நீங்கள் கிரிக்கெட் ரசிகரா? தென்னாப்பிரிக்காவில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை ஆட்டங்களைப் பார்த்து ரசித்தவரா? அவை பற்றிய செய்திகளை ஏடுகளிலும் இணையத்திலும் தொலைக்காட்சியிலும் படித்திருக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்தப் போட்டி.
டுவென்டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? அதன் சரி, தவறுகள் என்னென்ன? இது குறித்தான உங்கள் கருத்துகளை ஒரு கட்டுரை வடிவில் எழுதி tamileditor@sify.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
கட்டுரைகளைத் தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். யுனிகோடு, டாம், டாப், ஸ்ரீலிபி... என எந்த எழுத்துருவிலும் இருக்கலாம். எழுத்து (டெக்ஸ்ட்) வடிவில் இருக்க வேண்டும்; பிடிஎப் வடிவில் அனுப்பக் கூடாது. பக்க வரையறை இல்லை. சிறந்த ஒரு கட்டுரைக்கு இந்திய அணித் தலைவர் தோனி கையொப்பம் இட்ட டி-சட்டை (டி-சர்ட்) பரிசாக வழங்கப்படும். வெற்றி பெற்ற படைப்பு, தமிழ்சிஃபியில் வெளியாகும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர், இந்தியாவுக்குள் இருந்தால் அவருக்குப் பரிசு அனுப்பி வைக்கப்படும். வெளிநாடுகளில் இருப்பவர் வென்றால், அவரது இந்திய முகவரிக்குப் பரிசு அனுப்பப்படும். கட்டுரையாளர்கள், தங்கள் முகவரியையும் தொடர்பு எண்ணையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். புகைப்படம் இருந்தால் இணைத்து அனுப்பலாம். கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள், 3.10.2007 என்று அறிவித்திருந்தோம். வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள், 10.10.2007 அன்றைக்குள் தங்கள் கட்டுரைகளை tamileditor@sify.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
இந்தப் போட்டியில் வாசகர்கள் உற்சாகமாகப் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
- ஆசிரியர், தமிழ்சிஃபி
=============================
தமிழ் ஸ்கோர் கார்டு பாருங்கள்
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Wednesday, October 03, 2007
20-20: தமிழ்சிஃபி நடத்தும் கட்டுரைப் போட்டி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:54 PM 2 comments
Labels: தமிழ்சிஃபி, விளையாட்டு
Sunday, August 19, 2007
பொதிகையில் என் நேர்காணல்
அமுதசுரபி பொறுப்பாசிரியராக இருந்தபோது 2005ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சி காலை மலருக்காக விஜய் ஆனந்த் என்பவர், என்னை நேர்கண்டார். அதன் ஒளித் துண்டு இங்கே:
பொதிகை நேர்காணல் 2005
நேர அளவு: 10.03 நிமிடங்கள்
நன்றி: பொதிகை
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:10 PM 0 comments
Saturday, August 04, 2007
இந்தியா 60 - சுதந்திர தினச் சிறப்பிதழ்
இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் விதமாக, தமிழ்சிஃபி இணைய இதழ் சார்பில், சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம்.
சிறந்த படைப்பாளர்கள், சிந்தனையாளர்கள் பலர் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றனர்.
http://tamil.sify.com/general/iday/iday07/index.php
கதை, கவிதை, கட்டுரை ஆகியவை மட்டுமல்லாமல் ஒலி, ஒளி, புகைப்படத் தொகுப்புகளையும் இங்கு கண்டும் கேட்டும் மகிழலாம். இந்தச் சிறப்பிதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:40 PM 0 comments
Labels: சிறப்பிதழ்கள், சுதந்திரம், தமிழ்சிஃபி
Friday, July 20, 2007
தமிழன் தொலைக்காட்சியில் மீண்டும் நான்
ஜூலை 21 அன்று இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'மாணவர்கள், அரசியலுக்கு வரலாமா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில், 'வரலாம்' என்ற அணியில் நான் பங்கேற்றுள்ளேன்.
இதன் நடுவர், சுப.வீரபாண்டியன்.
வாய்ப்பு இருந்தால் பாருங்கள்.
நிகழ்ச்சி நிரல் இங்கே: http://tamilantelevision.com/schedules.php
=============================================
கூடுதல் தகவல்:
இது, அண்ணாகண்ணன் வெளி என்ற இந்தப் பதிவில் நான் இடும் 100ஆவது இடுகை.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:12 PM 2 comments
Labels: அரசியல், கல்வி, தொலைக்காட்சி, மாணவர்கள்
Monday, July 16, 2007
இதோ என் 8
எட்டு போடுமாறு அழைத்த மாலன் அவர்களுக்கு நன்றி. தாமதத்திற்கு மன்னியுங்கள். ஒருவர் தன்னைப் பற்றிய எட்டு விஷயங்கள் / சாதனைகள் / சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற குறிப்பினைக் கொண்டு மேற்செல்கிறேன்.
சாதனைகள் என்று குறிப்பிடும் அளவு இன்னும் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. பல வளைவுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட ஒரு நீண்ட ஓட்டப் பந்தயத்தில் சில முனைகளைக் கடந்திருக்கிறேன். வளரிளம் பருவத்தில் சில சில்லறை மகிழ்ச்சிகள் அடைந்தது உண்டு. ஆயினும் இப்போதைய மனநிலையில் கிளர்ச்சி அடைவது, மிதமிஞ்சிய உற்சாகம், கூப்பாடு... என எதுவும் இல்லை. எதிரிலோ, தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ யாரேனும் சிரிக்கும் போதுதான் இவ்வளவு நேரம் நான் சிரிக்கவில்லை என்பதே எனக்கு உறைக்கிறது; நானும் சிரிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
வாழ்வில் அநேக துன்பங்களையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் நான் சந்தித்திருக்கிறேன்; வெளுத்ததெல்லாம் பால் என எண்ணி, மிகவும் வெளிப்படையாக இருந்து அடிகள் பட்டிருக்கிறேன். சில தவறான முடிவுகளால் பெரும் இழப்புகள் நேர்ந்ததுண்டு. ஆயினும் இவ்வளவுக்கும் பிறகும் சில வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் பெற்றுள்ளேன். சில நல்ல குணங்களைக் கொண்டிருக்கிறேன். நான் மகிழும் அளவுக்கு என் வாழ்க்கையில் என்னென்ன உண்டு என்று சற்றே திரும்பிப் பார்த்தேன். கிட்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
1.
என் தொடர்ந்து போராடும் குணத்திற்காக மகிழ்கிறேன்.
நான் சுமார் 30 வேலைகள் பார்த்திருக்கிறேன். பப்பாளிப் பழம் விற்பவர், சில்லறை விலையில் பெட்ரோல் விற்பவர், கிராம நிர்வாக அலுவலரிடம் கணக்கு எழுதுபவர், நாளிதழ் விநியோகிப்பாளர், வீட்டு வேலைக்காரர், கொரியர் அஞ்சல்காரர், ஊதுபத்தி விற்பவர், காஃபி மேக்கர் விற்பவர், ஃபினாயில்-சோப் ஆயில் விற்பவர், கல்யாண வீட்டில் சாப்பாடு பரிமாறுபவர், கவிஞர், எழுத்தாளர், எழுத்தாளருக்கு உதவியாளர், வசனகர்த்தா,
தொலைக்காட்சித் தொடர் உதவி இயக்குநர், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர், பிழை திருத்துபவர், செய்தியாளர், புகைப்படக்காரர், பேட்டி எடுப்பவர், உதவி ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், அச்சிதழ் ஆசிரியர், சொந்தமாக நூல் வெளியிட்ட பதிப்பாளர், பதிப்பாசிரியர், இணைய இதழாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர்.... எனப் பல வேலைகளில் நான் ஈடுபட்டுள்ளேன். படைப்பு சார்ந்தவற்றையும் நான் பணியாகக் குறிப்பிட்டதன்
காரணம், அவற்றின் மூலம் வருவாய் வந்ததால்தான். சில வேலைகளை ஒரே நாள் மட்டும் செய்துள்ளேன்; சிலவற்றை ஆண்டுக்கணக்கில் செய்துள்ளேன்; தொடர்ந்தும் செய்து வருகிறேன்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக 12ஆம் வகுப்பு முடித்தவுடன் இனி கல்லூரிக்குச் சென்று படிக்கவேண்டாம்; அஞ்சல் வழியில் படித்துக்கொண்டே வேலைக்குச் சென்று பொருளீட்டலாம் என முடிவுசெய்தேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி பெரிய ஊதியம் கிட்டவில்லை. ஆயினும் கிடைத்த பணிகளை ஏற்று உழைத்தேன். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட்டதும் உண்டு. உச்சி வெயிலில் நீண்ட தூரம் மிதிவண்டி மிதித்துச் சென்றது, மிதிவண்டியின் பின்புறம் பெரும் சுமைகளை எடுத்துக்கொண்டு அலைந்தது, பல அவமதிப்புகளைச் சந்தித்தது.... போன்ற பலவும் என்னைப் புடம் போட்டன. சிலவற்றில் ஈடுபடும் போது உடல் அளவிலும் மனத்தளவிலும் பெரும் உளைச்சல் ஏற்பட்டாலும் என் மன உறுதிக்கு இந்தச் சம்பவங்கள் காரணம் ஆயின. தொடர்ந்து போராடும் குணத்தை என்னுள் வளர்த்தன. இதனால் பெரும்பாலான முதலாளிகளிடமும் நிர்வாகிகளிடமும் நன்மதிப்பைப் பெற்றேன்.
2.
என் எளிமைக்காக நான் மகிழ்கிறேன்.
சில ஆண்டுகள் முன்புவரை பழைய துண்டினைக் கிழித்தே என் கைக்குட்டைகள் உருவாயின. இருப்பவற்றிலேயே விலை குறைந்த வாழைப் பழத்தை வாங்குவேன். அதிலும் ஒரு சீப்பாக வாழைப் பழம் வாங்குவதை விட, உதிரியாக உள்ள வா.பழங்களை வாங்கினால் இன்னும் விலை குறையும் என்பதால் அத்தகைய பழங்களை வாங்குவேன். எந்த வகையான ஆடம்பரமும் இல்லாத வாழ்க்கை. மிகவும் தேவை என்றால் மட்டுமே செலவு செய்வது என்ற கொள்கை. பெரும்பாலும் அஞ்சல் அட்டைகளையே அனுப்பினேன். என் பள்ளிக் காலத்தில் வாழ்த்து அட்டைகளுக்குப் பதில், அஞ்சல் அட்டையிலேயே ஏதேனும் வரைந்து, வாழ்த்து அட்டையாக அனுப்பி இருக்கிறேன். சாப்பாட்டிலும் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு, எந்தப் பொருளையும் வீணடிக்காமல் உண்ணும் வழக்கம் உண்டு. இப்படியாக என் வாழ்வியல், முற்றிலும் எளிமையானதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், இடைக் காலத்தில் என் குடும்பத்தில் நிலவிய நிதிச் சிக்கல்கள். அந்தச் சிக்கலான காலக்கட்டத்தை நான் தாண்டி வந்துவிட்ட போதும், இப்போது அநேக வாய்ப்பு - வசதிகள் எனக்குக் கிட்டியுள்ள போதும், அந்த எளிமையை இன்னும் விட்டுவிடவில்லை. இன்னும் நான் குறைந்த விலையிலான ஆடைகளையே உடுத்துகிறேன். அதே வகை காலணிகளையே அணிகிறேன். முகத்திற்கு மாவுப் பூச்சு கிடையாது; எண்ணெய், ஷாம்பூ, நறுமணம்... இத்யாதிகள் கிடையாது. கழுத்தில் சங்கிலி அணிவதில்லை; செல்பேசியிலேயே மணி பார்த்துக்கொள்ள முடிவதால் கையில் கடிகாரம் கிடையாது.
காந்தியின் எளிய வாழ்வியல் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே என் அம்மா சவுந்திரவல்லி, மிகவும் சிக்கனமானவராக எனக்குத் தோன்றினார். காகிதத்தின் பின்பக்கத்தில் எழுதுவது, கிழிந்த ஆடைகளை மீண்டும் மீண்டும் தைத்து அணிவது, எந்தப்
பொருளையும் வீணடிக்காமல் இருப்பது, பேருந்து கிடைக்காத நேரத்தில் ஆட்டோவில் செல்லாமல் நடந்தே செல்வது, தன் குடும்பத்துப் பிள்ளைகளுக்குத் தானே முடிவெட்டி விடுவது..... எனப் பலவற்றை என் கண்முன்னே அவர் நிகழ்த்திக் காட்டினார். அதன் தொடர்ச்சியே நான்.
3.
பல்வேறு போட்டிகளில் நான் பரிசுகள் வென்றுள்ளேன். அந்தத் தருணங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானவை.
திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டேன். அதன் நடுவர் தமிழாசிரியர் உத்தமபுத்திரன். அவர், ஓலை வேய்ந்த என் வகுப்பறை வாசலில் வந்து நின்று, 'இங்கு அண்ணாகண்ணன் யார்?' என்று விசாரித்தார். அங்கிருந்த மாணவர்கள் என்னைக் காட்டினார்கள். அவர் என்னை அழைத்து, 'கட்டுரைப் போட்டியில் உனக்குத்தான் முதல் பரிசு' என்று அறிவித்தார். அன்று மிகவும் மகிழ்ந்தேன். அந்த ஊக்கத்தில் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொள்ளத் தொடங்கினேன். அதன் பிறகு அந்தப் பள்ளியில் படித்த 5 ஆண்டுகளும் கட்டுரைப் போட்டியில் நானே முதல் பரிசு வென்றேன். பேச்சு, ஆங்கிலம் ஒப்பித்தல் போட்டிகளிலும் பரிசு
பெற்றேன். விளையாட்டுப் போட்டி, ஓவியப் போட்டிகளையும் நான் விட்டுவைக்கவில்லை. பரிசு இரண்டாம் பட்சமாகி, போட்டியில் கலந்துகொள்வதே முதல் நோக்கமானது.
பள்ளிக்குள் நடந்த போட்டிகளில் மட்டுமின்றி அனைத்துப் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த போட்டிகளிலும் கலந்துகொண்டு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பரிசுகள் வென்றேன். முன்கூட்டியே தலைப்புகள் தந்து நடத்திய போட்டிகள் மட்டுமின்றி, போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு தலைப்பு அளிக்கும் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றேன். இது, அஞ்சல் வழியில் படிக்கும்போதும் தொடர்ந்தது. பாரதியார் சங்கம் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதல் பரிசு பெற்றேன். அது, உடனுக்குடன் தலைப்பு அளித்து அதற்குக் கவிதை எழுதும் போட்டி. மேலும், கவியரங்குகள் பலவற்றிலும் பங்கேற்றுக் கவிதை பாடிப் பரிசுகள் பெற்றேன்.
இப்படியாகப் போட்டிகளில் நான் வெற்றி பெற்றதை அறிவிக்கும்போதெல்லாம் எனக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டானது.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின், சில போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்ற என்னை அழைத்தனர். அதன் பிறகு போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகிக்கொண்டேன். ஆயினும் தொலைக்காட்சிகளில் இன்றும் ஏதேனும் பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, வினாடி வினா எனக் காணும்போது உற்சாகம் உண்டாகிறது.
4.
புதிய முயற்சிகளில் இறங்கியமைக்காக மகிழ்கிறேன்.
என் குறுகிய வாழ்நாளில் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு. கவிதையில் வடிவ ரீதியாக அநேக முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். கொடி அசைவதற்கு ஏற்ற சந்தம், ரெயில் ஓடும் சந்தம் ஆகியவற்றில் பாடல் புனைய முயன்றதுண்டு. சித்திரக் கவியில் மாலை மாற்று, கோமூத்திரி, நாக பந்தம், சுழிகுளம், உதடுகள் ஒட்டாத நீரோட்டகம், உதடு ஒட்டியும் குவிந்தும் வரும் ஒட்டியம்.... எனப் பல வடிவங்களில் எழுதிப் பார்த்ததுண்டு.
வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு எழுதினேன். ஏழே எழுத்துகளில் பாடல் எழுதினேன். சிற்றிலக்கிய வடிவங்களில் எழுத
முயன்றேன். எழுத்தில் கவிதையோடு நின்று விடாமல் கட்டுரை, சிறுகதை, நாடகம், குறுநாவல் ஆகியவை எழுத முயன்றேன்.
அமுதசுரபியில் பொறுப்பாசிரியராக இருந்த போது, பெரும்பாலும் கிறுக்கி எழுதும் மருத்துவர்களிடையே நல்ல கையெழுத்தை ஊக்குவிக்கும்
பொருட்டு கையெழுத்துப் போட்டி நடத்தினேன். வாசகர் கடிதம் எழுதும் அனைவருக்கும் ஓர் அஞ்சல் அட்டையை இலவசமாக அனுப்பினேன்.
எந்தத் துறையில் பணியாற்றிய போதும் என் முத்திரையைப் பதித்து வருகிறேன்.
'தகதோம்', 'தித்தித்தோம்' என்ற இரண்டு கவிதைகளை உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்குத்
தகுதியான மொழிபெயர்ப்பாளர்களைக் கண்டுபிடித்து இதுவரை 32 மொழிகளில் அவற்றை மொழிபெயர்க்கச் செய்துள்ளேன். ஆங்கிலம், சீனம்
(மாண்டரின்), சமஸ்கிருதம், அரபி, பெர்சியன், உருது, இரஷ்யன், ஜப்பானியன், ஹீப்ரூ, ஸ்பானிஷ், சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
துளு, கொங்கணி, இந்தி, குஜராத்தி, மராத்தி, அவதி, பிரஜ்பாஷா, வங்காளம், லடாகி, இராஜஸ்தானி, பீஹாரி, பஞ்சாபி, மைதிலி, ஒரியா, காசி
(Khasi), செளராஷ்டிரா... உள்ளிட்ட மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் சேர்த்து ஒரே தொகுப்பாகக்
கொண்டுவர வேண்டும் என்பது என் விருப்பம். இது, மொழியியலில் ஒரு புது முயற்சியாக இருக்கும்.
5.
என்னிடம் சிறந்த வைராக்கியம் இருக்கிறது. அதற்காக மகிழ்கிறேன்.
எனக்குச் சுமாராக 10 வயது இருக்கும். அப்போது நான் சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள புதுத்துறை மண்டபம் என்ற ஊருக்கு
விடுமுறைக்காகச் சென்றிருந்தேன். அது என் தாத்தாவின் ஊர். என் அம்மா, சித்தி உள்ளிட்ட உறவினர்கள், ஒரு மதிய நேரத்தில் என்னை
அழைத்துச் செல்லாமல் சீர்காழியில் ஓடும் ஒரு திரைப்படத்திற்குச் சென்றுவிட்டார்கள். மிக முக்கியமாக, என்னிடம் வேறு காரணம் சொல்லி
என்னை ஏமாற்றிவிட்டு அவர்கள் திரைப்படம் பார்க்கச் சென்றார்கள். எனக்குள் கடும் வெப்பம் கிளர்ந்தது. என் தாத்தாவும் இன்னும் பிறரும்
தடுத்தபோதும் நடந்தே சீர்காழிக்குக் கிளம்பினேன். 6 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்து மிகச் சரியாக அவர்கள் திரையரங்கிற்குள்
நுழைவதற்குள் அவர்களைப் பிடித்துவிட்டேன். அவர்கள் எனக்கும் சேர்த்தே நுழைவுச் சீட்டு எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது மிகச் சாதாரண நிகழ்வாகத் தெரியலாம். ஆனால், மனத்தில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை எப்பாடு பட்டாவது அடைந்துவிடுவது என்ற
முனைப்பு எனக்குள் வேரூன்றியது. அது, பிற்காலத்தில் பல வடிவங்களில் எனக்குத் துணையிருந்தது; இப்போதும் இருக்கிறது.
6.
நான் வசைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்காக மகிழ்கிறேன்.
நான் சற்றே யோசித்துப் பார்க்கிறேன். என் பள்ளிப் பருவத்தில் என்னை அடித்துவிட்டு ஓடிய ஒரு சிறுவனை எந்தச் சொல்கொண்டு திட்டுவது என்று
யோசித்து, தடுமாறி, 'குண்டா குண்டா' என்று கத்தியது நினைவிருக்கிறது. அதற்குப் பின்னர் ஒரு சில முறைகள் சில வசைச் சொற்களைப்
பயன்படுத்தியதோடு சரி. என் நினைவுக்குத் தெரிந்து, கடந்த 10 ஆண்டுகளாக எந்த வசைச் சொல்லையுமே நான் எவர் மீதும் பயன்படுத்தவில்லை.
அப்படியான சொற்களை உச்சரிப்பதையே கூச்சமாகக் கருதினேன். கருதுகிறேன்.
7.
நல்ல நண்பர்களைப் பெற்றமைக்காக மகிழ்கிறேன்.
என் உடன் படித்தவர்கள், உடன் பணியாற்றிவர்கள், உடன் பழகியவர்கள்...... என்ற வகைகளில் நண்பர்கள் நிறைய உண்டு. இலக்கிய உலகம்,
பத்திரிகை உலகம், இணைய உலகம், இவை அல்லாத உலகம்..... என என் நட்பு வட்டம் விரிந்துள்ளது. ஒருவரைக் குறிப்பிடுவதன் மூலம் பலரைக்
குறிப்பிடாமல் விடுகிறோமே! இந்த இடரைக் களைய, ஒருவரையுமே குறிப்பிடாமல் விடுகிறேன். ஆயினும் உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களே
மேல் என்ற எண்ணம், எனக்குள் மேலும் மேலும் உறுதி பெறுகிறது.
8.
ஒவ்வொரு புதிய படைப்பின் போதும் மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகிறது.
அநேக சிந்தனைகள் என்னுள் எழுந்துள்ளன; தொடர்ந்து
எழுகின்றன. சிலவற்றை மட்டுமே குறித்து வைக்கிறேன். உலகப் பேரறிஞர்கள், தலைவர்கள், தத்துவ ஞானிகள், படைப்பாளிகளின் சில நூல்களை,
மேற்கோள்களைப் படிக்கும்போது அதில் வரும் வரியோ, கற்பனையோ, சிந்தனையோ வியப்பு உண்டாக்குகின்றன. இதே மாதிரி நாம் ஏற்கெனவே
சிந்தித்திருக்கிறோமே என்ற எண்ணம் எழுகிறது. 'இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் இவர்களுக்கு எந்த வகையிலுமே குறைவானவர் கிடையாது என்பதுதானே!' என நான் எண்ணுவதுண்டு. ஆனால், அவர்கள் என்னை விட முன்பே சிந்தித்திருக்கிறார்கள்; அந்தக் காலத்தையும் கணக்கில் எடு என்ற வாதமும் எனக்குள் எழுவதுண்டு.
அசையும் ஊஞ்சலின் இரு முனைகளாக என் எண்ணங்கள் அமைகின்றன. ஒரு முனையில் பெரும் கற்பனா இன்பத்தில் மிதக்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களின் அன்புக்கு உரிய மாபெரும் தலைவராக, பெரும் கண்டுபிடிப்பாளராக, உச்ச செல்வாக்கு படைத்தவராக, பெரும் திட்டங்களை நிறைவேற்றுபவராக என்னைக் கற்பனை செய்துகொள்வதில் இன்பம் காண்கிறேன்.
இன்னொரு முனையில் 'எதற்கும் உணர்ச்சிவசப்படாதே; பற்றுகளிலிருந்து மெல்ல மெல்ல விடுதலை அடை' என்ற சிந்தனைக்கு மனத்தினைப்
பழக்கி வருகிறேன். நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவுவோம்; வழிகாட்டுவோம்; ஒரு சமூக சேவகனாய், எளிய தொண்டனாய், ஆதரவற்றோருக்கு
உதவிகள் செய்வோம் என்று எண்ணுகிறேன்.
இந்த இரண்டு முனைகளில் எது வாய்த்தாலும் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். மொத்தத்தில் என் வாழ்க்கை பயனுள்ளதாக
இருக்கவேண்டும். அது ஒரு சிலருக்கா, சில நூறு பேர்களுக்கா, கோடிக்கணக்கான மக்களுக்கா என்பதே கேள்வி. இதற்கான சுவையான பதிலை எதிர்காலத்தின் கையில் ஒப்படைக்கிறேன்.
****************
இந்த 8 போடும் விளையாட்டுக்கு நான் அழைக்கும் 8 பேர்கள் இங்கே:
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சுகதேவ்
பி.கே.சிவகுமார்
ரவி பாலா
யுகபாரதி
ஷைலஜா
திலகபாமா
என். சுரேஷ்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:07 AM 6 comments
Sunday, July 15, 2007
உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்
தமிழ்சிஃபி இணைய இதழில் இந்தியாவின் 60ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்து வருகிறோம்.
இதற்கு உங்களிடமிருந்து படைப்புகளை வரவேற்கிறோம். கதை, கவிதை, கட்டுரை, நாடகம்.... என எந்த வடிவத்திலும் உங்கள் படைப்பு அமையலாம். எழுத்து மட்டுமின்றி ஓவியம், புகைப்படம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு... என எந்த விதத்திலும் பங்களிக்கலாம்.
படைப்பினோடு சேர்த்து உங்கள் புகைப்படத்தையும் சிறுகுறிப்பினையும் அனுப்பி வையுங்கள். படைப்புகளை annakannan at gmail dot com என்ற முகவரிக்கு ஜூலை 22க்குள் அனுப்புமாறு வேண்டுகிறேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:36 PM 0 comments
Labels: சிறப்பிதழ்கள், தமிழ்சிஃபி
Saturday, June 30, 2007
தமிழன் தொலைக்காட்சியில் நான்
ஜூன் 30 அன்று இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் 'அரசு, மதுக்கடைகளை நடத்தலாமா?' என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில், 'கூடாது' என்ற அணியில் நான் பங்கேற்றுள்ளேன்.
இதன் நடுவர், சுப.வீரபாண்டியன்.
வாய்ப்பு இருந்தால் பாருங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:59 AM 1 comments
Monday, June 25, 2007
பொதிகையில் என் நேர்காணல் - வீடியோ பதிவு
8.3.2007 அன்று காலை 7.25 மணிக்கு, பொதிகை தொலைக்காட்சியில் வெளிவந்த என் நேர்காணல், இது. இதே நேர்காணல், 21.3.2007 & 29.3.2007 ஆகிய நாள்களிலும் மீண்டும் ஒளிபரப்பானது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:58 PM 2 comments
Labels: தொலைக்காட்சி, நேர்காணல், பொதிகை
Thursday, May 24, 2007
முனி - திரை விமர்சனம்
நகை(ச்சுவை) பாதி; பகை பாதி என வந்திருக்கும் பேய்ப் படம் இது. 21ஆம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் படம் எடுக்க எப்படித்தான் துணிச்சல் வருகிறதோ!
சிறு வயதில் பேய்க்கதைகள் சொல்லிப் பயமுறுத்தியதால், பெரியவன் ஆன பிறகும் கணேஷ் (ராகவா லாரன்ஸ்) தொடைநடுங்கியாகவே இருக்கிறான்; மாலை 6 மணிக்கு மேல் வெளியே போகமாட்டான்; கொத்து தாயத்துகளை இடுப்பில் கட்டியிருக்கிறான்; இரவில் சிறுநீர் கழிக்கக்கூட தாயைத் துணைக்கு அழைக்கிறான். இத்தகைய பின்னணியில் அவன், வேடிக்கையான முறையில் ஒருத்தியை(வேதிகா)க் காதலித்து மணம் முடிக்கிறான். அவன், மனைவி, அம்மா, அப்பா ஆகியோருடன், ஒரு புது வீட்டுக்குக் குடிபெயர்கிறார்கள். அந்த வீட்டில் லாரன்ஸைப் பேய் (ராஜ்கிரண்) பிடித்துவி டுகிறது. அந்தப் பேயை விரட்டும்போது அந்தப் பேய் தன்னை எப்படிக் கொன்றார்கள் என்று தன் கதையைச் சொல்கிறது. அதைக் கேட்டு இரக்கப்படும் லாரன்ஸ், அந்தப் பேய்க்குத் தன் உடலைத் தரச் சம்மதிக்கிறார். தன்னைக் கொன்றவர்களைப் பேய் கொன்றதா என்பதே கதை.
இந்தக் கதைக்குள் ஒரு கிளைக் கதையாக முனி என்ற பேயின் சொந்தக் கதை விரிகிறது.
லாரன்ஸ் குடும்பத்தினர் குடியேறும் வீட்டுக்குச் சொந்தக்காரர், அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர். (காதல் தண்டபாணி) அவர், தேர்தலில் வெல்வதற்காக நிறைய வாக்குறுதிகளைத் தருகிறார். தன் வார்த்தைகளை, அந்தப் பகுதிக் குப்பத்தின் செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் முனியை (ராஜ்கிரண்) நம்பவைக்கிறார். முனியும் தண்டபாணிக்கு வாக்களிக்கச் சொல்கிறார். ஆனால், தேர்தலில் வெற்றி பெறும் தண்டபாணி, வாக்கு மீறுவதோடு முனியையும் அவர் மகளையும் கொன்றுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுகிறார். இதற்குப் பழி வாங்குவதற்காகவும் அவன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்பதற்காகவும் முனி பேயாக வந்து, லாரன்ஸ் உடம்பில் இறங்குகிறது.
முதலில் கதையில் உள்ள நல்ல தன்மைகளைப் பார்ப்போம். இன்று அரசியல் முகமூடி அணிந்த பலர், வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அவற்றை அப்படியே மறந்துவிடுகிறார்கள். அப்பாவிகளையும் தன்னை நம்பியவர்களையும் மனச்சான்றே இல்லாமல் கொன்று குவிக்கிறார்கள். இவர்களுக்குள் எல்லாம் இந்தப் படம் அச்சத்தை ஏற்படுத்தும். யாருக்கும் தெரியாமல் கொன்றாலும் அவர்கள் பேயாக வந்து தங்களைப் பழி வாங்குவார்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும். உயிர் மீது உள்ள அச்சத்தால் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்புண்டு.
ராகவா லாரன்ஸின் நடிப்பு, சிறப்பாக உள்ளது. பயந்து நடுங்கும்போதும் பேய் இறங்கியபோது நெஞ்சு நிமிர்த்தி நடக்கும்போதும் நல்ல வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். முனியாகவும் பேயாகவும் நடித்துள்ள ராஜ்கிரண், நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார். காதல் தண்டபாணியும் அவரின் உதவியாளராய் வந்து, வடிவேலுவை ஒத்தியெடுத்து நடித்துள்ள டேவிட்டும் குறிப்பிடும்படியாக நடித்துள்ளார்கள். படத்தின் தொடக்கத்தில் இடை இடையிலும் நகைச்சுவைக் கலவை எடுபடுகிறது. அதுதான் படத்தைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டுகிறது.
வசனம் பரவாயில்லை. லாரன்ஸ் கறுப்பாக இருப்பதால் அவர் காதலை ஏற்க முடியாது என வேதிகா சொல்கிறார். அதற்குப் பதில் அளிக்கும் லாரன்ஸ், 'உன் நிறம் என் காலுக்கு அடியில் (உள்ளங்காலில்) இருக்கு; என் நிறம், உன் தலைக்கு மேலே (கூந்தலில்) இருக்கு' என்கிறார். இது வித்தியாசமான ஒப்பீடு.
ஆனால், படத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன.
லாரன்ஸ் உடலில் முனி வந்திறங்குவதும் வெளியேறுவதும் அவ்வளவு எளிதாக நடைபெறுவது வியப்பளிக்கிறது. வீடியோவில் பேயின் உருவம் தெரிவது, அடுத்த வியப்பு. பேயை வா என்று அழைத்ததும் வருகிறது; போ என்றதும் போகிறது! இதற்கெனக் குழந்தைத்தனமாக ஒப்பந்தம் வேறு போட்டுக்கொள்ளப்படுகிறது.
பேயை ஆன்மா என்று மந்திரவாதி கூறுவது ஒரு பெரும் அபத்தம். இந்திய ஆன்மீகமும் தத்துவமும் ஆன்மா என்பதைப் பற்றி எவ்வளவோ பேசுகின்றன. ஆனால், அதைப் பழிவாங்க வந்த ஒரு பேய்க்கு நிகராக விவரிப்பது தவறு.
அடுத்து, அத்தகைய பேய் உள்ளிருக்கும்போது லாரன்ஸ் சுய உணர்வுடன் இருக்கிறார்; பேய் என்னென்ன செய்கிறது என்பதை லாரன்ஸ் அறிந்தே இருக்கிறார். வழக்கமாக, வேற்று உணர்வுகள் உள்வரும்போது சொந்த உணர்வுகள் முற்றிலும் செயலிழக்கும் என்பதே இதுவரையான கற்பனை! இதில் அதுவும் பொய்க்கிறது.
இந்து மந்திரவாதி (நாசர்), ஏகப்பட்ட சமாச்சாரங்களுடன் பேய் ஓட்டுகிறார்; முஸ்லிம் மந்திரவாதியோ, ஒரு தண்ணீரைத் தெளித்ததும் பேய் கட்டுப்பட்டுவிடுகிறது. அது என்ன தண்ணீர் என்பதைக் கடைசி வரை இயக்குநர் காட்டவே இல்லை.
குப்பத்திற்குச் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்டவற்றைச் செய்து தருவதாகத் தேர்தலில் போட்டியிடும் தண்டபாணி கூறுகிறார். ஆனால் வென்றதும், 'நீ கேட்ட பணத்தைக் கொடுக்கிறேன்; நீயே போட்டுக்கொள்' என்கிறார். 'நான் எப்போது பணம் கேட்டேன்? என் கையில் எதற்காகக் கொடுக்க வேண்டும்? நீங்கள்தானே முன்னின்று இதைச் செய்யவேண்டும்' என்று முனி பதிலே கூறவில்லை. உடனே சிரித்துக்கொண்டே பணத்தை வாங்கச் சென்று சாகிறார்.
இரண்டு பெட்டி நிறைய பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு குப்பத்திற்கு இவ்வளவு வசதிகளைச் செய்துவிட முடியுமா? ஒரு தேர்தலின் வெற்றியையே தீர்மானிக்கும் அந்தக் குப்பத்தை இவ்வளவு குறைத்து எடை போட முடியுமா? எந்தச் சட்டமன்ற உறுப்பினர், இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகப் பணத்தைத் தருவார்? அரசாங்கம், ஒப்பந்தப் புள்ளி கோரிப் பெற்று முறைப்படி நிறைவேற்ற வேண்டிய ஒன்றை இப்படி சின்னப்பிள்ளைத்தனமாகக் காட்டியது ஏனோ? மக்கள் தமக்குத் தாமே நிறைவேற்றுவது என்றால் அதற்கு எதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்?
எரித்துக் கொல்லப்பட்ட முனி, அதே தோற்றத்துடன் வினுசக்கரவர்த்தியைப் பயமுறுத்துவது; பேய் இருக்கும் அறையில் கற்பூர தீபம் தானாக அணைவது; பயமுறுத்துவதற்கு என்றே டொக் டொக் என்று கதவைத் தட்டுவது; ஒற்றைக் கை மட்டும் நீண்டு சென்று தோளைத் தொடுவது; திடீர் திடீரென அலறுவது; சூனியக்காரி போன்று பாக்கு இடிக்கும் கிழவியைக் காட்டுவது; முறைத்துப் பார்க்கும் வேலைக்காரி; அவளுக்குப் பேய் பிடித்ததாக வேடம் போடும் ஒரு பெண்..... என திகில் சமாசாரங்கள் படத்தில் நிறைய உண்டு.'வர்றாண்டா முனி' என்ற பாடல் மட்டும் பரவாயில்லை; மற்றவை ஐயகோ! சண்டைக் காட்சிகள், நம்பும்படியாக இல்லை. பேய் அடிக்கிற அடியில் இரண்டு தெரு தள்ளி விழுகிறார்கள்; பாவம்! அடி வாங்கியவர்கள் இல்லை; பார்க்கிற மக்கள்! வேதிகாவுக்கு உருப்படியான வேலை எதுவும் இல்லை. வேதிகாவின் குடும்பமோ, அதற்கு மேல் கோமாளித்தனமாக உள்ளது.
படத்தில் லாஜிக் இல்லை; மேஜிக் உண்டு. நடிகராகவும் நடன இயக்குநராகவும் வெற்றி பெற்றுள்ள ராகவா லாரன்ஸின் முதல் இயக்குநர் முயற்சி, கவரும்படி இல்லை. தொழில்நுட்பத் திறன்களை வைத்து மக்களை மேன்மைப்படுத்தாமல் போகலாம்; ஆனால், அவர்ளை மூட நம்பிக்கையில் ஆழ்த்தும் இந்தப் படம், பொழுதைப் போக்கவில்லை; கொல்கிறது.
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.... எதிர்பார்க்கலாம்.
நன்றி: தமிழ்சிஃபிPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:50 PM 0 comments
Labels: திரை விமர்சனம்
பருத்தி வீரன் - திரை விமர்சனம்
உலக விருதுகள் பெற்ற ராம் படத்தை இயக்கிய அமீரின் அற்புதமான இன்னொரு படைப்பு, பருத்திவீரன்.
எடுத்தவுடனே கிராமத்துத் திருவிழாவில் தொடங்கும் கதை, புழுதி பறக்கும் ஒரு வட்டாரத்துக்குள் நம்மை வாழ வைத்துவிடுகிறது. சாதிய வேர்பிடித்த மண்ணில் வெட்டும் குத்தும் எவ்வளவு மலிவானவை என்பதைப் படம் உடைத்துச் சொல்கிறது. காட்சிக்குக் காட்சி அமீரின் நேர்த்தியும் படக்குழுவின் உழைப்பும் வெளிப்படுகிறது.
கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்குப் பிறந்தவன் பருத்திவீரன் (கார்த்தி); ஒரு விபத்தில் அவன் தாயும் தந்தையும் மாண்டுவிட, சிறுவயது முதல் அநாதையாகத் திரியும் அவனுக்கு சித்தப்பா செவ்வாழை (சரவணன்)தான் ஒரே ஆதரவு. கலப்புத் திருமணம் செய்ததால் அவர்களுடன் பரம்பரைப் பகைமை பாராட்டும் பொன்வண்ணன். அவன் மகள் முத்தழகு (பிரியாமணி). சிறுவயதில் முத்தழகின் மேல் அன்பு பாராட்டிய பருத்திவீரன், ஒரு சமயத்தில் அவள் உயிரையும் காப்பாற்றுகிறான். அதனால் முத்தழகு, அவனையே மனத்தில் வரித்துக்கொள்கிறாள்.
வாலிப வயதில் பருத்திவீரன் சண்டியர் ஆகிறான்; அடிக்கடி சிறைவாசம் செல்கிறான். 'என்ன சித்தப்பு! மாறி மாறி தேனி, ராமநாதபுரம், மதுரை ஜெயில்தானா? ஒரு முறையாவது சென்னை ஜெயிலுக்குப் போயிடணும். கை உயர்த்தி டாட்டா காட்டணும், டிவிக்கு எல்லாம் பேட்டி கொடுக்கணும்' என ஒரு இலட்சியத்தை அவன் விவரிக்கையில் அவன் பாத்திரம் தனித் தன்மை பெற்றுவிடுகிறது.
இத்தகைய சூழலில் அவன் முத்தழகை நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் முத்தழகோ, அவனையே நினைத்துக்கொண்டு அவன் பின்னே அலைகிறாள். முதலில் அவளை மறுக்கிற பருத்திவீரன், பிறகு அவள் காதலைப் புரிந்து தானும் காதல் வயப்படுகிறான். 'இனிமே நீ ஒத்தையாத் திரியவேணாம்; இங்கேயும் (காதல்) வந்திருச்சுல்ல' என்று அவன் கூறுவது அழகு. ஆயினும் இந்தக் காதலுக்கு முத்தழகின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. அதை மீறி இளம் ஜோடி இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.
சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுக நாயகன். அப்படி சொல்ல முடியாத படிக்குப் பாத்திரத்தைக் கச்சிதமாக உள்வாங்கி கார்த்தி நடித்துள்ளார். தொடைக்கு மேல் ஏற்றிக் கட்டிய வேட்டி, முரட்டுத் தாடி, உடல் மொழியிலேயே பேசும் லாகவம், குடி-கூத்தி-அடிதடி-ஆட்டம்பாட்டம்... என எந்த இடத்திலும் அந்நியம் தெரியாமல் ஒரு கிராமத்துச் சண்டியராகக் கார்த்தி ஜமாய்த்துள்ளார். அவருடன் இணைந்தே இருக்கும் சரவணன், ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அவர் வயதிற்கு ஏற்ற பொருத்தமான பாத்திரம்.
கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியாமணி, பிரமாதப்படுத்தி இருக்கிறார். 'உம்மேல உசுரையே வச்சிருக்கேன்' எனக் கார்த்திக்குப் புரியவைத்து, கல்லான அவன் மனத்தையும் கரைத்துவிடுகிறார். எந்த மேக்கப்பும் இல்லாமல், மிகச் சாதாரண தோற்றத்திலேயே தன் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தான் நினைத்ததை அடைய எதையும் செய்யும் துணிச்சல், வீரம், தெறிக்கும் சொற்கள்... என அவரின் பாத்திரமும் கச்சிதம். மதுவைக் கொடுத்துக் கார்த்தியை மயங்கவைத்து, அவன் மார்பில் தன் பெயரைப் பச்சை குத்தும் காட்சி அருமை.
நாட்டுப்புறக் கலைக்கும் பாடல்களுக்கும் பருத்திவீரன் படம், புத்துயிர் ஊட்டியுள்ளது. 'ஊரோரம் புளியமரம்' பாடலும் 'டங்காடுங்கா' பாடலும் தாளம் போட்டு ஆடவைக்கும் அசத்தல் பாட்டுகள். 'அறியாத வயசு' என இளையராஜா பாடுவது, கேட்க இனிமை.
படம், மேலும் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இயல்பான பேச்சு வழக்கு, தத்ரூபமான காட்சியமைப்பு (ஒளிப்பதிவு - ராம்ஜி), அருமையான பாடல்கள் (சினேகன்), பின்னி எடுக்கும் பின்னணி இசை (யுவன்சங்கர் ராஜா), வித்தியாசமான படத் தொகுப்பு (சுதர்ஸன்)..... படத்தின் மகுடத்தில் பல மயிலிறகுகள்.
இயல்பான கிராமத்து நகைச்சுவைக்குக் கஞ்சா கருப்பு, குட்டிச்சாக்கு விமல்ராஜ், பொணந்தின்னி, பிரியாமணியின் அம்மாவாக வரும் சுஜாதா, சிறுவயது பருத்திவீரனும் முத்தழகுமாக நடித்தவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் பாண்டி, லட்சுமி..... என ஒவ்வொரு பாத்திரமும் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.
படத்தின் முடிவு, இதயத்தைக் கனக்க வைக்கிறது. 'நாளைக்கு எனக்குக் கல்யாணம்டா' என பிரியாமணி சொல்லச் சொல்லக் கேட்காமல், 'சூப்பர் ஐட்டம்' என நாலு பேர் மாறி மாறி அவரை வன்புணர்கிறார்கள். முன்பொரு முறை அதே இடத்தில் பருத்திவீரன், வேறொரு உண்மையான ஐட்டத்துடன் படுத்து எழுகிறான். எவ்வளவோ முறைகள் அந்த இடத்தில் பருத்திவீரன் படுத்திருக்கிறான். ஆனால், அதே இடத்தில் அவன் காதலி மானம் இழக்கிறாள். 'இது வரைக்கும் நீ செஞ்ச பாவத்தையெல்லாம் என்கிட்ட மொத்தமா இறக்கி வச்சுட்டாங்க' என்று பிரியாமணி கதறுகிறார். இந்தச் செய்தியை அழுத்தமாகச் சொல்லத்தான் இந்த நீளமான பாலுறவுக் காட்சியை இயக்குநர் அனுமதித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
பருத்திவீரன், அவசியம் பார்க்க வேண்டிய படம்.
நன்றி: தமிழ்சிஃபிPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:42 PM 1 comments
Labels: திரை விமர்சனம்
Saturday, April 14, 2007
தமிழ்சிஃபி தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ்
தமிழில் பேசுவோம்
தமிழில் எழுதுவோம்
தமிழில் கையொப்பம் இடுவோம்
தமிழில் முதலெழுத்துகளை (initial) இடுவோம்
நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைப்போம்
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!!
படிக்க, கேட்க, பார்க்க: தமிழ்சிஃபி தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் >>>>>>
http://tamil.sify.com/general/tamilnewyear/tamilnewyear2007
இதில்
நாகேஸ்வரி அண்ணாமலை (தமிழ்ப் புத்தாண்டு உறுதிமொழி), வெங்கட் சாமிநாதன் (தில்லியில் ஒரு நாடக விழா), மலர் மன்னன் (சிறு தெய்வ வழிபாட்டில் ஆகம விதிகளின் தாக்கம்), துளசி கோபால் (கண்ணைத் திற! சிரி!), ச.பா.ராசகோபாலன் (ஆழ்வார்களின் வாழ்வும் வாக்கும்) ஆகியோரின் கட்டுரைகள்......
விமலா ரமணி (விமலா ரமணியுடன் 3 மணி நேரம்), நா.கண்ணன் (முலை முட்டும் கன்றுகள் - புதுவித கவித் திண்ணை), சுகதேவ் (ஜோ டி குரூஸ் உடன் நேர்முகம்), ஆர். எஸ். மணி(புதுவருடம் புலம்புகின்றது!), மதுமிதா (சொன்ன கணத்தில்...) ஆகியோரின் ஒலிப் பதிவுகள்.........
ஜெயந்தி சங்கர் (சீனக் கவிதைகள்), அண்ணாகண்ணன் (தோசை நாடு தமிழ்நாடு!), கவியோகி வேதம் (காலம் இயற்றிய பாடல்!), சக்தி சக்திதாசன் (அடுத்தொரு சித்திரை பூத்தது), என்.சுரேஷ் (முத்தங்கள் நீராட) ஆகியோரின் கவிதைகள்.........
வே.சபாநாயகம் (நாளை முதல்............), சக்தி சக்திதாசன் (புன்னகை மறந்த பூங்கொடி), ஷைலஜா (எங்கிருந்தோ வந்தான்) ஆகியோரின் சிறுகதைகள்........
புதிய தமிழ்த் திரைப்படங்களின் புகைப்படத் தொகுப்புகள், திரை ஓடை, தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
படித்து, கேட்டு, பார்த்து மகிழுங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:41 AM 0 comments
Labels: சிறப்பிதழ்கள்
Wednesday, March 07, 2007
பொதிகை தொலைக்காட்சியில் நான்
பொதிகை தொலைக்காட்சியின் காலைத் தென்றலில் 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் எனது சிறு நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளது.
இது, மார்ச் 8 அன்று இந்திய நேரப்படி காலை 7.25 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வாய்ப்புள்ளவர்கள், பாருங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:27 PM 2 comments
Labels: கவிதை கொஞ்சம் தேநீர், பொதிகை தொலைக்காட்சி
Sunday, February 11, 2007
தமிழ்சிஃபி ஒருங்குறிக்கு மாறிவிட்டது
நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. 7 ஆண்டுகளின் உள்ளடக்கத்தோடு பல்லாயிரக்கணக்கான பக்கங்களுடன் தமிழ்சிஃபி, 2007 ஜனவரி 26 அன்று ஒருங்குறிக்கு மாறிவிட்டது.
2006 தொடக்கத்தில் ஒருங்குறிக்கு மாறவேண்டியதன் தேவையை அலுவலகத்தில் வலியுறுத்தினேன். அவர்களும் ஒப்புதல் வழங்கினார்கள். ஆயினும் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சியில் தாமதம் ஏற்பட்டது.
இடையில் வாசகர்கள், நண்பர்கள் பலரும்கூட இதை என்னிடம் நேரிலும் இணையத்திலும் வலியுறுத்தி வந்தார்கள். படிப்படியாகப் பல பணிகளை நிறைவேற்றி இன்று இந்த எல்லையை எட்டியுள்ளோம். ஒருங்குறி தொடர்பாக இன்னும் சில பக்கங்களில் சில பணிகள் பாக்கி உள்ளன. இந்த மாற்றத்திற்காகத் தொடர்ந்து உழைத்த சிஃபி தொழில்நுட்பப் பிரிவிற்கு மிக்க நன்றி. வெங்கடேஸ்வரன், கண்ணன், தினேஷ், மீனாட்சி, ராஜேஸ்வரி ஆகியோரின் முனைப்பான பங்களிப்பு பாராட்டுக்கு உரியது.
- இனி தமிழ்சிஃபி வாசகர்கள், கூகிள், யாஹூ, எம்எஸ்என் போன்ற தேடுபொறிகளில் தமிழிலேயே தேடி, தமிழ்சிஃபியின் ஆக்கங்களைப் பெறலாம்.
- விண்டோ ஸ் 2000, எக்ஸ்பி ஆகிய கணினிகளைப் பயன்படுத்துவோர், தனியாக எழுத்துரு இறக்கத் தேவையில்லை.
- சிஃபி ஐடி உள்ளவர்கள், ஒவ்வோர் ஆக்கத்திற்கும் பின்னூட்டம் அளிக்கலாம்.
- சிஃபியின் விவாதக் களத்தில் (http://sify.com/connect/discussions/viewforumtopics.php?f=13493664) தமிழிலேயே உரையாடலாம்.
- அரட்டையிலும் தமிழில் கேள்விகள் கேட்கலாம்.
- தமிழ்சிஃபியைத் தொடர்ந்து மலையாளசிஃபி, தெலுங்குசிஃபி, இந்திசிஃபி, கன்னடசிஃபி ஆகியவையும் ஒருங்குறிக்கு மாறவுள்ளன. தமிழ் சமாச்சார் உள்பட அனைத்து மொழி சமாச்சார்களும் ஒருங்குறிக்கு விரைவில் மாறும்.
மேலும் பல புதுமைகளையும் வாசகர்கள் எதிர்பார்க்கலாம். விண்டோஸ் 98 கணினி பயன்படுத்துவோருக்கு ஒருங்குறிப் பக்கங்களைப் படிப்பதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டும். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:08 PM 5 comments
Labels: ஒருங்குறி, தமிழ்சிஃபி, விண்டோஸ் 98
Saturday, January 20, 2007
நளினியை விடுவிக்க இயக்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினியை விடுவிக்க கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாடலாசிரியரும் கவிஞருமான தாமரை, இந்த இயக்கத்தின் அமைப்பாளராகச் செயல்படுகிறார். இந்தக் கையெழுத்து இயக்கம் தொடர்பாக தாமரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு, பிடிஎஃப் கோப்பாகக் கீழே உள்ளது.
உங்கள் கணினியில் அக்ரோபாட் ரீடர் இல்லாதவர்கள், அதை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
இது தொடர்பாகத் தாமரையிடம் பேசியபோது, "ஆயுள் தண்டனை என்பது, ஆயுள் முழுதும் சிறையில் இருப்பதே என்று நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. எனவே, மனிதநேய அடிப்படையில் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறோம். 16 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள நளினி, அவரின் 14 வயது மகளுடன் இனியாவது சேர்ந்து வாழ வேண்டும்" என்று கூறினார்.
இந்தக் கையெழுத்து இயக்கத்தை இணையம் வழியாகவும் நடத்தவேண்டும் என்று விரும்பும் அவர், இதற்கெனத் தனிப் படிவத்தை விரைவில் வெளியிட உள்ளார்.
நன்றி: தமிழ்சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:43 PM 5 comments
Tuesday, January 16, 2007
மாணவர்களை அடிக்கத் தடை
பொட்டலம் கட்டலாம்! (சிறுவர் பாடல்)
மூக்கை நறுக்கி மிளகிடுவேன்!
முதுகுத் தோலை உரித்திடுவேன்!
காக்காய்க்கு எறிவேன் உன்காதை!
கரண்டிக் காம்பு பழுத்துவிடும்!
வீக்கம் பிறக்கும்! விரலொடியும்!
விசிறிக் காம்பு முறிந்துவிடும்!
ஜாக்கிரதை எனும் பெரியவரே!
அறிந்தேன் தங்கள் அன்புடைமை!
முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்!
மூங்கில் பிரம்பால் இசையமைப்பேன்!
குட்டினால் பள்ளம் தோன்றிவிடும்!
குருதிஎன் கிள்ளலில் ஊற்றுவிடும்!
கட்டி வைப்பேன் தலைகீழாய்! - எனக்
கருணை பொழியும் பெரியவரே!
கட்டி மேய்ப்பது உம்கடமை!
கண்ணீர் எனது பிறப்புரிமை!
அடித்து வளர்ப்பது முறையென்றும்
அரும்பயன் தருவது 'அறை'யென்றும்
ஒடித்துத் தந்தீர் ஒருகிளையை
ஓங்கி வளருது போதிமரம்!
படிக்கும் இந்தப் பாடத்தில்
புத்தர் ஏசு காந்தியெனக்
கிடக்குது வெற்றுக் காகிதமே
கிழித்துக் கட்டலாம் பொட்டலமே!
- இந்தச் சிறுவர் பாடல், 2005இல் அமுதசுரபி மாத இதழில் வெளிவந்தது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், எவ்வளவு வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதைச் சிறிதளவு இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது. அவதியுறும் இத்தகைய மாணவர்களுக்காக அரசு புதிய உத்தரவு ஒன்றை
இப்போது பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்க வகை செய்யும் கல்வி விதியின் 51ஆவது பிரிவை நீக்குவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பொய் கூறுவது, ஆபாசமான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட தவறுகளை செய்யும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையை வழங்க கல்வி விதியின் 51ஆவது பிரிவு அனுமதிக்கிறது. ஆனால் தற்போது பள்ளிக் கூடங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாக பெற்றோர்களும் பொதுமக்களும் தொண்டு நிறுவனங்களும் ஏராளமான அளவில் புகார்கள் கொடுத்துள்ளனர்.
இந்தக் கடுமையான தண்டனைகள் காரணமாக உணர்ச்சிவசப்படும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்று விடுகிறார்கள். எனவே முத்துக்கிருஷ்ணன் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், 51ஆவது பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் முலம் உடல் ரீதியான தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது, நல்ல முடிவு. ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கு இருந்து வந்த பெரும் அச்சுறுத்தல் இதனால் ஒழியும். மாணவர்களின் தன்மானம் காக்கப்படும்.
இது மட்டும் போதாது; அடிச்சு வளர்த்தால்தான் பிள்ளைகள் ஒழுங்காக வளருவார்கள் என்ற பெற்றோர்களின் மனப்பாங்கும் மாறவேண்டும்.
நன்றி: தமிழ்சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:14 PM 1 comments
Monday, January 15, 2007
தமிழ்சிஃபி பொங்கல் சிறப்பிதழ்
தமிழர்களின் தனிச் சிறப்பு மிக்க பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்சிஃபி, சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளது.
ஒலிப் பத்திகள், ஓளிப் பதிவு, புகைப்படங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள்... எனப் பலவும் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.
வருகை தருக >>>
அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:57 AM 1 comments
Monday, January 01, 2007
2006 - 2007: இரு சிறப்பிதழ்கள்
கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கவும் இந்த ஆண்டை வரவேற்கவும் தமிழ்சிஃபி இரு சிறப்பிதழ்களைத் தயாரித்துள்ளது.
படிக்கவும் கேட்கவும் பார்க்கவும் பல சுவையான, பயனுள்ள செய்திகள் இவற்றில் உள்ளன. வருகை தருக.
2006 முக்கிய நிகழ்வுகள்
வருக 2007 - புத்தாண்டுச் சிறப்பிதழ்
அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:56 PM 2 comments