இன்று கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென்று தோன்றியது. வழக்கமான தெருவின் வழியல்லாது, பக்கத்துத் தெரு வழியாகச் செல்வோமே என்று வண்டியைத் திருப்பினேன். அந்தத் தெருவில் குகுக் குகுக் எனப் பெரிய ஒலி தொடர்ச்சியாகக் கேட்டது. அது ஒரு பறவையின் குரல். இதுவரை நான் கேட்காத குரல்.
வண்டியை நிறுத்திவிட்டு, பறவையைத் தேடத் தொடங்கினேன். குரல் மட்டும் நன்றாகக் கேட்டது. பறவையைக் காணவில்லை.
முதலில் ஒன்றிரண்டு காக்கைகள் கரைந்தன. அவை இதர காக்கைகளையும் அழைத்தன. சிறிது நேரத்தில் ஏராளமான காக்கைகள் அந்தப் பகுதியில் குவிந்து கரையத் தொடங்கின.
இறுதியில் அந்தப் பறவையைக் கண்டேன். காகம் போன்ற தோற்றத்தில் கபில நிற இறக்கைகளைக் கொண்டிருந்தது. ஜோடிப் பறவையாக வந்திருக்க வேண்டும். நான் ஒரு பறவையை மட்டும் கண்டேன். மற்றது குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.
இந்தப் பறவையின் பெயர், செம்பகம். இதைத் தமிழீழத்தின் தேசியப் பறவையாகப் பிரபாகரன் பிரகடனம் செய்துள்ளார். செம்போத்து, செம்பகம், செங்காகம் (Centropus sinensis) என்ற பெயர்களைக் கொண்ட இது, குயில் வரிசையில் உள்ள பறவை. இதைச் செம்பூழ் என்று சங்க இலக்கிய நூல்களான அகநானூறும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன.குகுக் குகுக் என்ற செம்பகத்தின் ஒலி, மிகத் தொலைவு வரை கேட்கக் கூடியது.
நாம் திட்டமிடாமலே சில செயல்கள் நிகழ்கின்றன. இன்று நான் செம்பகத்தைக் கண்டதும் அப்படி ஓர் எதிர்பாராத நிகழ்வே.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Wednesday, August 26, 2020
செம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை | Centropus sinensis
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:56 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment