திருவெம்பாவை - 17
மாணிக்கவாசகர்
பாடியவர் - ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
பொழிப்புரை:
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.
உரைக்கு நன்றி - தேவாரம் தளம் (Thevaaram dot org)
படத்திற்கு நன்றி - விக்கிப்பீடியா
No comments:
Post a Comment