!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2006 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 31, 2006

வெயில் - திரை விமர்சனம்



தன் உதவியாளரை இயக்குநராக உயர்த்தி, இந்தக் கதையைப் படமாக்கப் பண முதலீடு செய்ய முன்வந்த தயாரிப்பாளர் (இயக்குநர்) ஷங்கருக்கு முதல் பாராட்டு. சதையை நம்பாமல் கதையை நம்பி, தன் இரண்டாவது (முதல்)
படமே முத்திரைப் படமாகும் அளவுக்கு உழைத்துள்ள இயக்குநர் வசந்தபாலனுக்கு அடுத்த பாராட்டு. முருகேசன் என்ற பாத்திரத்தை நம் கண்முன் எழச்செய்து, மனத்திற்குள் இடம் பிடிக்க வைத்த நடிகர் பசுபதிக்கு அழுத்தமான பாராட்டு. தரமான படம் என்று ஆணித் தரமாகச் சொல்ல வைத்திருக்கிறார்கள். படக் குழுவினர் அனைவரையும் பாராட்ட வேண்டும்.

வெக்கை மிகுந்த விருதுநகரின் புழுதி பறக்கும் நிலப் பரப்பு; வறுமையும் துன்பங்களும் நிறைந்த மக்கள்; கிராமிய மணம் கமழும் ஊர். அங்கு கசாப்புக் கடைக்காரர் ஜி.எம். குமாருக்கு மகன்கள் இருவர்; மகள்கள் இருவர். மூத்தவன், முருகேசனாகப் பசுபதி. இளையவன் கதிராகப் பரத். பள்ளிக்கூட நேரத்தில் திரையரங்கிற்குள் அமர்ந்து புகை பிடித்தபடி படம் பார்க்கும் மூத்த மகனை இழுத்து வருகிறார் அப்பா. அவனை அடித்து உதைத்து, நிர்வாணமாக்கி, கால்களைக் கட்டிப் போட்டு, நாள் முழுதும் வெயிலில் கிடக்க வேண்டும் என்று தண்டிக்கிறார் அப்பா. அவமானம் பிடுங்கித் தின்ன, அன்று இரவே முருகேசன், வீட்டிலிருந்து பணம், நகைகளைத் திருடிக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிடுகிறான்.

பல துன்பங்களை அனுபவித்த அவன், ஒரு திரையரங்கில் தஞ்சம் அடைகிறான். படிப்படியாக அங்கேயே வளர்ந்து, படம் ஓட்டும் வேலையைச் செய்கிறான். அந்தத் திரையரங்கிற்கு எதிரே இருக்கும் சிற்றுண்டிச் சாலையில் தங்கம் என்ற அழகிய பெண் இருக்கிறாள். அவளுக்கும் பசுபதிக்கும் காதல். ஆனால், துரதிருஷ்டம் துரத்துகிறது. அவன் காதலி, அவன் கண் எதிரேயே கழுத்தை அறுத்துக்கொண்டு மரிக்கிறாள்.

பிறகு ஊர் திரும்பும் அவனை அவன் அப்பா, திருடன் என்று கூறி விரட்டுகிறார். பிறகு தம்பியின் வற்புறுத்தலுக்காக வீடு திரும்புகிறான். வீட்டில் யாரும் அவனுடன் ஒட்டவில்லை. அவன் இளவயது சிநேகிதி பாண்டி (ஷ்ரேயா ரெட்டி) மட்டும் அவனைப் புரிந்துகொண்டு ஆதரிக்கிறாள். இதற்குள் வீட்டிலிருந்த நகைகளைத் திருடியதாக அடுத்த திருட்டுப் பட்டம், அவனுக்குக் கிடைக்கிறது.



இன்னொரு புறம், விளம்பர நிறுவனம் தொடங்கிய தம்பி பரத், சக்கைப் போடு போடுகிறான். வெற்றி மேல் வெற்றி. அவனுக்கும் மீனாட்சி (பாவனா) என்ற பெண்ணுக்கும் காதல் அரும்புகிறது. தொழில் போட்டி காரணமாகப் பகையும் வளர்கிறது. இறுதியில் தம்பியைக் கொல்ல வந்த படையைத் தனி ஆளாக அழித்து, ஒரு தியாகியாக நிமிர்ந்து நிற்கிறான் அண்ணன் பசுபதி.

தொடர்ந்து அடுக்கடுக்காகத் துன்பங்களையே அனுபவித்து வரும் பசுபதியின் முடிவு, மனத்தைப் பாரமாக்கக் கூடியது. அவனைத் தன் மகனே இல்லை என்று கூறிய அவன் அப்பா, இறுதியில் 'என் குடும்பத்தைக் காத்த குல தெய்வம்' என்று அவன் பாதத்தைப் பிடித்து அழுகிறார். இருக்கும் போது ஏறெடுத்தும் பார்க்காத உலகம், செத்த பிறகு சீராட்டுகிறது.

இந்தப் படத்தில் பசுபதி ஒவ்வொரு காட்சியிலும் வாழ்ந்திருக்கிறார். மென்மையான காதல் உணர்வானாலும் துயரத்தில் நீந்தி மூழ்குவதானாலும் அவமானத்தில் கூனிக் குறுகுவதானாலும் கோபத்தில் பொங்குவதானாலும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். 20 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பும் அவர், கசங்கிய அழுக்குச் சட்டையுடன், தேய்ந்த ரப்பர் செருப்புடன் நகரப் பேருந்தின் படிக்கட்டிலிருந்து கீழே இறங்கும் அந்த ஒரு காட்சியே அவரின் வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறது. குணச்சித்திர நடிப்புக்குப் பசுபதி எனப் பெயர் எடுத்துவிட்டார். இந்தப் படத்தின் கதாநாயகன் அவர்தான்.

பரத்தின் வாழ்க்கை, கதையில் இணைகோடாக வருகிறது. விளம்பரத் தொழில் என்ற புதிய களத்தில் அவர் அடையும் வளர்ச்சி, சுவையாகக் காட்டப்பட்டுள்ளது. சிறிதளவே எனினும் பாவனாவின் முகமும் நடிப்பும் பளீரென உள்ளது. தங்கம் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள மலையாள இறக்குமதி பிரியங்கா, தன் பெரிய கண்களின் மூலம் மனத்தைக் கொள்ளை கொள்கிறார்.



ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஜி.வி.பிரகாஷ் குமார் என்ற இளம் இசையமைப்பாளர், வெயில் மூலம் அறிமுகம் ஆகியிருக்கிறார். 'உருகுதே மருகுதே' என்ற பாடல், உண்மையிலேயே உருக வைக்கிறது. 'வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி' என்ற பாடல், சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நா.முத்துக்குமாரின் பாடல்களில் மண் மணம் கமழ்கிறது.

மதியின் ஒளிப்பதிவு, வீரசமரின் கலை, சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ஆகியவை படத்திற்குப் பெரிதும் துணை நிற்கின்றன.

பசுபதியின் கோணத்தில் படத்தின் கதை சொல்லப்படுகிறது. சிறு வயதில் ஓடிப் போன பசுபதி, வளர்ந்து 20 ஆண்டுகள் கழிந்த பிறகே ஊருக்குத் திரும்புகிறான். அது வரை ஊரில் நடந்த எதுவும் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், தன் கதை மட்டுமல்லாமல் தன் தம்பி வளர்ந்த கதையையும் பசுபதி சொல்வது எப்படி? இந்த இடத்தில் லாஜிக் இடித்தாலும் பெரும்பாலும் படம், இயல்பான கதையோட்டத்துடனேயே உள்ளது.

இந்தப் படம், ஓர் உண்மைக் கதையின் திரை வடிவம். "என் வாழ்க்கையைத்தான் 'வெயில்' கதையாக்கினேன். நான் கண்ணீரில் கரைந்ததை, காட்சிகளாக்கியிருக்கிறேன். நான் பிறந்து வெயிலில் விளையாடி, புரண்டு வளர்ந்த விருதுநகரில் படமாக்கியிருக்கிறேன். பசுபதியின் மீசை என் பிரமு சித்தப்பாவின் மீசை. தீப்பெட்டி ஒட்டும் ஷ்ரேயா, என் தேவிகா அத்தை. பரத்தின் விளம்பரக் கம்பெனி என் நண்பன் வரதராஜனுடையது. 'செத்தவடம் செத்துப் போனேன்' நான்தான்... இப்படி நிஜங்கள் வெயிலில் உலவுகின்றன" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் இயக்குநர் ஜி. வசந்தபாலன்.

ஓர் உண்மைக் கதையை இவ்வளவு நேர்த்தியாகப் படமாக்க முடிந்திருப்பது, வசந்தபாலனின் திரை ஆளுமையைக் காட்டுகிறது. இந்த உண்மையை நேரடியாக அனுபவித்துத் தாங்கியது, அவரின் மன ஆளுமையைக் காட்டுகிறது. விருதுகள் நிச்சயம்.

இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்; குறிப்பாகக் குழந்தைகளை அடிப்பவர்கள்.

நன்றி: தமிழ்சிஃபி

Monday, December 25, 2006

தமிழ் சிஃபி கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்

தமிழ்சிஃபி கிறிஸ்துமஸ் சிறப்பிதழ் - 2006



இதில் தேவாலயச் சேர்ந்திசைப் பாடல்களைக் கேட்கலாம். கிறிஸ்தவ மத போதகர்களின் உரைகளின் ஒளி(வீடியோ)ப் பதிவுகளைக் காணலாம். குழந்தை ஏசு, கிறிஸ்து ஆகியோரின் புகைப்படத் தொகுப்பும் சில படைப்புகளும் உண்டு.

நாகேஸ்வரி அண்ணாமலையின் கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை >>>



படித்து, பார்த்து, கேட்டு மகிழுங்கள். கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Saturday, December 09, 2006

முரசொலி மாறனுக்குச் சிலை!!!??



திமுக தலைவர் கருணாநிதியின் மனம் கவர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முழு உருவச் சிலை, பாராளுமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தார். மாறன் சிலை, பாராளுமன்றத்தில் மேலவை செல்லும் வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 8 அன்று காலை நடந்த விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் அத்வானி, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மத்திய மந்திரிகள் சரத்பவார், மணிசங்கர் அய்யர், ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ராஜா, ஜெயபால் ரெட்டி, ஜி.கே.வாசன், ரகுபதி, வெங்கடபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வேலு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் குருதாஸ் குப்தா, தெலுங்கு தேசம் பாராளுமன்றத் தலைவர் எர்ரன்நாயுடு, முன்னாள் தமிழக ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர், கரண்சிங், தொழில் அதிபர் ராகுல் பஜாஜ், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஏ.கே.மூர்த்தி, பெல்லார்மின், மோகன், அப்பாதுரை,

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், முரசொலி செல்வம், அவருடைய மனைவி செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இறை உருவங்களின் சிலைகளை ஒரு பக்கம் தள்ளி வைப்போம். மனிதர்களின் சிலைகளை இப்போது கணக்கில் எடுப்போம். சிலையாக ஒருவரை வடிப்பதே முதலில் விமர்சனத்திற்கு உரியது. அவருடைய கருத்துகளை விட அவரது உருவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சரி, ஒருவரின் உருவம் என்பது அவரது கொள்கைகளுக்குக் குறியீடு என்று வைத்துக்கொண்டால் அதனை நாம் ஒரு கட்டம் வரைக்கும் அனுமதிக்கலாம்.

மேலும் ஒருவரின் சாதனைகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்றும் அதைக் கருதினால், சாதனையாளர்கள் அனைவருக்கும் சிலை வைக்கிறோமா? என்ற கேள்வி எழும். அப்படியே சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் என்று எடுத்துக்கொண்டாலும் சாதனை என்பதன் அளவீடு என்ன? அதனுடைய படிநிலைகள் என்ன? எந்த அளவு செயல்கள், சாதனைகள் புரிந்தவருக்குச் சிலை வைக்கலாம் என்ற எந்த அளவீடும் நம்மிடம் இல்லை.

இப்போதைய நடைமுறை என்னவென்றால், ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் கட்சிகள் முடிவு செய்வதே இறுதி நிலை என்றாகிறது. இது மக்களின் ஏகோபித்த விருப்பம் என்றும் கருத இயலாது. மக்களிடம் இன்னாருக்குச் சிலை வைக்கலாமா என்று வாக்கெடுப்பு ஏதும் நாம் நடத்துவதில்லை. அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுதான் சட்டம் என்றால், அவர் கை காட்டும் யாருக்கும் சிலை வைத்துவிடலாமா? சிலைக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் குழு, பொம்மைக் குழுதானா?

அடுத்ததாகச் சிலை வைக்கும் இடங்களைப் பார்ப்போம். சாலை நடுவிலும் முக்கிய பகுதிகளிலும் இன்னும் மனிதர்களின் விருப்பப்படி எங்கும் சிலைகள் வைக்கப்படுகின்றன. ஒரு பகுதியில் சிலை வைப்பதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது? பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைப்பது, ஒரு கெளரவம் என்றால் அதற்கான நெறிமுறைகளை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். சிலைக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் குழு பரந்து பட்டதாக இருக்கவேண்டும். அது, அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கவேண்டும்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை திறப்புக்கு வராத பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் சிலையைத் திறந்து வைக்கத் தவறவில்லை. இந்தத் தருணத்தில் எம்ஜிஆரையும் முரசொலி மாறனையும் எவருமே ஒப்பிடத்தான் செய்வார்கள். தமிழகத்தில் மூன்று முறைகள் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்த எம்ஜிஆர், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மக்களை ஈர்த்த தலைமைத்துவத்திலும் மேலும் சிலவற்றிலும் சிறந்து விளங்கினார். ஆனால், மாறனுடைய பங்களிப்பு, தேசிய அரசியல் என்ற அளவிலும்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரின் பெருமைகளாகக் கூறப்படுபவை, மிகையான புகழுரைகள்.

தமிழ்நாட்டிலிருந்து பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேறு சிறந்த நபர்கள் யாரும் கிடைக்கவில்லையா? மீதம் உள்ள அனைவரையும் விட மாறனின் பங்களிப்பு சிறந்ததா? மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் ஒரே காரணத்தால் திமுகவின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளலாமா? இப்படி சுய ஆதாயம் தேடும் அரசியல் நோக்குள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் மத்திய அரசின் தரம் தாழ்ந்துவிட்டது.

இப்படி விமர்சிப்பது, மாறன் ஒன்றுமே செய்யவில்லை என்ற அர்த்தத்தில் இல்லை; அவரையும் விடச் சாதித்த பெரிய மனிதர்கள் கவனிக்கப்படாமல் இருக்க, இப்படி கருணாநிதியின் ஒற்றை விருப்பத்தினால் மாறன், சிலைப் பந்தயத்தில் முந்துவது ஏற்புடையதா என்பது பற்றியே.


நன்றி: தமிழ்சிஃபி

Friday, November 17, 2006

சிஃபி தமிழை மதிப்பிடுங்கள்

கி.பி.2000ஆம் ஆண்டில் தொடங்கிய சிஃபி தமிழ் இணைய இதழ், வெற்றிகரமாக 7ஆவது ஆண்டில் நடைபோடுகிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை வாசகர்களாகிய நீங்களே தீர்மானிக்கலாம். சிஃபி தமிழின் உள்ளடக்கம், நீங்கள் விரும்பும் பகுதி, இன்னும் சேர்க்க வேண்டிய பகுதிகள் உள்பட சில கேள்விகளுக்கு உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறோம். இதற்கான கருத்தறியும் பக்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Sunday, November 05, 2006

வட்டாரம் - திரை விமர்சனம்



சிறிய பேட்டையில் விதவிதமாகத் துப்பாக்கி விற்கும் ஆர்யா, எப்படி ஒரு சர்வதேச ஆயுத வியாபாரியாகிறார் என்பதே கதை.

சிறு வயதில் ஆர்யாவின் அப்பா நாசர், தாதா நெப்போலியனிடம் வேலை செய்கிறார். சிறுவன் ஆர்யாவுக்கு நெப்போலியனைப் போல் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை. அவன் ஒரு நாள், நெப்போலியனின் இருக்கையில் உட்கார்ந்து தூங்கிவிடுகிறான். அங்கு வரும் நாசர், இந்த நாற்காலியில் உட்காரக் கூடாது; உட்கார்ந்தாலும் தூங்கக் கூடாது என்று கூறி இப்படி கம்பீரமாக உட்கார வேண்டும் என்று உட்கார்ந்து காட்டுகிறார். அப்படியே இருவரும் உறங்கிவிட, நெப்போலியனும் அவரின் அடியாட்களும் பார்த்து விடுகிறார்கள். அப்பாவும் மகனும் அங்கிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள்.

தன் மகன் முன்னாலேயே தான் அடிவாங்கிவிட்டோமே என்ற அவமானத்தில் நாசர் தூக்கில் தொங்கிவிடுகிறார். அதன் பிறகு பெரியவனாகும் ஆர்யா, தொழில்முறை ரவுடியாகிவிடுகிறார். பர்மா என்றும் வட்டாரம் என்றும் அழைக்கப்படும் அவர், துப்பாக்கி விற்பனையிலும் ஈடுபடுகிறார். பழைய துப்பாக்கியிலிருந்து நவீன துப்பாக்கி வரை அவரிடமிருந்துதான் தாதா கும்பல்களுக்குக் கிடைக்கின்றன. தன்னையும் தன் அப்பாவையும் தெருவில் தள்ளிய நெப்போலியனை பழிவாங்கக் காத்திருக்கிறார் ஆர்யா.

கிடைத்த ஒரு வாய்ப்பில் நெப்போலியனிடம் அடியாளாகச் சேருகிறார். ஆர்யா, மெல்ல நெப்போலியனின் மனத்தில் இடம் பிடிக்கிறார். ஆனால், நெப்போலியன் தன் மகனுக்கு உதவியாளராய் ஆர்யாவை உருவாக்க நினைக்கிறார். நெப்போலியன் மகள் கீரத், ஆர்யாவைக் காதலிக்கிறார். ஆனால் ஆர்யா, தன் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. யாருக்கும் சந்தேகம் வராமல் நெப்போலியனின் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவராய்ப் போட்டுத் தள்ளுகிறார். இறுதியில் நடக்கிற டிஷ்யூம் டிஷ்யூமில் நெப்போலியன் உயிரை விடுகிறார். நெப்போலியனின் மகளை மணக்கும் ஆர்யா, நெப்போýயனின் இருக்கையில் அமர்ந்து தன் இளவயதுச் சவாலை நிறைவேற்றுகிறார்.

இந்த அடிதடிக் கதையை ரசிக்கும்படியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரண்.

அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இதிலும் ஆர்யாவுக்கு முரட்டுத்தனமான ரவுடி பாத்திரம்தான். ஆனால், அலட்சியமான பார்வை, அதற்கேற்ற உடல்மொழி, நல்ல உடற்கட்டு, சண்டைக் காட்சிகளில் உள்ள சுறுசுறுப்பு ஆகியவை ஆர்யாவைத் தனியாகக் காட்டுகின்றன. தேவையான உச்சரிப்புடன் நடனமும் ஆட வருகிறது. காட்சியில் தன்னை நிலைநிறுத்தத் தெரிந்திருக்கிறார். துப்பாக்கிகளின் வகைகளையும் அவற்றின் அகலம், நீளம், எடை ஆகிய புள்ளி விவரங்களையும் அவர் வேகமாகக் கூறுவது வித்தியாசமாக உள்ளது. ஆயினும் ஒரே வகையான கதாபாத்திரங்களில் நடிக்காமல் விதவிதமான கதைக் களங்களில் புகுந்து வந்தால் ஆர்யாவின் திறமை மேலும் வளரும்.

மும்பையிலிருந்து வந்திருக்கும் புதுமுகம் கீரத், படம் முழுதும் ஒல்லி ஒல்லி இடுப்புடன் அழகாக வலம் வருகிறார். ஆர்யாவை எண்ணி உருகி, எடுத்ததற்கெல்லாம் 'ஆக்சுவலி' எனப் பேசத் தொடங்கி, மெல்லிய உரையாடல்களுடன் மனத்தைக் கவருகிறார்.

நெப்போலியனுக்கு இந்தப் படத்தின் மூலம் தனி முத்திரை கிடைத்துள்ளது. பெரும்பாலும் கிராமத்து வேடங்களில் நடித்த அவர், இதில் நவீன தோற்றத்தில், சர்வதேச ஆயுத வியாபாரி என்ற பாத்திரத்தை ஏற்றுக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆர்யாவின் மீது பாசம் கொள்வதும் இன்னொருவன் காலைப் பிடித்து வளரக் கூடாது என்ற கொள்கையுடன் சாவதும் சிறப்பு. 'நாங்கள் தனி மனிதர்களுக்கு ஆயுதம் விற்பதில்லை; அரசாங்கங்களுக்கு ஆயுதம் விற்கிறோம்' என்று கூறும்போதே கதைக் களம் மாறுபட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நெப்போலியனின் உதவியாளராக வரும் காதல் தண்டபாணி, மகனாக வரும் ராம்ஜி, புதுமுகம் அதிசயா, போட்டி தாதா அவினாஷ், ஆர்யாவின் உதவியாளராக வரும் ரமேஷ்கண்ணா.... உள்பட பலரும் தங்கள் பணியைச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

பரத்வாஜின் இசையில் வைரமுத்துவின் பாடல்கள் பரவாயில்லை ரகம். 'நானா இது நானா', 'யார் தருவார் இந்த அரியாசனம்?' ஆகிய பாடல்கள் கவருகின்றன. பின்னணி இசை படத்திற்குப் பெரிதும் துணை நிற்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சரண். பொழுதுபோக்கு அம்சங்களுடன், விறுவிறுப்பான சண்டைக் கதையை எடுத்திருக்கிறார். அநாவசியமான குத்துப் பாட்டு, கவர்ச்சி, நகைச்சுவை டிராக், அதீத வன்முறை ஆகியவை இல்லாமல் படம் எடுத்திருப்பதற்காகச் சரணைப் பாராட்டலாம்.

வட்டாரம்... வட்டத்திற்குள் டுமீல்!

நன்றி: தமிழ்சிஃபி

Saturday, October 28, 2006

தலைமகன் - திரை விமர்சனம்



தலைமகன், நேர்மையான, துணிச்சலான பத்திரிகையாளன் ஒருவனின் கதை.

'எவரெஸ்ட்' என்ற நாளிதழில் தீரன் (சரத்குமார்), முதன்மை நிருபர். மேகலா (நயன்தாரா) புதிய நிருபர். இன்னொரு நிருபராக எரிமலை (வடிவேலு). அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக சத்தியமூர்த்தி (விஜயகுமார்). அரசியல்வாதிகளின் லஞ்சம், ஊழல், மோசடி, காவல் துறையின் முறைகேடுகள், சமூக விரோத சக்திகளின் தோலுரிப்புகள்..... எனப் புலனாய்வு இதழுக்குரிய அம்சங்களுடன் அநீதியை எதிர்த்துப் போராடுகிறது 'எவரெஸ்ட்' இதழ். சரத்தின் செல்பேசி எண்ணைக் காவல் துறையின் ஏட்டு முதல் இல்லத்தரசி வரை அறிந்து வைத்து, ஆபத்து வரும்போது அவருக்குத் தொலைபேசி செய்கிறார்கள். சரத்தும் உடனே அங்கு பறந்து போய் எதிரிகளைப் பந்தாடுகிறார்.

ஆளுங்கட்சி அமைச்சராக உள்ள சண்முகவடிவேல் (முகேஷ் திவாரி), காவல் துறை அதிகாரி அலங்காரத்தின் (சீமா பிஸ்வாஸ்) உதவியுடன் பல்வேறு ஊழல்களைச் செய்து வருகிறார். ரவுடிப் படையும் அவருக்கு உண்டு. இந்த அமைச்சர், 3 கோடி லஞ்சத்தை வாங்கிக்கொண்டு, நெடுங்குளம் என்ற கிராமத்தில் மினரல் வாட்டர் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கிறார். அந்தத் தொழிற்சாலையால் சுத்துப்பட்டு கிராமங்கள் அனைத்தும் வறண்டு, சுடுகாடாகிவிடும் என்று 'எவரெஸ்ட்' பத்திரிகையில் சரத்குமார் எழுதுகிறார். அதனைத் தொடர்ந்து அமைச்சர், சரத்தைக் கொல்ல முயல்கிறார். அந்த முயற்சியில் அதிருஷ்டவசமாகச் சரத் தப்புகிறார்.

அதன் பிறகு அவர் எப்படி மீண்டு வந்து, அமைச்சரையும் காவல் துறை அதிகாரியையும் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்பதே கதை.

பத்திரிகையாளனின் பொறுப்பினை, சமூக உணர்வை, தலைமுறைகள் தாண்டிய தொலைநோக்கினை, முன்னெச்சரிக்கை உணர்வை, வீரத்தை, அநீதியை எதிர்ப்பதில் வேகத்தை, சமயோசித புத்தியை, துப்பறியும் ஆற்றலை, விலைபோகாத தன்மையைச் சரத்குமார் அழகாகக் காட்டியுள்ளார். அதனால்தான் படத்தின் தலைப்பின் கீழேயே 'தலைமகன் - அச்சமற்றவன்' என்று பொறித்துள்ளார். 'பேனாக்காரன் வருகிறான்; பிரளயம் போல வருகிறான்' என்று பாடலும் பாடுகிறார்.

எதிரிகளால் விஜயகுமார் கொல்லப்பட, அவருக்குப் பிறகு சரத்குமாரே ஆசிரியர் பொறுப்பேற்றுப் பத்திரிகையை நடத்துகிறார். பத்திரிகைக்கு 'நியூ எவரெஸ்ட்' என்று புதுப் பெயர் சூட்டுகிறார். மறைக்கப்படுகிற உண்மைகளைக் கண்டறிய, மாறுவேடத்தில் அலைகிறார். அமைச்சரின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுகிறார். கடைசியில் நெடுங்குளம் கிராம மக்களை அமைச்சரிடமிருந்து காப்பாற்றுகிறார்.

நயன்தாரா, படம் முழுக்கக் குளிர்ச்சியாக வலம் வருகிறார். 'தீந்தேனா தீவடியும் தேனா' பாடலில் அவரின் அழகை இயக்குநர் அமோகமாக வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலான வரிகள் சிறப்பாக உள்ள இந்தப் பாடலின் இடையே 'என் நெஞ்சில் கிழங்கெடுத்தவன் நீயே' என்று நயன்தாரா பாடுவது போல் வைரமுத்து 'துணிச்சலுடன்' எழுதியுள்ளார். அங்க வர்ணனை இப்படி எல்லாமா போகவேண்டும்?

வடிவேலுவின் சிரிப்பு வெடிகள், சில இடங்களில் வெடிக்கின்றன. பல இடங்களில்.... ஊகூம். சேரனின் திரைக்கதை, படத்தைக் கடைசி வரை பார்க்க வைக்கிறது. பால்.ஜே. இசையில் 'தீந்தேனா', 'வெள்ளிக் கிண்ணத்தில்', 'பேனாக்காரன்' ஆகிய பாடல்களைக் கேட்கலாம். ஸ்ரீகாந்த் தேவா, 'நூறு நூறு' என்ற ஒரே பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலைச் சரத்குமாரே பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு நடுவே கே.எஸ்.ரவிகுமாரும் குஷ்புவும் கெளரவ வேடத்தில் வந்து நான்கு வரிகளுக்கு ஆட்டம் போடுகிறார்கள். இவர்கள், எதற்கு? ராசி பார்க்கிறாரா சரத்?

தன் நூறாவது படமான தலைமகனைச் சரத்குமாரே இயக்கியுள்ளார். சரத் இயக்கும் முதல் படமும் இதுவே. நடிப்புக்கும் இயக்கத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் கொடுக்கலாம். சரத்தின் கட்டுமஸ்தான உடலழகைப் படத்தில் பல இடங்களில் காண முடிகிறது. இன்றைய இளம் கதாநாயகர்கள், சரத்திடமிருந்து உடல்கட்டை மெனக்கெட்டுக் கற்க வேண்டும்.

கொலை முயற்சியில் தப்பும் சரத், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு வருகிறார். அமைச்சரின் ஊழல் ஆதாரங்களைத் தேடி அவர் கல்லறைத் தோட்டத்துக்குச் செல்லும்போது, அங்கே நயன்தாராவை அவர் சந்திப்பது எப்படி? அமைச்சரின் ரகசிய கோப்புகள் அங்கிருப்பது, நயனுக்கு எப்படித் தெரியும்? நெடுங்குளம் தண்ணீர்த் தொழிற்சாலையில் கையில் வானொலிப் பெட்டியும் ஜோல்னாப் பையுமாக மாறு வேடத்தில் நுழையும் சரத், கணினி, இணையம் ஆகியவற்றை நிலத்தடி அறையில் வைத்துத் துப்பறிவது எப்படி? நெடுங்குளம் தொழிற்சாலையை நடத்த அனுமதி பெற்றது வெள்ளையர்கள் என்றால், அங்கு வெள்ளைத் தலைகள் ஒன்றுகூட தெரியவில்லையே! எனச் சில கேள்விகள் எழுகின்றன.

மேலும், அமைச்சர், டிஜிபி அலங்காரத்தைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தன் கைரேகையை அழித்துவிட்டு அலங்காரத்தில் கைகளுக்குள் அதைத் திணிக்கும் காட்சி சரியில்லை. அங்கு துப்பாக்கியில் கைரேகையை அழிக்கும் அமைச்சர், மீண்டும் கைக்குட்டையால் இல்லாமல், தன் கைகளாலேயே அதை எடுத்து, டிஜிபி கைகளுக்குள் வைக்கிறார். அப்போது அமைச்சரின் கைரேகை அதில் படாதா? அதிலும் துப்பாக்கியின் கோணம், இயல்பாக இல்லை; திணிக்கப்பட்டது தெளிவாகத் தெரியும் விதத்தில் உள்ளது.

இப்படி சில லாஜிக், காட்சிப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் கடைசிக் காட்சியில் சரத்தைத் தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கேள்வி கேட்கிறார்கள். அங்கு பல மைக்குகள் சரத் முன்னே நீளுகின்றன. ஆனால், அவற்றில் சன் டிவி மைக் இல்லை. இயக்குநர் கவனமாக அதைத் தவிர்த்திருக்கிறார். ஆனால், ஒரு பாடலுக்கு இடையில் 'சொல்லுவதைச் செய்வேன்; செய்வதைத்தான் சொல்லுவேன்;' என்று திமுகவின் வசனத்தைச் சரத் பாடுகிறார். இது, 'அம்மா' கண்ணில் படாமல் இருந்தால் சரி.

பத்திரிகைத் துறை என்ற கதைக் களத்தில் சரத் நன்றாகவே விளையாடியிருக்கிறார். அரசியல்வாதிக்கும் காவல் துறைக்கும் ரவுடிகளுக்கும் உள்ள தொடர்பைப் படம் எடுத்துக் காட்டுகிறது. சமூக நோக்குடைய நல்ல கருத்துகளை மக்கள் நெஞ்சில் விதைக்கிறது. ராதிகா சரத்குமாரின் தயாரிப்பில் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திலிருந்து வந்திருக்கும் படம், சரத்திற்குள் உள்ள இயக்குநரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

தலைமகன்: இந்த வெடி, வெடிக்கும்.


நன்றி: தமிழ்சிஃபி

Friday, October 20, 2006

தமிழ்சிஃபி தீபாவளி மலர் 2006

தமிழ்சிஃபியின் தீபாவளி மலர் வெளிவந்துவிட்டது.

பார்க்க ----> http://tamil.sify.com/general/deepavali06/index.php

இந்த மலருக்குள் நீங்கள் படிக்க, பார்க்க, கேட்க, விளையாடப் பல்வேறு சுவையான அம்சங்கள் உண்டு.

காஞ்சி மகா பெரியவரின் அருளுரை, தீபாவளிக்கு வெளிவரும் புதிய திரைப்படங்களின் புகைப்படத் தொகுப்புகள், தீபாவளி தொடர்பான படத் தொகுப்புகள், நரகாசுரனை வதம் செய்வதற்கான வீடியோ விளையாட்டு (இதை விளையாட சிஃபி ஐடி இருக்கவேண்டும்), தீபாவளிக்கு என்ன ஜட்டி வாங்கலாம் (குறுஞ்செய்திச் சிரிப்பு வெடி), ரெளத்திரம் பழகு என்ற தலைப்பில் மதுமிதாவின் புதிய பத்தி.......

நா.கண்ணன், ஷைலஜா ஆகியோரின் தீபாவளி உரைகள் (ஒலிப் பத்தி), குடவாயில் சகோதரிகள், வாசுகி ஜெயபாலன் ஆகியோரின் குரலில் இனிய பாடல்கள், தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது காசைக் கரியாக்குவதா என்ற தலைப்பில் ஒரு கருத்துக் கணிப்பு, சர்க்கரை நோய் தொடர்பான மருத்துவ வழிகாட்டி, ஓவிய வித்தகர் கோபுலுவின் தீபாவளி நினைவுகள்......

வெங்கட் சாமிநாதன், நாகேஸ்வரி அண்ணாமலை, துளசி கோபால், விழியன், செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம் ஆகியோரின் கட்டுரைகள்.......

கு.அழகிரிசாமி, மகரம், ஜெயந்தி சங்கர், சக்தி சக்திதாசன் ஆகியோரின் சிறுகதைகள்.......

அண்ணாகண்ணன், இளம்பிறை, சுகதேவ், அனந்த், மதுமிதா, சக்தி சக்திதாசன், சிலம்பூர் யுகா, பாலாஜி ஆகியோரின் கவிதைகள்.....

இன்னும் தீபாவளி செய்திகள், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைந்த தீபாவளி சிறப்பிதழ்களின் இணைப்புகள், தீபாவளிப் பரிசுப் பொருள்களிலிருந்து வாழ்த்து அட்டைகள், பணப் பரிமாற்றம் வரை அனைத்துச் சேவைகளின் இணைப்புகள்..... ஆகிய அனைத்தும் இந்தச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளன. உங்களிடம் 10 MB அளவுக்குள்ளான ஒளிக் கோப்பு ஏதும் இருந்தால், அதை உங்கள் நண்பருக்குத் தீபாவளி வாழ்த்தாக அனுப்ப விரும்பினால் அதற்கும் இங்கே வழியுண்டு. வீடியோ வாழ்த்துகள் அனுப்பலாம்.

இந்தத் தீபாவளியைத் தமிழ்சிஃபியின் தீபாவளி மலருடன் கொண்டாடுங்கள்.

வாசக நண்பர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Saturday, September 30, 2006

தமிழ்சிஃபி மகாத்மா காந்தி சிறப்பிதழ்

'இப்படியொரு மனிதர் ரத்தமும் சதையுமாக இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே நடமாடினார் என்பதை வருங்காலத் தலைமுறை நம்புவது கடினம்' என்று காந்தியைக் குறித்து ஐன்ஸ்டீன் அன்றே கூறினார். அப்படி இருக்கையில் இன்றைய சூழலில் தேசத் தந்தை காந்தியை நினைவுகூர்வது மிகவும் முக்கியம்.

எனவே அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்சிஃபி சார்பில் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம். இதில் காந்தியின் பல்வேறு புகைப்படத் தொகுப்புகளும் காந்தியின் எழுத்துகள் சிலவும் காந்தியைப் பற்றிய எழுத்துகள் பலவும் இடம் பெற்றுள்ளன.

கி. ராஜநாராயணன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் கட்டுரைகளுடன் பி.கே. சிவகுமாரின் 'கண்டுணர்ந்த காந்தி' என்ற பத்தியும் சிறப்பிதழுக்கு வலிமை சேர்க்கிறது. காந்தியை நவீன ஓவியமாகவும் நீங்கள் கண்டு களிக்கலாம்.

காந்தி அன்பர்களை இந்தச் சிறப்பிதழ் கவரும் என்று நம்புகிறேன்.

Thursday, September 28, 2006

சென்னையின் பண்பலைவரிசைகள்

சென்னையின் பண்பலைவரிசைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. அரசு சார் பிரசார் பாரதியின் சார்பில் ரெயின்போவும் கோல்டும் ஒலிபரப்பாகி வருகின்றன. சன் குழுமத்திலிருந்து சூரியன் வெளிவருகிறது. த டைம்ஸ் குழுமத்திலிருந்து மிர்ச்சி வழிகிறது. ஸ்டார் குழுமத்திலிருந்து ரேடியோ சிட்டியும் ரிலையன்ஸ்-அனில் அம்பானி குழுமத்தின் அட்லாப்ஸ் நிறுவனத்திலிருந்து பிக் எஃப்.எம்.மும் தினத்தந்தி குழுமத்தின் மலர் பப்ளிகேஷன்ஸிலிருந்து ஹலோ எஃப்.எம்.மும் ஒலிபரப்பைத் தொடங்கியுள்ளன.

பெரும்பாலும் அனைத்திலும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளே 24 மணி நேரமும் ஒலிபரப்பாகின்றன. வாசகர்கள் தொலைபேசியில் அழைத்துத் தங்கள் விருப்பப் பாடல்களையும் அனுபவங்களையும் கருத்துகளையும் சொல்லும் வாய்ப்பினை அனைத்து அலைவரிசைகளும் வழங்குகின்றன. அப்படிப் பேசுபவர்களுக்குப் புதிய திரைப்படத்திற்கான இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பரிசாக அளிக்கின்றன. மேலும் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.)ப் போட்டிகளைக் கட்டாயம் நடத்துகின்றன.

வெளி நிறுவன விளம்பரங்கள் ஒரு புறம் இருக்க, தங்கள் சொந்த விளம்பரங்களை அதிகமாக ஒலிபரப்பி வருகின்றன. திரைப்படப் பாடல்களிலும் இனிய பாடல்களைக் காட்டிலும் குத்துப் பாடல்களையும் இரைச்சலான பாடல்களையும் அதிகம் ஒலிபரப்பித் தொலைக்கின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிக் கலப்புடன், கொச்சையான மொழியுடன் பெரும்பாலான தொகுப்பாளர்கள் தொகுப்புரை வழங்குகிறார்கள். பலவும் மிகவும் சொதப்பலாக உள்ளன. நேரத்தை வீணடிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

சாங், டோண்ட் மிஸ் இட், உங்க ஃபேவரைட், ஸ்டே டியூண்டு... என் வெள்ளம் போல் ஆங்கிலச் சொற்கள் மக்களிடம் திணிக்கப்படுகின்றன. மொத்தத்தில் கணக்கெடுத்தால் தொகுப்பாளர் பேசுவதில் பத்துக்கு ஐந்து சொற்களாவது வேற்று மொழிச் சொற்களாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

குறிப்பிடத்தக்கவை:

எஃப்.எம். ரெயின்போவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செய்திச் சுருக்கம் வெளியாகிறது. காலை ஏழரை முதல் எட்டரை வரை நாள்தோறும் கர்நாடக இசையை வழங்குகிறது. அது மட்டுமின்றி அரசு சார் நிகழ்ச்சிகள் பலவும் பயனுள்ள வகையில் ஒலிபரப்பாகின்றன. புதிர் நிகழ்ச்சிகள் சிலவற்றின் மூலம் பொது அறிவை வளர்க்கிறது. இரவில் 10 மணி முதல் பழைய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பிக் காற்று வெளியை அழகாக்குகிறது.

எஃப்.எம். கோல்டில் கிரிக்கெட் போட்டிகளின் போது நேர்முக வர்ணனையைக் கேட்கலாம். மேலும் தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி நிகழ்ச்சிகளும் அவ்வப்போது ஒலிக்கின்றன.

சூரியன் எஃப்.எம்.மில் காலை 9 முதல் 10 வரை ஒலிபரப்பாகும் பிளேடு நம்பர் ஒன் என்ற கடி ஜோக் நிகழ்ச்சி, சிற(ரி)ப்பாக உள்ளது. சின்ன தம்பி - பெரிய தம்பி, கிட்டு மாமா - சூசி மாமி ஆகிய நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்கவில்லை.

மிர்ச்சியில் காலை, மாலை பரபரப்பு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் பற்றிய செய்திகள் பயனுள்ளவை. காலையில் சுசித்ராவின் இயல்பான பேச்சும் சிரிப்பும் பாட்டும் களை கட்டுகிறது. இரவில் 9 மணி முதல் பழைய இனிய திரைப்படப் பாடல்களைக் கேட்கலாம்.

சிட்டி, பிக், ஹலோ ஆகியவை இனிதான் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். ஹலோ, தன் சோதனை ஒலிபரப்பைத் தொடங்கியுள்ளது. மேலும் 106.4 MHzஇல் நிகழ்ச்சிகளைக் கேட்கும் நேயர்களுக்கு 1064 கிராம் தங்கம் வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

சென்னை வானொலி என்றால் ஒன்றே ஒன்று இருந்தது போய், இப்போது மொத்தம் பத்து வானொலி அலைவரிசைகள் வந்துவிட்டன. (பண்பலை தவிர சென்னை வானொலியின் மத்திய அலையில் இரண்டு அலைவரிசைகளும் விவிதபாரதியும் ஒலிபரப்பாகி வருகின்றன)

பண்பலைகளின் பெயர் - அலைவரிசை எண்- முழக்க வாசகம்:

எஃப்.எம். ரெயின்போ - 107.1 MHz - ஹாட்டான சென்னையின் கூலான எஃப்.எம்.

எஃப்.எம். கோல்டு - 105.0 MHz

சூரியன் எஃப்.எம். - 93.5 MHz - கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

ரேடியோ மிர்ச்சி - 98..3 MHz - செம ஹாட்டு மச்சி

ரேடியோ சிட்டி - 105.8 MHz - நம்ம சிட்டி நம்ம லைஃப்

பிக் எஃப்.எம். - 92.7 MHz - பேசுங்க பாடுங்க லைஃப் கொண்டாடுங்க

ஹலோ எஃப்.எம். - 106.4 MHz - அக்டோபர் 2 முதல் அதிகாரபூர்வமாக ஒலிபரப்பைத் தொடங்குகிறது.

Wednesday, September 27, 2006

திமுக கூட்டணியில் திருமா

தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாகத் தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதிமுக கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. அதே கையோடு திமுக கூட்டணியிலும் இணைந்துவிட்டது.

ஜெயலலிதாவுடன் கைகோத்து மேடைகளில் தோன்றிய திருமா, திமுகவில் சேரும் அன்றுவரைகூட அதிமுக சார்புடன் இருப்பதாகவே காட்டிக்கொண்டார். செப்.27 அன்று வெளியிட்ட அறிக்கையில், "அ.தி.மு.க. தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் 4 சதவீத இடங்களைப் பெற்று உடன்பாடு செய்துள்ளது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. பொறுப்பாளர்களுடன் நம் தோழர்கள் சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் பேச்சு வார்த்தையில் தேக்கம் ஏற்பட்டது. இதனைச் சில தொலைக்காட்சிகள் ஊதிப் பெருக்கிக் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. அ.தி.மு.க.வுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகிறோம். பேச்சு வார்த்தையின் போது சிக்கல் ஏற்பட்டுள்ள ஒரு சில மாவட்டங்களில் அவற்றைச் சரி செய்து இணக்கமுடன் செயல்பட முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சிக்கல் எதுவும் இல்லை. ஆகவே விடுதலைச் சிறுத்தைகள், அ.தி.மு.க.வினருக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால், அன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்த பிறகு திருமா, இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், அணியிலிருந்து வெளியேறிவிட்ட பிறகு திருமாவுக்கு ஒதுக்கிய 4 விழுக்காட்டு இடங்களில் அதிமுகவோ, அதன் தோழமைக் கட்சிகளோ போட்டியிட முடியாது. இதன் மூலம் மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக, 4 விழுக்காட்டு இடங்களை இழந்திருக்கிறது.

திருமா, அதிமுக தலைமையிடம் 10 விழுக்காடு இடங்கள் கேட்டதாகவும் 4 விழுக்காடு இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அம்மா கண்டிப்புடன் கூறிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. அதனால் கடுப்படைந்த திருமா, அம்மாவை நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்.

இந்த மாற்றத்தின் மூலம் திமுக அணி, கூடுதல் வலிமை பெற்றிருக்கிறது. இது, ஒரு வகையில் கருணாநிதிக்கு வெற்றிதான். திமுக கூட்டணி உடையும்; மைனாரிட்டி ஆட்சி கவிழும் என்று அதிமுகவும் மதிமுகவும் திரும்பித் திரும்பிச் சொல்லி வருகையில் நடப்புகள், தலைகீழாக உள்ளன. அதிமுகவிலிருந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சண்முகத்தைத் தலைமைக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் திமுக வெற்றி அடைந்திருக்கிறது. அவர் விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படுவதுடன் திமுக ஆதரவு உறுப்பினராகச் சட்டமன்றத்தில் தொடரவும் வாய்ப்பிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவுடன் நல்லுறவு பாராட்டி வந்ததும் இலவசத் தொலைக்காட்சி வழங்கும் குழுவில் இடம் பெற்றதும் திருமாவளவன், கலைஞருக்குக் கடிதம் எழுதியதும் இந்தக் கூட்டணிக்கு அச்சாரமாகவே கொள்ள இடமுண்டு. ஜெயலலிதா, திருமா விடயத்தில் போதுமான விழிப்புணர்வுடன் இல்லை என்பதையும் ஆனால், திருமா அரசியலில் தேறிவிட்டார் என்பதையும் இந்த மாற்றம் எடுத்துக் காட்டுகிறது.

நன்றி: தமிழ்சிஃபி

Tuesday, September 26, 2006

தமிழ்சிஃபி நவராத்திரி சிறப்பிதழ்

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தமிழ்சிஃபி இணைய இதழ், சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளது.

இதில்

எல்.ஆர். ஈஸ்வரி, பி.சுசீலா ஆகியோர் பாடிய அம்மன் பாடல்கள்; குடவாயில் சகோதரிகளின் குரலில் 20 பாடல்கள்; செளந்தர்ய லஹரியின் சுலோகமும் பொருளும் ஆகிய ஒலிப் பதிவுகளைக் கேட்கலாம்.

மேலும் செளந்தர்ய லஹரியின் இலக்கிய நயத்தையும் லட்சுமி - சரஸ்வதி ஆகியோருக்கு இடையிலான வேதாந்தக் கண்ணோட்டத்தையும் கல்யாணி வெங்கடராமன் அழகுற விவரித்துள்ளார். ஷைலஜா, நவராத்திரி சுபராத்திரி என்ற கட்டுரையில் இந்தியா முழுவதும் நவராத்திரி கொண்டாடப்படும் விதத்தை விளக்கியுள்ளார்.

மேலும் ந. பிச்சமூர்த்தியின் 'விஜயதசமி' சிறுகதையும் மகாகவி பாரதியின் பல்வேறு சக்திப் பாடல்களும் இச்சிறப்பிதழுக்கு வலிமை சேர்க்கின்றன.

நவராத்திரி கொண்டாடப்படும் முறைகள், தத்துவங்கள், கொலு அமைக்கும் விதம், வகைகள், நவராத்திரி விரதம், அம்மன்களின் பெருமைகள், சுண்டல் செய்யும் விதங்கள், நவராத்திரி நைவேத்தியப் பட்டியல்.... எனப் பலவும் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.

இந்தச் சிறப்பிதழ், வாசகர்களைக் கவரும் என்று நம்புகிறேன்.


Sunday, September 17, 2006

தந்தை பெரியார் சிறப்பிதழ்

தமிழ்சிஃபி வழங்கும் தந்தை பெரியார் சிறப்பிதழ்: செப்டம்பர் 17, பெரியாரின் 127ஆவது பிறந்த நாள். இந்நாளில் பெரியாரைப் பற்றிப் பெரியோர் பலரின் கருத்துகளை இங்கே நினைவுகூரலாம்.



Saturday, September 09, 2006

தமிழ்சிஃபியில் என் ஓராண்டுப் பணிகள்

2005 செப்டம்பர் 9 அன்று சிஃபியில் பணியில் சேர்ந்த நான், இந்த மாதம் 8ஆம் தேதியுடன் ஓராண்டினை நிறைவு செய்துள்ளேன். இணைய இதழ் ஆசிரியராக இந்த ஓராண்டில் நான் ஆற்றிய பணிகளுள் சில இங்கே:

வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் தயாரித்த சிறப்பிதழ்கள்:

நவராத்திரி சிறப்பிதழ் (2005)

தீபாவளி சிறப்பிதழ் (2005)

ஆண்டிறுதிச் சிறப்பிதழ் (2005)

பொங்கல் சிறப்பிதழ் (2006)

குடியரசு தினச் சிறப்பிதழ் (2006)

காதலர் தினச் சிறப்பிதழ் (2006)

ஜெ சிறப்பிதழ் (2006)

மகளிர் தினச் சிறப்பிதழ் (2006)

தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் (2006)

தேர்தல் 2006 சிறப்பிதழ் (2006)

லைலா சிறப்பிதழ் (2006)

ஃபிபா கால்பந்துத் திருவிழா (2006)

சுதந்திர தினச் சிறப்பிதழ் (2006)

சென்னை தினம் - 367 (2006)

பிள்ளையார் சதுர்த்தி சிறப்பிதழ் (2006)



என் அழைப்பை ஏற்றுத் தமிழ் சிஃபியில் எழுத்துப் பத்தி தொடங்கியவர்கள்:

வெங்கட் சாமிநாதன்
பாக்கியம் ராமசாமி
கல்யாணி வெங்கடராமன்
நேசகுமார்
பி.கே.சிவகுமார்
சுபமூகா
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
நாகேஸ்வரி அண்ணாமலை


ஒலிப் பத்தி தொடங்கியவர்கள்:

நா.கண்ணன்
ஷைலஜா
வ.ஐ.ச.ஜெயபாலன் - வாசுகி ஜெயபாலன்
ஸ்ரீதேவி்


புதிதாக வலையேற்றம் கண்ட இலக்கிய இதழ்:

வடக்கு வாசல்

தமிழ்சிஃபியின் புதிய பகுதிகள்:

செவிநுகர் கனிகள் (ஆடியோ)
திரை ஓடை - டிரெய்லர் (வீடியோ)
குறுஞ்செய்தி உலகம்
வாசகர் கடிதங்கள்

அறிமுகங்கள்:

ஆசிரியர் பரிந்துரை எனப்படும் Editor's choice, தமிழில்
சென்னை பாக்ஸ் ஆஃபீஸ் (Box office hit reports), தமிழில்
அரட்டையில் (Chat) பங்கேற்கும் நட்சத்திரங்களின் ஆங்கில பதில்கள், தமிழில்
தகவல் சித்திரங்கள் (Infographics), தமிழில்.


குறிப்பிடத்தகுந்தவை:

* தமிழ் இணைய இதழ்களைப் பொறுத்தவரை ஒலிப் பதிவுகளையும் ஒலிப் பத்திகளையும் அறிமுகப்படுத்தி தமிழ்சிஃபி, முன்னோடிப் பணியாற்றி வருகிறது. தரமான ஒலிப் பதிவுகளை எவர் அனுப்பினாலும் அதை வெளியிடச் சித்தமாய் உள்ளோம்.

* பெருகிவரும் குறுஞ்செய்திகளுள் சுவை / பயன் மிகுந்தவற்றைத் தொகுத்து வருகிறோம். இதுவும் ஒரு முன்னோடிப் பணியே. எவரும் தமக்கு வந்த குறுஞ்செய்திகளைத் தொகுத்து மின்னஞ்சலில் எமக்கு அனுப்பி வைக்கலாம்.

* கருத்துக் கணிப்புகளை அதிகப்படுத்தியதன் மூலம் தளத்திற்கும் வாசகர்களுக்கும் இடையில் ஊடாட்டங்கள் அதிகரித்துள்ளன. tamileditoratsifydotcom என்ற மின்னஞ்சல் முகவரியைத் தந்து, வாசகர்களின் கடிதங்களையும் படைப்புகளையும் கருத்துகளையும் வரவேற்று, வெளியிட்டு வருகிறோம்.

* மீயுரைக் குறிப்பு மொழியில் (எச்டிஎம்எல்) பல சிறப்பிதழ்களை உருவாக்கியுள்ளோம்.

* தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டிய மே மாதத்தில், தமிழ்சிஃபி தளத்தில் வாசகர்கள் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை (Page views), வழக்கத்தை விட இரு மடங்கானது. இத்தகைய எண்ணிக்கையை எட்டியது இதுவே முதல் முறை.

* சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, வாசகர்கள் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை (Page views), ஒரே நாளில் 5 மடங்கு வளர்ச்சி
அடைந்தது. இத்தகைய எண்ணிக்கையை எட்டியது இதுவே முதல் முறை.

* எழுத்தாளர் சுஜாதா, 2005ஆம் ஆண்டின் சிறந்த வலைமனையாகத் தமிழ்சிஃபியைத் தேர்ந்தெடுத்தார். (ஆனந்த விகடன்)


இனி


விரைவில் தமிழ்சிஃபி, ஒருங்குறியில் (யுனிகோடில்) வெளிவர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர்கள், எழுத்தாளர்கள், அனைத்துத் துறை சார்ந்த சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் தமிழ்சிஃபிக்கு வருகை தரவும் அதில் பங்கேற்கவும்
அன்புடன் அழைக்கிறேன்.

சிஃபிக்கு என்னையும் எனக்கு சிஃபியையும் அறிமுகப்படுத்திய நண்பர் ஆர்.வெங்கடேஷ், அடிப்படைகளை எடுத்துரைத்த நண்பர் ஏக்நாத், சிறந்த முறையில் ஆலோசனைகள் வழங்கிவரும் கே. வெங்கடேஷ், ராஜசேகர், சஸ்லின் சலீம், எனக்கு உறுதுணையாக இருக்கும் வேங்கடசுப்பிரமணியன்.... உள்பட இன்னும் பலருக்கும் இந்த வளர்ச்சியில் பங்குள்ளது. இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

Friday, September 08, 2006

உள்ளாடை அணியும் முன் ஒரு நிமிடம்

இப்பதிவை என் குரலில் கேட்க>>>>

2006 பிப்ரவரியில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. தூத்துக்குடி அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த ஆறு வயதுச் சிறுமி, தேள் கொட்டி இறந்தாள் என்பதே செய்தி. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது தெரியுமா?

பள்ளிக்கூடத்துக்கு வந்ததில் இருந்தே அந்தச் சிறுமி, 'வலிக்குது வலிக்குது' எனத் துடித்திருக்கிறாள். ஆசிரியர்கள் எங்கே என்று கேட்டபோது தன் ஜட்டியைக் காட்டியிருக்கிறாள். அவளைத் தனியிடத்தில் அழைத்துச் சென்று ஆடை விலக்கிப் பார்த்தபோது அவள் ஜட்டிக்குள் மஞ்சள் நிறத்தில் ஒரு தேள் இருப்பதை அவர்கள் கண்டார்கள். உடனே அதைப் பிடித்து நசுக்கிக் கொன்றிருக்கிறார்கள்.

ஆனால், சிறுமி தொடர்ந்து அழுதபடியே இருந்திருக்கிறாள். சரி, அவளை வீட்டில் கொண்டு விட்டுவிடுங்கள் என்று ஆசிரியர் ஒருவர் கூற,பள்ளிக்கூடப் பணியாளர், சிறுமியை அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்குப் போயிருக்கிறார். ஆனால், வீட்டில் அவளின் அம்மா இல்லை. அவர் பக்கத்தில் எங்கோ போயிருப்பதாக அண்டை அயலில் கூறியிருக்கிறார்கள். சரி, நான் போய் உன் அம்மாவைக் கூட்டி வருகிறேன்; இங்கேயே நில் என்று அந்தப் பணியாளர் போயிருக்கிறார். அவர் போய் அந்தச் சிறுமியின் அம்மாவை அழைத்து வருவதற்குள் இங்கே இந்தச் சிறுமி இறந்தே போனாள். அவள் உடல் தேளின் விஷத்தால் நீல நிறமாய் மாறியிருக்கிறது.

அதன் பிறகு ஆயிரம் முறை அழுது புரண்டார்கள். பள்ளிக்கூடத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டார்கள். ஆனால், இவற்றால் எல்லாம் என்ன பயன்?

அந்தச் சிறுமி தன் ஆடையைச் சரிவரச் சோதித்த பிறகே அணிந்திருக்கவேண்டும். அவளின் பெற்றோரும் அதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இவர்களை விட இந்தச் சிறுமி இறந்ததற்கு ஆசிரியர்களையும் பள்ளிக்கூட நிர்வாகத்தையுமே குற்றம் சாட்ட வேண்டியதாய் இருக்கிறது. தேள் கடித்திருக்கிறது என்று பள்ளிக்கூடத்தில் கண்டறிந்த பின் உடனடியாக அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க முதலுதவிகள்
செய்திருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் சிறுமியை அவள் வீட்டில் கொண்டு விடும் தவறான முடிவை எடுத்துத் தாமதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த அலட்சியத்தால் ஒரு பச்சிளம் உயிர் அநியாயமாகப் போய்விட்டது.

இங்கு ஆசிரியர்கள், தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்ததாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. கும்பகோணம் தீ விபத்திலும் 94 குழந்தைகள் அகால மரணம் அடைந்ததற்கு ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாமையும் ஒரு காரணம். பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆபத்தான கட்டத்தில் எத்தகைய முதலுதவிகள் செய்யவேண்டும் என்ற பயிற்சி கிடையாது. இதனால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.

இதைப் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். அவரின் உறவினர் ஒருவர் வீட்டில் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

அந்த வீட்டில் கணவனும் மனைவியும் தங்கள் கைக்குழந்தையுடன் வசித்திருக்கிறார்கள். ஒரு நாள் இரவு, தூளியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, வீரிட்டு அழுதது. அடுத்த அறையில் கணவனும் மனைவியும் இருந்திருக்கிறார்கள். கணவன், மனைவியிடம், 'குழந்தை அழுகிறது; போய்த் தூளியை ஆட்டித் தூங்க வை' என்று கூறியிருக்கிறான். அதற்கு அவன் மனைவியோ, 'ஏன் நான்தான் போகணுமா? நீங்க போகக் கூடாதா? உங்களுக்கு
அந்தக் கடமை இல்லையா?' என்று கேட்டிருக்கிறாள். இப்படியே இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் 'நீதான் போகணும்; இல்லாட்டா நான் போய்ப் பார்க்கமாட்டேன்' என்று வீம்பாக இருந்துவிட்டார்கள். அங்கேயோ குழந்தையோ, 'வீல் வீல்' என்று அழுது அழுது தானே அடங்கிவிட்டது.

காலையில் உறக்கத்திலிருந்து எழுந்ததும் கணவனும் மனைவியும் குழந்தையை வந்து பார்த்திருக்கிறார்கள். அங்கே அந்தக் குழந்தை இறந்து கிடந்தது. ஏன் என்று பதற்றத்துடன் குழந்தையைத் தூக்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது, குழந்தையை விட்டிருந்த தூளியில் ஒரு தேள் இருந்திருக்கிறது. அது கொட்டக் கொட்ட, அந்தக் குழந்தை அழுதிருக்கிறது. ஆனால் விவரம் தெரியாத பெற்றோர்கள் வெட்டி வீம்பின் காரணமாகத் தங்கள் குழந்தைக்குத் தாங்களே எமனாகிவிட்டார்கள். இனி என்னைத் தூக்கவே வேண்டாம் என்பதுபோல் அந்தக் குழந்தை போய்ச் சேர்ந்துவிட்டது.

தேள் என்பது, பாம்பு அளவுக்குக் கொடிய விஷம் உடையது இல்லை. கடித்தவுடன் இறந்துவிடுவார்கள் என்ற நிலை இல்லை. கடித்ததும் உடனே முதலுதவிகள் செய்தால் கடிபட்டவர் பிழைத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால், அலட்சியம் என்பது தேளைக் காட்டிலும் கொடியது. அது, இருந்தால் பெருங்கேடு உறுதி.

அன்புக்குரிய நண்பர்களே, இந்த இரண்டு சம்பவங்களைக் கூறியதற்குக் காரணம் உண்டு. தேளிடம் மட்டும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காக இவற்றைக் கூறவில்லை. நான் நிறைய குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். மிட்டாய், சாக்லேட், பிஸ்கேட் போன்ற
தின்பண்டங்களைப் பாதி தின்றுவிட்டு மீதத்தைத் தன் சட்டைப் பையிலோ, கால்சட்டை அல்லது பாவாடையின் பையிலோ போட்டுக்கொள்வார்கள். அந்தச் செயல், எறும்புகளுக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்தது போல்தான். அந்த ஆடைகளை அணிந்திருந்தாலும் கழற்றி வைத்திருந்தாலும் எறும்புப் படை, அவற்றை மொய்த்துவிடும்.

இன்னும் சிலர் எச்சில் பண்டங்களையும் இனிப்புகளையும் சாப்பிட்டு விட்டுத் தங்கள் ஆடையிலேயே தங்கள் கையைத் துடைத்துக்கொள்வார்கள். அதனாலும் எறும்பு எழுச்சியுடன் அணிவகுத்து வரும்.

இன்னும் பலரின் உள்ளாடைகளில் எறும்பு மொய்க்கக்கூடும். பெண்களிள் அதுவும் குறிப்பாகத் தாய்மார்களின் உள்ளாடைகளில் இந்த ஆபத்து அதிகம். பால் சுரந்த ரவிக்கைகளிலும் அக்குளிலும் எறும்புகள் அதிகமாக மொய்க்கும். ஆண்களின் பனியன், ஜட்டி போன்ற உள்ளாடைகளிலும் இந்த ஆபத்து அதிகம் உள்ளது.

உள்ளாடைகள் மட்டுமல்லாமல் எல்லா வகை ஆடைகளிலும் எறும்பு மொய்க்க வாய்ப்பு உண்டு. எனவே எந்த ஆடையை அணியும் முன்னும் அதை நன்கு உதறிய பிறகே அணியவேண்டும். நிறைய பேர், பாதி வழியில் வந்த பிறகு எறும்பு கடிப்பதை உணர்வார்கள். நடு வழியில் எறும்பு ஊசி போடும் போது, நம்மால் ஆடையைக் கழற்றி உதறி அவற்றை வெளியேற்றவும் முடியாது. நாம் அப்போது உண்மையிலேயே இருதலைக்கொள்ளி எறும்பாக ஆகிவிடுவோம்.

உள்ளாடைகள், ஆடைகள் மட்டுமல்லாமல் தொப்பி, ஹெல்மட் போன்றவற்றை அணியும் முன்னும் காலுறை, கையுறை போன்றவற்றை அணியும் முன்னும் நன்கு சோதித்த பிறகே அணியவேண்டும். எறும்பு கடிப்பதால் என்ன பெரிதாய் ஆகிவிடும் என்று நினைக்காதீர்கள். பரபரப்பான சாலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது நறுக்கென எறும்பு ஊசி போட்டால் எவ்வளவு பெரிய விபத்து நிகழக்கூடும் என்பதை நினைத்துப் பாருங்கள். பேருந்தின் படிக்கட்டில் தொங்கவே கூடாது என்றாலும் அப்படித் தொங்கும்போது எறும்பு கடித்தால் என்ன ஆகும்? மிக முக்கியமான தருணங்களில் எறும்புகூட பெரிய விபத்துகளை உண்டாக்கிவிடக்கூடும்.

எறும்பா, தேளா, அரணையா, பூரானா, கரப்பானா, பாம்பா, கொசுவா, பெயர் தெரியாத பூச்சியா... எது நம்மைக் கடிக்கப் போகிறது என்பது தெரியாது. ஆனால், நாம் கவனக் குறைவாக இருக்கும் நேரத்தை எதிர்பார்த்து இவை அனைத்தும் காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

இனி, உள்ளாடை முதற்கொண்டு எந்த ஆடை அணிவதாக இருந்தாலும் நன்றாக உதறிவிட்டுத்தான் அணியவேண்டும். அது, கைக்குட்டையாகக் கூட இருக்கலாம். ஆனால், கவனம் முக்கியம்.

தேளின் விஷக் கொடுக்குகளுக்குப் பலியான அந்த ஆறு வயதுச் சிறுமிக்கு நம் விழிப்புணர்வின் மூலமாகத்தான் நாம் இரங்கல் செலுத்தவேண்டும்.

சில்லுனு ஒரு காதல் - திரை விமர்சனம்



காதல் மிகவும் இயல்பானது; ஆனால், அதைத் திரையில் இயல்பாகக் காட்டுவது பெரிய சவால்; இருவருக்கு இடையில் நடக்கும் மனப் போராட்டங்களை, மவுனப் போர்களை, ஒரு பூவினும் மெல்லிய உணர்வுகளைத் திரையில் கச்சிதமாகக் கொண்டு வருவது, சற்றே கடினம்தான். அந்த முயற்சியில் சில்லுனு ஒரு காதல், சிலுசிலுன்னு ஒரு முத்திரை பதித்துள்ளது.

விசில் மொழியில் பேசிக்கொள்ளும் கணவன் - மனைவி, சில்லு சில்லு என்று மனைவியைச் செல்லமாகக் கணவன் அழைப்பது, 'இந்த உலகிலேயே நான்தான் மிக மகிழ்ச்சியான ஆள்' என்று கணவன் உரக்கக் கூறுவது, காதலியின் பெயரைத் தன் குழந்தைக்கு வைப்பது, நள்ளிரவில் குளியலறையிலிருந்து செல்பேசியில் ரகசிய முத்தம் கொடுப்பது, கணவனுக்காக அவன் பழைய காதலியை மனைவி தேடி அழைத்து வருவது, அன்புக்கு உரியவர்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளும் ஊடல்...... என மென்மையான உணர்வுகளைப் படம் முழுவதும் இயக்குநர் கிருஷ்ணா அழகாகக் காட்டியிருக்கிறார்.

தென்காசிக்கு அருகில் உள்ள கிராமத்தில் குந்தவி (ஜோதிகா)யும் அவள் தோழிகள் இருவருமாக மூன்று பேர். காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். குந்தவியின் தோழிகளுக்கு அதே கிராமத்திலேயே காதலர்கள் கிடைத்துவிட, குந்தவிக்கு அப்படி யாரும் கிடைக்கவில்லை. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க வேண்டிய நிலை. வேண்டா வெறுப்பாக கெளதமை (சூர்யா) மணக்கிறாள். அவ்வளவுதான் என் வாழ்க்கையே போச்சு என்று எண்ணுகிறாள். ஆனால், அடுத்த காட்சியில் இருவரும் மும்பையில் இருக்கிறார்கள். அதற்குள் ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சூர்யா இப்போது, கார் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை மெக்கானிக். இப்போது அவர்கள், உண்மையிலேயே காதலர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்புக்குச் சான்றாக ஒரு குழந்தை.

ஒரு நாள் சூர்யாவின் பழைய டைரியை ஜோதிகா பார்க்கிறார். அதில் அவரின் பழைய காதல் கதையைச் சூர்யா விவரித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னை விட இளைய மாணவியான பூமிகாவைச் சூர்யா காதலிக்கிறார். பூமிகாவோ, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செல்ல மகள். செல்வச் செழிப்புக்குக் கேட்க வேண்டுமா? அப்படி இருந்தும் அவர்களுக்கு இடையில் காதல் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கிவிடுகின்றன. பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவர்களுக்கு இடையில் பதிவாளர் அலுவலகத்தில் திருமண ஏற்பாடு நடக்கிறது. சூர்யா, பூமிகாவின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். முறைப்படி பதிவுத் திருமணம் நடப்பதற்குள் எம்.பி. அடியாள்களுடன் வந்து நிறுத்திவிடுகிறார். அதன் பிறகு பூமிகாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதன் பிறகுதான் மரணப் படுக்கையில் இருக்கும் தன் சித்தப்பாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி, சூர்யா, ஜோதிகாவை மணக்கிறார்.



இந்தக் கதை தெரிந்ததும் ஜோதிகாவால் தாங்க முடியவில்லை. அந்த டைரியில் 'அவளுடன் ஒரு நாள் வாழ்ந்தால்கூட போதும்; ஒரு யுகம் வாழ்ந்தது போல் இருக்கும்' என்று சூர்யா எழுதியிருப்பார். தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற ஜோதிகா, பூமிகாவைத் தேடிச் செல்கிறார். கடைசியில் கண்டுபிடித்துத் தன் வீட்டுக்கு அழைக்கிறார். அங்கு பூமிகாவையும் சூர்யாவையும் ஒரு நாள் முழுக்கத் தனித்திருக்கவிட்டு ஜோதிகா, குழந்தையுடன் வெளியே சென்றுவிடுகிறார். தனித்திருக்கும் கணவனும் பழைய காதலியும் ஒரு நாளில் என்ன செய்கிறார்கள்? அதை நீங்கள் வெள்ளித் திரையில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

சூர்யா - ஜோதிகாவின் நடிப்பு, மிகச் சிறப்பாக உள்ளது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களின் திறமையால் பல காட்சிகள், மனத்தில் தங்கிவிடுகின்றன. மிகப் பொருத்தமான ஜோடி என்று உலகமே சொல்லுகிறது. விரைவில் ஒரு கூட்டுப் பறவைகள் ஆகப் போகிறார்கள். சூர்யாவுக்கும் ஜோவுக்கும் இந்தப் படம், திருமணப் பரிசு. இவர்களின் திருமணத்தைப் பார்க்க முடியவில்லை என்று யாரும் மனம் வருந்தவேண்டாம். படத்தில் அவர்களின் திருமணக் காட்சி, விமரிசையாகப் பதிவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு எப்படி வாழ்வார்கள் என்பதையும் படம் எடுத்துக் காட்டுகிறது.

பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு கதையைப் பார்ப்பது போல படமும் காட்சியமைப்புகளும் இயல்பாக இருக்கின்றன. சூர்யா - ஜோதிகாவின் மகளாக வரும் பேபி ஷ்ரேயா, கலக்குகிறாள். அவள் நடித்துள்ள முதல் படம் இதுதான். மிக அழகாகக் காட்சியுடன் ஒன்றி நடித்திருக்கிறாள். வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதிகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆயினும் அந்தப் பகுதிகள் இல்லாவிட்டாலும் கதையோட்டம் தடைப்பட்டிருக்காது. வடிவேலு, மும்பையின் 'அந்த' அனுபவத்திற்கு ஆசைப்பட்டுச் சென்று, அலிகளிடம் மாட்டிக்கொள்வதான காட்சி, ரசக் குறைவு.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடல்களும் நவீனமாக உள்ளன. பின்னணி இசையும் பாராட்டத்தக்க அளவில் உள்ளது. முழுக்க முழுக்க விசிலை மட்டுமே வைத்து ஒரு பாடலை அமைத்திருப்பது சிறப்பு. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம், மச்சக்காரி மச்சக்காரி, சில்லுன்னு ஒரு காதல் ஆகிய பாடல்கள் மனத்தைக் கவர்கின்றன. மேற்கத்தியத் தாக்கம், ஒவ்வொரு பாடலிலும் தெரிகிறது. சில பாடல்களில் பாடல் வரிகளைக் கண்டு பிடிப்பவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஆன்டனியின் படத் தொகுப்பும் கவர்ச்சிகரமாக உள்ளன. நெருக்கக் காட்சிகளில் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோரின் அழகு தனிப்படத் தெரிகிறது.



வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாகத் திரையில் படைத்துள்ள புதுமுக இயக்குநர் கிருஷ்ணாவைப் பாராட்டலாம். ஆயினும் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் இருக்கும்போது பூமிகாவின் அப்பா(எம்.பி.), மும்பைக்கு வந்து எதற்காகச் சூர்யாவை முறைக்கவேண்டும்? சூர்யாவால் பூமிகாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பூமிகாவால் ஏன் சூர்யாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை? போன்ற சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

திருமணத்திற்கு முந்தைய காதலை விட, பிந்தைய காதலே சிறந்தது என்று ஒரு குழந்தையை வைத்துச் சொல்ல வைத்துள்ளார் இயக்குநர். குழந்தைக்குக் கூட தெரிகிறது; பெரியவர்களுக்குத் தெரிய வேண்டாமா? என்று சொல்லத்தானோ!

சூர்யாவுக்கும் ஜோவுக்கும் வீட்டுப் பெரியவர்கள், திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

========================
நன்றி: தமிழ்சிஃபி

Saturday, August 26, 2006

தமிழ்சிஃபியின் பிள்ளையார் சதுர்த்தி சிறப்பிதழ்

ஆகஸ்டு 27 அன்று கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்சிஃபி இணைய இதழில் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம்.

Photobucket - Video and Image Hosting

இதன் சிறப்பம்சங்களாவன:

மகாகவி பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை

'இவ்வளவு ஜனரஞ்சகப் பிரியரான ஒரு கடவுள் வேறு உண்டா?' - வெங்கட் சாமிநாதனின் சிறப்புக் கட்டுரை.

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு: சில சுவையான செய்திகள்: கல்யாணி வெங்கடராமன்

வெளிநாடுகளில் விநாயகர்: ஷைலஜா

பிள்ளையாரின் பல்வேறு வகையான தோற்றங்களை வண்ண மயமாக இதில் நீங்கள் கண்டு களிக்கலாம்.

இந்தச் சிறப்பிதழுக்கு வருகை தந்து இன்புறுமாறு வாசகர்களை அழைக்கிறேன்.

Friday, August 18, 2006

இந்திய ரூபாய்: மாறிவரும் முகங்கள்

ஆங்கில மூலம்: ஸ்ரீதேவி தமிழில்: அண்ணாகண்ணன்

இந்தியாவின் 60ஆவது விடுதலைத் திருநாளிற்காகத் தயாரித்த சிறப்புப் பகுதி இது. சிஃபி.காமின் நிதித் தளத்திற்கு ஆசிரியராக உள்ள ஸ்ரீதேவி, இணையத்தின் பல்வேறு பக்கங்களிலிருந்து செய்திகளைத் திரட்டி இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர், ரூபாயின் வரலாற்றை ஒளிப் (வீடியோ) பதிவாகவும் தயாரித்தார். தில்லைகுமரன் படத் தொகுப்புப் பணியாற்றினார். அதே ஒளிப்பதிவைத் தமிழிலும் மொழிமாற்றலாமே என்ற அவரின் யோசனைக்கு ஏற்ப, அவரின் உரையைத் தமிழாக்கினேன்.

அந்த ஒளிப் (வீடியோ) பதிவை இங்கே பார்க்கலாம்:

ஆங்கிலத்தில் >>>>

குரல்: ஸ்ரீதேவி

தமிழில் >>>>

குரல்: அண்ணாகண்ணன்



'இந்திய ரூபாய்: மாறிவரும் முகங்கள்' உரையின் தமிழாக்கம் வருமாறு:

ஒரு ரூபாய்.

இதைக் கேட்டதும் உங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறது? பூவா தலையா என்று நாம் அநேக முறைகள் சுண்டிப் பார்த்த அதே நாணயம்; கிரிக்கெட் ஆட்டங்களில் யார் முதலில் ஆடுவது என்பதைத் தீர்மானிக்கும் அதன் பக்கங்கள். அசோகச் சக்கரத்தைக் கொண்ட தலை ஒருபுறம்; ஒன்று என்ற எண்ணுடன் கோதுமைக் கதிர்கள் பூவாகச் சிரிக்கும் மறுபுறம்; இதுதான் உங்கள் மனத்தில் தோன்றிய சித்திரமா? அந்தச் சாதாரண மெல்லிய, வெள்ளி நாணயத்தின் பின்னால் ஒரு சரித்திரமே இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 59 ஆண்டுகள் ஆகிவிட்டன; இந்நிலையில் இந்த நாணயத்தின் பல முகங்களில் சிலவற்றை இப்போது காணலாம்.

உண்மையில் இந்திய நாணயத்தின் வரலாறு என்பது, கி.மு.6ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. உலகிலேயே முதலில் நாணயத்தைப் புழக்கத்தில் விட்ட மிகச் சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. ஆனால், அவை வெள்ளி நாணயங்கள்.

அது ஒரு புறம் இருக்க, 1770களில்தான் காகித நாணயம் புழக்கத்திற்கு வந்தது. பாங்க் ஆஃப் இந்துஸ்தான் (1770-1832), வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு நிறுவிய த ஜெனரல் பாங்க் ஆஃப் பெங்கால் அண்டு பீகார் (1773-75) ஆகியவையும் பெங்கால் வங்கியும் (1784-91)தான் காகித நாணயங்களை முதலில் வெளியிட்டன.

1961இல் அறிமுகப்படுத்தப்பட்ட காகித நாணயச் சட்டம், ஆங்கிலேய ஆட்சிக்கு இந்தியா முழுவதும் நாணய அச்சடிப்பு உரிமையை ஏகபோகமாக வழங்கியது. காகித நாணய நிர்வாகம், மின்ட் மாஸ்டர்ஸ், கணக்கியல் அதிகாரிகள், நாணயக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரிடம் இருந்தது.

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல்கட்ட காகித நாணயங்களில் அரசி விக்டோ ரியாவின் உருவப் படம் இருந்தது. இது, 10, 20, 50, 100, 1000 என்ற மதிப்புகளில் வெளிவந்தது. இவை அனைத்தும் ஒரே முகத்தைக் கொண்டிருந்தன. அனைத்தும் இரு மொழிகளில் அமைந்திருந்தன. லேவர்ஸ்டாக் காகித ஆலைகளில் இந்தக் காகித நாணயங்கள், கையால் அச்சடிக்கும் எந்திரத்தில் அச்சடிக்கப்பட்டன. காகித நாணயங்களின் பாதுகாப்பிற்காக வாட்டர்மார்க் எனப்படும் நீர்முத்திரை, அச்சடிக்கப்பட்ட கையொப்பம், பதிவு எண்கள் ஆகியவை அதில் கட்டாயம் ஆக்கப்பட்டன.

பிரிட்டிஷ் இந்தியாவின் காகிதப் பணமானது, பணப் பரிவர்த்தனைக்குப் பெரிதும் உதவியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் காகிதப் பணத்தை, பாதியாக வெட்டினார்கள். ஒரு பாதியை முதலில் அனுப்பி, அது கிடைத்துவிட்டது என்று ஒப்புகைச் சீட்டு கிடைத்த பிறகே அடுத்த பாதியை அனுப்பினார்கள். இந்த முறை, 1923இல் மன்னர்களின் உருவப் படம் அறிமுகமாகும் வரை தொடர்ந்தது.

அரசி விக்டோ ரியாவின் உருவப் படம் கொண்ட, ஒத்த தோற்றமுடைய, 1867இல் அறிமுகமான இந்தப் பணம், போலிப் பணம் உருவான காரணத்தால் திரும்பப் பெறப்பட்டது.

முதலாம் உலகப் போர்க் காலத்தில் காகிதப் பணத்தைச் சிறிய மதிப்புடையதாக விநியோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அணாக்கள் புழக்கத்தில் இருந்த காலம் அது. அப்போது 1917 நவம்பர் 30ஆம் தேதி நூதனமான ஒரு ரூபாய்த் தாள் அறிமுகம் ஆனது. அதைத் தொடர்ந்து
இரண்டு ரூபாய் எட்டணாத் தாளும் அறிமுகமானது. இந்த ரூபாய்த் தாள்களின் உற்பத்திச் செலவு அதிகமாக இருந்ததால் 1926 ஜனவரி 1 அன்று நிறுத்தப்பட்டது.

இந்தப் பணத் தாள்கள், முதலில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படத்தைத் தாங்கியிருந்தன. 1923 மே மாதத்தில் ஒரு பத்து ரூபாய்த் தாளிலும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் வீற்றிருந்தது. மன்னரின் உருவப் படத்தை அச்சடிப்பது, பிரிட்டிஷ் இந்தியாவின் அனைத்து காகிதப் பணத்திலும் இன்றியமையாத அம்சமாக விளங்கியது.

பணத்தை அச்சடிக்கும் பொறுப்பை இந்திய அரசின் நாணயக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து 1935 ஏப்ரல் 1 திங்கள் கிழமை அன்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது. 1934 ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின்படி ரிசர்வ் வங்கிக்கு இந்திய அரசின் சார்பில்
நாணயங்களை விநியோகிக்கும் உரிமை உண்டு.

இந்த வங்கி, 1938இல் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படத்துடன் முதன் முதலில் ஐந்து ரூபாய்த் தாளை வெளியிட்டது. அதே ஆண்டு பிப்ரவரியில் 10 ரூபாய் நோட்டு அறிமுகமானது; மார்ச்சில் நூறு ரூபாய்த் தாளும் ஜூனில் ஆயிரம், பத்தாயிரம் ரூபாய்த் தாள்களும்
அறிமுகப்படுத்தப்பட்டன.

போர்க்காலம் என்பதால் 1940 ஆகஸ்டில் ஒரு ரூபாய்த் தாள், மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், போரின் போது ஜப்பானியர்கள், உயர்தரமான போலி நாணயங்களை இந்தியாவில் புழக்கத்தில் விட்டனர். இதனால் ரூபாய்த் தாளில் உள்ள வாட்டர் மார்க் எனப்படும் நீர்முத்திரையில் மாற்றம் வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. ஆறாம் ஜார்ஜ் மன்னரின் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டும் கொண்டிருந்த ரூபாய்த் தாள்கள், அவரின் மார்பளவுப் படத்துடன் வெளிவந்தன.

ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் கொண்ட பணம், 1947ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்தது. அதன் பிறகு சுதந்திர இந்தியாவின் பணம் வெளிவரத் தொடங்கியது.

சுதந்திரத்திற்குப் பிறகு 1949இல் இந்திய அரசு, புதிய ஒரு ரூபாய்த் தாளை வெளியிட்டது. முன்பு மன்னர் படம் இருந்த இடத்தில் மகாத்மா காந்தியின் படத்தைப் பரிசீலித்துவிட்டு இறுதியாக, அசோகச் சின்னமும் சிங்க முகமும் பணத்தில் இடம்பிடித்தன. அப்போதுதான் இன்று பிரபலமாக உள்ள இந்திய ரூபாய் பிறந்தது.

அடுத்த முறை பணத்தை எடுக்கும் போது அது வெறும் தாள் இல்லை; இந்திய சுதந்திரத்தின் அத்தாட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tuesday, August 15, 2006

தமிழ்சிஃபி விடுதலைத் திருநாள் சிறப்பிதழ்

இந்தியா, விடுதலை பெற்று 60ஆவது ஆண்டு தொடங்கியுள்ள இந்தத் தருணத்தில் அதைக் கொண்டாடும் விதமாகச் சிறப்பிதழ் ஒன்றைத் தமிழ்சிஃபியில் தயாரித்துள்ளோம்.

Photobucket - Video and Image Hosting

இதில்

1947 ஆகஸ்டு 15 அன்று நள்ளிரவில் நேரு ஆற்றிய முதல் உரை,

ஏஆர் ரகுமானின் 'வந்தே மாதரம்' ஒளிப்பதிவு,

நா.கண்ணனின் 'இந்திய சுதந்திரம்: உலக நாடுகளுடன் ஓர் ஒப்பீடு' என்ற ஒலிப் பதிவு

பி.கே.சிவகுமாரின் 'கண்டுணர்ந்த காந்தி' என்ற புதிய பத்தி

வெங்கட் சாமிநாதன், காந்தியை நேரில் கண்ட அனுபவம்

விழியன், ஸ்ரீ ஆகியோரின் சுதந்திர தினச் சிந்தனைகள்

திலகபாமா, அண்ணாகண்ணன், ஷக்திப்ரபா ஆகியோரின் கவிதைகள்

சுதந்திரப் போராளிகளின் புகைப்படத் தொகுப்பு

பாரதியாரின் தேசபக்திப் பாடல்களின் ஒலி வடிவம்

மஞ்சரி மாத இதழின் 'சுதந்திர'ப் படைப்புகள்

........ உள்பட பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

வாசகர்கள், சிறப்பிதழுக்கு வருகை தருமாறு வேண்டுகிறேன்.

அனைவருக்கும் எமது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Friday, July 28, 2006

தமிழில் பெயரும் வரிவிலக்கும்

தமிழில் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்று நடப்பு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. உடனே இது தொடர்பான விவாதம் தொடங்கிவிட்டது.

பெயரை மட்டும் தமிழில் வைத்தால் போதுமா? படம் முழுக்கத் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு. பா.ம.க.வோ, பெயரை மட்டும் தமிழில் வைத்திருந்தால் 50 சதமும் படம் முழுக்கத் தமிழில் பேசி, தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் விதத்தில் படம் எடுத்திருந்தால் முழுமையான நூறு சத வரிவிலக்கும் அளிக்கலாம் என்று கூறியது.



'தமிழில் பெயர் வைக்கும் எல்லா தமிழ் திரைப்படங்களுக்கும் வரி விலக்கு என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்க் கலாசாரத்தைச் சீரழிக்கும் வகையில் இன்றைய தமிழ் திரைப்படங்கள் அமைந்துள்ளன. அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கக் கூடாது. முழுக்க முழுக்க தமிழில் பேசி, தமிழ் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி, எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்க வேண்டும்' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' என்ற தலைப்பிலான புதிய படத்தை, 'உனக்கும் எனக்கும்' என்று பெயர் மாற்றிவிட்டார்கள்.





அதே போல் சூர்யா-ஜோதிகா-பூமிகா நடிக்கும் ஜில்லுன்னு ஒரு காதல் என்ற படமும் சில்லுனு ஒரு காதல் எனப் பெயர் மாறியுள்ளது. எந்தப் போராட்டமும் நடத்தாமலே இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்திருப்பது தமிழக அரசுக்கு வெற்றிதான்.

இதே பாணியை இனி வரும் திரைப்படங்களும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கலாம். வடமொழிப் பெயர்களிலும் பல்வகை பெயர்ச் சொற்களிலும் பெயர் வைத்தால் அப்போது என்ன ஆகும்?

இப்போது எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்கள் அனைத்தும் ஓரளவு தமிழ்ப் பெயர்களுடனே உள்ளன என்பது ஆறுதல் தரும் செய்தி.

மாயக் கண்ணாடி, கிழக்குக் கடற்கரைச் சாலை, தர்மபுரி, நான் கடவுள், திமிரு, பேசும் தெய்வங்கள், தாமிரபரணி, தீபாவளி, அரண், தண்டாயுதபாணி, தீக்குச்சி, வசந்தம், முனி, பீமா, கண்ணம்மாபேட்டை, திருடி, ஆவணித் திங்கள், அகரம், ஒரு பொண்ணு ஒரு பையன், பொறி, மனசுக்குள்ளே, பண்டிகை, தொடாமலே, செல்லா, சிபி, பொன்னரசன், பிரியாமலே, வெடக்கோழி, நெஞ்சம் மறப்பதில்லை, மெய்க்காவலன், இது காதல் வரும் பருவம், ஆடும்
கூத்து, புதுப் புது ராகம், என் உயிரினும் மேலான, மனதோடு மழைக்காலம் ஆகியவை ஓரளவு தமிழ்ப் பெயர்களே (சிலவற்றில் வடமொழி ஆதிக்கம் உள்ளபோதிலும்).

இதில் என்ன சிக்கல் என்றால் நிறைய ஒற்றுப் பிழைகளோடு இந்தப் படங்கள் வெளிவருகின்றன. 'திருட்டுப் பயலே' என்று இருக்கவேண்டிய பெயர், 'திருட்டு பயலே' என்று இருந்தது. 'கிழக்குக் கடற்கரைச் சாலை' என இருக்க வேண்டிய படம், 'கிழக்கு கடற்கரை சாலை' என அமைந்துவிடும். இவை, தமிழ்ப் பெயர்கள் என்றாலும் பிழையான
தமிழ்ப் பெயர்கள். சொல்வதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்பதால் 'தினத்தந்தி' தமிழில் இந்தப் பெயர்கள் வெளிவர வாய்ப்பு உண்டு. எண்சோதிடம், எழுத்துச் சோதிடம், பெயர் சோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட திரையுலகினர் இப்படிப் பெயர் வைத்து விடுகின்றனர். இப்படிப் பெயர் வைத்தாலும் வரிவிலக்கு உண்டா?

மேலுள்ளவை மட்டுமல்லாமல் மேலும் பல திரைப்படங்களும் தயாரிப்பில் உள்ளன. ஜோகி, ஜாம்பவான், சக்கரவர்த்தி,ஜூலை காற்றில், குருஷேத்திரம், சூர்யா, கிளியோபாட்ரா, 1999, காதல் துரோகி, எம்டன் மகன், நெஞ்சில் ஜில் ஜில், போக்கிரி, செவன், வாத்தியார், வைத்தீஸ்வரன்... என வரும் தலைப்புகள், தமிழக அரசின் அறிவிப்பினால் மாறுமா?

நன்றி: தமிழ்சிஃபி

Monday, July 17, 2006

இம்சை அரசன் 23-ம் புலிகேசி - திரை விமர்சனம்

Photobucket - Video and Image Hosting


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் சரித்திர காலப் படம். விகடனில் வெளிவந்த கேலிச் சித்திரங்கள், இரண்டரை மணி நேரப் படமாக நீண்டுள்ளன. வடிவேலு இரட்டைக் கதாநாயகனாக மிகச் சிறந்த முறையில் நடித்துள்ளார். அவருடைய மேல்நோக்கிய கூர்மீசை, அவருடைய பாத்திரப் படைப்புக்கு மெருகு சேர்த்துள்ளது.

நாகேஷ், மனோரமா ஆகியோர், அரசன் - அரசி. அவர்களின் 22 பிள்ளைகள் பிறந்து உடனே இறந்துவிடுகின்றனர். அதன் பிறகு இரட்டைப் பிள்ளைகள் பிறக்கிறார்கள். சோதிடர்களின் உதவியால் அவர்களில் ஒருவன் சொல்புத்தியுடனும் அடுத்தவன் சுயபுத்தியுடனும் இருப்பார்கள் என்று தெரிகிறது. நாசர், மனோரமாவின் தம்பியாகவும் அரசவையில் ராஜகுருவாகவும் இருக்கிறார். அவருக்கு அரச பதவியின் மீது ஒரு கண். இதனால், பிறக்கும் குழந்தையைத் தன் சொல்கேட்கும் கிளிப்பிள்ளையாக ஆக்க முடிவு செய்கிறார். ஒரு குழந்தையைக் கண் காணாத இடத்தில் விடச் சொல்கிறார். ஆற்றில் விடப்படும் அந்தக் குழந்தை, உக்கிரபுத்தன் என்ற பெயரில், வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் வளர்கிறது. அறிவாளியாகவும் தேசப் பற்று மிக்கவனாகவும் இந்தக் குழந்தை வளர்கிறது.

அதே நேரத்தில் 23ஆம் குழந்தையாகப் பிறந்து அரண்மனையில் வளரும் சொல்புத்தி குழந்தைக்கு 23ஆம் புலிகேசி என்று பெயர் சூட்டுகிறார்கள். அவனை இளம் வயதிலிருந்தே அசடாக வளர்க்கிறார், ராஜகுருவாக வரும் நாசர். அவன், வளர்ந்தாலும் முழு முட்டாளாகவும் பித்துக்குளித்தனத்துடனும் விளங்குகிறான். ஆங்கிலேய ஆட்சிக்குக் கப்பம் கட்டுபவனாக, கோழையாக, பெண்பித்தனாக, மக்கள் நலனில் அக்கறை அற்றவனாக, இன்னும் கேட்டால் அவர்கள் நலனுக்குக் கேடு விளைவிப்பவனாக, கள்வர்களின் கூட்டாளியாக, பேராசைக்காரனாக... இப்படிப் பல குணங்கள் கொண்டவனாக முதல் வடிவேல் விளங்குகிறார். இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக அவரின் கோமாளித்தனம் உள்ளது. படிக்கட்டுப் பிடியில் பட்டுத் துணியைப் போட்டுச் சறுக்கு மரம் விளையாடுவதில் தொடங்கி, 'தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பயல் கட்டையால் அடிப்பான். அவன் யார்?' என விடுகதை போடுவது வரைக்கும் அவர் கலக்கியிருக்கிறார்.

கோமாளி வடிவேலுவை வைத்துச் சந்தடி சாக்கில் நடப்பு விவகாரங்களை அருமையாகக் கிண்டல் அளித்துள்ளார், இயக்குநர் சிம்புதேவன். கொக்ககோலா, பெப்சி பானங்களைக் கிண்டல் செய்யும் விதமாக, அக்காமாலா, கப்சி என்ற பெயர்களில் பானங்களை ஆங்கிலேயர்கள் வந்து தொடங்குகின்றனர். அந்தப் பானங்களை வாங்கிக் குடியுங்கள் என்று உள்ளூர் நடிகர்கள் விளம்பரம் செய்கிறார்கள். 2 வீசம் அடக்க விலையுள்ள அவற்றை 10 வீசம் என அநியாய விலைக்கு விற்கிறார்கள். இப்படியாக அயல்நாட்டுப் பானங்களைக் கிண்டல் செய்கிற இயக்குநர், அடுத்துக் கிரிக்கெட்டையும் கேலி செய்துள்ளார்.

இருவேறு சாதியினர் மோதிக்கொள்ள, ஜாதிச் சண்டை மைதானம் என்ற ஸ்டேடியத்தை அரசன் வடிவேலு தொடங்கிவைக்கிறான். அதில் அதிகம் பேரை அடித்த சச்சிதானந்தத்துக்கு சிறப்பாகச் சண்டை போட்டவன் என்பதற்காகப் பரிசு கொடுக்கிறார்கள். இந்தச் சண்டையின் இடைவேளையில் அக்காமாலா, கப்சி பானங்களை விற்கிறார்கள் என்ற நையாண்டி ரசிக்கவைத்தது.

நோஞ்சானான தன்னை, பெரிய பலசாலி போல வரைந்து பிரமாண்டமாக நிறுத்துகிறான். 'எதிர்வரும் தலைமுறைக்கு 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்று தெரியவா போகிறது? வரலாறு ரொம்ப முக்கியம்' என்று வடிவேலு பேசும்போது, அந்த இடத்தில் அவரைக் கோமாளியாகக் கருத முடியவில்லை. இது, உண்மையிலேயே மிகவும் புத்திசாலித்தனமான யோசனை.

நடை, உடை, பாவனை அனைத்தின் மூலமும் வடிவேலு இந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இவரோடு ஒப்பிடும்போது உக்கிரபுத்தனாக வரும் தம்பி வடிவேலுவிற்கு வாய்ப்பு குறைவுதான். ஆனால், அவன் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கும் புரட்சிப் படையை அமைக்கிறான். ஆங்கிலேய ஆட்சிக்குக் கப்பம் செலுத்தி அடிமையாக விளங்கும் 23-ம் புலிகேசியை வீழ்த்தவும் எண்ணுகிறான். இருவரின் தோற்ற ஒற்றுமையை வைத்து, உக்கிரபுத்தன், 23-ம் புலிகேசியாக மாறி, நாட்டில் பெரும் மாற்றத்தை உண்டாக்குகிறான்.

கடைசியில் ராஜகுருவின் சூழ்ச்சி வென்றதா? உக்கிரபுத்தனின் புரட்சி வென்றதா? என்பதே இறுதிக் கட்டக் காட்சி.

இது, வடிவேலுவுக்கு அவர் வாழ்நாளிலேயே தலைசிறந்த படம். சிம்புதேவனுக்கு முதல் படமே முத்திரைப் படம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கதை நடக்கிறது. அந்தக் காலத்தைக் கண்முன் நிறுத்துவதில் கலை இயக்குநர் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார். முக்கியமாக, அரசவை தொடர்பான காட்சிகள் இயல்பாக உள்ளன. பாடல்களைக் காட்டிலும் படத்திற்கான பின்னணி இசையைச் சபேஷ் முரளி அருமையாக அமைத்துள்ளார்கள். பழைய பாடல்களை ஒத்துள்ள இசையும் நடன அசைவுகளும் உடைகளும் சிரிக்க வைக்கின்றன. வசனங்கள், ரசிக்கும்படியாக உள்ளன.

இரட்டை வடிவேலுவிற்கும் ஆளுக்கொரு நாயகி. வழக்கம்போல் தேஜாஸ்ரீயும் மோனிகாவும் பாடல் காட்சிகளில் மட்டும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்கள்தான். அமைச்சராக வரும் இளவரசுவும் தளபதியாக வரும் ஸ்ரீமனும் சிறப்பாக நடித்துள்ளார்கள். நாகேஷையும் மனோரமாவையும் அதிகம் பயன்படுத்தவில்லை.

படத்தில் ஆள் பற்றாக்குறை நன்றாகத் தெரிகிறது. புலிகேசியைத் தாக்கப் படையெடுத்து வரும் தமிழ் மன்னன், சிலரோடுதான் வருகிறான். இறுதிக் காட்சிகளில் 'புரட்சிப் படை வெளியில் நிற்கிறது' என்று சொல்கிற இடத்தில் ஐந்தாறு பேர்கள் நிற்கிறார்கள்.

வடிவேலுவுக்கு வசன உச்சரிப்பு, பல இடங்களில் உதைக்கிறது. புலிகேசி என்பதை புலிக்கேசி என்கிறார். ற/ர, ல/ள போன்ற மயங்கொலிகளைத் தவறாக உச்சரிக்கிறார். இருபதாம் நூற்றாண்டுச் சொற்கள் பலவும் இந்த 18ஆம் நூற்றாண்டுப் படத்தில் வருகின்றன. 23-ம் புலிகேசி என்று எழுதுவது தவறு; 23ஆம் புலிகேசி என்றே இருக்கவேண்டும்.

இவற்றை எல்லாம் கடந்துவிட்டுப் பார்த்தாலும்கூட இம்சை அரசன், கிச்சுகிச்சு மூட்டுகிறான். அனைத்துத் தரப்பினரும் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற வகையில் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக ஷங்கரும் இயக்கியதற்காகச் சிம்புதேவனும் பாராட்டுக்கு உரியவர்கள்.


===============================================
இம்சை படங்களைக் காண....

இம்சை டிரெய்லரைக் காண...
===============================================

நன்றி: தமிழ்சிஃபி

புதுப்பேட்டை - திரை விமர்சனம்

Photobucket - Video and Image Hosting

நரம்பைப் போல் இருக்கும் தனுஷை ஒரு பேட்டைக்குத் தாதாவாகக் காட்ட முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் செல்வராகவன். அழகு, நிறம், புஜ பல பராக்கிரமம்... இவையெல்லாம் கொண்டவர்தான் தமிழ்த் திரையுலகின் கதாநாயகன் என்ற எண்ணத்தை ஏற்கெனவே உடைத்த தனுஷ், புதுப்பேட்டையின் மூலம் புதிய செய்தியைக் கூறியுள்ளார். உடல் பலத்தை விட மனோபலமே முக்கியம் என்பதுதான் அது.

சேரிச் சிறுவன் குமார், தன் அம்மாவை அப்பாவே கொல்வதைப் பார்த்துவிட்டுச் சென்னைக்குத் தப்பி வருகிறான். சந்தர்ப்பவசத்தில் கஞ்சா விற்கும் அன்புவின் கூட்டத்தில் சேருகிறான். அங்கு 'பொருள்' எடுத்துச் சென்று, 'தொழில்' கற்கிறான். ஒரே அடியில் எதிராளியைக் கொன்றதன் மூலம் அவன் புகழ் பெறுகிறான். அங்கு பாலியல் தொழில் செய்யும் சிநேகாவுடன் சிநேகமாகிறான். அவளை அங்கிருந்து மீட்க வேண்டி, தாதா அன்புவை எதிர்த்துக் கொன்று தானே அந்தப் பேட்டையின் தாதா ஆகிறான். பிறகு கொக்கி குமார் ஆகி, படிப்படியாக அரசியலுக்குள் நுழைகிறான் என்பதே புதுப்பேட்டை படத்தின் கதை.

கொக்கி குமார் என்ற பாத்திரத்தில் ஒற்றை அடியில் ஒரு ஆளைக் கொல்வதில் தொடங்கி, ஒரு கும்பலை ஒரே ஆளாக வெட்டிச் சாய்ப்பது வரை தனுஷ் இந்தப் படத்தில் செய்திருப்பது, மாயாஜாலம். பல மணி நேரமாக அடியை எல்லாம் தாங்கிக்கொண்டு, அடித்தவனை ஒரே அடியில் கொல்லும் உக்கிரம்; ரத்த விகாரமான முகத்துடன் 'எனக்கு வலிக்கவே இல்ல, வாங்கடா' என்று ஒரு கும்பலையே சண்டைக்கு அழைக்கும் ஆண்மை; தன்னைக் கொல்ல ஆள் அனுப்பிய தாதாவின் தலையை வெட்டி எடுத்துச் செல்லும் மூர்க்கம்; தன்னைக் கொல்லச் சொல்லும் அரசியல் தலைவரிடம் 'நீங்க என்னைக் கொல்லாம விட்டா, நான் உங்களைக் கொல்லாம விடுறேன்' என்று பேசும் தைரியம்; தன் தாயைக் கொன்ற தந்தையை உயிரோடு புதைக்கும் வன்மம்... என தனுஷின் பாத்திரம் வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையாகப் பார்க்கும் போது, இது ரவுடிக் கும்பலின் கதை. ஆனால், சற்றே ஆழமாகப் பார்த்தால், இந்தப் படத்தில் மிகச் சிறந்த சமூக விமர்சனமும் அரசியல் நையாண்டியும் உள்ளன. அடியாள் உலகை எதார்த்தமாகக் காட்டியிருக்கிறார்கள். அடியாள்களுக்கும் காவல் துறைக்கும் அரசியலுக்கும் பாலியல் தொழிலுக்கும் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதை இந்தப் படம் மேலும் ஆழமாகக் காட்டியிருக்கிறது.

அடியாள் தொழிலில் ஒருவன் எப்படி நுழைகிறான்? ஏன் நுழைகிறான்? அவர்களின் பின்னணி என்ன? தேவைகள் என்ன? மனோபாவம் என்ன... எனப் பலவற்றைப் படம் தெளிவாகச் சொல்லிவிடுகிறது. நான் என்ற ஆணவம், அடியாள் பலருக்கும் அதிகமாகவே இருக்கும். இதை ஒரு வசனத்தின் மூலம் பாலகுமாரனும் செல்வராகவனும் காட்டிவிடுகிறார்கள்.

படத்தின் பிற்பகுதியில் வரும் அரசியல் காட்சிகள், படத்தில் நகைச்சுவைப் பகுதி இல்லாத குறையைப் போக்குகின்றன. கொக்கி குமார், ஒரு கட்சியின் பகுதிச் செயலாளர் ஆனதும் அவருக்குக் கிடைக்கும் மரியாதை; மைக் முன் தோன்றும் முந்தைய நொடி வரை ரவுடியைப் போல் பேசும் அரசியல் தலைவர் (அழகம்பெருமாள்), மைக் முன் வந்ததும் 'செந்தமிழ்க் கவிஞன் நான்' என்பது ஆகியவற்றைச் சிறந்த அரசியல் அங்கதம் எனலாம். எதிர் தாதா மூர்த்தி, கொக்கி குமாரால் கொல்லப்படுவதை விரும்பாமல் தானே தன் கழுத்தை அறுத்துக்கொள்கிறான். மூர்த்தியின் கட்சியிலேயே குமார் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அங்கு, மேடையில் அண்ணாந்து பார்த்து 'மூர்த்தி' என்று குமார் உருகுகிறார்; 'மூர்த்தி என்றால் அன்பு, மூர்த்தி என்றால் தாய்மை' என்று வசனம் பேசுகிறார். நடப்பு அரசியலைச் சிறந்த முறையில் செல்வராகவன் காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தில் பாலியல் தொழிலாளியாகச் சிநேகா சிறப்பாக நடித்துள்ளார். முதல் காட்சியில் மிகையான பவுடர் பூச்சுடனும் உதட்டுச் சாயத்துடனும் அவர் தோன்றும்போது சொல்லாமலே அவரின் தொழில் தெரிந்துவிடுகிறது. அவர் முழுகாமல் இருக்கும்போது, 'இது என் குழந்தைதானா என்ற சந்தேகம் உன் நெஞ்சில் இன்னும் இருக்குதானே' என்று தனுஷிடம் உருகிக் கேட்கிறார். ஆனால், சோனியா அகர்வாலின் பங்கு, படத்தில் மிகவும் குறைவுதான். தன் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுக்க வந்த தனுஷே, தனக்குத் தாலி கட்டியதை அவர் அவ்வளவு லேசாகவா எடுத்துக்கொண்டார்? சோனியாவின் உணர்வுகள் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பதிவாகி இருக்கலாம்.

தலைமறைவு வாழ்க்கை வாழும் அடியாள்களின் வாழ்க்கையை அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சிறந்த முறையில் காட்டுகிறது. நெருக்கமாக (குளோசப்) காட்சிகளின் மூலம் பாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. நடனக் காட்சிகளும் இயல்பாக உள்ளன. உடைகளும் காட்சியைச் சித்திரிக்கும் பொருள்களும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டுள்ளன.

நவீன உலகில் பெரும்பாலான அடியாள்கள், துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் மாறிவிட்ட நிலையில் புதுப்பேட்டையில் வரும் அடியாள்கள், அரிவாளையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். பிச்சையெடுத்த தனுஷ், பிஸ்தாவான பிறகும் அவருடைய உடல்மொழியும் குரலும் ஒரே மாதிரி உள்ளன. சாதாரணமான ஆளாகவே அவர் உலவுகிறார். பொது இடங்களில்கூட தாதா என்ற நினைப்புடன் அவர் இல்லாதது, முரட்டுத் தோரணையோ, அதட்டலான குரலோ இல்லாதது, வியப்புதான். ஆயினும் தனுஷ் இந்தப் படத்தில் வளர்ந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

படத்தில் ரத்தமும் கொலையும் வன்முறையும் மிதமிஞ்சிய நிலையில் உள்ளதற்காக இயக்குநரைக் குறை சொல்ல முடியாது; அப்படி ஓர் உலகம் இருக்கிறதே, என்ன செய்ய?


==============================================
புதுப்பேட்டை படங்களைக் காண...

புதுப்பேட்டை முன்னோட்டத்தை (டிரெய்லரை)க் காண...
==============================================

நன்றி: தமிழ்சிஃபி

Tuesday, April 04, 2006

வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸ்



தன் மீது வைகோ அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் அதற்காக உடனே மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நட்ட வழக்குத் தொடுக்கப்படும் என்றும் தயாநிதிமாறன் எச்சரித்துக் கெடு விதித்துள்ளார். இது தொடர்பாக, வைகோவுக்குத் தயாநிதி வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், வைகோவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

"சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். விளம்பரங்களைத் தருவது தொடர்பாக அபாண்டமாக என் மீது புகார் கூறியுள்ளார் வைகோ. ஆனால் இதுதொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.

ஜெயா டிவிக்கு டெ௽போர்ட் வசதியைத் தர எனது அமைச்சகம் தாமதம் செய்து வருவதாக இன்னொரு புகார் கூறியுள்ளார். டெ௽போர்ட் வசதிக்கான அனுமதியைத் தர உயர்நீதிமன்றம் கால அவகாசம் விதித்து உத்தரவிட்டுள்ளதை அவர் மறந்து பேசியுள்ளார். ராஜ் டிவி விவகாரத்தைப் பொறுத்தவரை, அது உரிமம் இல்லாமல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது குற்றம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கையில் எனது தலையீட்டின் பேரில் ராஜ் டிவியின் நிகழ்ச்சிகள் முடக்கப்பட்டதாக வைகோ கூறுவது அபாண்டமான, அப்பட்டமான பொய்.

இப்படி என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் வைகோ, ஏப்ரல் 3ஆம் தேதி(திங்கள்கிழமை)க்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், வைகோ, தினமலர், ஜெயா டிவி ஆகியோர் தலா ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."

இவ்வாறு தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார்.

மேலும் வைகோவின் பேட்டியை ஒளிபரப்பிய தினமலர் நாளிதழுக்கும் ஜெயா டிவிக்கும் தயாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதோ, மூன்றாம் தேதி முடிந்துவிட்டது. உயிர் போனாலும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று வைகோ கூறிவிட்டார். 'நீ ஆண்மகன் என்றால் வழக்குப் போட்டுப் பார்' என்றும் சவால் விட்டுள்ளார். 'போடுவதற்கு முன் உன் தாத்தாவிடம் கொஞ்சம் யோசனை கேட்டுக்கொள்' என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

தயாநிதியின் தன்மானத்தை வைகோ தூண்டிவிட்டுள்ளதால் தயாநிதிக்கு வழக்குப் போடுவதை விட வேறு வழியில்லை. இது, வைகோவுக்கு மறைமுகமாகப் பெரும் ஊடக கவனத்தை ஏற்படுத்தும். பேசுகிற கூட்டங்களில் எல்லாம் தான் வைகோ இதைக் குறிப்பிட்டு வீராவேசமாகப் பேசுவார். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, 'பழைய பகைக்காகப் பழிவாங்குகிறார்' என்று தயாநிதியை விட்டுவிட்டுக் கருணாநிதியை வைகோ கட்டம் கட்டுவார். அந்தப் பேச்சினால் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதில் அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அது, தேர்த௽ல் வாக்குகளாக மாறிவிடும்.

எனவே, தயாநிதியின் வழக்கைச் சாதாரண மான நட்ட வழக்கு என்று கருத இயலாது. எனவே தான் 'வழக்குப் போடுவதற்கு முன் உன் தாத்தாவிடம் ஆலோசனை கேள்' என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தயாநிதி இடத்தில் கருணாநிதி இருந்தால் இப்போது வழக்குத் தொடுக்காமல் தேர்தல் முடியும் வரை காத்திருப்பார். ஆனால், தயாநிதி இடத்தில் தயாநிதிதானே இருக்கிறார். இளரத்தம் சூடாகத்தானே இருக்கும்?


நன்றி: தமிழ்சிஃபி இணைய இதழ்


2.4.06 அன்றைய வைகோவின் பேச்சுகள்:

1. தயாநிதிக்கு மேலும் கேள்வி

2. சட்டசபையில் பேசினீர்களா?

3. கனரா வங்கியில் கடன் வாங்கினேன்

4. சன் டிவிக்கு வைகோ கேள்வி

5. தயாநிதிக்கு வைகோ சவால்

Thursday, March 30, 2006


வைகோ போட்டியிடாதது ஏன்?

மதிமுக பொதுச் செயலாளர், 8.5.06 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அக்கட்சியின் 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இது, அரசியல் அரங்கில் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைகோ, சிவகாசி தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று செய்திகள் வெளிவந்தன. மு.க.ஸ்டாலினுக்கு மாற்றாக இன்றும் வைகோ பார்க்கப்படுகிறார். ஒருவேளை நாளை கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் என்ற நிலை உருவாகும்போது அதை ஏற்காத அதிருப்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கிருந்து வெளியேறி வைகோ தலைமையின் கீழ் வந்து சேருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் - அந்தக் காட்சி நிறைவேறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

அப்போது வைகோ தலைமையில் ஆட்சி அமையுமாயின் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதே நல்லது. உறுப்பினராக இல்லாவிடில் அடுத்த ஆறு மாதங்களில் அவர் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக முடியும் என்றாலும் எதற்காக அந்த இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக வெற்றி பெற்று, மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்தாலும் அது, பதவி சுகத்தை அனுபவிக்கவில்லை. அதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியிலும் மதிமுக உறுப்பினர்கள் அமைச்சர் பதவி ஏற்றபோதும் வைகோ, அமைச்சர் பதவி எதையும் ஏற்கவில்லை. தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் அவர், வெற்றி பெற்றபோதும்கூட பதவியைப் பெற முயலவில்லை; வலிய வந்த பதவியைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ, போட்டியிடவில்லை. அதுவே பலரின் புருவத்தையும் உயர்த்தியது. அப்போது பலரும், வைகோ, மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார்; அதனால்தான் அவர் பாராளுமன்ற உறுப்பினராக முயலவில்லை என்று கருதினார்கள். ஆனால், இப்போது மாநில அரசியலில் நேரடியாகப் பங்கேற்றுச் சட்டமன்றத்திற்குள் நுழைய அவருக்கு வாய்ப்புக் கிட்டியுள்ள போது அவர் ஏன் போட்டியிட முன்வரவில்லை?

1. வைகோ போட்டியிடவில்லை என்பது அவருக்கு ஒரு திருவாளர் தூய்மை என்ற தோற்றத்தை உருவாக்க உதவும். தன்னலம் பாராதவர், பதவிக்கு அலையாதவர், கைக்கு அருகில் உள்ள பதவியைக்கூட தியாகம் செய்தவர் என்ற தோற்றம் கிட்ட வாய்ப்பு இருக்கிறது. அண்மையில் சோனியா காந்திக்கு இத்தகைய தோற்றம் கிடைத்தது. இது, வாக்காளர்களைக் கவரும் தன்மை உடையது. 35 சீட்டுகளுக்காக இடம் மாறிவிட்டார் வைகோ என்ற பழிச்சொல்லை, வைகோவின் இந்தச் செயல் துடைத்தெறியக் கூடும்.

2. தன்னை நம்பி வந்து, மதிமுகவில் 13 ஆண்டுக் காலமாக உழைத்து வரும் தொண்டர்களுக்குத் தான் ஏதாவது நல்லது செய்தே தீருவேன் என்று வைகோ, பல கூட்டங்களில் கூறியிருக்கிறார். தன் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்காக அவர் தன் வாய்ப்பையும் விட்டுக் கொடுத்திருக்கலாம். வைகோவின் நகல் என்று சொல்லப்படுகிற நாஞ்சில் சம்பத்தும் போட்டியிடவில்லை.

3. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ நாளை சட்டமன்றத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவியில் உட்காரட்டும். அவர்கள் முன் ஒரு சாதாரண உறுப்பினராக வைகோ அமர்வதற்கு அவருடைய உள்மனம் தடுக்கலாம். உட்கார்ந்தால் முதல்வர் நாற்காலியில்தான் உட்காருவேன் என்று வைகோ அறிவிக்கப்படாத சபதம் எதையும் எடுத்துவிட்டிருக்கலாம்.

4. ஜெயலலிதா முதல்வரானால் அவருக்குக் கூழைக் கும்பிடு போட வைகோவால் முடியுமா? பத்திரிகையாளர் முன்பு ஒரு மணிநேரம் அப்படி இருக்கலாம். ஆனால், சட்டமன்றத்திற்குள் நாள் முழுவதும் அரசின் வீண் அரட்டைகளைக் கேட்டு, மேசையைத் தட்டும் கலாச்சாரத்திற்கு வைகோ பழகாதது ஒரு காரணமா? கருணாநிதி முதல்வரானாலும் அவர் முன்னால் வைகோ, எப்படி எதிர்வினை ஆற்றுவார்? பழைய பாசத்துடனா? அல்லது, புதிய பகையுடனா? இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க ஒரேயடியாகச் சட்டமன்றத்திற்கே போகாமல் இருக்கலாம் என்றுகூட அவர் நினைத்திருக்கலாம்.

5. அரசியல் கட்சியின் தலைமை நிர்வாகிகள், எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் கட்சியினரை வழிநடத்துவதில் மட்டும் கவனம் செலுத்தும் மரபு தமிழ்நாட்டில் உள்ளது. ராமதாஸ்கூட அத்தகைய மரபில்தான் வருகிறார். எனவே, அத்தகைய மரபின் மேல் வைகோவின் கவனம் சென்றிருக்கலாம்.

வைகோ, போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு வைகோவே விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

=======================================
மதிமுக: வேட்பாளர் பட்டியல்
வைகோ நிற்காதது ஏன்?

Saturday, January 28, 2006

எனக்கென்று ஒரு கணினி

நீங்கள் படிக்கும் இந்த வரிகளை நான் என் வீட்டிலேயே தட்டச்சு செய்து, வீட்டிலிருந்தே வலையேற்றுகிறேன். ஆம், நண்பர்களே, நான் ஒரு புதுக் கணினி வாங்கிவிட்டேன். இந்த ஆங்கிலப் புத்தாண்டு அன்று (1.1.2006) தொகுப்புக் கணினி (Assembled computer) வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

கணினி வாங்கும் எண்ணம் சில ஆண்டுகளாகவே உண்டு. 2005 ஏப்ரலில் விரைந்து கணினி வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அகலப்பாட்டை இணைப்புக்குக்கூட விண்ணப்பித்திருந்தேன். ஆனால், பல காரணங்களால் அந்தத் திட்டம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

நண்பர்கள் பலரிடமும் எத்தகைய கணினி வாங்கலாம் என்று பல முறைகள் ஆலோசனை கேட்டேன். பத்தாயிரம் ரூபாய்க்குக் கணினி என்றதும் உடனே வாங்க எண்ணினேன். ஆனால், அதன் திறன் போதாது என்று விமர்சனங்கள் எழுந்ததால் அதைத் தள்ளிப் போட்டேன்.

இறுதியாக உதிரி பாகங்களை வாங்கி, நம் விருப்பத்திற்கு ஏற்பத் தொகுத்துத் தரும் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்தத் தொகுப்புக் கணினியை வாங்கியுள்ளேன். இந்தக் கணினி, பென்டியம் 4 செயலி, எல்ஜி திரையகம், 80 ஜிபி வன்தட்டு, குறுந்தட்டுகளைப் படிக்கவும் எழுதவும் திறனுள்ள இயக்கி (காம்போ டிரைவ்), சாம்சங் ஒளிச்சுட்டி (ஆப்டிகல் மவுஸ்), சாம்சங் விசைப் பலகை, விண்டோ ஸ் எக்ஸ்பி செயற்படு பொறியமைவு... ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த விலை, ரூ.24,000. மேலும் பல மென்பொருள்களை நிறுவி வருகிறேன்.

கணினியை வைப்பதற்கான மேசையை தச்சர் ஒருவரைக் கொண்டு உருவாக்கினோம். அதற்கு ரூ.2000. இன்னும் நல்லதோர் இருக்கை வாங்கவேண்டும். இதே உறுப்புகளைக் கொண்ட கணினியை ஒரே நிறுவனத்திடமிருந்து வாங்கியிருந்தால் மேலும் சில ஆயிரங்கள் செலவாகியிருக்கும். அதை மிச்சப்படுத்தவே இந்தத் தொகுப்புக் கணினி.

ஜன.6 அன்று பிஎஸ்என்எல் அகலப்பாட்டைக்கு விண்ணப்பித்தேன். பல முறைகள் தொலைபேசி வழிப் பின்தொடரலுக்குப் பிறகு இன்று (28.1.2006) அகலப்பாட்டை இணைப்பு அளித்தார்கள். விநாடிக்கு 256 கிலோ பைட்டுகளைக் கடத்த வல்லது. அதற்கான அதிர்விணக்க நீக்கி (Modem), ரூ.1,200.

அலுவல் நாள்களில் இதை அதிகம் பயன்படுத்த இயலாது. ஆயினும் விடுமுறை நாள்களில் இது எனக்குப் பேருதவியாக இருக்கும். அண்மைக் காலமாகச் செல்பேசியும் இணையமும் என் சுதந்திரத்திற்கான இறக்கைகளாகவே இயங்குகின்றன. அவற்றால் பாதுகாப்பு உணர்வு மிகுதியாகிறது. இந்தக் கணினியையும் இணையத்தையும் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.

(பின்குறிப்பு: இந்தப் பக்கத்தில் உள்ள கணினிக் கலைச் சொற்களை மணவை முஸ்தபாவின் கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதியிலிருந்து பயன்படுத்தியுள்ளேன்.)

Saturday, January 07, 2006

ஆறு - திரை விமர்சனம்

உள்ளுக்குள் நல்லவனாக இருக்கும் அடியாள் ஒருவனின் கதை.

அநாதையான சூர்யாவுக்கு ஆறுமுகம் என்று பெயர். ஆறு என்று சுருக்கமாகக் கூப்பிடுகிறார்கள். அதனால்தான் படத்திற்கு, ஆறு என்று பெயர். இந்த ஆறு, ஆறு வயதாக இருக்கும்போது அடியாள் தலைவன் ஒருவனிடம் எடுபிடியாகச் சேருகிறான். படிப்படியாக இவனும் அடியாளாக மாறுகிறான். மிரட்டல், கூட்டத்துக்கு ஆள் சேர்த்தல், கூட்டத்தில் கல்/ சோடா பாட்டில்/ தக்காளி இத்யாதிகளை எறிந்து கலைத்தல், கடத்தல், கை / கால்களை எடுத்தல், பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தல்... உள்ளிட்ட வேலைகளைச் செய்யும் முரட்டுக் கதாபாத்திரம் சூர்யாவுக்கு.

சிவகாசியில் விஜய்யை அடுத்து, ஆறு சூர்யாவும் பெண்கள் இடுப்பு தெரிகிற மாதிரி ஏன் உடை அணிகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படி திரிஷா இடுப்புத் தெரிய உடுத்திய சமயத்தில் அவரையும் அவர் தோழிகளையும் சகட்டு மேனிக்குத் திட்டுகிறார். அங்கு மோதலில் தோன்றினாலும், திரிஷாவின் குடும்பத்துப் பிரச்சினையைச் சூர்யா தீர்த்துவைத்த போது, அவர் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது. பெண்களைத் 'தூக்கும்' ஒரு ரவுடிக் கூட்டத்திடம் திரிஷா சிக்குகிறார். 'இவ என் பொண்டாட்டி மாதிரி' என்று சொல்லி, அவர்களிடமிருந்து திரிஷாவை மீட்கிறார் சூர்யா. அங்கிருந்து காதல் காய்ச்சல் எகிறிவிடுகிறது.

சூர்யாவைச் சிறு வயதிலிருந்து வளர்க்கும் அடியாள் தலைவனாக ஆசிஷ் வித்யார்த்தி. வன்மம் மிக்க முரட்டு வில்லன் பாத்திரம் இவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

பதவி நீக்கப்பட்ட அமைச்சர் ஒருவர், தன் பதவியை மீண்டும் பெற, பல இடங்களில் வன்முறையும் கடையடைப்பும் நடக்கவேண்டும்; ஐந்து பேரைத் தீக்குளிக்க வைக்கவேண்டும் என்கிறார். அந்த 'வேலை', சூர்யாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தீக்குளிக்க வைப்பதைச் சூர்யா ஏற்கவில்லை. எனவே, சூர்யாவை ஏமாற்ற, 'வெறுமனே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக நடித்தால் போதும். அதற்குள் போலீஸ் வந்து கைது செய்துவிடும்' என்று சமாதானம் சொல்கிறான் அடியாள் தலைவன். ஆனால், மறைமுகமாக, அந்த ஐவரையும் உயிரோடு கொளுத்த ஆள் அனுப்பிவிடுகிறான்.

ஒன்றும் தெரியாத அப்பாவிகள் ஐந்து பேரை உயிரோடு எரித்ததைப் பொறுக்க முடியாமல் சூர்யா துடிக்கிறார். உண்மை தெரிந்தால் சிக்கலாகிவிடும் என அடியாள் தலைவன், சூர்யாவைத் 'தூக்க'ச் சொல்லிவிடுகிறான். தான் அண்ணன் என்று அடிவயிற்றிலிருந்து அழைத்தவன், தன்னைக் கொல்ல முயன்றதைச் சூர்யாவால் தாங்க முடியவில்லை. தலைவனையும் அவன் தம்பிகளையும் மிகச் சாதுரியமாகப் பழிவாங்குகிறார்.

இதுதான் கதை.

படம் படுவேகமாக ஓடுகிறது. காட்சிகளில் நல்ல விறுவிறுப்பு. சூர்யா அடியாளாக இருந்தாலும் அவன் நல்லவன் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். பெண்களிடம் மிகவும் கண்ணியமாக நடக்கிறார்; அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறார். அவர்களுக்குத் தீங்கு செய்வோரைக் கண்டால் வெடிக்கிறார். ஆசிஷ் வித்யார்தியின் தங்கையாக வரும் 'அண்ணி' மாளவிகா மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.

பாசம், காதல், வீரம், வேகம், துணிச்சல், ஒவ்வொரு வேலையையும் திட்டமிடும் புத்திசாலித்தனம், பழிவாங்கும் வைராக்கியம் எனப் பல குணங்களின் கலவையாகச் சூர்யா விளங்குகிறார். ஒவ்வோர் உணர்வையும் அவர் சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய உடல்மொழி, அவருக்கு மிகவும் உதவுகிறது.

குப்பத்து அடியாளாக இருந்தாலும் அவர் கெட்ட வார்த்தைகள் பேசி, கீழ்த்தரமாக நடக்கவில்லை. அடிக்கும்போதுகூட எதிராளியின் உயிர் போய்விடாமல் காயம் மட்டும் படுமாறு கவனமாக அடிக்கிறார். உயிரின் மதிப்பை உணர்ந்த அடியாளாகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சூர்யா.

திரிஷாவின் பாத்திரம் வலிமையாக இல்லை. சூர்யா அவளைக் காதலிக்க மாட்டானா என்று ஏங்கியவர், அவருக்குப் பத்துப் பேர் முன்பு முத்தம் கொடுத்தவர், சூர்யா காதலிக்கிறேன் என்று சொல்லும்போது பரிதாபத்தினால் வரும் காதல் எனக்கு வேண்டாம் என்கிறார். அந்த அளவுக்கு மன முதிர்ச்சி உள்ள பாத்திரமாக அவர் உருவாக்கப்படவில்லை. பாடல் காட்சிகளில் அழகுப் பதுமையாக வந்து செல்கிறார்.

அரசியல், ரவுடியிசம், காவல் துறை ஆகியவை ஒன்றுக்கொன்று துணையாக நின்று, பல தீமைகளைச் செய்து வருகின்றன என்பதற்கு இந்தப் படம் ஒரு மறைமுக ஆவணமாக விளங்குகிறது. போராட்டங்களில் பங்குகொள்ளும் பேச்சாளர்கள், கூடும் மக்கள், கூட்டத்தைக் கலைக்கும் மக்கள் அனைவருமே 'ஏற்பாடு' செய்யப்பட்டு வருபவர்கள் என்கிற உண்மையை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். இது, போராட்டங்களின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

குப்பத்துப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா, சிறப்பாக நடிக்க முயன்றுள்ளார். மேடைப் பேச்சாகட்டும், தண்ணீர் பிடிப்பதாகட்டும் காவல் நிலையத்திலும் துணிச்சலாகப் பேசுவதாகட்டும்... அனைத்துக் காட்சியிலும் முரட்டு நடிப்பில் நிற்கிறார். வடிவேலுவின் நகைச்சுவை, பரவாயில்லை.

படத்திற்கு இசையமைத்துள்ளவர், தேவிஸ்ரீ பிரசாத். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பின்னணி இசையிலும் இவ்வளவு இரைச்சல் இருக்கலாமா என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும். 'ஃபிரியா வுடு', 'பாக்காத' ஆகிய பாடல்கள், பிரபலமாகக் கூடியவை. ராக்கி ராஜேஷின் சண்டைப் பயிற்சி, படத்தின் அடிப்படை அம்சம். 'போட்டுத் தள்ளும்' காட்சிகள் எல்லாம் ரகளைதான்.

இயக்குநர் ஹரி, படத்தை வேகமாக விறுவிறுப்பாகவும் நகர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ஒரு கேள்வி. ஐந்து பேர் தீக்குளிக்க நிற்கையில் ஒருவன் கொளுத்தி விடுகிறான். ஐவரும் எரிகிறார்கள். உடலில் தீப்பிடித்தவர்கள், ஒரே இடத்தில் நின்றபடியேவா எரிவார்கள்? அங்கும் இங்கும் ஓட மாட்டார்களா?
இறுதியில் ஆசிஷ் வித்யார்தியைச் சூர்யா பழிவாங்குகிறார். அதன் பிறகு அவர், சூர்யாவைச் சும்மாவா விட்டார்? இவை போன்ற சில காட்சிகள், லாஜிக் இல்லாமல் இருக்கின்றன. இருந்தாலும் இயக்குநரின் முயற்சி, பாராட்டுதலுக்கு உரியது.

படத்திற்குப் பத்திற்கு ஆறு மதிப்பெண் கொடுக்க முடியாது; ஆனால், இருபதுக்கு ஆறு மதிப்பெண் கொடுக்கலாம்.


நன்றி: தமிழ்சிஃபி