மாலே, நெடுமாலே, மணிவண்ணா, ஆழி மழைக்கண்ணா, பூவைப் பூவண்ணா, மலர்மார்பா, கோவிந்தா... எனத் திருப்பாவை முழுவதும் கண்ணனை ஏக வசனத்தில் ஆண்டாள் அழைக்கிறார். அது, உரிமை தந்த நெருக்கம். அதேபோன்று ஆயர்பாடியில் உள்ள பாவையர்களும் அழைக்கிறார்கள். அவளைப் போல் நாங்களும் உரிமையுடன் அழைக்கிறோம் என மகிழ்ச்சி இருந்தாலும், சிறு தயக்கம் அவர்களுக்கு. அப்பா, குறையொன்றும் இல்லாத கோவிந்தா, சிறுபேர் இட்டு அழைத்ததற்காகக் கோபிக்காதே என்கிறார்கள். Nick name என்பதைச் சுருக்கப் பெயர், செல்லப் பெயர் என இன்று அழைக்கிறோம். இதைச் சிறுபேர் என ஆண்டாள் வழங்குகிறார். நல்லதொரு சொல்லாக்கம். சிறுச்சிறிதே என முன்பே மொழிந்ததையும் இங்கே நினைவுகூரலாம்.
சீறாதே எனச் சொல்லாமல் சீறி அருளாதே என்கிறார். ஏனெனில், அவன் சீறினால், கோபித்தால், அதுவும் அவனது அருளே. நடப்பது அனைத்தும் அவனது ஆசீர்வாதம் என ஏற்கும் பக்குவம் பெற்ற உள்ளம், அது.
இந்தப் பாடலில் அறிவொன்றும் இல்லாத என்றும் அறியாத பிள்ளைகள் என்றும் சிறுபேர் அழைத்தனம் என மூன்று விதமாகச் சொல்கிறார். அறிவொன்றும் இல்லாத என்பதற்கு, உன்னைப் புரிந்துகொள்ளும் அறிவொன்றும் இல்லாத எனப் பொருள்கொள்ளலாம். கறவைகள் மேய்ப்போம், அவற்றின் பின்னே காட்டுக்குள் செல்வோம், எல்லோரும் சேர்ந்து உண்போம். இவற்றைத் தவிர வேறொன்றும் தெரியாது எனச் சொல்வதாகவும் கொள்ளலாம். இது ஒருவகை அவையடக்கம்.
அறிவொன்றும் இல்லாத எங்கள் குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்துவிட்டோம் எனக் கண்ணனை நோக்கி ஆண்டாள் பாடுகிறார். அதையே ஆண்டாளை நோக்கி நாமும் பாடலாம். எங்கள் தமிழ்க்குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ. கோதை நாச்சியாரைக் கொண்டாடி, அவர் பின்செல்வோம். கறவைகள் பின்சென்று கானத்தைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.
No comments:
Post a Comment