!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு!!??? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, October 09, 2009

பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு!!???



அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பெற்றுள்ளது, பலருக்கும் வியப்பையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

உலக நாடுகளுக்கு இடையே அரசுமுறை உறவை வலுப்படுத்துவதிலும், மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் அவரது அசாதாரண முயற்சிகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்திருக்கிறது. அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவதில் அவரது முயற்சிகளையும் இந்தக் குழு பாராட்டியுள்ளது.

இதற்காகப் பரிந்துரைக்கப்பெற்ற 205 பெயர்களிலிருந்து ஒபாமாவைப் பரிசுக் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். 20.01.2009 அன்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஒபாமாவுக்கே இந்தச் செய்தி, வியப்பை அளிக்கலாம்.

அவர் சில முயற்சிகளை முன்னெடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குவான்டனோமோ பே என்ற சிறைச்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டார். ஈரானுடன் நட்புறவு பாராட்டினார்; ஆப்கானிஸ்தானில் இராணுவத் தலைவரை மாற்றினார்; மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலியர்களைக் குடிவைப்பதை நிறுத்தும்படி அவர் கூறினார்; இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தார்...... எனப் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த அவர் சில நல்ல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இந்த முயற்சிகளுக்குப் போதிய பயன் கிட்டவில்லை என்பதே உண்மை.

அவர் கூறினார் என்பதற்காக எந்த நாடும் எந்தத் தலைவரும் செவிசாய்க்கவில்லை. அவருடன் பல சிக்கல்களில் அவரின் நாட்டினரே சரியாக ஒத்துழைக்கவில்லை. வெளியுறவுத் துறையைப் பொறுத்த வரையில் அவர் செயல்களை மிகப் பெரிய சாதனை என்று குறிப்பிட இயலாது. சில முன்னெடுப்புகள் மட்டுமே. இதற்காகவா அமைதிக்கான நோபல் பரிசு?

விழிப்புணர்வு ஊட்டுதல், நல்லுறவை வளர்த்தல் போன்ற சிலவற்றை அளவிடுதல் கடினம். எவ்வளவு பேர் இதனால் பயன் பெற்றனர்? பயன் பெற்றவர்கள் எவ்வளவு நேரத்திற்கு அல்லது காலத்திற்கு அந்த விழிப்புணர்வுடன் விளங்கினர்? இவற்றை எல்லாம் அவ்வளவு எளிதில் அளவிட இயலாது. இந்த நிலையில் பரிசுக் குழுவினர் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தோராயமான மதிப்பீடுகளைக் காட்டிலும் தெளிவான மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையத்தின் பசுமை கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தமிழகம் முழுவதும் 11 கோடியே 4 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தில் 2009 ஜூலை வரை 71 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பும் பல நாட்டு மக்களைக் கவர்ந்துள்ளது; லட்சக்கணக்கானோரின் மனத்தில் அமைதியைக் கொணர்ந்துள்ளது.

இத்தகைய முயற்சிகள், தெளிவான மதிப்பீடுகளைக் கொண்டவை. இவ்வளவு ஆண்டுகளில் இவ்வளவு பேரைப் பாதித்துள்ளது என்ற விவரம் கிடைக்கும். இத்தகைய முயற்சிகளுக்குத் தேர்வுக் குழுவினர் முன்னுரிமை அளித்திருக்கலாம்.

ஒபாமா பதவியேற்ற ஒன்பதே மாதங்களில் இந்தப் பரிசினை வழங்கியது, ஒரு மிகையான அங்கீகாரம். இதனை அவர் ஆற்றிய பணிகளுக்கு வழங்குவதாக நான் கருதவில்லை; இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு முன்கூட்டியே வழங்கியதாக வேண்டுமானால் கருதலாம் (Many Nobel watchers believed it was too early to award the president.)

இப்படி ஒரு விருது வழங்கியதால், இனி அவர் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயங்குவார்; போர்களுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவார்; இன்னொரு நாட்டிற்கு ஆயுதங்களை விற்கும்போது கொஞ்சம் யோசிப்பார்; பிற நாட்டின் இறையாண்மையை மதிப்பார்; சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளுடன் தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கலாம்.

இந்தப் பரிசின் மூலம் ஒபாமாவுக்குப் பொறுப்பு கூடியிருக்கிறது. அவருக்கு மட்டுமின்றி, அமெரிக்க அரசுக்கும் உளவு அமைப்புகளுக்கும் பொறுப்பு கூடியிருக்கிறது. இனியாவது அவை, அடக்குமுறைகளை ஏவாமல் இருக்க வேண்டும். பிற நாட்டின் வளங்களைக் கொள்ளையிடாமல் இருக்க வேண்டும். 'உலக அமைதி' என்ற அடர்த்தியான சொல்லுக்கு உரிய பொருளை, மிகுந்த பொறுப்புடன் தேடத் தொடங்க வேண்டும்.

மகாத்மா காந்தியைத் தம் மனம் கவர்ந்த தலைவர் என்று ஒபாமா குறிப்பிட்டார்; அவர் வழியில் தொடர்ந்து நடை பயில, ஒபாமாவிற்கு இந்த விருது உற்சாகம் ஊட்டட்டும்.

==================================

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

7 comments:

குப்பன்.யாஹூ said...

it is a correct decision. Obama deserves to receive the Nobel Prize.

மங்கை said...

//"பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு!!???"//

எனக்கும் ஏத்துக்க முடியலை

Anonymous said...

அடப் பாவி;நோபல் கமிட்டிக்கும் கீழ்த்தரமான திராவிட கருப்பு சட்டை,கலாசாரத்தின் பாதிப்பு ஏற்பட்டு விட்டதா?மஞ்ச துண்டுக்கு ஏகப்பட்ட விருதுகள்,பட்டங்கள் வழங்கப்பட்டதைப் போல் பரிசு கொடுத்து ஜல்லி அடித்திருக்கிறார்கள்.கேவலம்.

அமுதா கிருஷ்ணா said...

எதிர்காலத்தில் அமெரிக்கா எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் மூக்கை நுழைக்காமல் இருக்க இந்த நோபல் பரிசா????

Karthick said...

உங்கள் கருத்தும் என் கருதும் ஒன்றுதான் வார்த்தைகள் தான் வேறு. இதையும் படியுங்களேன்.
http://eluthuvathukarthick.wordpress.com/

typedef uchar_t pluto; said...

அடுத்த ஆண்டு ஒசாமா, தாம் தீவரவாதத்தை நிறுத்திக்கொள்ளப்போவதாக வாய் உதார் விட்டால்கூட, அவருக்கும் ஒபாமாவைபோல் நோபல் பரிசு வழங்கவேண்டும். :)
இப்போதைக்கு ஒபாமாவும் வாய் உதார் மட்டுமே விட்டிருக்கிறார், செயலில் ஒன்றுமில்லை..

Anonymous said...

CLICK AND READ

5 தடவை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டும் மகாத்மா காந்திக்கு பரிசு கிடைக்காமல் போனது ஏன்?

****************