அம்பத்தூர் ரைட் சாய்ஸ் நகைச்சுவை சங்கத்தின் மாதாந்திர நிகழ்ச்சி, 9.11.2008 அன்று அம்பத்தூர் சிறீ மகா கணேஷா வித்யாசாலா பள்ளியில் நடைபெற்றது. இதில் இந்த மாதச் சிறப்பு விருந்தினராக நான் பங்கேற்று 'சிரிப்பு உங்கள் பொறுப்பு' என்ற தலைப்பில் உரையாற்றினேன்.
சங்கத்தின் செயலர் சிரிப்பானந்தா (எஸ்.சம்பத்) நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனிக்க, சங்கத்தின் தலைவர் குகன் தலைமை வகிக்க, சரண்யா தொகுத்து வழங்க, உறுப்பினர்களும் பார்வையாளர்களும் சிரிப்பு வெடிகளை வீசி அவையை அதிர வைத்தார்கள்.
சிறுவர்களும் கலந்துகொண்டு கலக்கியது இன்னும் சிறப்பு.
CHILD என்ற சேவை அமைப்பைச் சார்ந்த சிறுவர்கள், நகைச்சுவை நாடகம் ஒன்றைச் சிறப்புற அரங்கேற்றினார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறை வணக்கத்திற்குப் பதிலாக, மூன்று முறை அனைவரும் உரக்கச் சிரிக்க வேண்டும்; நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒரே நேரத்தில் உரக்கச் சிரித்து விடைபெற வேண்டும் என்ற முறையைக் கடைபிடித்து வருகிறார்கள்.
"அவர் ஏம்ப்பா லோ லோன்னு அலையிறாரு?
லோ வோல்டேஜாம். அதனால்தான்"
இந்த நகைச்சுவையைச் சொன்ன சீனிவாசனுக்கு நகைச்சுவை தேன்கிண்ணம் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதினை ஏற்படுத்தியவர், 'அப்புசாமி புகழ்' பாக்கியம் ராமசாமி.
பார்வையாளர்களில் மூவருக்குக் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிரிப்பு (ஜோக்)த் தோரணம் கட்டிய அனைவரும் பேனா, பொத்தகம்... எனப் பரிசுகள் பெற்றார்கள்.
செவிக்கு விருந்து படைத்ததோடு வேர்க்கடலை சுண்டல் மூலம் வயிற்றுக்கும் விருந்து படைத்தது சங்கம்.
மாதம்தோறும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி, அம்பத்தூர் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
இறுக்கமான வாழ்க்கைச் சூழலில் இதமான புதுமையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, November 09, 2008
அம்பத்தூரில் நகைச்சுவை விருந்து
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:27 PM 3 comments
Friday, November 07, 2008
Wednesday, October 08, 2008
ராமன் தேடிய சீதை - திரை விமர்சனம்
'நான் பெண் பார்த்துட்டுப் போன பெண்களுக்கு எல்லாம் உடனே கல்யாணம் ஆகிடும். அப்படி ஒரு ராசி எனக்கு' என இந்தப் படத்தின் நாயகன் வேணு (சேரன்) ஒரு காட்சியில் சொல்கிறார். அதில் படத்தின் மொத்தக் கதையும் புரிந்துவிடும்.
வலுவான கதை; விறுவிறுப்பான - படத்துடன் நம்மை ஒன்ற வைக்கக்கூடிய திரைக் கதை; இயல்பான கதை மாந்தர்கள்... ஆம், உறுதியாக இது ஒரு நல்ல திரைப்படம்; தமிழில் மேலும் ஒரு எதார்த்த சித்திரம். தன் மூன்றாவது திரைப்படமாக ராமன் தேடிய சீதையை மிகச் சிறந்த ஆளுமையுடன் வழங்கியுள்ளார் இளம் இயக்குநர் ஜெகன்நாத். (முதல் இரண்டு படங்கள்: புதிய கீதை, கோடம்பாக்கம்).
திருமண அழைப்பிதழ் தயாரித்து விற்கும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துபவர் வேணு (சேரன்); கார், வீடு எனச் சென்னையில் வசதியாக இருக்கிறார்; ஆனால், மாணவப் பருவத்தில் சிறிது காலம் மன அழுத்தம் காரணமாக, மனநல சிகிச்சை பெற்றவர்; மிகவும் உணர்ச்சிவசப்படும் தருணத்தில் திக்கித் திக்கிப் பேசுபவர். நற்குணங்கள் நிரம்பிய இவருக்குப் பெண் தேடுகிறார்கள்.
முதலில் அவர் பார்க்கும் பெண்: ரஞ்சிதா (விமலா ராமன்). வேணு தான் மனநல சிகிச்சை பெற்றதைச் சற்றே திக்கித் திக்கிச் சொல்லவும் ரஞ்சிதா 'உங்களை எனக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை' என்று கூறிவிடுகிறார்.
அடுத்து, வித்யா (ரம்யா நம்பீசன்) என்ற பெண்ணைப் பார்க்கிறார்கள். அந்தப் பெண் திருமணத்திற்கு முதல் நாள் வேறு ஒருவருடன் ஓடி விடுகிறார்.
தன் மகள் ஓடிப் போனதால் பெண்ணின் அப்பா மாணிக்கவேல் (மணிவண்ணன்) வேணுவுக்கு வேறொரு நல்ல பெண் பார்த்து மணம் முடிப்பது தன் கடமை என வாக்களிக்கிறார். கடைசியாக அவர் நாகர்கோயிலில் காயத்ரி (கார்த்திகா) என்ற பெண்ணைக் கண்டுபிடிக்கிறார். மாணிக்கவேலும் வேணுவும் அங்கு செல்கிறார்கள். அங்கு சென்ற பிறகு தான் காயத்ரியைக் குள்ள சேகர் (நிதின் சத்யா) என்ற முன்னாள் திருடன் தீவிரமாகக் காதலிப்பது தெரிகிறது. நாயகன் வேணு 'அவரே உங்களுக்குப் பொருத்தம்' என வாழ்த்திவிட்டு வந்துவிடுகிறார்.
காவல் துறையில் பணியாற்றும் செந்தாமரை (நவ்யா நாயர்) என்பவரைப் பார்க்கச் செல்கிறார். செந்தாமரைக்குத் தெரியாமல் அவரைப் பார்த்தால்தான் அவரது உண்மையான தன்மை தெரியும் என்ற நினைப்பில் வேணு, அரசியல் கட்சித் தலைவர் வரும் கூட்டம் ஒன்றில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அவருக்குப் பாதகமாக அமைந்துவிட, எந்தப் பெண்ணைப் பார்க்க வந்தாரோ அந்தப் பெண்ணின் கையாலேயே பலத்த அடி வாங்குகிறார் வேணு.
இப்படியாக அடி மேல் அடி வாங்கும் வேணு, கடைசியில் யாரை மணம் முடித்தார் என்பதே இறுதிக் காட்சி.
வேணுவின் கதை ஒரு புறமும் அவர் பார்க்கும் பெண் ஒவ்வொருவரின் கிளைக் கதைகள் மறுபுறமும் பின்னிப் பிணைந்து ஓர் அருமையான திரைக் கதையாக விரிந்துள்ளது. சேரனின் நடிப்பு, இயல்பாகவும் பரிதாபத்தைத் தூண்டும்படியும் அமைந்துள்ளது. எல்லா நல்ல குணங்களும் கொண்டவராக அவரின் பாத்திரம் உருவெடுத்துள்ளது.
பசுபதி, நிதின் சத்யா ஆகியோரின் கிளைக் கதைகள், கதைக்கு நல்ல வலுவும் சுவையும் சேர்த்துள்ளன.
பார்வையிழந்த நிலையிலும் பண்பலை வானொலியில் நிகழ்ச்சி வழங்குநராக (ரேடியோ ஜாக்கி) வரும் நெடுமாறன் (பசுபதி), தமிழிசை (கஜாலா) இருவரின் காதல், ஓர் இனிய கவிதை. திருமண முயற்சிகள் தோல்வியில் முடிவதால் மனம் உடைந்த வேணுவை நெடுமாறன் தேற்றுகிறார். இந்தப் பார்வையிழந்த பாத்திரத்தில் பசுபதி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். முக பாவங்கள், கூர்ந்த கவனிப்பு ஆகியவற்றை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.
திருடனாக வந்து, திருடப் போன இடத்தில் கார்த்திகாவைப் பார்த்து, அந்த இடத்திலேயே அவரைக் காதலிக்கத் தொடங்கும் நிதின் சத்யா, மனத்தில் நிற்கிறார். தன் காதலை வெளிப்படுத்த ரிப்பனிலிருந்து மராத்தான் வரை அவர் இறங்குவது, ருசிகரம். அவருக்கு இணையாகக் கார்த்திகாவும் நடித்துள்ளார்.
விமலா ராமன், கஜாலா, ரம்யா நம்பீசன், கார்த்திகா, நவ்யா நாயர் ஆகிய 5 இளம் பெண்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். வித்யாசாகரின் இன்னிசையில் 'இப்பவே இப்பவே', 'என்ன புள்ள செஞ்ச நீ'... உள்ளிட்ட பாடல்கள் உணர்வுபூர்வமாய் அமைந்துள்ளன. நாகர்கோயிலின் இயற்கை எழிலை, ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் கண்டு களிக்கலாம்.
வசதியான, ஓரளவு அழகான வேணு (சேரன்) போன்ற மாப்பிள்ளைக்கே திருமணச் சந்தையில் இவ்வளவு கஷ்டம் என்றால், அன்றாடங்காய்ச்சிகளின் நிலை என்னாவது? நினைக்கவே திகிலாய் இருக்கிறதே. ஆனால், பலரும் அனுபவித்த இந்தத் துயரத்தை நேர்த்தியாகத் திரையில் வழங்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படத்தின் ஓரிரண்டு காட்சிகளாவது, ஒவ்வொருவரின் வாழ்விலும் நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்தப் படம், மக்களோடு நெருங்கியுள்ளது.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:21 AM 1 comments
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
Monday, September 15, 2008
பொய் சொல்ல போறோம் - திரை விமர்சனம்
முள்ளை முள்ளால் எடுக்கும் ஒரு கதையை முழு நீள நகைச்சுவைச் சித்திரமாக வழங்கியதற்காக இயக்குநர் விஜயைப் பாராட்ட வேண்டும். நடுத்தர குடும்பம் ஒன்றின் மனை வாங்கி, வீடு கட்டும் முயற்சியில் ஏற்படும் சிக்கல்களை நயமுடன், நம்பும்படியாகப் படமாக்கி இருக்கிறார்கள். ஜெய்தீப் சாஹினியின் கோசலா கா கோசலா என்ற படத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் இது. ஆயினும் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துகிறது.
சத்தியநாதன் (நெடுமுடி வேணு), ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அவருக்கு மகன்கள் இருவர்; மகள் ஒருவர். கணினிக் கல்வி கற்ற முதல் மகன் உப்பிலிநாதன் (கார்த்திக்), இரண்டாம் மகன் கல்லூரி மாணவன் விஸ்வநாதன் (ஓம்). பதின் பருவத்தில் மகள். சத்தியநாதனுக்குச் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது நெடுநாள் கனவு. தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டு, மனைத் தரகர் (ஹனீபா) மூலம், சென்னை வேளச்சேரி அருகே ஒரு மனை வாங்குகிறார். அங்கு வீடு கட்டிக் குடியேறுவது அவர் திட்டம்.
வீட்டுக்குப் பூமி பூஜை போடச் செல்லும் போது, அந்த மனையில் பேபி என்ற நில முதலை (நாசர்), வளாகச் சுவர் எழுப்பி, அது தன் இடம் என்கிறார். அதற்கான போலிப் பத்திரங்களையும் அவர் வைத்திருக்கிறார். தான் அந்த இடத்திலிருந்து காலி செய்ய வேண்டுமானால் 15 லட்சம் தர வேண்டும் என்று கேட்கிறார். காவல் துறை, வழக்கறிஞர், மனித உரிமைகள் அமைப்பு... எனப் பல பிரிவையும் அணுகியும் அவர் சிக்கல் தீரவில்லை.
சட்டப்படி பேபியை மடக்க முடியாத நிலையில் பேபியின் முன்னாள் உதவியாளரும் அவரால் பாதிக்கப்பட்டவருமான ஆசிப் இக்பால் (பாஸ்கி), திருப்பதிக்கே லட்டு கொடுக்கும் யோசனையைச் சொல்கிறார். எப்படி பொய்ப் பத்திரத்தின் மூலம் நிலத்தை பேபி அபகரித்தாரோ அதே வழியில் ஒரு போலிப் பத்திரத்தின் மூலம் அவரையே ஏமாற்றிப் பணம் பெறுவது ஆசிப்பின் திட்டம்.
இதற்கு ஒரு நாடகக் குழு உதவுகிறது. உப்பிலிநாதனின் தோழியும் நாடக நடிகையுமான பியா, அவரின் அப்பா (படத்தில்) 36 விருதுகள் பெற்ற நடிகர் மெளலி, பாலாஜி ஆகியோர் எப்படி பொய்யான மனிதர், பொய்யான நிலம், பொய்யான பத்திரம் ஆகியவற்றைக் காட்டி, பேபியை ஏமாற்றுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.
படம், மேட்டுக்குடி பாத்திரங்களைக் கொண்ட நாடகம் போன்று ஒரு சாயலில் இருந்தாலும் குலுங்கிச் சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவையும் இயல்பான நடிப்பும் காட்சிகளும் அரவிந்த் கிருஷ்ணாவின் துல்லியமான ஒளிப்பதிவும் ஆண்டனியின் சிறந்த படத் தொகுப்பும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. எம்.ஜி.சிறீகுமாரின் இசை பரவாயில்லை.
அதிகாலையில் பூங்காவில் கூட்டமாகக் கைகளை உயர்த்திச் சிரிப்புப் பயிற்சி எடுப்பது; வெற்று நிலத்தில் வீட்டின் அறைகள், மாடி... போன்றவை இருப்பது போல் விளக்குவது; பேபியை விரட்ட ரவுடிப் பட்டாளம் வருவது; பேபி புல்லறுக்க வரும் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடுவது... எனப் படம் முழுக்க சிரிப்பு வெடிகள் நிறைந்திருக்கின்றன. இவையே படத்திற்குப் பெரும் வலிமை சேர்க்கின்றன.
நெடுமுடி வேணுவின் நடிப்பு, நன்று; ஆயினும் அவருக்கு டப்பிங் குரல் கொடுத்த ராஜேஷின் குரல் தனியாகத் தெரிகிறது. நாசரின் நடிப்பு அருமை; ஆயினும் வெக்காளி அம்மனின் பக்தரான அவரின் வண்ண வண்ண உடைகளைப் பார்த்தால் முஸ்லிம் போல் தெரிகிறது. நடுத்தர குடும்பத்து இளைஞனாக நடித்துள்ள கார்த்திக், அதிகப் படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக நடித்தவர். இந்தப் படம், இவருக்குள் இருக்கும் நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. அவர் தம்பியாக நடித்துள்ள ஓம், புதிய நடிகரைப் போல இல்லை. இவர்களின் தங்கையாக நடித்துள்ளவரும் கவர்கிறார். மெளலியின் உதவியாளராக நடித்துள்ள பாலாஜி, கலக்கியிருக்கிறார்.
படத்தின் நாயகி பியா, அம்சமாக இருக்கிறார். உயர் குடும்பத்துப் பெண்ணின் தோற்றம், அவருக்கு வாய்த்துள்ளது. காதல் உள்பட பல உணர்வுகளை இயல்பாக வழங்குகிறார். புதுமுகம் ஆனாலும் தமிழில் ஒரு வட்டம் வருவார். தயாரிப்பாளர்கள், இப்போதே முன்பதிவு செய்துகொள்வது நல்லது.
இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ள இயக்குநர் விஜய், திரை ஆளுமை மிக்கவராகத் தெரிகிறார். பல்வேறு திறமைகளைப் பொருத்தமாக ஒன்று சேர்ப்பதில் அவர் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய ரோனி ஸ்குருவாலாவும் பிரியதர்ஷனும் பாராட்டுக்கு உரியவர்கள்.
இயக்குநர் விஜய், தன் பெயரை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது. ஏற்கெனவே நடிகர் விஜய் இருக்கிறார். தலைவாசல் விஜய் உள்பட வேறு பல விஜய்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்குப் பெயர் வைப்பதில் என்ன பஞ்சம்? நல்ல புதிய பெயராக வைத்துக்கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லது. நாளைக்கே நடிகர் விஜய் படத்தை இவர் இயக்கும் தருணத்தில் பெரிய குழப்பம் ஏற்படலாம் இல்லையா?
இந்தப் படத்திற்குப் பிறகு நாயகி பியா, தன் பெயரைப் பிரீத்தி என மாற்றிக்கொண்டுள்ளார். இன்னும்கூட நல்ல பெயராக மாற்றிக்கொண்டிருக்கலாம் என்றாலும் பியாவுக்குப் பிரீத்தி பரவாயில்லை.
பொய் சொல்ல போறோம் என்று தமிழில் தலைப்பு வைத்தது நன்று. ஆயினும் 'ப்' என்ற ஒற்று இல்லாமல் எழுதியது தவறு. அடுத்த படங்களிலாவது இவற்றிலும் கவனம் செலுத்தலாம்.
எனினும் அண்மையில் வந்த சிறந்த நகைச்சுவைப் படமாக இதையே சுட்டுவேன்.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:24 PM 4 comments
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
Sunday, September 14, 2008
அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ்
தமிழ் சிஃபியின் அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளிவந்துவிட்டது.
பாருங்கள்: http://tamil.sify.com/special/anna_centenary
அண்ணா பல்வேறு தருணங்களில் பேசிய 16க்கும் மேற்பட்ட சொற்பொழிகளின் ஒலி வடிவத்தை இணையத்தில் முதல் முறையாக, முழுமையாக இங்கு நீங்கள் கேட்டு மகிழலாம்.
அண்ணாவின் பல்வேறு அரிய புகைப்படங்களை இங்கு நீங்கள் கண்டு மகிழலாம்.
அண்ணா பற்றிய ஆழமான கட்டுரைகளை நீங்கள் படித்து மகிழலாம்.
குறுகிய காலத் திட்டமிடலில் இந்தச் சிறப்பிதழ் உருவானது. இதற்கு மலர் மன்னன், அண்ணா பேரவை,
http://arignaranna.info தளத்தை நிர்வகித்து வரும் செம்பியன் ஆகியோரின் ஒத்துழைப்பினை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
இந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ள அண்ணா உரைகளின் ஒலி வடிவம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணாவின் பேச்சைக் கேட்க முடியாத கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் இனி வரும் தலைமுறைகளுக்கும் இவை பெரும் கருவூலம்
என்பதில் ஐயமில்லை.
இந்தச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள வீ.சு.இராமலிங்கத்தின் மகா அண்ணா (ANNA THE GREAT) என்ற கட்டுரையில் அண்ணாவின் தனி ஆளுமையை முழுமையாகக் காண முடியும்.
அண்ணாவுடன் பழகிய பாரதி மணி அவர்களுடன் அண்மையில் பேசிக்கொண்டிருக்கும் போது, அண்ணா மட்டும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு உயிருடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் Topography ஏ மாறியிருக்கும் என்று குறிப்பிட்டார்.
அதே போன்று அண்ணாவுடன் பழகிய மலர் மன்னன், தாம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைக் கோரிய அண்ணாவின் பெருந்தன்மையை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்துகொண்டார்.
தான் இருந்த போதே தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரைத் தலைவராக்கிய பக்குவம், எளிமை, நேர்மை, எதிரணியினரையும் மதிக்கும் பண்பு, தன் குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் கொடாமை..... என அவர் காட்டிய வழிகளை அவரின் தம்பிகள் வசதியாக மறந்து விட்டார்கள்.
அண்ணா வளர்த்தெடுத்த தனிப் பண்புகள், இக்காலத்தில் மறைந்தொழிந்து விட்டதை எண்ணித் துயரம் அடைகிறோம். இன்று அவரின் தொடர்ச்சியாக அரசியல் அரங்கில் உள்ளவர்கள் ஓர் ஓரத்தில் அவரின் பெயரை மட்டுமே
வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரின் கொள்கைகள் காலி பெருங்காய டப்பா ஆகிவிட்டது தமிழகத்திற்குப் பேரிழப்பு.
அண்ணாவை எழுத்திலும் ஒலியிலும் ஒளியிலும் காணும் நம்மவர்கள் தாக்கம் பெற்று எதிர்கால மாற்றத்திற்கு வலிமையாகப் பங்களிப்பார்கள் என்ற உள்ளார்ந்த கனவும் இந்தச் சிறப்பிதழுக்குப் பின்னே உண்டு.
இந்தச் சிறப்பிதழ் பற்றி மின்தமிழ் குழுமத்தில் உள்ள இழை:
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/8c0e3d6f89de6362
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:12 AM 0 comments
Labels: அரசியல், சிறப்பிதழ்கள், தமிழ்சிஃபி
சரோஜா - திரை விமர்சனம்
நல்ல கதையை இயல்பாகச் சொல்லும் தன் பாணி நன்கு போணியாகக் கூடியது என்பதை இயக்குநர் வெங்கட் பிரபு மீண்டும் நிரூபித்துள்ளார். சென்னை 600028 வெற்றிக்குப் பிறகு பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அந்தப் படத்தின் பிரபல பாடலான 'சரோஜா சாமான் நிக்காலோ' பல்லவியிலிருந்தே தன் இரண்டாம் படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இயல்பு மீறிய காட்சிகளால் தமிழரின் வெள்ளித் திரை அவ்வப்போது வெளிறிக் கிடக்கிறது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் திரை மொழி சற்றே வித்தியாசம் காட்டுகிறது. எளிமையான கதை, இயல்பான முகங்கள், வலுவான திரைக் கதை, இடை இடையே நகைச்சுவை எனத் தனித்துவம் காட்டுகிறார்.
ஜகபதி பாபு (எஸ்.பி.பி. சரண்), கணேஷ் குமார் (பிரேம்ஜி), அஜய் ராஜ் (சிவா), ராம் பாபு (வைபவ்) ஆகிய நால்வரும் நண்பர்கள். கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கச் சென்னையிலிருந்து ஐதராபாத் நோக்கிப் போகிறார்கள். வழியில் வேதிப் பொருள் ஏற்றி வந்த நீள்நெடு வாகனம் சாய்ந்து கிடக்கிறது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தடைப்படுகிறது. ஒரு யூகத்தில் மாற்றுப் பாதையில் செல்கிறார்கள். ஆனால் வழி தவறுகிறார்கள். அதிக ஆளரவம் இல்லாத ஓர் இடத்தில் ஒரு சமூக விரோதக் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
அந்தக் கும்பல், சரோஜா என்ற பள்ளி மாணவியைக் கடத்திப் பணம் கேட்டு மிரட்டுகிறது. சரோஜா (வேகா) 12ஆம் வகுப்பு மாணவி. மேற்கத்திய இசைப் பாடகி. கோடீஸ்வர தந்தையின் (பிரகாஷ்ராஜ்) ஒரே மகள். காவல் துறை அதிகாரி ரவிச்சந்திரன் (ஜெயராம்) கடத்தல்கார்களைக் கண்டுபிடிக்க முயல்கிறார். இதற்கிடையே காவல் துறையின் தலையீட்டை அடுத்து கடத்தல்காரன் பேரத் தொகையை ஒரு கோடியிலிருந்து இருபது கோடிக்கு ஏற்றி விடுகிறான். இந்நிலையில் அந்தக் கும்பலிடமிருந்து நண்பர்கள் நால்வரும் மீண்டார்களா? அந்த மாணவியை மீட்டார்களா? என்பதே கதை.
மொத்தக் கதையும் மூன்று நாள்களில் நடக்கும் நிகழ்ச்சிகளே. ஆங்காங்கே நாளையும் நேரத்தையும் காட்டுகிறார் இயக்குநர். பாத்திரப் படைப்பு சிறப்பாகவே இருக்கிறது. சரோஜா என்ற பாத்திரத்தில் வரும் வேகா, குறைவான காட்சிகளில் வந்தாலும் தன் இருப்பைப் பதிவு செய்து விடுகிறார். பிரேம்ஜியின் நகைச்சுவைத் திறன் பளிச்சிடுகிறது. வைபவின் கட்டுடல் அவரின் ஆளுமையைக் காட்டத் துணை புரிகிறது. எஸ்.பி.பி.சரணின் தெலுங்கு நெடிப் பேச்சும் அவரின் மனைவியாக வருபவரின் உணர்வுகளும் அருமை. தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகராக வரும் சிவா இயல்பாகத் தோற்றம் அளிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகியோரின் அனுபவம், அவர்களின் நடிப்பில் வெளிப்பட்டுள்ளது.
அரங்க அமைப்புகளும் கதையின் போக்கிற்குத் துணை நிற்கின்றன. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு நன்று. படத் தொகுப்பு சிறப்பு. யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது. ஆனால் நவீனம் என்ற பெயரில் பாடல்களில் இசை ஆதிக்கம் செலுத்துகிறது. பாடல் வரிகள் சரியாகப் புரியவில்லை. கோடான கோடி, நிமிர்ந்து நில் ஆகிய பாடல்கள் கொஞ்சம் தேவலாம்.
'தண்ணி' அடிக்கக்கூடிய 4 நண்பர்கள் ஒரு காரில் ஐதராபாத் கிளம்புவதும் சரணின் மனைவி, இதர நண்பர்களை மட்டம் தட்டிப் பேசுவதும் கமல்ஹாசனின் பஞ்ச தந்திரத்தைச் சற்றே நினைவூட்டுகின்றன.
ஆளரவம் இல்லாத பகுதியில் பிச்சைக்காரர்களை உலவ விட்டுள்ளது செயற்கையாக உள்ளது. வில்லன்களை நண்பர்கள் நால்வரும் வீழ்த்தும் காட்சிகள் நம்ப முடியாதவை. கல்யாணி என்ற பாத்திரத்தில் வரும் நிகிதா, கண்ணைப் பறிக்கிறார். ஆனால், கடத்தல்காரன் சம்பத் உடனான அவரின் உறவு ஆழமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.
உச்சக்கட்ட காட்சியின் திடீர் திருப்பம், எதிர்பாராதது. மர்மம், நகைச்சுவை, எதார்த்தம் ஆகிய மூன்றையும் கலந்து கொடுப்பதில் இயககுநர் வெற்றி அடைந்திருக்கிறார்.
முறையான கல்வி கற்று ஒரு சிற்பத்தைச் செதுக்குபவன், இன்னும் கூட நேர்த்தியாக ஒரு சிலையை வடித்து விடுவான். ஆனால், ஆர்வத்தின் பேரில் ஒரு கல்லைச் சிற்பமாக வடிப்பவனின் படைப்பில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவன் படைப்புக்கு அதிக மதிப்புண்டு. வெங்கட் பிரபு, இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான். அவரிடம் மேலும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:54 AM 0 comments
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
ஜெயம்கொண்டான் - திரை விமர்சனம்
அண்மையில் வந்த தமிழ்ப் படங்களில் மிகச் சிறந்தது என்று கூற வேண்டுமானால் ஜெயம்கொண்டான் படத்தை நான் கூறுவேன். ஒரு குடும்பக் கதையை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும் என்று தன் முதல் படத்திலேயே காட்டிய இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கலாம். அற்புதமான ஒளிப்பதிவுக்காக பாலசுப்ரமணியத்துக்கு இதோ ஒரு மலர் மாலை. அழகிய தோற்றத்துடன், மிக எதார்த்தமான, கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்திய விநய்க்கு ஒரு பறக்கும் முத்தம். படம் முழுக்க முறைத்த பார்வையுடன் வந்தாலும் கச்சிதமாக உணர்வுகளை வெளிப்படுத்திய லேகா வாஷிங்டனுக்கு ஒரு சிறப்புக் கைகுலுக்கல். பாவனாவுக்கும் அவர் தங்கை சரண்யாவுக்கும் ஒரு பூச்செண்டு. இந்தப் படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்சுக்கு என் கைத்தட்டலையே பரிசாக அளிக்கிறேன்.
புகழ்மிகு, ஆற்றல் மிகு இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர், ஆர்.கண்ணன். இந்தப் படத்தில் மணிரத்னத்தின் தாக்கம் பல இடங்களில் உள்ளது.
லண்டனில் நீண்ட காலம் தங்கி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய அர்ஜூன் (விநய்), சென்னை திரும்புகிறார். தான் சம்பாதித்ததை எல்லாம் மாதா மாதம் அப்பாவுக்கு அனுப்பி வைத்த அவர், இப்போது சென்னையில் ஒரு தொழில் தொடங்கலாம் என்று வருகிறார். அவருக்கு கிருஷ்ணா (கிருஷ்ணா), கோபால் (விவேக்), அவர்களின் மனைவிமார்கள் என நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.
இறந்து போன தன் தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்பதை அறிந்து அர்ஜூன், அதிர்ச்சி அடைகிறான். அந்த இன்னொரு குடும்பத்தின் காரணமாகப் பிறந்த மகள் பிருந்தா (லேகா வாஷிங்டன்), தந்தையின் பேரில் மதுரையில் உள்ள சொத்தினை விற்க முயல்கிறாள். ஏனெனில் அவளுக்கு அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. அதற்கு அவளுக்குப் பணம் தேவை.
தொழில் தொடங்க அர்ஜூனுக்கும் மேற்படிப்புக்காக பிருந்தாவுக்கும் பணம் தேவைப்படுகிறது. பிருந்தாவின் அம்மா, அர்ஜூனுக்கு ஆதரவு தர, வீட்டின் பத்திரம் அர்ஜூனிடம் வருகிறது. மதுரை வீட்டில் மிளகாய் வியாபாரி (நிழல்கள் ரவி) தன் மகள் அன்னபூரணி(பாவனா) உடன் வசித்து வருகிறான். அவர்களை அங்கிருந்து காலி செய்ய அர்ஜூன் முயல்கிறான். அதற்காக அன்னபூரணிக்கும் தனக்கும் சிறு வயது முதலே பழக்கம் உண்டு என்று கதைகள் சொல்லி நம்ப வைக்கிறான். அவர்களும் காலி செய்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்குள் சிறு வயது நட்பு இருந்தது பின்னர பாவனா மூலம் தெரிய வருகிறது.
அர்ஜூன் வீட்டை விற்கும் தருணத்தில் பிருந்தா, வேறு ஒரு பார்ட்டிக்கு வீட்டை விற்க முயல்கிறாள். அண்ணன் அர்ஜூன் சண்டைக்கு வரக்கூடாது என்பதற்காக, அந்த வட்டார ரவுடி குணா (கிஷோர்) உதவியை அவள் நாடுகிறாள். பத்திரப் பதிவின் போதான களேபரத்தில் ரவுடி குணாவின் மனைவி பூங்கொடி (அதிசயா) தற்செயலாகக் கொல்லப்படுகிறாள்.
தன் மனைவி கொலைக்குப் பழி வாங்க ரவுடி குணா, அர்ஜூனைத் தேடிக்கொண்டு சென்னைக்கு வருகிறான். அவன் கண்ணில் படாமல் அர்ஜூன் ஓடுவதும் குணா ஆட்கள் அவனைத் தேடித் துரத்துவதும் நடக்கிறது.
கடைசியில் 'நான் ஓடுவது பயத்தினால் இல்லை; எனக்கென ஒரு லட்சியம் இருக்கிறது. ஓடுபவர்கள் எல்லோரையும் பயந்தாங்கொள்ளிகள் என நினைத்து விடாதே' என்ற நல்ல கருத்துடன் படம் முடிகிறது.
அர்ஜூனுக்கும் பிருந்தாவுக்கும் இடையிலான பாசக் காட்சிகள் மிக அழகாக, நயமுடன் காட்டப்பட்டுள்ளன. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த லேகா, முதல் முறையாக வெள்ளித் திரையில் தன் நடிப்புத் திறனைக் காட்டியுள்ளார். தன் அம்மா இறந்த பிறகு எல்லோர் முன்னும் அழாமல், தனி அறையில் யாருமில்லாத போது அழுவது அவரை அடையாளம் காட்டப் போதுமானது.
கூர்மையான மீசையும் பார்வையுமாக விநய் வசீகரிக்கிறார். வட்டார வழக்கில் பேசும் பாவனாவும் பட்டாம்பூச்சி போன்ற அவர் தங்கை சரண்யாவும் பொருத்தமான தேர்வுகள். சந்தானம், விவேக் ஆகியோரின் நகைச்சுவை நன்று.
பாடல்கள் பரவாயில்லை ரகம். நடிகர்களும் காட்சியாக்கிய இடங்களும் விதமும் ஒளிப்பதிவும் இசையின் குறைகளை மறைக்க உதவுகின்றன.
அண்ணன் - தங்கைப் பாசம் ஒரு புறம்; காதலன் - காதலி உறவு ஒரு புறம்; நண்பர்களின் அன்பு ஒரு புறம்... எனப் படம் முழுக்க அன்பின் மணம் வீசுகிறது. அண்ணனும் தங்கையும் மோதுவதும் பிறகு சேருவதும் அழகு. நேர்த்தியான திரைக்கதையின் மூலம் ஆர்.கண்ணன், மிக நளினமான ஒரு கதையை அளித்துள்ளார். நம்பிக்கை அளிக்கும் இந்த இயக்குநரை வரவேற்போம்.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:50 AM 0 comments
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
தாம் தூம் - திரை விமர்சனம்
இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமரர் ஜீவாவின் கடைசிப் படம் இது. இந்தப் படத்தின் கதை, இரஷ்யாவிலும் தமிழ்நாட்டிலுமாக நடக்கிறது. இரஷ்யாவில் நடக்கும் பகுதியை ஜீவா கையாண்டுள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு படத்தின் விடுபட்ட பகுதிகளை ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் நிறைவு செய்துள்ளார்.
புதிய களமும் இது வரை கண்டிராத காட்சிகளும் முதல் தரமான இசையும் ஒளிப்பதிவும் படத்திற்குச் சிறப்பு கூட்டுகின்றன.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்திருக்கின்றன. 'அன்பே அன்பே' என்ற பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் நன்று. இதயத்தை வருடும் இனிய மெல்லிசையால் ஹாரிஸ் ஜெயராஜ், தன் நண்பர் ஜீவாவுக்கு இசை அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதே போன்று ஜீவாவின் ஒளிப்பதிவு, உயர் தரத்தில் விளங்குகிறது. ஒவ்வொரு காட்சியும் பேசும் வகையில் அமைந்துள்ளது. பொருத்தமான ஒளி அமைப்பும் சூழலும் காட்சி அமைப்பும் ஒரு புத்துணர்வை அளிக்கின்றன. இரஷ்யக் காவலர்கள் விரட்ட, கவுதம் தப்பி ஓடுகையில் ஒரு கட்டடத்திலிருந்து இன்னொரு கட்டடத்திற்குத் தாவும் காட்சிகளும் சுடப்படும் காட்சிகளும் ஸ்லோ மோஷனில் காட்டப்படுவது அருமை. ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரை, இயக்குநரைத் தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டதே என்ற ஏக்கம் உண்டாகிறது.
மருத்துவர் கவுதம் சுப்பிரமணியன் (ஜெயம் ரவி), கிராமத்தில் இருக்கும் தன் அக்காவை (அனு ஹாசன்) பார்க்கப் போகிறார். அங்கு கிராமத்துப் பெண் செண்பா (கங்கனா ரனாவத்) உடன் காதல் மலர்கிறது. சச்சரவுகளுக்குப் பிறகு இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத் தேதிக்கு இரு வார காலமே இருக்கும் நிலையில் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக இந்தியா சார்பில் கவுதம் சுப்பிரமணியன் இரஷ்யா செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் இரஷ்ய மாடல் அனா பித்ரோவா (Kojevnikova Maria) உடன் தற்செயலாகத் தொடர்பு ஏற்படுகிறது. அந்த மாடலோ, போதை மருந்து கடத்துபவர். இரஷ்ய மாஃபியா விரித்த வலையில் கவுதம் சுப்பிரமணியன் வீழ்கிறார். இரஷ்ய மாடல் கொல்லப்பட, அந்தப் பழி கவுதம் மீது விழுகிறது. இரஷ்ய காவலர்கள், வலுவான ஆதாரங்களுடன் கவுதமைப் பிடித்துக் கடுமையாக விசாரிக்கிறார்கள்.
இந்திய தூதரக அதிகாரியான ராகவன் நம்பியார் (ஜெயராம்) பெரிய அளவில் உதவவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த ஆர்த்தி (லட்சுமி ராய்) என்ற வழக்கறிஞர், கவுதமுக்கு உதவ வருகிறார். இதற்கிடையே கவுதம், இரஷ்ய காவல் துறையிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். இரஷ்ய மாஃபியாவும் காவல் துறையும் கவுதமைக் கொல்லத் துரத்துகின்றன.
ஒரு நாள் கிராமத்தில் கவுதமும் செண்பாவும் ஒரு மரத்தடியில் நிற்கிறார்கள். வானில் ஒரு பறவையின் இறகு மிதந்து செல்கிறது. செண்பா, கவுதமிடம் சொல்கிறார்: அந்த இறகு இப்போது என் கைக்கு வரும் என்று கூறிவிட்டு, கண்ணை மூடிக்கொள்கிறார். அதே போல் அந்த இறகு, அவரின் உள்ளங்கைக்குள் வந்து அமர்கிறது. கவுதம் வியக்கிறார். கவித்துவமான இந்தக் காட்சியை இயக்குநர் காட்டுகிறார்.
கொலைக் குற்றவாளி கவுதம் கைதாகிய செய்தி, கிராமத்துத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய நிலையில் பலரும் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார்கள். ஆனால் செண்பா, திருமண நாளில் கவுதம் திரும்பி வந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இறுதியில் உண்மையான கொலையாளி பிடிபட, திருமண நாளில் கவுதம் திரும்பி விடுகிறான். உண்மையாக, ஆழமாக நினைத்தால், அது அப்படியே நடக்கும் என்பதை இயக்குநர் அழகுற காட்டியுள்ளார்.
செய்யாத குற்றத்திற்குப் பழி சுமந்து கவுதம் தனிமையிலும் துயரத்திலும் தவிப்பது நன்கு பதிவாகியுள்ளது. ஜெயம் ரவி, தன் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். தொடக்கப் பாடலில் அவரின் ஆட்டம் ரசிக்கும்படியாக உள்ளது.
கங்கனா ரனாவத், செக்கச் செவேலென ஈர்க்கிறார். கொள்ளை அழகாய்ச் சிரிக்கிறார். மெல்லிய உடலில் துருதுரு பெண்ணுக்குரிய உடல் மொழி அவரிடம் உள்ளது. கிராமத்துத் திரையரங்கில் செக்ஸ் படம் பார்க்கச் செல்லும் துணிச்சலை மெச்சலாம். படத்தின் ஆடை - அலங்கார நிபுணராக ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் சிறப்பாகவே செய்திருந்தாலும் கங்கனாவின் உடலில் பாவாடை - தாவணி சரியாகப் பொருந்தவில்லை.
படத்தின் திரைக் கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் முதல் 22 நிமிடங்களில் 3 பாடல்கள் இடம் பெற்றுவிட்டன. இரஷ்யாவிலும் தமிழ்நாட்டிலும் காட்சிகள் மாறி மாறி நடக்கின்றன. கடைசியில் இரஷ்ய மொழி தெரியாத கவுதம், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும் அப்போது நடக்கும் துப்பாக்கி சூட்டில் அவர் மட்டும் தப்பிப்பதும் நம்பக் கடினமான நிகழ்வுகள்.
ஜீவா இருந்து முழுப் படத்தையும் முடித்திருந்தால் இன்னும் சிறப்பாகத் தந்திருப்பார். ஆயினும் தன் கலை ஆளுமையால், கடும் உழைப்பால் உயர்ந்து, வித்தியாசமான படத்தைத் தர வேண்டும் என்ற ஜீவாவின் முனைப்பும் கனவும் இந்தப் படத்தில் உயிர்ப்போடு கண் சிமிட்டுகின்றன. அவருடைய கனவைத் தன் கைகளில் ஏந்தி, இந்தப் படத்தை முடித்து, தன் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள அனீஸ் தன்வரை அவசியம் பாராட்ட வேண்டும்.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:45 AM 0 comments
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
சத்யம் - திரை விமர்சனம்
பிரமாண்டமான எதிர்பார்ப்புகளைத் தூண்டி, ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியின் கதையைச் சொல்லி இருக்கிறார்கள்.
காவல் துறை உதவி ஆணையராக விஷால்; முறுக்கேறிய கட்டுடல்; நறுக்கென்ற முடிவெட்டு; மிடுக்கான தோற்றம்; சண்டைக் காட்சிகளில் வேகம்... என இது முழுக்க முழுக்க ஒரு விஷால் படமாக உருவெடுத்துள்ளது. எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ப, தன்னை வருத்தி, உழைத்து, அர்ப்பணிப்புடன் விளங்குகிறார் விஷால்.
சட்டமும் சாமியும் ஒண்ணு என்று இளம் வயதில் கேட்ட வாசகம், சத்யம் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. அதே கொள்கையுடன் காவல் துறை அதிகாரியாகி, சட்டத்தைக் காப்பதில் உறுதியுடன் உள்ளார் சத்யம் (விஷால்). உடல்நலம் குன்றிய தன் அம்மாவுடன் (சுதா சந்திரன்) சத்யம் வசிக்கிறார்.
அவர்கள் வசிக்கும் அடுக்ககத்தில் தெய்வா (நயன்தாரா) என்ற தொலைக்காட்சி நிருபரும் வசிக்கிறார். தெய்வாவின் காமரா உதவியாளர் போரா (பிரேம்ஜி; கூடவே நிறைய குறும்புக்கார வாண்டுகள். இவர்களுக்கு இடையில் சில பல மோதல்களுக்குப் பிறகு நட்பு பிறக்கிறது. நேர்மையான அதிகாரி சத்யம் மீது தெய்வாவிற்குக் காதல் அரும்புகிறது.
இதற்கிடையே சத்யத்திற்கு அலுவல் ரீதியாகப் பிரச்சினை எழுகிறது. மாநில முதல்வர் நோய்வாய்ப்பட, அவரது இருக்கையைப் பிடிக்க அவரின் கட்சிக் காரர்கள் நாலு பேர் திட்டம் வகுக்கிறார்கள். அவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் கொண்டல் தாசன் (கோட்டா சீனிவாச ராவ்), இதர மூன்று பேர்களைத் தீர்த்துக் கட்டினால் தான் முதல்வர் ஆகிவிடலாம் என மனப்பால் குடிக்கிறார். அதற்காக ஒரு தொழில் முறை கொலையாளியை ஏவுகிறார்.
ஆனால், அந்தக் கொலையாளி கொல்லும் முன்பே வேறு ஒருவர், இரண்டு அமைச்சர்களைக் கொன்று விடுகிறார். இந்நிலையில் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு, சத்யத்திடம் வருகிறது. தீவிர புலனாய்வுக்குப் பிறகு சத்யம், கொலையாளியை மாணிக்க வேலை (உபேந்திரா)க் கண்டுபிடிக்கிறார். இந்த மாணிக்க வேல், இளம் வயதில் சத்யத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர். சட்டமும் சாமியும் ஒண்ணு என்று கூறிய அவரே இன்று சட்டத்தைக் கையில் எடுத்து, இரண்டு அமைச்சர்களைக் கொன்றது ஏன்? சட்டம், சாமானியர்களைத்தான் வதைக்கிறது. அதிகாரம் படைத்தவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறது; அந்த வெறுப்பினாலேயே கொன்றேன் என மாணிக்க வேல் தன் செயலை நியாயப்படுத்துகிறார். முடிந்தால் கொண்டல்தாசன் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்தி, அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடு என்கிறார். சத்யம் சவாலை ஏற்கிறார். அந்தச் சவாலில் வென்றாரா என்பதே கதை.
படத்தின் சண்டைக் காட்சிகள், தத்ரூபமாகத் தோன்றுகின்றன. விமான நிலையத் துரத்தல் காட்சிகள் நன்று. ஆயினும் படத்தின் உச்சக்கட்ட காட்சி, மிகவும் நாடகத்தன்மையுடன் அமைந்துள்ளது.
நயன்தாரா - விஷால் இடையிலான காதலில் ஆழம் போதாது. ஆனால் பல அண்மைக் காட்சிகள், நயன்தாராவின் அழகைக் கூர்மையாக அள்ளித் தருகின்றன. துருக்கியில் அவர் ஆடிப் பாடுவது மிக இனிமை. அங்கு அவரது நடன அசைவுகள் இயல்பாகவும் ஒயிலாகவும் விளங்குகிறது. இதற்காகவே நடன இயக்குநரைப் பாராட்டலாம்.
படத்தின் திரைக் கதையில் செம்மை போதவில்லை. நயன்தாராவும் வாண்டுகளும் மோதுவதும் அந்தச் சூழலில் ஒரு பாடல் காட்சியும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளன. செல்லமே செல்லமே பாடல், விஷால் - நயன் இருவரின் உடல் வனப்பை வெளிப்படுத்தவே உதவியுள்ளது.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ராஜசேகர் இயக்கியுள்ளார். ஒழுங்கான காவல் துறை அதிகாரி கதையாக எடுத்திருந்தால் படம் வேறு தளத்திற்குச் சென்றிருக்கும். ஆனால், கொஞ்சம் நகைச்சுவை; கொஞ்சம் காதல்; கொஞ்சம் கவர்ச்சி; கொஞ்சம் சென்டிமென்ட் என எல்லா மசாலாக்களையும் கலந்து கொடுத்ததால் காவல் அதிகாரி சத்யத்திற்கு இடம் குறுகிவிட்டது. இந்த இடத்திலும் விஷால் தன்னை நிலை நிறுத்தியுள்ளது, அவரது தனித்தன்மையைக் காட்டுகிறது.
வெகுஜன கதாநாயகன் ஆக வேண்டுமானால் இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என விஜய் தொடங்கி, அனைத்துக் கதாநாயகர்களும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால் படைப்பாற்றல் இன்னும் கூட அதிகரிக்கும்.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:39 AM 0 comments
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
Saturday, August 23, 2008
புதிய இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன்
தமிழ்த் திரையுலகம், மறுமலர்ச்சி கண்டு வரும் காலம் இது.
முன்பு ஒரு சில கோடி முதலீடு கொண்ட படங்களையே பிரமாண்ட படமாகக் கூறிவந்தது தமிழ்த் திரையுலகம். இன்றோ, 30 கோடி, 40 கோடி எனச் செலவழித்து ஒரு படத்தை எடுக்கத் தயாரிப்பாளர்களுக்குத் துணிவு பிறந்துள்ளது. அடுத்து வரவுள்ள கமலின் 'மர்மயோகி'யின் மொத்தச் செலவு, 150 கோடி என்கிறார்கள். கார்ப்பரேட் எனப்படும் பெருவணிக நிறுவனங்களும் வெளிநாட்டுப் பட நிறுவனங்களும் இங்கு ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றன. படங்களுக்கு அதிக பிரிண்ட் போடப்படுகிறது.
முன்பு திரையரங்குகளை இடித்து, வணிக வளாகங்களாகக் கட்டினார்கள். இன்றோ, மல்ட்டிபிளக்ஸ் எனப்படும் கொத்துக் கொத்தான திரையரங்குகள் ஆங்காங்கே முளைத்து வருகின்றன.
மிஷ்கின், அமீர், பாலா, வசந்தபாலன், ராதாமோகன், சிம்புதேவன்... எனப் புதிய இயக்குநர்கள் பலரும் உள்ளே வந்து கொடி நாட்டியிருக்கிறார்கள். இவர்களுள் மிஷ்கின், அமீர் போன்று சிலர் கதாநாயகர்களாகவும் மலர்ந்து வருகிறார்கள். ஷங்கர், லிங்குசாமி... போன்று இயக்குநர்கள் சிலர், புதிய தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். இது, இந்தத் தொழிலில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக், கருணாஸ் ஆகியோரைக் கதாநாயகர்களாகக் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது, உருவக் கவர்ச்சியையும் தாண்டி, திறமையை மதிக்கும் நல்ல அணுகுமுறைக்கு அறிகுறி.
இவை போன்று ஜோஸ்வா ஸ்ரீதர், ஜி.வி.பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா.... என இசையமைப்பாளர்கள் பலரும் நல்ல முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
இப்படி நாலா திசைகளிலிருந்தும் புதிய திறமைகள் வந்து குவியும் இடமாகக் கோலிவுட் திகழுகிறது. அந்தப் புதிய ஆற்றல் மிகு கண்டுபிடிப்புகளில் ஒருவர் செந்தில் குமரன் என்கிற எஸ்.எஸ். குமரன். சசி இயக்கத்தில் 'பூ' என்ற புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்தப் படம், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. மண்ணிற்குள் விதையாய் புதைந்து கிடந்தாலும், நீரின்றி வெயிலில் காய்ந்து கிடந்தாலும், புயல்காற்றில் ஒடிந்தே கிடந்தாலும் பூப்பதையே இயல்பாய்க் கொண்டிருக்கிற இரு மனிதப் பூக்களின் கதை என்று கவித்துவமாய்ச் சொல்கிறார், இயக்குநர் சசி. (இவர், சொல்லாமலே, ரோஜாக் கூட்டம், டிஷ்யூம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர்.)
"பூ" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நோட்புக், ஃப்ளாஷ் ஆகிய மலையாள வெற்றிப் படங்களில் நடித்த முன்னணி நடிகை பார்வதி நடிக்கிறார்.
எஸ்.எஸ். குமரன் இசையமைப்பாளரானது எப்படி?
இசை மீது உள்ள காதலினால், வள்ளியூரிலிருந்து சென்னைக்கு வந்தவர் குமரன். திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பில் சேர்ந்தார். மெல்ல மெல்ல பலவற்றையும் கற்றுக்கொண்டார். படிப்பு முசிந்ததும் சென்னை துறைமுகத்தில் ஆடியோ விஷூவல் ஸ்பெஷலிஸ்ட் பணியில் சேர்ந்த இவர், அங்கு 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்தக் காலத்தில் துறைமுகம் சார்ந்த 300 விவரணப் படங்களைத் தானே ஒளிப்பதிவு செய்து, இயக்கி, இசையமைத்துள்ளார்.
இவரின் அண்ணன்கள் நாலு பேர்; ஒருவர், பிபிசியில் பணிபுரிகிறார். இன்னொருவர் ஸ்டார் தொலைக்காட்சியில் ஆசிரியர். பிபிசி அண்ணன், 'நாளை' என்ற படம் எடுத்தார். அவரிடம் இசையமைக்க வாய்ப்பு கேட்டுள்ளார் குமரன். ஆனால், 'டேய் விளையாடதடா. நிறைய முதலீடு பண்ணியிருக்கேன். போய்ப் பொழைப்பைப் பாரு' என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டுத் துடித்தார் குமரன்.
அண்ணனிடமாவது தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது. கைவசம் இருந்த 11 லட்சம் சேமிப்பு முழுவதையும் செலவிட்டு, வீட்டில் தனி ஸ்டுடியோ அமைத்தார். உலகத்தில் கிடைக்கும் அனைத்து டோன்களையும் 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அவர் மனைவி திகைத்துவிட்டார். 'என்னை நம்பு; சாதிப்பேன்' என்று தைரியம் சொன்னவர், ஓர் ஆண்டு இரவு பகலாக உழைத்தார். ஆயிரக்கணக்கான மெட்டுகள் போட்டார். ஆயினும் எப்படி, யாரிடம் வாய்ப்பு கேட்பது?
அப்போது தான் ஒருநாள், அந்தப் பொன்னான தருணம் வாய்த்தது. அவர் வீட்டுக்கு அருகில் சிவன் பூங்கா உள்ளது. அங்கு நடைபயிலும் போது ஏற்பட்ட சந்திப்புகளில் குமரனின் மனைவியும் இயக்குநர் சசியும் ஹலோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்கள் ஆனார்கள். சசியிடம் குமரனின் மெட்டுகள் நிறைந்த குறுந்தட்டைக் கொடுத்து, 'வாய்ப்பிருந்தால் உதவுங்க' என்று கேட்டிருக்கிறார் குமரனின் மனைவி.
சசி, குமரனைத் தன் அலுவலகத்துக்கு அழைத்தார். ஏற்கெனவே போட்ட மெட்டுகள் இருக்கட்டும்; நான் சொல்லும் சூழ்நிலைக்கு மெட்டு போடுங்க என்று இரண்டு சூழ்நிலைகள் சொன்னார். ஒரு மணி நேரத்தில் ரெண்டு மெட்டுகள் போட்டார் குமரன். அப்புறம் என்ன, குமரனுக்குக் கோடம்பாக்கத்தின் நெடுங்கதவு திறந்தது.
அண்மையில் இவரின் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தப் படத்தில் இவர் இசை அமைத்துள்ள 6 பாடல்களும் அவ்வளவு அழகு. கச்சிதமாக, உயிர்த் துடிப்புடன், உணர்வு மிளிரும் வண்ணம் பாடல்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு பாடலிலும் மண் மணம் கமழ்கிறது. 'சூச்சூ மாரி' என்ற பாடலில் குழந்தைகளின் உல்லாச உலகம் அழகாகப் பதிவாகியுள்ளது. 'ஆவாரம்பூ' பாடலில் இயல்பான ஏக்கமும் துயரமும் பின்னிப் பிணைந்துள்ளன. இப்படியாகப் பாடல் ஒவ்வொன்றிலும் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. தன் குரலிலேயே ஒரு பாடலைப் பாடியுள்ளார், இவர்.
குமரனின் பாடல்களைக் கேட்டுவிட்டு, பிரபலங்கள் பலரும் பாராட்டி உச்சி முகர்ந்து வருகிறார்கள். மேலும் பல புதிய படங்கள், அவரைத் தேடி வருகின்றன.
"நான் அதிகம் தூங்கமாட்டேன். மிகவும் சுறுசுறுப்பானவன். இது வரை ரெண்டாயிரம் மெட்டுகள் போட்டு வைத்திருக்கிறேன். பெரிய அளவில் சாதிக்க வேண்டும்" என்ற கனவு மிதக்கும் கண்களுடன் சொல்கிறார் குமரன்.
வாருங்கள் குமரன்! புதிய இசை மலரட்டும்; இந்த மண் குளிரும்படி, கேட்ட மனங்கள் துளிரும்படி, காலத்தை வென்று ஒளிரும்படி உங்கள் இசை அமையட்டும். திடமான நம்பிக்கையும் தன் துறை மீது தீராத காதலும் கொண்டவர்கள் வெல்வது திண்ணம்; அதற்கு குமரனே உதாரணம்.
நன்றி: தமிழ் சிஃபி விடுதலைத் திருநாள் சிறப்பிதழ்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:26 AM 0 comments
Saturday, August 02, 2008
தங்கம்மாவின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்
காந்தளகம் பதிப்பகத்தை நடத்தி வரும் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் தாயார் திருமதி தங்கம்மாள் கணபதிப்பிள்ளை, ஆகஸ்டு 1 அன்று இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு இயற்கை எய்திவிட்டார். இவருக்கு வயது 91.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து, கிராமத்துப் பெண்ணாக, குடும்பத் தலைவியாக, தாயாக, பாட்டியாக.... பல்வேறு நிலைகளை வெற்றிகரமாகக் கடந்த இனிய, தூய உள்ளத்தவர். என்னைத் தன் இன்னொரு மகன் என அழைத்து, அன்பு பாராட்டியவர்.
இவரைப் பற்றித் 'தகத்தகாய தங்கம்மா' என்ற நூலைக் கி.பி.2001இல் நான் எழுதினேன். அது, காந்தளகம் வெளியீடாக வெளிவந்தது.
இந்த நூலிலிருந்து ஒரு சிறு பகுதி இங்கே:
அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?
வேளாண் தொழிலுடன் ஆசிரியத் தொழிலையும் பார்த்து, சிறீகாந்தா அச்சகம் என்ற அச்சகத்தையும் காந்தளகம் என்ற பதிப்பகத்தையும் உருவாக்கிய முருகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் இல்லக் கிழத்தி; ஐ.நா. உணவு வேளாண்மை நிறுவனத்தின் ஆலோசகராக 23 நாடுகளில் பணியாற்றி, 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்த மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கும் சிறந்த இல்லத்தரசிகளான சரோஜினிதேவி, சாந்தாதேவி ஆகிய இரு பெண்மக்களுக்கும் தாய்; அமெரிக்க மாநிலங்கள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் வாழும் ஒன்பது பேரப் பிள்ளைகளுக்குப் பாட்டி; ஐந்து கொள்ளுப் பெயரர்களுக்குப் பூட்டி (2001).
அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?
உணவாலும் சமயத்தாலும் சைவர்; அன்பும் கருணையும் கொண்டவர்; எந்த உயிருக்கும் தீங்கு செய்து விடக் கூடாது என்று எண்ணுபவர்; மன உறுதியும் வீரமும் உடையவர்.
அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?
ஆடு, மாடு, கோழி ஆகியன வளர்த்தவர்; மரம் நிறை தோட்டம் அமைத்துப் பேணியவர்; பால் வணிகம் செய்தவர்; சீட்டுப் பிடிக்கும் தொழில் தெரிந்தவர்; நகையின் பொருட்டோ, வாயுறுதியின் பேரிலோ ஏழையர்க்குச் செல்வந்தரிடமிருந்து கடன் பெற்றுத் தரும் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர்; சுற்றத்தவரின் பிள்ளைகளையும் தன் வீட்டில் தங்க வைத்து ஆண்டுக் கணக்கில் ஊட்டி வளர்த்தவர்.
அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?
தன் பிள்ளைகளையும் பெயரர்களையும் ஒப்பற்ற குணவான்களாக உருவாக்கிய மூதாட்டி; ஐயனார் கோயிலடி, மறவன்புலவுச் சிற்றூர் மக்கள் மதித்துப் போற்றும் ஒரு சீமாட்டி; குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயைந்து கொடுத்து, அரவணைத்து, அவர்களைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த ஒரு பெருமாட்டி; சிந்தனைச் செல்வங்களை வாரி வழங்கும் ஒரு திருவாட்டி.
அந்த அம்மையை உங்களுக்குத் தெரியுமா?
நான்கடி உயரத்து ஞானப் பழம்; திருநீறு பூசிய திருவுரு; குழந்தையின் விழிகள்; மலர்ந்த முகம்; வெள்ளைச் சிரிப்பினாலேயே இவ்வுலகை வெல்லுவேன் என்று கண்களால் எழுதி, மவுனத்தால் கையொப்பம் இடுகிறாரே, அவர்தான் 'அம்மை' என நான் கூறிவந்த திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்கள்.
'யாழ்ப்பாணம்தான் இன்பக் கேணி; தமிழீழம்தான் என் ஒரே கனவு' என்றார் தங்கம்மா.
அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:31 AM 3 comments
Labels: இரங்கல்
Friday, July 18, 2008
சென்னை வானொலியில் JNNURM பற்றி நான்
சென்னை வானொலியின் முதல் அலைவரிசையில் (Medium Wave 720 kilo hertz) 19.7.2008 சனிக்கிழமை அன்று காலை 7.25 மணிக்கு (தில்லிச் செய்திகள் முடிந்த பின்) மக்கள் மேடை என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
அதில் இந்த வாரம், ஜவகர்லால் நேரு நகர்ப்புற சீரமைப்பு இயக்கம் [The Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)] என்ற மத்திய அரசின் திட்டத்தைப் பற்றிச் சிலரிடம் கருத்துக் கேட்டுத் தொகுத்து வெளியிடுகிறார்கள். அதில் என் கருத்துகளையும் பதிந்து சேர்த்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியை அமைத்துள்ளவர்: கீதப்ரியன். (இவர், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.)
வாய்ப்பு உள்ளவர்கள் கேளுங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:30 PM 0 comments
Saturday, June 28, 2008
மாஃபா பாண்டியராஜன் உடன் அரட்டை
மனிதவள மேலாண்மைத் துறையில் மிகுபுகழ் பெற்ற Ma Foi நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாஃபா பாண்டியராஜன், சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூலை 1 அன்று இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இவருடன் நீங்கள் உரையாடலாம்.
1992இல் அறுபதாயிரம் முதலீட்டில் தொடங்கிய Mafoi management Consultant Ltd நிறுவனம், இன்று 14 நாடுகளில் 108 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதில் 1850 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 1,85,000 பேர் வேலை பெற்றுள்ளார்கள். மனிதவள மேலாண்மைத் துறையில் மாஃபா, உலகின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளது என்றால் மிகையில்லை. 'Mafoi' என்றால் பிரெஞ்சு மொழியில் நம்பிக்கை என்று பொருள். ஒவ்வொரு மூன்று பணி நிமிடங்களிலும் ஒருவரைப் புதிதாக வேலைக்கு அமர்த்த உதவுகிறது இந்த நிறுவனம்.
Recruitment, HR, Hr out sourcing ஆகிய மூன்று வழி முறைகளில் இந்த நிறுவனத்தினர் இயங்குகிறார்கள். வேலைக்கு ஆட்களை அமர்த்துவதோடு, இவர்கள் பணி முடிந்து விடுவதில்லை. நிறுவனத்தில் பணிபுரிகிற தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை ஆராய்ந்து, நிறுவனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். இதனால் நிறுவனத்தால் தன்னுடைய இலக்கைத் திட்டமிட்டபடி எட்ட முடிகிறது. மாஃபா தொழில் நிர்வாக ஆலோசனை மையம் இன்று இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறது. உலகத்தில் பெரிய நிறுவனங்களின் பட்டியலான 'Fortune-500'இல் 122 நிறுவனங்களுக்கு இவர்கள் தொழில் ரீதியான சேவைகளை அளித்து வருகிறார்கள்.
இதன் நிறுவனர், கே.பாண்டியராஜன். சிவகாசியிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள விலாம்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்தவர். கோயம்புத்தூரில் பொறியியல் படிப்பை முடித்தவுடன் ஜாம்ஜெட்பூர் XLRI-இல் எம்.பி.ஏ சேர்ந்து படித்தார். எம்.பி.ஏவில் மனிதவள மேம்பாட்டுத் துறையைத் தேர்தெடுத்துப் படித்தார். படிக்கும் போதே Campus interview-இல் தேர்வு பெற்றார். கல்கத்தா பிரிட்டிஷ் ஆக்ஸிஜன் நிறுவனத்தில் 1984-இல் பணியில் அமர்ந்தார். இந்தக் கம்பெனியில் ஆறு வருடங்கள் பணியாற்றி மேலாளர் அளவுக்கு உயர்ந்தார். அடுத்ததாக சென்னையிலுள்ள 'Idea' என்னும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து Exports, HRD ஆகிய துறைகளில் 3 வருடங்கள் பணியாற்றினார். 1992 ஆகஸ்ட் 15 ஆம் தேதி Mafoi நிறுவனத்தைத் தொடங்கி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். இவரின் மனைவி ஹேமலதா, சார்டர்ட் அக்கவுண்டண்டாக இருந்து அந்த வேலையை உதறிவிட்டு 1994-லிருந்து இந்த நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராகப் பணியாற்றி வருகிறார்.
இலட்சக்கணக்கானோருக்கு வேலை பெற்றுக் கொடுப்பது ஒரு புறம் இருக்க, சமூக சேவைகளிலும் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ஆண்டுதோறும் குழந்தைகள் சிலரை, தன் பாட்டியின் பெயரிலான சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் வழியாகத் தத்தெடுத்துப் படிக்க வைக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் மூடப்பட இருந்த பள்ளியை வாங்கி, Set Anne's of excellence என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறார். மாதமொரு உடல் ஊனமுற்ற தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ரூபாய் 5000 தந்துதவுகிறார். சுய உதவிக் குழுக்கள் வழியாக 15,000 பெண்களுக்கு உதவியுள்ளார். பல்வேறு சமூக அமைப்புகளிலும் ஊக்கத்துடன் பணியாற்றி வருகிறார்.
சிறப்பு மிக்க இந்தச் சாதனையாளர், சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூலை 1 அன்று இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இவருடன் நீங்கள் உரையாடலாம். வேலைவாய்ப்பு, தொழில், மனிதவள மேலாண்மை தொடர்பான உங்கள் கேள்விகளை எழுப்பிப் பயன் பெறுங்கள்.
நீங்கள் செல்ல வேண்டிய பக்கம்: http://sify.com/connect/celebchat/chathome.php
இவருடன் அரட்டை அடிக்க, உங்களிடம் சிஃபி ஐடி இருக்க வேண்டும். சிஃபி ஐடி இல்லாதவர்கள், இங்கு சென்று பதிந்து பெறுங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:39 PM 1 comments
Labels: அரட்டை, தமிழ்சிஃபி
Saturday, June 21, 2008
தசாவதாரம் திரை விமர்சனம்
கயாஸ் தியரி (chaos system) எனப்படும் தொடர்பியல் தத்துவத்தில் படம் தோய்ந்துள்ளது. ஒரு சிறிய மாற்றம் கூட கால ஓட்டத்தில் கணிக்க முடியாத பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே கயாஸ் தத்துவம். ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்பு, காற்று மண்டலத்தில் ஏற்படுத்தும் சிறு மாற்றம் கூட, காலப் பெருவெளியில் ஒரு சூறாவளி ஏற்படக் காரணம் ஆகலாம். 12ஆம் நூற்றாண்டில் ஒரு கற்சிலையைக் கடலில் தள்ளியதால் 21ஆம் நூற்றாண்டில் சுனாமி நிகழ்கிறது. நம்ப முடியவில்லையா? நம்ப வைத்திருக்கிறார்கள் தசாவதாரத்தில்.
12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழன் (நெப்போலியன்), சைவத்தை வளர்க்க, வைணவத்தை ஒழிக்க முயல்கிறான். அதன் தொடர்ச்சியாக, சிதம்பரத்தில் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாளை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிடுகிறான். அதை வீர வைணவரான ரங்கராஜ நம்பி (கமல்) கடுமையாக எதிர்க்கிறார். அதனால், நாராயணனுடன் சேர்த்துக் கட்டப்பட்டு அவரும் கடலில் வீசப்படுகிறார். நம்பியின் மனைவி கோதையும் (அசின்) அக்கணமே இறக்கிறாள்.
அங்கு ஆழ்கடலில் அமிழும் ரங்கநாதர், 2004இல் சுனாமியின் போது கரையேறி வந்து மக்களைக் காக்கிறார். 12ஆம் நூற்றாண்டில் கடற்கரையில் பிரியும் கமலும் அசினும் 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் கடற்கரையிலேயே இணைகிறார்கள். இங்கு மட்டுமல்லாது, படம் முழுக்கவே பெருமாள் ஒரு பாத்திரமாகவே தொடர்ந்து வருகிறார். கொடுங்கிருமி, பெருமாள் விக்கிரகத்தினுள் அடைக்கலம் ஆவதும் படம் முழுக்க, அந்தச் சிலையைத் தூக்கிக்கொண்டு கமலும் அசினும் ஓடுவதும் பொருள் நிறைந்தது. பிளெட்சர் துரத்தும்போது கோவிந்த் பாலத்திலிருந்து குதிக்கையில் ஒரு லாரியின் மேல்பகுதியில் விழுகிறார். அந்த லாரியில் ஸ்ரீராமஜெயம் என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி பெருமாள் பெருமை பாடும் பக்தி முகம், இந்தப் படத்துக்கு உண்டு. இந்தப் பக்திக் கதைக்குள் வேறு பல கதைகள் உண்டு.
பார்க்க: தசாவதாரம் சிறப்பிதழ்
21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி (கமல்) ஒரு கிருமியைக் கண்டுபிடிக்கிறார். அது வெளிப்பட்டால் கோடிக்கணக்கான மக்கள் உடனே மரிப்பார்கள் என்ற நிலையில் கோவிந்தின் விஞ்ஞானக் குழுவின் தலைவர் அதைத் தீவிரவாதிகளுக்கு விற்கப் பார்க்கிறார். அதை அறிந்த கோவிந்த், அதை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அவரிடமிருந்து அதைக் கைப்பற்ற பிளெட்சர் (கமல்) என்ற அமெரிக்கர் துரத்துகிறார். கோவிந்த், திருட்டு விமானம் ஏறி, சென்னைக்கு வருகிறார். அங்கு உளவுத் துறை அதிகாரி பல்ராம் நாயுடு (கமல்) விசாரிக்கிறார். கோவிந்த், அங்கிருந்து தப்பி, சிதம்பரத்துக்கு வருகிறார். அங்கு கிருஷ்ணவேணி பாட்டி(கமல்)யிடம் அஞ்சலில் கிருமி வந்து சேர்கிறது. அதைப் பாட்டி, பெருமாள் விக்கிரகத்தினுள் வைத்துவிடுகிறார். விக்கிரகத்துடன் கமல் ஓடுகையில் இந்தப் பாட்டியின் பேத்தி ஆண்டாள் (அசின்) உடன் வருகிறார். கடைசியில் கிருமி யார் கையில் சிக்கியது?, அதன் விளைவு என்ன?, அது எப்படி சரி ஆயிற்று என்பதுடன் படம் முடிகிறது.
இந்தக் கிருமி விரட்டல் கதைக்கு இடையில் பல கிளைக் கதைகள் உள்ளன. தலித் தலைவர் வின்சென்ட் பூவராகன்(கமல்), மணல் கொள்ளையைத் தடுக்கப் போராடுறார். பஞ்சாபி பாப் பாடகர் அவதார் சிங் (கமல்) புற்றுநோயால் ரத்தம் கக்கியபடி பாட்டுப் பாடுகிறார். 7 அடி உயரத்தில் வரும் கலிஃபுல்லா கான் (கமல்), மசூதியில் அடைக்கப்படுகிறார். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (கமல்), கிருமி ஆராய்ச்சிக்குப் பல கோடி நிதி ஒதுக்குகிறார். அமெரிக்காவில் கோவிந்தின் நண்பனின் மனைவியாக யுகா என்ற ஜப்பானியப் பெண் வருகிறார். கோவிந்தைக் கொல்ல வந்த பிளெட்சர், யுகாவைக் கொல்கிறார். எனவே ஜப்பானில் உள்ள யுகாவின் அண்ணன் ஷிங்கென் நரஹஷி(கமல்), தன் தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்கப் புறப்படுகிறார்.
இப்படி 10 படங்களாக எடுக்க வேண்டியதை ஒரே படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் தசாவதாரம். இந்தப் பத்து கதாபாத்திரங்களையும் ஒரு வார காலத்திற்குள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு கதையை எடுப்பது எவ்வளவு பெரிய சவால்! இந்தச் சவாலைத் துணிச்சலாக எதிர்கொண்டுள்ளார்கள் கமலும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும்.
கமலின் 10 அவதாரங்கள்
கமல் 1 (ரங்கராஜ நம்பி):
12ஆம் நூற்றாண்டுக் காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. கிராஃபிக்சும் அருமை. ரங்கராஜ நம்பியின் நாமம், திரண்ட தோள்கள், பெருமாள் பக்தி... அனைத்தும் குறைவான காட்சிகளிலேயே அழகாகக் காட்டப்பட்டுள்ளது. சைவத்துக்கு மாறினால் உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில் மதம் மாறாமல் 'ஓம் நமோ நாராயணா' என்கிறார். அதையடுத்து நம்பிக்குச் சித்திரவதை தொடங்குகிறது. அவரது முதுகை 4 கம்பிகளால் கட்டி அந்தரத்தில் தொங்க விடுகிறார்கள். அவர் உயிரோடு இருக்கையிலேயே அவர் மகனே அவருக்கு இறுதிச் சடங்கு செய்கிறான். இறுதியில் நம்பியும் நாராயணனுடன் சேர்த்துக் கட்டப்பட்டு கடலில் இறக்கப்படுகிறார். நம்பியின் மனைவி கோதையும் அக்கணமே மரிக்கிறாள். படம் வெளிவருவதற்கு முன்னால் வைணவத்துக்கு இந்தப் படம் இழுக்கு சேர்க்கிறது என்று வழக்கு தொடுத்தார்கள். வைணவரின் மதப் பற்றினைச் சொல்லும் படம், சைவர்களின் மதத் திணிப்பை, அநாகரிகமான தண்டனைகளை எடுத்துரைக்கிறது. நல்லவேளை, சைவர்கள் இதற்காக வழக்கு தொடுக்கவில்லை.
கமல் 2 (கோவிந்த் ராமசாமி):
அமெரிக்க உயிரி ஆய்வகத்தில் வேலை. கொலைகாரக் கிருமியைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றப் படம் முழுக்க ஓடுகிறார். சுவரில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு நிற்கிறார். பாலத்திலிருந்து குதிக்கிறார். ஓடும் ரெயிலில் ஏறுகிறார். மோட்டார் சைக்கிளில் பறக்கிறார். படத்தை இழுத்துச் செல்லும் மையப் பாத்திரம் இது. அசினுடன் நெருக்கம் கொள்கிறார். அது, கடைசியில் காதலாக மாறுகிறது. ஐயங்கார் பெண்ணாக அசின் பொருந்துகிறார். பெருமாளே என்ற அவரின் தவிப்பு நன்று. சிலையை மணலில் புதைக்கும் இடத்தில் 'மங்களா சாசனம்' எனப் பாடிய பிறகு புதைக்கச் சொல்வது, அவரின் பக்தி உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
கமல் 3 (கீத் பிளெட்சர்):
முறுக்கேறிய கட்டுடல்; வேகமான அசைவுகள்; தவறாத குறி; தொழில்நுட்பத் தேர்ச்சி; சர்வ சாதாரண கொலைகள்; ஒயிலான ஆங்கிலம்; அதீத புத்திசாலித்தனம்.... இவற்றின் கலவையே பிளெட்சர். அமெரிக்க சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர். கிருமியுடன் கோவிந்த் தமிழ்நாட்டுக்குச் சென்றதும் இவரும் பின்தொடர்கிறார். அவருக்கு மொழிபெயர்ப்பாளராக மல்லிகா ஷெராவத் உடன் வருகிறார். ஆனால், சிதம்பரத்தில் மல்லிகா கொல்லப்படுகிறார். மொழி புரியாத பிளெட்சர், கோவிந்தையும் கிருமியையும் விரட்டும் காட்சிகள் அபாரம். தனி மனித இராணுவம் என்பது போல், தன்னந்தனியாகவே துணிச்சலுடன் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விறுவிறு.
கமல் 4 (வின்சென்ட் பூவராகன்):
மணல் கொள்ளையை எதிர்க்கும் நேர்மையான அரசியல்வாதி இவர். தலித் தலைவராக இவருடைய கண் பார்வை, உடல் மொழி அனைத்திலும் வித்தியாசம் காட்டியுள்ளார் கமல். மணல் கொள்ளையைப் பூமித் தாயைக் கற்பழித்தல் என்று வர்ணித்து, அதைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகக் காட்டும் துணிச்சல் அருமை. அவருடைய தொண்டராகப் பாடலாசிரியர் கபிலன் தோன்றுகிறார். கடைசியில் சுனாமியில் இவர், மணல் கொள்ளையரின் குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு மரிக்கிறார். இவர் பேசும் வசனங்களும் இவரின் உணர்வுகளும் அழகாக வந்துள்ளன.
கமல் 5 (பல்ராம் நாயுடு):
உளவுத் துறை அதிகாரியாக இவரின் நடிப்பு, அருமை. இந்தியாவிலேயே அதிகம் பேசப்படும் மொழி, இந்திக்கு அடுத்து தெலுங்குதான் என இவர் பெருமை கொள்வதும் தெலுங்குக்காரர்களைக் கண்டு அன்பும் நெருக்கமும் கொள்வதும் இயல்பாக உள்ளன. தெலுங்குப் பற்றினைக் காட்டியதோடு, இவரை ஒரு கோமாளியாக இயக்குநர் காட்டிவிட்டார். இது, சிரிப்பை வரவழைக்கும் அதே நேரம் இந்திய உளவுத் துறையின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளது. மேலும் படம் முழுக்கவே காவல் துறையினர் அனைவரும் மோசமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். எளிதில் ஏமாற்றப்படுபவர்களாகவும் பலவீனர்களாகவும் அப்பாவிகளாகவும் காட்டியிருக்கிறார்கள். இது, உண்மைக்கு மாறானது மட்டுமில்லை; உலக அரங்கில் கேவலம் தருவது.
தசாவதாரம்: TNS விமர்சனம்
இவர்களைத் தவிர ஜப்பானிய தற்காப்புக் கலை வீரர், 7 அடி உயர கலிஃபுல்லா கான், அவதார் சிங், ஜார்ஜ் புஷ் ஆகிய பாத்திரங்களுக்காகக் கமல் கடுமையாக உழைத்திருந்தாலும் அந்தப் பாத்திரங்கள், தேவையற்ற இடைச் செருகலாக உள்ளன. கலிஃபுல்லா கான், ஜார்ஜ் புஷ், ஜப்பானிய வீரர் ஆகிய தோற்றங்களில் செயற்கைத்தனம் தெரிகிறது. அதுவும் ஜார்ஜ் புஷ், என்ஏசிஎல்(NaCl) என்றால் என்னவெனக் கேட்பதும் அணுகுண்டு வீசலாமா எனக் கேட்பதும் அவரின் தரத்திற்கும் பதவிக்கும் பொருந்தவில்லை.
தசாவதாரம்: மஞ்சூர்ராசா விமர்சனம்
படம் முழுக்க மனநிலை சரியில்லாதவராக வரும் கிருஷ்ணவேணி பாட்டி, கடைசியில் பூவராகன் இறந்து கிடப்பதைப் பார்த்து, ஆராவமுதா என மடியில் போட்டு அழுவது உருக்கமானது. படத்தின் கதை, திரைக் கதை, வசனம் ஆகியவற்றைக் கமல் இயற்றியுள்ளார். வசனத்தில் பல இடங்களில் நகைச்சுவை மின்னல். ஹிமெஷ் ரேஷமையாவின் இசையில் 'கல்லை மட்டும்', 'முகுந்தா முகுந்தா' ஆகிய பாடல்கள் பெரிதும் கவர்கின்றன. ரவிவர்மனின் ஒளிப்பதிவு, படத்திற்குப் பெரும் துணையாக, தூணாக உள்ளது.
70 கோடி செலவில் பிரமாண்டமாக உருவான இந்தப் படம், மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில்தான் உள்ளது. சுனாமி வந்ததை நியாயப்படுத்தி இருப்பது, நன்று.
10 பாத்திரங்கள் என முடிவு செய்து கதையை அமைத்திருப்பது, தைத்த சட்டைக்கு ஏற்ப, உடம்பை வளைத்துக்கொள்வது போல் உள்ளது. ஆயினும் இதிலும் தன் முத்திரையைக் கமல் பதித்துள்ளார். உலகில் முதல் முறையாக ஒரே படத்தில் 10 வேடங்களில் நடித்த சாதனையைக் கமல் செய்துள்ளார். இப்போது அகல உழுதிருக்கிறார்; அவர் ஆழ உழவேண்டும் என்பதே உண்மையான திரை ஆர்வலர்களின் விருப்பம்.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:23 PM 1 comments
Labels: திரை விமர்சனம்
Monday, June 09, 2008
இராம.கோபாலன் உடன் அரட்டை அடிக்க
'இந்து முன்னணி'யின் மாநில நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன்(81), சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூன் 10 அன்று இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு அவருடன் நீங்கள் அரட்டை அடிக்கலாம்.
உங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டிய முகவரி: http://sify.com/connect/celebchat/chathome.php
இந்துக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 'இந்து முன்னணி'யின் மாநில நிறுவன அமைப்பாளர், இராம.கோபாலன். இவர், 1945இல் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கடந்த 63 ஆண்டுகளாக நெருங்கிய உறவு கொண்டவர். இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பது, மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு அழைத்து வருவது, இந்துமத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் எதிர்த்துப் போராடுவது எனப் பல பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 'இந்து ஜாகரன் மஞ்ச்' என்ற அமைப்புக்கு அகில இந்திய வழிகாட்டியாக இருக்கிறார்.
மீனாட்சிபுரம் மதமாற்றம், கன்னியாகுமரி மாவட்டத்தை 'கன்னி மேரி' மாவட்டமாக்க கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட முயற்சி. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் இந்துக்களை முஸ்லிமாக மதமாற்ற நடந்த முயற்சி, சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு, விநாயகரைச் செருப்பால் அடித்து திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலம்.... இவை போன்று தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சிகள், உணர்வுள்ள இந்துக்களை உலுக்கிக் கொண்டிருந்தன. இந்த நிலைமையை மாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது.
1980 பிப்ரவரியில் கரூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அளவிலான கூட்டம் நடந்தது. இதில் மேற்கூறிய பிரச்னைகள் பற்றி விரிவாக விவாதம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்கள் யாதவராவ் ஜோஷி, சேஷாத்ரிஜி, சூர்யநாராயணராவ்ஜி ஆகியோர் தமிழகத்தில் நிலவிய இந்த அசாதாரணமான நிலையை மாற்ற ஒரு தனி இயக்கம் தேவை என முடிவு செய்தனர். அதன்படி அந்த கரூர் கூட்டத்திலேயே 'இந்து முன்னணி' என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மாநில அமைப்பாளராக அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளராக இருந்த இராம.கோபாலன் நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளர், இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் என்று இரண்டு பொறுப்புகளிலும் செயல்பட்டார்.
ஓடாத திருவாரூர் ஆழித் தேரை ஓடச் செய்தது; மண்டைக்காடு கலவரத்தின்போது இந்துக்களுக்காகப் பாடுபட்டது; மீனாட்சிபுரம் மதமாற்றத்தின் போது அதை நாடு தழுவிய பிரச்சினையாக்கி மதமாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது; வேலூர் கோட்டையில் 400 ஆண்டுகள் சாமி இல்லாத கோயிலில் ஜலகண்டேஸ்வரர் சிலையை பிரதிஷ்டை செய்தது; தமிழகம் முழுவதும் இந்து எழுச்சி மாநாடுகளை நடத்தியது; தமிழகத்தில் வீதிதோறும் விநாயகர் சிலைகளை வலம் வரச் செய்தது... எனப் பலவற்றுக்கு இவரும் காரணமாக இருந்திருக்கிறார்.
அனுமன் ரதம் மூலம் தமிழகத்தில் இந்து எழுச்சியை உருவாக்கினார். திருப்பூரில் 10,008 தாய்மார்களைத் திரட்டி 10,008 திருவிளக்கு பூஜை, குலசேகரப்பட்டினத்தில் 5008, துவரங்குறிச்சியில் 2008 மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் 1008 திருவிளக்கு பூஜை நிகழ்த்தியுள்ளார்.
பொள்ளாச்சி - கணபதிபாளையத்தில் மாநில அரசு நிதி உதவியுடன் பசு மாமிச ஏற்றுமதித் தொழிற்சாலை தொடங்கும் முயற்சியை முறியடித்தார்.
பல்வேறு கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டார். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடங்கள்: திருப்பூர் (4 கோடி), வடபழனி (10 கோடி), திருவண்ணாமலை (2 கோடி), தர்மபுரி (9.5 ஏக்கர்), கோபி சமத்துவபுரம் (2.5 ஏக்கர்), இவ்வாறு எல்லா தாலுக்கா, மாவட்டங்களிலும் சொத்துகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க பாரதியார் குருகுலம் தொடங்கினார். குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்குவதற்காகவும் அவர்களிடம் இந்துமதச் சிறப்புகளைப் புரிய வைப்பதற்காகவும் இதுவரை 150 கிராமங்களில் பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமுதாயத்திற்காக வேலை செய்யும் தர்மவீரர்களை உருவாக்கும் பாரதப் பண்பாட்டுப் பயிற்சி கல்லூரியை உருவாக்கியுள்ளார்.
செயல் வீரர் மட்டுமின்றி, கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்... எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் கற்றவர். மலையாளம் பேசத் தெரியும். வட இந்தியர்கள், ஹிந்தியில் பேசும்போது இவர் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னதுண்டு. கேரளாவில் பிரசாரக்காக இருந்தவர்.
அவருடைய தலையில் ஒரு பெரிய வடு இருக்கும். அது, 1982இல் மதுரையில் இவர் மீது நடந்த தாக்குதலின் போது பட்ட காயம். இன்றும் அதனால்தான் அந்த வடுவை மறைக்க, தலையில் காவி டர்பன் கட்டுகிறார். இப்போதும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் குறியாக இருப்பவர்; அதனால் எப்போதும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இவரைச் சுற்றி இருப்பார்கள்.
சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடங்கிய போது, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று முதலில் குரல் கொடுத்தார். ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கத்தைத் தமிழகத்தில் தொடங்கினார்.
'தசாவதாரம் படத்தில்' இந்து மதத்திற்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என அறிக்கை விட்டார். ஏற்கெனவே கமலின் 'மருதநாயகம்' படத்தையும் எதிர்த்தார். 'வணக்கம்மா' படத்தில் ராமர், அனுமார் வேடங்களில் நடிகர்கள், சிறுநீர் கழிப்பது போன்ற காட்சியுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதற்குக் கடும் கண்டனமும் போராட்டமும் நடத்தியதால் அந்தப் படத்தின் காட்சிகள் மாற்றப்பட்டன. நடிகர் விஜய் நடித்த 'கீதை' என்ற படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்; அதை அடுத்து, அந்தப் படம், 'புதிய கீதை' என மாற்றப்பட்டது. தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' என்ற படத்தில் அஜீத், சிவன் வேடத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை அடுத்து, அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன.
அரசியல், கலையுலகம், ஆன்மீகம் என எங்கு இந்து மதத்திற்கு இழுக்கு நேர்ந்தாலும் குரல் கொடுத்து வரும் இராம.கோபாலன் உடன் ஜூன் 10 அன்று இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு நீங்கள் அரட்டை அடிக்கலாம்.
உங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டிய முகவரி: http://sify.com/connect/celebchat/chathome.php
இவருடன் உரையாட உங்களிடம் சிஃபி ஐடி இருக்க வேண்டும்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:28 PM 3 comments
Sunday, May 25, 2008
கடோ த்கஜன் திரை விமர்சனம்
புஜ பல பராக்கிரமம் மிகுந்த கடோ த்தகஜனின் கதையை, அசையும் சித்திரங்களாக (அனிமேஷன்) காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். முழுக்க முழுக்க அனிமேஷனில் தயாராகியுள்ள இந்தப் படம், பிரான்சின் கேன்ஸ் பட விழாவில் திரையிடத் தேர்வு பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து இந்த விழாவுக்குச் சென்ற முதல் அனிமேஷன் படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கும் இராட்சசியான இடும்பிக்கும் பிறந்த மகனே கடோ த்கஜன். அவன் காட்டில் வளர்கிறான். அசாத்தியமான உடல் வலுவும் மாய வித்தைகளும் கொண்டனாக அவன் திகழ்கிறான். அவன் கட்ஜூ என்ற யானைக்கு உதவுகிறான். அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். தொட்டில் குழந்தையாக இருக்கும் போதே, தன்னைக் கொல்ல வரும் எதிரிகளைப் பந்தாடுகிறான். நொடிப் பொழுதில் உரு மாறுவது, உரு மாற்றுவது, பறப்பது, மிதப்பது... எனப் பல்வேறு மாயா ஜாலங்களும் நிகழ்த்துகிறான்.
கடலுக்கடியில் போய் தங்க முத்தினை எடுத்து வருகிறான். அர்ஜூனனின் மகன் அபிமன்யுவுக்காக அவன் காதலிக்கும் வத்சலாவைக் கட்டிலோடு சேர்த்து கவர்ந்து வருகிறான். வத்சலா உருவத்தில் அவளின் மாளிகையில் உலவுகிறான். ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, மாய மாளிகை ஒன்றினை உருவாக்குகிறான். அபிமன்யு - வத்சலா திருமணம் நடக்க உதவுகிறான். துரியோதனன், சகுனி ஆகியோரின் சதியை வெல்கிறான்.
இப்படியாக ஒரு புராணக் கதையைச் சிறிய மாற்றங்களுடன் அழகான அனிமேஷன் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். 75 வயதில் அவர் மீண்டும் குழந்தையாகிவிட்டதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. சிறுவர்களைக் கவரும் காட்சி அமைப்புகள்; நகைச்சுவை கலந்த விவரிப்பு; கணீரென்ற குரலில் பாடல்கள்; பிரவீண் மணியின் விறுவிறுப்பான பின்னணி இசை ஆகியவற்றுடன் ஒன்றரை மணி நேரத்தில் நல்ல படத்தை வழங்கியிருக்கிறார். இடையில் கண்ணனின் கதையைக் கூறும் பாடல், சமயத்திற்கேற்ற இடைச் செருகல்.
'கல்யாண சமையல் சாதம்' என்ற பழைய பாடலில் கடோ த்கஜன் பல்வகை உணவுகளையும் கபளீகரம் செய்யும் காட்சியை இந்தப் படத்தில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். மலையிலிருந்து விழும் பெரிய பாறையைச் சும்மா சர்வ சாதாரணமாகப் பிடித்துத் தள்ளும் கடோ த்கஜனின் மீது மற்றவர் கண் படாமல் இருக்க அம்மா இடும்பி, திருஷ்டி சுற்றிப் போடுவது, படத்தின் தமிழ்த் தன்மைக்கு நல்ல சான்று.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி என ஏழு மொழிகளில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஷெமாரு என்டெர்டெயின்மென்ட் மற்றும் சன் அனிமேடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. சுட்டி, போகோ, ஜெட்டிக்ஸ் எனக் கட்டுண்டு கிடக்கும் சிறுவர்களை இழுக்கிற சக்தி, கடோ த்கஜனுக்கு உண்டு.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:17 AM 2 comments
Labels: திரை விமர்சனம்
Saturday, May 03, 2008
'அறை எண் 305-ல் கடவுள்' திரை விமர்சனம்
பெரியவர்களுக்கான காமிக்ஸ் கதை இது. சற்றே நகைச்சுவை முலாம் பூசித் தந்திருக்கிறார்கள்.
'ஒரு அப்பனுக்குப் பிறந்திருந்தால் கடவுளே இங்கு வா' என்று அழைத்ததும் கடவுள் நிஜமாகவே நேரில் தோன்றுகிறார். ஆரம்பத்தில் சில அற்புதங்கள் செய்து தான் கடவுள் என்று நிரூபித்ததோடு சரி; பிறகு அவர் மனிதனைப் போலவே நடந்துகொள்கிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று உணர்த்துவதற்காக வந்த அவர், ஒரு கட்டத்தில் மனிதனால் ஏமாற்றப்படுகிறார். மேன்ஷனில் தங்குகிறார். கழிவறை கழுவுகிறார். வேர்க்கடலை விற்கிறார். தெருவில் இறங்கிச் சண்டை கூட போடுகிறார்.....
கடவுள் என்றால் பிரமாண்டம் என ஒவ்வொருவரும் கற்பனை செய்திருக்க, சிம்புதேவன், மிகச் சாதாரணமாக அந்தக் கற்பிதத்தை உடைத்துவிட்டார். 360 பாகையில் கடவுளை எப்படியும் வளைக்கலாம் என்பதை எளிமையாக, நம்பும்படியாகக் காட்சிப்படுத்திய துணிச்சலுக்காக அவரைப் பாராட்டலாம்.
திருவல்லிக்கேணி கருப்பையா மேன்ஷனில் தங்கியிருக்கும் சந்தானமும் கஞ்சா கருப்பும் நித்திய உணவுக்கே அல்லாடுகிறார்கள். வாடகை கொடுக்க வழியில்லாத ஒரு விளிம்பு நிலையில் கடவுளை அழைக்க, அவரும் (பிரகாஷ்ராஜ்) தோன்றுகிறார். சாதாரண மனிதர் போன்று அவர் இருக்கவே, நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். பிறகு அவர், மகாவிஷ்ணுவாக, ஏசுவாக, புத்தராக அவர்கள் முன் தோன்றி நம்ப வைக்கிறார். அவரிடம் ஒரு கேலக்சி பெட்டி இருக்கிறது. அதில்தான் அவரின் மொத்த சக்தியும் இருக்கிறது. அதைக் கொண்டுதான் அவர், பிரபஞ்சத்தை இயக்குகிறார். சந்தானம், கஞ்சா கருப்புக்குக் கடவுள் சில உதவிகள் செய்கிறார். அவர் விடைபெறும் நாளன்று, நண்பர்கள் கடவுளின் கேலக்சி பெட்டியைத் திருடி, தலைமறைவு ஆகிறார்கள்.
கேலக்சி பெட்டியைக் கைப்பற்றியதன் மூலம் நண்பர்கள் இருவரும் கடவுள் நிலையை அடைகிறார்கள். நிலாவுக்குப் போய் ஆடிப் பாடுகிறார்கள். த ங்கள் சொந்த ஊர்களுக்குப் போய், புதிய பணக்காரர்களாய் அசத்துகிறார்கள். இதற்கிடையே, கேலக்சி பெட்டியை இழந்த கடவுள், நண்பர்கள் இருந்த அதே அறை எண் 305-ல் தங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இருந்தாலும் அவர் அதை ஏற்று, உழைக்கத் தொடங்குகிறார். அறிவுரைக ளைக் கொஞ்சம் சொல்லிலும் கொஞ்சம் செயலிலும் காட்டுகிறார்.
புது அதிகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் சந்தானம், தன் காதலி மதுமிதாவைப் பெண் கேட்கிறார். அப்போதுதான் அவர், பாலியல் தொழிலாளி என்ற விவரமே தெரிய வருகிறது. இறுதியில் கேலக்சி பெட்டி, கடவுளிடம் திரும்புகிறது. நண்பர்கள் திருந்துகிறார்கள். சுபம்.
இப்படி ஒரு கதையை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்ய முடியும்? பெரிதாக முடியாவிட்டாலும் சிறிதாகச் சிலவற்றைச் செய்திருக்கிறார் சிம்புதேவன். தேநீர்க் கடையின் அடுப்பு நெருப்பே என் ஐயப்ப ஜோதி என விஎம்சி ஹனிபா கூறுவது; புத்தர் சிலையையும் அர்னால்டையும் உதா ரணம் காட்டி accept the pain என்று உணர்த்துவது; பாடிவிட்டே காசு பெறுவேன் என்று தெருச் சிறுவன் சொல்வது, மேன்ஷன்களின் நிலையை அப்பட்டமாகக் காட்டியது... எனப் பலவும் அழுத்தமான முத்திரைகள்.
சந்தானமும் கஞ்சா கருப்பும் கதாநாயகர்களாக உலவுகிறார்கள். பெரும் பிரபலங்கள்தான் கதாநாயகர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை; திறமை இருந்தால் போதும் என்று இவர்களை நம்பிய இயக்குநரும் தயாரிப்பாளரும் பாராட்டுக்கு உரியவர்கள். பிரகாஷ்ராஜ், கடவுள் என்ற வடிவத்தை எளிமைப்படுத்தி அழகாக வழங்கியுள்ளார். பாந்தமான நடிப்பு. ஆயினும் ரவுடியுடன் சண்டை போடுவதை தவிர்த்திருக்கலாம். மேன்ஷன் மேலாளராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், மேன்ஷன்வாசிகளாக வரும் ராஜேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், மதன்பாப், வி.எஸ்.ராகவன் ஆகியோரின் பாத்திரப் படைப்பு நன்று. ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்களின் சிறுவயதுப் புகைப்படங்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தியது புதுமை. தங்கள் பாத்திரத்தில் நிற்கிறார்கள். உணவகம் நடத்தும் குயிலி, ஜோதிர்மயி சிறப்பாக நடித்துள்ளார்கள்.
படத்தின் பாடல்கள் பெரும்பாலும் நன்றாகக் கேட்கும்படியாக உள்ளன. குறையொன்றுமில்லை, காதல் செய், ஆவாரம் பூவுக்கும், தென்றலுக்கு நீ ஆகிய பாடல்கள் கவர்கின்றன. இரைச்சலாக, வார்த்தையே கேட்காத விதமாக இப்போதைய இசையமைப்பாளர்கள் இசையமைத்து வருகையில் வித்யாசாகரின் பணியும் பாணியும் ஈர்க்கின்றன.
'நான் கடவுள் என்பதை யாரிடமாவது சொன்னால் அடுத்த நொடி நான் மறைந்துவிடுவேன்' என்று கடவுள் பிரகாஷ்ராஜ், முதலில் நிபந்தனை விதிக்கிறார். ஆனால், மேன்ஷன்வாசிகள் சுற்றுலா சென்ற இடத்தில், கடவுள் சொடக்குப் போட்டு சாப்பாடு வரவழைப்பதைப் பார்க்கும் இளவரசிடம் சந்தானம் - கருப்பு நண்பர்கள் உண்மையைச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அதைக் கடவுள் கண்டுகொள்ளவே இல்லை. இது, லாஜிக் ஓட்டை.
கேலக்சி பெட்டி என்ற கற்பனை பரவாயில்லை. அதை முன்னிட்டு தோன்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. ஆனால், அது ஒரு முற்றாத கற்பனை.
இம்சை அரசன் 23-ம் புலிகேசிக்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவனும் தயாரிப்பாளர் ஷங்கரும் இணைந்து தந்திருக்கும் இரண்டாவது படைப்பு. நகைச்சுவை என்பது, கதையோடு இணைந்து வருவது என்பதை இயக்குநர் புரிந்துகொண்டுள்ளார். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் நகைச்சுவையை விட, கதையம்சமே ஓங்கி நிற்கிறது.
மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற முயற்சியிலிருந்து கொஞ்சம் விலகி நின்றால், இயல்பான வாழ்விலிருந்தே இன்னும் கூட நல்ல நகைச்சுவை வெளிப்படக் கூடும். சிம்புதேவன் சிந்திக்கட்டும்.
நன்றி: தமிழ்சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:24 AM 0 comments
Labels: திரை விமர்சனம்
Friday, May 02, 2008
புரட்சியாளர் பாரதிதாசன்
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
என் பள்ளிப் பருவத்துப் பேச்சுப் போட்டிகளில் நான் இந்தப் பாடலை முதலில் கூறிய பிறகு, என் பேச்சைத் தொடங்கி இருக்கிறேன். நான் மட்டுமில்லை; ஏனைய மாணவர்களும் பாவேந்தரின் ஏதேனும் ஒரு பாடலைப் பாடித் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அது, பேச்சுக்கு அழகும் கம்பீரமும் சேர்க்கவும் முதலில் நடுவர்களிடம் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் பெரிதும் பயன்பட்டது.
தொடர்ந்து அவரின் பாடல்களைப் படித்து அதன் நயங்களில் மனம் சொக்கியது உண்டு. பிறகு இதே தாக்கத்தில், ஆனால், அவருடைய நடையிலிருந்து மாறி இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் என் 18 வயதில் ஒரு பாடல் இயற்றினேன்.
சீனிதனை, வெல்லத்தை, தேங்காய் பர்ப்பி
தீஞ்சுவையை, அதிரசத்தை, மைசூர் பாகை,
தேனதனை, சாங்கிரியை, பஞ்சாமிர்தத்
தித்திப்பை, அல்வாவை, குஞ்சா லாடை,
பானகத்தை, பாதுசாவை, பால்கோவாவை,
பாற்சுவையை இனிப்பென்று சொல்வேன். ஆனால்
வானவளை வளத்தமிழை வண்ணப் பூவை
வாழ்வென்பேன் உயிரென்பேன் வையம் என்பேன்!
இப்படியாக என் தொடக்க காலக் கவிதை முயற்சிகளில் அவரின் பாதிப்பு இருந்தது. பிறகு வேறு திசையில் பயணிக்கத் தொடங்கினேன். ஆயினும் என்பதின் பருவத்தில் பாவேந்தரின் படைப்புகள் எனக்கு உணர்வூட்டியது உண்மை.
பின்னர் என் 20களில், பாவேந்தருடன் நெருங்கி இருந்த சுரதா, பொன்னடியான், ஈரோடு தமிழன்பன் போன்றோருடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. அவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். என் இரண்டாம் கவிதைத் தொகுப்புக்குப் பொன்னடியான் அணிந்துரை வழங்கினார். சுரதாவையும் ஈரோடு தமிழன்பனையும் பேட்டி கண்டதுண்டு. தமிழன்பன் கவிதையைப் பெற்று, அமுதசுரபியில் நான் ஆசிரியராக இருந்தபோது வெளியிட்டதுண்டு.
பாவேந்தரின் பெயரன் புதுவை கோ.பாரதியுடன் இணைந்து, சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளேன்.
'கனகசுப்புரததினம் எப்படி தன் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டதன் மூலம் பாரதிக்கு அடுத்தபடியாக பாரதிதாசன் என்று கூறும்படி வைத்தாரோ, அதே பாணியைப் பின்பற்றி நான் சுப்புரத்தின தாசன் என்று வைத்துக்கொண்டேன். இனி வருபவன், பாரதி, பாரதிதாசன், சுரதா என்றுதானே கூறுவான்' என வேடிக்கையாகச் சுரதா என்னிடம் சொன்னதுண்டு.
பாரதிதாசனின் கவிதை வீச்சு, அபாரமானது. அழகுமிகு சொற்செட்டு, கூரிய கருத்துகள், புதுமையான வெளிப்பாடு, சமூகவியல் கண்ணோட்டம்... என அவரின் படைப்புகள் பலவும் அனைவரையும் காந்தமாய்க் கவர்ந்தன. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற மையத்தில் நின்று உலகளாவிய விசாலப் பார்வையால் மக்களை விழுங்கினார்.
கவிதைகளால் பலரையும் ஈர்த்தவர் என்றபோதும் மேலும் பல சிறப்புகளும் அவருக்கு உண்டு. அவர் பாண்டியன் பரிசு என்ற தன் காப்பியத்தைத் திரைப்படமாக எடுக்கத் தானே சொந்தமாகப் பட நிறுவனத்தைத் தொடங்கினார். திரைப் பாடல்கள் புனைந்தார். புதுவையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இலக்கியம், திரைப்படம், அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். பெரியாரின் கொள்கைகளைத் தன் பாடல்கள் மூலம் பிரசாரம் செய்து, சமூக விழிப்புணர்வுக்குச் சிறந்த பங்காற்றியவர் இவர்.
இன்றும் திராவிடம், தமிழ், பெரியாரியம், பொதுவுடைமை.... போன்ற பின்புலங்களைக் கொண்டோரின் வீடுகளுக்குச் சென்றால் அங்கே பாரதிதாசனின் புகைப்படம் வீற்றிருப்பதைக் காணலாம். ஹிட்லர் போன்று குறுகிய மீசையும் மூக்கு கண்ணாடியும் முறைப்பான பார்வையும் கொண்ட இவரிடமிருந்து தமிழ் பீரிட்டெழுந்தது! காதலோ, வீரமோ, வன்மையோ, மென்மையோ, மகிழ்ச்சியோ, சோகமோ எந்த உணர்வையும் அவரின் சொற்கள் அற்புதமாக ஏந்தி வந்தன.
புரட்சிக் கருத்துகளைப் பாரெங்கும் பரப்பியதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. பெண் விடுதலை, சமூக விடுதலை, மண் விடுதலை.... என அவரின் ஒவ்வொரு கருவும் இந்தச் சமுதாயத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. தொடர்ந்து ஏற்படுத்தியும் வருகின்றன. ஒவ்வொரு தலைமுறைக்கும் புதிய கருத்துகளை அவரின் பாடல்கள் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு 29.4.1995 அன்று சென்னை கடற்கரையில் பாரதிதாசன் சிலைக் கவியரங்கம் நடந்தது. சிலையருகே கவிஞர்கள் கூடி, பாவேந்தரை வாழ்த்திப் பாடுவதாக நிகழ்ச்சி. அதில் நானும் பங்கு பற்றிக் கவிதை பாடினேன்.
அதிலிருந்து சில வரிகள் இங்கே:
பகுத்தறிவற்ற சமுதாயம் அன்று
இருளில் மட்கியது - நீ
வெகுண்டெழுந்து சீறிய சீறலில்
வீரம் வெட்கியது!
பூவுக்குள் எப்படி புயல் வந்ததென்று
பார்த்தோர் வியந்தார்கள் - உன்
பாவுக்குள் அடிக்கடி எரிமலை வெடிப்பதால்
தீயோர் பயந்தார்கள்!
பாரதிதாசன் உண்மையில் புரட்சியாளரே. அவரைப் புரட்சிக் கவிஞர் என்று அழைப்பது சாலப் பொருந்தும்.
இப்படிப்பட்ட புரட்சியாளருக்கு இணைய உலகில்.. தமிழ் உலகம் மடலாடற் குழுவில் தொடர்ந்து விழா எடுத்து வருவதை பாராட்டி மகிழ்கிறேன். தன்னலம் இன்றி, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இப்படியான விழாவினை நடத்தியமை, தமிழ் உலகம் உறுப்பினர்களின் தமிழ் உணர்வையும் தமிழ்க் காதலையும் வெளிப்படுத்தும் இனிய சான்று.
நன்றி: தமிழ் உலகம் மடற்குழுமம்
படத்திற்கு நன்றி: விக்கிபீடியா
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:24 PM 0 comments
Friday, April 18, 2008
சந்தோஷ் சுப்ரமணியம் திரை விமர்சனம்
மகனின் அன்றாட நடவடிக்கை முதல்கொண்டு முழு வாழ்வையும் அப்பா தீர்மானித்தால் எப்படி இருக்கும்? இது தான் சந்தோஷ் சுப்ரமணியம்
படத்தின் ஒரு வரிக் கதை. இந்தக் குடும்பக் கதைக்குள் காதலைக் குழைத்து ஒரு சுவையான திரைப்படத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார்
இயக்குநர் எம்.ராஜா. தெலுங்கில் பொம்மரில்லு என்ற பெயரில் வெளிவந்து வெற்றி வாகை சூடிய படத்தின் தமிழ் வடிவம் இது.
மகன் சந்தோஷாக ஜெயம் ரவி; அப்பா சுப்ரமணியமாக பிரகாஷ்ராஜ். மகன் என்ன நிறத்தில் சட்டை அணிய வேண்டும் என்பதிலிருந்து கேரம்
விளையாட்டில் அவன் எந்தக் காயை, எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்து படிப்பு, தொழில், கல்யாணம் என அடுத்தடுத்து எல்லா
முடிவுகளையும் அப்பாவே எடுக்கிறார். மகனுக்கு நல்லது செய்வதாக அப்பா நினைக்கிறார். ஆனால், சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை இழந்துவிட்டு,
வேண்டா வெறுப்பாக மகன் ஒத்துழைக்கிறான்.
தன் வாழ்வில் தொழில், திருமணம் என்ற இரண்டு விஷயத்தில் மட்டுமாவது தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று மகன் நினைக்கிறான். ஆனால்,
அப்பா, மகனுக்கு அவர் விருப்பப்படி ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிடுகிறார். இந்நிலையில் தான் மகன், ஹாசினி என்ற பெண்ணை
(ஜெனிலியா) சந்திக்கிறான். தவறுதலாக ஒரு முறை முட்டினால், மறு முறையும் முட்டிக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் தலையில் கொம்பு
முளைக்கும் என்று நம்பும் விளையாட்டுப் பெண் அவள். அவளின் குறும்பும் கள்ளம் கபடம் இல்லா அன்பும் வெள்ளைச் சிரிப்பும் மகனைக்
கவர்கின்றன. இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
ஒரு கட்டத்தில் அப்பாவிடம் தான் காதலிக்கும் பெண்ணைப் பற்றிச் சொல்கிறான் மகன். 'அவளை அழைத்து வா. ஒரு வாரம் நம் வீட்டில்
இருக்கட்டும். நம் குடும்பத்திற்கு அவள் ஏற்றவளா என்று பார்க்கலாம்' என்கிறார் அப்பா. சுற்றுலா போவதாகத் தன் அப்பாவிடம் (சாயாஜி ஷிண்டே)
சொல்லிவிட்டு, ஜெயம் ரவி வீட்டிற்கு வருகிறாள் ஜெனிலியா. அங்கு தங்கும் ஒரு வாரத்தில் அந்த வீட்டார் அனைவரின் மனத்திலும் இடம்
பிடிக்கிறாள். ஆனால், தொடரும் சம்பவங்களால் அவளாகவே அந்த வீட்டை விட்டுப் போகிறாள். பிறகு காதலர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதே
மீதிக் கதை.
இந்தப் படத்தில் ஜெனிலியாவின் நடிப்பு, மிக மிக அற்புதமாக அமைந்துள்ளது. வசீகர அழகு; வாய் நிறைய சிரிப்பு; துருதுரு பேச்சு; சுட்டித்தனம்;
அப்பாவியான பார்வை; கொஞ்சு தமிழ்... என ஒரு மான்குட்டி போல் படமெங்கும் செய்யும் மாயம் செய்கிறார். யார் கை நீட்டினாலும் அவர்களின்
தோளுக்குத் தாவும் குழந்தை போல், எல்லோரையும் ஒன்றாகவே அவர் பார்ப்பது அருமை. தேநீர்க் கடைக்காரர், பானி பூரி விற்பவர், ஐஸ்கிரீம்
விற்பவர் என எல்லோரையும் நட்புடன் பெயர் சொல்லி அழைப்பது அழகு. மகிழ்ச்சியை மட்டுமில்லாமல், சோகம், குழப்பம், கவலை என எல்லா
உணர்வுகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெனிலியா. இந்தப் படத்துக்காக அவருக்குப் பல விருதுகள் கிடைப்பது உறுதி.
அனைத்துப் பாத்திரங்களையும் ஜெனிலியா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். என்றாலும் அவருக்கு அடுத்த படியாக ஜெயம் ரவி, தன் பங்கை நன்கு
நிறைவேற்றியுள்ளார். அப்பாவின் வற்புறுத்தலுக்காகத் தன் ஆசைகளை விட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிர்கிறார். பிரகாஷ்ராஜ்,
சாயாஜி ஷிண்டே, கீதா, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள்.... என அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
ஜெயம் ரவிக்கு நிச்சயிக்கப்பட்ட கீரத், சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள்ளேயே வளர்ந்த பூச்செடி போல் இருக்கிறார். அவரை இன்னும் நன்றாகப்
பயன்படுத்தி இருக்கலாம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. டி.கண்ணனின் ஒளிப்பதிவு நன்று. எம்.எஸ்.பாஸ்கர்,
ஆசிரியராகப் படத்தில் நடித்துள்ளார். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருப்பார்களோ! அதுவும் அப்துல் கலாம் போல்
அவர் வேடம் பூண்டது, மிகத் தவறு.
ரீமேக் எனப்படும் மறுஉருவாக்கக் கதைகளை அதிகமாக இயக்கி வெற்றி பெற்றவர், எம்.ராஜா. ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி,
உனக்கும் எனக்கும் (சம்திங் சம்திங்) என மூன்று வெற்றிப் படங்களை எடுத்த அவருக்கு, நான்காவது படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. 7
ஆவது நாள் முடிவில் ஜெனிலியா பற்றி முடிவு எடுக்க, ஜெயம் ரவி வீட்டார் கூடியிருக்கின்றனர்; பிரகாஷ்ராஜூம் ஜெயம் ரவியும் தங்கள் கருத்தை
முதலில் பேச முயலுகின்றனர். அப்போது ஜெனிலியாவை முதலில் பேச வைத்தது, இயக்குநரின் முதிர்ச்சிக்குச் சான்று. இந்தப் படத்தின் இறுதிக்
காட்சி, சிறப்பாக அமைந்துள்ளது.
என்.பாஸ்கரின் கதைக்குத் திரைக் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜா. Love Makes Like Beautiful என்ற வாசகத்தைப் படத்தின்
தலைப்புடன் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள். இதே வசனத்துடன் ஒரு பாடலும் இதில் உள்ளது. சந்தோஷ் சுப்ரமணியம் என்ற தலைப்பே தமிழாக
இல்லாதபோது, துணை வாசகத்தைத் தமிழில் எப்படி எதிர்பார்ப்பது?
நல்ல கதைக்காக, ஜெனிலியாவின் அபார நடிப்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
நன்றி: தமிழ் சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:00 PM 3 comments
Labels: திரை விமர்சனம்
Monday, April 14, 2008
நேபாளி திரை விமர்சனம்
விக்ரமுக்கு அந்நியன் கிடைத்தது போல், பரத்துக்கு நேபாளி கிடைத்திருக்கிறது. மூன்று விதமான தோற்றங்களில் பரத். பாலியல் துன்புறுத்தலில்
ஈடுபடும் தீயவர்களைத் தேடிச் சென்று, வித்தியாசமாக, புத்திசாலித்தனமாகக் கொல்லும் ஒருவனின் கதையே நேபாளி. அவரது நடிப்புக்கு நல்ல தீனி
கொடுத்திருக்கிறது கதை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் கார்த்திக் என்ற பாத்திரத்தில் பரத். ஒயிலாக முகத்தில் வந்து விழும் வண்ண முடியும் ரோசா நிற
இதழ்களும் நேர்த்தியான உடைகளும் அழகான சிரிப்புமாக பரத், வசீகரிக்கிறார். இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருவார். அவருக்கு
ஏற்ற அழகிய இணையாக மீரா ஜாஸ்மின். இருவருடைய ஜோடிப் பொருத்தம் மிக அருமை. இருவரும் முதலில் சந்திக்கும் காட்சியிலிருந்து,
காதலிக்கத் தொடங்கி, வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து, நவ நாகரீக மாளிகையில் உல்லாசமாகக் களியாட்டம் போடுவது... எனப் பார்க்கப் பார்க்கச் சலிக்காத காட்சிகள்.
பரத் - மீரா இணையிடம் ஒரு விசாரணைக்காக வரும் அப்பகுதி காவல் துறை உதவி ஆய்வாளர் (ராஜா ரவீந்தர்), மீரா மீது கண் வைக்கிறார். பரத்
இல்லாத நேரத்தில் தனித்திருக்கும் மீராவிடம் அத்துமீறுகிறார். 'பரத்தை அடித்துப் போட்டு வந்திருக்கிறேன். அவன் வேண்டுமானால் என்னோடு படு'
என்று காவல் அதிகாரி, மீராவை மிரட்டுகிறான். அவனிடமிருந்து தப்பிக்க மீரா, தன்னை மாய்த்துக்கொள்கிறாள். மீராவைக் கொன்ற பழி, பரத் மீது
விழுகிறது.
கார் டிக்கியில் அடைக்கப்பட்டிருந்த பரத், இரண்டு நாள் கழித்து வந்து, காவல் அதிகாரியைக் கொடூரமாகக் கொல்கிறார். அதற்காக 6 ஆண்டு
சிறை வாசம். அங்கு பல முறைகள் பரத் தற்கொலைக்கு முயல்கிறார். பரத்துக்கு அடுத்த அறையில் ஒரு நேபாளி (கோவிந்த் நாம்தேவ்)
அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு சமயம் பரத்தும் அந்த நேபாளியும் ஒரே அறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்தச் சமயத்தில் பரத்தின் முதுகில்
எழுதியே தான் சேகரித்த எல்லாச் செய்திகளையும் சொல்லிவிடுகிறார் நேபாளி. பிறகு அந்த நேபாளி கொல்லப்படுகிறார்.
சிறையிலிருந்து வெளிவந்த பரத், நேபாளியாக அவதாரம் எடுக்கிறார். சங்கரபாண்டி ஸ்டோ ர்ஸில் மூன்று சக்கர மிதிவண்டியில் பொருள்களை
வீட்டுக்கு வீடு கொண்டு சென்று போடும் நேபாளி ஆகிறார். மென்பொருள் பொறியாளர், பேராசிரியர், தொழிலதிபர், மருத்துவர் என அடுத்தடுத்து
ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளுகிறார். அதுவும் காவல் துறைக்கு முன்னதாகவே புகைப்படத்துடன் தகவல் கொடுத்துவிட்டு வந்து, சொன்ன
நேரத்தில் கன கச்சிதமாகச் சாகடிக்கிறார். அவருடைய கோணலான புருவமும் உடைந்த தமிழும் காலை அகட்டிய நடையும் அவரது பாத்திரத்தை வித்தியாசமாகக் காட்டுகின்றன.
ஒவ்வொருவரைக் கொன்றதும் அவருக்கு மரணம் எப்படி நேர்கிறது என்று நேபாளியின் குரல், கிராஃபிக்சுடன் ஒலிக்கிறது. கொலையாளியைக்
கண்டுபிடிக்கும் காவல் துறை உதவி ஆணையர் வேடத்தில் பிரேம். ஒவ்வொரு தடயமாகக் கண்டுபிடித்து, நேபாளியை நெருங்குகிறது பிரேமின் குழு.
இறுதியில் நேபாளி பிடிபட்டாரா? என்பதை வெள்ளித் திரையில் காணலாம்.
சிறையில் அசல் நேபாளியைச் சிறை அதிகாரி (சேரன் ராஜ்), மிரட்டும் போது அடிக்கடி கன்னையா என்பவருடன் தொலைபேசியில் பேசுகிறார்.
ஆனால், அந்தக் கன்னையா யார் என்பதைக் கடைசி வரை காட்டவே இல்லை. பரத்தின் பின்னணி, அப்பா- அம்மா பற்றிக் கதையில் எந்த
விவரமும் இல்லை.
பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. மதியின் ஒளிப்பதிவு மிக அருமை. அரங்க அமைப்பும் சிறப்பு. கலை இயக்குநர்
செல்வகுமாரைப் பாராட்டலாம். பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், அழகாகப் பொருந்தி இருக்கிறது. ஒவ்வொரு கொலையாக நடந்துகொண்டே இருக்க, என்ன காரணத்திற்காக நேபாளி அவர்களைக் கொல்கிறார் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மர்ம முடிச்சை நீட்டிச் சென்றதில் இயக்குநர் வி.இசெட். துரை வெற்றி பெற்றுள்ளார். படத்தின் இறுதிக் காட்சி, ஒரு கவிதையைப் போல் அமைந்துள்ளது.
இப்படியெல்லாம் கொலை செய்யலாம் என்று காட்டுவது போல் ஒவ்வொரு படமாக வந்துகொண்டே இருக்கிறதே என்ற கவலை ஒரு புறம்
தோன்றுகிறது. ஆயினும் தீமை செய்பவர் தண்டிக்கப்படுவார் என்ற நீதியை ஒவ்வொரு படமும் காட்டுவதால் ஓரளவு சமாதானம் அடையலாம்.
தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் கதை, நமக்குப் பழசுதான்; ஆனால், புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்தி இருப்பதால் பாராட்டலாம்.
நன்றி: தமிழ்சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:03 PM 4 comments
Labels: திரை விமர்சனம்
Saturday, January 12, 2008
தமிழ் சிஃபி பொங்கல் சிறப்பிதழ்
தமிழ் சிஃபியின் பொங்கல் சிறப்பிதழ் வெளிவந்துவிட்டது.
பார்க்க: http://tamil.sify.com/pongal
கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஒலி - ஒளிப் பதிவுகள், செய்திகள், திரைப்படப் புகைப்படங்கள், பொங்கல் வாழ்த்து.... எனப் பலவற்றையும் இதில் நீங்கள் கண்டும் கேட்டும் படித்தும் மகிழலாம்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:24 PM 0 comments
Labels: சிறப்பிதழ்கள், தமிழ்சிஃபி
Friday, January 04, 2008
சென்னை வானொலியில் என் நிகழ்ச்சி
சென்னை வானொலியின் முதல் அலைவரிசையில் (Medium Wave 720 kilo hertz) 5.1.2008 சனிக்கிழமை அன்று காலை 7.25 மணிக்கு (தில்லிச் செய்திகள் முடிந்த பின்) மக்கள் மேடை என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
அதில் இந்த வாரம், கணினி யுகக் கழிவுகள் என்ற தலைப்பில் மின்னணுக் கழிவுகள் (e-waste) பற்றிச் சிலரிடம் கருத்துக் கேட்டுத் தொகுத்து வெளியிடுகிறார்கள். அதில் என் கருத்துகளையும் பதிந்து சேர்த்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியை அமைத்துள்ளவர்: கீதப்ரியன். (இவர், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.)
வாய்ப்பு உள்ளவர்கள் கேளுங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:38 PM 3 comments
Labels: ஊடகங்கள், மின் கழிவுகள், வானொலி