எனது தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் (2009 அக்.5 முதல் 11 வரை) 20 இடுகைகளை இட்டுள்ளேன். இந்த ஒரு வார காலத்தில் மூவாயிரத்திற்கு மேலானோர் வந்துள்ளதாகக் கூகிள் ஆட்சென்ஸ் கூறுகிறது. இந்த இடுகைகளுக்கு இதுவரை சுமார் 70 பின்னூட்டங்கள் வந்துள்ளன.
என் வலைப்பதிவுகளில் அவ்வப்போது எழுதி வந்தேன். வேறு இணைய தளங்களில் எழுதியதை என் வலைப்பதிவில் பல முறைகள் மீண்டும் பதிந்துள்ளேன். புதிது புதிதாக எழுதுவதற்கு ஒரு புறத் தூண்டுதல் தேவையாக இருந்தது.
இந்நிலையில் தமிழ்மணத்தின் நட்சத்திர அழைப்பு வந்தது, எனக்குள் மீண்டும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. ஏற்கெனவே எழுதியதை எடுத்து மீண்டும் வெளியிடாமல் புதிதாக எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த இடுகைகளை எழுதினேன்.
எனக்குள் ஊறும் யோசனைகள் பலவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். இப்படியான ஒரு முகம் எனக்கு உண்டு என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆயினும் சிபியில் பணியாற்றிய போது, தினந்தோறும் ஏதேனும் புதிய புதிய யோசனைகளை அங்குள்ள நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தது உண்டு. என் தொழில், துறை காரணமாக இந்தச் சிந்தனைகளைக் கண்டுபிடிப்புகளாக மாற்றும்வண்ணம் இவற்றில் முழு நேரத்தையும் செலவிடுவது கடினம். இந்த யோசனைகள் யாரையாவது உசுப்பிவிடும். அவர், இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக அந்தப் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார் என நம்புகிறேன்.
என்னை இந்த வார நட்சத்திரமாக்கிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றிகள். என்னை வாழ்த்தியும் என் இடுகைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தும் பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் நன்றி. தனி அஞ்சலிலும் மின் அரட்டையிலும் தொலைபேசியிலும் இந்த இடுகைகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. இன்னும் எழுதவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. உரிய தருணத்தில் அவற்றையும் பதிவேன்.
திருவாரூரில் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்னுடன் 10ஆம் வகுப்புப் படித்த ஹாஜா என்பவர், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு , தமிழ்மணத்தில் என்னைப் பார்த்துவிட்டு, 09.10.2009 அன்று சிங்கப்பூரிலிருந்து தொடர்புகொண்டார். இதே போல் இதே பள்ளியில் என்னுடன் 11, 12 வகுப்புகள் படித்த ரவிசங்கர் என்பவர், என் ஏதோ ஒரு வலைப்பதிவைப் பார்த்துவிட்டு, 2006இல் சைப்ரஸ் நாட்டிலிருந்து தொடர்புகொண்டார். அவர் மூலமாக அதே வகுப்பில் உடன் படித்த பிரேம் என்ற நண்பருடனும் பேச வாய்ப்பு கிட்டியது. இணையத்தின் இந்த வலிமை, எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.
பழைய நண்பர்கள் மட்டுமின்றி, இணையத்தின் மூலம் புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புதிய கூட்டாளிகள் வாய்ப்பார்கள். புதிய உறவுகள் கிட்டும். யாருக்குத் தெரியும்? என் வாழ்க்கைத் துணைவியும் இங்கே கிட்டலாம். அன்போடும் பண்போடும் புன்னகை பூத்த முகத்தோடும் சைவ உணவினராகவும் உள்ள அவரை நீங்கள் எங்காவது பார்த்தால் எனக்குத் தனி மடலில் தெரிவியுங்கள் :-)
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, October 12, 2009
உறவுகள் வளர்க்கும் உன்னத இணையம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:42 AM
Labels: இணையம், நட்சத்திர வாரம், வலைப் பதிவுகள், வலைப்பதிவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாழ்த்துக்கள்! எல்லாவற்றுக்கும்தான்!
நட்சட்திரமாகவே ஜொலித்து தமிழ் மழை பொழிந்து விட்டீர்கள் அண்ணா. தங்கள் உள்ளத்தில் இல்லம் புகப்போகும் இல்லத்தரசி ஒருவர் கண்டிப்பாக கவனித்திருப்பாள். வழிமீது விழியுடன் காத்திருங்கள் - குறுகிய காலத்திற்குள் நடந்திட இறை அருளிட பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள்.
சுவைபட தமிழருவி கொட்டிய ஒருவாரத்தில் உங்களிமிருந்த யோசனைகள் அனைத்தும் புதிய சிந்தனைகளை தூண்டச் செய்தவை. வாழ்த்துக்கள் அண்ணா கண்ணன்.
//அன்போடும் பண்போடும் புன்னகை பூத்த முகத்தோடும் சைவ உணவினராகவும் உள்ள அவரை நீங்கள் எங்காவது பார்த்தால் எனக்குத் தனி மடலில் தெரிவியுங்கள் :-)//
விளம்பரம் கொடுத்துடுவோம் :)
நீங்க ரொம்ப நல்ல எழுதறிங்க...
Would you like to see more people visit your blog? Visit www.zeole.com
நீங்க உங்க ப்ளாகை அங்க வந்து விள்ளம்பரம் செய்து பாருங்க. சென்னை மாநகரம் முழுவதும் உங்க ப்லோக் பிரபலம் ஆகா வைப்பு இர்ருக்கு.
:)
Post a Comment