சென்னையின் பண்பலைவரிசைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. அரசு சார் பிரசார் பாரதியின் சார்பில் ரெயின்போவும் கோல்டும் ஒலிபரப்பாகி வருகின்றன. சன் குழுமத்திலிருந்து சூரியன் வெளிவருகிறது. த டைம்ஸ் குழுமத்திலிருந்து மிர்ச்சி வழிகிறது. ஸ்டார் குழுமத்திலிருந்து ரேடியோ சிட்டியும் ரிலையன்ஸ்-அனில் அம்பானி குழுமத்தின் அட்லாப்ஸ் நிறுவனத்திலிருந்து பிக் எஃப்.எம்.மும் தினத்தந்தி குழுமத்தின் மலர் பப்ளிகேஷன்ஸிலிருந்து ஹலோ எஃப்.எம்.மும் ஒலிபரப்பைத் தொடங்கியுள்ளன.
பெரும்பாலும் அனைத்திலும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளே 24 மணி நேரமும் ஒலிபரப்பாகின்றன. வாசகர்கள் தொலைபேசியில் அழைத்துத் தங்கள் விருப்பப் பாடல்களையும் அனுபவங்களையும் கருத்துகளையும் சொல்லும் வாய்ப்பினை அனைத்து அலைவரிசைகளும் வழங்குகின்றன. அப்படிப் பேசுபவர்களுக்குப் புதிய திரைப்படத்திற்கான இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பரிசாக அளிக்கின்றன. மேலும் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.)ப் போட்டிகளைக் கட்டாயம் நடத்துகின்றன.
வெளி நிறுவன விளம்பரங்கள் ஒரு புறம் இருக்க, தங்கள் சொந்த விளம்பரங்களை அதிகமாக ஒலிபரப்பி வருகின்றன. திரைப்படப் பாடல்களிலும் இனிய பாடல்களைக் காட்டிலும் குத்துப் பாடல்களையும் இரைச்சலான பாடல்களையும் அதிகம் ஒலிபரப்பித் தொலைக்கின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிக் கலப்புடன், கொச்சையான மொழியுடன் பெரும்பாலான தொகுப்பாளர்கள் தொகுப்புரை வழங்குகிறார்கள். பலவும் மிகவும் சொதப்பலாக உள்ளன. நேரத்தை வீணடிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.
சாங், டோண்ட் மிஸ் இட், உங்க ஃபேவரைட், ஸ்டே டியூண்டு... என் வெள்ளம் போல் ஆங்கிலச் சொற்கள் மக்களிடம் திணிக்கப்படுகின்றன. மொத்தத்தில் கணக்கெடுத்தால் தொகுப்பாளர் பேசுவதில் பத்துக்கு ஐந்து சொற்களாவது வேற்று மொழிச் சொற்களாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
குறிப்பிடத்தக்கவை:
எஃப்.எம். ரெயின்போவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செய்திச் சுருக்கம் வெளியாகிறது. காலை ஏழரை முதல் எட்டரை வரை நாள்தோறும் கர்நாடக இசையை வழங்குகிறது. அது மட்டுமின்றி அரசு சார் நிகழ்ச்சிகள் பலவும் பயனுள்ள வகையில் ஒலிபரப்பாகின்றன. புதிர் நிகழ்ச்சிகள் சிலவற்றின் மூலம் பொது அறிவை வளர்க்கிறது. இரவில் 10 மணி முதல் பழைய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பிக் காற்று வெளியை அழகாக்குகிறது.
எஃப்.எம். கோல்டில் கிரிக்கெட் போட்டிகளின் போது நேர்முக வர்ணனையைக் கேட்கலாம். மேலும் தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி நிகழ்ச்சிகளும் அவ்வப்போது ஒலிக்கின்றன.
சூரியன் எஃப்.எம்.மில் காலை 9 முதல் 10 வரை ஒலிபரப்பாகும் பிளேடு நம்பர் ஒன் என்ற கடி ஜோக் நிகழ்ச்சி, சிற(ரி)ப்பாக உள்ளது. சின்ன தம்பி - பெரிய தம்பி, கிட்டு மாமா - சூசி மாமி ஆகிய நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்கவில்லை.
மிர்ச்சியில் காலை, மாலை பரபரப்பு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் பற்றிய செய்திகள் பயனுள்ளவை. காலையில் சுசித்ராவின் இயல்பான பேச்சும் சிரிப்பும் பாட்டும் களை கட்டுகிறது. இரவில் 9 மணி முதல் பழைய இனிய திரைப்படப் பாடல்களைக் கேட்கலாம்.
சிட்டி, பிக், ஹலோ ஆகியவை இனிதான் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். ஹலோ, தன் சோதனை ஒலிபரப்பைத் தொடங்கியுள்ளது. மேலும் 106.4 MHzஇல் நிகழ்ச்சிகளைக் கேட்கும் நேயர்களுக்கு 1064 கிராம் தங்கம் வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
சென்னை வானொலி என்றால் ஒன்றே ஒன்று இருந்தது போய், இப்போது மொத்தம் பத்து வானொலி அலைவரிசைகள் வந்துவிட்டன. (பண்பலை தவிர சென்னை வானொலியின் மத்திய அலையில் இரண்டு அலைவரிசைகளும் விவிதபாரதியும் ஒலிபரப்பாகி வருகின்றன)
பண்பலைகளின் பெயர் - அலைவரிசை எண்- முழக்க வாசகம்:
எஃப்.எம். ரெயின்போ - 107.1 MHz - ஹாட்டான சென்னையின் கூலான எஃப்.எம்.
எஃப்.எம். கோல்டு - 105.0 MHz
சூரியன் எஃப்.எம். - 93.5 MHz - கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
ரேடியோ மிர்ச்சி - 98..3 MHz - செம ஹாட்டு மச்சி
ரேடியோ சிட்டி - 105.8 MHz - நம்ம சிட்டி நம்ம லைஃப்
பிக் எஃப்.எம். - 92.7 MHz - பேசுங்க பாடுங்க லைஃப் கொண்டாடுங்க
ஹலோ எஃப்.எம். - 106.4 MHz - அக்டோபர் 2 முதல் அதிகாரபூர்வமாக ஒலிபரப்பைத் தொடங்குகிறது.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, September 28, 2006
சென்னையின் பண்பலைவரிசைகள்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வருத்தம் தரும் செய்தி!
தமிழை அழிக்கப் புற்றீசல்கள் கிளம்பிவிட்டன.
ஆதிமூலமே! காப்பாற்று!!!
வானொலி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி
நல்ல பதிவு.. எல்லா பண்பலைகளையும் கேட்டுவிட்டு விரிவாக பின்னூட்டம் போடுகிறேன்..
இதுவரை கேட்பது, கேட்டது மிர்ச்சி மட்டுமே. சூரியன் பண்பலையில் பல நிகழ்ச்சிகள் மிகவும் அசட்டுத்தனமாக, அதிகம் பயனில்லாத வகையாகத் தோன்றியது. (இந்த சூசி மாமி, பெரியதம்பி, 4 மணிக்கு வரும் குழந்தைகள் நிகழ்ச்சி வகையறா தான் இதுவரை கேட்டிருக்கிறேன்.)
கோல்டும் ரெயின்போவும் கேட்கவேண்டும். பண்பலைகளில் தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். பெயராவது தமிழில் வைக்கக் கூடாதா!
Ivatril Pala Iniyathalathil live'aaga varugindrana...
http://www.tunein.in
Nandri
Post a Comment