தாங்கள் பெரியவர்கள் எனக் கருதிய பேரரசர்கள், நீயே உலகின் தலைவன் எனப் புரிந்து உன் காலடியில் பணிந்து நிற்கின்றார்கள். தோழிமார்கள் நாங்களும் கூட்டமாக வந்து வணங்கி நிற்கின்றோம். உறக்கத்திலிருந்து மெல்ல மெல்ல நீ விழி திறந்து பார்ப்பதைக் கண்ணாரக் காணக் காத்திருக்கிறோம். சூரிய சந்திரனைப் போன்ற உன் இரண்டு கண்களால் எங்களைச் சற்றே நோக்கினால், எங்கள் மேல் உள்ள சாபம் அனைத்தும் நீங்கிவிடுமே எனப் பாவையர்கள் பாடுகிறார்கள்.
தாமரைப்பூப் போன்ற சிவந்த கண்கள் என்ற ஆண்டாள், அடுத்த அடியிலேயே சூரியனைப் போலவும் சந்திரனைப் போலவும் இரு கண்களால் எம்மை நோக்கு என்கிறார். தாமரைப்பூ, கண்களின் வடிவிற்கு உவமையாக வந்தது. திங்களும் ஆதித்தியனும் பார்வையின் தன்மைக்கு உவமைகளாக வந்தன. அன்பர்களிடம் கனிவுடனும் பகைவர்களிடம் கடுமையாகவும் பார்ப்பது ஒரு பொருள். ஒரே நபரிடமே சூழலுக்கு ஏற்ப, கடுமையாகவும் கனிவுடனும் பார்ப்பது இன்னொரு பொருள். அன்பர் மேல் உள்ள சாபத்தைக் கடுமையால் நீக்கி, அருட்பார்வையால் வரங்கள் தருவான் கண்ணன்.
சலங்கையின் கிண்கிணிப் பரல்போல் கண்களைத் திறக்க வேண்டுகிறாள் ஆண்டாள். பரலுக்குள் இருக்கும் மணியும் விழிக்குள் இருக்கும் கருமணியும் ஒப்பிடத்தக்கவை. அந்தச் சிறு இடைவெளியில் மணி ஒலிக்கின்றது. கண்களும் சிறிது திறந்த நிலையிலும் அருள் பொழிகின்றன. கிண்கிணியின் பரலானது, எப்போதும் (சிறிது மட்டும்) திறந்திருப்பது. ஒருபோதும் மூடப்படாதது. கண்ணனின் உறக்கமும் அறிதுயிலே. உறக்கத்திலும் கூட அவன் கண்கள் மூடியது போலத் திறந்திருக்கும். கீற்றுப் போல அவனது பார்வை வெளிப்படும். இந்தக் கீற்று நிலையிலிருந்து தாமரைப் பூப்போல் தன் கண்களைப் பூரணமாகத் திறப்பான். சட்டென்று திறந்துவிடமாட்டான். மெல்ல மெல்லத் திறப்பான். இதைத்தான் சிறுச்சிறிதே என்கிறார் ஆண்டாள். சிறிது சிறிதாக என்பதை விட, சிறிதினும் சிறிதாக என இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆண்டாள் கண்ணுற்ற அந்த அருட்பார்வை, நம் மீதும் சற்றே சேரட்டும். நம் மீதுள்ள சாபங்கள் யாவும் நீங்கட்டும்.
இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் கிண்கிணிக் குரலில் கேளுங்கள்.
No comments:
Post a Comment