!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> உள்ளாடை அணியும் முன் ஒரு நிமிடம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, September 08, 2006

உள்ளாடை அணியும் முன் ஒரு நிமிடம்

இப்பதிவை என் குரலில் கேட்க>>>>

2006 பிப்ரவரியில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. தூத்துக்குடி அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த ஆறு வயதுச் சிறுமி, தேள் கொட்டி இறந்தாள் என்பதே செய்தி. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது தெரியுமா?

பள்ளிக்கூடத்துக்கு வந்ததில் இருந்தே அந்தச் சிறுமி, 'வலிக்குது வலிக்குது' எனத் துடித்திருக்கிறாள். ஆசிரியர்கள் எங்கே என்று கேட்டபோது தன் ஜட்டியைக் காட்டியிருக்கிறாள். அவளைத் தனியிடத்தில் அழைத்துச் சென்று ஆடை விலக்கிப் பார்த்தபோது அவள் ஜட்டிக்குள் மஞ்சள் நிறத்தில் ஒரு தேள் இருப்பதை அவர்கள் கண்டார்கள். உடனே அதைப் பிடித்து நசுக்கிக் கொன்றிருக்கிறார்கள்.

ஆனால், சிறுமி தொடர்ந்து அழுதபடியே இருந்திருக்கிறாள். சரி, அவளை வீட்டில் கொண்டு விட்டுவிடுங்கள் என்று ஆசிரியர் ஒருவர் கூற,பள்ளிக்கூடப் பணியாளர், சிறுமியை அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்குப் போயிருக்கிறார். ஆனால், வீட்டில் அவளின் அம்மா இல்லை. அவர் பக்கத்தில் எங்கோ போயிருப்பதாக அண்டை அயலில் கூறியிருக்கிறார்கள். சரி, நான் போய் உன் அம்மாவைக் கூட்டி வருகிறேன்; இங்கேயே நில் என்று அந்தப் பணியாளர் போயிருக்கிறார். அவர் போய் அந்தச் சிறுமியின் அம்மாவை அழைத்து வருவதற்குள் இங்கே இந்தச் சிறுமி இறந்தே போனாள். அவள் உடல் தேளின் விஷத்தால் நீல நிறமாய் மாறியிருக்கிறது.

அதன் பிறகு ஆயிரம் முறை அழுது புரண்டார்கள். பள்ளிக்கூடத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டார்கள். ஆனால், இவற்றால் எல்லாம் என்ன பயன்?

அந்தச் சிறுமி தன் ஆடையைச் சரிவரச் சோதித்த பிறகே அணிந்திருக்கவேண்டும். அவளின் பெற்றோரும் அதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இவர்களை விட இந்தச் சிறுமி இறந்ததற்கு ஆசிரியர்களையும் பள்ளிக்கூட நிர்வாகத்தையுமே குற்றம் சாட்ட வேண்டியதாய் இருக்கிறது. தேள் கடித்திருக்கிறது என்று பள்ளிக்கூடத்தில் கண்டறிந்த பின் உடனடியாக அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க முதலுதவிகள்
செய்திருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் சிறுமியை அவள் வீட்டில் கொண்டு விடும் தவறான முடிவை எடுத்துத் தாமதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த அலட்சியத்தால் ஒரு பச்சிளம் உயிர் அநியாயமாகப் போய்விட்டது.

இங்கு ஆசிரியர்கள், தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்ததாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. கும்பகோணம் தீ விபத்திலும் 94 குழந்தைகள் அகால மரணம் அடைந்ததற்கு ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாமையும் ஒரு காரணம். பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆபத்தான கட்டத்தில் எத்தகைய முதலுதவிகள் செய்யவேண்டும் என்ற பயிற்சி கிடையாது. இதனால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.

இதைப் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். அவரின் உறவினர் ஒருவர் வீட்டில் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

அந்த வீட்டில் கணவனும் மனைவியும் தங்கள் கைக்குழந்தையுடன் வசித்திருக்கிறார்கள். ஒரு நாள் இரவு, தூளியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, வீரிட்டு அழுதது. அடுத்த அறையில் கணவனும் மனைவியும் இருந்திருக்கிறார்கள். கணவன், மனைவியிடம், 'குழந்தை அழுகிறது; போய்த் தூளியை ஆட்டித் தூங்க வை' என்று கூறியிருக்கிறான். அதற்கு அவன் மனைவியோ, 'ஏன் நான்தான் போகணுமா? நீங்க போகக் கூடாதா? உங்களுக்கு
அந்தக் கடமை இல்லையா?' என்று கேட்டிருக்கிறாள். இப்படியே இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் 'நீதான் போகணும்; இல்லாட்டா நான் போய்ப் பார்க்கமாட்டேன்' என்று வீம்பாக இருந்துவிட்டார்கள். அங்கேயோ குழந்தையோ, 'வீல் வீல்' என்று அழுது அழுது தானே அடங்கிவிட்டது.

காலையில் உறக்கத்திலிருந்து எழுந்ததும் கணவனும் மனைவியும் குழந்தையை வந்து பார்த்திருக்கிறார்கள். அங்கே அந்தக் குழந்தை இறந்து கிடந்தது. ஏன் என்று பதற்றத்துடன் குழந்தையைத் தூக்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது, குழந்தையை விட்டிருந்த தூளியில் ஒரு தேள் இருந்திருக்கிறது. அது கொட்டக் கொட்ட, அந்தக் குழந்தை அழுதிருக்கிறது. ஆனால் விவரம் தெரியாத பெற்றோர்கள் வெட்டி வீம்பின் காரணமாகத் தங்கள் குழந்தைக்குத் தாங்களே எமனாகிவிட்டார்கள். இனி என்னைத் தூக்கவே வேண்டாம் என்பதுபோல் அந்தக் குழந்தை போய்ச் சேர்ந்துவிட்டது.

தேள் என்பது, பாம்பு அளவுக்குக் கொடிய விஷம் உடையது இல்லை. கடித்தவுடன் இறந்துவிடுவார்கள் என்ற நிலை இல்லை. கடித்ததும் உடனே முதலுதவிகள் செய்தால் கடிபட்டவர் பிழைத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால், அலட்சியம் என்பது தேளைக் காட்டிலும் கொடியது. அது, இருந்தால் பெருங்கேடு உறுதி.

அன்புக்குரிய நண்பர்களே, இந்த இரண்டு சம்பவங்களைக் கூறியதற்குக் காரணம் உண்டு. தேளிடம் மட்டும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காக இவற்றைக் கூறவில்லை. நான் நிறைய குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். மிட்டாய், சாக்லேட், பிஸ்கேட் போன்ற
தின்பண்டங்களைப் பாதி தின்றுவிட்டு மீதத்தைத் தன் சட்டைப் பையிலோ, கால்சட்டை அல்லது பாவாடையின் பையிலோ போட்டுக்கொள்வார்கள். அந்தச் செயல், எறும்புகளுக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்தது போல்தான். அந்த ஆடைகளை அணிந்திருந்தாலும் கழற்றி வைத்திருந்தாலும் எறும்புப் படை, அவற்றை மொய்த்துவிடும்.

இன்னும் சிலர் எச்சில் பண்டங்களையும் இனிப்புகளையும் சாப்பிட்டு விட்டுத் தங்கள் ஆடையிலேயே தங்கள் கையைத் துடைத்துக்கொள்வார்கள். அதனாலும் எறும்பு எழுச்சியுடன் அணிவகுத்து வரும்.

இன்னும் பலரின் உள்ளாடைகளில் எறும்பு மொய்க்கக்கூடும். பெண்களிள் அதுவும் குறிப்பாகத் தாய்மார்களின் உள்ளாடைகளில் இந்த ஆபத்து அதிகம். பால் சுரந்த ரவிக்கைகளிலும் அக்குளிலும் எறும்புகள் அதிகமாக மொய்க்கும். ஆண்களின் பனியன், ஜட்டி போன்ற உள்ளாடைகளிலும் இந்த ஆபத்து அதிகம் உள்ளது.

உள்ளாடைகள் மட்டுமல்லாமல் எல்லா வகை ஆடைகளிலும் எறும்பு மொய்க்க வாய்ப்பு உண்டு. எனவே எந்த ஆடையை அணியும் முன்னும் அதை நன்கு உதறிய பிறகே அணியவேண்டும். நிறைய பேர், பாதி வழியில் வந்த பிறகு எறும்பு கடிப்பதை உணர்வார்கள். நடு வழியில் எறும்பு ஊசி போடும் போது, நம்மால் ஆடையைக் கழற்றி உதறி அவற்றை வெளியேற்றவும் முடியாது. நாம் அப்போது உண்மையிலேயே இருதலைக்கொள்ளி எறும்பாக ஆகிவிடுவோம்.

உள்ளாடைகள், ஆடைகள் மட்டுமல்லாமல் தொப்பி, ஹெல்மட் போன்றவற்றை அணியும் முன்னும் காலுறை, கையுறை போன்றவற்றை அணியும் முன்னும் நன்கு சோதித்த பிறகே அணியவேண்டும். எறும்பு கடிப்பதால் என்ன பெரிதாய் ஆகிவிடும் என்று நினைக்காதீர்கள். பரபரப்பான சாலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது நறுக்கென எறும்பு ஊசி போட்டால் எவ்வளவு பெரிய விபத்து நிகழக்கூடும் என்பதை நினைத்துப் பாருங்கள். பேருந்தின் படிக்கட்டில் தொங்கவே கூடாது என்றாலும் அப்படித் தொங்கும்போது எறும்பு கடித்தால் என்ன ஆகும்? மிக முக்கியமான தருணங்களில் எறும்புகூட பெரிய விபத்துகளை உண்டாக்கிவிடக்கூடும்.

எறும்பா, தேளா, அரணையா, பூரானா, கரப்பானா, பாம்பா, கொசுவா, பெயர் தெரியாத பூச்சியா... எது நம்மைக் கடிக்கப் போகிறது என்பது தெரியாது. ஆனால், நாம் கவனக் குறைவாக இருக்கும் நேரத்தை எதிர்பார்த்து இவை அனைத்தும் காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

இனி, உள்ளாடை முதற்கொண்டு எந்த ஆடை அணிவதாக இருந்தாலும் நன்றாக உதறிவிட்டுத்தான் அணியவேண்டும். அது, கைக்குட்டையாகக் கூட இருக்கலாம். ஆனால், கவனம் முக்கியம்.

தேளின் விஷக் கொடுக்குகளுக்குப் பலியான அந்த ஆறு வயதுச் சிறுமிக்கு நம் விழிப்புணர்வின் மூலமாகத்தான் நாம் இரங்கல் செலுத்தவேண்டும்.

22 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என் அம்மா, நாங்கள் பள்ளி செல்லும் போது, எங்கள் ஷூக்களை, உதறி விட்டு, பூச்சி பொட்டு எதுவும் இல்லையா என்று பார்க்கச் சொல்லுவார்.
சில சமயம் அவரே பார்த்தும் விடுவார்.
அவசரத்தில் நாங்கள் எல்லாம் அப்போ அலுத்துக் கொள்வோம்.
நீங்கள் சொன்ன பின் தானே தெரியுது அருமை.

பேசாமல் இது போன்ற நல்ல குறிப்புகள், தொலைக்காட்சி விளம்பரங்களில் புகுத்தி விட்டால், மக்களை உடனே சென்று அடையும், போலியோ, குழ்ந்தைகள் முகாம்களில் அச்சிட்டும் கொடுக்கலாம்.

நன்றி அண்ணா கண்ணன். நல்ல சமூகச் சிந்தனை!

Doctor Bruno said...

//தேள் என்பது, பாம்பு அளவுக்குக் கொடிய விஷம் உடையது இல்லை. கடித்தவுடன் இறந்துவிடுவார்கள் என்ற நிலை இல்லை. கடித்ததும் உடனே முதலுதவிகள் செய்தால் கடிபட்டவர் பிழைத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால், அலட்சியம் என்பது தேளைக் காட்டிலும் கொடியது. அது, இருந்தால் பெருங்கேடு உறுதி.//
இதில் முதல் வரியை தவிர மீதி அனைத்து வரிகளிலும் எனக்கு உடன்பாடுதான். உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். தேளானது பாம்பை விட கொடிய விஷமுடையதா?
பாம்பின் விஷம் கொல்லக்குடியதாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மருந்துகள் நம்மிடம் உள்ளன. பாம்புகள் பலவிதம். ஆனால் விஷம் நான்கு விதம் தான். அரசு (மற்றும் தனியார்) மருத்துவமனைகளில் இருக்கும் மருந்தில் (ASV) இந்த நான்கு வகை விஷத்தையும் முறியடிக்கக் கூடிய மாற்று மருந்து (Antidote) சரியான விகிதத்தில் கலந்து இருக்கும். எனவே பாம்பு கடித்த உடனேயோ அல்லது பாம்பு கடித்து இரண்டு மணி நேரத்திற்குள்ளோ அந்த நபரை அரசு (அல்லது இந்த மருந்து வைத்திருக்கும் தனியார்) மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் உறுதியாக (100 சதவிகிதம்) உயிரை காப்பாற்றி விடலாம்.

தற்பொழுது உள்ள மருந்தில் (ASV) நான்கு வகை விஷத்தையும் முறியடிக்கக் கூடிய மாற்று மருந்து (Antidote) உள்ளதால் பாம்பு கடித்த நபரை மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் போதும். பாம்பு தேவையில்லை !!! ஆனாலும் பலர் அந்த பாம்பையும் கொன்று(டு) வருகிறார்கள்

தேள் கடித்தால்தான் மருத்துவருக்கு தலைவலி ஆரம்பம்.
தேள் பல வகை.... அதன் விஷமும் பலவகை.....
இதில் முக்கிய சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு விஷத்திற்கும் ஒவ்வொரு மாற்றுமருந்து. அதில் இந்தியாவில் ஒரு சில வகை மருந்துகள்தான் உள்ளன. பல வகை மருந்துகள் உலகில் எங்குமே கிடையாது
மற்றுமொரு தலைவலி, ஒரே தேள் கடியில் பல வகை விஷங்கள் கூட இருக்கலாம்

இதில் ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி

நல்ல செய்தி என்னவென்றால், பெரும்பாலான விஷங்களினால் உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. Lignocaine என்ற மருந்தை செலுத்தினாலோ அல்லது வெங்காயத்தை அரைத்து பூசினாலோ வலி சரியாகிவிடும்

கெட்ட செய்தி என்னவென்றால், சில வகை விஷங்கள் Myocarditis ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கும். அப்பிடி Myocarditis வந்துவிட்டது என்றால் 99.99 (இந்தியாவில்) சதவிதம் நோயாளியை காப்பாற்ற முடியாது. (வெளி நாட்டில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 20 சதவிதம் தான்)

எனவே, ஒரு பக்கம் பாம்பு ஒரு பக்கம் தேள் என்று மாட்டிக் கொண்டால், பாம்பு உள்ள பக்கம் வாருங்கள்...... Myocarditis வந்தால் வைத்தியம் (இந்தியாவில்)கிடையாது

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப அருமையான அலசல்.
நன்றி.

இலவசக்கொத்தனார் said...

இந்த மாதிரி சம்பவம் எனக்கே நிகழ்ந்திருக்கிறது. நான் பள்ளி செல்லும் பொழுது என் ஷூவில் இருந்த தேள் கொட்டிக் கொண்டே இருந்தது. நான் ஷூவை கழற்றி உதறியதும் வெளியே வந்து விழுந்தது. உடன் எங்கள் பள்ளி வேனில் மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஊசி ஒன்று போட்டு விட்டு அதன்பின் வீட்டில் விட்டார்கள்.

அதன் பின் எப்பொழுதும் ஷூவை உதறி பார்த்துவிட்டுதான் போடுவேன் என்பதை சொல்லவும் வேண்டுமா?

SathyaPriyan said...

அருமையான அலசல். புதிய தகவல்கள். நன்றி அண்ணா கண்ணன் மற்றும் Doctor Bruno.

Sri Rangan said...

அண்ணாக்கண்ணன்,வணக்கம்.

தங்கள் கரிசனையான பதிவு மிகவும் அவசியமான சமூகச் சிந்தனைதாம்.

அந்த மாணவிக்கும்,குழந்தைக்கும் என் அனுதாபம்.அத்தோடு தங்கள் எழுத்து நடையிருக்கே-அது மிகவும் வாசிகத் தூண்டும் நடை!உங்களுக்குக் கதை சொல்வதற்குரிய அனைத்து வளமும் இருக்கிறது.இத்தகைய எழுத்து நடையில் கடினமான விஷயங்களைக்கூட கொஞ்சமும் தொய்வின்றிச் சொல்ல முடியும்.தங்களின் இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி.

பிற்குறிப்பாய்:

இங்கு ஜேர்மனியில் மிகவுமொரு பயங்கரமான வண்டொன்றுண்டு.அதன் பெயர்"செக்க"இது வெயிற்காலத்தில் அடர்ந்த புற்தரைகளில்- மற்றும் காட்டுப் பகுதியில் அதிகமாக ஊரும்.இதை இனம் காண்பது அரிது.எனினும் இது மனிதரின் உடலில் எப்போது துளையிட்டு இரத்தம் உறிஞ்சுமென யாரும் அறியமுடியாது.இது துளையிட்டு இரத்தம் குடித்துவிட்டு, உடலோடு ஒட்டியபடியிருக்கும்.

இந்த வண்டால் உடலில் விஷம் பரப்பப்படும்.அது ஒரு வாரத்தில் "மென்சாயிட்ஸ்" எனும் மூளைக் காய்சலைப் பரப்பி மனிதவுயிரை... இத்தகைய வண்டில் 90 வீதமானவை உயிர் கொல்லி வண்டுகள்!மீதமான பத்துவீதம்-குறிப்பிட்ட வலையத்தில் ஆபத்தற்றவை.இவ் வண்டு மிருகங்களில் முதலில் குருதியைக் குடித்துப் பின் அவைகள் மூளைக் காய்ச்சலை உண்டு பண்ணும் வைரஸ்சை உண்டுபண்ணிக் கொள்கின்றன.

இது ஒரு முறை எனது மகனுக்குக் கடித்தது.உள்ளாடைக்குள்ளால் ஊர்ந்து ஆண் குறிக்கிக் கீழே கடித்தது.அவ் வண்டை வைத்தியரிடம் சென்றே அகற்றியது.நல்ல காலம்.இவ்வண்டு நான் கூறிய பத்து வீதத்துக்குள் அடக்கம்.

உங்கள் கட்டுரையை வாசித்தபோது எனக்கு இதுவே ஞாபகம் வருகிறது!

துளசி கோபால் said...

நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு. நன்றிங்க.

அதிலும் நம்ம டாக்ட்டர் ப்ருனோ இன்னும் நல்ல தகவல்கள் சொல்லிட்டார்.
அவருக்கும் நன்றிகள்.

Anonymous said...

Dear AK

Very informative blog. Thanks for Dr.Bruno too. I had the same experience but my parents immediately took action and saved me. While drinking water from big Sombu, people must be careful and check it once before drinking. A school kid died while drinking water with a scorpio in it. Old houses with wooden support or tiled roof have this scorpion problems more.

Thanks
Sa.Thirumalai

கைப்புள்ள said...

நல்ல பதிவு அண்ணாகண்ணன். எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்.

Anonymous said...

உங்களின் இந்தப் பதிவை வாசித்தபோது,

1. தண்ணீரை அவதானித்துக் குடிக்க வேண்டும்..
2. ஆடையை உதறி அணிய வேண்டும்..
3. காலணிகளைக் கவனித்து அணிய வேண்டும்..

என்ற நபிகளாரின் போதனைகள் நினைவுக்கு வருகின்றன.

நல்லவைகளை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம். எனவே,
இதுபோன்ற நல்ல பதிவுகளைத் தொடர்ந்தும் தாருங்கள் நண்பரே..

அபூயஹ்யா

வேந்தன் said...

மிக மிக பயனுள்ள கருத்துக்கள்

கார்த்திக் பிரபு said...

nalla padhivu ..thagavalgalukku nandri

கார்த்திக் பிரபு said...

nalla padhivu ..thagavalgalukku nandri

மணியன் said...

மிக பயனுள்ள பதிவு. உங்களுக்கும் Dr.Brunoவிற்கும் நன்றிகள்.

Unknown said...

பணியிலிருந்து உணவு இடைவேளை அரைமணி நேரத்தில் அறைக்கு சென்று காலுறையுடன் உணவருந்தி விட்டு காலணியை தட்டாமல் அவசரத்தில் அப்படியே போட்டுக் கொண்டு அலுவலகம் வந்தால் கால் விரல் நுனியில் மெதுமெதுவென்று ஏதோ தென்படுகிறது. காலணியை கழற்றினால் ஒரு பல்லி அறுபட்ட வாலுடன் துள்ளிக் குதித்தோடுகிறது.
இன்னும் என் அலுவலக நண்பர்கள் நினைவு வரும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி சிரிக்கிறார்கள்.

எனவே காலணி, சட்டை முதலான எதையும் அணிவதற்கு முன்னர் உதறி விட்டு அணிவதுதான் நல்லது.

கதிர் said...

மிகப்பயனுள்ள தகவல்கள்.
நன்றி அண்ணா கண்ணன்.

Anonymous said...

//வெட்டி வீம்பின் காரணமாகத் தங்கள் குழந்தைக்குத் தாங்களே எமனாகிவிட்டார்கள். இனி என்னைத் தூக்கவே வேண்டாம் என்பதுபோல் அந்தக் குழந்தை போய்ச் சேர்ந்துவிட்டது.//

மனம் மிகவும் வலிக்கிறது. இச்செய்தி உண்மையெனில் அத்தம்பதி இனி மலடராக இருக்கத்தான் தகுதி உடையவர்கள்

முனைவர் அண்ணாகண்ணன் said...

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. டாக்டர் புரூனோவின் குறிப்புகள், பயனுள்ளவை. 'அரணை கடித்தால் அரை விஷம், தேள் கடித்தால் முக்கால் விஷம், பாம்பு கடித்தால் முழு விஷம்' என்பது போல் ஒரு சொற்றொடரை என் இளவயதில் கேட்டிருக்கிறேன். இன்னொன்று, பாம்பு கடித்து இறந்ததாகத்தான் நிறைய செய்திகள் வருகின்றன. அந்த அடிப்படையில் ஒரு கணிப்பாகத்தான் அப்படி எழுதினேன்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

"பாம்பு கடித்து இறந்ததாகத்தான் நிறைய செய்திகள் வருகின்றன" - இதை நேற்றிரவு சொன்னேன். இன்று காலையில்தான் பார்த்தேன். பிபிசி தமிழில் இதே கருவில் ஒரு நிகழ்ச்சி. கேட்க >>>

Doctor Bruno said...
This comment has been removed by a blog administrator.
Doctor Bruno said...

http://payanangal.blogspot.com/2006/09/blog-post_08.html

நான் பதிவு எழுதியதின் நோக்கம், தேள் விஷம் (நாம் நினைத்து கொண்டிருப்பதை விடவும் மிகவும்)கொடியது என்பதை சுட்டி காட்டத்தான். இந்த பதிவை படித்துவிட்டு யாரும் பாம்பிடம் சென்று "மெனக்கெட்டு" கடி வாங்கினால் நான் பொறுப்பல்ல !!!!

மற்றுமொரு விஷயம்.

1. பாம்பு கடி பட்டு ஒருவர் அரசு மருத்துவமனை வந்தால் அது குறித்து போலிசுக்கு தெரிவித்து MLC(Medicl Legal Case) பதியப்படுகிறது. அந்த நோயாளி மரணமடைந்தால் அதுவும் போலிசுக்கு தெரிவிக்கப்பட்டு அதனால் இது குறித்த புள்ளி விபரங்கள்(Statistics) நிறைய உள்ளன.

2. தேள் கடி குறித்த புள்ளி விபரங்கள் முறையாக சேகரிக்கப்படாததால் இது குறித்து விழிப்புணர்வு அதிகம் இல்லை.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

உள்ளாடை விசயத்தில் நாம் பலர் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஒரு மணி இது.

எறும்புகள், தேள் என்றல்ல, ... நாள்பட்ட அழுக்கான உள்ளாடைகளும் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

- ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/