!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2004/07 - 2004/08 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, July 13, 2004

எழுதுகோலின் கண்ணீர்தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை இன்று மிகவும் இரங்கத்தக்கதாய் உள்ளது. அவர்களின் பொருளீட்டும் திறன் இறங்கு முகமாய் உள்ளது. இதனால் எழுத்தை முழுநேரத் தொழிலாய் எடுத்துக்கொண்டவர்கள், சத்தில்லாத கசப்பு மருந்தை விழுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அரசு ஊழியர், ஆசிரியர், பெரிய-நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுவோர், வங்கி ஊழியர்... போன்று வெகு சில துறையினர் மட்டும் ஓரளவு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் பலர் பகுதிநேர வேலைக்கும் நாள் கூலிக்கும் உதவியாளர் என்ற பெயரில் எடுபிடி வேலைக்கும் செல்ல, எழுத்தாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அப்படியே ஒரு வேலை கிடைத்தாலும் ரூ.1000 முதல் ரூ.3000 வரைதான் சராசரி ஊதியம் கிடைக்கிறது. இந்த ஊதியத்திற்கு அவர்கள் நாளுக்கு 12 மணிநேரமும் அதற்கு மேலும் பணியாற்றவேண்டியிருக்கிறது. கூடுதல் பணிச்சுமை குறித்து மூச்சு விட்டால்கூட உடனே வேலைக்கு ஆபத்தாகி விடுமோ என்று கவலைப்பட்டு "கடனே' என்று உழைக்கிறார்கள்.

இன்றிருக்கும் விலைவாசியில் இந்தத் தொகை போதுமா? அவர்களின் வாழ்க்கைத் தரம் குறித்து இந்தச் சமுதாயத்துக்கு ஏன் அக்கறை இல்லை? எழுத்தாளர்களின் உண்மையான திறமைக்கும் உழைப்புக்கும் இப்போது பெறுவதைப் போலப் பத்து மடங்கு கொடுக்கவேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது?

இவையெல்லாவற்றையும் விடக் கொடுமை, வேலையில் சேர்ந்த பிறகு ஏதும் எழுதக்கூடாது என்ற முன் நிபந்தனையில் வேலையில் சேர்ப்பது. எழுத்தாளர்கள், தம் சாரத்தையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு, தன்னைவிடத் தன் குடும்பத்திற்காகத் தன் எழுத்தையே தியாகம் செய்கிறார்.

அப்படியே அவரை எழுத அனுமதித்தாலும் சர்ச்சையில்லாத - சிக்கலில்லா தவற்றையே எழுதலாம் என்றும் நிர்வாகத்தினர் பலர் கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

"இதற்கெல்லாம் நான் கட்டுப்பட முடியாது. நீயுமாச்சு உன் வேலையுமாச்சு' என எழுத்தாளர் வெளியே வந்தால், அவருடைய மனைவியும் பிள்ளைகளும் "எங்களுக்கு என்ன வழி?' எனக் கேட்கிறார்கள். கிடைத்த வேலையைச் செய்து பொருளீட்டும் அவலம் நிகழ்கிறது.

வானொலி, தொலைக்காட்சி, பருவ இதழ்கள், திரைத்துறை ஆகிய அனைத்து ஊடகங்களிலுமே வாய்ப்புக் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் தொடர்ந்து கிடைப்பதில்லை. கிடைக்கிற வாய்ப்பிலும் எழுத்தாளர் தாம் விரும்புவதை வெளிப்படுத்த இயலுவதில்லை.

இந்த வாய்ப்புகளுக்காகத் தவமிருக்கும் எழுத்தாளர்களின் தன்மானம் இழிவுபடுத்தப்படுகிறது. இந்த இழிவுகளைப் பொறுத்துக்கொள்ளாவிடில் வாய்ப்பை வேறொருவருக்கு வழங்கிவிடுவேன் என்ற மறைமுக மிரட்டல் வேறு இருக்கிறது. எழுதியதற்கு ஊதியம் கேட்டாலே "வாய்ப்பிழப்பு மிரட்டல்' வருகிற அளவுக்கு இது முற்றிப்போய்விட்டது.

பெரிய கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் ஆகிவிடுவது என்ற கனவுகளோடு திரைத்துறையில் உழன்று வருவோர், வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தம்படைப்புகள் இன்னொருவர் பெயரில் வெளிவர உடன்படுகின்றனர். அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இதைவிடப் பெருங்கொடுமை, வெளிப்படையாகவே, ஒருவர் எழுத இன்னொருவர் பெயரில் வருவதே. மோசடியும் வரலாற்று ஏய்ப்புமான இச்செயலுக்கு எழுத்தாளர்கள் உடந்தையாய் இருப்பது, பெரும் வருத்தத்திற்கும் கன்டனத்திற்கும் உரியது.

இத்தகைய சிந்தனைச் சுரண்டலுக்கும் உழைப்புக் கொள்ளைக்கும் யார் காரணம்?

""உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? - உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?''
என்று பாடும் துணிச்சலை, இன்றைய எழுத்தாளர்கள் இழந்துவிட்டதேன்?

மன்னர்களுக்கு அறிவுரை - ஆலோசனை கூறி, உத்தரவு பிறப்பித்த படைப்பாளர்கள், இன்று "எழுத்துத் தொழிலாளி'களாகச் சிறுமைப்பட்டது ஏன்?

"இணைந்தே இருப்பது வறுமையும் புலமையும்' என்ற வசனம், இவ்வளவு குரூரமாகவா நிரூபிக்கப்படவேண்டும்?

தவறு யார் பேரில் இருக்கிறது?

கல்வியறிவும் எழுத்தறிவும் மிகக் குறைவானவர்களிடம் இருந்த அக்காலத்தில் அத்தகையோர் மீது மதிப்பு இருந்தது. சிறந்த கல்விமான்களின் - புலவர்களின் சொல், உயிர்பெற்று அப்படியே நடக்கும் என்று நம்பினார்கள். இதனால்தான் "அறம்' பாடும் இலக்கியமே பிறந்தது.

ஊர் ஊராகச் செல்லும் புலவர், தம் ஊருக்கு வந்தால் அவர் எங்கள் வீட்டில்தான் தங்கவேண்டும் என மக்கள் போட்டியிட்டார்கள். அவரிடம் "நற்சொல்' பெறத் தம் பிள்ளைகளை அழைத்து வந்தார்கள். அன்று கலாரசிகர்கள் அதிகம். ஒரு பாடலுக்கு ஊரையே - நாட்டையே பரிசளிக்க அரசர்கள் முன்வந்தனர். அதில் தற்புகழ்ச்சி என்ற உள்நோக்கம் இருந்தாலும் பொதுவான காவியங்களுக்கும் அரசர்கள் ஆதரவளித்தார்கள். ‘என் ஆட்சிக் காலத்தில் இக்காவியம் படைக்கப்பட்டது’ எனத் தற்பெருமை கொள்ளும் உள்நோக்கம் இதிலும் உண்டு. எனினும் படைப்பாளிகளுக்குப் பாதுகாப்பு இருந்தது.

இன்று 75% பேர் எழுத்தறிவு பெற்றிருந் தாலும் இன்று கலா ரசிகர்களின் எண்ணிக்கை, மிகக் குறைவு. மனிதர்களின் மனங்கள் சுருங்கிவிட்டன. அள்ளிக் கொடுக்க முடிந்தவர்களும் கிள்ளியே கொடுக்கிறார்கள். "என் வேலையை ஒத்தி வைத்துவிட்டு, படைப்பைப் படித்ததே எழுத்தாளருக்குத் தந்த வெகுமதி' என வாசகர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். புத்தகங்களையும் இதழ்களையும் பலர் இலவசமாகப் படிக்கவே விரும்புகின்றனர்.

நிலம் முழுதும் வறண்டுவிடுமானால் எழுத்தாளர் தம் விதையை எங்கே போய் விதைப்பார்? எழுதுகோலைப் பிடித்தவர் ஏழ்மையில் வாடினால் அது, இந்த மண்ணுக்கன்றோ மானக் கேடு?

மிஞ்சி மிஞ்சிப் போனால், எழுத்தாளருக்குப் பெரிய வருவாய், அவருக்குக் கிட்டும் புகழ்தான். படிப்போர் சொல்லும் "நல்லா இருக்கு' என்ற ஒரு பாராட்டுதான். இந்த வாய்ச் சொல்லை மட்டும் கொண்டு எழுத்தாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்ந்துவிட முடியுமா?

இதழ்கள் தரும் சன்மானம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகவில்லை. தொடக்கத்திலிருந்தே கட்பெறும்பாகத்தான் இருக்கிறது. அதிக விற்பனையுள்ள ஒரு சில இதழ்களைத் தவிர பெரும்பாலான இதழ்களை நட்டமில்லாமல் நடத்துவதே பெரும் சிக்கலாய் இருப்பதால், இதழ் முதலாளிகளைக் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால், நல்ல வருமானம் ஈட்டும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் பண்பலை ஒலிபரப்புகளும் திரைத்துறையும் எழுத்தாளர்களை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஓரளவு நல்ல சன்மானமாவது அளிக்கவேண்டும்.

எழுத்தாளருக்கு உரிய குறைந்த பட்ச மதிப்பையும் ஊதியத்தையும் நாம் வரையறுத்து வழங்கியாகவேண்டும். அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.

நூலகங்களில் எழுத்தாளர்களைப் பணியில் அமர்த்தலாம். பள்ளிக்கூடங்களில் படைப்பிலக்கியச் சிறப்பாசிரியர்களை நியமிக்கலாம். பிரச்சாரத்திற்கும் விளம்பரத்துக்கும் அரசு ஒதுக்கும் தொகையை எழுத்தாளர் வழியாகச் செலவிடலாம். அவர்கள் வழியாகப் பிரச்சாரம் செய்யலாம்.

எழுத்தாளருக்குக் குறைந்த வாடகையில் வீடு, போக்குவரத்து, மருத்துவ வசதி, அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி... என வாய்ப்புள்ள வசதிகளை ஏற்படுத்தி, மிகுதியாக்கி, எழுத்தாளரின் சமூக மதிப்பை உயர்த்தவேண்டும்.

அரசு மட்டுமின்றி நாட்டிலிருக்கும் அனைவரும் இதுகுறித்துச் சிந்திக்கவேண்டும்.

"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு',
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு'
என்ற பாரதியின் வாக்குகளை உச்சரித்துப் பெருமை கொள்கிறோம். அவற்றை நம் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்துள்ளோம்.

கவிஞர்களும் எழுத்தாளர்களும் நம் நாட்டின் செல்வங்கள் என்று நாம் பெருமை பேசுகிறோம். சங்க இலக்கியத்திற்காகவும் ஏனைய இலக்கியங்களுக்காகவும் இங்கும் வெளி மாநிலங்களிலும் - நாடுகளிலும் நாம் மார்தட்டிக்கொள்கிறோம்.

தற்கால இலக்கியவாதிகளின் நலன்களில் நாம் அக்கறைகொள்ள வேண்டாமா? புதிய பெருமைகளை நோக்கிப் பயணிக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டாமா?

எழுதுகோலின் கண்ணீரைத் துடைக்க, நம் அனைவரின் கரங்களும் நீளட்டும்.

Monday, July 12, 2004

கவிதையில் சொல் மேலாண்மை

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ்ப் படைப்பாளிகள் அதிகம் கையாண்ட ஒரு வடிவம், கவிதைதான். கவிதையோடு ஒப்பிடும்போது உரைநடையை "நேற்று' பிறந்த வடிவம் எனலாம். கவிதை என்ற பெயரில் வருகின்ற அனைத்தும் கவிதைகள்தானா, எது கவிதை என்ற விசாரணைக்குள் இப்போது நான் இறங்கப் போவதில்லை. கவிதை என்ற பரப்பிற்குள் சொற்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன, எவ்வாறு இடம் பெறலாம், எவ்வளவு இடம் பெறலாம் என்பது குறித்துக் கூற விரும்புகிறேன். விசுவாசமான பணியாளைப் போல மொழியை வேலை வாங்குவது எப்படி? நமது கருத்துகளையும் உணர்வுகளையும் சரியாகப் பிரதிபலிக்கக்கூடிய சொற்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்றும் பார்ப்போம்.

"கவிதை, தானாகப் பிறப்பது. அது, கவிஞரின் வழியாக வருகிறதே தவிர கவிஞருக்குச் சொந்தமானது இல்லை" þ இப்படி ஒரு கூற்று சிலரிடம் இருக்கிறது. கவிஞரின் எண்ணங்கள், வாழ்வனுபவம், திறமை, புலமை, உணர்வுகள், தேவை ஆகியவற்றை ஒட்டியே அவரிடம் கவிதை பிறக்கிறது. மரபணுக்கள் வழியே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உணர்வுகள் கூட அவரிடம் வெளிப்படலாம். ஆனால் அவர் எழுதிய கவிதைக்கு அவரே முழுப் பொறுப்பாளராவார். தேவை ஏற்பட்டால் அதை மாற்றி எழுதவோ, திருத்தி எழுதவோ அவர் முன்வரவேண்டும்.

தமிழ்க் கவிதைகளில் ஊளைச் சதை என்ற நிலைமாறி தமிழ்க் கவிதையே ஓர் ஊளைச் சதையாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தேவைக்கு அதிகமாக இருக்கிற சொற்களை நாம் ஊளைச் சதை என்கிறோம். இன்று பெரும்பாலான கவிதைகள், 2 வரிகளில் சொல்லவேண்டியதை 10 வரிகளில் சொல்கின்றன. ஒரே சொல்லில் சொல்ல வேண்டியதை இரண்டு வரிகளில் சொல் கின்றன. மௌன இடைவெளிகளிலும் சொற்களே நிரம்பி வழிகின்றன.

இங்கு நண்பர்கள் சிலரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இந்த வரிகள் இவர்களின் ஒட்டுமொத்த கவிதைக்கான எடுத்துக்காட்டு அல்ல. இவர்கள் நல்ல வரிகளையும் வேறு இடங்களில் படைத்துள்ளார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

புதுகை மா.உதயகுமாரின் புது வருஷம் பிறந்தது என்ற கவிதை:

வறுமையை
ஒழித்திடப் பிறந்தது
புத்தாண்டு!
பெருமையை
வளர்த்திடப் பிறந்தது
புத்தாண்டு!
வாய்மையைப்
பெருக்கிடப் பிறந்தது
புத்தாண்டு!
தீமையைக்
கருக்கிடப் பிறந்தது
புத்தாண்டு!


இப்படியாக மேலும் 40 வரிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 1991-இல் ஏப்ரல் 14 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் ஒலிப்பரப்பான இது, 1996-இல் வெளியான இவரின் வறுமை தந்த வரிகள் என்ற முதல் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.

தொடக்கநிலைக் கவிஞருக்கு உரிய அடையாளங்களை இதில் காணலாம். வானொலி- தொலைக்காட்சிக் கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், மேடைக் கவிதைகள் ஆகியவற்றின் பொது இயல்பு, அவற்றின் நீர்த்துப்போன கவியம்சம் தான். இதனை ஈடுகட்டுவதற்காக உச்சரிப்பையும் "கம்பீரமாக''ப் படிப்பதையும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

அடுத்து பாரி கபிலனின் களத்து மேடு (2001) தொகுப்பிலிருந்து ஒன்று.

சிகரெட் புகைத்து
அணைக்காமல்
விட்டெறிந்த
விரல்களுக்கு
நெருப்பிலிருந்து
தனித்துப் பறக்கும்
பொறி கண்டு
குப்பைகளும்
அதைச் சார்ந்த
குடில்களும்
அலறுகின்றன


இது, கவிதைக்குரிய தன்மை எதையும் பெறாமல் தீயணைப்புத் துறையின் அறிவிப்பைப் போல உள்ளது. ஆனாலும் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் இடம்பெற்றுவிட்டது.

அடுத்து, மல்லை மணிவாசகம் எழுதிய மாணிக்கப் பரல்கள் என்ற நூல் (1997). இதற்கு அப்போதைய கல்வி அமைச்சர் க. அன்பழகனார், அணிந்துரை அளித்துள்ளார். அதில், அவர் எடுத்துக்காட்டிய ஒன்று :

"மனித வாழ்க்கைக்கு 'இலக்கு' வேண்டும் என்பதனைக்

குறிக்கோள் இல்லாக் குவலய வாழ்க்கை
முறிந்து போகும் முடமாய் ஆகும்.
கொள்கை மாறாக் குறிக்கோள் வேண்டும்
கொள்கையில் வென்று குவலயம் ஆளலாம்


என்று பாடியுள்ளது இன்றைய இளைஞர்கட்கு வேண்டப்படும் இன்றியமையாத கருத்தென்பேன்".

இவர் கூறியுள்ளதன்படி இப்பாடலில் கருத்து மட்டுமே உள்ளது, கவிதை இல்லை.

அடுத்து, மு.வீரமுத்துவின் ஏவுகணைக் கவிதைகள் (1997) என்ற நூலில் கூட்டணி

நதிகளின் கூட்டணி கடல்தானே!
நரைகளின் கூட்டணி முதுமைதானே!
கோள்களின் கூட்டணி சூரியன்தானே!
காற்றின் கூட்டணி புயல்தானே!
அரசியல் கூட்டணி ஆட்சிதானே!
மனங்களின் கூட்டணி காதல்தானே!


இவை, மிகச் சாதாரண வரிகள். உரைநடை என்ற தகுதியைக்கூட பெற இயலாதவை. "ஓர் ஒன்று ஒன்று; ஓர் இரண்டு இரண்டு" என்ற வாய்பாடு போன்று எழுதப் பெற்றுள்ளது. ஆனால், அச்சேறிவிட்டது.

கடலில் ஒரு துளியைத்தான் நான் எடுத்துக் காட்டியுள்ளேன். இவைபோல் இலட்சக்கணக்கானவை, கவிதை என்ற பெயரில் தமிழில் புழங்குகின்றன. கவிதை எது என்று புரிந்துகொள்ளாமையும் சிறந்த கவிதைகளை வாசிக்காமையும் முறையான பயிற்சின்மையும் இத்தகைய கவிதைகள் பெருகக் காரணம்.

இவற்றுள் பல, நூலகங்களில் இடம் பிடித்து விடுகின்றன. "கவிதை" என்ற அடுக்கில் இவை அனைத்தும் இருக்கும்போது நல்ல கவிதை நூலைத் தேர்ந்தெடுப்பதே மிகவும் சிரமமாகிவிடுகிறது.

மிக வெளிப்படையாகத் "தாம் கவிதைகள் இல்லை" என அறிவித்துக்கொண்டவற்றைக் கண்டோம். அறிவிப்புகள், முழக்கங்கள் போதனைகள், சாடல்கள், புலம்பல்கள்... எனப் பலவும் கவிதையிலிருந்து முற்றிலும் அந்நியப் பட்டவை. ஒரு வகையில் இவை எளிமை யானவை; வசதியானவை. தன் கருத்து þ இயங்குதளம் ஆகியவற்றை வெளிப்படுத் துவதில் இவர்களுக்குத் தயக்கங்கள் இல்லை.

ஆனால், பூடக அம்சத்தோடும் திருகிய சொற்களோடும் வருகிற நவீன கவிதைகள் பல, அடிப்படை நேர்மை இல்லாதவை. "புரியாத கவிதைகள்" எனக் கண்டனம் பெறுகிறவை, அவை. கவிதைகளைப் பூட்டுவது தவறில்லை, ஆனால் சாவிகளையும் அங்கேயே வைக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

நவீன கவிதைகளில் தன்னிரக்கமும் இயலாமையும் எதிர்மறை உணர்வுகளும் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. எளிய சொற்களைப் பயன்படுத்தினாலும்கூட வாக்கிய அமைப்புகளும் வகையுளிகளும் கவிதையைச் சிக்கலாக்கி விடுகின்றன. நிறுத்தற் குறிகளோ, மேற்கோள் குறிகளோ, இடைவெளிகளோ இல்லாமல், நினைத்த இடத்தில் எல்லாம் வளைத்து ஒடித்து எழுதுவது, தவறான போக்கு.

தமிழ்மணவாளனின் அலமாரியில் ஓர் இராஜகிரீடம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகம் என்ற கவிதை இது.

உட்சேரும் தவிர்த்த லரிதாகும்
அழுத்தும் உள்ளுக்குள் கனமாகும்
காலத்தில் சுமையாகும் பின்
வலிக்கும் மருந்தின்றி இறுகும்
புலனாகும் நாய் வாலாட்டாது
குரைக்கும் விமானம் மேலெழும்பாமலே
களம் ஓடும் தகவலறிந்து கம்ப்யூட்டர்
கட்டுப் பாடிழக்கும் கட்டளை
ஏற்க மறுக்கும் யதார்த்தச்
செயல் விலக இயல்பு தடைபடும்
எதுவென அறிதலியலாது ஏதோ
வாகும் வெளிச்செல்ல எத்தனிக்க
இடமின்றித் தடுமாறும் குழப்பம்
ஊடாடும் எனினும் வழியின்றித்
தெளிவு உறங்கும் இடம்
வாய்த்ததும் புறம்செல்லும்
பாறைப் பனி உருகும் நீராகும்
சிலு சிலுப்பில் பூப்பூக்கும்
சுதந்திரமாய்


வாசிப்பை எளிமைப்படுத்தும் எந்தச் சிறு உதவியையும் கவிஞர், இங்கு செய்யவில்லை. அத்துடன் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளிகளைக் கூட பயன்படுத்தாமல் வாசகருக்குக் குழப்பத் தையும் உண்டாக்குகிறார்.

அடுத்து, லாவண்யா எழுதிய இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் என்ற தொகுப்பில், என்ன செய்யலாம்? என்றொரு கவிதை: அது,

எஞ்சியதெனக்கென் தந்தையிடமிருந்து
புராதன நினைவுச்சின்னமாயொரு வீடு
.

என்று தொடங்குகிறது "எஞ்சியதெனக்கென்", "நினைவுச்சின்னமாயொரு" என்பது போல் நூலில் பல இடங்களிலும் இரண்டு-மூன்று சொற்களைச் சேர்த்துச் சேர்த்து எழுதியுள்ளார். இது வாசிப்பிற்கு இடையூறு செய்வதாய் உள்ளது.

அடுத்து, கவிதையிலிருந்து எந்தவொரு சொல்லையும் உருவ முடியாதபடி கச்சிதமாக இருக்கவேண்டும். என்பதாகும், எனப்படும், எனவே, அதனால், நான் சொல்ல வருவது... போன்ற விவரிப்புத் தன்மையுடைய சொற்கள் கவிதையில் இடம்பெறக்கூடாது. கவிதை, சுண்டக் காய்ச்சிய பாலாக இருக்கவேண்டும், தேநீர்க் கடையில் கிடைக்கும் பாலாய் இருக்கக்கூடாது.

ஆசு எழுதிய என்றொரு மௌனம் (1999) நூலில், பசியுடன் சில வினாக்கள் என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது:

பசியுடன் படுத்துக்கொள்வோம்
என அழுகுரலிடும் அன்பானவளே
கரையான்கன் அரித்து சேதப்படுத்திய
பழைய புல்லாங்குழலின் சுரம் பாடுமோ
நம் துயரம்.


இதில் "கரையான்கள் அரித்து சேதப்படுத்திய பழைய" என்பதற்குப் பதில் "கரையான்கள் அரித்த புல்லாங்குழலின்" என இருந்தாலே போதும். நமக்குச் செய்தி, விளங்கிவிடுகிறது.

பழநிபாரதியின் காதலின் பின்கதவு (2001) என்ற நூலில் யாருக்கும் தெரியாதவள் என்ற கவிதை:

உடைந்து கிடந்தன
வளையல் துண்டுகள்
உதிர்ந்து கிடந்தன
மல்லிகைப் பூக்கள்
புகைந்துகொண்டிருந்தது
சிகரெட் துண்டு
கிழிந்து கிடந்தது
ரவிக்கை
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்
கடைவீதியில்
வளையல்
பூ
ரவிக்கை என்று
வந்துபோனார்கள்
நிறையப் பெண்கள்
எந்தப் பெண்ணுக்கும்
தெரியவில்லை
அந்தப் பெண்ணைப் பற்றி


இதில் "காவல் நிலையத்திற்குப் பின்னால் ஆணுறைகள்" என்ற இரு வரிகளில் நிறைய செய்திகள் அடங்கியுள்ளன. மேலும் தேவையெனில்

வளையல் துண்டுகள்,
உதிர்ந்த மல்லிகை,
புகையும் சிகரெட்
கிழிந்த ரவிக்கை
காவல் நிலையத்திற்குப் பின்னால்
ஆணுறைகள்


எனச் சுருக்கலாம். குறைந்தபட்சம் நான்கு வரிகளை மிச்சப்படுத்தலாம்.

அடுத்து, சொற்களைப் பொருத்தமாகக் கையாளுவது குறித்துப் பார்ப்போம். வரலாற்று நாவலாசிரியருக்கு உள்ள விழிப்புணர்வு, நம் கவிஞர்களுக்கு இருக்கவேண்டும்.
வட்டார வழக்குகளோ, தொழிற் பெயர்களோ, திசைச் சொற்களோ, பல்வேறு பருவங்கள், பழக்க-வழக்கங்கள் சார்ந்த சொற்களோ - அவற்றை முரண்களற்றுப் பொருத்தமாகக் கையாளவேண்டும்.

மாலதி மைத்ரியின் நீரின்றி அமையாது உலகு (2003) நூலில் அறுந்த வால் என்ற கவிதை,

எனது கனவில் சிறுபூச்சியாய்
சுவரில் ஊர்ந்துகொண்டிருக்கிறாய் நீ
வாய்பிளந்து உன்னை விழுங்க வருகிறேன்
அசைவின் அதிர்வில் சுதாரித்து
அறையளவு புடைத்தெழுந்து
என்னைக் கால்களால் கவ்வியிழுக்கிறாய்


எனத் தொடர்கிறது கவிதை. பொதுவாக வாயால் பற்றுவதையே 'கவ்வுதல்' என்போம். கைகால்களால் 'பிடித்து' இழுக்கலாம். 'கவ்வி' இழுக்க முடியாது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர், கடலைத் தாண்டும் ஓடங்கள் எனத் தன் கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பிட்டிருந்தார். ஓடங்களால் கடக்கத்தான் முடியும், தாண்ட முடியாது, என அது குறித்து விமர்சித்திருக்கிறேன்.

ஒரு பொருள் குறித்த பல சொற்கள், தமிழில் உள்ளன. சிரிப்பு, புன்னகை, முறுவல், நகைப்பு, இளிப்பு எனப் பல சொற்கள் முன் நிற்கும்போது கவிஞர்தான் தமக்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

காடு, கானகம் என்ற சொற்களுக்குப் பொருள் ஒன்றாயினும் காடு þ முழுவதும் வல்லினச் சொல். கானகத்திலோ மெல்லினத் தின் ஆட்சி இருக்கிறது. கோபத்துடன் சொல்லும் போது "காட்டான்" என்றும் பாராட்டிச் சொல்லும்போது "கானக மனிதன்" என்றும் சொல்கிறோம் இல்லையா?

இதுபோலவே தமிழின் இலட்சக் கணக்கான சொற்கள், கவிஞருக்கு முன் இருக்கும்போது, அவர், தமது கவிதைக்கு மிகப் பொருத்தமான சொல்லையே தேர்ந்தெடுக்க வேண்டும். சிற்பி, தன் சிற்பத்திற்கு அணுவணு வாக அழகேற்றுவதுபோல் கவிதைக்கு மெருகேற்ற வேண்டும்.

தமிழ்க் கவிஞர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் மாற்றுச் சொற்கள் குறித்து விரிவாக அறிந்திருக்க வேண்டும். நானறிந்த பலர், அதிக வடசொற்களைக் கலக்கிறார்கள். வடசொற்களின் மெல்லின ஓசையில் அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய சொற்களை, முயன்றால், தமிழிலேயே அவர்களால் பெற முடியும்.

கவிதையின் அளவு குறித்து, கவிஞர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும். 32 வரிகள், 24 வரிகள் 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை வாசிக்குமாறு பலர் வலியுறுத்துவதன் காரணம் இதுவே. எவ்வளவு அதிகமாக எழுதுகிறோம் என்பதைவிட எவ்வாறு எழுதுகிறோம் என்பதே முக்கியமானது.

நீள் கவிதைகள் தமிழில் வெற்றிபெற இயலவில்லை. குறுங்கவிதைகளே இங்கு அதிகச் செல்வாக்குடன் உள்ளன. பாரதியின் குயில் பாட்டை விட அவரின் அக்கினிக் குஞ்சு, மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமக்குள்ளேயே சுய வரையறைகளுடன் கவிஞர்கள் இயங்குவது நல்லது.

வீதியில் நடக்கும்போது திடீரெனக் கிடைக்கும் ஒரு சில்லரைக் காசைப்போல், நமக்குத் திடீரென ஒரு சொல்லோ, ஒரு வரியோ கிடைக்கும். அதன் தூண்டுதலில் நாம் ஒரு முழுக் கவிதையை உருவாக்க வேண்டும். அது, எல்லோர்க்குமான கவிதையாக, குறைகளின்றி இலக்கணப் பிழைகள் இல்லாமல் அமைவது இன்றியமையாதது.

பலர், ஒற்றுப் பிழைகள், சந்திப் பிழைகள், ஒருமைþபன்மைப் பிழைகள் புணர்ச்சிப் பிழைகள்... என ஏராளமான பிழைகளோடு எழுதி வருகிறார்கள். ஓட்டையுள்ள பலூனில் காற்று தங்காது.

நாம் நமது கவிதையை ஆளவேண்டும். அப்போதுதான் நம் கவிதை, உலகை ஆளும்.(முரண்களரி அமைப்பின் சார்பில் சென்னை, அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் மைய நூலகத்தின் சிற்றரங்கில் 4.7.2004 அன்று மாலை வாசிக்கப்பெற்றது.)

Thursday, July 08, 2004

வீரதீரச் சிறுவர்கள் - 1

சிறுத்தையை விரட்டிய குட்டி

பண்டைக் காலத்தில் தமிழ்ப்பெண் ஒருத்தி, புலியை முறத்தினால் விரட்டினாள் என்று கேள்விப்பட்டுள்ளோம். இன்றும்கூட கழுத்துச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிய திருடனை விரட்டிப் பிடித்த பெண்; ஈவ்-டீசிங் செய்தவனைச் செருப்பால் அடித்தவர்... என நிறைய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இத்தகைய வீர தீரச் செயல்கள் பரவலாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு 2003, நிஷா என்ற பெண், வரதட்சனை கேட்டுத் துன்புறுத்திய மணமகன் வீட்டாரைக் காவல் நிலையத்துக்கு அனுப்பியதை நாம் அறிவோம்.

வளர்ந்த பெண்கள் மட்டுமல்லாது, சிறுவர்களிடமும் வீரம் வளர்ந்து வருகிறது. "இளங்கன்று பயமறியாது" என்பதற்கேற்ப "வளரும் பயிர் முளையிலேயே தெரியும்" என நாம் மகிழுமாறு எண்ணற்ற இளங்குருத்துகள் தோன்றி, நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அவர்களுள் ஒருவரே குஜராத்தைச் சேர்ந்த குட்டி. இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சிறுத்தையிடமிருந்து காப்பாற்றிய தீரச் சிறுமி. 13 வயதே நிறைந்த, கூச்சமும் கோழைத்தன்மையும் உடைய இந்தச் சிறுமியா இதைச் செய்தது? ஆம். மன வலிமை இருந்தால் மற்ற வலிமைகள் எல்லாம் தானே வந்து சேரும் என்பதற்கு இதோ குட்டியே சிறந்த சான்று.

அந்த அற்புத நிகழ்ச்சி எப்படி நடந்தது?

2002 மார்ச் 22 ஆம் தேதி. குஜராத் மாநிலம் தோஹத் மாவட்டத்தைச் சேர்ந்த கதலியா கிராமத்தில் குட்டி வசிக்கிறார். சபர்கந்தா மாவட்டம், தட்கல் கிராமத்தில் குட்டியின் அண்ணன் பாபுபாய் வசிக்கிறார். குட்டி, அண்ணனைக் காண, தட்கல் கிராமத்துக்கு வந்தார்.

அண்ணனுக்கு அழகான இரண்டு குழந்தைகள். ஒருவன், இரண்டு வயதான விபுல்; மற்றொருத்தி பிறந்து ஆறே மாதமான பாயல். தட்கல் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஒரு பண்ணை உண்டு. அங்கு அண்ணனின் இரு குழந்தைகளோடு குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். அப்பொழுது மணி, இரவு 10.30.

கிராமத்துக்கு அருகிலிருந்து இரை தேடியபடி ஒரு சிறுத்தை, பதுங்கிப் பதுங்கி வந்தது. மனித வாசனையை நுகர்ந்து பண்ணைக்குள் நுழைந்துவிட்டது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் அருகிலும் வந்துவிட்டது.

முதலில் அது, ஆறு மாதக் குழந்தை பாயலைத் தாக்கியது. அப்படியே விபுலையும் அடித்தது. விபுலை மெல்ல அந்த இடத்திலிருந்து இழுத்துக்கொண்டு ஓடப் பார்த்தது. விபுல், மரணபீதியில் தன் உயிரைக் காப்பாற்ற வேண்டி ஓலமிட்டான். அவன் அலறலைக் கேட்டு, குட்டி விழித்துக் கொண்டாள். தன் கண்ணெதிரே விபுலை, சிறுத்தை இழுத்துச் செல்வதைக் கண்டாள். துணிவுடன் சிறுத்தைக்கு எதிராக விபுலைத் தன் பக்கமாக இழுக்கத் தொடங்கினாள். இந்தப் போராட்டத்தில் சிறுத்தை, விபுலை விட்டுவிட்டு குட்டியைத் தாக்கத் தொடங்கியது. குட்டியின் இடது கையைக் கடித்தும் விட்டது. ஆனாலும் குட்டி, பயந்துவிடவில்லை. தொடர்ந்து போராடினாள்.

அதே நேரம் குட்டியின் அண்ணன் பாபுபாயும் மற்றவர்களும் அங்கு விரைந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சிறுத்தை, தப்பித்து ஓடியது. இரண்டு குழந்தைகளையும் குட்டியையும் உடனே குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளையாக அவர்கள் மூவரும் பிழைத்துவிட்டார்கள்.

"குட்டி மட்டும் தீரத்தோடு போராடியிருக்காவிட்டால் நாங்கள் எங்கள் குழந்தைகளை இழந்திருப்போம்" என்று பாபுபாயும் அவர் மனைவி சுர்தாபென்னும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

ஆனால் குட்டி, இப்போதும் அதிகம் பேசவில்லை. "அது, பாயலைத் தாக்கியது. அது என்ன மிருகம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், விபுல் உரக்க அழுததைக் கேட்டேன். அவன் தலையிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அவனைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்" என்று மட்டுமே கூறினாள்.

குட்டியின் இந்தத் துணிச்சலான செயலை, குஜராத் மாநில நாளிதழ்களும் பருவ இதழ்களும் பெரிய அளவில் வெளியிட்டன. குஜராத் மாநிலக் குழந்தைகள் நலக்கழகம், இச் செய்தியை அறிந்தது. இந்தியக் குழந்தைகள் நலக் கழகத்தின் தீரர் விருதுக்குக் குட்டியின் பெயரைப் பரிந்துரைத்தது.

குட்டிக்கு இந்தியப் பிரதமர் கைகளால் டெல்லியில் கீதா சோப்ரா விருது வழங்கப் பட்டது. அகமதாபாத் நகரிலும் குட்டிக்குப் பாராட்டு விழா நடந்தது. குட்டி, இந்தியச் சிறுவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.வாரசுரபி, ஜுன் 4 2004