!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புகைப்படங்களுக்குப் பெயர் இடும்போது கவனிக்க வேண்டியவை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, October 11, 2009

புகைப்படங்களுக்குப் பெயர் இடும்போது கவனிக்க வேண்டியவை

இணையத்தில் நம் நடவடிக்கைகள் நாளும் பெருகி வருகின்றன. இணைய இதழ், வலைப் பதிவு, இணையக் குழுமம்.... எனப் பலவும் நடத்துகிறோம். இணைய இதழ்கள் வேண்டுமானால் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். ஆனால், வலைப்பதிவுகள் இன்றே 6134 என்ற எண்ணிக்கையில் உள்ளன. நாளை இன்னும் பல மடங்குகள் பெருகும். இவற்றில் இடப்படும் இடுகைகள் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளன. ஒவ்வோர் இடுகையுடனும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையாவது இணைக்க வேண்டும் எனப் பலரும் நினைக்கின்றனர். அதுவும் சரியே. ஆனால், புகைப்படங்களுக்குப் பெயர்கள் இடுவதில் நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எணினி நிழற்படக் கருவியிலும் (டிஜிட்டல் கேமரா) செல்பேசியிலும் எடுத்த படங்களைக் கணினிக்கு மாற்றும்போது அவை பெரும்பாலும் ஒவ்வொரு படத்திற்கும் எண்களையே பெயராக அளிக்கின்றன. அவற்றைத் தம் வலைப்பதிவிலோ, இணைய இதழிலோ இணைக்கும் நண்பர்கள் அதே பெயருடன் இணைக்கிறார்கள்.

இன்னும் பலர், ஒரு திரைப்படம் அல்லது சம்பவத்தின் புகைப்படத் தொகுப்பு எனில் அதற்கு 1, 2, 3, 4, 5 என எண்களையே பெயராக அளிக்கின்றனர். அல்லது a, b, c, d, e எனப் பெயர் இடுகின்றனர். அல்லது இரண்டையும் கலந்தும் கொடுப்போர் உண்டு. இவ்வாறு அல்லாமல் ஏதோ ஒரு பெயர்தானே என நினைத்து, sdjbs எனக் கைக்கு வந்த பெயர்களைக் கொடுத்து விடுகிறார்கள்.

இவற்றால் தேடுபொறிகளில் படத்தைத் தேடும்போது இந்தப் படங்கள் கிடைக்காமல் போகின்றன.

சிலர் தம் பெயரையோ, ஊர்ப்பெயரையோ, பொருளின் பெயரையோ அடையாளப் பெயராகக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களும் ஒரே கருவிலான ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ஒரே பெயருடன்தான் அளிக்கிறார்கள். அதாவது ஊட்டிக்குப் போய்வந்த போது எடுத்த படங்கள் என்றால் ooty1, ooty2, ooty3 எனப் பெயர் வைக்கிறார்கள். இதனால் ஊட்டி என்று தேடினால் மட்டுமே அந்தப் படங்கள் கிட்டும். அதற்கு மாறாக, ooyt_botanical_garden, ooty_boating என்பது போல் ஒவ்வோர் இடம் குறித்தும் தெளிவாக, முழுமையாகப் பெயரிட்டால், தேடுபொறியில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, பெயர்களை முழுமையாக, அதற்கு உரிய எழுத்துகளுடன் எழுத வேண்டும் என்பதையே. சிலர் ooyt_botanical_garden என்பதை ootybg எனச் சுருக்கி எழுதுகிறார்கள். கருணாநிதி என்பதையும் mk எனக் குறித்துவிடுவார்கள். இதனால் பெரிதும் பயனில்லை. mk என எவரேனும் தேடினால் அப்போதுதான் இந்தப் படம் சிக்கும். கருணாநிதியைப் பற்றி மட்டுமே 10 படங்களைத் தரவேற்றப் போகிறீர்கள் என்றால், karunanidhi_yellow_shawl, karunanidhi_sitting, karunanidhi_smile, karunanidhi_kanimozhi எனப் பெயர் இடுங்கள். புகைப்படத்தின் பெயர் நீளமாக இருப்பது குறித்துக் கவலை வேண்டாம். தெளிவாக, கூர்மையாக, சரியான உச்சரிப்புடன் இருக்கிறதா எனப் பார்த்தால் போதும்.

இன்னும் சில படங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள். இத்தகைய படங்களில் முடிந்தால் நால்வர் படத்தையுமே அளிப்பது நல்லது. ஒரு படத்தில் கமல், ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர், அமிதாப் ஆகியோர் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் படத்திற்கு rajinikanth_Aishwaryarai_shankar_Amithab_bachchan எனப் பெயர் வைப்பது நல்லது. நான்கு பெயர்களில் யார் பெயரைத் தேடினாலும் இந்தப் படம் கிடைக்கும்.

இதில் இன்னொன்றையும் கவனிப்பது நல்லது. இப்போது ஷங்கர் என ஒரு படத்திற்குப் பெயரிடுவதைக் காட்டிலும் director_shankar என வைப்பது நல்லது. இதன் மூலம் அந்தப் படத்தினைத் தேடி எடுப்பது இன்னும் எளிதாகும்.

புகைப்படங்களுக்குக் குறிச் சொற்கள் அளிக்கும் வாய்ப்பு, Photo Bucket போன்ற சில இணைய தளங்களில் உள்ளது. முன்னணி இணைய இதழ்கள் பெரும்பாலும் Tags, Keywords ஆகியவற்றை அளித்துவிடுகின்றன. ஆயினும் இவற்றை முழுமையாகப் பயன்படுத்தாதவர்களே அதிகம்.

வலைப்பதிவில் படம் உள்ளிடும் முறைகளில் ஒன்றைக் கவனித்திருப்பீர்கள். நேரடியாக உங்கள் கணினியிலிருந்து தரவேற்றுவது ஒரு முறை. வேறு எங்காவது உள்ள படத்தை அதன் சுட்டியை மட்டும் எடுத்துவந்து URL என உள்ள இடத்தில் இட்டும் தரவேற்றலாம். இப்படிச் செய்யும்போது, அந்தப் படத்திற்கு, முன்பு இட்ட அதே பெயர், அதைப் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து செல்லும். நாளை நாம் இடும் படத்தையும் யாராவது இப்படி தம் பதிவில் தரவேற்றலாம். அப்போது நாம் இடும் இதே பெயர், அங்கும் இருக்கும். இதனால் நம் பொறுப்பு, கூடுகிறது.

இப்போது தமிழிலும் படங்களுக்குத் தலைப்பு இடலாம். அவ்வாறு இடும்போதும் முன்கூறியதைக் கவனத்தில் கொள்ளுவது நல்லது. தொடர்புடைய பெயரை முழுமையாக இடுங்கள். அந்தப் படத்தின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வண்ணம் உங்கள் பெயரிடல் அமைய வேண்டும். தேடுநரின் உளப் போக்கினை உள்வாங்கி, தேடுபொறிகளுக்கு இசைவாக அவை இருத்தல் நலம்.

4 comments:

R. said...

சிறப்பான, தேவையான, கவனத்தில் கொண்டு படங்களுக்கு பெயரிட வேண்டிய பயன் தரும் பதிவு.
பாராட்டு.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹூசுடன்

cheena (சீனா) said...

உன்மை - சிந்திக்க வேண்டும் - மற்றவர்கள் தேடும் பொழுது கிடைக்க வேண்டுமென்றால் இந்த வகையில் பெயரிடுவது நன்று

நல்வாழ்த்துகள்

கிரி said...

பயனுள்ள தகவல்..நான் சில சமயங்களில் நீங்கள் கூறும் முறை பயன்படுத்தி இருக்கிறேன்.ஆனால் முழுவதும் இல்லை..

இனி இதை போல செய்ய முயற்சிக்கிறேன்

ரவிசங்கர் said...

படங்களுக்கான HTML நிரலில் alt குறிப்புகளைச் சேர்ப்பதும் தேடுபொறிகளில் சிக்க உதவும்.