அண்மையில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழர் வாழ்வியல் தொடர்பான 25 காட்சிகள் இருந்தன. தமிழர்களின் இயல்புகள் குறித்த ஒரு விமர்சனமாக அவை இருந்தன. அவற்றுள் 5 மட்டும் இங்கே:
1. கோயிலுக்கு ஒரு டியூப் லைட்டைத் தானமாகக் கொடுத்தால் கூட டியூப் லைட்டின் பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தைப் பதிக்கிற இனம்.
2. காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.
3. எங்க ஊரு அரசுப் பள்ளி ஆசிரியர் அவர்களின் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பார்.
4. பள்ளிக்கூடம், மருத்துவமனைகளைத் தனியார் நடத்த, அரசாங்கம் சாராயக் கடை நடத்தும்.
5. உடலும் மனமும் ஒத்துழைக்காது என பியூனுக்குக் கூட 60 வயதில் பணி ஓய்வு கொடுப்பார்கள். ஆனால், 60 வயசுக்கு மேல இருப்பவர்கள், அமைச்சராக நம்மை ஆளுவார்கள்.
இவற்றைப் படிக்கிறபோது, தமிழரின் முரண்கள், போலித்தனங்கள், தன் முனைப்பு, சுயநலம், அந்நிய மோகம்… உள்ளிட்ட பலவும் வெளிப்படுவதைக் காண்கிறோம். இவை முழுக்க எதிர்மறையாக இருந்தபோதிலும் உண்மைக்கு நெருக்கமாக உள்ளதை உணரலாம்.
தமிழர்களின் இயல்புகளை நானும் தொடர்ச்சியாக உள்வாங்கி வருகிறேன். தமிழர்கள் வெவ்வெறு தருணங்களில் எவ்வாறெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்வையாளனாகவும் பங்கேற்பாளனாகவும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த வகையில், இந்தத் தமிழ்ச் சமூகம் குறித்த என் பார்வைகள் சிலவற்றை இங்கே பதிகிறேன். ஒரு கோணத்தில் இதனைச் சமூகவியல் ஆய்வாகவும் கருதிட இடம் உண்டு. தமிழர்கள் அனைவரிடமும் இந்த இயல்புகள் உண்டு என நான் கூறவில்லை. இவற்றுக்கு மாறுபட்டவர்களையும் நான் கண்டதுண்டு. ஆனால், இக்காலத் தமிழ்ச் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சில தன்மைகள் ஓங்கி இருக்கின்றன. அவற்றுள் சில இங்கே:
எதுகை மோனையில் ஆர்வம்
தமிழர்களுக்கு எதுகை மோனையின் மீது தனித்த ஆர்வம் உள்ளது. அவர்களின் கவிதை, பாட்டு, இலக்கியம் ஆகியவற்றில் இதன் ஆதிக்கம் இருப்பது இயற்கையானது. ஆனால், அன்றாடப் பேச்சு வழக்கிலும் இதன் தாக்கம் அதிகம். நாட்டுப்புறப் பாடல்கள், சொலவடைகள், பழமொழிகள், புதுமொழிகள், கானா பாடல்கள்… எனப் பலவும் எதுகை மோனையுடனே உள்ளன.
மரபுக் கவிதைகளிலிருந்து வேறுபட்டு, புதுக்கவிதை படைக்க விரும்பிய போது, பலரும் எதுகை மோனைகளைக் கைவிடவில்லை. இன்றைக்கும் ஒவ்வொரு முத்திரை வாசகத்திலும் (பஞ்ச் டயலாக்) எதுகை, மோனைகள் துள்ளி விளையாடுகின்றன. வாசகர் கடிதம், துணுக்கு, நகைச்சுவை முதல் கவிதை, சிறுகதை, கட்டுரை வரை எழுதுவோர், தமக்கு வைத்துக்கொள்ளும் பெயர்கள், தனித்த ஓசை நயத்துடன் உள்ளன. அறிவிப்புகள், விளம்பரங்கள், அரசியல் முழக்கங்கள், கடவுள் துதி எனப் பலவற்றிலும் இந்த ஓசை நயத்தைக் காணலாம்.
சாதாரணமாகப் பேசும்போதே, கிழிந்தது கிருஷ்ணகிரி என்பார்கள். வெட்டிப் பேச்சிலும்கூட கிருஷ்ணகிரியைக் கிழிப்பதில் ஒரு மகிழ்ச்சி. பட்டப் பெயர்கள் பெரும்பாலும் மோனை நயத்துடனே அமைகின்றன. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், வித்தகக் கவிஞர் பா.விஜய், நாவுக்கரசர் நாராயணன், சித்தாந்த சிகாமணி, அடுக்களை அலமேலு…. என விரியும் பெயர்கள், மோனைப் புள்ளியில் மையம் கொண்டவை.
இரட்டைப் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளை, இரண்டு பெண் பிள்ளை போன்றோர் பிறந்தால் இயைபு மிளிரப் பெயர் வைப்பது, இப்போதும் தொடர்கிறது (அங்கவை – சங்கவை, ஜெயா – விஜயா, காமாட்சி – மீனாட்சி, வரலட்சுமி – வீரலட்சுமி, இந்திரன் – சந்திரன், சுரேஷ் – ரமேஷ், ராமு – சோமு, அருண் – வருண்). நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தில் (கில்லி?) தாதாக்களின் பெயர்கள் சுவையானவை. சனியன் சகடை, பட்டாசு பாலு… என அதிலும் மோனை நயம் மிளிரும். குரங்கு குமார், அசால்ட்டு ஆறுமுகம்…. என்றெல்லாம் உள்ள பெயர்கள், தமிழ் மக்களின் இயல்பைக் காட்டக் கூடியவை.
எதுகை, மோனை என மேலோட்டமாகப் பார்த்தாலும் ஆழ்ந்த நோக்கில் சந்தத்தின் மீதான ஈர்ப்பாகவே இதனைக் கருத வேண்டும். சந்தத்தின் மீது பல நூற்றாண்டுகளாக ஈடுபாடு கொண்ட ஒரு சமூகம், ஒரு பொதுவான ஒழுங்கமைவினை நம்புகிறது, விரும்புகிறது எனக் கொள்ளலாம். அதனால்தான் ஒவ்வொன்றுக்கும் இலக்கணம் வரைந்திட இச்சமூகம் விரும்புகிறது. அந்த இலக்கண வரையறை, எழுத்து, இலக்கியம் ஆகியவற்றைத் தாண்டி, பெண்கள், குழந்தைகள், அரசன், அமைச்சன்… என அனைவருக்காவும் விரிந்தது.
தொல்காப்பியமும் திருக்குறளும் மொழி, நிலம், காலம், ஒழுக்கம், சமூகம் உள்ளிட்டவற்றை வரையறுத்துக் கூறியதை நினைவுகூரலாம். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது, நெறிமுறைகள், கட்டுப்பாடுகள்… என அனைத்துத் துறை சார்ந்து இந்த இலக்கண ஆதிக்கம் பரவியது. இதன் அடிப்படை, இசையின் மீது கொண்ட ஈர்ப்பே ஆகும். இந்த இசைக் கூறுக்கான ஓர் எடுத்துக் காட்டே எதுகை, மோனைகள்.
தமிழ்ச் சமூகம், அளவையியல் கூறுகளுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் நாலடியார், ஐந்திணை, எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பன்னிரு திருமுறை, பதினெண் கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்…. என எண்களின் அடிப்படையில் அமைந்தவை ஏராளம். எழுத்தெண்ணிப் பாடும் முறையும் தமிழில் உண்டு. செய்யுள்கள் பெரும்பாலும் கூர்மையான எண்ணிலக்கணத்தைப் பின்பற்றியுள்ளன. செய்யுள்களுக்கு வெளியிலும் இத்தகைய எண்களில் ஆதிக்கத்தைக் காணலாம். கோவில் மாடங்களின் எண்ணிக்கை, கும்பங்களின் எண்ணிக்கை, சுற்றுகளின் எண்ணிக்கை, சிலைகளின் ஒவ்வொரு பகுதியும் அமையும் விதம், உணவு சமைப்பதில், வயலுக்கு நீர் பாய்ச்சுவதில், மரம் வளர்ப்பதில்…. என ஒவ்வொன்றிலும் அளவையியல் கண்ணோட்டத்தினை அறியலாம். காற்று வீசுவதை வைத்து, கதிரொளியை வைத்து, அலையடிப்பதை வைத்து அளக்கிறார்கள். நேர அளவு, கைப்பிடியளவு, படியளவு…. என நுணுக்கமாகத் தமிழர்கள் அளந்துள்ளனர்.
எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிச்சுக்கோ, அதில் எந்த எட்டில் நீ இருக்கே தெரிஞ்சுக்கோ என்ற அண்மைக் காலப் பாடலும் தமிழர்களிடம் எண்கள் கொண்டுள்ள தாக்கத்தை எடுத்துக் காட்டும். இந்த அளவையியல் கூறுகளும் இசைக் கூறுகளுடன் தொடர்புடையவை. எனவே, எதுகையும் மோனையும் தமிழர்கள் மீது தாக்கம் செலுத்துவதற்கு ஆழ்ந்த பின்புலம் உண்டு.
வரலாற்று உணர்வு குறைவு
தமிழர்களிடையே வரலாற்று உணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. பல பழந்தமிழ்ப் பாடல்களுக்கும் நூல்களுக்கும் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. அதனால்தான் அந்தப் பாடலில் வரும் அடியினைக் கொண்டு, அணிலாடு முன்றிலார், இரும்பிடர்த்தலையார், கல்பொரு சிறுநுரையார், கொட்டம்பலவனார், இம்மென்கீரனார், தேய்புரி பழங்கயிற்றினார்…. போன்ற பெயர்களால் அழைக்க வேண்டி வந்தது. இன்னும் பலருக்குப் பெயர் தெரிந்தும் அவரின் பிறப்பு, வளர்ப்பு, காலம் உள்ளிட்டவை தெளிவாகத் தெரியவில்லை. திருவள்ளுவருக்கும் இதே நிலைதான். இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் எனக் கணிக்கவே முடிகிறது. இன்றைக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் மூன்று தலைமுறைக்கு முந்தையவர்களின் பெயர்கள் பலருக்கும் தெரியாது. துல்லியமான வரலாற்றுப் பதிவுகள் எவரிடமும் இல்லை.
தமிழர்களின் நில ஆவணங்கள், குறுகிய கால எல்லைகளைக் கொண்டவை. அவையும் அந்நியர் ஆட்சியின் விளைவாகத் தோன்றியவை.
தமிழ் இலக்கியங்களைப் படைத்தவர்களின் விவரங்கள் மட்டுமே கிடைக்கவில்லை எனக் கருதிவிட வேண்டாம். கோயில்களைக் கட்டியவர்கள், சிலைகளை வடித்தவர்கள், ஓவியங்களைத் தீட்டியவர்கள்…. எனப் பல விவரங்களும் தெரியாது. மன்னர்களுள்ளும் சிலரின் சில விவரங்களே உள்ளன. முறையான ஆவணப் பதிவுகள் இல்லை. இந்தப் பண்புக்கு முக்கிய காரணம், அவர்களின் அவையடக்கம். தன்னை முன்னிறுத்திக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் குறைந்தபட்ச அடையாளங்களைக்கூட அவர்கள் பதியவில்லை. இதனால், தமிழகத்தின் சமூக – கலை – இலக்கிய வரலாறு, பெரும் பின்னடைவைக் கண்டது.
அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த பலருக்கே முறையான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. பாரதிக்கும் கட்டபொம்மனுக்குமே முழுமையான விவரங்கள் இல்லை. தகவல் தொடர்பு நுட்பங்கள் இவ்வளவு வளர்ந்துள்ள இன்றைக்கும் கோடிக்கணக்கானோரின் புகைப்படங்கள், குரல்கள், பங்களிப்புகள் முறையாகப் பதியப்பெறுவதில்லை. இப்படி ஒருவர் வாழ்ந்து மறைந்தார் என்பதற்கான எந்தச் சுவடுமே இல்லாமல் பலரும் வந்து செல்கிறார்கள். நாட்குறிப்புகள் பதிதல், வாழ்க்கை வரலாறு எழுதுதல், குடும்பக் கிளைகளை வரைதல்… ஆகியவற்றைத் தமிழர்களிடம் அரிதாகவே காண முடிகிறது.
இந்தப் பின்னணியால், தமிழர்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது. யார், எதை, எப்போது கூறினார் என்பதை அவர்களால் நிறுவ முடிவதில்லை. இது, அரசியல்வாதிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. கடன் கொடுக்கும்போது, எழுத்து ஆவணங்கள் இல்லாமல் கொடுப்போர் இன்றும் உண்டு. அவையடக்கமும் நட்பும் நம்பிக்கையும் இவர்களின் வரலாற்று உணர்வைக் கெடுக்கின்றன. இந்தப் பின்னணியில் கோவிலுக்குக் கொடுத்த குழல் விளக்கில் பெயரை எழுதுவோரை வரலாற்று நோக்கில் பாராட்டவே வேண்டும்.
நெகிழ்வுத்தன்மை
தமிழர்களிடம் அதிக அளவில் ஒழுக்கக் கோட்பாடுகள் உண்டு. வாழ்வின் ஒவ்வோர் கூறுக்கும் ஏராளமான இலக்கணங்களும் வரையறைகளும் உண்டு. ஆனால், இவை அனைத்தையும் அவர்கள் பின்பற்றுகிறார்களா எனில் இல்லை என்பதே பதில்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது, தனிப்பட்ட முறையில் ஒன்றும் மேடையில் ஒன்றுமாகப் பேசுவது, உள்ளூரில் ஒன்றும் வெளியூரில் ஒன்றுமாகப் பேசுவது… போன்றவை தமிழர்களிடையே அதிகம் காணப்படுகின்றன. உண்மையைச் சொல்வது என்பதைவிட, அதன் பலாபலன்களை எண்ணியே சொல்கிறார்கள். இவற்றை இரட்டை நிலைப்பாடு என்பது, ஒரு பார்வை. உண்மையில் இரண்டு நிலைப்பாடு என்றும் சொல்ல முடியாது. சிலர், சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள். அங்கு எண்ணிக்கையே கிடையாது. ஆனால், வேறொரு கோணத்திலிருந்து இவற்றைப் பார்க்கிற போது, தமிழர்களிடம் நெகிழ்வுத்தன்மை அதிகமாக இருப்பது புலனாகிறது.
தமிழர்களைக் கரப்பான்பூச்சிகள் என ஒருவர் குறிப்பிட்டார். அவர்களை எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது. சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, பிழைத்துவிடுவார்கள் என்பதே அவர் தந்த விளக்கம். தமிழக அரசியல் களத்தில் எவ்வளவு முரண்பட்டவர்களும் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதை நினைத்துப் பார்க்கலாம். கூட்டணிகள் எப்படி மாறினாலும் அவர்களுக்குத் தொடர்ந்து மக்கள் வாக்களித்து வருகிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. தமிழர்கள் எந்த மாநிலத்திற்கு, எந்த நாட்டிற்குச் செல்ல நேர்ந்தாலும் அவர்களால் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மாறிவிட இயலும். புற அழுத்தங்கள் எவ்வளவு இருப்பினும், அவற்றை வாழ்வியலுக்கு ஏற்ப உள்வாங்குவதில் அவர்களின் ஆற்றலை நாம் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும்.
அந்நிய மோகம்
பொதுவாகவே, எதிரெதிர் தன்மை கொண்டவர்களிடையே ஓர் ஈர்ப்பு எழுவது இயற்கையே. காந்தத்திலும்கூட எதிர் முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கும். ஆனால், தமிழரின் தன்மை இதில் மிதமிஞ்சி இருப்பதாகவே தோன்றுகிறது. இந்திய சுதந்திரப் போரின்போதே, அந்நியத் துணிகளைத் தவிர்க்கத் தனி இயக்கத்தினைக் காந்தி தொடங்க வேண்டியிருந்தது. இன்றும் ஆங்கில மோகம், எங்கும் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் தமிழில் படித்தவரை விட, ஆங்கிலத்தில் படித்தவருக்கே வேலை கிடைக்கும் என்ற நிலை ஆழமாக உருவெடுத்துள்ளது.
சிவந்த நிறத்தவரைக் கண்டு மயங்குவதும் அந்நிறத்தைப் பெறத் தமிழ்ப் பெண்கள் பற்பல பசைகளைப் பூசித் திரிவதும் எங்கும் காணக் கூடியதாய் இருக்கிறது. திரைத் துறையில் சிவந்த நடிகர்கள் – நடிகைகளின் ஆதிக்கமே அதிகம். அவர்களே விளம்பரப் படங்களிலும் தோன்றுவார்கள்.
தொலைக்காட்சித் தொடர்களிலும் அதே நிலைதான். தமிழரின் சாதனைகளை வெளிநாட்டார் அங்கீகரித்த பிறகே தமிழர்கள் ஏற்பார்கள் என்ற நிலை உள்ளது.
தமிழரின் கலைகள், ஆடைகள், விளையாட்டுகள், இசை…. எனப் பலவும் நசிந்துள்ளன. இந்நிலையிலும் அயல் புலத்துக் கலைகள், ஆடைகள், விளையாட்டுகள், இசை ஆகியவற்றின் மீது அவர்களுக்கு நாட்டம் உள்ளது. இது, பெரும்பாலும் தகுதியை மதித்து நிகழவில்லை. அயல் மோகத்தினாலேயே நிகழ்ந்துள்ளது. தமிழரின் ஆங்கிலத்தில் ஒருவர் பேசினால், அவரை அறிவாளி எனக் கருதும் மனோபாவம் மேலோங்கியுள்ளது. இதனால், தம் பேச்சினிடையே ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசும் வழக்கம், தமிழ்ச் சமூகம் முழுதும் ஆழமாகப் பரவிவிட்டது. இப்போது, அத்தகைய கலப்புத் தமிங்கிலமே இயல்பானதாகவும் கலப்பில்லாத் தமிழ் செயற்கையானதாகவும் மாறிவிட்டது.
அறத்தின் வீழ்ச்சி
‘தமிழ்ச் சமூக அடுக்குகளில் உள்ள பலரும் அறத்தின்வழி நிற்பதில்லை. அதனால் அவர்களின் வாழ்வும் அதற்கு ஒப்பவே இருக்கிறது’ என்ற உண்மையை என் இனிய நண்பர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் எனக்கு உணர்த்தினார். எங்கும் இலஞ்சம், ஊழல், முறைகேடுகள், ஆக்கிரமிப்புகள், கையாடல்….. எனப் பெருகும் தீச்செயல்கள், அறத்திற்கு முற்றிலும் எதிரானவை. அரசியல் தலைவர்கள் எல்லா முறைகேடுகளின் சங்கமமாகவே மாறிவிட்டார்கள். மூன்று சக்கரத் தானியை ஓட்டுபவர் கூட, போகுமிடத்திற்குக் கூடுதலான கூலியைக் கோருகிறார். மீட்டருக்குச் சூடு வைக்கிறார். போய்ச் சேர்ந்த பிறகு கூடுதல் கட்டணம் கேட்டுத் தகராறு செய்கிறார். தன் வண்டியில் விட்டுச் சென்ற பையைக் காவல் நிலையத்தில் ஒப்படைப்பவரும் உண்டு எனினும் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உடல்நலனுக்கும் கேடு என அறிவித்துவிட்டு, அரசே அதை விற்கிறது. அரசு அலுவலகங்கள் பெரும்பாலானவற்றில் ஆதாயம் கருதி, கோப்புகள் அறிதுயில் கொள்கின்றன. காவல் துறையில் பொய் வழக்குகள், போலிப் பழிதீர்ப்புக் கொலைகள் (என்கவுன்டர்கள்), சிறைக்குள் மர்ம மரணங்கள்…. தொடர்கின்றன. நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. கல்வி, தெளிவாகவே வணிகமாகிவிட்டது. மக்கள், சர்வ சாதாரணமாக விதிகளை மீறுகிறார்கள். பலர் பிடிபடுபவதில்லை. பிடிபடுபவர்களையும் காப்பாற்ற, வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். சட்டத்தைத் தேவைக்கேற்ப வளைக்கலாம். அப்படியே தண்டனை பெற்றாலும் மேல் முறையீடு இருக்கிறது. அதில் தவறினால், உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சென்று படுத்துக்கொள்ளலாம் என இந்தச் சமூகம் கற்றுத் தருகிறது.
பணமே பிரதானம். அதைக் கொண்டு பதவிகளைப் பெறலாம். அவ்வாறே செல்வாக்கும் அதிகாரமும் பெறலாம். எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு….. இந்தக் கண்ணோட்டத்துடன் ஒரு தலைமுறை உருவாகிறது. பல திருமணங்கள், அன்பையும் புரிந்துணர்வையும் முன்னிறுத்தாமல் பணத்தை முன்னிறுத்தியே நிகழ்கின்றன. பிரதி பலன் எதிர்பாராமல் பலரும் எந்தச் செயலையும் செய்வதில்லை. சமூக ஏற்றத் தாழ்வுகள் மிக விரிகின்றன. எல்லாத் துறைகளிலும், எல்லா மட்டங்களிலும், எல்லாத் தருணங்களிலும் அறம் வீழ்கிறது. இந்தச் சமூகத்தில் குறுக்கு வழியில் செல்வதே வாழ்வதற்கான வழி என நேற்று பிறந்த குழந்தையும் உணரத் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உண்டு என்ற அறிவியல் கோட்பாட்டினை முழுமையாக நம்புகிறேன். எனவே இந்த அபாயகரமான சூழலை எண்ணி, மனம் நடுங்குகிறது. திருக்குறளை உருவாக்கிய ஓர் இனம், அறம் பிறழ்ந்த வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக மாறிவிடலாமா? உண்மையும் நேர்மையும் நடைமுறை வாழ்வுக்குப் பயனற்றவை என்பதுதான் நம் சமூகம் கூறும் செய்தியா? இந்தப் பரிதாபத்திற்குரிய பந்தயத்தில் முந்திச் செல்வது யார் என்பதில்தான் போட்டியா?
அதிர்ச்சிகளையே உணர முடியாத அளவுக்குத் தமிழ்ச் சமூகம், மரத்துப் போய்விட்டதோ என்பதே என் ஐயம்.
இவற்றைச் சுட்டிக் காட்டுவது, எதிர்மறைத் தன்மையோடு அல்ல. இந்த நிலையை உணர்ந்து மக்கள் மாற வேண்டும் என்பதற்காகவே. ஆழ்துயில் கொள்ளும் மனச் சான்று சற்றே விழிக்குமானால், எட்டும் தொலைவிலேயே புதிய விடியல் கிட்டும். அக்கினிக் குஞ்சிலிருந்து காடுகள் வெந்து தணியும் என்பது நமக்குத் தெரியாதா, என்ன?
==================================
நன்றி – அகநாழிகை இதழ் 5 (செப் – நவ.2010) | வல்லமை.காம்