!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பிறந்த நாள் கொண்டாடுவது எப்படி? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, October 11, 2009

பிறந்த நாள் கொண்டாடுவது எப்படி?


தமிழ்நாட்டில் பிறந்த நாள் கொண்டாடுவது, மெழுகுவத்திகளை அணைத்து, கேக் வெட்டுவதுதான் என்பது போல் ஒரு பொதுவான நியதி ஆகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நான் கண்டுவரும் ஒரு காட்சி இது. கொஞ்சம்கூட மாறவில்லை. ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கொண்டாடுபவர் மாறுவார். அவரின் புத்தாடை மாறியிருக்கும். ஆனால் இந்த கேக் வெட்டுவது மட்டும் மாறாது. அந்த கேக்கில் அவரின் பெயர் வரையப்பட்டிருக்கும். அதுவும் ஆங்கிலத்தில். கேக் வெட்டும்போது Happy birth day to you என்ற பாடலைப் பாடுவார்கள். மெழுகுவத்தியை அணைப்பார். கத்தியை எடுத்து கேக்கை வெட்டுவார். அதைத் தன் அன்புக்கு உரியவருக்கு ஊட்டுவார். அல்லது சிலர் அவருக்கு ஊட்டுவார்கள்.

நிறுவனங்களில் மட்டுமின்றி, கிறிஸ்தவ வீடுகளில் மட்டுமின்றி, சாமானியர் வீடுகளிலும் இந்த நடைமுறை புகுந்துள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஒருவரை அழைக்கிறீர்கள் என்றால், அவர் கேட்பது 'எத்தனை மணிக்கு கேக் வெட்டுறீங்க?' என்பதைத்தான். 'நேத்து எங்க வீட்டுப் பையனுக்குப் பிறந்த நாள் கொண்டாடினோம்' என யாரிடமாவது சொன்னால், உடனே, 'அப்படியா, கேக் எல்லாம் வெட்டினீங்களா?' என்றுதான் கேள்விகள் அமைகின்றன. தமிழரின் பிறந்த நாள் கொண்டாட்டம், கேக் வெட்டுவதுதானா?

முன்பு வீடுகளில் இனிப்பு தயாரித்து வழங்குவர்; பாயசம் செய்து பரிமாறுவர்; பெரியவர்களிடம் ஆசி பெறுவர்; ஆலயங்களுக்குச் செல்வர்; அன்ன தானம் செய்வர்; பெரிய செல்வந்தர்கள் வேறு பல தானங்களும் செய்வர்; ஏதேனும் திரையரங்குக்கோ, சுற்றுலாத் தலத்திற்கோ செல்லுவர்; அன்பளிப்புகள் வழங்குவர்.

ஆனால், இப்போது பெருகியுள்ள இந்த கேக் கலாசாரத்தில் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் ஆபாச நடனங்களும் பெரிய உணவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்து அளிப்பதுமாக உடல்நலக் குறைவும் ஆடம்பரமும் காலூன்றி வருகிறது. 'என்ன மச்சி, பார்ட்டி எப்போ?' எனக் கேட்கிற நண்பர்கள், 'பார்ட்டி'யின் போது முட்ட முட்டக் குடித்துவிட்டு, அத்துடனே வாகனத்தை ஓட்டி, விபத்தில் உறுப்புகளையும் உயிரையும் இழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கேக் வெட்டியபின் சுற்றியுள்ள நண்பர்கள், அந்த கேக்கை எடுத்து, பிறந்த நாளுக்கு உரியவரின் முகத்திலும் தலையிலும் தேய்த்துவிடுகிறார்கள். இப்படித்தான் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்களாம். எவ்வளவோ ஏழைகள் பசித்திருக்க, கடவுள் சிலைக்குப் பாலபிஷேகம் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. உணவுப் பொருளை எந்த வடிவில் வீணடித்தாலும் அது கண்டிக்கத்தக்கதே.

காதல் ஜோடிகள், ஒருவர் முகத்தில் இன்னொருவர் கேக்கைத் தடவி, பின்னர் தங்கள் நாவால் அதைத் துடைத்து உண்பது என்பதை என்னால் ஒரு வகையில் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் உள்ள பயனே, இன்பமே வேறு. இப்படி நண்பர்கள் கேக்கைத் தடவிவிடுவதால் என்ன பயன்? சிலர், சட்டையிலும் தேய்த்து விடுகிறார்கள். அதைத் தூய்மைப்படுத்துவது இன்னொரு சிக்கல்.

வெகு சிலரே அநாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள். ஒரு பொழுது உணவை வழங்குகிறார்கள். அல்லது அதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்புப் பயிற்சி, தொழிற்கருவிகள் வழங்குதல்.... எனப் பல நற்பணிகளையும் ஆற்றுகிறார்கள். நம்மால் முடிந்த வரை, இப்படி பிறந்த நாள்களைக் கொண்டாடினால், நல் உள்ளங்கள் மகிழ்ந்து வாழ்த்துமே.

==========================
படத்திற்கு நன்றி: http://www.theinsider.com

3 comments:

cheena (சீனா) said...

நல்ல சிந்தனை - செயல்படுத்த வேண்டும் - முயன்றால் முடியாதது இல்லை

நல்வாழ்த்துகள்

Simulation said...

தங்களுக்கு என்னுடைய இந்தக் கதை பிடிக்குமென்று நம்புகின்றேன்.

http://simulationpadaippugal.blogspot.com/2009/08/blog-post.html


- சிமுலேஷன்

முனைவர் அண்ணாகண்ணன் said...

சிமுலேஷன், உங்கள் கதை மிக நன்று. வெளிநாட்டுப் பல்கலைகள், தமிழ் வாழ்வியலில் ஆர்வம் காட்டுவதும் நம் மக்கள், மேலை மோகத்தில் தலைகீழாக நடப்பதும் ஒரு முரண் நகை.