!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> செய்தியாளர்களுக்குச் சில குறிப்புகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, October 05, 2009

செய்தியாளர்களுக்குச் சில குறிப்புகள்

அச்சிதழில் எழுதுவதற்கும் இணையத்தில் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. முக்கியமான ஒன்று, காலம். நாளிதழில் 'இன்று' எனக் குறிப்பிட்டு எழுதும்போது, அதைப் பெரும்பாலும் அந்த நாளில் மட்டுமே படிக்கிறார்கள். அடுத்த நாள் அது, பழைய ஏடாகி, பொட்டலம் மடிக்கவும் இன்னபிற பயன்பாடுகளுக்கும் சென்றுவிடுகிறது.

ஆனால், இணையத்தின் இயல்பின்படி எந்த ஒரு தரவும் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் படிக்கப்படலாம். இந்தச் செய்தியை அடுத்த ஆண்டோ, பத்து ஆண்டுகள் கழித்தோ ஒருவர் படிக்கும்போது அது எந்த நாள் என்ற குழப்பம் ஏற்படும். என்னதான் தானாகவே அந்தச் செய்தியுடன் நாள் விவரம் தெரிந்தாலும், கூடுதல் விவரத்திற்காக அந்த நாளை முழுவதுமாகக் குறிப்பிடுங்கள்.

இணையத்தில் சம்பவங்களைக் குறித்து எழுதும்போது, 'இன்று காலையில் பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாயின' என எழுதுவது சரியில்லை. '2009 மே 23ஆம் தேதி, பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாயின' என்பது போல் எழுதுவது நல்லது. 'இன்று கைது ஆனார்', 'நாளை விடுதலை ஆவார்' என்றெல்லாம் எழுதாமல் நாள் குறிப்பிடுங்கள். 'நேற்று முன்தினம்', 'நாளை மறுநாள்' என எழுதுவதும் சரியில்லை. துல்லியமாக நாளைக் குறிப்பிட வேண்டும்.

இதே போன்று கடந்த வாரம் என்பதும் மயக்கம் மிகுந்த சொல்லாட்சி. இறந்த காலத்தில் உள்ள எல்லா வாரங்களுமே கடந்த வாரம்தான். வரும் வாரத்தில் என எழுதுவதிலும் இதே சிக்கல் உண்டு. வரப்போகின்ற எல்லா வாரங்களுமே வரும் வாரம்தான். இதனை 2009 அக்டோபர் முதல் வாரத்தில், மூன்றாவது வாரத்தில் என எழுதுவது நல்லது. இது கடந்த மாதத்தில், கடந்த ஆண்டில்... என வரும் எல்லா வாக்கியங்களுக்கும் பொருந்தும்.

இன்னும் கேட்டால் கி.பி. (கிறித்துவிற்குப் பிறகு), தி.பி. (திருவள்ளுவருக்குப் பிறகு) என எந்த ஆண்டு வரிசையினைக் குறிப்பிடுகிறோம் என்றும் குறிப்பிடுவது நல்லது. கிறித்து ஆண்டு முறை, பெருவழக்காக இருப்பதால், 2009 என்று குறிப்பிட்டாலே அது கிறித்து ஆண்டுதான் என நாம் எடுத்துக்கொள்கிறோம். திருவள்ளுவர் ஆண்டினைத்தான் தனியே குறிப்பிட வேண்டி இருக்கிறது.

காலத்தினைக் குறிப்பிடுவதில் இன்னும் ஒரு சிக்கலும் உண்டு. உலகம் முழுவதும் பொதுவான கால வரிசைகள் இல்லை. நீங்கள் இந்தியாவில் இருந்து எழுதும் போது, இன்று காலையில் என்று எழுதுவீர்கள். ஆனால், அமெரிக்காவில் அதைப் படிப்பவரும் இன்று காலையில் என்றுதான் படிப்பார். ஆனால், இருவரின் காலைகளும் வெவ்வேறானவை. இதைத் தவிர்க்க, 2009 மே 23ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு என எழுதுதல் வேண்டும். அதே போன்று அமெரிக்காவிலிருந்து எழுதுவோர், அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு என எழுதுவது நல்லது.

இடத்தினைக் குறிப்பிடும்போதும் கூடுதல் கவனம் தேவை. ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஊர்ப் பெயர்கள் வரக்கூடும். Quanzhou, Guangzhou என இரண்டு இடங்கள் உள்ளன. Quanzhou என்பது தைவான் நாட்டின் வடமேற்கில் உள்ள ஃபுஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ளது. Guangzhou என்பது சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஹாங்காங்கின் வடமேற்கில் கேண்டன் (Canton) பகுதியில் உள்ளது. குவான்சோ, குவாங்சோ என இவற்றைத் தமிழில் எழுதினால் போதாது. அடைப்புக் குறிக்குள் அந்த ஊரின் பெயரை ஆங்கிலத்திலும் கொடுப்பது நல்லது.

மதுரை - மதுரா, கடலூர் - கூடலூர் போன்றவையும் எழுத்தளவில் நெருங்கிய தொடர்பு கொண்டவை. வெளிநாட்டுப் பெயர்களில் பல, இவ்வித தோற்ற மயக்கங்கள் கொண்டவை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் காட்டூர், கருப்பூர், புதூர்..... போன்ற ஏராளமான ஊர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளன. இத்தகைய ஊர்களைக் குறிப்பிடும்போது, நமக்குத் தெரிந்த வரையில் துணை விவரங்களையும் அளிக்கலாம். திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் என எழுதலாம். நன்றாகத் தெரியுமானால் திருவாரூரிலிருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ள காட்டூரில் என எழுதலாம்.

நபர் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, ஒரே வகையான தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும். நிறைய மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, ஒவ்வொருவருக்கும் திரு. என அடைமொழிகள் அளிக்க வேண்டியது இல்லை. திருவாளர்கள் என எல்லாப் பெயர்களையும் வரிசையாக அளித்து விடலாம். ஒருவருக்குத் திரு என அடைமொழி அளித்துவிட்டு, இன்னொருவருக்கு அளிக்காமல் விடுவது சரியாய் இருக்காது. மேலும், செல்வி, திருமதி ஆகிய சொற்களை அடுத்துப் புள்ளிகள் வைப்பதைப் பல இடங்களிலும் பார்க்கிறேன். முழுச் சொற்களாக எழுதிய இடங்களில் எல்லாம், புள்ளி வைக்கக் கூடாது. திருவாளர் என்ற முழுச் சொல்லைச் சுருக்குவதால் தான் திருவுக்குப் பக்கத்தில் புள்ளி வைக்கிறோம்.

என் கருத்தின்படி திருவாளர், செல்வி, திருமதி ஆகிய அடைமொழிகளைப் பெரும்பாலும் தவிர்க்கலாம். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் ஆனவரா, இல்லையா என்பதைக் காட்டவே இந்தச் செல்வி, திருமதி ஆகியவை பயன்படுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பெயர்கள் பல, ஆண் பெயரா - பெண் பெயரா எனக் குழப்பும் வகையில் உள்ளன. நமக்கு உறுதியாகத் தெரியுமானால், 'யாங் என்ற பெண்' எனக் குறிப்பிடலாம்.

இது போன்றே பட்டப் பெயர்களிலும் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி எனக் குறிப்பிடுவதாக இருந்தால், புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா எனக் குறிப்பிட வேண்டியிருக்கும். இப்படியாக ஒவ்வொருவருக்கும் உள்ள பட்டப் பெயர்களைக் குறிப்பிடுவது எவ்வளவு பெரிய வேலையாக மாறுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள். நடுநிலையாளர்கள், முதல்வர் மு.கருணாநிதி, எதிர்க் கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா எனக் குறிப்பிடுவதே நல்லது.

இதே போன்று தலைவர் என்பது பொதுச்சொல். பெண்பாலுக்கு வருகையில் தலைவி என எழுதினால், ஆண்பாலுக்குத் தலைவன் என எழுத வேண்டியிருக்கும். எனவே இரு பாலருக்கும் பொதுவான சொற்களைப் பயன்படுத்துவது நல்லது. ஒரே தொடரில் ஒருவரைத் தோழர் என்றும் இன்னொருவரைத் தோழி எனவும் எழுதுவது சரியில்லை. இதனால்தான் ஆங்கிலத்தில் Chairman என்பதை விடுத்து, Chair Person என எழுதுகிறார்கள்.

சிறுவர்களை ஒருமையில் அழைப்பதையும் தவிர்க்கலாம். 'ஏழாம் வகுப்பு மாணவன் குமார், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றான்' என எழுதும் வழக்கம் உள்ளது. 'மாணவர் குமார், முதல் பரிசு வென்றார்' என எழுதுவது, உயர்வானது.

'திருடன் பிடிபட்டான்', 'விபசாரி பிடிபட்டாள்' எனப் பாலினம் தெரியுமாறு ஒருமையில் எழுதுவதையும் தவிர்க்கலாம். சமூகத்தின் மனநிலையைக் காட்டுவதால், இது, பெரும் புழக்கத்திற்கு வந்துவிட்டது. 'திருட்டு வழக்கில் ஒருவர் கைது', 'பாலியல் வழக்கில் பெண் கைது' என எழுதுவது நல்லது. இன்னும் சொல்லப் போனால், கைது செய்யப்பெற்றவர் - குற்றம் சாற்றப்பெற்றவர், உண்மையான குற்றவாளியா என உறுதியாக நமக்குத் தெரியாது. அவர் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும் மேல் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம். எனவே, அவசரப்பட்டு அவரது தன்மானத்திற்கு ஊறு விளைவிக்குமாறு எழுதுவது கூடாது.

காவல் துறையே தன் அறிவிப்புகளில் 'திருடன்', 'கொள்ளைக்காரன்' என்றெல்லாம் குறிப்பிடுகிறது. இத்தகைய சொற்கள், பண்பட்ட ஒரு சமுதாயத்திற்கு அழகானவை அல்ல. மேலும், காவல் துறை சொல்லும் செய்தி, முழு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களும் ஐயத்தின் பேரில் பலரைக் கைது செய்கிறார்கள். சாட்சிகளின் பேரில்தான் வழக்குத் தொடுக்கிறார்கள். எனவே, குற்றம் சாற்றப்பெற்றவரைச் செய்திகளில் குறிப்பிடும்பொழுது மிகுந்த கவனம் தேவை.

பெயர்களைக் குறிப்பிடும்பொழுது, அவரவர் தம் பெயர்களை எவ்வாறு எழுதுகிறார்களோ அவ்வாறே நாமும் எழுதுவது நல்லது. அண்ணன் - தம்பிகளான எஸ்.பி.முத்துராமன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் தம் முதலெழுத்துகளை எவ்வாறு எழுதுகிறார்கள் எனப் பாருங்கள். இதனை நாமும் அவ்வாறே எழுதுவது நல்லது. இங்கு சுப.முத்துராமன், எஸ்.பி.வீரபாண்டியன் என எழுதுவது அவர்களைக் குறிப்பிடாமல் போகலாம். இங்கு இன்னொரு முக்கிய குறிப்பு. S.P. முத்துராமன் என எழுதும் முறையை நாம் ஆதரிக்கக் கூடாது. எழுதுபவர், ஆங்கில எழுத்திலேயே எழுதினாலும் நாம் தமிழில் எஸ்.பி.முத்துராமன் என்றுதான் எழுத வேண்டும். அத்தகைய போக்கினை நாம் முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் கூடியமட்டிலும் இந்த வகையிலாவது முயல வேண்டும்.

முனைவர் பட்டம் பெற்றவர்களை டாக்டர் என அழைப்பதை விடவும் முனைவர் என்றே அழைக்க வேண்டும். எழுதுகின்ற மூன்றாவது நபருக்கு, அவர் என்ன டாக்டர் என ஒருவேளை தெரியாவிட்டால் டாக்டர் என்று குறிப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சிக்கலை உணர்ந்து, இனி தமிழில் எழுதுகின்ற முனைவர்கள், தங்களை முனைவர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதும்போது பின்னொட்டாக, பிஎச்.டி. எனக் குறிப்பிடலாம். தமிழில் அது குறைவாக இருப்பதால், அவரவரே தங்களை அடையாளம் காட்டுவது நல்லது.

பின்னொட்டு என்றதும் 'அவர்கள்' நினைவுக்கு வருகிறார்கள். பெயர்களுக்குப் பிறகு 'அவர்கள்', 'அவர்கள்' என வரிசையாக எழுதுவது தேவையற்றது. பெயரைக் குறிப்பிட்டால் போதுமானது. குடியாட்சியில் அனைவரும் மதிப்பிற்கு உரியவர்களே. ஒருவரை 'அவர்கள்' என விளித்து, இதர பெயர்களை அவ்வாறு குறிப்பிடாவிடில் பேதம் மிகும். எனவே, மிகவும் முக்கியம் என்றால் தவிர, அவர்களைப் பயன்படுத்த வேண்டாம். இன்னும் சிலர் பட்டங்கள், திரு, டாக்டர் ஆகிய அனைத்தோடும் கல்வித் தகுதிகளையும் அவர்களையும் பின்னால் இணைத்து அழைத்து, மூச்சு வாங்க வைப்பார்கள். இவை போலித்தனமானவை. இதனைப் படிப்பவர்கள் உடனடியாக உணருவார்கள். எனவே, இத்தகைய வழக்கத்திலும் மாற்றம் வேண்டும்.

என் நூல் ஒன்றின் முன்னுரையில் நான் இவ்வாறு குறிப்பிட்டேன்:

'என்னைக் கவிஞர் என்ற அடைமொழியுடன் நான் அச்சிடப் போவதில்லை. அவ்வாறு குறிப்பிட்டால், ஒவ்வொரு முறை என் பெயரை விளிக்கும்போதும் அவ்வாறே கவிஞரையும் இணைத்தே சொல்ல வேண்டியிருக்கும். 24 மணி நேரமும் சுமை தூக்கினால், என் பெயருக்கு முதுகு வலிக்கும்.'

இங்கு நாம் ஒரு செய்தியினை எழுதுகையில் நேரம், காலம், இடம், பாலினம், ஒருமை, பன்மை, சிறுவர், குற்றம் சாற்றப்பெற்றவர், முன்னொட்டு, பின்னொட்டு ஆகியவற்றை எவ்வாறு கையாளுவது எனக் கண்டோம். இவையெல்லாம் செய்திகளுக்கும் செய்திக் கட்டுரைகளுக்கும் மட்டுமே. கதை, கவிதை ஆகிய படைப்பிலக்கியங்களுக்குப் பொருந்தா.

16 comments:

யுவகிருஷ்ணா said...

பயனுள்ள கட்டுரை அளித்தமைக்கு நன்றி!

Athisha said...

நட்சத்திர வாழ்த்துக்கள். அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. நன்றி

சென்ஷி said...

அருமையான கட்டுரை!

Unknown said...

//காவல் துறையே தன் அறிவிப்புகளில் 'திருடன்', 'கொள்ளைக்காரன்' என்றெல்லாம் குறிப்பிடுகிறது.//

காவல்துறை அறிக்கையில் “accused", "charged" என்றே இருக்கும். நம்மவர்கள் தான் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றவாளிகள் என்று எழுதுகிறோம். குற்றம் நிருபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளி.

பயனுள்ள கட்டுரை. நன்றி

மீனாமுத்து said...

யோசிக்க வைத்த கட்டுரை!

இந்த வார நட்சத்திரமானதற்கு (எப்போதும் நட்சத்திரம்தானே!)
வாழ்த்துகள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

பயனுள்ள கட்டுரை

M.Rishan Shareef said...

தமிழ்மண நட்சத்திரமானதற்கு எனது இனிய வாழ்த்துக்கள் நண்பரே !

Anonymous said...

அண்ணா கண்ணன்,
எழுத்தாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய இன்றைக்குத் தேவையான‌
விதயத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்,பாராட்டுக்கள்!

தமிழ்மண நட்சத்திரமாகச் ஜொலிப்பதற்கும் என் அடிமன வாழ்த்துக்கள்!!
அன்புடன்,
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.

செல்வமுரளி said...

தேவையான தகவல்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்
செல்வ.முரளி

துளசி கோபால் said...

இன்று அக்டோபர் திங்கள் ஐந்தாம்நாள் 2009 வது வருடத்தில் எல்லாவற்றையும் பதிவில் கூறியவற்றை முக்கியக் குறிப்புகளாகக் குறித்துவைத்துவிட்டேன்.

நன்றி அண்ணாகண்ணன்

ஜோதிஜி said...

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

நல்ல பயனுள்ள கட்டுரை

ELANDHAI said...

தமிழ்மணத்து இவ்வாரத் தாரகைக்குத் தந்தோம்
நமதரும் வாழ்த்துமிக நன்று


அறிவுறுத்தும் கட்டுரை அருமையான கட்டுரை

இலந்தை

இறக்குவானை நிர்ஷன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

தரமான பதிவு

Bee'morgan said...

அருமையான பதிவு..
இத்துணூண்டு தேதியைப் போடறதில இவ்ளோ மேட்டரா..?
பகிர்ந்தமைக்கு நன்றி :)

V. Ramaswamy (நாகை வை. ராமஸ்வாமி) said...

அண்ணா, கலக்கிவிட்டீர்கள். குறிப்பா அது? பாடம். நன்றி, ஆசிரியரே.