!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> காமேஷ் - யாங் திருமண வைபவம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, October 06, 2009

காமேஷ் - யாங் திருமண வைபவம்

இணைய நண்பர் காமேஷ் - யாங் திருமணம், சென்னையின் எல்லையில் உள்ள காட்டுப்பாக்கத்தில் 04.10.2009 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்திய - சீன உறவின் நிகழ்கால அடையாளமாக இது விளங்கியது.

முன்னதாக, 27.09.2009 அன்று காமேஷ் தம் நண்பர் மகேஷூடன் அம்பத்தூரில் உள்ள எமது இல்லத்திற்கு வந்து தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் திருமண அழைப்பிதழை அளித்தார். அவர்களுடன் நானும் பதிவர் கீதா சாம்பசிவம் வீட்டிற்குச் சென்று அவரைத் திருமணத்திற்கு அழைத்தோம்.

சீனாவில் இவர்களுக்கு ஏற்கெனவே பதிவுத் திருமணம் நடைபெற்றுவிட்டது. இது தொடர்பாக அங்குள்ள நண்பர்களுக்கு விருந்தும் வைத்துள்ளனர். இப்போது, மணமகன் சார்பில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு முறைப்படி திருமணச் சடங்குகள் நிகழ்ந்தன. காமேஷ், தலைப்பாகை, வேட்டி, துண்டுடன் கம்பீரமாகத் தோன்றினார். சீனத்து மணமகள் யாங், சேலை, பொட்டு, நெற்றிச் சுட்டி உள்ளிட்ட அணிகலன்கள், மருதாணி அல்லது மெஹந்தி ஆகியவற்றுடன் தென்னகப் பெண் போன்றே விளங்கினார். இருவரின் கழுத்திலும் மலர் மாலைகள், கைகளில் பூச்செண்டு ஆகியவை அழகு சேர்த்தன.

பஞ்ச பூதங்களின் சாட்சியாக, வேதியர் மந்திரங்கள் ஓத, மேளமும் நாகஸ்வரமும மங்கள் இசை முழங்க, உற்றார், சுற்றத்தார், நண்பர்கள் அட்சதை தூவ, காமேஷ், யாங்கின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார். இருவருக்கும் நடுவிலிருந்த துணியாலான திரை விலகியது. யாங் அம்மி மிதிக்க, காமேஷ், அவர் கால் விரல்களில் மெட்டி அணிவித்தார்.

திருமணச் சடங்குகள், நமக்கு எப்படி இருந்த போதிலும், மணமகள் யாங்கிற்கு இவை அனைத்துமே புதியவை. ஒவ்வொரு சடங்கிலும் குறுஞ்சிரிப்புடன் அவர் கலந்துகொண்டார்.

இந்தத் திருமணத்தின் இன்னொரு சிறப்பு, இதில் வலைப்பதிவர்கள், இ-குழுமத்தினர் பலரும் கலந்துகொண்டதே. விழியன் தம் மனைவி, மகளுடன் வந்திருந்தார். அப்துல் ஜப்பார், தம் மகன் ஆசிப் மீரானுடன் வந்திருந்தார். கீதா - சாம்பசிவம் தம்பதியர், ருக்மிணியும் அவர் கணவரும், புனிதவதி இளங்கோவன், நட்சத்திரா, அதியமான், தேவர் பிரான் கிருஷ்ணன், சஹாரா தென்றல், கல்பகம், அ.கி.ரா. தம் மனைவியுடனும் மகளுடனும் வந்திருந்தனர். இன்னும் ஏராளமானோர் கலந்துகொண்டு புதிய மணமக்களை வாழ்த்தினர். இணைய உறவானது, எவ்வளவு ஆழமானது என்பதை இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. பதிவர் பலரின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன. அவர்கள் என்னை மன்னிப்பார்களாக.

இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாதது குறித்து, தற்சமயம் அமெரிக்காவில் இருக்கும் சீதாலட்சுமி, ஷைலஜா ஆகியோரும் இன்னும் பலரும் வருந்தினர். அவர்களுக்காகவும் பிறருக்காகவும் சில நிழற்படங்களை இங்கே இடுகிறேன்.





























எல்லைச் சிக்கலைத் தீர்க்க முடியாத இந்தியாவும் சீனாவும் அரசு ரீதியாக எவ்வளவுதான் முயன்றாலும் இரு நாட்டு உறவினைப் பலப்படுத்திவிட முடியாது. ஆனால், இப்படியான திருமணங்கள் மூலம் ஆயிரம் மடங்கு உறவு பலப்படும். இந்த உறவின் மூலம், புதிய அத்தியாயத்தை இவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை, இயல்பாகவே உலகக் குடிமகவாக மலரும். மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

4 comments:

துளசி கோபால் said...

நானும் கோபாலும்கூட வந்ததாக நினைவு:-)))))

முனைவர் அண்ணாகண்ணன் said...

ஆமாம் துளசியம்மா. உங்களோடும் கோபாலோடும் நான் பேசிக்கொண்டிருந்தேனே. 06.09.2009 அன்று, காமேஷ் - யாங்கை வீடியோ நேர்காணலுக்காகச் சந்திக்க அவசரமாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். அதில் நிறைய நண்பர்களின் பெயர்களைத் தவறவிட்டிருக்கிறேன்.

manjoorraja said...

நண்பர் காமேஷின் திருமண நிகழ்ச்சிகளை கச்சிதமாக எழுதியுள்ளீர்கள்.

புகைப்படங்களும் அருமை. இனிய நிகழ்வை தவறவிட்டுவிட்டேன். அனவரையும் சந்தித்திருக்கலாம்.

KAVIYOGI VEDHAM said...

அருமை அருமை அண்ணாகண்ணன்.. நேரில் வந்ததுபோல் இருந்தது.வாழ்க தம்பதியர்,
யோகியார்