!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> உங்கள் பழைய உடைகளைத் தாருங்கள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, October 02, 2009

உங்கள் பழைய உடைகளைத் தாருங்கள்

தமிழ்நாட்டு ஏழைகளின் உடைகளைப் பார்த்தபின் நான் இனி அரையாடை மட்டுமே உடுத்துவேன் என உறுதி எடுத்துக்கொண்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் இதை எழுதுகிறேன். மாற்றுடை இல்லாமல், உடுத்திய ஆடையைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் உடுத்திய தோழர் ஜீவாவின் நினைவுகளோடு எழுதுகிறேன். அந்தக் காலத் தலைவர்களின் எளிமையை இனி கனவில்தான் காணமுடியும். ஆனால், இந்தக் கால மக்களுள் பலருக்கு இந்த நிலை இன்னும் நீடிக்கிறது.

நடைபாதைகளில், சேரிகளில், கிராமப்புறங்களில், வீராணம் குழாய்களில், மரத்தடிகளில், ரெயில் நிலையங்களில்..... இன்னும் வழிபாட்டு இடங்களின் வாயில்களில், சாலை முனைகளில், தற்காலிக முகாம்களில்.... என வசிக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்களின் உடைகளே அவர்களின் வாழ்நிலையைப் பறை சாற்றுகின்றன. தரையைத் தொடும் மேற்சட்டையோடு சிறுவர்கள். ஆண்களின் சட்டையோடு பெண்கள். மிக இறுக்கமாகவும் அதிகத் தளர்வாகவும் பல. கிழிந்தும் நைந்தும் பல.

கிராமப்புறங்களில் ஆண்கள் கோவணத்துடன் இருப்பதும் இயல்புதான். ஆனால், பெண்கள் முழு உடையும் அணிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உடுத்திய உடையையே துவைத்துக் கட்டுவோர் உண்டு. வாரக் கணக்கில் துவைக்காமலே உடுத்துவோரும் உண்டு. அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஒருவரைப் பார்த்தேன். ஒன்றின் மீது ஒன்றாக விதவிதமான மூன்று சட்டைகளை அணிந்திருந்தார். கையில் அழுக்கான ஒரு துணி மூட்டை. அப்பாவின் உடையுடன் அண்ணன் - தம்பிகள். அம்மாவின் உடைகளுடன் அக்கா - தங்கைகள். பழைய துணி இருந்தா கொடுங்கம்மா எனக் கேட்கும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் மாதவிலக்குச் சமயத்தில் நாப்கின் வைக்கும் பழக்கம் இல்லாத பெண்கள், துணிகளையே பயன்படுத்துகிறார்கள். தேவையான துணி கிடைக்காத போது, சாம்பல், மண், புல் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

கோடைக் காலத்தைவிட குளிர் - மழைக் காலங்களில் இவர்களின் பாடு, மிகத் திண்டாட்டம் ஆகிவிடுகிறது. நள்ளிரவில் சாலையோரங்களில் நடுநடுங்கியபடி உடலை ஒரு பந்து போல் சுருட்டிப் படுத்துக் கிடக்கிறார்கள். மழையும் பெய்யுமானால் நனைவதைத் தவிர வேறு வழியில்லை. ஒதுங்கும் இடங்களிலும் சாரல் விடாது வந்து பற்றும். அவ்வாறு நனைந்தால் அது தானாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ஏற்படும் உடல்நலக் குறைகள், மன அவதிகள், சுற்றுச்சூழல் கேடுகள் அநேகம்.

சுனாமி வந்த போது நம் மக்கள், தங்கள் பழைய உடைகளைத் தானமாக அளித்தார்கள். நானும் எனது சில ஆடைகளை எழும்பூருக்கு எடுத்துச் சென்று அளித்தேன். புயல், வெள்ளம், பூகம்பம்... போன்றவை நிகழும்போது இவ்வாறான தானங்கள் நிகழ்கின்றன. ஆனால், பல பகுதிகளில் ஒவ்வொரு குளிர் - மழைக் காலமும் வருடாந்தர இயற்கைப் பேரழிவாகவே அமைந்துவிடுகின்றன. ஏழைப் பெண்களுக்கு மாதவிலக்கு, மாதாந்தர இடராக அமைகிறது. இவற்றைக் களைய, இவர்களின் நிலையைப் பல மடங்குகள் மேம்படுத்த, நமக்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது. நம் பழைய உடைகளை இவர்களுக்குக் கொடுத்தால் போதும். இவர்களின் பல துன்பங்கள் நீங்கும். இதற்கான முயற்சியை கூன்ச் (Goonj) என்ற அமைப்பு, இந்திய அளவில் மேற்கொண்டுள்ளது. இந்தச் சொல்லுக்கு எதிரொலி என்று பொருள்.

அரியானாவின் ஃபரிதாபாத் நகரில் வசிக்கும் அன்ஷூ குப்தா என்பவரின் முயற்சியால் இந்த ஆடை தான இயக்கம் தொடங்கியது. அவர் தன் அளவில் திரட்டிய 67 ஆடைகளுடன் தொடங்கிய இந்த இயக்கம், இன்று மாதத்திற்கு 40 ஆயிரம் கிலோ பொருட்களை இந்தியா முழுவதுமிருந்து தானமாகப் பெற்று, உரியவர்களுக்கு அனுப்பி வருகிறது. இதில் 300 தொண்டர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்தப் பணியின் ஒரு பகுதியாக, வஸ்திர தானம் என்ற புதிய முயற்சியை இவர் மேற்கொண்டுள்ளார். கொடுப்பதில் மகிழ்ச்சி அடையும் வாரத்தில் (Joy of Giving week - செப். 27 - அக். 3), இந்த முயற்சியையும் இவர் இணைந்து நடத்துகிறார்.

சுனாமி நிவாரணத்திற்காக வந்த ஆடைகளில் 20 லட்சம் ஆடைகள், பயனற்றவை எனக் கருதப்பெற்று விநியோகிக்கப்படாமல் கிடந்தன. அவற்றை கூன்ச் அமைப்பானது, மறுசுழற்சி செய்ய முயன்றது. 50 பெண்கள், 2 ஆண்டுகள் முயன்று அந்த ஆடைகளைப் பல்வேறு பயனுள்ள பொருட்களாக மாற்றினர். பள்ளிக்கூடப் பைகள் முதல் நாப்கின்கள் வரை பல பொருட்களை உருவாக்கினர். பழைய கழிவு என ஒதுக்கப்பெற்ற ஒரு பொருளானது, இன்னொருவருக்குப் புதிய பொருளாக மாறியது.

அதே போல் நகர்ப்புறப் பள்ளி மாணவர்களின் உடைகளைக் கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் திட்டத்தினையும் இந்த இயக்கம் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குத்தம்பாக்கம் ஊராட்சியைச் சுற்றியுள்ள 18 பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு இத்தகைய ஆடைகள் வழங்கப்பெற்றுள்ளன. இதற்கு அந்த ஊராட்சியின் தலைவர் இளங்கோ உறுதுணையாக இருந்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள வாவிபாளையம் கிராமத்தில் வேலைக்கு ஆடை என்ற திட்டத்தினையும் இந்த இயக்கம் நடைமுறைப்படுத்தியது. வேலைக்கு உணவு என்பது போல், இங்கு கிராம மேம்பாட்டுக்குப் பணியாற்றும் மக்களுக்கு ஆடைகள் வழங்கப்பெற்றுள்ளன.

இந்தியாவின் 21 மாநிலங்களில் பரவியுள்ள இந்த இயக்கம், ஆடைகளுடன் நின்றுவிடாமல் காகிதங்கள், பொம்மைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட இதர பொருட்களையும் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருவர் தமக்குத் தேவையில்லை எனக் கருதும் எதையும் இந்த அமைப்பிடம் அளிக்கலாம். இதன் மூலம் பள்ளிக்கூடப் பைகள், முகாம் கூரைகள், பாய்கள் போன்றவற்றைக் கிராமப்புறங்களிலும் நவீன பைகள், யோகாசன விரிப்புகள், பணப் பைகள் போன்றவற்றை நகர்ப்புறங்களிலும் விநியோகித்து வருகிறது. இந்தப் பெரும் முயற்சியில் நாடு முழுவதும் ஆடை சேகரிப்பு மையங்களை அமைப்பது, சேகரித்த ஆடைகளை பல ஊர்களுக்கும் அனுப்புவது, அவற்றை மறுசீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த இயக்கத்தின் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நன்கொடைகளையும் வரவேற்கிறார்கள்.

இவர்கள் நம்மிடம் கேட்பது, நம் பழைய ஆடைகளை. நம்மால் அணிய முடியாத அளவு சிறிதாகிவிட்ட ஆடைகள், நமக்குப் பிடிக்காத வண்ணத்தில் அமைந்த ஆடைகள், கிழிந்தவை... எனப் பல நம்மிடம் இருக்கலாம். ஆடையின் எந்த ஒரு சிறிய பகுதியும் மறு சுழற்சிக்கு உரியவை. அவற்றுக்கு நிறைய பயன்பாடுகள் உண்டு என்பதை இவர்கள் நிரூபித்துள்ளார்கள்.

இந்த அமைப்பின் சென்னை முகவரி இதோ:

செல்வி ஆல்கா பி ஆரோன்,
ஒருங்கிணைப்பாளர்,
கூன்ச், c/o சேவா சமாஜம் சிறுவர் இல்லம்,
75, பஜனை கோயில் தெரு,
பள்ளிப்பட்டு (அடையாறு அருகில்),
சென்னை - 600113
செல்பேசி: 9840446137
மின்னஞ்சல்: olgagoonj@gmail.com; olga.aaron@gmail.com
இணைய தளம்: http://www.goonj.org

ஒவ்வொருவரும் தனித்தனியே சென்று அளிக்க வேண்டும் என்பதில்லை. ஒருவர் தம் தெருக்களில் உள்ள உடைகளைச் சேகரித்து, மொத்தமாகவும் கொண்டு வந்து தரலாம். ஆண்டு முழுவதும் இந்த முகவரியில் நம் பொருட்களைச் சேர்ப்பிக்கலாம். தானம் என்பது நமக்கு இயல்பானது, நம் மரபிலேயே அமைந்தது, நம் மதங்கள் இதை வலியுறுத்துகின்றன. அன்ன தானம், கல்வி தானம், ரத்த தானம் என எவ்வளவோ தானங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் இவ்வாறான இயக்கங்கள் அமைந்தால் நன்றாகத்தான் இருக்கும். இதோ நம் முன் உடைதான இயக்கம், இரு கரம் நீட்டி நிற்கிறது.

அதோ அவர்கள், மானம் காக்கவும் குளிரைத் தாங்கவும் இரு கரங்களைத் தம் நெஞ்சின் குறுக்கே வைத்துள்ளார்கள். நாம் வழங்கும் ஆடையால், அவர்களின் இதழ்களில் ஒரு புன்னகை மலர்கிறது. அதோ அவர்கள் கனிந்த பார்வையுடன் நமக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். அதை அணிந்து அவர்கள் வீதியில் துணிவோடு நடக்கிறார்கள். அவர்கள் தலை நிமிர்ந்து நடப்பதைப் பார்ப்பதில் நமக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

4 comments:

செந்தழல் ரவி said...

நல்ல முயற்சி. என்னாலானதை செய்கிறேன்...!!!!!!!

Anonymous said...

மக்கள் சேவையே மகேசன் சேவை
என்ற நம் முன்னோர் முது மொழியை மறந்த
எமக்கு அடுத்தவர் வந்து அதனை நினைவு
செய்ய வேண்டுமென்பதை நினைக்கையில்
எம்மீதே பரிதாபமாக இருக்கிறது,

நல்ல பதிவு அண்ணா கண்ணன்.

நல்லதே நடக்கட்டும்,

தங்க முகுந்தன் said...

அருமையான தகவலும் பதிவும்!

இலங்கையில் 1977 ஆடிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட எமக்கு கிடைத்ததும் இந்தப் பழைய உடுப்புக்களே! அடுத்தவர் பாவித்திருந்தாலும் அது ஒன்றுமில்லாதவனுக்கு பெரும் பாக்கியமே! உணர்வுபூர்வமாக நான் பட்ட அனுபவத்தில் எழுதுகிறேன் - ஈழத்திலும் இன்று இப்படிச் செய்தால் பலர் நன்மையடைவார்கள்! நன்றி!

ராஜா | KVR said...

கண்டிப்பாக என்னால் இயன்றதைச் செய்கிறேன். பிற நண்பர்களிடமும் சொல்கிறேன்.