!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> யோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது எப்படி? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 10, 2009

யோசனை 5 - உயர்ந்த கட்டடங்களின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது எப்படி?

(அகவழி 5)


சென்னையிலேயே 20 மாடிகள் கொண்ட கட்டடங்கள் வரத் தொடங்கிவிட்டன. மக்கள் நெருக்கடி மிகுந்த மாநகரங்களில் 100 மாடிகளைத் தாண்டியும் கட்டடம் கட்டுபவர்கள் உண்டு. கட்டடம் மட்டுமல்லாது, உயர் கோபுரங்கள் பலவும் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டுமானமே மிகப் பெரிய சவால்தான். எனினும் கட்டி முடித்த பின் இவற்றின் வெளிப்புறங்களைத் தூய்மையாக்குவது இன்னொரு சவால்.

பலரும் இப்போது செய்வது என்ன? அந்தக் கட்டங்களின் உச்சியிலிருந்து இரும்புக் கயிறு ஒன்றினைத் தொங்கவிடுவர்; அதில் ஓர் இருக்கையையும் அமைப்பர். அதில் தொழிலாளி ஒருவரை உட்காரவைப்பர்; அவர் கையில் வழிக்கும் குச்சி ஒன்றைத் தருவர்; அந்த இரும்புக் கயிற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்குவர்; ஏற்றுவர்; ஒவ்வொரு தளமாக அவரும் தூய்மை செய்வார். முழு உயரத்தையும் தூய்மை ஆக்கியதும் அவர் தரையில் இறங்கலாம்; அல்லது மீண்டும் கயிற்றினை மேலே இழுத்துக்கொண்டு, அவர் கட்டட உச்சியில் போய் இறங்கலாம்.

அடுத்த வாய்ப்பு, ஒருவர் மட்டுமின்றி, பலர் ஒரே நேரத்தில் தூய்மைப் பணி புரியலாம். இதிலும் இரும்புக் கயிறு உண்டு. அதே நேரம் மனிதர் நிற்பதற்கு அகண்ட தளம் கொண்ட தொட்டி போன்ற அமைப்பு இணைக்கப்பட்டிருக்கும். இதிலிருந்தும் அதே மாதிரி வழிப்பானைத் தண்ணீரில் நனைத்துத் துடைக்க வேண்டும்.

இன்னொரு வாய்ப்பு, கிரேன் போன்ற மின் தூக்கியில் ஒருவரை ஏற்றி, அவரைத் தேவையான இடத்தில் எல்லாம் நிறுத்தித் துடைக்க விடுவது. இது, பெரும்பாலும் தரையிலிருந்து சில மாடிகள் உயரம் கொண்ட கட்டடங்களுக்கு உதவும்.

இந்தப் பணியில் தொழிலாளியின் பாதுகாப்பு ஒரு கேள்விக் குறி. அவர் சற்று கவனக் குறைவாக இருந்தாலும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. அதே போன்று இதற்கு ஆகும் நேரமும் செலவும்கூட அதிகம்தான்.

இதற்கு நான் ஒரு மாற்று யோசனையை முன்வைக்கிறேன்.



இதற்குச் சிலந்தி எந்திரம் (Spider Robot) ஒன்றினைப் பயன்படுத்த வேண்டும். இதற்குக் குறைந்தபட்சம் எட்டுக் கால்கள் இருக்க வேண்டும்; அதற்கு மேலும் இருக்கலாம்; அவை எந்தத் தளத்தையும் இறுகப் பற்றிக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். சுற்றியுள்ள நான்கு கால்கள் பற்றிக்கொள்ளவும் நடுவில் உள்ள நான்கு கால்கள் சுழன்று தூய்மைப்படுத்தலாம். அடுத்து, நடுவில் உள்ளவை பற்றிக்கொள்ள, சுற்றிலும் உள்ளவை சுழன்று தூய்மைப்படுத்தலாம்.



ஒவ்வொரு காலும் ஒரு தூரிகை (பிரஷ்) போல் இருக்க வேண்டும். அவை, இடப்புறமும் வலப்புறமும் சுழலும்வண்ணம் அமைய வேண்டும். மார்பிள் கற்களைப் பாலிஷ் செய்யும் எந்திரத்தை நினைவுகொள்ளுங்கள். அவற்றின் தன்மையுடன் இந்தச் சிலந்தியின் கால்கள் அமைய வேண்டும். இது, மிக மிக எடைக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

இந்தச் சிலந்தியானது எவ்வளவு உயரமான கட்டடத்தையும் தூய்மைப்படுத்தப் போதுமானது. குறிப்பிட்ட ஒரு திசையில் நேர்க்கோட்டிலோ, படுக்கை வாட்டிலோ இந்தச் சிலந்தியை ஏவிவிடலாம். கற்களால், கண்ணாடியால், பிளாஸ்டிக்கால், அலுமினியத்தால் கட்டப்பட்ட எந்த ஒரு கட்டுமானத்தையும் இத்தகைய சிலந்தியால் தூய்மைப்படுத்த முடியும். ஒருவேளை கட்டடத்தின் நடுவில் சில மேடுகள், பள்ளங்கள் இருக்குமானால், அதில் இந்தச் சிலந்தி ஏறி இறங்குமாறு செய்யலாம். திரட்டிய அழுக்குகளைச் சேகரித்து வைக்க இந்தச் சிலந்தியின் முதுகில் தனியே ஒரு கூடு இருக்க வேண்டும். அந்த அழுக்குகளையும் அழுத்தி(compress), மேலும் அதிக இட வசதியைப் பெற வைக்கலாம். ஒரு கூட்டில் அழுக்குகள் நிறைந்தவுடன், இன்னும் சில கூடுகள் புதிதாக பலூன் போல் முளைக்குமாறு செய்யலாம். அல்லது, இன்னொரு சிலந்தி சென்று அந்த அழுக்குக் கூட்டினைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு, தன்னிடம் உள்ள ஒரு வெற்றிடமான கூட்டினை அதற்குத் தரலாம்.

கட்டட வெளிப்புறம் மட்டுமில்லாது, சமதளத்தையும் தூய்மைப்படுத்த இந்தச் சிலந்திகள் உதவும்.

=======================================

படத்திற்கு நன்றி:

http://guangzhou.yoolk.com

http://www.lattaequipment.com

http://www.technostuffs.com

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

சிலந்தி ரொம்ப விலையோ....

வடுவூர் குமார் said...

மேற் காண்பித்த முறை பலமுறை சோதனை செய்யப்பட்டே செயல்படுத்தியிருக்கிறார்கள்.தற்கொலையை தவிர கீழே விழுவது அவ்வளவு எளிதல்ல.
அவனவன் வேலையை தக்க வைத்துக்கொள்ள படாதபாடு படும் போது இயந்திரதனம் எல்லா இடங்களில் நுழைப்பது சுலபமல்ல.முடியாததல்ல பொருளாதார ரீதியில் மிகவும் செலவு பிடிக்கக்கூடியது உங்கள் சிலந்தி ஐடியா.