!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, October 07, 2009

இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன?

9ஆவது உலகத் தமிழ் மாநாட்டினைக் கோவையில் நடத்தத் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இத்தகைய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரை என்பது ஒரு சிறு பகுதியாகி, கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், அலங்கார வாகன அணிவகுப்பு, ஊர்வலம்.... உள்ளிட்ட பல்வேறு கூறுகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இத்தகைய நிகழ்ச்சிகளால் மக்கள் பங்கேற்பு கூடலாம். சுற்றுலாவுக்குச் செல்வது போல் அவர்கள் புறப்பட்டு வரலாம். ஆனால், இத்தகைய மாநாட்டினால் தமிழுக்கு என்ன பயன் என்பது ஒரு கேள்விக் குறியே.

என் கண்ணோட்டத்தில் இக்காலத் தமிழின் தேவைகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

1. தமிழக அரசின் அனைத்து இணையதளங்களையும் ஒருங்குறிக்கு மாற்றிட வேண்டும். ஒருங்குறியைத் தமிழக அரசு தன் அதிகாரபூர்வ குறியீட்டு முறையாக ஏற்க வேண்டும். அதற்கு உலக மொழிகள் பட்டியலில் உரிய இடங்களைப் பெறத் தொடர்ந்து முயல வேண்டும்.

2. தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்தையும் கணினிமயம் ஆக்க வேண்டும். அத்துடன் அந்தக் கணினிகளில் கட்டற்ற மென்பொருள்களின் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். இவற்றைப் பயன்படுத்தும் வண்ணம் அரசு ஊழியர்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள், கல்லூரிகளிலும் இது குறித்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாகத் தமிழில் மென்பொருள்களை உருவாக்கிடவும் ஏற்கெனவே உள்ள மென்பொருள்களைத் தமிழில் பெயர்க்கவும் ஆயிரக்கணக்கான தன்னார்வக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

3. ஒலி பெயர்ப்பு முறைகளைத் தரப்படுத்த வேண்டும். சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது........ எனப் பற்பல மொழிகளின் சொற்களைத் தமிழில் எழுதும் போது, எவ்வாறு எழுத வேண்டும் என்பதற்குப் பொதுவான நெறிமுறைகளை வகுத்திட வேண்டும். அதே போன்று தமிழிலிருந்து வேறு மொழிகளுக்கு ஒலிபெயர்க்கும் போது எவ்வாறு பெயர்க்க வேண்டும் என்பதற்கும் மொழிவாரியாக வழிகாட்டு நெறிமுறைளை வகுக்க வேண்டும்.

4. துறைவாரியாக, தொழில்வாரியாகப் புதிய கலைச்சொற்களை உருவாக்கி, ஒத்த தரத்துடன் நிலைநிறுத்த வேண்டும். சொற்களுக்கு வரிசை முறையை அளிக்க வேண்டும். புதிய சொல்லாக்கங்களை வெகுமக்களிடம் எடுத்துச் செல்ல, நீண்ட கால நோக்கில் திட்டங்களை வகுக்க வேண்டும். முதலில் அரசு அவற்றைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். பிறகு பள்ளி / கல்லூரிகளின் பாடத் திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள், நற்றமிழில் எழுதுவதுடன் இவ்வாறுதான் பேச வேண்டும் என வலியுறுத்தலாம். எடுத்துக் காட்டிற்கு, பேருந்தில் நடத்துநர் 'டிக்கெட், டிக்கெட்' எனக் கூறாமல், 'பயணச் சீட்டு எடுங்கள்' எனக் கேட்க வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்களையும் இவ்வாறு பேசச் செய்யலாம். இதற்கென துறைவாரியாக அரசு ஊழியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கலாம்.

5. CM, PM, CEO, CFO, BM, Oz, NZ, WI.......... என ஆங்கிலத்தில் எண்ணற்ற சுருக்கெழுத்துகள் உள்ளன. இவற்றை மொழிபெயர்க்கையில் தமிழில் நீளமாக எழுத வேண்டியிருக்கிறது. Chief Minister என்பதை ஆங்கிலத்தில் CM என்பர். ஆனால், தமிழில் முதல்வர் என்றே எழுத வேண்டியுள்ளது. இதனால் தலைப்பில் அதிக இடம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. எனவே, புதிய சுருக்கெழுத்துகளைத் தமிழில் உருவாக்கி, நிலைநிறுத்த வேண்டும். தமிழக அரசு என்பதை மாத்திரைகளில் 'த/அ' என எழுதினர்; சென்னை மாநகராட்சி என்பதைச் 'செ/மா' என எழுதினர். இவ்வாறு, ஒவ்வொரு பதவிக்கும் இடத்திற்கும் முக்கிய நபர்களுக்கும் தமிழில் சுருக்கெழுத்துகளை உருவாக்க முயல வேண்டும். அவ்வாறே அடையாளக் குறிகளையும் பிரபலப்படுத்த வேண்டும்.

6. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் மின்னணு வடிவில் மாற்றி, இணையத்தில் சேமிக்க வேண்டும் (காப்புரிமை உள்ளவற்றைத் தனியே வகைப்படுத்திச் சேமிக்கலாம். அவற்றை வாசிக்க மட்டும் கட்டணம் விதிக்கலாம்). அந்த நூல்களை ஒலி வடிவில் மாற்றிச் சேமிக்கவும் திட்டங்கள் வகுக்க வேண்டும். நூலகத்தைப் படிப்பதற்கு மட்டுமின்றி, கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வசதியானதாக மாற்றிட வேண்டும்.

7. தமிழில் உள்ள ஓலைச் சுவடிகள், பட்டயங்கள், கல்வெட்டுகள்... இன்னபிற தொல்லியல் சான்றுகள் அனைத்தையும் இணையத்தில் ஏற்றிட வேண்டும். தமிழின் அனைத்து வகை கலை - இலக்கிய - மரபுச் செல்வங்களையும் காத்திடத் தனித் துறை உருவாக்கப்பட வேண்டும். ஆவணக் காப்பகத்தைப் பெரிய அளவில் விரிவாக்க வேண்டும்.

8. தமிழகத்தில் உள்ள சிதிலம் அடைந்துள்ள, அடைந்து வருகிற கோயில்கள் அனைத்தையும் காத்திடச் சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். பெரிய கோயில்களை மட்டுமின்றி, பழைமை வாய்ந்த சிறிய கோயில்களையும் கவனிக்க வேண்டும். அவற்றினைப் புதுப்பித்து, தொடர்ச்சியாகத் தூய்மையும் அழகும் மரபும் பேண, ஊக்கமுள்ள குழுக்களை அமைக்க வேண்டும்.

9. தமிழில் பெயர் சூட்டும் வழக்கத்தை மக்களிடம் அதிகரிக்க வேண்டும். இதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கலாம். முக்கியமாக, முதலெழுத்துகளையும் தமிழில் வைத்துக்கொள்ளும் வழக்கத்தை மீண்டும் கொணர வேண்டும்.

10. தமிழ் வரிவடிவங்களைச் சீரமைக்க வேண்டும். தமிழ் எழுத்துகளில் ங, ஞ வர்க்க எழுத்துகளில் பல பயன்பாட்டில் இல்லை. அதே நேரத்தில் அயல் மொழிகளில் உள்ள சில ஒலிகளை உச்சரிப்பதில் தமிழுக்குச் சிக்கல் இருக்கிறது. இந்தப் புதிய தேவைகளை நிறைவுசெய்ய, தமிழ் வரி வடிவங்களை மறுசீரமைக்கலாம். தேவையெனில் சில புதிய எழுத்துகளையும் ஓசைகளையும் அறிமுகப்படுத்தலாம்.

11. இக்காலச் சூழலுக்கு ஏற்ப இலக்கண விதிகளைத் திருத்த வேண்டும். முக்கியமாக அயல் மொழிச் சொற்களுடன் சேர்த்துத் தமிழ்ச் சொற்களை எழுதும்போது எவ்வகையில் புணர்ச்சி விதிகள் அமைய வேண்டும்? வட்டார வழக்குச் சொற்களை எழுதுகையில் பின்பற்ற வேண்டிய இலக்கண விதிகள்? பேச்சுத் தமிழில் கொச்சையாக எழுதுகையில் பின்பற்ற வேண்டிய விதிகள் ஆகியவற்றை ஆராய வேண்டும்.

12. தமிழர்கள் புலம்பெயர்ந்ததன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நிலப் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். (பார்க்க: http://tinyurl.com/nlcbbo) தமிழரின் நிலங்கள், திணைகள், காலங்கள், தெய்வங்கள் உள்ளிட்ட பலவற்றில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இவற்றைக் கூர்ந்து கவனித்து, புதிய இலக்கண நூல் ஒன்றினை உருவாக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

13. பயன்பாட்டுத் தமிழ் என்ற பாடத்தில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்க வேண்டும். ஊடகம், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவு... உள்ளிட்ட சிலவற்றுடன் அறிவியல் - நுட்பங்களை மிக அதிக அளவில் சேர்க்க வேண்டும். அறிவியல் தமிழ் என்ற பதம், தமிழின் புதிய முகத்தினைக் காட்டக் கூடியது. அதையொட்டி, தமிழ் சார்ந்த வேலைவாய்ப்புகளை மிக அதிகமாக உருவாக்க வேண்டும்.

14. தமிழ் - தமிழ், தமிழ் - ஆங்கிலம், தமிழ் - இந்தி, தமிழ் - பிரெஞ்சு... ஆகிய அகராதிகளுடன் இன்னும் ஒரு 100 மொழிகளுக்காவது தமிழ் அகராதிகளை உருவாக்க வேண்டும். இந்திய மொழிகள் அனைத்திற்கும் தமிழ் அகராதிகளை உருவாக்க வேண்டும்; அதே போன்று இதர ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய மொழிகளுக்கும் அகராதிகளை உருவாக்க வேண்டும். இந்த மொழிகளுக்கான அறிஞர்களைக் கண்டறிந்து விரிவான திட்டமிடலுடன் இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய முயற்சிகளின் மூலமாக அந்த நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்புண்டு. அதே போன்று தமிழகத் தொழிலதிபர்களும் அங்கு செல்ல வாய்ப்பு உண்டு. தொழில் மட்டுமின்றி, கல்வி, கலை, மருத்துவம், ஆன்மீகம்.... போன்ற பல துறைகளில் பரிமாற்றங்கள் நிகழ, இந்த அகராதிப் பணிகள் பெரும் உதவி புரியும்.

15. தமிழகத்தின் இலக்கியம், ஓவியம், இசை, நடனம், சித்த மருத்துவம், ஆன்மீகம், யோகா.... உள்ளிட்ட பற்பல செவ்வியல் கூறுகளுக்கு உலகளாவிய சந்தையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு புதிய முயற்சியும் உலகம் முழுவதையும் உடனே எட்டும் விதத்தில் வலைப் பின்னலை வலுவாக்க வேண்டும்.

16. தமிழகம் முழுவதும் அதிவேக இணைய இணைப்பினை உருவாக்கிட வேண்டும். கம்பியில்லா இணைய மண்டலமாகத் தமிழகத்தை மேம்படுத்த வேண்டும். அதனை இலவசமாகவும் அளிக்க வேண்டும். தமிழர் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும். இந்த இலக்கினை கி.பி.2020க்குள் அடைய அரசு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

17. அனைத்து மொழிகளுக்குமான மொழிமாற்ற மென்பொருள்களை உருவாக்கத் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எந்த மொழியில் வரும் எந்தச் செய்தியையும் தமிழர்கள் உடனே தமிழிலேயே அறிய முடியும்.

18. செல்பேசிகளில் தமிழ்த் தட்டச்சினை ஒத்த தரத்துடன் நிலைநிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்ப ஊக்குவிக்க வேண்டும். செல்பேசி மூலமாகவே வங்கி, அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் தமிழில் பெற ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

19. பேருந்து, தொடர்வண்டி, மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களில் தானியங்கி தமிழ் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். புவியிட அமைவு முறைப்படி (GPS - Global Positioning System) செயற்கைக்கோள் மூலமாக நாம் இருக்கும் இடத்தைத் தமிழில் எழுத்திலும் குரலிலும் அறிய வகை பிறக்க வேண்டும். செல்பேசிகளிலும் இந்த வசதியை அளிக்க வேண்டும். இதற்கேற்பத் தமிழக அரசே இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்துடன் இணைந்து, புதிய செயற்கைக் கோளை ஏவி, தமிழக நிலப் பரப்புகளைத் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டும்; இடப் பெயர்களை ஒலியிலும் எழுத்திலும் பதிய வேண்டும்; அரசு நினைத்தால் இன்னும் இரண்டே ஆண்டுகளில் இதை நிறைவேற்றிட முடியும்.

20. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளைத் தமிழ் மொழியியல் ஆய்வகம் என அழைத்திடல் வேண்டும். அங்கு உள்ளோர், மொழியின் பன்முகப் பரிமாணங்களைக் கூர்ந்து ஆராய்ந்து, ஆய்வறிக்கைகளை அளிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களும் இணையதளங்களையும் குழுமங்களையும் உருவாக்க வேண்டும். மாணவர்களுக்குத் தனியாகவும் ஆசிரியர்களுக்குத் தனியாகவும் இந்தக் குழுமங்கள் அமையலாம். இதில் பழைய மாணவர்களும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும்கூட கலந்துகொள்ள வழிவகை காணலாம்.

21. கல்வியைப் பள்ளிகளிலும் கல்லூரிகளில் நேரில் சென்றுதான் கற்க வேண்டும் என்ற முறையை மாற்றிட வேண்டும். எந்தக் கல்வியையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் கற்கலாம் என்ற வசதியை அளிக்க வேண்டும். ஒரு கல்லூரியில் பேராசிரியர் எடுக்கும் பாடங்களை இதர கல்லூரிகளில் காண வழிவகை செய்ய வேண்டும். உலகின் இரு கோடிகளில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் ஒற்றைச் சொடுக்கில் ஊடாட வேண்டும். இதற்கு http://openmentor.net போன்ற தளங்கள் உதவும். இது தொடர்பான எனது முந்தைய கட்டுரை: http://annakannan.blogspot.com/2009/09/blog-post_29.html

22. நேனோ தொழில்நுட்பம் உள்பட அனைத்து அறிவியல் - நுட்பங்கள் குறித்தும் தமிழில் கற்பிக்க ஏற்ற நூல்களை உடனுக்குடன் விரிவாக எழுத வேண்டும்.

23. எழுத்தினைக் குரலாக மாற்றுகின்ற மென்பொருளைத் தமிழில் விரைவில் மேம்படுத்த வேண்டும். ஒரே எழுத்தினைப் பல்லாயிரம் குரல்களில் கேட்கிற வாய்ப்பு, இதில் உள்ளது. முன்னுரிமைப் பணிகளின் பட்டியலைத் தயாரித்து, அதில் இதற்கு இடம் அளிக்க வேண்டும்.

24. தமிழரின் உணவு முறையை மேம்படுத்த வேண்டும். தமிழரின் பண்டைய உணவுகளை, வட்டார ரீதியான உணவுகளைப் புதிய முறையில், சரிவிகித உணவாக மீண்டும் அறிமுகப்படுதத வேண்டும். தமிழர்கள் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டு, கட்டான உடலமைப்பினைப் பெறும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும். அப்படிச் செய்தால், இவற்றின் தாக்கம், மரபணுக்கள் ரீதியில் அடுத்தடுத்த தலைமுறைகளிலாவது வெளிப்படும்.

25. தமிழரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டும். இது, மறைமுகமாக மொழியுடனும் தொடர்பு உடையது. தமிழ் என்பது மொழி மட்டும் இல்லை; பண்பாடு, கலை, அறிவியல், நுட்பங்கள்.... உள்ளிட்ட 360 பாகை கோணங்கள் உடைய கரு இது. இதனை அவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் அணுகினால்தான் உறுதியான பயன்களை எதிர்பார்க்க முடியும்.

12 comments:

Indian said...

நல்ல கட்டுரை. படித்து முடிக்கும்போது பெருமூச்சுதான் வருது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கருத்து எண் 10. தவிர மற்றவை ஒப்புதலே :)

இப்போதும் ஊர்ப்புற பேருந்துகளில் நடத்துனர்கள் "சீட்டு.. சீட்டு" என்று கூவித் தான் ticket வழங்குகிறார்கள்.

Ravichandran Somu said...

நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

துளசி கோபால் said...

தமிழ்ப் படுத்துறோமுன்னு தமிழைப் படுத்தக்கூடாது.

வேற்றுமொழிச் சொற்களையும் பெயர்களையும் அப்படியே எழுதும்போது உண்மையான உச்சரிப்புடன் படிக்கும்விதமாக எழுதவேண்டும்.

இதற்கெல்லாம் ஒதுக்கும் நிதியில் பூந்து வெளயாடக்கூடாது. (இதுவும்கூடத் தமிழ்தானாம். அரும் சொற் பொருள்: புகுந்து விளையாடக்கூடாது )

தேனைக் கையால் தொடாமல், கரண்டியால் எடுத்தல் நலம். கையை நக்கவேணாம் பாருங்க(-:

தமிழ் said...

நல்ல கட்டுரை

நா. கணேசன் said...

கொலோன், ஜெர்மனியில் உத்தமம் மாநாடு 2009 நடக்கவிருப்பது அறிந்ததே. அக்கருத்தரங்கச் சிறப்பு வெளியீடாக மலரப்போகும் மின்மஞ்சரி 2009-ல் இந்தக் கட்டுரையைச் சேர்த்துகிறோம்.

நன்றி!
நா. கணேசன்

Sachithananthan_Maravanpulavu said...

தமிழன்னை தன்னைக் காத்துக் கொள்ளக் காலந்தோறும் நன்மக்களைப் பெற்றெடுக்கிறாள். இந்த நூற்றண்டின் நன்மகனாக அண்ணா கண்ணனைத் தேர்ந்தாளோ? தமிழ் வளர்ச்சித் துறையின் ஆலோசகர்களுள் ஒருவராக நீங்கள் இருக்கத் தமிழன்னை விதந்துரைப்பாளாக.
இன்றைய இந்து பார்த்தீர்களா? தில்லியில் மலையாள மிஷனைக் கேரள அரசு தொடங்கியுள்ளது, விளம்பரம் பார்க்க. பிரிட்டிஷ் கவுன்சில் சாயலில். எத்தனை கட்டுரைகள் எழுதியிருப்பேன் தமிழக அரசு உலகத் தமிழருக்காகத் தமிழ்ச் சாளரங்கள் தொடங்கவேணடுமென்று? நான் எழுதினால் கேட்காதவர்கள் மலையாள மிஷனைப் பார்த்தாவது தொடர்வார்களா? நில்நிலை அறியும் வசதி காரோட்டிக்கும் படகோட்டிக்கும் தமிழில் வரவேண்டுமென்பதையும் சேர்க்க. நன்றி

மறவன்புலவு க. சச்சிதானந்தன் said...

தமிழன்னை தன்னைக் காத்துக் கொள்ளக் காலந்தோறும் நன்மக்களைப் பெற்றெடுக்கிறாள். இந்த நூற்றண்டின் நன்மகனாக அண்ணா கண்ணனைத் தேர்ந்தாளோ? தமிழ் வளர்ச்சித் துறையின் ஆலோசகர்களுள் ஒருவராக நீங்கள் இருக்கத் தமிழன்னை விதந்துரைப்பாளாக.
இன்றைய இந்து பார்த்தீர்களா? தில்லியில் மலையாள மிஷனைக் கேரள அரசு தொடங்கியுள்ளது, விளம்பரம் பார்க்க. பிரிட்டிஷ் கவுன்சில் சாயலில். எத்தனை கட்டுரைகள் எழுதியிருப்பேன் தமிழக அரசு உலகத் தமிழருக்காகத் தமிழ்ச் சாளரங்கள் தொடங்கவேணடுமென்று? நான் எழுதினால் கேட்காதவர்கள் மலையாள மிஷனைப் பார்த்தாவது தொடர்வார்களா? நில்நிலை அறியும் வசதி காரோட்டிக்கும் படகோட்டிக்கும் தமிழில் வரவேண்டுமென்பதையும் சொல்க.

முனைவர் அண்ணாகண்ணன் said...

/நில்நிலை அறியும் வசதி காரோட்டிக்கும் படகோட்டிக்கும் தமிழில் வரவேண்டும்/

இதை நானே சொல்ல நினைத்திருந்தேன். முக்கியமாகப் படகோட்டிக்குத் தேவை; அதுவும் இலங்கைக் கடற்படையால் சுடப்படும் தமிழக மீனவர்களுக்கு இது மிக அவசியத் தேவை. நில்நிலை(GPS) - புதிய சொல்லாக்கம்.

புருனோ Bruno said...

இது தொடர்பான என் கட்டுரை இங்குள்ளது

வாசித்து பாருங்கள்

புருனோ Bruno said...

//இப்போதும் ஊர்ப்புற பேருந்துகளில் நடத்துனர்கள் "சீட்டு.. சீட்டு" என்று கூவித் தான் ticket வழங்குகிறார்கள்.
//

அந்த சீட்டு கூட தமிழில் இருக்கிறது தல

முனைவர் அண்ணாகண்ணன் said...

நல்ல யோசனைகள் புருனோ. தமிழில் பயணச் சீட்டு அளிப்பதை நானும் கண்டுள்ளேன். அது, நல்ல முயற்சியே.

புருனோ, ரவிசங்கரின் கவனத்திற்கு:

இப்பொழுது, சீட்டு - டிக்கெட் இரண்டில் எதைச் சொல்வது என்பது நடத்துநரின் விருப்பத்தைப் பொறுத்ததே.

நான் சொல்வது, அதை விதியாக்க வேண்டும். 'அண்ணா சாலை பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது; இறங்குங்கள்' என அவர் முழுமையாகத் தமிழில் பேச வேண்டும்.

இதே போன்று முதல்வர், அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் உள்பட அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் பணி நேரத்திலாவது தமிழில் உரையாடும் வழக்கம் வரவேண்டும். அப்படி வந்தால், இதர பொதுமக்களும் அவ்வாறு பேசப் பழகுவார்கள். இதற்குத் தேவையெனில், பயிற்சி வழங்கலாம்.