீட்டுப் பெரியவர்கள், திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.
========================
நன்றி: தமிழ்சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, September 08, 2006
சில்லுனு ஒரு காதல் - திரை விமர்சனம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ungal vimarsanam miga arumai.
padam parthathu pol iruthathu.
ungal vallkaiilum ipadi yeathu iruka.
longing to meet you
ஆகா......எனக்குப் பாக்கனுமே...பாக்கனுமே.....அடுத்த வாரம் பாக்குறேன். கண்டிப்பாப் பாக்குறேன். பெங்களூர் சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் (மானசீக) என்ற முறையில் (ஜோதிகாவுக்குந்தான்) படத்தைப் பாக்கனுமே..........!!!!!!!!!!!!!!!!!!
இந்தப் படத்தை லக்கி ரொம்ப அருமையாக விமர்சித்திருக்கிறார்.
விரிவான விமரிசனத்திற்கு நன்றி.
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.
இவ்வளவு விளக்கமான ஒரு பதிவா? நல்லருக்கு.. பாத்துட வேண்டியதுதான்...
மிக அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..
படம் பார்க்க ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.
நன்றி.
மேலே உள்ளது போலி ஜெயக்குமாரின் பின்னூட்டம்
செப்.6 அன்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்புத் திரையிடல் முடிந்த பிறகு வெளியே வந்தபோது சூர்யாவின் அப்பா சிவகுமாரைப் பார்த்தேன். செப்.7 அன்று சூர்யாவின் அம்மாவையும் பார்த்தேன். ஆனால் எதுவும் பேசவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேலை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
முகமூடிக்கு: 'உங்கள் வாழ்க்கையிலும் இப்படி ஏதாவது இருக்கா?' உஷ்ஷ்ஷ்! அதையெல்லாம் சொல்ல முடியுமா? :)
அது சரி; பார்க்க விருப்பம் என்று சொல்லிவிட்டு இப்படி ஒளிந்துகொண்டால் எப்படி?
Post a Comment